அந்த இரண்டெழுத்து நடிகை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 6,779 
 

வேலட் பார்க்கிங்கில் காரை நிறுத்தினாள் நடிகை ஸ்ரீஜா. ஓரமாக நின்றிருந்த யூனிஃபார்ம் டிரைவர் பாய்ந்து வந்து கார் சாவியை வாங்கிக்கொண்டு காரை நோக்கி நகர்ந்தான். லாபி நோக்கி நடந்த ஸ்ரீஜா இறுக்கமாக ஜீன்ஸ§ம் டி&ஷர்ட்டும் அணிந்திருந்தாள். அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் ரிசப்ஷனிலும் லாபியிலும் இருந்த அனைவரின் கண்களும் ஸ்ரீஜாவின் மேல் படர்ந்தன. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியை அருகில் பார்த்து தரிசித்த திருப்தி அவர்கள் முகத்தில்.

ஸ்ரீஜாவைப் பார்த்துப் புன்முறுவலித்தாள் ரிசப்ஷனிஸ்ட்.

‘‘குட் ஈவினிங் ஸ்ரீஜா’’ என்றாள்.

‘‘குட் ஈவினிங் கீத்ஸ்! மிஸ்டர் கேசவலு அறைக்கு வந்துவிட்டாரா?’’ என அழகான ஆங்கிலத்தில்கேட் டாள் ஸ்ரீஜா.

‘‘இன்னும் இல்லை. உங்களைக் காத்திருக்கச் சொன்னார். இன்னும் பத்து நிமிடங்களில் வந்து விடுவார்!’’

ஸ்ரீஜா அவளைப் பார்த்து சிநேகமாகச் சிரித்து விட்டு நகர்ந்தாள்.

மெல்ல நடந்து நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருந்த நாற்காலி வரிசையைக் கடந்து, ஒருசோபா வில் தன்னைப் புதைத்துக்கொண்டாள். எதிரே கிடந்த ஆங்கில நாளிதழ்களைப் புரட்டினாள்.

நிமிடங்கள் நகர…

அவர் ஸ்ரீஜாவை நோக்கி வந்தார்.

‘‘ஹேய்… ஜா!’’

ஸ்ரீஜா முகத்தில் உற்சாக வெள்ளம்.

‘‘ஹேய்… கேசவ்!’’ என்றபடி எழுந்துகொண்டாள் ஸ்ரீஜா. இருவரும் ஒருவரையருவர் உரசியபடி நடந்தார்கள். லிப்ட் ஏறினார்கள்.

அழகு தேவதை ஸ்ரீஜாவை நடுத்தர நபருடன் பார்த்ததில், அங்கிருந்த இளைஞர்கள்பொறா மையில் உருக…

ரிசப்ஷனில் அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் மற்றவர் சொன்னார்… ‘‘ஏம்ப்பா! இந்த நேரத்துல இவ எங்க போறா? ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல எல்லாம் ரெய்டு வர மாட்டாங்களோ? அதான், ஒரு படத்துக்கு 40 லட்சம் வாங்கறாளே… இந்தக்கண்றா வியெல்லாம் வேற தேவையா?’’

பாரத் மருத்துவமனை சோடியம் வெளிச்சத்தில் குளித்துக்கொண்டு இருந்தது. இரவு நேரத்தில் மிகுந்த பரபரப்பாக இருந்தது. ஒரு பக்கம் ஆம்புலன்ஸ் வேனில் நோயாளிகள் வந்து இறங்கிக் கொண்டு இருக்க… இன்னொரு பக்கம் கார்களில், ஆட்டோக்களில் நோயா ளிகள், தங்கள் வியாதியைத் துறந்து சந்தோஷமாகத் திரும்பிப் போனார் கள்.

அந்த இறக்குமதி காரில், தழையத் தழையக் கட்டிய பட்டுப் புடவையில் வந்து இறங்கிய நடிகை ஸ்ரீஜாவின் வருகையால், வழக்கமான இயக்கத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.

‘‘ஏய், அங்க பார்டி… ஸ்ரீஜா!’’ என்கிற தாழ்ந்த குரல்கள் ஸ்ரீஜாவின் காதுகளுக்கும் சென்றன.

இரண்டொரு ரூபாய் நோட்டுகள் ஆட்டோகிராஃபுக்காக அவளை நோக்கி நீண்டன. மென்மையாக அவற்றைப்புறக் கணித்துவிட்டு நடந்தாள் ஸ்ரீஜா.

சோர்வாக இருந்தாள். முகத்தில் வழக்கமான துறுதுறுப்பு மிஸ்ஸிங்.

ரிசப்ஷனிஸ்ட் மற்ற வேலைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஸ்ரீஜாவை அழகாகச் சிரித்து வரவேற்றாள்.

ஸ்ரீஜா அவளைப் பார்த்துச் சிரித்துக் கையசைத்துவிட்டு, மெள்ள மாடி நோக்கி நடந்தாள்.

‘‘இவ நடிகை ஸ்ரீஜாதானே… இந்த நேரத்துக்கு இங்கே எதுக்கு வந்திருக்கா?’’ – ரிசப்ஷனில் காத்திருந்த ஒருத்தி, அருகில் இருந்த இன்னொ ருத்தியிடம் கேட்டாள்.

அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல், நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள் மற்றவள்.

‘‘இந்நேரத்துக்குத் தனியா ஒரு நடிகை எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வருவா?’’

ஈஞ்சம்பாக்கம்.

மாலை நேரக் காற்று சிலுசிலுப்பாக வீசிக்கொண்டு இருந்தது.

வரிசையாக பங்களாக்கள் அணி வகுத்திருந்த ராயல் அவென்யூவில், அந்த இறக்குமதி கார் சீறிக்கொண்டு சென்றது.

அந்த அட்டகாச பங்களா முன் நின்றது.

காரிலிருந்து செல்லில் பேசியபடி இறங்கினாள் நடிகை ஸ்ரீஜா.

‘‘ஈஞ்சம்பாக்கம் ராயல்அவென்யூ பங்களாவுக்கு வந்துட்டேன். பார்ட்டி பங்களாவுக்கு வந்தாச்சா? ஓ.கே! டூ ஹவர்ஸ்ல திரும்பிடுவேன்.’’

செல்லை அணைத்து ஹேண்ட் பேக்குக்குள் போட்டபடி, பங்க ளாவை நோக்கி நடந்தாள் ஸ்ரீஜா.

இரண்டு உயர் ஜாதி நாய்கள் அவளைப் பார்த்துக் கத்தியபடி வர… மேலுடம்பு சுதந்திரமாகக் காற்று வாங்கிக்கொண்டு இருக்க… ஷார்ட்ஸ் அணிந்திருந்த அந்த நபர் கையில் சிகரெட்டுடன் ஸ்ரீஜாவைவர வேற்றார்.

‘‘கமான் ஸ்ரீஜா! நீங்க இங்கே வர்றது இதான் முதல் தடவை இல்லியா! வெல்கம், வெல்கம்..!’’

ஸ்ரீஜா அவரை நோக்கிச் சிரித்துக் கொண்டே நடந்தாள்.

வெளியே சைக்கிளில் ரோந்து சென்றுகொண்டு இருந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் சைக்கிளை ஓரங் கட்டி நிறுத்தினார்கள்.

தாழ்ந்த குரலில் பேசிக்கொண் டார்கள்.

‘‘பங்களால இறங்கிப் போனது நடிகை ஸ்ரீஜாதானே?’’

‘‘ஆமாம்!’’

‘‘எவ்வளவு துணிச்சலா வரா பாரு!’’

‘‘மேலிடத்துக்கு இன்ஃபார்ம் பண்ணிடுவமா?’’

‘‘பங்களா யாரோடது தெரியுமில்ல… வம்பே வேணாம். வா, போலாம்!’’

இருவரும் நடந்தார்கள்.

பி.ஏ. மகா நீட்டிய புத்தகங்களை வாங்கினாள் ஸ்ரீஜா. அனைத்துமே சினிமா பத்திரிகைகள்.

அடையாளம் வைக்கப்பட்டு இருந்த பக்கங்களுக்கு வந்தாள்.

வட்டமிடப்பட்டு இருந்த எட்டு வரிச் செய்தியைப் படித்தாள்.

‘‘இப்போதெல்லாம் இரண்டெ ழுத்து ஸ்ரீ நடிகையை ஆழ்வார்ப் பேட்டை அருகிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அடிக்கடி காண முடிகிறது. விடிய விடிய அங்கு டிஸ்கொதே ஆடும் நடிகை, விடியும் நேரத்தில்தான் வீடு திரும்புகிறாராம். நடிகையோடு அரசியல் புள்ளி ஒரு வரின் மகனும் கண்ணில் படுகி றார்..!’’

சிரித்தபடியே இன்னொரு புத்தகத்தை எடுத்தாள். புரட்டினாள். படித்தாள்.

‘‘ஈ.சி.ஆர். சாலையில் உள்ள பங்களா ஒன்றுக்கு இரண்டெழுத்து நடிகை அடிக்கடி செல்கிறாராம். பிரபல தொழிலதிபருக்குச் சொந்த மான பங்களாவாம் அது. மாலையில் செல்கிற நடிகை, அடுத்த நாள்காலையில்தான் வீடு திரும்புகிறாராம். சமீபத்தில், படப்பிடிப்பில் அவர் மயங்கி விழுந்ததற்கும் இந்த விசிட்டுக்கும் தொடர்பு உண்டாம்..!’’

ஸ்ரீஜா பி.ஏ-வைப் பார்த்தாள். சிரித்தாள். புத்தகங்களை டீபாய் மீது போட்டாள்.

‘‘சரி மகா… நான் உங்ககிட்ட ஒப்படைச்ச மூணு வேலைகளும் எந்த அளவுல இருக்கு?’’

மகா சொல்லத் தொடங்கினான்… ‘‘ப்ளூ கிராஸ் சொசைட்டிக்காக நீங்க நடத்தப் போற பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு மேடம். முன்னிலை வகிக்கிறதுக்கு மினிஸ்டர் கிட்ட கேட்டிருக்கேன். நாளைக்குப் பதில் வந்துடும். இதப்பத்தி ப்ளூ கிராஸ் சேர்மன் கேசவலுவுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன்.’’

‘‘நெக்ஸ்ட்..?’’

‘‘கேன்சர் ட்ரீட்மென்ட் எடுத்துட்டிருக்கிற ஆறு குழந்தைகளுக்காக பாரத் ஹாஸ்பிடலுக்கு, தலா ஒரு லட்சத்துக்கு செக் கொடுத்துட்டேன்!’’

‘‘வெரிகுட்! தேர்ட் ஒன்..?’’

‘‘ஈ.சி.ஆர். ரோட்ல ஈஞ்சம்பாக்கம் கிட்ட முதியோர் இல்லம் கட்டறதுக்காக நீங்க விரும்பின இடத்தைத் தர்றதுக்கு ஆர்.கே.இண்டஸ்ட்ரீஸ் அதிபர் நாராயணன் சம்மதிச்சிட்டாரு. அடுத்த வாரம் ரிஜிஸ்ட் ரேஷன் மேடம்!’’

‘‘குட்!’’ மகாவைப் பார்த்துச் சிரித்த ஸ்ரீஜா, ‘நீங்கள் போகலாம்’ என்று கண்ணசைவிலேயே உத்தரவு கொடுத்துவிட்டு, தன்னிடம் உதவி கேட்டு வந்திருந்த கடிதங்களை ஆர்வமாகப் படிக்கத் தொடங்கினாள்.

வெளியான தேதி: 22 நவம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *