மாறாதவர்கள்!

1
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 10,936 
 
 

காசியை எப்படி நான் வெறுப்பேன்? அவனது முழுப் பெயர் தெரிந்த பின்னும்கூட நான் விரும்பவே செய்தேன். என் சர்க்கரைக்கட்டி, என்னைக் கடைத்தேற்ற வந்த கடவுள் என்றுகூட நினைத்துக் கொண்டேன்.

கம்ப்யூட்டரில் ஹோம் பேஜ் எதனாலோ சுருங்கித் தொலைத்து நாலு பக்கமும் வெள்ளை வெளேர் என்றாகி, நடுவில் சின்ன கித்தான் டாப் மாதிரி தொங்கிக்கொண்டு இருக்கிறதே என்று நெடு நாளாக கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது, அவனல்லவா வந்து ‘அறு நூறுக்கு எட்டு நூறுதானே’என்று அநாயாசமாக அம்பை அங்கும் இங்கும் செலுத்திப் புள்ளிவிவரங்களை ஒரு கலக்குக் கலக்கி, சகஜத் திரையை மீட்டுக் கொடுத்தான்! அரும்பாடுபட்டு ஆறேழு வருஷமாக ‘ஸேவ்’ பண்ணிவைத்திருந்த டேடா பேஸ் விவரங்கள் ஒரு சின்ன மின்சார விபத்தில் பற்றி எரிந்து, காற்றில் கரைந்த கற்பூரமாகப் போய் நிர்க்கதியாக என் கம்பெனி நின்றபோது, காசி கெட்டிக்காரத்தனமாக முன் ஜாக்கிரதைக்காக ஆபீஸில் இல்லாத வேறு ஒரு கணினியில் இன்டர்நெட் மூலமாக என்றோ சேமித்திருந்தது எனக்கு லட்சக்கணக்கான ரூபாயைக் காப்பாற்றித் தந்தது.

அழுது வடிந்துகொண்டு இருந்த தலைப்புக்கு ஒரு அனிமேஷனைத் தந்து ஜீவ ஓட்டம் செய்துவிட்டானே காசி என்ற அந்த அபூர்வக் கலைஞன்! வந்து விழும் வைரஸ்களை அவ்வப் போது விரட்டி ஆபாச அழுக்கைக்களையும் வித்தை தெரிந்த வித்தகன் அந்த இளஞ்சிங்கம் அல்லவா? வெறும் 2,000 ரூபாய் சம்பளத்துக்கு இரவு பகலாக உழைக்கிறான். எத்த னையோ இடங்களிலிருந்து அதிக சம்பளத்துக்கு அழைப்பு! நான் ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னேன்… ‘உன்னை நம்பித்தான் ஆரம்பித்திருக்கிறேன்!’

காசி நம்பிக்கை நாயகம். அவனையாராலும் என்னிடமிருந்து அசைக்க முடியாது. கம்பெனி வளர்ந்ததும் செய்ய வேண்டியவற்றை அவனுக்குச் செய்வேன். நான் டைப் அடிக்கிற மாதிரி தட்டுவேனே தவிர, சாஃப்ட்வேர் சாஸ்திரம் அறியாதவன். கம்ப்யூட்டர் கல்லூரியிலே கல்லாத வன். ஓட்டலில் பில் போட்டுத் தருகிற ‘பில்மாஸ்டர்’ மாதிரி ஏதோ அடிப்பேன். காசி கம்ப்யூட்டரின் நுணுக்க மகா சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுப்பவன். ‘உங்களுக்கென்ன சார்… வடையா, பஜ்ஜியா’ என்று ஓட்டலில் சர்வர் கேட்பது போல, ‘‘உங்களுக்கு பர்சனலா ஒரு வெப் ஸைட் க்ரியேட் பண்ணிடட்டுமா, சார்?’’ என்று கேட்கிறான். நான் வாலன்ட்டரி ரிடையர்மென்ட் வாங்கிக்கொண்டபின் நடத்தும் கம்ப்யூட்டர் அலுவலகத்துக்கு காசிதான் என் ஜீவன் என்றாகிவிட்டது.

ஆபீஸில் அப்படியாச்சா? வீட்டில்..?

மாடியில் அன்னு அங்க்கிள்! தாடிக்குள்ளே ஒரு தெய்வமில்லையோ அவர்? அன்னு அங்க்கிள் இல்லேன்னா, நான் இக்காலம் விடோயர்தான். என் சாருமதி சாம்பலாகியிருப்பாள். நான் அவளைத் தினமும் நெற்றியிலே பொட்டுப் போல இட்டுக்கொண்டு நடமாடும் பிணமாக நகர்ந்துகொண்டு இருப்பேன்.

துளசிக்கு விளக்கேற்றிவிட்டு அவள் பாட்டுக்குக் கண்ணை மூடிக்கொண்டு சுலோகம் சொல்கிறாள். பின்பக்கம் புடவை பற்றிக்கொண்டு, திகுதிகுன்னு எரிகிறது. ரோடிலே போகிறவர்களுக்குத் தெரிகிற மாதிரியான தாழக் காம்பவுண்டு சுவர்.

தெருவோடு போகிற பொதுஜனம் இந்த விபரீதத்தைப் பார்த்துட்டுக் கத்தறாங்க… ‘அம்மா புடவை! அம்மா புடவை! நெருப்பு! நெருப்பு!நெருப்பு!’

அவள் காதில் அது விழுந்து, சுதா ரித்து எழுந்து சமாளிக்கும் முன், தீ முக்கால் புடவைக்குப் பற்றியாச்சு! ஜனங்க சத்தம் கேட்டு அன்னு அங்க்கிள் மாடி பால்கனியிலே உதித்தார்.

12 அடி உயர பால்கனி. அங்கிருந்து எப்படித்தான் கீழே குதித்தாரோ, எழுந்தாரோ, ஓடினாரோ? கொழுந்துத் தீ மேலே மடி விழுப்புப் பார்க்காமல் பாய்ந்து, சாருவை ஒரு இடி இடித்துக் கீழே தள்ளி உருட்டி, பக்கத்திலிருந்த டோர் மேட்டைப் போட்டுத் தீயை மோதி மொத்தி நெருப்பை அணைத்து, பாதி வெந்த சாருவை அள்ளித் தூக்கி வண்டியிலே போட்டுக்கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து…

அப்போது நான் ஹைதராபாத்தில் ஆபீஸ் கான்ஃபரன்ஸில் இருந்தேன்.செல்லில் எனக்குத் தகவல். அன்னு அங்க்கிளுக்குப் 12 அடி உயரத்திலிருந்து குதிக்கிற வயசா? உடம்பா? அறுபது தாண்டி நாலைந்து வருஷம் இருக்கும். குதித்ததில் கால் முறிந்து, என்னென் னவோ ஆகி, முழங்கால் வரை இடது காலை எடுக்க வேண்டியதாகிவிட்டது. இப்போ இருக்கிறது கான்பூரில் தயாரித்த ஆர்ட்டிஃபிஷியல் லிம்ப். கையிலே வாக்கிங் ஸ்டிக் (கீழே சக்கரம் வைத்தது) சகிதம் நின்று நின்று படிக்கட்டு ஏறுகிறார்.

என் சாருவைக் காப்பாற்றப் போய்க் காலை இழந்ததில், அவர் கொஞ்சம்கூட வருத்தமே படாததுதான் எனக்கு வருத்தம்.

அப்புறம் ஷாம் பிரதர். எனக்கு அவர் பிரதர் இல்லை. அவர் என்னை அப்படிக் கூப்பிடறதாலே, நானும் அவரை பிரதர்னே சொல்றேன்.

பேங்க் மேனேஜராக இருக்கும் அவர் எனக்குச் செய்யணும்னு என்ன தலை யெழுத்து? ‘‘நீ நல்லா வரணும். நல்லவங்க நல்லா வரணும் பிரதர்!’’ என்று, விதி முறைகளுக்கும் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டுத் தன்னால் எந்த அளவுக்கு எனக்காகப் பிரயத்தனப்பட முடியுமோ அவ்வளவு தூரம் முயற்சி செய்து, அதிகபட்ச லோன் சாங்ஷன் செய்தார். என் பார்ட்னர் சிங்கப்பூர் ஏர்கிராஷில் மாண்டதற்குப் பிறகுதான், அந்த ரெண்டரைக் கோடியையும் பார்ட்னர் தன் பெண்டாட்டி பேரில் பல சொத்தாக மாற்றியிருப்பது தெரிந்தது. கோர்ட்டு, வழக்கு என்று தடுமாறிக்கொண்டு இருக்கிறேன். பேங்க் மேலிடம், கடனை வசூல் செய்யாத குற்றத்துக்குத் தண் டனையாக ஷாமை ஒரிஸ்ஸாவுக்குத் தூக்கியடித்தது. மூணு சம்பள உயர்வு கட். ஒரு பதவி உயர்வு கட். இன்னும் பல கட்.

எனக்கு அரெஸ்ட் வாரன்ட். பங்களா ஜப்தி மிரட்டல்.

இந்நிலையில், ஷாமிடமிருந்து பேங்க் ஹெட் ஆபீஸ§க்கு போன்… ரெண்டு கோடிக்கு டிராஃப்ட் ரெடி என்று!

தெய்வமே! எப்படி, என்ன செய்தே..?

‘‘பிரதர்! ஒண்ணும் கேட்காதே. ரெண்டு வருஷத்திலே அடைச்சுடலாம். கவலைப்படாதே!’’

கோயம்புத்தூரில் அவர் மாமனார், தனது பிரபலமானமில்லை 24 மணி நேரத்தில் விற்றுக் காசாக் கிய டிராஃப்ட் அது என்று அப்புறம் தெரிய வந்தது.

நான் யார்? ஷாம் யார்? என் சொந்த பிரதர் ஐம்பது பைசா கார்டு போட்டு என் துக்கத்தை விசாரிக்கவில்லை. ஷாமைப் பொறுத்தவரை நான் ஒரு வாடிக்கைக்காரன்தானே… என்னை அந்தத் தெய்வம் பிரதராக ஏன் தேர்ந்தெடுத்தது?

அப்புறம் தாஜு தாத்தா…

கீழக்கரையிலிருந்து வாரத்துக்கொரு தடவையாவது போனில் பேசிவிடுவார். ஒரே விஷயம்தான்…

‘‘நீ வான்னு சொல்றதுக்காக வெயிட் பண்றேன். எப்ப வரட்டும்?’’

எனக்கு வயசு நாற்பது. தலையில் கருகருன்னு சுருள் சுருளா கிராப். ‘சுருள் கிராப் சுந்தரம்’னே பேரு. எனக்கு மொட்டை போடணும்னு தாஜு தாத்தா ஒரே பிடிவாதம். என் பிஸினஸில் கிரைஸிஸ் வந்தபோது வேண்டிக்கொண்டாராம்.

‘‘நான் வந்துடறேன். கவலைப்படா தீங்க தாத்தா!’’

‘‘நானே வாய்தா வக்கீல். எனக்கே நீ வாய்தா சொல்றியா? அடுத்த வாரம் ஸண்டே நானே வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன். சுவாமி காரியம் தள்ளிப் போடுவாளோ? நீ செய்யறது நன்னால்ல. நீ கோச்சுண்டாலும் சரி.’’

‘‘சரி, தாத்தா! நீங்க வந்துடுங்க. புறப்பட்டுடலாம்!’’

தாஜு தாத்தா வீட்டுக்கு வந்தார். ‘‘இன்னிக்கு உங்காத்திலே அப்பா சிராத்தமாச்சே! நேக்கு மறந்துட்டுது… நான் சாப்பிடப்படாதே!’’

‘‘பரவால்ல மாமா… ஹிரண்ய சிராத்தம்தான்.’’

‘‘அப்படியெல்லாமில்லே… சிராத் தம்னா சிராத்தம்தான்! சாப்பாடு ஒண்ணும் பிரச்னை இல்லே. நான் எங்காவது லாட்ஜிலே சாப்பிட்டுக்கறேன். நாளைக்கு நாம மொட்டை போடக் கிளம்பறோம். அதுவரைக்கும் இங்கேயே தான் நான் கேம்ப்!’’

நான் அவரோடு நாகூருக்குப் போய் மொட்டை போட்டுக்கொண்டு திரும்பினேன்.

ஒரு காலத்தில் என் தாத்தாவிடம் ஜூனியராக வேலை பார்த்தவர் இந்த தாஜு தாத்தா. தாத்தாவுடன் பழகிப் பழகி, எங்க பாஷைதான் பேசுவார். ஜூனியராக எங்க தாத்தாகிட்டே இருந்த ஒரே காரணத்துக்காக, பேரன் என் மேல் அவருக்கு இத்தனைப் பாசமா?

இவர்களைப் பத்தியெல்லாம் நான் ஏன் நினைக்கணும், இப்போ?

காரணம் இருக்கு. தபாலில் வந்த ஒரு சுற்றறிக்கை என் கையில்.

அதைத்தான் படித்துப் பார்க்கிறேன்.

ஏதோ ஒரு சபை எழுதியிருந்தது. நான் எப்பவோ ஒரு 1,000 ரூபாய் நன்கொடை கொடுத்திருந்ததாலே, தவறாமல் அதனோட அறிக்கைகள் எனக்கு வந்துட்டே இருக்கும். அன்னிக்கு எனக்கு வந்த சுற்றறிக்கையிலே இப்படி எழுதியிருந்தது…

‘… இனியும் நாம சும்மா இருக்கக் கூடாது. இளிச்சவாயன்களாக இருந்தது போதும். பதிலடி கொடுத்தால்தான் சரிப்படும். சீற வேண்டிய சமயத்தில் சீறித்தான் ஆகணும். நம் கடவுளர்கள் கூட ஆயுதம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பிறத்தியாருடைய அக்கிரமத்துக்கு அடி பணியக் கூடாது. காசைக் காட்டி ஆளை இழுக்கும் அநாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும்.

மாநாட்டில் விரிவாகப் பேசுவோம். புனிதப் போர் பற்றிப் பேசப் புறப்பட்டு வாருங்கள்.

சாப்பாடு, தங்குமிட வசதி சகலமும் இலவசம். மூன்று நாள் மாநாடு…’

நான் அந்த மாநாட்டுக்குப் போகவில்லை. புனிதப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. மாறுகிறவர்கள் மாறட்டும்.

எனக்குத் தெரிந்த உலகத்திலே, என் நெஞ்சோடு வாழ்ந்து எனது கம்ப்யூட்டர் கூடம் இயக்க உதவி வரும் இளைஞனான காசி என்கிற காசிம், என் சாருமதியைக் காப்பாற்ற பால்கனியிலிருந்து குதித்து, ஆயுளுக்கும் செயற்கைக் காலுடன் விந்தி நடக்கும் விதியை ஏற்றுக்கொண்ட அன்னு அங்க்கிள் என்கிற அன்வர் அலி மாமாவும், என்னைத் தன் பிரதராகப் பாவித்து, சிறை செல்ல வேண்டிய எனக்கு 2 கோடி ஏற்பாடு செய்து என் மானம், மரியாதை, தொழிலைக் காப்பாற்றிய பேங்க் மேனேஜர் ஷாம் என்கிற ஷாம் சுதீன்பாயும், எனக்கு வந்த அபாயம் நீங்கினால் நாகூர் ஆண்டவன் சந்நிதிக்கு வந்து எனக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டு அதை நிறை வேற்றிய வக்கீல் தாஜுதீன் தாத்தாவும் இவர்கள் போன்று இன்னும் பலரும் இருக்கும் வரையில் புனிதப் போருக்கோ புனிதமற்ற போருக்கோ எந்தத் தரப்பிலும் அவசியமே இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது!

வெளியான தேதி: 15 நவம்பர் 2006

Print Friendly, PDF & Email

1 thought on “மாறாதவர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *