“என்னாப்பா இரகசியம் ஒன் முகம் எப்பவும் சந்தோஷமா மலர்ச்சியா இருக்கு”என்று கேட்பவர்களுக்கு மத்தியில்….. வயிற்றரிச்சல்காரர்கள் சிலர் ஒனக்கு பிரச்னையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கீயே” என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்… அதே புன்னகைதான்.
அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் இரகுராமன் தன் வேலையில் நேரத்திற்கு வந்து நேர்த்தியாக முடித்து விட்டு போவது அவனுக்கு பழகிப்போன ஒன்று. அப்படிப்பட்டவன்தான் மாதத்தில் இரண்டுநாள் திடிரென்று லீவு போட்டு விட்டு போய்விடுவான். ஏங்கு போகிறான் என்பது அவனுக்கே வெளிச்சம். யாரிடமும் மூச்சு விடுவதில்லை.
இவனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.. புதிய மேனேஐர் வரப்போவதாய் பேசிக் கொண்டனர். அவரும் சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்து போனது. அவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் மாதாமாதம் தொழிலாளிகளின் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் அவர்களின் பணித்தரம் பற்றி ஆய்விடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுபோலவே, அன்றும் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு தொழிலாளியாய் முடித்து….இரகுராமன் முறை வரும்பொழுது..
“என்ன இரகுராமன், வேலையெல்லாம் நல்லா செய்யுறீங்க, எப்பவும் சந்தோஷமா இருக்கீங்க…. ஆனால் மாசமாசம் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு காணாம போயிடுறீங்களே”அதுதான் பிரச்னையா இருக்கு, எனிதிங் பிராப்ளம்”கடுகடுத்த முகத்துடன் கேட்டார் மேனேஐர்.
புராப்ளம்-ல்லாம் இல்ல ஸார் “ஒரு அநாதை இல்லத்துக்கு போய் அங்கே இருக்கிற ரெண்டு பசங்களை வெளியே கூட்டீப்போய் வயிறாற சாப்பிடவைச்சு, டிரஸ் வாங்கி கொடுத்து ஏதாவது ஒரு சுற்றலா இடத்திற்கு கூட்டிபோய் அவர்களின் சந்தோஷத்தை பார்க்கிறதுக்குதான் அந்த ரெண்டுநாள் லீவு. அந்த சந்தோஷம்தான் எனக்கான உற்சாக டானிக், வேற எதுக்குமில்ல” என்றான்.
மேனேஐரின் கடுகடுத்த முகத்தில் ஒரு புன்னகைப் படர்ந்தது..
அவன் முகத்தில் இருக்கும் சந்தோஷத்திற்கும் மலர்ச்சிக்கான இரகசியம் எதுவென்று அன்றுதான் எல்லோருக்கும் புரிந்தது.
நன்றி – வளர்தொழில் ஜூலை 2015)
மகிழ்ச்சி என்ற சிறுகதையினை தங்கள் தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி