கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 6,299 
 
 

அந்த நான்கு பெரியவர்களும், ஒரே சமயத்தில் நகரின் அந்த பிரபல, “காஸ்மாபாலிடன் கிளப்’க்கு வந்து சேர்ந்தனர். நாராயணன், முத்துசாமி, கோபாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் என்ற அந்த நான்கு, “பெரிசு’களும் எழுபது பிளஸ் வயசுக்காரர்கள்.
மனம்இதில், ராமகிருஷ்ணனைத் தவிர, மற்ற மூன்று பேரும் பெரும் பணக்காரர்கள். இவர்கள் நால்வரும் பால்ய நண்பர்கள்; அதாவது, 60 வருடங்களுக்கு முன், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சிவசாமி ஐயர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்து, அன்றைய எஸ்.எஸ்.எல்.சி., பாஸ் செய்துவிட்டு, அந்த மாவட்டத்திலிருந்து குடிபெயர்ந்து போனவர்கள். திருக்காட்டுப்பள்ளியை சுற்றியிருந்த ஒன்பத்துவேலி, நேமம், ரங்கநாதபுரம் என்ற கிராமங்களிலிருந்து வந்து படித்தாலும், பள்ளித் தோழமை அவர்களை இணைத்தது.
தொடர் நட்பு இல்லையென்றாலும், அவ்வப்போது சந்திக்கும் உறவு சுற்றம் இவர்கள் வீட்டுக் கல்யாணம் மூலம் ஒருவருக்கொருவர் ஏதோ அறுந்து போகாத தொடர்பும், தோழமையும் கொண்டிந்தனர்.
குறிப்பாக, டிசம்பர் – ஜனவரி மாதங்களில், அமெரிக்கக் குடிமகனாகி விட்ட பிரமுகரான நாராயணனும், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கோபாலகிருஷ்ணனும் சென்னையில் சமீப காலமாக மிகப் பிரபலமாகி உள்ள கர்நாடக சங்கீத சீசனுக்காக சென்னை வந்து விடுவர். அவர்கள் இருவருக்கும் பெசன்ட் நகர், அடையாறு ஆகிய இடங்களில் பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ப்ளாட் இருந்தன. அவர்கள் குடும்பத்துடனோ அல்லது கணவனும், மனைவியுமாகவோ வந்து தங்கி ஒன்றரை – இரண்டு மாதங்கள் கச்சேரி, விதவிதமான ஓட்டல்களில் சாப்பாடு, உறவினர் வீடு விஜயம் என்று கொண்டாடிய பின், அவர்களின், “சேய் நாடுகளுக்கு’ திரும்பிச் செல்வர்.
முத்துசாமியின் குடும்பமும், ராமகிருஷ்ணனின் பிள்ளை, பெண்களும் இந்தியாவில்தான் இருந்தனர். முத்துசாமி மயிலாப்பூரிலும், ராமகிருஷ்ணன் மாம்பலத்திலும் இருந்தனர்.
இந்தமுறை காஸ்மாபாலிடன் கிளப்பில் ஸ்பெஷலாக சந்திக்க ஏற்பாடு செய்தவர் நாராயணன்.
நாராயணன் மெர்சிடிசிலும், முத்துசாமி லான்சரிலும், கோபாலகிருஷ்ணன் குவாலிசிலும், ராமகிருஷ்ணன் மாருதி சென்னிலும் வந்து இறங்கினர்.
ஒருவரை ஒருவர் மிக ஆரவாரமாக கட்டித் தழுவி வரவேற்றுக் கொண்டனர். “”ஆச்சு… ஒரு வருஷம் ஓடியே போய் விட்டது. எகெய்ன் வி ஆர் மீட்டிங்,” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் நாராயணன்.
“”என்னடா கோபால்… எப்படி இருக்கே… லாஸ்ட் டைம் பார்த்ததுக்கு இப்ப கொஞ்சம் இளைச்சுப் போனாப்ல இருக்கே,” என்று கேட்டார் ராமகிருஷ்ணன்.
“”ஷுகர் ப்ராப்ளம் கொஞ்சம் அதிகமா இருக்கு… டயட்ல இருக்கேன். அதுதான்… வயசாகிறதோ இல்லையோ?’ என்றார் கோபாலகிருஷ்ணன் புன்னகையுடன்.
“”ச்சூ… சும்மா சும்மா வயசாச்சு… வயசாறதுன்னு புலம்பிக்கிட்டே இருக்காதீங்கடா… எல்லாரும் நல்லாத்தான் இருக்கோம்… பர்ஸ்ட் க்ளாஸ்… வாங்க உள்ள போய் பேசலாம்… எவனுக்கும் வீட்டுக்கு போகணும்ன்னு ஒண்ணும் அர்ஜன்சி இல்லையே…” என்று அதிகாரமாய் கூறி, எல்லார் தோள் மேலும் கை போட்டு அணைத்துக் கொண்டார் நாராயணன்.
உள்ளே சென்று மிதமான வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்த அந்த, “பாரில்’ அவர்களுக்காக பிரத்யேகமாக, “ரிசர்வ்’ செய்யப்பட்டிருந்த மேஜையை, அந்த கிளப்பின் மேனேஜர் மலர்ச்சியுடன் காட்ட, அங்கு சென்று அமர்ந்தனர்.
இந்தக் கதையைப் படிக்கும் நல்லவர்கள் இந்த இடத்தில் கதையை விட்டு விலகி விடுவது நல்லது. ஏனென்றால், இந்த நான்கு பெரியவர்களும் தங்களின் வெகுநாட்கள் தொடரும் தோழமையைக் கொண்டாட உற்சாக பானம் அருந்தப் போகின்றனர்.
அதற்கு முன் ஒவ்வொருவரையும் பற்றி ஒரு சிறிய அறிமுகம். நாராயணன், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், இன்ஜினியராக இருந்து ஓய்வு பெற்று, பின், பல தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்துவிட்டு, இப்போது அவரது இரு மகன், மனைவியுடன் அமெரிக்காவில் குடியேறியவர். அவரது இரண்டு பிள்ளைகளும் யு.எஸ்.,சில் சான்பிரான்சிஸ்கோவிலும், சிகாகோவிலும் வசிக்கின்றனர். ஒருவன் டாக்டர்; மற்றவன் இன்ஜினியர். திருமணமாகி (இந்திய பெண்கள் தான்!) தலா இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன்கள். வசதி, சொல்லவே வேண்டாம்.
கோபாலகிருஷ்ணன், மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மகன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஒரு கலாசாலையில் கெமிஸ்ட்ரி பேராசிரியர்; மனைவி பஞ்சாபி பெண். ஒரே ஒரு பெண் தான் அவனுக்கு. கோபாலகிருஷ்ணனின் மகள் லண்டனில் டாக்டர் கணவனுடன், ஒரு மகனுடனும் வாழ்கிறாள்.
முத்துசாமியும், இந்தியாவிலேயே இருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவர். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும். எல்லாரும் இந்தியாவில் தான். மகன் சென்னை. இரண்டு பெண்களில் ஒருத்தி மும்பை; மற்றவள் ஐதராபாத். வசதியானவர்கள் தான். இவர்களின் குழந்தைகள் இன்றைய ஐ.டி., காற்றில் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று வாழ்கின்றனர்.
இந்த நால்வரில் ராமகிருஷ்ணன் தான் கொஞ்சம் சுமார். மாநில அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்று இப்போதும் குடும்ப நிலவரம் காரணமாக, ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்குச் செல்பவர். அவரது இரண்டு மகன்களில் ஒருவன் சேல்ஸ் மேனேஜராக இருக்கிறான்; இன்னொரு மகன் மாநில அரசாங்கத்தில் அவனைப் போல் சாதாரண வேலை. அவனுடன்தான் ராமகிருஷ்ணன் தங்கி இருக்கிறார். சுமாரான வருமானம் என்பதால், அவர் வேலை மூலம் கிடைக்கும் பணம் அந்தக் குடும்பத்திற்கு கட்டாயம் தேவை.
வெயிட்டர் வந்ததும், நாராயணன் தான் முதலில் பேசினார்:
“”என்ன… நீங்கள் எல்லாம் பீர்தானா? கோபால்… உனக்கு, ஹாட்டாக பிராந்தி இல்லை ரம்?”
“”எனக்கு பீர் போதும் நாணா,” என்றார்
கோபால்.
“”எனக்கு ஹாட்… எது வேணா சொல்லு,” என்றார் முத்துசாமி.
“”எனக்கு பீர் வேண்டாம்… ஏதாவது கூல் ட்ரிங்க் போதும்,” என்றார் ராமகிருஷ்ணன்.
மூன்று பேரும் ராமகிருஷ்ணனைப் பார்த்து, “”என்னடா ராமு… பீர் கூட வேண்டாமா… ஏண்டா?” என்றனர் கோரசாக.
“”ப்ச்… என்னவோ பிடிக்கலை… விடேன்,” என்றார்.
“”ஏன் ஏதாவது மனக்கஷ்டமா… மனசுக் கஷ்டம்னா இந்த மருந்துதானே எல்லாரும் விரும்பி குடிக்கிறது?” என்றார் முத்துசாமி சிரித்தபடி.
“”என் பிள்ளை குடும்பத்துக்காக விரதம் இருக்கேன்… அதான் வேண்டாம்ன்னு பார்க்கிறேன்.”
“”யாருக்காக விரதம்… உன் சின்ன பிள்ளை ஸ்டேட் கவர்ன்மெண்ட்ல இருக்கானே… அவன் குடும்பத்துக்காகவா?” என்றார் நாராயணன்.
“”ஆமாம்… அவனுக்குத்தான் மூணு பெண் குழந்தைகள். பெரியவளுக்கு வரன் பார்க்கிறோம்… இன்னும் ஒண்ணும் சரியா அமையல.”
“”உன் பேத்திதான் வேலைல இருக்காள்ன்னு சொன்னியே.”
“”இருந்தாலும்… அவளுக்கு கீழே இன்னும் இரண்டு பேர் இருக்காளே… காலா காலத்தில் கல்யாணம் பண்ண வேண்டாமா?” என்றார் ராமகிருஷ்ணன்.
“”அது சரி… நீ பீர் குடிக்காம இருந்தா, அவளுக்கு கடவுள் வரன் கொண்டு வந்து விடுவாரா?” என்றார் நாராயணன் சற்று எகத்தாளமாக.
ராமகிருஷ்ணன் பதில் சொல்லவில்லை.
“என்னவோ ஒரு நம்பிக்கை…’ என்று முணுமுணுத்தார். ஆனால், அவர் முகத்தில் சற்று அடிபட்ட வருத்தம் தெரிந்தது.
“”சரி… அதை விடு… இந்த சீசன்ல யார் கச்சேரி ரொம்ப நன்றாக இருந்தது,” என்று பேச்சை மாற்றினார் ராமகிருஷ்ணன்.
“”அருணா சாய்ராம், கிருஷ்ணா, சஞ்சய் மூணு பேரும் சூப்பர் பர்பாமன்ஸ் கொடுத்தாங்க.” என்றார் நாராயணன் தன்னுடைய ட்ரிங்கை பருகியபடி.
“”ஆமாம்… நான் கூட வாணிமஹால்ல கேட்டேன்… நீ அகாடமிக்கு போனாயா?” என்றார் முத்துசாமி.
“”சில புரோகிராம் அகாடமில… மத்தது நாரதகான சபாவில்,” என்றார் நாராயணன்.
“உம் பையன் ஸ்ரீகாந்த், யூரோப் போகப் போறான்னு லாஸ்ட் இயர் சொன்னாயே… போனானா?” என்று கோபாலகிருஷ்ணனிடம் கேட்டார்.
“”ம்… ஆறு மாசம் பிரான்ஸ், ஜெர்மனி, யு.கே.,ன்னு ஏகச் சுத்து… சிட்னி வந்து இப்பத்தான் இரண்டு மாசமாகிறது,” என்றார் கோபாலகிருஷ்ணன் பெருமையாக.
“”இந்த வருஷம், மறுபடியும் நயாகரா போகலாம்ன்னு ப்ளான் பண்ணியிருக்காங்க,” என்றார் நாராயணன்.
“”என் டாட்டர் மீனாவும், கலாவும் கூட, இந்த சம்மர்ல தாமஸ் குக் அரேன்ஜ் பண்ணற யூரோப் டூர்ல, குடும்பத்தோட போயிட்டு வந்தாங்க,” என்றார் முத்துசாமி.
இப்படி தொடங்கிய உரையாடல், இந்தியா, உலகம் என்று பல இடங்களைச் சுற்றி வந்தது. எந்த விமான நிலையம் உலகிலேயே மிகச் சிறப்பாக இருக்கும், எந்த விமான சர்வீஸ்கள் நம்பகமானவை. திருக்காட்டுப்பள்ளி ஸ்கூலில் சேர்ந்து படித்து, இன்று உயிரோடு இருக்கும், இல்லாத நண்பர்கள் என்று பேச்சு பல திசைகளில் சுற்றிச் சுழன்று, சாப்பாட்டுடன் முடிவடைந்தது.
“”சரி… கிளம்பலாமா?” என்றார் ராமகிருஷ்ணன். அவர்தான் இந்த பேச்சுகளில் அதிகம் பங்கு பெற முடியவில்லை. காரணம், அவர்கள் பேசிய இடங்களும், சமாச்சாரங்களும் அவருடைய நிலைமைக்கும், வாழ்க்கைத் தரத்திற்கும் அந்நியமானவை.
“”ம்… போக வேண்டியதுதான்,” என்று பில்லை வாங்கி தன்னுடைய, “கிரடிட் கார்டில்’ தந்த நாராயணன், மன மகிழ்ச்சியுடன் சொன்னார்:
“”ரொம்ப சந்தோஷம்டா… உங்களையெல்லாம் பார்த்ததில… அடுத்த வருஷம் திரும்ப, “மீட்’ பண்ணுவம்,” என்றார் உற்சாகமாக.
“”பார்க்கலாம்… உயிரோட இருந்தால்…” என்றார் கோபாலகிருஷ்ணன்.
“”சே… என்னடா நீ?” என்றார் முத்துசாமி.
“”என்ன சொன்னாலும் வயசு ஆயிண்டு போறதில்ல?” என்றார் கோபால் வறட்சியாக.
அந்த சொற்களின் கனத்தில் சட்டென்று ஒரு மவுனம் நிலவியது.
“”சரி… சரி… பகவான் இஷ்டப்பட்டால் பார்ப்போம்…” என்று முடித்துக் கொண்டார்.
எல்லாரும் விடைபெற்று, அவரவர் காரை நோக்கிச் சென்றனர் ராமகிருஷ்ணன்.
நாராயணன் காரில் போகும்போது நினைத்துக் கொண்டார்…”இவங்க மூணு பேரும் தேவலை. நல்ல பசங்க, குடும்பம். ராமகிருஷ்ணனின் பிள்ளை, பேரன், பேத்திகள் எல்லாரும் அருகிலேயே இருக்கின்றனர். தினம் அவனும், அவன் பெண்டாட்டியும் மாம்பலத்தில் சுத்திண்டு, சுவாமி தரிசனம் பண்ணிண்டு அமைதியாக காலம் கழிக்கின்றனர். நாம் அமெரிக்காவில் இருந்து என்ன பிரயோஜனம்?
“வேலை… வேலை என்று திரியும் பிள்ளைகள், இவரையும், இவர் மனைவியையும் லட்சியம் செய்யாத மருமகள், பேரன், பேத்திகள்… பேசுவதற்கு கூட முன்கூட்டியே உத்தரவுகள், அப்பாயின்ட்மென்டும் வாங்கிக் கொள்ள வேண்டும்… என்ன இயந்திர வாழ்க்கை. பணம்தான் இருக்கிறது… நிம்மதி எங்கே இருக்கிறது?’
“என்ன இருந்தாலும் நாராயணனும், மிச்ச ரெண்டு பேரும் அதிர்ஷ்டசாலிகள் தான். பிள்ளையும், மருமகளும் கூட இருக்கின்றனர் என்றுதான் பெயர்… பாதி நேரமும் வெளிநாட்டுப் பயணம்தான்.
“சிட்னியில் அந்தப் பெரிய வீட்டில் தன்னந்தனியாக நாங்க இரண்டு பேரும் உட்கார்ந்து சதா, “டிவி’ பார்த்து, பொழுதை கழிக்க வேண்டியிருக்கிறது. லண்டன் பக்கம் போகவே முடியாது. மாப்பிள்ளையின் திமிரும், அலட்டலும் தாங்க முடியாது. என்ன வாழ்க்கை?
“முத்துசாமி, ராமகிருஷ்ணனும் தேவலை. இந்தியாவோட நின்று விட்டனர்.. கூடவே பெண் பிள்ளைகளும் பக்கத்திலேயே…’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார் கோபால கிருஷ்ணன்.
“என்ன மும்பை… என்ன ஐதராபாத்… அவங்க மாதிரி அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு போக நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே… இந்த ஜன நெரிசல் உள்ள தேசத்தில் தினம் பவர்கட், தண்ணீர் பிரச்னை, போக்குவரத்து கஷ்டம் என்று பொழுதைத் தள்ள வேண்டியிருக்கு…’ என்று நாராயணனையும், கோபாலகிருஷ்ணனையும் நினைத்து ஆதங்கம் கொண்டார் முத்துசாமி.
“பணம், பதவி, கார், பங்களா, பேரன், பேத்தி’ என்று எத்தனை எத்தனை சவுகரியங்களுடன் வாழ்கின்றனர் மிச்ச மூணு பேர்களும். 70 வயதுக்கு மேல பிள்ளை குடும்பத்தின் பற்றாக்குறையைத் தீர்க்க லொங்கு லொங்குன்னு வேலைக்குப் போயிண்டு… என்ன வாழ்க்கை இது?’ என்று தன்னை நொந்து கொண்டார் ராமகிருஷ்ணன்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ தீர்க்கப்படாத குறைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவைகள் எந்தக் காலத்திலும் தீர்க்கப்படுவதே இல்லை என்பதுதான், மனித வாழ்க்கையின் மிகப்பெரிய சோகம். மலையின் மறுபுறமும், நதியின் அக்கரையும் என்றுமே வாழ்க்கையில் அடைய முடியாத, கண்ணுக்கு புலப்படாத சுகங்கள் தான்.

– பிப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *