நிதர்சனங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2023
பார்வையிட்டோர்: 3,462 
 
 

ஆதிபகவன் முதியோர் இல்லம். அதன் வரவேற்பு ஹாலில் அமர்ந்து கொண்டிருந்தனர் ராகவனும் மைதிலியும். இல்லத்தில் இருப்பவர்களுக்கு 65 வயதுக்கு மேல் இருக் கும். எல்லாரும் மகன்களால் கை விடப்பட்ட தந்தைமார்கள்! குறுக்கும் நெடுக்குமாக நடமாடிக்கொண்டிருந்த சிலரின் முகம் இயல்பாக இல்லாமல் எதையோப் பறிகொடு த்தாற்போல் பட்டது ராகவனுக்கு. ராகவனைத் தவிர மற்ற அனைவரின் வாரிசுகளும் உள்ளூரிலேயே வாசம் செய்து கொண்டிருந்தனர்.

மேலும், நல்ல ஊட்டம் இருந்தும் ஒன்று இரண்டு பேர் எலும்பும் தோலுமாக காட்சிய ளித்தனர். ஏனென்றால், அந்த முதியோர் இல்லத்தில், மற்ற இல்லங்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே ஒவ்வொரு மாதமும் பணம் வசூல் செய்கின்றனர். காலை சுவையான காஃபி அல்லது டீ, பிரேக் ஃபாஸ்டுக்கு நல்ல டிஃபன். நண்பகல் அருமையான உணவு; மாலை டீ, இரவு டின்னர் என்று அமர்க்களமாக இருக்கும். அதுவும் கிச்சன் மிகவும் சுத்தமாக இருக்கும். சமைப்பவர்களும் நீட்டாக இருப்பார்கள். எந்தக் குறையும் இல்லாமல் இல்லத்தில் இருப்பவர்களை மிகவும் நல்ல முறையில் கவனித்துக் கொள்வது கூடுதல் அனுகூலம்! அதனால் அவர்களின் ஒல்லியான தேகத் தோற்றம் கண்டு வியப்புற்றான் ராகவன்.

புருஷனின் முகத்தில் தென்பட்ட திடீர் மாற்றத்தைக் கண்ட மைதிலியால் அதற்கான காரணத்தை ஓரளவு யூகிக்க முடிந்தது. இப்படியே விட்டால் நொந்து போய்விடுவான் என பயந்தாள். ரோட்டில் நாய் அடிபட்டால் கூட பதறிப் போய்விடுவான். அந்த அளவிற்கு இளகிய மனம் படைத்தவன்! அதனால், அவன் கவனத்தை தன்பால் ஈர்க்கும் பொருட்டு, “என்ன..எனக்கென்னவோ மாமா வெளியே வருவார்னு நம்பிக்கை இல்லை. நீங்க என்ன நினைக்கிறீங்க?” மெல்ல ராகவன் காதைக் கடித்தாள்.

“ஏன் அப்படிச் சொல்றே ?” அவள் பக்கம் திரும்பினான்.

“ம். தெரியல்ல, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வர மாட்டார்னு மனசுக்குள்ள பட்சி சொல்றது…உங்களுக்கு எப்படி தோண்றது?”

உடனே ராகவன் பதில் சொல்லவில்லை. சில வினாடிகள் யோசித்தான். பிறகு சொன்னான்.

“இல்லை மைதிலி! அஞ்சு வருஷம் கழிச்சு வந்திருக்கோம். அப்பாவுக்கு நம்மளக் கண்டா ரொம்ப சந்தோஷமாயிருக்கும். அதனால நம்மக் கூட வர கண்டிப்பாக பிரியப்படுவார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”. அழுத்தம் திருத்தமாகச் சொன்னாலும், ராகவனுக்குள் ஒரு சிறு தீப்பொறி உரசி சந்தேகம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கிற்று. அவனுக்கு தெரியும், அப்பா கொஞ்சம் ரோஷக்காரர். பிடிவாதக்காரரும் கூட. தான் பிடித்த முயலுக்கு மூணே கால்தான் என்று வீம்புக்கு தர்க்கம் செய்பவர். தர்க்க விஷயத்தில் காம்ப்ரமைஸே கிடையாது. சரியோ தவறோ அவரின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்!

ஆனாலும் , அவரை எதிர்த்து யாரும் ஓரு வார்த்தை பேசமாட்டர். மனதுக்குள் இருக்கும் ஆதங்கத்தை ஒரு மாதிரி ஜீரணித்துக்கொண்டு ஒத்துப் போய்விடுவர். உயிரோடு இருந்தவரை சுந்தரத்தின் வாயில்லாப் பூச்சியான மனைவி கமலம் வாயைத் திறக்க மாட்டாள். கணவர் சொல்லும் வேலைகளை தடை சொல்லாமல் செய்வாள். கணவன் மனைவி இடையே எந்த சந்தர்ப்பத்திலும் பிணக்கு ஏற்பட்டது இல்லை.

ஏன்..ராகவன் கூட தன் படிப்பு விஷயத்தில் பெரிய ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியிருந்தது. ப்ளஸ் டூ முடித்ததும் காமர்ஸ் குரூப்பில் சேர்ந்து படிக்க ஆவல் கொண்டவன், தன் விருப்பத்தை தன் தாய் தந்தை, மற்றும் நண்பர்களிடமும் கூறியிருக்கிறான். ஆனால் சுந்தரம் ஒத்துக் கொள்ளவில்லை. இது கம்ப்யூட்டர் உலகம். வேலை ஆப்பர்சுனிடி அதற்குதான் அதிகம்.

அதனால் கம்ப்யூட்டர் சயன்ஸில் சேரச் சொல்லி வலியுறுத்த வேறு வழியின்றி சேர்ந்து படித்தான் ராகவன்.

படிப்பு முடிந்தவுடன், தந்தையின் கூற்றுபடி எடுத்த எடுப்பிலயே சென்னையைச் சேர்ந்த ஒரு பெரிய கம்பெனியில் நல்ல வேலை கிடைத்தது. கொஞ்ச நாளில் மைதிலியை மணம் புரிந்தான். நல்ல வேலை, கண்ணுக்குக் கண்ணான அழகான மனைவி இவைகள் ராகவனுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை தந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. திடீரென ஒரு நாள் அம்மா கமலம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தவள்தான். பிறகு எழுந்திருக்கவில்லை.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற சுந்தரத்தை மனைவியின் இழப்பு வெகுவாக வாட்டியது. ராகவனுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஸ்டேட்ஸூக்கு மாற்றல் கிடைத்தது. தந்தையை அழைத்தான். வரவில்லை என்று சொன்னதால் அவரைத் தனியாக விட பயந்து ஆதிபகவன் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான். இது நடந்து ஐந்து வருடங்களாகிறது. ஆனாலும், அடிக்கடி மொபைலில் தன் தந்தையுடன் வீடியோவில் சாட் செய்வான் ராகவன்.

சுதந்தரம் அருகில் வந்து நிற்க, மரியாதை நிமித்தம் ராகவனும் மைதிலியும் எழுந்து நின்றார்கள்.

ராகவன் பேசும் முன்னால் மைதிலி முந்திக்கொண்டாள். “எப்படி மாமா இருக்கீங்க?” முகம் மலர விசாரித்தாள்.

“செளக்கியமா இருக்கேன். நீங்கள்லாம் எப்படியிருக்கீங்க?” என்றவர், ராகவனிடம், “டேய் ராகவா! ஜெகனை ஏண்டா கூட்டிக்கிட்டு வரல்ல? பயல் எப்படி வளர்ந்திருப்பான்? அவனைப் பார்க்க எவ்வளவு ஆசையா இருக்கு!” பேரனைப் பற்றி ஆர்வமுடன் விசாரித்தார்.

“ஸாரிப்பா! ஜெகனை ஃபோர்ஸ் பண்ணிக் கூப்பிட்டோம். ஃப்ரெண்ட்ஸோட குற்றாலம் புறப்பட்டுப் போய்விட்டான். ஊருக்குப் போவதற்குள் ஒருநாள் கண்டிப்பாக கூட்டிக்கிட்டு வரேன்பா. “

“ம்..என்ஜாய் பண்ண வேண்டிய வயசு !…சரி, உட்காருங்க.” என்று விட்டு சுந்தரமும் அருகில் அமர்ந்து கொண்டார்.

“அப்பா!” மெல்ல ஆரம்பித்தவன் தொடர்ந்து, “இன்னிக்கு தந்தையர் தினம்! அதோட ஒரு ஸ்பெஷாலிடி, என்னன்னா உங்களோட பர்த் டே அபூர்வமா கோயின்ஸைடு ஆகியிருக்கு.” என்று புன் சிரிப்போடு சொன்னான் ராகவன்.

“அப்படியா?” என்பவரிடம் எந்த ரியாக்ஷ்னும் இல்லை. ஏதோ அவசியமில்லாத சமாச்சாரத்தைக் கேட்பது போல் இருந்தார்.

“ஆமாம். இந்த நாளை கிராண்டா செலிப்ரேட் பண்ண ஆசை!”

“எப்படி?”

“அதாவது , உங்களை எங்களோடு வெளியில் கூட்டிக்கிட்டுப் போகப்போறோம்.”

நிமிர்ந்து உட்கார்ந்தார் சுந்தரம்.

“வெளியிலேன்னா எங்கப்பா?”

“திருவல்லிக்கேணி, மைலாப்பூர் , நங்க நல்லூர்…இது மாதிரி இடங்கள்ல இருக்கற கோயில்களுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் பண்ணப்போறோம். அப்புறம் நல்ல ஹோட்டல்ல மத்யானம் லஞ்ச், சாய்ந்தரம் காஃபி. நைட் டின்னர், எல்லாம் முடிஞ்சு ராத்திரி எட்டு மணிக்கு உங்களைக் கொண்டு வந்து விட்டுடறேன்பா! மேனேஜர் கிட்ட ஸ்பெஷல் பர்மிஷன் கூட வாங்கி விட்டேன். கிளம்ப வேண்டியதுதான் …ஃப்ரெண்ட் கிட்டேர்ந்து வாங்கிட்டு வந்த காரும் தயாராயிருக்கு.”

“ராகவா, இந்த இல்லத்திலேயே ரெண்டு சன்னதிகள் இருக்கு. ஒண்ணு எனக்குப் பிடித்த ஆஞ்சநேயர், இன்னொண்ணு துர்கை . காலை, மாலை ரெண்டு வேளையும் பூஜை செய்கிறோம். உனக்கும் தெரியும். இந்த ரெண்டு பேரையும் வணங்கினால் போதும்பா. மற்றபடி கோயில்களுக்கு போகணும்னு அவசியம் கிடையாது.. “

“சரிப்பா, வேற எங்கேயாவது போகலாம். “

“எங்கேயாவதுன்னா, எங்கேப்பா ?”

“ம். வண்டலூர் ஜூ, இல்ல ஏதாவது தீம் பார்க் போகலாம். சாயந்தரம் வரை நல்லா பொழுது போகும். “

“ஏம்பா, நீ சொல்ற இடத்துக்கெல்லாம் போக நான் என்ன சின்னக் குழந்தையா? எழுபது வயசு கிழவன். மணிக்கணக்கில வெயில்ல சுத்தற அளவுக்கு என் உடம்புல எனர்ஜி கிடையாது. ஒரு ரவுண்ட் அடிக்கிறதுக்குள்ள பெண்டு கழன்றுவிடும். வேண்டாம் ராகவா! அதோடு, ஹோட்டலுக்குப் போய் சாப்பிடற விருப்பம் துளியும் இல்லை..”

தந்தை விட்டேர்த்தியாகப் பேச துவண்டு போனான் ராகவன். மைதிலியின் கணிப்பு மிகச் சரியாக இருப்பது தெரிந்து வேதனையுற்றான். ஐந்து வருடம் கழித்து முதல் தடவையாக ஸ்டேட்ஸில் இருந்து வந்திருக்கிறான். இனி அடுத்து வருவது நிச்சயம் குறைந்தது ஐந்தாண்டுகளுக்குப் பிறகுதான் முடியும். அந்தச் சமயம் தந்தை எப்படி இருப்பார் என தெரியாது. அதனால், அவரை எப்படியாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதி மனதில் எழ மீண்டும் முயன்றான்.

“சரிப்பா, நீங்க கோயிலுக்கு வரவேண்டாம். தீம் பார்க்குக்கும் வேண்டாம். என் ஃப்ரண்டோட வீட்டுக் கீழ் போர்ஷன் காலியா இருக்கு. அங்க போகலாம். அங்க, உங்களோட பர்த்டேயைக் கொண்டாடலாம். இன்னிக்கு ஒருநாள் நீங்க எங்களோடு இருக்கணும்னு எங்க ரெண்டுபேரோட ஆசை. ப்ளீஸ்பா! வாங்கப்பா!” கெஞ்சிய ராகவனை தொடர்ந்து பேசினாள் வைதேகி,

“ஆமாம் மாமா, இந்த நாலு சுவற்றுக்குள்ளேயே அடங்கிக் கிடக்கற உங்களுக்கு போரடிச்சுப் போகும். அதனால், இன்னிக்கு ஒரு நாள் வெளியே வந்தீங்கன்னா உங்களுக்கு ரிலாக்ஸேஷன் கிடைக்கும். எங்களுக்கும் சந்தோஷமாயிருக்கும். ப்ளீஸ் மாமா!” கெஞ்சினாள்.

“அம்மாடி! இந்த இல்லத்தில் எனக்கு போரடிக்கிறதுன்னு யார் சொன்னது? டிவி. இருக்கு. நியூஸ் பேப்பர்கள், மேகஸீன் கூட இருக்கு. அது இல்லாம எவ்வளவு நண்பர்கள் இருக்காங்க. பொழுது போகறதே தெரியாதும்மா! அதோடு என்னை மாதிரி நிறைய பேர் இந்த இல்லத்தில் இருக்காங்க. என் கிட்டே நல்லா உயிருக்குயிராய் பழகறாங்க. பாவம், அவர்கள் எங்கேயும் வெளியில் போறது கிடையாது. அவர்களை அப்படி கூட்டிக்கிட்டுப் போக இதுவரை யாரும் வந்ததும் இல்லை…. ” சுந்தரம் முடிக்கும் முன்னால் வேகமாக இடைமறித்தான் ராகவன்.

“அப்பா, அவர்கள் வெளியில் போகறதில்லைங்கறதுக்காக நீங்க எதுக்கு விசனப்படறீங்க ? அவர்களை உங்களோடு சேர்த்து இந்த விஷயத்தில் முடிச்சுப்போடாதீங்க!”

சற்று காட்டமாகப் பேசிய புருஷனைக் கண்டு அரண்டு போனாள் மைதிலி. கொஞ்சம் சாந்தமாகப் பேசியிருக்கலாம். என்னதான் இருந்தாலும் பெற்ற தந்தை, அவரிடம் இவ்வளவு கடுமை கூடாது என்று நினைத்தாள் மைதிலி.

“அப்படியில்ல ராகவா! நான் இங்க வந்த நாள்லேர்ந்து இன்னிக்கு வரை இங்க இருக்கற ஒவ்வொருத்தரும் என்கிட்ட எவ்வளவு அந்யோன்யமா இருக்கறாங்க தெரியுமா? ஒருநாள் நான் காலையில் நேரத்தில் எழுந்திருக்கல்லேன்னா அத்தனை பேரும் என் ரூமுக்குள் வந்து கவலையுடன் விசாரிப்பாங்க. கூடப்பிறந்த சகோதரன் கூட அவ்வளவு ஒட்டுதலா இருக்க மாட்டான். காலையில் நண்பர்க ளோடுதான் காஃபி குடிப்பேன். அப்புறம், பிரேக்ஃபாஸ்ட், இரவு டின்னர் இதெல்லாம் கூட நான் தனியாக சாப்பிடறது கிடையாது…” என்றவர் அடுத்து பிசிரும் குரலில், “என்ன.. உங்கக் கூட..இல்லேங்குற.. பெரிய குறை…அது ஒண்ணுதான்…. நீ என்னமோ அப்படி பேசிட்டே!”

தந்தையின் பேச்சு ராகவன் மனதைக் குடைந்தது. தான் அப்படி பேசியது தவறு என்பதை உணர்ந்து கொண்டான். “ஸாரிப்பா ! ஏதோ ஒரு வேகத்துல அப்படி பேசிட்டேன். தப்பாக எடுத்துக்காதீங்க” என மன்னிப்பு கேட்டவன், “புறப்படலாமா ” என்றபடி எழுந்து நின்றான், மைதிலியும் எழுந்து கொண்டாள்.

“இல்ல ராகவா! நான் வரல்லை. நீங்க ரெண்டு பேரும் கிளப்புங்க!” என எழுந்தார் சுந்தரம்.

இருவர் முகமும் ஏமாற்றத்தால் சுருங்கிப் போனது.

“என்னைத் தவறா நினைக்காதேள். இத்தனை வயதுக்கு மேலே பர்த் டே கொண்டாட்டம் எனக்குத் தேவையில்லேன்னு தோண்றது. அதனால் உங்க ரெண்டு பேரோட ஆசை நிராசையா ஆயிடிச்சுங்குற வருத்தம் எனக்கு. நீங்கள்லாம் ஷேமமா இருந்தா அது ஒண்ணே போதும். ..சரி, நீங்க புறப்படுங்க!” எனக் கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் தன் அறையை நோக்கி நடந்தார் சுந்தரம். ஒரு மூன்றாவது மனுஷனிடம் பேசுவது போல் விட்டேர்த்தியாகப் பேசிவிட்டுச் சென்ற மாதிரி இருந்தது ராகவனுக்கு. அவர் தன் அறைக்குள் நுழைந்ததும் தலை கவிழ்ந்தவாறு, மைதிலியுடன் புறப்பட்டான்.

தந்தையின் செயலைக் கண்டு பெரும் வேதனை ஏற்பட்டது ராகவனுக்கு. அதே போல் மாமனார் வெளியே வர விரும்பாததை தான் எதிர்பார்த்தாலும் அவரின் இந்தச் செயல் ஆழ்ந்த மனத் தாங்கலை தந்தது மைதிலிக்கு. வந்தபோது காணப்பட்ட சுறுசுறுப்பு இப்போது அவர்களிடம் சுத்தமாக இல்லை.

அவர்கள் பின்னாடியே தொடர்ந்து வந்தார் அந்த இல்லத்தில் தங்கியிருக்கும் ஒருவர். “ஸார் !” என அவர் அழைக்கத் திரும்பினான் ராகவன் மைதிலியுடன்.

“நீங்க சுந்தரம் ஸாரோட மகனா ?”

“ஆமாம்.”

“கொஞ்சம் தள்ளிப் போய் பேசலாம்.” என்று அவர்களை காம்பவுண்ட் கேட்டுக்கு அருகே சென்று நிற்க வைத்தார்.

“நானும் உங்கப்பாவும் பக்கத்துப் பக்கத்து அறையிலதான் தங்கியிருக்கோம். எம் பேர் சரவணன்” என்றவர் தொடர்ந்தார். “நீங்க இன்னிக்கு உங்கப்பாவை வெளியில வெளியில் கூட்டிக்கிட்டுப்போகப் போவதாகச் சொன்னார்…” அதன்பிறகு நடந்த உரையாடலை கூற ஆரம்பித்தார்.


“என்ன சுந்தரம் ஸார்! மேனேஜர் வந்து ஏதோ சொல்லிட்டுப் போறார். என்ன விஷயம்? சொல்லக் கூடிய விஷயமாயிருந்தால் சொல்லுங்க!” சுந்தரம் அறைக்குள் நுழைந்த சரவணன் கேட்டார்.

” அட சொல்லக் கூடாதுங்குறது ஒண்ணுமில்ல…” என்ற சுந்தரம், “எம் பையன் வந்து என்னை வெளியே கூட்டிக்கிட்டுப் போகப் போறதாக மேனேஜர் சொன்னார். இதுதான் விஷயம்!”

“அப்படியா ! சான்ஸ் கிடைக்காதான்னு நாங்க ஏங்கிண்டிக்கோம். உங்களுக்கு அடிச்சிருக்கு யோகம்! சந்தோஷமா போயிட்டு வாங்க. இந்த ஒருநாள் உங்களுக்குப் பொன்னான நாளாக அமையட்டும்!”

வேதனையோடு சிரித்த சுந்தரம், “சரவணன் ! இந்த ஒருநாள் மட்டும் பொன்னான நாளாக இருந்தால் போதுமா?” எனக் கேட்டதும் விழித்தார் சரவணன். சுந்தரம் மனதில் இருக்கும் எண்ண ஓட்டங்களை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. சுந்தரம் தொடர்ந்தார்.

“இன்னிக்கு ஒரு நாள் நான் என் மகனோட போறேன்னு வெச்சுக்குங்க. போயிட்டு வந்தப்புறம் தினம் தினம் இப்படி சான்ஸ் கிடைக்காதான்னு மனசு ஏங்கும். அந்த ஏக்கம் எம் மனசில ரொம்ப நாள் நெருடிக்கிட்டே இருக்கும். அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது. ஆரம்பத்திலேயே கிள்ளி எறியணும். ஆனால் ஒண்ணு , நான் அப்படி வெளியில் போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், திரும்ப இந்த இல்லத்துக்கு வரக் கூடாத நாளாக இருக்க வேண்டும் அதுதான் என்னோட ஆசை, குறிக்கோள் எல்லாம் ஓய்!” தீர்த்துச் சொன்னார்.


சரவணன் கூறியதைக் கேட்ட ராகவனுக்கு தந்தை வெளியில் வராததற்கான உண்மையான காரணம் புரிந்தது. அவர் மனதில் இப்படியொரு எண்ணம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வயதான காலத்தில் தனியாக இருக்க வேண்டாமே என கருதி தந்தையை ஸ்டேட்ஸூக்கு கூப்பிட்டும் பிடிவாதமாக மறுத்து விட்டார். அதனால் செலவு கூடுதலாக இருந்தாலும் வயோதிகர்களை நன்றாக கவனிக்கும் ஆதிபகவன் முதியோர் இல்லத்தில் அவரைச் சேர்த்தான். ஆனால் தந்தையோ தங்கள் பிரிவை எண்ணித் துயரப்படுகிறார்.

கனத்த இதயத்துடன் சரவணனிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர் ராகவனும் மைதிலியும். காரில் எதுவும் பேசாமல் உம் மென்று இருந்தனர். சில வினாடிகள் கழித்து மைதிலி பேசினாள்.

“என்னங்க, உங்கப்பா அப்படி நடந்துக்கிட்டதுக்கு கோபப்படாதீங்க. அஞ்சு வருஷமா நம்பள பிரிஞ்சதின் ஏக்கம் நல்லாவேத் தெரியறது. வயசானகாலத்துல நம்மக் கூட இருக்கப் பிரியப்படுறார். பழகிப் போன இந்த ஊரை விட்டு ஸ்டேட்ஸூக்கு வரவும் இஷ்டமில்லை. என்னதான் அவருக்கு இல்லத்தில் நண்பர்கள் இருந்தாலும் பெற்ற பிள்ளைப் போல வருமா? மொத்தத்தில் அவரை புத்திர சோகம் பிடித்து ஆட்டுகிறதுன்னு நினைக்கிறேன்.”

“நீ சொல்றது வாஸ்தவம்தான் மைதிலி! அப்பா மனசில இருக்கறது என்னன்னு தெளிவாக தெரிஞ்சிடுச்சு. ஆனாலும் இன்னிக்கு ஒரு நாள் நம்ம ஆத்ம திருப்திக்காக அவர் வந்திருக்கலாம், “

“அதுதான் மாமா வராததற்கு காரணம் என்னன்னு அவரோட நண்பர் சரவணன் சொல்லிட்டாரே ! அதுக்கூட நியாயமாகத்தான் படறது எனக்கு . இப்போதே 70 வயசு ஆகிறது. இனி நாள் போகப் போக தள்ளாட்டம் அதிகரிக்கும். ஒத்தாசைகள் நிறைய அவருக்குத் தேவைப்படும். நாமதான் அனுசுரணையாக இருந்து செய்யணும். என்னதான் முதியோர் இல்லத்தில நண்பர்கள் இருந்தாலும் ஒரு எல்லைக்கு மேல அவர்களால் ஹெல்ப் செய்ய முடியாது. பாவம்ங்க..நம்மள விட்டால் அவருக்கு வேற யார் இருக்கா? நல்லா சிந்திச்சுப் பாருங்க!”

மைதிலி சொல்வது நியாயம் எனப் பட்டது ராகவனுக்கு. தந்தை ஹோமில் நலமாயிருக்கிறார் என தான் ஆரம்பத்தில் நம்பியது; பிறகு சரவணன் சொன்ன விஷயம் இதையெல்லாம் யோசனை செய்து பார்த்ததில் அவருக்கு ஹோம் சிக் வந்து விட்டது ; அதை வளற விடக்கூடாது என நினைத்தான்.

இந்த மாதம் கடைசியில் காண்ராக்ட் முடிகிறது. மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க மேனேஜ்மென்ட் விரும்புகிறது. அதைப் பற்றி முடிவு எடுக்கவும், தந்தையைப் பார்க்கவும் தன் குடும்பத்துடன் சென்னை வந்திருந்தான் ராகவன்.

தந்தையின் வயோதிக நிலை அறிந்து அவனுக்குள் ஒரு முடிவு எழுந்தது. அதைச் செயலாக்க எண்ணம் கொண்டான். தந்தைக்கு ஸ்டேட்ஸூக்கு வர சம்மதம் இல்லை. இங்கு முதியோர் இல்லத்திலும் தொடர்ந்து இருக்க விருப்பம் இல்லை. அப்படியானால்….ஒரே வழி…..

“மைதிலி ! “

“சொல்லுங்க !”

“நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன்.”

“என்ன முடிவு?”

“அப்பாவை நம்மக் கூட கூட்டி வச்சிக்கிறதுன்னு…யெஸ், அதுக்கான ஏற்பாட்டை செய்யப் போறேன். நான் ஸ்டேட்ஸ் போகப்போறதில்ல. இங்கேயே ஜாய்ன் பண்ணப் போறேன். அதோடு கரெக்டா அஞ்சு வருஷம் கழிச்சு இந்த மாதத்தோடு நம்ம வீட்டு லீஸ் பிரியடும் முடியறது. வீடும் நம் கைக்கு வந்துடும். ஸோ நாம எல்லாரும் அந்த வீட்ல தங்கிக்கலாம். அதுவரை அப்பா அங்கேயே இருக்கட்டும். “

“சரி, டைம் பீயிங் நாம எங்க தங்கறது?”

“கொஞ்ச நாள்தானே! என்னோட ஃப்ரெண்ட் வீட்டுக் கீழ் போர்ஷனில் தங்கலாம்…”

“அப்புறம் ஸ்டேட்ஸூல இருக்குற நம்ம லக்கேஜ், அப்புறம் நம்மப் பையனோட ஸுகூல் சர்டிஃபிகேட் இதெல்லாம் கொண்டு வரணுமே! “

“அதையெல்லாம் நான் யோசிக்காமல் இருப்பேனா! ஏற்பாடு பண்ணலாம் .”

‘அப்பாடா ! பெற்ற தந்தையின் நிலைமையைப் புரிந்து கொண்டு இப்பொழுதாவது முழிச்சிக்கிட்டாரே!’ என்று ஆசுவாசுப்பட்டுக்கொண்டாள் மைதிலி. பாவம், அவளுக்குத் தெரியாது ராகவனின் பெற்றோர் சுந்தரம், கமலம் இல்லை; அவன் தத்தெடுக்கப்பட்டவன் என்கிற ரகசியம்! ரகசியம் தெரிந்த கமலம் இப்போது உயிருடன் இல்லை. தெரிந்த சுந்தரமோ தற்சமயம் முதியோர் இல்லத்தில்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *