விதியின் விளையாட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2024
பார்வையிட்டோர்: 2,569 
 

 (2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்னும் அவளுக்குள் படபடப்பாக இருந்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. வேகமாக சமையலறைக்குள் சென்று ஒரு செம்பு தண்ணீர் மொண்டு குடித்தாள். இருந்தாலும் படபடப்பு அடங்கவில்லை.

சூரி வெளிநாட்டிலிருந்து நாளைக்கு வருகிறான். அவன் போன் பண்ணிய போது அவளுடைய கணவன் மகேஷ் இல்லாததால் அவள் தான் போனை எடுத்தாள்.

“ஹலோ, நான் சூரி பேசுகிறேன்.”

“…”

“யார் பேசறீங்க? அண்ணன் மகேஷ் இருக்காங்களா?”

“நான்… நான் விஜயா பேசுகிறேன்.”

“ஹேய் விஜயா. நீ போது அண்ணன் வீட்டுக்கு வந்தாய். அண்ணன் எங்கே போயிருக்கிறார். அண்ணியைக் கூப்பிடு”

“நான்…. சூரி… உங்களுடைய அண்ணி நான் தான்.”

“என்னது?”

“ஆமாம் சூரி.”

“விளையாடுகிறாயா?”

“இல்லை. இது விதியின் விளையாட்டு சூரி, நீங்க சவூதியிலே எப்படி இருக்கீங்க?”

எதிர்பக்கத்தில் மவுனமே நிலவ, “போனை வைத்து விடட்டுமா?” என்றாள் விஜயா.

“சரி… அண்ணன் எங்கே போயிருக்கிறார்?”

“ஆபீஸ், போயிருக்கிறார், என்ன விஷயம்?”

“நான் நாளை மறுநாள் சவூதியிலேயிருந்து கிளம்புகிறேன். என்னை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரிசீவ் பண்ணச் சொல்லு”

“சரி”

“சே! இந்தப் பொம்பளைகளே இப்படித்தான், எனக்காக உன்னாலே இரண்டு வருஷம் காத்திருக்க முடியவில்லையே விஜயா?”

“…”

“அழுகிறாயா? நன்றாக அழு. அது சரி. நம் காதல் விவகாரம் அண்ணன் மகேஷுக்குத் தெரியுமா?”

“ம்..ஹூம்”

“ஏன் மறைந்தாய்?”

“சொல்லத் தோன்றவில்லை எனக்கு”

“என் மனைவியாக்க நினைத்த உன்னை அண்ணி என்றும் அம்மா ஸ்தானத்தில் கொண்டு வைத்திருக்கிறார்கள். விஜயா திரும்பவும் கேட்டுறேன்.. எனக்காக காத்திருக்க முடியவில்லையா? இல்லை விருப்பமில்லையா?”

“என்னை ஏன் கொல்கிறீர்கள் சூரி?”

“நீ சொன்னதைக் கேட்டு நான் செத்துப் போனேனே விஜயா. எத்தனைக் கனவுகளோடு வீட்டிற்கு புறப்பட்டேன் தெரியுமா?”

“…”

“போனை வைத்து விடட்டுமா?”

“ம் ஹூம்”

“அண்ணனனைக் கண்டிப்பாக வரச் சொல்லி விடு. எனக்கு ஊருக்கு வர விருப்பமில்லை. நான் வருவதை கேன்சல் பண்ணி விடட்டுமா?”.

“ஏன்?”

“உன்னை என் மனைவியாக்கத் துடித்து… சரி இப்போது என் அண்ணி நீ, இனி உங்களிடம் மரியாதையாகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். சரி நாளை கழித்துச் சந்திக்கலாம்” என்று போனை வைத்தான் சூரி.

போனை வைத்துவிட்டு வந்தவளுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. விஜயா அங்குமிங்கும் அலைந்தாள். ‘சூரியை எந்த முகத்தோடு பார்க்க போகிறேன். அப்பாவிடம் எத்தனை முறையோ மறுத்துச் சொல்லியும் செத்துப் போவேன் என்று சொல்லி பயமுறுத்தி என்னை மகேஷிற்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டார்கள்.

எனக்காக காத்திருக்க விருப்பமில்லையா என்கிறான் சூரி. ‘அவனுக்கு எப்படி புரிய வைப்பது?. என் நிலைமை இருதலைத் கொள்ளி எறும்பு போலாகி விட்டதே. சே! பெண்ணாகப் பிறந்ததே தவறுதான்’. மேடிட்டிருந்த தன் வயிற்றை தடவிய விஜயா, ‘இந்தக் கோலத்தில் பார்த்தால் என்ன நினைப்பான். அதுவும் அவனுடைய அண்ணன் மனைவியாக, அண்ணனின் வாரிசைச் சுமந்து கொண்டு, சே! தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருக்கிறது’ என்று நினைத்தாள்.

‘மகேஷிடம் நான் சூரியைக் காதலித்ததை சொல்வி விடலாமா? ஏன் இவ்வளவு நாளும் சொல்லாமல் இருந்தாய் என்று கேட்க மாட்டாரா?’ என்று நினைக்கும்போது ‘காலிங்’ பெல் அடிக்க வந்து கதவைத்திறந்தாள். மகேஷ் ஆபீசிலிருந்து வந்திருந்தான்.

“என்ன ஒரு மாதிரியிருக்கே?” என்று கேட்டான் மகேஷ்.

“ஒண்ணுமில்லே. உங்க தம்பி சூரி சவூதி அரேபியாவிலிருந்து நாளை கழித்து வருகிறாராம். அவரைப் போய் ரிசீவ் பண்ண வேண்டுமாம். போன் பண்ணினார்”.

“அது சந்தோஷம் தானே. அதற்கு ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?”

“எனக்கு ஒன்றுமில்லை. கொஞ்சம் டயர்டாக இருக்கிறது” என்றாள் விஜயா


விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் கெடுபிடி அதிகமாக இருந்தபோடு டியூட்டி கட்டி தான் கொண்டு வந்த பொருட்களோடு வெளியே வந்த சூரியை வரவேற்றான் மகேஷ்.

“ஏண்டா ரொம்ப மெலிஞ்சு போயிட்டே? ஒழுங்காக சாப்பிடுவாயா?” என்று கேட்டான்.

“அதற்கென்ன… நல்ல சாப்பாடுதான், மனசுதான் சரியில்லை”

“என்ன சொல்கிறாய்?”

“உங்கள் திருமணத்தைக் கூடப் பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை. சவூதி அரேபியாவின் போய் மாட்டிக் கொண்டேன்”.

“அதனாலென்ன. இனி தான் அண்ணியை பார்க்கப் போகிறாயே கிளம்பு… வீட்டில் அப்பா, அம்மா எல்லோரும், உன் வருகைக்காக காத்துக் கொண்டிருப்பார்கள்”. இருவரும் மகேஷ், கொண்டு வந்திருந்த காரில் ஏறிக் கொள்ள கார் இடையன்குடி நோக்கிப் பறந்தது.


மனதிற்குள் தவித்துக் கொண்டிருந்தாள் விஜயா. “நான் சூரியை எப்படி சந்திக்கப் போகிறேன். எத்தனை முறைதான் அவரைத் தவிர்க்க முடியும். காரில் வரும்போது விஜயாவை நான் ஏற்கனவே காதலித்தவன் என்று சூரி மகேஷிடம் சொல்லி விட்டால், வீட்டில் ஒரு பெரிய பூகம்பமே நிகழுமே.

இல்லையென்றால் அவர் இங்கே வந்தபிறகு ஏதாவது தனியான சந்தர்பத்தில் என்னுடன் ஏதாவது பேச முற்படடால் விஷயம் யாருக்காவது தெரிந்தால் என்ன செய்ய முடியும். சூரியைக் காதலித்த பாவத்திற்கு அவரைக் கல்யாணம் பண்ணி கொள்ள முடியாத சூழ்நிலையில், நான் உயிர் வாழ நினைத்ததே தவறு” என்று உள்ளுக்குள்ளே புழுங்கிக் கொண்டிருந்தாள்.

மகேஷுடன் சூரி வீட்டிற்கு வந்து சேர, தான் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் எடுத்து ஓவ்வொருவருக்காக கொடுத்துக் கொண்டிருந்தான் சூரி.

“இது அண்ணிக்கு” என்று ஒரு சேலையும் ஒரு ஜோடி தங்கக் கொலுசும் கொடுத்தான் சூரி. “என் மனைவியாக வருவாய். உனக்கு கால்களில் மாட்டி விட வேண்டும் என்று ஆசையாக வாங்கி வந்தேன். இப்போது அண்ணாவின் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு மாற்றான் மனைவியாக….” என்று பெருமூச்சு விட்டவாறு நீட்டினான்.

விஜயா வாங்கி கொள்ள மறுக்க, “புதிதாக கொழுந்தனை பார்த்த வெட்கம். இங்கே கொடு நான் வாங்கிக் கொள்கிறேன்” என்று அண்ணன் மகேஷ் வாங்கிக்கொன்டான்.

அம்மாவிற்கு புடவை. அப்பாவிற்கு ஸ்பெஷல் கம்பளி, அண்ணாவிற்கு தங்க கலர் வாட்ச், பாண்ட் சரட் என்று கொடுத்து விட்டு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

விஜயா தனக்கு உடல் சரியில்லை என்று சொல்லி விட்டுப் போய் படுத்துக் கொள்ள, அம்மாதான் எவ்லோருக்கும் சாப்பாடு பரிமாறினாள்.

வேகமாக சாப்பிட்டு முடித்த சூரி எல்லோரும் சாப்பாட்டு அறையில் இருப்பதை தெளிவாக்கிக் கொண்டு, வேகமாக அண்ணாவின் பெட்ரூமிற்குள் நுழைந்தான.

வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள் விஜயா, “என்ன?” என்றவாறு.

“எனக்கு உன் மனசு புரிகிறது? உன்னுடைய கட்டாயம்… நீ எந்தச் சூழ்நிலையில் அண்ணாவை மணந்து கொண்டாய் என்று எனக்குத் தெரிந்து விட்டது. நம் நினைவுகளை யெல்லாம் சுட்டெரித்து கும்பையில் போடு. இனி நீ என் அண்ணி, உறவு முறையில் நீ எனக்கு அம்மா மாதிரி இனிமேல் நடந்து கொள்” என்று சொல்ல அந்தப் பக்கமாக வந்த மகேஷ், “அண்ணி என்னடா சொல்கிறாள்?” என்றான்.

“லேசாகத் தலை வலிக்கிறது என்கிறார்கள். தலைவலித் தைலம் வேண்டுமா என்றேன். வேண்டாம் என்கிறார்கள்” என்று சொல்லிச் சிரித்தான்.

“அப்படியா?” என்று மகேஷ் சொல்ல மார்பில் கை வைத்துக் கொண்டு பெரிதாக பெருமூச்சு விட்டாள் விஜயா, அதில் நிமமதி பெருமளவில் கலந்திருந்தது.

– 2001, மராத்திய முரசு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *