படுகளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 8,029 
 
 

காமம் கடக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. பெண்ணாசை தான் மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது. மோகித்தவளை எப்படி மஞ்சத்துக்கு அழைக்கலாம் என மனம் கணக்கு போடுகிறது. அவளைப் பற்றிய நினைவுகளே அலையலையாகப் பெருக மனம் பித்தாகிறது. ஒருவனுக்கு அரூபியாகத் தெரிபவள், இவனுக்கு பேரழகியாகத் தெரிகிறாள். உள்ளுக்குள் காமம் காடாக வளர்ந்து நிற்கிறது. இவன் விதி புத்தியை வென்றுவிடுகிறது. அவளுடைய காலடியில் ராஜ்யத்தை ஒப்படைக்க இவன் தயாராகவே இருக்கிறான். மோகம் ஒரு தீ பற்றிக்கொண்டால் எதனாலும் அதை அணைக்க இயலாது.

முதலில் அவள் தன்னை ஏறெடுத்துப் பார்த்தாலே போதும் என்றிருக்கும். பிறகு ஒரு வார்த்தை பேச மாட்டாளா என ஏக்கமாய் இருக்கும். பால்வதனத்தை விரல் நகங்களால் தீண்டிப் பார்க்க ஆசையாய் இருக்கும். முத்தம் கன்னத்தில் ஆரம்பித்து இதழ்களில் வந்து நிற்கும். இது என் வீடு என் பெயரில் இருக்கிறது. இது என் வாகனம் ஆர்.சி புக் எனது பெயரில் இருக்கிறது என்பது மாதிரி மனம் அந்த யுவதியை தன் உடைமையாக்கிக் கொள்ள தனது காமவடிகாலுக்கு அவளை ஒரு போகப் பொருளாக உபயோகித்துக் கொள்ள திட்டமிடுகிறது. அடைந்தவுடன் அலட்சியமாய் தூக்கிப் போட்டு விடுகிறது. என்ன பெரிய பம்மாத்து. கையை மூடியே வச்சிருந்த ஏதோ தங்கக் காசு வைச்சிருக்கியோன்னு நினைச்சேன். கையை விரிச்சதுக்கப்புறம் தானே தெரிகிறது வெறும் பத்துக் காசுன்னு. மாம்பழம் ருசியாக இருந்தது. கொட்டை முளைக்குமா முளைக்காதா என்று ஏன் கவலைப்படுவானேன்.

வாழ்க்கையில் ஒருதரம் தான் மாம்பழம் சாப்பிடுறோமோ என்ன. வகையா வகையா சாப்பிடறோம். வாங்கி வாங்கி சாப்புடறோம். அதுலயே நிபுணன் ஆயிடுறோம். பழத்தை பார்த்த மாத்திரத்துல அதோட ஜாதகத்தையே சொல்லிடறோம். மாம்பழத்தை ருசிக்க மரத்துல கல்லெறியனும்னு அவசியமில்லை கையில காசிருந்தா போதும். தசரதனுக்கு அந்தப்புரத்தில் பத்தாயிரம் மனைவிகளா என்று வாயைப் பிளக்கிறோம். கண்ணகியாக இருப்பதை விட மன்னனுக்கு ஆசை நாயகியாக இருப்பது அவளது பாதுகாப்பு உணர்வை திருப்திப்படுத்தும். பெண்கள் நிரந்தரத்தை தேடுகிறார்கள் நிரந்தர வருமானம், நிரந்தர வேலை, பதவி, அந்தஸ்து, சொந்த வாகனம். தனது அழகு அங்கு முன்னிருத்தப்படுவதை எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள். பட்டத்து ராணிக்கு அடுத்த இடம் என்றால் கசக்குமா?

தனக்கு பதினாயிரம் மனைவிகள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். தேவலோக ரம்பை, ஊர்வசியை விட ஒயிலானவர்கள். காமத்திலிருந்து விடுபட்டவனே ராஜ்யபரிபாலனத்தை நியாயமாக நடத்த முடியும். அந்தக் காமத்தைக் கடக்கவே பதினாயிரம் மனைவிகள் அவனுக்கு. காமத்தை அடக்குவதென்பது வேறு, காமத்தை கடப்பதென்பது வேறு. சோறு தண்ணியில்லாமல் சிங்கத்தை கூண்டில் அடைத்து வைத்துப் பாருங்கள் பார்ப்பவை எல்லாம் அதற்கு இரையாகத்தான் தெரியும். அடக்குபவன் வெளியில் ஸ்ரீராமனாக வேஷம் போடுலாம். மகாத்மாவாக நடிக்கலாம். உள்ளுக்குள் காமப்புலையனாகத்தான் இருப்பான். பிரசாதத்தை விடுத்து மலத்தை நாடி ஓடும் நாயைப் போல.

ஆசையோடு சங்கமிப்பவர்கள் இச்சை தீர்ந்தவுடன் உறவு முடிந்துவிட்டதாக நினைக்கலாம். ஆனால் அப்படியல்ல. எச்சமிடும் காக்கைகள் தன்னால் விருட்சமான மரத்தில் வந்து அமர்ந்து இளைப்பாறுவதில்லையா. அந்த நிலைதான் அர்ஜூனனுக்கு அவனுக்கும் உலுப்பிக்கும் இடையே நிகழ்ந்த உறவால் பிறந்த அரவானைத்தான் பாரதப் போருக்கு களப்பலியாக கொடுக்க தீர்மானித்துள்ளார்கள். சகாதேவன் தனது பண்டித ஞானத்துடன் நாள்குறித்தது மட்டுமில்லாமல் சாமுத்திரிகா லட்சணம் உடைய ஆண்மகனை களப்பலியாக கொடுத்தால் கெளரவர்களை வீழ்த்திவிடலாம் என்ற உக்தியையும் கண்ணனிடம் கூறிவிடுகிறான். இதுநாள் வரை சகாதேவனின் கணக்கு தவறியதே இல்லை.

அப்படிப்பட்டவர்கள் யார் யார். கண்ணனை தருமன் இழக்கமாட்டான். அர்ஜூனனை கண்ணன் இழக்க முன்வரமாட்டான் ஏனெனில் தனது தங்கையைத்தான் அவனுக்கு தாரை வார்த்திருக்கிறான். அரவானை காளிக்கு களப்பலி கொடுக்கலாம் என்று கண்ணன் தான் முதலில் தீர்மானித்தான். தனது பிறப்புக்கு காரணமானவன் தன்னிடம் வந்து உதவி கேட்கும் போது அரவானால் தட்ட முடியவில்லை. மகன் தந்தைக்காற்றும் உதவி என்று மறுக்காமல் தான் பலியாக ஒத்துக் கொள்கிறான். ஆனால் கண்ணன் தனக்கு இரு வரங்களைத் தரவேண்டும் என்று கேட்கிறான். அதனை வரமாகக் கருத வேண்டியதில்லை. அரவான் தனது கடைசி ஆசை இன்னதென கண்ணனிடம் தெரியப்படுத்துவதாக கொள்ளலாம். மரணத்தை முத்தமிடுபவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவது வழக்கம் தானே. பிரம்மச்சாரியான எனக்கு பெண் சுகம் என்றால் என்னவென்று தெரியாது எனவே இன்று மாலையே தனக்கு கல்யாணம் நடந்து இந்த இரவு தனக்கு முதலிரவாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான் அரவான்.

ஓரிரவு மட்டுமே வாழ்ந்து பூவும் பொட்டும் இழந்து கைம்பெண்ணாக யார் முன்வருவார்கள். எந்த யுவதியும் சம்மதிப்பதாகத் தெரியவில்லை. அவகாசம் குறைவு தான் மாலைவேளை வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாளை சூர்யோதயத்தில் போர் தொடங்கிவிடும். கண்ணன் ஒரு முடிவு செய்தான். அவதாரம் தனக்கான காரியத்தை சாதித்துக் கொள்ள தன்னையே கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறது. தர்மத்தை நிலைநாட்டுவதற்கு நீதிநெறியை கண்ணன் மீறவே செய்தான். பெண் தன்மை மிகுந்தவர்கள் கடவுட் தன்மைக்கு மிக அருகாமையில் இருப்பார்கள். அதனால் தான் கண்ணனை கோபிகைகள் தங்கள் கூட்டத்தில் அவனும் ஒருவனாக விளையாட அனுமதித்தனர். ஆண் பெண் சேர்க்கையால் பிறந்த நாமனைவரும் சரிபாதி ஆண்தன்மையும் சரிபாதி பெண் தன்மையும் உள்ளவர்கள். இந்தப் பூமி பெண்தன்மை கொண்டிருப்பதால் தான் படைப்பு சாத்திமாயிற்று. இரக்கம், கருணை, தயை என்பதெல்லாம் பெண் தன்மையோடு சம்மந்தப்பட்டது. கண்ணனுடைய பெண் தன்மை மோகினியாக வடிவெடுத்துச் சென்று அரவானை திருமணம் புரிந்து கொள்கிறது. அவனுடைய காம இச்சையை தீர்த்து வைக்கிறது.

காமம் கடவுள் நிலைக்கு நம்மை இட்டுச் செல்லுமாயின் நல்லது தான். தன்னுடைய மரண நேரத்தை அறிந்தவனுக்கு அதனை மறக்க அவனுக்கு பெண் போதை தேவையாய் இருக்கிறது. பெண் நாட்டமே மனிதன் கடவுளைக் காண்பதற்கு தடைக்கல்லாக உள்ளது. தாய்ச்சியைத் தொடும் ஆட்டத்தில் தான் சுவாரஸ்சியமே அடங்கியுள்ளது. போரை ஆரம்பித்து வைத்த கிருஷ்ணனே அதற்கு பிராயச்சித்தம் செய்ய விரும்பினான். தேரை இழுத்து தெருவில் விட்டாயிற்று அதை நிலைக்கு கொண்டுவந்துதானே ஆகவேண்டும். பூமிக்கு அப்பாற்பட்ட காரியங்களைப் பற்றி கண்ணனால் யோசிக்க முடிந்தது. கிருஷ்ணனுக்கு பதினாயிரம் மனைவிகள். அவன் ஒரு ஸ்திரிலோகன் தான். அவன், தான் ஆத்மா என்றும் தான் மனதாலும், உடலாலும் செய்த காரியங்களால் ஆத்மா பாதிக்கப்படாது என்றும் ஆத்மாவை தண்ணீர் நனைக்காது, நெருப்பு எரிக்காது, வாள் வெட்டாது என்றும் எதனாலும் அதன் தெய்விகத் தன்மை குறைந்துவிடாது என அறிந்திருந்தான்.

அரவானை களப்பலி கொடுத்தாயிற்று. கடவுளின் திட்டம் என்ன வென்று மனிதனால் யூகிக்கக் கூட முடியாது. எது ஆரம்பம் எது முடிவென்று அவனுக்குத்தான் தெரியும். தனது மாயாஜால வித்தையையும், சாதுர்யத்தையும் கெளரவர்களை வீழ்த்த உபயோகப்படுத்திக் கொண்டான் கண்ணன்.

கெளரவர்களை வீழ்த்த குறுக்கு வழியைப் பின்பற்றினான் கிருஷ்ணன். பல போர்விதிகளை மீறினான். அவன் அவதாரம் என்பதால் கிருஷ்ணன் செயல்களுக்கெல்லாம் நாம் நியாயம் கற்பிக்கின்றோம். துரியோதனன், பீஷ்மர், துரோணரின் பலகீனங்கள் என்ன என்பதை கண்ணன் முன்கூட்டியே அறிந்திருந்தான். நடுநிலை தவறி பாண்டவர்களின் மூளையாக செயல்பட்டவன் தான் கண்ணன். அனுமக் கொடி பறக்கும் அர்ஜூனனின் தேரை செலுத்தியபடி தன் திட்டப்படி அனைத்தும் ஒழுங்காக நிகழ்கிறதா என கவனித்துக் கொண்டிருந்தான். யாகங்களும், ஹோமங்களும், நியதியும், சடங்குகளும் இன்றும் பரத மண்ணில் வேர்ப்பிடித்திருக்க வியாசரும் ஒரு காரணம். கடைசியில் தான் பெற்ற சாபத்தால் வேடனடிக்க வீழ்ந்தான் கண்ணன். உடலெடுத்தால் விதி பொம்மையாகத்தான் நம்மை ஆட்டுவிக்கும் என்பதற்கு கிருஷ்ணன் நல்ல உதாரணம். இன்றும் குருட்சேத்திர மண்ணில் அரவானின் ரத்தத் துளிகள் படிந்திருப்பதை நீங்கள் காணலாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *