கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 8,049 
 

நாகராஜன் வழக்கம் போல் செல்லும் ஆசிரமத்துக்கு, காலையில் வருபவர் அன்று மதியம் வந்திருந்தார். மாதம் தவறாமல் ஆசிரமத்திற்கு வந்து கொடுக்கும் பணம் பத்தாயிரத்தையும், ஆசிரம நிர்வாகியிடம் கொடுத்தார். அவர் கொடுத்துவிட்டு, எப்போதும் ஆசிரமத்திலுள்ள குழந்தைகளிடமும், முதியோர்களிடம் உரையாடி விட்டுதான் செல்வார். அன்றும் அதே போல் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்குள்ள காவலாளியிடம் ஒரு பையன் வருவதும், வந்து ஏதோ கேட்பதுமாக இருந்தான், அதை நாகராஜன் கவனித்துக் கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் ஆசிரமத்தில் மீதமிருந்த சாப்பாட்டை வேலையாள் கொண்டு வந்து தர, அதை வாங்கிக் கொண்டு வேகமாக சென்றுவிட்டான். இதைக் கவனித்தவர் இவன் இதே ஆசிரமத்தில் சேரலாமே, எதுக்கு இப்படி வெளியில் நின்று மீதமிருந்த சாப்பாட்டை வாங்கிச் செல்கிறான், அதுவும் இங்கயே அமர்ந்து சாப்பிடலாமே, ஏன் எடுத்து கொண்டுச் செல்கிறான் என்று யோசித்துக் கொண்டேயிருந்தார்.

நாகராஜன் ஆசிரமத்தை விட்டுச் செல்லும் முன், ஆசிரம உரிமையாளரிடம், அந்தப் பையனைப் பற்றி விசாரித்தார், “இப்போது மீதமிருந்த சாப்பாடு வாங்கிச் சென்றானே, அவன் யார் எதுக்கு சாப்பாடை வாங்கிக் கொண்டு செல்கிறான், இங்கயே அமர்ந்து சாப்பிடலாமே, அவனை இந்த ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ளலாமே, நீங்கள் தொகை எதுவும் வாங்குகிறீர்களா, நான் அந்த பையனுக்காக தொகை கொடுக்கிறேன், அவனை இங்கு சேர்த்துக் கொள்ளுங்கள்”

“அவன் யாரென்று எங்களுக்கும் தெரியாது, ஆனால் தினமும் மதியம் சாப்பாடு வாங்க வருவான், இங்கு சாப்பிடச் சொன்னாலும் சாப்பிட மாட்டான், இந்த ஆசிரமத்திரல் சேரச் சொல்லி பலமுறை கேட்டும் மறுத்துவிட்டான்”

“ஓ! சரி அவன் எங்கிருக்கிறான் என்று சொல்லுங்கள், அவனிடம் நான் பேசி இங்கு கூட்டி வருகிறேன்”

“அதையும் பல முறை கேட்டுப் பார்த்துவிட்டோம் சொல்ல மறுத்துவிட்டான், ஆனால் அவன் தவறு எதுவும் செய்யவில்லை, அது மட்டும் புரிகிறது, அதனால் அதுக்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை, தினமும் அவனுக்கென்று சாப்பாடு எடுத்து வைத்துவிடுவோம்” என்றார்.

நாகராஜன் அதைக் கேட்டுவிட்டு விடை பெற்று சென்றார். போகும் வழியில் யோசித்துக் கொண்டேச் சென்றார், என்ன இந்த பையன் எல்லாம் செய்கிறோம் என்று சொல்லியும் வேண்டாம் என்கிறானே, அப்படி என்னதான் செய்கிறான் என்று பார்க்க வேண்டும் என்று அடுத்த நாள், அதே ஆசிரம வாயிலில் அவன் வரும் வரை காத்திருந்தார்.

முன்தின நாள் வந்த அதே நேரத்திற்கு வந்தான், அதே போல் சாப்பாடை வாங்கிக் கொண்டுச் சென்றான், நாகராஜனும் அவன் பின்னாடியேச் சென்றார். பிரதான சாலையில் சென்றவன் ஒரு சிறிய சந்திற்குள் சென்றான், இவரும் காரில் செல்ல முடியாது என்பதால், காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவனைத் தேட, அதற்குள் அவன் தூரம் சென்றுவிட்டான், இவரும் வேகமாக ஓடி, அவன் பின்னாடியே செல்லத் தொடங்கினார், சென்ற சிறிது நேரத்தில் ஒரு வீட்டிற்குள் சென்றான். இவரும் உள்ளேச் செல்ல, அங்கு நடப்பதைப் பார்த்த அவர் அதிர்ச்சியில் நின்றார்.

அந்தப் பையனுக்கே வயது பன்னிரெண்டு வயதிற்குள்தான் இருக்கும் ஒரு குழந்தை அவன், ஆனால் அங்கு இன்னும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர், அவர்களுக்குதான் அவன் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தான். அந்தப் பிள்ளைகள் வயிரார சாப்பிட்டதும் மீத உணவை அவன் சாப்பிட்டான், இதைக் கண்டதும் அவர் கண்களிலிருந்து நீர் வந்துவிட்டது.

சாப்பிட்டு முடித்ததும் இவரைக் கண்ட பெண் குழந்தைகள், பயந்து அழுவது போல் நின்றனர். அவர்கள் அவ்வாறு நிற்பதைக் கண்டதும், அவனும் திரும்பி இவரைப் பார்க்க வேகமாக எழுந்தான்,
நாகராஜன், “முதலில் சாப்பிட்டு முடி, பாதியில் எழுந்திருக்காதே, சாப்பிட்டு முடிந்ததும் பேசலாம்” என்றார்.

தன் தங்கைகளைப் பார்த்து, “ஐயா ஒண்ணும் செய்ய மாட்டாங்க, நல்ல ஐயாதான் அவங்க பயப்படாதீங்க, வாங்க அண்ணன் பக்கத்தில் உட்காருங்க” என்று வேகமாக சாப்பிட்டுவிட்டு வந்து,
“ஐயா, நீங்கள் எப்படி இங்கே வந்தீங்க, எங்கள் வீடு உங்களுக்கு எப்படித் தெரியும்”

“நான் யாரென்று உனக்குத் தெரியுமா, என்னைப் பார்த்திருக்கியா, உன் பேரென்ன”

“என் பேர் செந்தில், தங்கைகள் பேர் சங்கவி, எழிலரசி, நீங்க அந்த ஆசிரமத்தித்திற்கு வரும் போது பார்த்திருக்கிறேன் ஐயா, வேற எதுவும் உங்களைப் பற்றித் தெரியாது ஐயா”

“செந்தில் உங்க அம்மா அப்பா எங்கே, எதுக்காக நீ ஆசிரமத்தில் வந்து சாப்பாடு வாங்குறே”

“அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்க ஐயா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அப்பா வேலைக்கு போய்ட்டு வரும் போது விபத்துல இறந்துட்டாங்க, அம்மாக்கு புத்து நோய் இருந்ததால், அவங்களும் இறந்து ஒரு வருஷம் ஆச்சு ஐயா”

“சரி உங்களுக்கு சொந்தங்கள் இருப்பாங்கள்ள, அவங்கெல்லாம் உங்களை கூட்டிட்டு போகலையா”

“அவங்ககெல்லாம் யாருனே தெரியாது, அப்பா அம்மா இருந்தவரைக்கும் யாரும் வந்ததில்லை, ரெண்டு பேர் இறந்ததுக்கும் யாரும் வரவில்லை”

“சரி நீ தங்கச்சிகளை கூட்டிக் கொண்டு, அந்த ஆசிரமத்தில் சேர வேண்டியதுதானே, எதுக்கு இப்படி கஷ்டப் படறீங்க, அவங்க உங்களை படிக்க வைப்பாங்கள்ள”

“ஆமா ஐயா, ஆனா என்னையும் தங்கச்சிகங்களையும் பிரிச்சிருவாங்களே, ஆம்பள பிள்ளைகளும் பொம்பள பிள்ளைகளும் ஒண்ணா இருக்க கூடாதாமே, அதனால்தான் ஐயா ஆசிரமத்தில் சேரல”
“அவங்க என்னை பயந்து போய் பார்க்கிறாங்க, புது ஆட்கள் யாரையும் பார்ப்பதில்லையா, வீட்டுக்குள்ளயேதான் இருக்காங்களா”

“அது வந்து ஐயா, நான் பக்கத்தில இருக்கிற ஓட்டல்ல சுத்தம் செய்யும் வேலை பார்த்தேன், அதனால் காலையில் போனால் மதியம் இவங்களுக்கு சாப்பாடு கொண்டு வருவேன், பிறகு ராத்திரி வர மணி பத்தாகிவிடும், சில பேர் குடிச்சிட்டு வந்து தங்கைகளிடம், என்னமோ பண்ண பார்த்து இருக்காங்க, இவங்க சத்தம் போடவும் பக்கத்துவிட்டு, அக்காதான் வந்து அவங்களை அடிச்சி விரட்டியிருக்காங்க, அதிலிருந்து நான் வேலைக்கு போகல, இவங்க கூடதான் இருக்கேன்”

“நீ எத்தனை நாளைக்கு இப்படி, சாப்பாடு வாங்கி கொடுக்க முடியும், இன்னும் நிறைய தேவைகள் எல்லாம் வரும் போது என்ன பண்ணுவே”

“என்னய்யா செய்ய எங்க அப்பா காவலாளியாதான் ஒரு வீட்ல வேலை பாத்தாங்க, பெரிய பணக்கார வீடு, அந்த வீட்டு ஐயாவும் உங்கள மாதிரிதான், மாதா மாதம் இந்த மாதிரி ஆசிரமத்துக்கு நிறைய பணம் கொடுப்பாங்க, ஆனா அவங்க வீட்ல வேலை பாக்கிறவங்களுக்கு, சம்பளத்தை தவிர வேற எதுவும் கொடுக்க மாட்டாங்க, எங்க அப்பா சம்பளத்தில் அம்மாக்கு மருந்து வாங்கனும், எங்களுக்கு தேவையான செலவு பாக்கனும், அதனால் அப்பா சம்பள பத்தவில்லை”

“அந்த வீட்டு அய்யாட்ட அப்பா அம்மா மருத்துவச் செலவுக்குன்னு பணம் கேட்டாங்க, அதை கொஞ்சம் கொஞ்சமா சம்பளத்தில் பிடித்துக் கொள்ளச் சொன்னாங்க, ஆனால் அந்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க, அதனால் அப்பா ராத்திரியும் வேலைப் பார்த்தாங்க, சரியா தூங்காததால் வண்டியை தூக்க கலக்கத்தில் ஓட்டி, எதிரில் லாரி வருவது தெரியாமல் மோதிட்டாங்க, அன்னைக்கு அந்த ஐயா பணம் கொடுத்திருந்தால், அப்பா இறந்திருக்கவும் மாட்டாங்க, அம்மா இன்னும் கொஞ்ச நாள் எங்களுடன் இருந்திருப்பாங்க”

“புண்ணியம் தேடறேன்னு எங்கெங்கோ பணம் கொடுக்கறாங்க, தன் பக்கத்தில் இருக்கிறவங்களுக்கு அவசரத்துக்கு கூட, உதவி செய்ய மாட்டேங்குறாங்க”

“அப்ப ஆசிரமத்துக்கு செய்வது தப்புன்னு சொல்றியா”

“அதை தப்புன்னு சொல்லவில்லை ஐயா, அவங்களும் எங்களை மாதிரிதானே, அவங்களுக்கு செய்யட்டும், அதே போல அவங்க கூட, அவங்களைச் சுற்றி இருக்கிறவங்களுக்கு எப்பவும் செய்ய வேணாம், அவசரத்துக்கு செய்யலாமில்ல, அப்படிச் செய்திருந்தா, நாங்க இன்று அனாதையா இருந்திருக்க மாட்டோம்ல”

நாகராஜனுக்கு யாரோ தன்னை மாறி மாறி அறைவது போலிருந்தது, ஏனெனில் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள், இதே போல் வந்து கேட்கும் போது, இதே போல்தான் நடந்து கொள்வார், சம்பளத்தை தவிர என்ன அவசரம் என்று கேட்டாலும் கொடுக்க மாட்டார், ஏதாவது ஏமாற்றுவார்கள் என்று நினைத்து கொடுக்க மாட்டார்.

அதனால் செந்தில் பேசியது அவரை அறைவது போலிருந்தது, இனிமேல் தீர விசாரித்துவிட்டு தன்னுடன் இருப்பவர்களுக்கு, தேவையான நேரத்தில் உதவி செய்யனும் என்று நினைத்துக் கொண்டார்.

“செந்தில் நீ என்னுடன் எங்கள் வீட்டிற்கு வருகிறாயா, உன்னையும் உன் தங்கைகளையும் நான் படிக்க வைக்கிறேன், என் வீட்டிற்குள்ளயே தோட்டத்தை கவனித்துக் கொள்பவர்க்கு என்று ஒரு சிறிய வீடு உள்ளது, அதில் நீ உன் தங்கைகளுடன் இருக்கலாம், பள்ளி நேரமும், படிப்பு நேரமும் போக, மீதி நேரத்தில் தோட்டத்தை, நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும், அதற்கு உனக்கு சம்பளம் உண்டு, அதை உன் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி அதில் போட்டு விடுகிறேன், உனக்கு பிற்காலத்திற்கு அந்த பணம் உதவும், உங்களுடைய மற்ற எல்லா செலவுகளையும் நானே பார்த்துக் கொள்கிறேன்”

செந்தில் யோசித்தான், “செந்தில் எதுவும் யோசிக்காதே, உன் தங்கைகளுக்கு முதலில் பாதுகாப்பு வேண்டும், நீ எப்பவும் இவர்களுடன் இருக்க முடியாது, அதனால் யோசிக்காமல் என்னுடன் வா” என்றார்.

செந்திலும் சரி என்று சொல்ல, அவர்கள் இருந்த வீட்டையும் வாடகைக்கு விட்டு, அந்த வருமானத்தையும், அவர்கள் வங்கி கணக்கிலே போட முடிவு செய்து, அவர்களை முழு மனநிறைவோடும், சந்தோஷத்தோடும் அழைத்துச் சென்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *