பால் வண்ணம் கண்டேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 7,423 
 

உள்ளே வரலாமா..?..!

குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தார்கள் சிவசங்கரனும் அவரது மனைவி பாக்கியலெட்சுமியும். வாசலில் ஒல்லியான சற்று உயரமான சிவந்த மேனியாள் கயல்விழியும், அரும்பு மீசை இளைஞனும் நின்று கொண்டிருந்தனர்.

புருவ நெளிவுடன் யார் இவர்கள் என்ற கேள்வி கனையுடன் …ம், வாங்க என்று ஒரு சேரக் குரலில் அழைத்தார்கள்.

கயல்விழியும், இளைஞனும் அருகே வந்தார்கள். கயல்விழி இருவரின் காலைத் தொட்டு நமஸ்கரித்தாள். புன்முறுவலுடன் நிமிர்ந்த அவளை உட்காரம்மா, என்று பாக்கியலெட்சுமி சொல்லி முடிப்பதற்குள் அருகில் இருந்த சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள். கூட வந்த இளைஞன் தவிப்புடன் அவள் அருகில் நின்று கொண்டிருந்தான்.

என்னை ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ, நானே சொல்லி விடுகிறேன். என் பெயர் கயல்விழி, பதினைந்து பதினாறு வருஷங்களுக்கு முன்பு எதிர்வீட்டில் குடியிருந்த சபாரத்தினம் மகள் நான்.

ஓ..ஒ… ஞாபகத்துக்கு வருகிறது.. மெல்லிய குரலில் வேண்டா வெறுப்பாக முனகினார் சிவசங்கரன்.

உன் அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் நன்றாக இருக்கிறார்களா.,? கயல்விழியை புரிந்து கொண்ட பாக்கியலெட்சுமி கேட்டாள். இந்த பையன் யாரு.,? எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று தனக்குள் கேள்வியும் கேட்டுக் கொண்டாள்.

இருக்கிறார்கள் ஆன்டி, நீங்க எப்படி இருக்கீங்க.,? அக்கறையுடன் கேட்டவள், அன்பு, தமிழ் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்.? என்று வினவினாள்.

. . . . . . .

என்ன ஒண்ணுமே பதில் சொல்ல மாட்டேன்கிறீர்கள்.,? பழைய கோபம் இன்னமும் தீரலையா.,?

நீ இப்ப இங்க எதற்காக வந்தாய்.,? விரோதியாய் பாவித்தார் சிவசங்கரன்.

இல்ல அங்கிள்.. அது… வந்து. . சொல்லத் தயங்கியவள் அன்பு இல்லையா.,? என்று கேட்டாள்.

இல்லை.. சொல்லு.,

தன்னுடன் வந்தவனை ஒரு முறை பார்த்துவிட்டு, தமிழ் எப்படி இருக்கிறாள்.,? அவளைக் கட்டிக் கொடுத்து விட்டீர்களா.,? இல்லை வீட்டில் இருக்கிறாளா.,? என்று கேட்டாள்.

சொல்ல வந்த செய்தியை சொல்லாமல், வேறு எதை எதையோ கேட்கிறாய்.,?

இல்ல… சின்ன வயசிலேயே அன்புக்கு என்னைப் பிடிக்கும். எனக்கும் அவன் மீது அலாதியான பிரியம் உண்டு, அறியாத வயதில் பாலுணர்வு பற்றி தெரியாத வயதில் அப்பா அம்மா விளையாட்டில் நானும் அவனும் கட்டிப்பிடித்து விளையாடிய போது ஏற்பட்ட சண்டையின் விளைவாக இரண்டு குடும்பமும் பிரிந்தது…

தோ… பாரு, அந்த சண்டை மட்டும் காரணம் கிடையாது, அவன் உன் மீது அன்பையும் பாசத்தையும் கொட்டியதால், உன் பெயரை பச்சைக் குத்திக் கொண்டான். அப்போ அவனுக்கு எட்டு வயசிருக்கும், சிறு பிள்ளை, தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், விளையாட்டாக செய்ததை விபரீதமாக்கி, ஆத்திரம் கொண்டு பெயரை அழிக்கிறேன் என்ற வாதத்தில் அவன் கையில் சூடு போட்டாள் உன் அம்மா. அந்த வடு ஆறாத வடுவாய் மாறிவிட்டது. அதனால் வந்த விளைவு தான் ரெண்டு குடும்பமும் சேராத உறவாய் பிரிந்தது. இப்போ, அதைப் பற்றி பேசி ஆவப்போவது ஒன்றுமில்லை. நண்பர்களாகப் பழகினோம், பிரிந்து விட்டோம். நீ..கிளம்புறீயா.,? என்று விரட்டினார்

இரண்டு குடும்பத்துக்குள்ளும் சொந்த பந்தம் என்று எதுவும் கிடையாது. வேற வேற சாதியா இருந்தாலும் கருத்து வேறுபாடு இல்லாமல், ஒண்ணுக்குள் ஒண்ணாக ஊரே கண் திருஷ்டிப் படும்படி வாழ்ந்து வந்தோம். பிள்ளைகள் பெரியவர்களாய் ஆனதும் ஒற்றுமை குலையாமல் பெண் கொடுத்து பெண் எடுத்து குடும்ப பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று கூட நான் சொல்லுவேன், அதற்கு உன் அம்மா அதெற்கென்ன அப்படியே செய்து கொண்டால் ஆயிற்று என்பாள். அப்படிப் பட்டவள் புத்திகெட்டுப் போய் எம் புள்ளைக்கு சூடு வச்சது தான் எங்களுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணிவிட்டது என்றாள் பாக்கியலெட்சுமி.

ஆன்டி, உங்களின் ஆசைபடியே நான் இந்த வீட்டுக்கு மருமகளாய் வந்து விடுகிறேன், என் விருப்பத்தை நிறைவேற்ற எங்க வீட்டில் யாருக்கும் இஷ்டமில்லை. என்னை ஏற்றுக் கொண்டு எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கள், அதைப் பற்றி பேசத்தான் நான் வந்தேன்.

சங்கடமாய் நெளிந்தாள் பாக்கியலெட்சுமி. பேச்சின் போக்கினை திசை திருப்ப அடி மனதில் கிளர்ந்த ஆர்வம் மேலோங்க, ஆமாம் இந்த பையன் யாரு.,? நீ ஒண்ணும் சொல்லலையே என்று கேட்டாள்.

இவனை உங்களுக்குத் தெரியலை.,?.,! என்று கேட்ட கயல்விழியை நீ வீட்டைவிட்டு ஓடி வந்துட்டியா..? என்று கேட்டார் சிவசங்கரன்.

இல்லை, நீங்க என்னை மருமகளா ஏற்றுக் கொள்வீங்களா.,?

மருமகளாவா.,? என்ன பேசுறாய்..நீ.,? இங்க என்ன நடந்தது.,? எது எப்படி ஆயிற்று.,? யார் என்ன ஆனார்கள்.? என்பதெல்லாம் தெரியுமா உனக்கு.? தெரியாமல் எதுவும் பேசாதே.. வெகுண்டார் சிவசங்கரன்.

ஏன் யாருக்கு என்ன ஆயிற்று.,? அனபு, தமிழ் ரெண்டு பேரும் நன்றாகத் தானே இருக்கிறார்கள்.,?

கயலு, வெந்த புண்ணில் வேலை விட்டு குடையாதே., நீ இங்கிருந்து போய் விடு என்றாள் பாக்கியலெட்சுமி.

என்ன நடந்தது என்று சொல்லுங்கள், பிறகு நான் போகிறேன்.

அன்பழகன், அன்பழகியாயிட்டாள். தமிழ்ச்செல்வி வீட்டை விட்டு ஓடிட்டாள்., போதுமா.? ஆவேசம் கொண்டு கத்தினார் சிவசங்கரன்.

அதானே.., உயிரோடு இருக்கிறார்கள்ல.,!.,? இதற்கு ஏன் இவ்வளவு ஆவேசப் படுகிறீகள்.,? எல்லாம் எனக்குத் தெரியும்.

அன்புவைப் பற்றின விஷயம் தெரியுமா.,? தெரிந்துமா நீ கல்யாணத்தைப் பற்றி பேசுகிறாய்.,?.,! அவன் கல்யாணத்துக்கு லாயக்கு இல்லாதவனாக இருக்கிறான்.

ஒரு பெண்ணை கல்யாணம் செய்துக் கொள்ள தகுதி இல்லாதவனாக இருக்கலாம். ஆனால்.. இந்த மண்ணில் வாழ்வதற்கு உரிமை உள்ளவன் அவன்.

. . . . .? . . . . .!

. . . எழுத்தாளராக, நாட்டியத் தாரகையாக, அரசியல் ஞானம் கற்ற சமூக ஆர்வலராக, காவல் துறை போலீஸ் அதிகாரியாக, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக, ரயில்வேயில் பணியாற்றுபவராக, இப்படி நிறைய பேர், தங்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் அரவாணிகளுக்கு ஆதரவு தருகிறது. அவர்களின் பாலியல் மாற்றத்தை, மூன்றாம் பாலினமாக கருதி அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அவர்களுகென பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, வேலை வாய்ப்புக்களை உருவாக்கி அந்தஸ்த்தினை கொடுத்துக் கொண்டிருக்கிறது. . .

இவன் பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கான்.,

பின்ன. . வேறென்ன செய்வான்.,? பள்ளிக்கூடங்களில் அசிங்கப்பட்டு, பொது இடங்களில் அவமானப்பட்டு, உறவால் பிரிக்கப்பட்டு தான் யார் என்று நிலைத் தடுமாறி தவிக்க விட்டது இந்த சமூகம் மட்டுமல்ல நீங்களும் தான். அவன் திருநங்கையாக மாறினதாலே ஒட்டு மொத்த மானமும் போயிற்று என்று அவனை வெறுத்து ஒதுக்கினீர்கள். உலகிலுள்ள அனைத்து அவமானங்களும் கைக் கொட்டி சிரிக்கின்றன என்று, அவனை அடித்து வீட்டை விட்டு துரத்தி அனாதையாக்கி விட்டீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்.,? உயிரை மாய்த்துக் கொள்ள மனம் துணியாமல் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்காக தவறான வழியில் போகிறான்., இதற்கு யார் காரணம்.,? நீங்கள் தானே..!

. . . . . . .

யாரும் திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ விரும்பி பிறப்பதில்லை. பாலியல் மாற்றம் இயற்கையின் போக்கில் புரியாத விந்தையாக உருவெடுக்கிறது. அவனைப் பெற்ற நீங்கள் விதிச்செயல், காலத்தின் கொடுமை என்று நினைத்து அவனுக்கு ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும். மனம் நொறுங்கி தவித்தவனை அரவணைத்து, அவனுக்குண்டான கௌரவத்தை கொடுத்திருக்க வேண்டும். அதை செய்யவில்லையே நீங்கள். உங்களைப் போல அரவாணிகளை பெற்றவர்கள் நிலைமையை புரிந்துக் கொள்ளாமல் அன்பு செலுத்துவதை தவிர்த்து அடித்து விரட்டி விடுகின்றனர். மனதாலும் உடலாலும் கூனி குறுகிப் போன அவர்கள், முகம் சுளிக்கும் இந்த முறைக் கெட்ட சமுதாயத்தினரிடமிருந்து விலகியே இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். அன்பழகன் உங்களுக்கு மகனாய் பிறந்தது நீங்கள் செய்த பாவம்.

இதில் எங்கள் குற்றம் என்ன இருக்கிறது.,?

இருக்கலாம், இல்லை என்று ஒதுக்கி வைத்து விட முடியாது. உங்களுக்குள் ஏற்பட்ட புணர்ச்சியால், மாறுபட்ட புரிதலால், காம குரோத உணர்வுகளால் கூட ஏற்பட்டிருக்கலாம், யார் கண்டது.,? அந்தரங்கத்தில் நடக்கும் விஷயங்களை அறிவு கொண்டு தான் யோசிக்கலாம். கண் கொண்டு பார்க்கவா முடியும்.,? இது ஆராய்ச்சிக்கு உட்பட்ட விஷயமாதலால் பொறுப்பில்லை என்று தட்டிக்கழிக்க முடியாது.

நீ மூணாவது மனுஷனை வைத்துக் கொண்டு இப்படி பேசுவதை என்னால் சகிக்க முடியாது. நீ அவனை இங்கிருந்து கூட்டிகிட்டு போய் விடு என்றார் முகத்தை சுளித்துக் கொண்டு.

சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். உங்கள் மகன் அன்பழகி கேட்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். பெண்பிள்ளை இல்லாதவர்கள் ஆணை பெண்ணாகவும், ஆண்பிள்ளை இல்லாதவர்கள் பெண்ணை ஆணாகவும் நடை உடை பாவனைக்கு உட்படுத்தி பிள்ளைகளை வளர்ப்பதாலும் இந்த குறை ஏற்படுகிறது என்று உளவியல் நிபுணர்கள் சொல்லுகிறார்கள். குழந்தை லட்சணமாய் அழகாய் அறிவாய் பிறந்தால் அது பாட்டியைப் போல இருக்கு, தாத்தாவை போல இருக்கு என்று பாரம்பரிய பெருமையை பீற்றிக் கொள்ளும் நீங்கள், அங்கஹீனமாகவோ, மூளை வளர்ச்சியின்றியோ பிறந்து விட்டால் அந்தக் குறையை கடவுள் பேரில் பழியைப் போட்டு பொறுப்பில்லாதவராகி விடுகிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்.,?

என் மகன் இந்த நிலைக்கு ஆளான போது, இவர் வீட்டை விட்டு துரத்தினாலும், அவன் அம்மாவைப் பார்க்கனும், தங்கச்சியைப் பார்க்கனும் என்று வருவான். அப்போதும் கூட இரக்கமே இல்லாமல், அவனை வீட்டுக்குள் இருக்க விடாமல் துரத்தி விடுவார் எனக்கு பெற்ற வயிறு பற்றி எரியும் … அழுதபடி சொன்னாள் பாக்கியலெட்சுமி.

அது கூட நான் மனசார செய்ய மாட்டேன். அந்த ஒழுக்கம் கெட்ட ஓடுகாலியை நினைத்து தான் அவ்வாறு துரத்த வேண்டியதாய் இருந்தது. இவன் இப்படி ஆயிட்டானே.,? அதனால பொண்ணோட வாழ்க்கை பாழயிடுமே.. அவளுக்கு ஒரு கல்யாணம் காட்சியை நடத்த முடியாமல் போய் விடுமே என்று தினம் தினம் பயந்து தான் அப்படி நடந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. நான் பயந்த மாதிரியே ஆகிவிட்டது. ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பார்த்தால் தான் நான் அனுபவித்த வேதனைகளை புரிந்துக் கொள்ள முடியும். ஆதங்கத்துடன் அர்த்த புஷ்டியாக சொன்னார் சிவசங்கரன்.

அங்கிள் உங்களுக்கு உங்கள் மகள் மீது இருக்கும் பெற்றப் பாசத்தை விட, அவனுக்கு சகோதரி மீது அதிக பாசம் உண்டு. தங்கச்சியை அப்படிப் பார்த்துக் கொள்வான். இன்றைக்கும் அவன் அப்படித்தான் இருக்கிறான். அவளுக்காகவே தான் அவன் கஷ்டப்படுகிறான்.

அவன் யாருக்காகவும் கஷ்டப்பட வேண்டாம். அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக் கொள்ளட்டும். தமிழ்ச்செல்வி வீட்டை விட்டு ஓடிப் போனது அவனுக்குத் தெரியாது போலிருக்கு., சிவசங்கரன் முணுமுணுத்தார்.

இப்படி வேண்டா வெறுப்பாக பேசாதீர்கள், அவன் உங்க பிள்ளை, உங்கள் ரத்தம்.

நீ அவனை பார்த்தியா.,? அவன்கிட்ட பேசுனியா,.,? தாய்ப் பாசம் தவிப்புடன் கேட்டது.

பார்த்தேன், பேசினேன், நான் இந்த வீட்டுக்கு மருமகளா வருவதற்கு அவன் சம்மதம் சொல்லியிருக்கான்.

அது எப்படி முடியும்.,? ஒரு பெண்ணும், பெண்ணாக இருக்கிற ஒரு ஆணும் எப்படி காதலிக்க முடியும்.,? சிவசங்கரன் கேட்டார்.

அவன் எப்படி இருக்கிறான்.,? நல்லா இருக்கிறானா.,? என்னைப் பார்க்க வருவானா.,?

வருவான், நீங்கள் என்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தால், அவன் உங்களின் மகளாக, தமிழ்ச்செல்வனுக்கு அக்காளாக இங்கு வருவான்.

எங்களுக்கு ஒன்றும் புரியலையே.,!.,?

புரியும்படி சொல்கிறேன். மூன்று வருஷத்துக்கு முன்பு அன்புவை சந்தித்த போது தான், அவன் அவளாக மாறி இருப்பது எனக்கு தெரிய வந்தது. அவனது கையிலுள்ள சூட்டுத்தழும்பை வைத்து தான் அவனை அடையாளம் காண முடிந்தது. என்னைத் தெரிந்துக் கொண்ட அவனுக்கு எண் சான் உடம்பும் கூனிகுறுகி போனதை என்னால் உணர முடிந்தது. கூட பழகிய என்னிடம் பிச்சை கேட்டதை எண்ணி எண்ணி வேதனைப் பட்டான். அவன் வீட்டில் இருந்த போது, உள்ளக் கிளர்ச்சியால் நாளடைவில் உடலும் உள்ளமும் சிறுக சிறுக மாற்றம் ஏற்படுவதை எண்ணி, அதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து மனசுக்குள் புழுங்கி தினம் தினம் செத்திருக்கிறான். பெற்றவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று எவர்களிடமும் எதையும் சொல்ல முடியாமல் தவித்து, கண்ணும் உடலும் கூச வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு துயரத்தோடு வாழாமல் வாழ்ந்து இருக்கிறான். கூடுமான வரையில் அவன் அவனாக இருக்க முயற்சிப் பண்ணி தோத்து போயிருக்கான். ஆண்டவனால் கூட அவனது தவிப்புக்கு ஆறுதல் கொடுக்க முடியாமல் போயிற்று. ஒரு கர்ப்பிணியால் எப்படி வயிற்றை மறைக்க முடியாதோ, அது போல அவனின் உடற்கூறு மாற்றம் அவளாக வெளிச்சம் போட்டு காட்டியது. அதனை மறைக்க என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என நினைத்து வழித்தேடி தவிக்கிற போது தான், நீங்கள் அவனை இனம் கண்டு வெறுத்து அடித்து ஓட விட்டீர்கள். ஆன்டி சொன்னது போல அவன் உங்கள் எல்லோரையும் பார்க்க வரும் போது கூட பாசக்கயிற்றால் அவனை தூக்கில் தொங்க ர்்ள்விட்டீர்கள் பணக்காரனாக பிறந்த அவன், ஒரு வாய் சோத்துக்கு பிச்சை எடுக்கிறான். அவனின் நினைப்பும் தவிப்பும் என்னை ஆலையிலிட்ட கரும்பாய் பிழிந்தது. உணர்ச்சிகள் சுனாமியா கொந்தளிக்க பாலியல்தொழிலில் ஈடுபடுகிறான். கேட்டால் ஆப்ரேஷனுக்காக சம்பாதிக்கிறேன் என்று கூச்சலிடுகிறான். அவனிடம் நெருங்கி பழக நினைக்கிற போதெல்லாம் என்னை வெறுத்து ஒதுக்கி விடுகிறான். சரி நீ.. ஆப்ரேஷன் பண்ணிக் கொண்டு வா.. நாம் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றால் என்னை அடிக்க வருகிறான். உனக்கு என்ன புத்தி பிசகிடுச்சா.,? நீ என்ன பைத்தியக்காரியா.,? என்று திட்டுகிறான்.

கண்கலங்கி கேட்டுக் கொண்டிருந்த சிவசங்கரன், கண்களைத் துடைத்துக் கொண்டே அவன் சரியாகத்தான் சொல்லி இருக்கான், அதுல ஒண்ணும் தவறில்லையே என்றார்.

அரவாணிகளுக்கென்று பிரத்யேக ஆப்ரேஷன் உண்டு. அதை செய்து கொண்டால் கணவன் மனைவியாக குடும்பம் நடத்தலாம். அவ்வாறு வாழ்கின்றவர்கள் இந்த மண்ணில் இருக்கிறார்கள், என்று சொல்லி அவனை கட்டாயப்படுத்தினேன். தாம்பத்தியம், குழந்தை, குடும்பம் என்று பல பரிமாணங்களை தாங்கி இருப்பதுதான் கல்யாணம். இதில் எது ஒன்று குறைந்தாலும் வாழ்க்கை சிறக்காது. நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்காது, என் விதி, நான் இப்படியே வாழ்ந்து விட்டுப் போகிறேன், நீ உன் வாழ்க்கையை அழித்துக் கொள்ளாதே என்று சொன்னதோடு அல்லாமல் என்னை சந்திக்கவும் வெறுத்தான்.

அவனை கட்டாயப் படுத்தி அப்படி என்ன சாதிக்கப் போகிறாய் நீ.,?

சாதிப்பதல்ல என் நோக்கம், அவனின் மனச்சரிவுக்கு ஒரு தடுப்பணை. எதிர் கால வாழ்க்கைக்கு ஒரு துணை. பாலியல் ஊனமுற்றவனுக்கு ஒரு ஊன்று கோலாக இருக்க நினைக்கிறேன், ஏனெனில் நான் அவனை அவ்வளவு காதலித்தேன். ஆனால் அவன் ஒத்துவராது என்கிறான்.

ஒத்துவராது என்று சொல்லியிருக்கிறான். நீ.. இந்த வீட்டுக்கு மருமகளா வருவதற்கு அவனுக்கு சம்மதம் உண்டு என்று சொல்லுகிறாய்., எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கு.

சிவசங்கரன் சொல்லவும், ஆமாம் என்பது போல தலையசைத்தாள் பாக்கியலெட்சுமி.

கயல்விழி தன் அருகில் நிற்கும் வாலிபனை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு, அதற்கு காரணம் உங்க மகள் தமிழ்ச்செல்வி தான் என்றாள். அந்த வாலிபன் கண் கலங்கி நின்று கொண்டிருந்தான்.

நீ.. என் மகளை பார்த்தியா.,? அவள் எங்கே இருக்கிறாள்.,? எப்படி இருக்கிறாள்.,? யாரை கல்யாணம் பண்ணிக் கொண்டு குடித்தனம் நடத்துகிறாள்.,? பாக்கியலெட்சுமி ஆவலுடன் கேட்டாள்.

கயல்விழி தயங்கினாள். மேற்கொண்டு பேசுவதற்கு தடுமாறினாள். எச்சிலை கூட்டி விழுங்கியபடி, அங்கிள், ஆன்டி இந்த உலகத்தில் துர்ப்பாக்கியசாலி என்றால் அது நீங்களாகத்தான் இருக்க முடியும். உங்களை நினைக்கிற போது எனக்கு அழுகை அழுகையா வருது என்றவள் கண் கலங்கினாள்.

வேண்டாம் கயல், தமிழ்ச்செல்வி ஓடிப்போனவள், ஓடிபோனவளாகவே இருக்கட்டும். அவளைப் பற்றி நீ.. எதுவும் சொல்லி இவர்களை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம். நாம இங்கிருந்து போய் விடலாம். என்னால இங்க நிற்க முடியலை, பிளீஸ்., என்று உணர்ச்சி ததும்ப பேசினான் அந்த வாலிபன்.

இரு தமிழ்., நான் தான் பேசுறேன்ல., என்ற கயல்விழி மனதை தேற்றிக் கொண்டு பேச தலைப்படும் போது…

என் மகளுக்கு என்னவாயிற்று..? எதை சொல்ல வேண்டாம் என்று தடுக்கிறான் இந்த பையன்.? இவன் யாரு.,? என்று குறுக்கிட்டாள் பாக்கியலெட்சுமி.

. . . . நீங்க நினைக்கிறாற் போல தமிழ்ச்செல்வி எவனோடவோ ஓடிப்போக வில்லை. அவளை அன்பழகன் தான் கூட்டிக்கொண்டு போனான்.

அன்பழகனா.,? என்ன சொல்லுகிறாய் கயல்விழி.,?.,!

ஆமாம் அங்கிள், அவன் அலியாக மாறிவிட்ட போதும், உங்களுக்குத் தெரியாமல் அம்மாவையும் தங்கச்சியையும் அடிக்கடி வந்து பார்த்து விட்டுச் செல்வான். அப்படி வந்து போகிற போது தான் தமிழ்ச்செல்வி ஒரு உண்மையை சொல்லியிருக்கிறாள்.

என்ன உண்மை அது.,?.,!

மனம் காரணமா.? உடல் காரணமா.? இல்லை சுரப்பிகள் செய்யும் சூட்சமமா.,? என்று எனக்கு சொல்லத் தெரியலை. ஆனால் உண்மை இது தான். அன்பழகன் எப்படி ஆணாக இருந்து பெண் உருவம் கொண்டானோ, அது போல தமிழ்ச்செல்வி பெண்ணாக இருந்து ஆணாக மாறிவரும் உண்மையை அவள் சொல்லி இருக்கிறாள்.

என்ன சொல்லுகிறாய் நீ..?? அதிர்ச்சியுடன் கேட்டார் சிவசங்கரன்.

இப்படித் தான் அன்பழகனும் அதிர்ச்சி அடைந்தான். தமிழ்ச்செல்வியிடம் உள் உணர்வை வெளிக்காட்டாமல் மனக் கட்டுப்பாட்டுடன் இருக்கச் சொல்லி வேண்டிக் கேட்டிருக்கிறான். இதைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லிவிடாதே, அப்புறம் எனக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் ஏற்படும் என்று ரகசியமா எச்சரித்திருக்கிறான். இருந்தாலும் உடலின் அபார மாற்றம் அவளை அச்சுறுத்தியது. நிலைமையை யூகித்த அன்பழகன், தன் பொறுப்பில் வைத்து பாதுகாக்க கூட்டிச்சென்று விட்டான். நீங்கள் என்னடான்னா அவளுக்கு கல்யாண ஆசை வந்து எவனோடவோ ஓடி விட்டாள் என்று அசிங்கப் படுத்துகிறீகள்.

ஐயோ என்ன கொடுமை இது.,? எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ.,? யார் குடியை கெடுத்தேனோ தெரியலையே,.,? என்று சத்தம் போட்டு கதறினார் சிவசங்கரன்.

என் வயிற்றில் புற்று வைக்க, நான் பெற்ற இரண்டும் இப்படியா இரண்டும் கெட்டானா ஆகனும், கடவுளே இது என்ன கன்றாவிக் கோலம். இதை கேட்கவா இன்னும் எங்களை உயிரோடு விட்டு வைத்திருக்கிறாய்.,? என்ற பாக்கியலெட்சுமி வயிற்றில் அடித்துக் கொண்டு அழுதாள்.

இதை கண்டு நெஞ்சம் பதறிய இளைஞன், அம்மா அழாதீர்கள் என்று தாவிச் சென்று அவளது கைகளைப் பிடித்துக் கொண்டான். கயல்விழி தொடர்ந்து சொன்னாள்.

தமிழ்ச்செல்வியை தன்னுடன் அழைத்துச் சென்ற அன்பழகன், தான் தவறான வழியில் சம்பாதித்த பணத்தை வைத்து, அவளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தான். ஆப்ரேஷன்னா, காசுக்காக செய்யும் கத்துக்குட்டி டாக்டரை பார்த்து செய்யலை, பிளஸ்டிக் சர்ஜன், சைக்கியாட்ரிஸ்ட், செக்ஸாலஜி ஸ்பெஷலிஸ்ட்டு, ஹார்மோன் ஸ்பெஷலிஸ்ட்டு, கிட்னிஎக்ஸ்பெர்ட் இப்படி ஒரு டாக்டர் பட்டாளத்தை கொண்டு தங்கச்சிக்கு ஆப்ரேஷன் செய்திருக்கிறான். அதன் பிறகு தான் அவள் ஆணுக்குண்டான தாடி மீசை அடையாளத்துடன் தமிழ்ச்செல்வனான்.

திருநங்கைகள் பசிக்காக மட்டும் தவறான பாதையில் செல்ல வில்லை, பார்வைக்கு உரிய தோற்றம் உருவாக வேண்டி செய்யும் ஆப்ரேஷன் செலவுக்கும் சேர்த்து தான் தொழில் பண்ணுகிறார்கள் என்று புரிந்தது. இதையெல்லாம் தெரிந்து மனம் வருந்தினேன். அண்ணன், தங்கச்சி இரண்டு பேர் வாழ்க்கையும் வீணாகி விட்டதை எண்ணி மனம் பொறுக்காமல், அவர்களில் ஒருவருக்காவது சந்தோஷத்தை கொடுக்க முடிவு செய்து தமிழ்ச்செல்வியை கணவனாக்கிக் கொள்வது என தீர்மானித்தேன். அன்பு அதற்கும் மாறுப்பு தெரிவித்தான். நீ எல்லாத் தகுதியும் பெற்று முழுமை அடைந்த பெண்ணாக இருக்கிறாய்., ஆனால் தமிழ்ச்செல்வி ஆணாக மட்டும் தான் தெரிவாள், அவனால் உனக்கு ஒரு குழந்தையை தர முடியாது. வீணாக வறட்டுப் பிடிவாதம் பிடித்து, நீ.. உன் வாழ்க்கையை தொலைத்து விடாதே என்றான்.

நீ..சொல்வதை எங்களால் நம்ப முடியலை., நம்பாமலும் இருக்க முடியவில்லை.

நீங்கள் எதை நம்புகிறீர்கள், எதை நம்பவில்லை என்று எனக்குப் புரியவில்லை. இதோ இருக்கானே இவன் தான் உங்கள் மகள் தமிழ்ச்செல்வி. ஆணாக மாறிய தமிழ்ச்செல்வன். ஆண் ஒன்று பெண் ஒன்று என பெற்று, அதில் ஆனந்தம் கண்டு வாழ்ந்து வந்த உங்களுக்கு, அவர்கள் இருவரும் எதிர்வினை பாலினமாக மாறியதை பொறுக்காமல் மனவேதனை கொள்ளும் உங்களைக் காண, எனக்கு சகிக்க முடியாத வேதனையாக இருக்கிறது. என் வேதனைக்கு ஒரு வடிகாலாக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பதில் பெருமை அடைகிறேன். இவனை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கள்.

ந்ன்றாக யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்திருக்கியா கயலு.,?

ஒரு பெண் தாய்மை அடைகிற போது தான் அவள் பிறவியின் முழு பலனை அடைகிறாள். நீ.. உன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ளாதே சிவசங்கரன் எச்சரிக்கை செய்தார்.

இல்ல அங்கிள், எனது தீர்க்கமான முடிவில் எந்த மாற்றமும் இல்லை, இவனுக்கு நான் குழந்தையாகவும், எனக்கு இவன் குழந்தையாகவும் இருக்கச் செய்து வாழ்ந்துக் காட்டுகிறேன். முடிந்தால் அன்பழகனின் உயிரணுவை வாங்கி, தாயாக முயற்சி செய்து, உங்களுக்கு பேரனோ பேத்தியோ பெற்று தருகிறேன்.

எங்களுக்கு என்ன சொல்வதென்று ஒண்ணும் புரிய வில்லை. . .

நீங்கள் மறுப்பு ஒன்றும் சொல்லாமல், ஊர், உலகத்தின் மனிதாபிமானமற்ற கூச்சலுக்கு செவிசாய்க்காமல், அன்பழகனை உங்களுடனே வைத்துக் கொண்டு அவனுக்கு ஆதரவாக அன்பு செலுத்துங்கள். அதைத் தான் அவன் எதிர்ப்பார்க்கிறான். ஆத்மார்த்தமான வாழ்க்கையும் அதுதான்.

சிவசங்கரனும் அவரது மனைவி பாக்கியலெட்சுமியும், சம்மதம் சொல்லி தமிழ்ச்செல்வி என்கிற தமிழ்ச்செல்வனை வாரி அணைத்து உச்சி முகந்து முத்தமிட்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *