பார்வைக்குத் தப்பிய முகங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 19, 2012
பார்வையிட்டோர்: 10,083 
 
 

உங்களைப் போலத்தான் எனக்கும் சித்தா மருந்தாளுநர்களைப் பற்றி சங்கரனைப் பார்க்கும் வரையிலும் தெரியாது. மூப்பு தந்த பரிசான மூட்டுவலிக்கு சிகிட்சைப் பெற சித்த மருத்துவப் பிரிவுக்கு போகவேண்டியதாயிற்று. அங்குதான் சங்கரன் பழக்கமானான். ஒருமையில் அழைக்கும் உரிமையை தந்தது சங்கரன்தான். எனது வயது முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம்.

முதல் அறிமுகமே எங்களை மிகவும் நெருங்க வைத்தது. சித்த மருத்துவரை பார்த்துவிட்டு அவரிடம் மருந்துகளை எழுதி வாங்கிக் கொண்டு சங்கரனிடம் வந்தேன். மருத்துவர் எழுதிய சீட்டைப் பார்த்து, என்னிடம் சூரணங்களை காகிதத்தில் பொட்டலமாக கட்டிக்கொடுத்துவிட்டு, ”தைலம் தர வேண்டியுள்ளது, பாட்டில் எடுத்து வாங்க” என்றான். பக்கத்தில்தான் வீடு. உடனே எடுத்து வந்தேன். ”இந்தாங்க” என்றேன். என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு ”இது தான் உங்க ஊருல தைலம் வாங்கற பாட்டிலா” என்றான். அங்கிருந்தவர்களும் சிரித்தார்கள். ஏன் அவர்கள் சிரிக்கிறார்கள் என்று தெரியாமல் விழித்தேன். எனது நிலையை புரிந்து கொண்ட சங்கரன், சிரித்தவர்களை ”ஏன் சிரிக்கறீங்க” என அதட்டிவிட்டு, ”முன்னபின்னே சித்த மருத்துவப் பிரிவுக்கு போனதில்லையா” என கேட்டான். ”இல்லையே” என்றேன். ”அதான், சாருக்கு தெரியல, அய்யா, இங்க மேலுக்கு பூசிக்கறதுக்கு எண்ணெய் தருவோம். 30மி.லி தருவோம். இரண்டு நாடகளுக்கு ஒரு முறை வந்து வாங்கிக்கணும்” என்ற போதுதான், எனது செயலின் அபத்தம் புரிந்தது. அவசர அவசரமாகப் போன நான் எடுத்து வந்ததோ இரண்டரை லிட்டர் பெப்சி பாட்டில். என்னை மறுபடியும் அலைய விடக்கூடாது என்று யோசித்தானோ என்னவோ, அங்கிருந்த பணியாளரை அழைத்து ”லேப்ல போய் ஏதாவது சின்ன டப்பா இருந்தா எடுத்து வாங்க” என்றான். இப்படிதான் எங்களது பழக்கம் ஆரம்பித்தது.

சின்ன பிள்ளைகளுக்கும், வயதானவர்களுக்கும் வீட்டில் இருக்கப் பிடிக்காது. தனக்கான உலகத்தை வெளியே தேடுகின்றனர். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. மூட்டுவலிக்காக சித்தாவுக்கு வந்தவன், மெல்லமெல்ல என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆரம்பித்தேன். எனக்கும் நன்றாக பொழுது போயிற்று. சங்கரனின் உலகத்தில் நானும் ஒரு அங்கமானேன்.

சங்கரனுக்கு காலை 7.30க்கெல்லாம் முதல் ஆளாக வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டால்தான் நிம்மதி. எவரும் தனது வேலையில் குற்றம் கண்டுவிடக்கூடாது என்கிற மனோபாவமே அவனது பலமும் பலவீனமும். சித்த மருத்துவர்,மருந்தாளுநர், மருத்துவப் பணியாளர் ஆகிய மூவருக்கிடையே நல்லுறவும், நல்ல புரிதலும் இருந்தால்தான், வெற்றிகரமாக இயங்கமுடியும் என்பதை அடிக்கடி குறிப்பிடுவான். காலையில் வந்ததும் முதல் வேலையாக மூலிகைக் குடிநீர் தயாரிக்க ஆரம்பிப்பான். மருத்துவமனைப் பணியாளரும் இவனுக்கு தேவையான உதவிகளைச் செய்வார். மருத்துவர் அன்று கையெழுத்திட வேண்டிய பதிவேடுகளை மேசையில் வைப்பான். மருத்துவர் தந்த மருந்து சீட்டுடன் வரும் நோயாளிகளுக்கு தகுந்த மருந்துகளை வழங்க ஆரம்பிப்பான். இந்த கட்டத்திலிருந்து சங்கரனை ஆவலுடன் கவனிக்க ஆரம்பிப்பேன். நோயாளிகளின் சந்தேகங்களை தீர்த்து திருப்தியுடன் அனுப்புவதை தனது தலையாய கடமையாக நினைத்தான்.

சளியும், இருமலுமாக வந்த ஒரு மூதாட்டி ”போனதடவ நீ கொடுத்த கஷாயத்தூள் ஒரே கசப்புப்பா. அத இனிமே தராதே” என அடம் பிடித்த போது, ”பாட்டி உன் வாழ்க்கையில நீ பார்க்காத கசப்பா, அதைவிட இது ஒண்ணும் கசப்பில்ல, உன் வாழ்க்க இனிமேலாவது இனிப்பா இருக்கணுங்கறதுக்குத்தான் டாக்டர் இந்த ஆடாதோடை கஷாயத்தை குடிக்கச் சொல்லியிருக்காரு, புரியுதா” என்றான். ”நல்லாத்தான் பேசற” என்று சிரித்துக்கொண்டே சென்றாள்.

மதுமேக கேப்ஸ்யூலுக்குப் பதிலாக மதுமேக மாத்திரைகளை தந்தபோது, ஒரு பெரியவர், ”எனக்கு முன்னகொடுத்த பச்சைக்கலர் கேப்ஸ்யூல்தான் வேண்டும்” என்று சண்டை போட ஆரம்பித்தார். ”பெரியவரே, அதுதான் இது. அது சட்டை போட்டது, இது சட்டை போடாதது, அவ்வளவுதான் வித்தியாசம், உன்னோட சட்டையை கழட்டிட்டா நீ வேற ஆளாயிடுவியா இன்னா” என்றான். ”நீ சொல்றதும் சரிதான்” என்று சமாதானமாகி, கொடுத்த மாத்திரைகளை வாங்கிச் சென்றார்.

ஒரு இளம் பெண் ஏழு பேருக்கான சீட்டுகளுடன் வந்தாள். ”எப்படிம்மா இத்தனை பேருக்கும் வாங்கிட்டுப்போவ, சரியா பார்த்து கொடுத்துடுவியா.” ”அதெல்லாம் கரெக்டா கொடுத்துடுவேன்.” ”எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு” ”எனக்கு எல்லாம் தெரியும் சார், நீங்க கொடுங்க” என்று கோபப்பட ஆரம்பித்தாள். ”நீ கரெக்டா கொடுத்துடுவேன்னு எனக்கும் தெரியும், ஆனா, எனக்கென்னமோ, நீ அடுத்த முறை கவுன்சிலருக்கு நிக்கறதுக்காகத்தான், உங்க தெருவில இருக்கறவங்களுக்கு இதெல்லாம் வாங்கிட்டுப் போய் குடுக்கிறியோன்னுதான் சந்தேகமா இருக்குது” என்றதும், அவள் முகம் சிவந்து, ”போங்க சார், அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல” என்று சிரித்தாள். ”சரி சரி என் பங்குக்கு இந்த எதிர்கால கவுன்சிலருக்காக என்னால முடிஞ்சதை செய்யறேன். பதவிக்கு வந்ததும் என்னை மறந்திட மாட்டியே” என்றபடி, ஒவ்வொரு பொட்டலத்தின் மீதும் அவரவர் பெயர்களை எழுதித் தந்து ”நிச்சயம் நீ ஜெயிச்சுடுவ, போயிட்டு வா” என்றவுடன் அவள் அடைந்த வெட்கம் அனைவரையும் சிரிப்பிலாழ்த்தியது.

நடுத்தர வயதுள்ளவர் சங்கரனிடம் வந்து சீட்டை தந்தார். சூரணம், மாத்திரைகளை தந்த பிறகு, அங்கிருந்த அவுன்ஸ் கிளாசில் எண்ணையை ஊற்றி விட்டு, அவரைப் பார்த்து ”எடுத்து ஊற்றிக் கொள்ளுங்கள்” என்றான். அவரோ, அந்த அவுன்ஸ் கிளாசில் இருந்த எண்ணையை எடுத்து லபக்கென்று வாயில் ஊற்றிக்கொண்டார். அனைவரும் இதைப் பார்த்து பதறிவிட்டனர். அந்த சங்கரனின் கழுத்தைப் பிடித்து ஆலகாலத்தை விழுங்கமுடியாமல் செய்து நீலகண்டனாக்கிய பார்வதியைப் போல நமது சங்கரனும் சட்டென்று பாய்ந்து, அந்த நோயாளியின் கழுத்தைப் பிடித்து வாயிலிருந்த எண்ணையை துப்பவைத்துவிட்டு, ”இனிமே உங்க பேரு தைல கண்டன்” என்றான்.

மருந்துகளை வாங்கிச் செல்ல பை எதுவும் கொண்டுவராதவர்கள், இரண்டு கைகளிலும் மருந்துப் பொட்டலங்ளை எடுத்துச் செல்வதுண்டு. அப்படி வாங்கிச் சென்ற ஒரு நோயாளி மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள தன் வீட்டிற்கு சென்ற பிறகு, எதை எப்படி சாப்பிடுவது என்பது மறந்து போய், மீண்டும் திரும்பி வந்து சங்கரனிடம், ”எந்த கையிலுள்ளது இரண்டு வேளை சாப்பிட வேண்டும்” என பரமார்த்த குருவின் சீடனைப் போல் கேட்டார். அதற்குப் பிறகுதான் ஒவ்வொரு பொட்டலத்திலும் எவ்வளவு வேளைகள், எதனுடன், எப்போது சாப்பிட வேண்டும் குறித்து அனுப்புவதை வழக்கமாக்கிக் கொண்டான். இதெல்லாம் கூடுதல் வேலையில்லையா என கேட்டால், ”சார், அவங்களுக்கு உதவறதுதான் என்னோட வேலை. அதை ஒழுங்கா செய்யணுமில்லீங்களா” என்று பதில் தந்தான்.

கர்ப்பிணிகளும் சித்த மருத்துவப்பிரிவுக்கு வந்து மாதுளை மணப்பாகு வாங்கிச் செல்வார்கள். அழுக்கான பிளாஸ்டிக் டப்பாவை கொண்டு வருபவர்களை கண்டித்து, சின்னதாக சுத்தமான எவர்சில்வர் டப்பாவையோ அல்லது சுத்தமான கண்ணாடி குப்பிகளையோ கொண்டு வரச்சொல்வான். அவர்கள் அதற்கு கோபித்துக் கொண்டால், ”தோ, பாரும்மா, உன் நல்லதுக்குத்தான் சொல்றேன், கேட்கலைன்னா விடு, நாளைக்கு உன் பிள்ளைகிட்ட, நீ வயத்துல இருந்தப்போ உன் அம்மா உன்னை நல்லாவே கவனிக்கல, அழுக்கு டப்பாவில மருந்து வாங்கி சாப்பிட்டு உன்னை நோயாளியாக்க பார்த்தாள் என்று சொல்லிடறேன்” என்று பொய்யாக மிரட்டுவான். அவர்கள் வெட்கத்துடன் தலை குனிந்து சிரிப்பார்கள்.

காலையில் மூலிகைக் குடிநீர் தயாரானதும் முதலில் தன்னுடன் பணிபுரிபவர்களை கட்டாயப்படுத்தியாவது குடிக்க வைப்பான். அதற்காக பலர் அவனை வைவார்கள். நான் இது குறித்து அவனிடம் சொன்னால், ”சார், ஊருல இருக்கற நோயெல்லாம் இங்கதான் வந்து குவியுது. என்னை விட அவங்கதான் நோய் தொற்றுக்கு ஆளாவற அபாயத்தில இருக்கறாங்க. இந்த மூலிகைக் குடிநீர் அந்த அபாயத்தை கொஞ்சமாவது குறைக்குமேண்ணுதான் வற்புறுத்தி குடிக்க வைக்கிறேன்” என்பான். சங்கரனுக்கு நன்கு பரிச்சயமான ஆண் நோயாளிகள் குடிநீரை குடிக்கத் தயங்கும்போது, ”சாயந்திரமானா டாஸ்மாக்குல போய் ஊத்திக்கிறியே, அதைவிட இது ஒண்ணும் கசப்பில்ல, ஒரு ஸ்மால்தான் வாத்தியாரே, சும்மா ஒரே கல்பா அடி” என்பான். அவ்வளவுதான், நோயாளிகளின் சிரிப்பொலி அந்த அறையை அதிர வைக்கும்.

வருகிறவர்களையெல்லாம் சுவற்றில் தொங்குகின்ற சார்ட்டுகளை படிக்கச் சொல்லுவான். சித்தர்களின் நோயணுகா விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துவான். நானும் அவன் சொல்லித்தான் அவைகளை கடைபிடிக்க ஆரம்பித்தேன்.

நான் கவனித்த அளவில் அல்லோபதி என்கிற நவீன ஆங்கில முறை மருந்தாளுநர்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் சித்தா மருந்தாளுநர்களுக்கு தரப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒருவருக்கும் இவர்களைப் பற்றி அதிகமாக தெரியாது. இது பற்றி ஒரு முறை சங்கரனிடம் கேட்டேன்.

”சார், எங்களை விட அவங்களுக்கு வேலைப் பளு அதிகம். நிறைய நோயாளிகள். நிறைய மருந்துகள். நிறைய பொறுப்புகள். மேலும் அவங்க எண்ணிக்கையும் அதிகம். அதனால அவங்களுக்கு மதிப்பு, மரியாதை எல்லாம் கிடைக்குது. எங்க எண்ணிக்கையோ ஆயிரத்துக்கும் குறைவுதான். இந்த இடம்போல சில இடங்கள்ளதான் நிறைய நோயாளிகள் சித்தாவுக்கு வர்றாங்க”.

“இன்றைய காலகட்டத்தின் நவீன நோய்களுக்கும், பல்வேறுவகையான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிற ஆற்றல் சித்தமருத்துவத்திற்கு உள்ளது என்கிற செய்தி மக்களைப் போய்ச் சேரல. பல இடங்கள்ள இப்போது ஆங்கில முறை மருத்துவர்களே சித்த மருத்துவத்தை அங்கீகரித்து, நாள்பட்ட நோயாளிகளை சித்தாவுக்கு பரிந்துரை செய்யறாங்க. இன்றும் பரம்பரையாக சித்தமருத்துவத்தை செய்து கொண்டிருப்பவர்களில் பலர் மிகுந்த ஆராய்ச்சிப் பூர்வமாக திறமையோடும், நிபுணத்துவத்தோடும் தன்னலமின்றி மக்களுக்கு தொண்டாற்றி வருவதை நான் அறிவேன். என்னை விட இன்னும் அற்புதமாக பணியாற்றும் தலைசிறந்த சித்தா மருந்தாளுநர்கள் இருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்துத்தான் நானும் வேலையை கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது”.

“சித்தா மருந்தாளுநர்களுக்கு அதிக நோயாளிகள் வராததால், வேலை குறைவு என்பது சரியான கூற்றல்ல. நோயாளிகள் அதிகமாக வருவதில்லை என்பது மருந்தாளுநர்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது. சுருக்கமா சொல்லணும்னா அது சமூக, பொருளாதார, அரசியல்ரீதியான பிரச்சினையாகும். உண்மையில், எழுத்து வேலை எங்களுக்கு அதிகம். நிறைய பதிவேடுகளை பராமரிக்க வேண்டியுள்ளது”.

“மூன்று மாதத்திற்கொரு முறை அரசின் வழிகாட்டலின்படி எவ்வளவு மருந்துகள் தேவை என்பதை மாவட்டத் தலைமையிடம் கோர வேண்டும். பின் மருந்து நிறுவனங்கள் அனுப்பும் மருந்துகளை முதன்மை இருப்பில் வரவு வைக்க வேண்டும். புற நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை பதினைந்து நாட்களுக்கொரு முறை சித்த மருத்துவரிடம் கோரி, முதன்மை இருப்பிலிருந்து பெற்று, துணை இருப்பில் வரவு வைக்க வேண்டும். தினசரி நோயாளிகளுக்கு வழங்கிய மருந்துகளை தொகுப்பு பதிவேட்டில் பதிந்து, மாலையில் துணை இருப்பில் முந்தைய கணக்கிலிருந்து கழிக்க வேண்டும். மாத இறுதியில் முதன்மை இருப்பிலுள்ள மருந்துகளின் நிலவரம் குறித்து அறிக்கை தர வேண்டும். புறநோயாளிகள் குறித்த புள்ளி விவரங்களையும் அறிக்கையாக மாதாமாதம் சமர்ப்பிக்க வேண்டும். இது மட்டுமில்லாமல், அவ்வப்போது மாவட்ட, மாநில தலைமைகள் அவசரமாக கேட்கும் புள்ளி விவர அறிக்கைகளை தாமதமின்றி உடனுக்குடன் சமர்ப்பிக்க வேண்டும்”.

“முதன்மை, துணை இருப்பு பதிவேடுகள், விலை உயர்ந்த மருந்துகளின் பதிவேடுகள், பொருள் விவரப் பட்டியல்களின் பதிவேடு, மரத்தளவாடப்பதிவேடு, துணிவகைகளின் பதிவேடு, உபகரணங்களின் பதிவேடு, பயிற்சி கருவிகளின் பதிவேடு, மூலிகை தோட்டப் பராமரிப்பு, வருகைப் பதிவேடு, கால தாமதப் பதிவேடு, வெளிப்பணிக்கான பதிவேடு, அதிகாரிகளின் ஆய்வுக்கான பதிவேடு, தொகுப்புப் பதிவேடு, சிகிட்சை அளிக்கப்பட்ட நோய்கள் குறித்த பதிவேடு, மருந்து தேவைப்பட்டியல் பதிவேடு, காலிகலன்கள் பதிவேடு, அவற்றை ஏலம் விட்ட தகவல் பதிவேடு, தபால்கள் பதிவேடு, தினசரி புள்ளிவிவரப் பதிவேடு, மாதாந்திர புள்ளிவிவரப் பதிவேடு, வருடாந்திர புள்ளிவிவரப் பதிவேடு என பல விதமான பதிவேடுகளை பராமரிப்பதும் எங்களது பணிதான்” சங்கரனின் பேச்சு எனக்கு மலைப்பை ஏற்படுத்தியது.

சங்கரன் சிரித்தபடியே சொன்னான், ” சார், இதெல்லாம் கேட்கத்தான் மலைப்பாக இருக்கும். ஆனால் அவற்றை உருவாக்கியப் பிறகு பராமரிப்பது எளிதான வேலைதான். நினைவு வைத்துக் கொண்டு அவற்றை உரிய காலத்தில் பதிந்து விட வேண்டும்.எங்கள் பணிக்கு சோம்பல் பரம எதிரி. ஏற்கெனவே நான் குறிப்பிட்ட வழக்கமான வேலைகள் மட்டுமில்லாமல், மூன்று மாதத்திற்கு ஒரு முறை எல்லா பதிவேட்டிலும் சித்த மருத்துவரிடம் இருப்பு மற்றும் கணக்கு சரி பார்ப்பு சான்றை பெற்று விட வேண்டும். வருடம் ஒரு முறை மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் இருப்பும், கணக்கும் சரியாக உள்ளதற்கான சான்று பெற வேண்டும். அவ்வளவுதான்.”

முதலில் கூறியது போல எனக்கும், சங்கரனைப் பார்க்கும் வரையிலும் சித்தா மருந்தாளுநர்கள் குறித்து எதுவுமே தெரியாமல்தான் இருந்தேன். சங்கரன் தனது வேலையை, வயிற்றுப்பிழைப்புக்கான ஒன்றாக பார்க்கவில்லை. அதுதான் என்னை வயது வித்தியாசத்தைத் தாண்டி நெருங்க வைத்தது. மாதாந்திர அறிக்கைகளை தயாரிக்கும்போது, கணக்குகள் நேராகாமல் தகராறு செய்யும் போதெல்லாம் இரவு வரை அதனுடன் போராடிக் கொண்டிருப்பான். அல்லு புள்ளி கணக்கு போடுவதை அவன் தீவிரமாக வெறுத்தான். எனவே, தனது தவற்றின் மூலத்தை கண்டுபிடிக்கும் வரை ஓய மாட்டான். அந்த மாதிரியான சமயங்களில் நானும் அவனுக்கு கம்பெனி கொடுப்பது வழக்கம். அப்போது சங்கரன் மனம் விட்டு பல விஷயங்கள் குறித்து ஆழமாகப் பேசுவான். அவன் மூலம்தான் பல தத்துவார்த்துவமான விஷயங்களை அறிந்துகொண்டேன்.

”சார், நான் பலமுறை யோசிக்கறதுண்டு, டோக்கன்களை தினமும் பதியும் போது இது எப்பத்தான் முடியுமோ என தோன்றும், ஆனா தொடர்ந்து எழுதிக்கொண்டே வரும் போது கைகொள்ளா டோக்கன்கள் மளமளவென்று குறைந்து தீர்ந்து போவதைப் பார்க்கும் போது நமது பிரச்சினைகளும் இப்படித்தான் தொடர்ச்சியாக முயன்றால் படிப்படியாக குறைந்து ஒரு நாள் இல்லாமல் போகும் என்று நினைத்துக் கொள்வேன்”.

”எனது பதிவேடுகளில் உள்ள வரவு, செலவு, மீதம் என்கிற மூன்று சொற்கள் ஒட்டு மொத்த வாழ்வின் சாரத்தை வெளிப்படுத்துவதாக கருதுகின்றேன். எப்படி இருப்பிலுள்ள மருந்துகள் செலவாகி இருப்பு இல்லை என்கிற நிலையை அடைகின்றதோ, மனிதனும், அதைப்போலவே அவனது வரவெல்லாம் சிறுக சிறுக தானாகவே செலவாகி, மிச்சம் ஏதுமில்லை என்கிற மரணத்தை தழுவுகின்றான். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது”.

“எந்தன் வாழ்க்கை என்றுமிந்த மக்களுக்கே அர்ப்பணம் என்று வாழும் கர்ம யோகிகளுக்கு மரணம் என்பது உடல் சார்ந்தது மட்டுமே. பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போல வெகு இயல்பானது. அதாவது அவர்களின் வரவு பெருகிக்கொண்டே இருப்பதால், செலவு எவ்வளவுதான் ஆனாலும் மீதி இருந்துகொண்டே இருக்கும். இங்கே வரவு என்பதற்கு ஒருவர் வாழ்வதற்கான அவசியம், அர்த்தம், காரணம் என்று பொருள் கொள்ளலாம். அது யாருக்கு கூடுகிறதோ அவர்களை நான் கர்மயோகி என்பேன்”.

”ஆனால் நம்மைப் போன்றவர்களுக்கு மரணம் என்பது துளிர் வாடி வதங்கி சருகாகி உதிர்வதைப் போன்றது. மரணத் தலைப்பாகையுடன்தான் நமது வாழ்வு வலம் வருகிறது. நீங்களே பார்த்திருப்பீர்கள், இங்கு வரும் நோயாளிகளில் பல பேர் சீக்கிரம் போய்ச் சேர வழி கேட்கிறார்கள். நோயின் கொடுமையால் மட்டும் இப்படி கேட்கவில்லை. நோயாளியல்லாத பலரும் மரணத்தை எதிர்பார்த்தே வாழ்வைக் கடத்தி வருகிறார்கள். ஏனென்றால் வாழ்வதற்கான அவசியம், அர்த்தம், காரணம் எதுமில்லாமல் வரவு வற்றி, செலவுக்கும் வழியின்றி, மீதம் எதுவுமற்ற வாழ்வு அவர்களுக்கும், பிறருக்கும் சகிக்கமுடியாததாகி விட்டது. பிறருக்குப் பயன்படாத வாழ்வு, ஒருவிதத்தில் அழுகலான வாழ்வுதான். ஏற்கெனவே அது மரணித்துவிட்ட வாழ்வாக உள்ளது. எனவேதான் அந்த அழுகல் நெடியை தாங்க முடியாமல், உடல் ரீதியான மரணத்தை விரும்புகின்றனர். இதுவும் ஒரு வகை தப்பித்தலே. என்னைக் கேட்டால், பிறருக்காக தன்னலமின்றி வாழும் வாழ்வுதான், அர்த்தமுள்ள சீரிளமையுடன் இறுதிவரையிலும் வரவைப் பெருக்கும் வாழ்வாக இருக்கும் என்று அடித்துச் சொல்வேன்.”

”சில மருந்துகள் மெல்ல குறைந்து மீதமில்லை என்கிற நிலை வரும்போது சோகம் என்னை ஆக்கிரமிக்கும். சில மருந்துகள் எப்போதுதான் தீருமோவென ஆவலுடன் எதிர்பார்ப்பதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் என்ன என்று தெரியாது, ஆனால் நானும், இந்த வேலையும் வேறுவேறல்ல என்பது மட்டும் புரிகின்றது”.

சங்கரன் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்று ஒரு மாதமாகிவிட்டது. அதன் பிறகு நான் அந்த மருத்துவமனைக்கு செல்வதும் படிப்படியாக குறைந்து போனது. சங்கரன் இடத்திற்கு ஒரு பெண் வந்திருக்கின்றாள். வழக்கம்போல் மருத்துவரின் சீட்டுகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. சித்தமருத்துவப் பிரிவு இயங்கும் அறையில் இப்போது பூரண அமைதி நிலவுகின்றது. எல்லாம் சரிதான். என்றாலும் ஏதோ ஒன்று குறைகிறது. கடமையாகச் செய்யும் ஒன்றுக்கும், வாழ்வாக மாறிவிட்ட ஒன்றுக்கும் உள்ள வித்தியாசமாகவும் அது இருக்கலாம்.

– July 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *