கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 3,094 
 
 

(தலைப்பு ஒன்று கதை இரண்டு)

“உன்னை ஒவ்வொரு நாளும் நினைத்து உருகிக் கொண்டிருக்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன்” அன்புடன் ராசாராமன். தூண்டம்பாளையம்.

இப்படி எழுதப்பட்ட ஒரு கடிதம் எனக்கு பழைய பேப்பர் கடையில கிடைச்சுது. அனுப்புநர் முகவரி மட்டும் இருந்து, பெறுநர் முகவரி இல்லாமல் இருந்தது

ராசாராமன் யாருக்கு இந்த கடிதத்தை எழுதியிருப்பார்? எனக்குள் இதை தெரிந்து கொள்ள ஒரே ஆர்வம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.

இந்த மாதிரி ஒரு கடுதாசி உங்க கிட்டே கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படியே அதை வீசி எறிந்து விடுவீர்களா? அல்லது மேற்கொண்டு அந்த கடிதத்தின் விவரங்களை தெரிந்து கொள்ள முயற்சிப்பீர்களா?

முதலாவதாக செய்பவர்கள் சாதாரண மனிதர்கள், இரண்டாவதான காரியத்தை செய்பவர்கள் என்னை போன்ற அறிவாளிகள். என்ன சார் என்னையும் மீறி என் பெருமை உங்களிடம் சொல்லி விட்டேனா? சரி முதல்ல என்னை பத்தி சொல்லிடறேன், அப்புறம் அந்த கடுதாசி விசயத்தை கவனிக்கலாம்.

என்னை பற்றி நானே சொல்லக்கூடாது, நான் மிகுந்த புத்திசாலி அப்படீன்னு நம்பறவன்., மனித மனங்களை எடை போடுவதில் வல்லவன். இதனால் சுற்றி உள்ள நட்பு வட்டாரம் “என் எதிரில் அறிவாளி என்றும் பின்புறம் கோமாளி” என்றும் முணுமுணுக்கும்.அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொள்ள எனக்கு நேரமில்லை. என்னுடைய மற்றவர்களின் சுக துக்கங்களை பற்றிய ஆராய்ச்சிக்கே நேரம் போதவில்லை. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.

இந்த சமுதாயத்தில் “தள்ளுபடி” என்னும் வார்த்தை மனிதர்களை எந்தளவுக்கு மயக்கி இருக்கிறது, இதை பற்றி அவ்வப்பொழுது எண்ணிக்கொள்ளும் நான் ஒரு முறை ஒரு கடையில் ஒரு விலையுயர்ந்த பேனா ஒன்றை வாங்கி ஒருவருக்கு பரிசளிக்க விரும்பினேன். கடைக்காரன் எடுத்து போட்ட பேனா ஒன்றை எடுத்துக்கொண்டவன் அதன் விலை என்னவென்று பார்க்க அது ஐநூறை தொட்டது. இவ்வளவு விலைஉயர்ந்த பேனா அவருக்கு அளிப்பது அவசியமா? என்று ஒரு முறை மனம் எண்ணமிட்டாலும், பரவாயில்லை, அவரால் எனக்கு நிறைய பலன் கிடைத்துள்ளதை எண்ணிக்கொண்டேன்.

சார் இந்தாருங்கள் அழகிய பென்சில்கள் அடங்கிய ஒரு பாக்கெட்டை கடைக்கார்ர் கொடுத்தார். இது எதற்கு? சார் இந்த பேனாவுக்கு இலவச இணைப்பாக இதனை கொடுக்கிறோம்.

எனக்கு தன்மானம் விழித்து கொள்ள அப்படியென்றால் எனக்கு இந்த பேனா தேவையில்லை. கடைக்காரர் வியப்புடன் என்னை பார்க்க என் அறிவு சுடர் அங்கு விழித்துக்கொண்டு அவரிடம் அரை மணி நேரம் இலவசங்களின் ஏமாற்றுதலை அவரிடம் விளக்கினேன். அவரும் பொறுமையுடன் கேட்டுவிட்டு. அதுதான் கரெக்ட சார், அப்ப இந்த பேனா வாங்கிக்குங்க, வேறொரு பேனாவை எடுத்து கொடுத்தார். 350 ரூபாய் வரும், இலவசமெல்லாம் கிடையாது, பேனாவின் விலையே உங்களுக்கு தருகிறேன். உங்க கொள்கைக்காகவே இதை கொடுக்கிறேன் லாபம் எனக்கு தேவையில்லை.

கம்பீரமாய் அதனை வாங்கிக்கொண்டேன். நண்பரிடம் கொடுக்க அவர் முகம் ஏமாற்றமடைந்தது போல் காணப்பட்டது. என்னப்பா? பேனா பிடிக்கலையா? அதில்லை போன வாரம் இதே மாதிரி பேனா வாங்கினேன், அதான் இப்ப எதுக்கு அனாவசியமா உனக்கு செலவுன்னு? அப்படியா காட்டு பாக்கலாம். அவன் அதை காட்ட நான் வாங்கியது போலவே இருந்தது, பரவாயில்லை விலை எவ்வளவு (கண்டிப்பாய் அதிகமாகத்தான் இருக்கும்) எண்ணமிட்டவாறு கேட்க, இரு நூறு ரூபாய் வாங்கிட்டான். அசுவாரசியமாய் சொல்ல என் கொள்கைக்கு நேர்ந்த தோல்வியை அவனிடம் சொல்லவில்லை. நானும் அவன் சொன்ன விலையிலேயே அந்த பேனாவை வாங்கியதாய் சொன்னேன். பொய்தான் என்ன செய்வது? (நான் ஏமாறியதை எதற்கு சொல்ல வேண்டும்)

இப்ப கடுதாசி விசயத்துக்கு வருவோம். “உன்னை ஒவ்வொரு நாளும் நினைத்து உருகிக் கொண்டிருக்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் இவ்வளவுதான் எழுதியிருந்துச்சு. எழுதுனவர் பேரு ராசாராமன்.கீழே தூண்டம்பாளையம் அப்படீன்னு எழுதியிருந்துச்சு. யார் அந்த ராசாராமன்? கடுதாசி அரத பழசா இருந்துச்சு. இண்லெண்ட் லெட்டருல இருந்துச்சு. இந்த காலத்து பசங்களுக்கு இன்லெண்ட், கார்டு இதை பத்தி எல்லாம் அவ்வளவு பரிச்சயம் இல்லை. புழக்கத்துலயும் அதுக இல்லை. அப்படீன்னா இந்த கடுதாசி எழுதி குறைஞ்சு இருபது வருசமாவது இருக்கணும். என்னுடைய முதல் கண்டு பிடிப்பு.அடுத்து இதை எழுதியவர் ஏன் பெறுநரின் முகவரியை எழுதவில்லை? இந்த கடிதத்தின் முடிவு என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்?

தூண்டம்பாளையம் போகணும்னு முடிவு பண்ணினேன்.எனக்குள்ள இப்ப ஒரு துப்பறிவாளனா உணர ஆரம்பிச்சேன்

நான் எதிர்பார்த்த்தை விட நகரமாக இருந்துச்சு இந்த ஊர். சரி இப்ப ராசாராமனை எப்படி கண்டு பிடிக்கறது? அந்த ஊர்ல போஸ்ட் ஆபிஸ் இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டவன், அங்கு சென்று ராசாராமன் எத்தனை பேர் இருக்காங்கன்னு விசாரித்தேன்

மூன்று ராசாராமன்கள் இருக்க, இரண்டு பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களாய் இருக்க மூன்றாம் ராசாராமனை தேடி போனேன்..

சுற்றிலும் காம்பவுண்டு போட்டு நடுவில் பங்களா டைப்பில் இருந்தது அந்த வீடு

அதுவரை வேகமாக வந்தவன் வீட்டை பார்த்தவுடன் மனசு அடித்துக்கொண்டது. சரி என்ன கேட்பது? ராசாராமனையா? இல்லை இந்த கடுதாசியை காண்பித்து இது உன்னுடையதுதானா? நீ யாருக்கு எழுதினாய் இப்படியெல்லாம் கேட்க முடியுமா? அவர் குடும்பத்துடன் இருந்து இந்த கடித்த்தை காண்பித்தால் அந்த குடும்பத்தில் குழப்பம் வராதா?

தயக்கதுடன் காம்பவுண்ட் கேட் அருகே அழைப்பு மணியின் ஸ்விட்ச் இருக்கிறதா என பார்த்து அதை தயக்கத்துடன் அழுத்தினேன்.

ஐந்து நிமிடம் எந்த அசைவும் இல்லை. திடீரென கதவு திறந்து ஒரு பெண் வெளியே வந்தாள். அவளுக்கு நாற்பதுக்குள் மதிக்கலாம், களையான முகம்? யார் வேணும்? குரல் சற்று கீச்சலாய் ஒலித்தது.

இங்க ராசாராமன்னு? தயக்கத்துடன் சொன்னேன். அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து ஒரு ஆண் குரல் யாரும்மா? தெரியலை ராசாராமன்னு கேட்கறாங்க, இவள் சொல்ல சட்டென ஒரு ஆண் அந்த பெண்ணை கொஞ்சம் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார். அவருக்கு கிட்ட்த்தட்ட நாற்பத்தைந்து மதிக்கலாம், நல்ல உத்தியோகத்தில் இருக்க வேண்டும். எதுக்கு ராசாராமனை தேடுறீங்க சார்?

அவர்கிட்டே ஒரு சங்கதி சொல்லனும்? அதுவரை இருந்த தைரியம் எல்லாம் போய் விட்டது. இந்த வேலை தேவையில்லாததோ? எவனோ யாருக்கோ எழுதிய கடிதத்தை தூக்கிக்கொண்டு? நாம் ஏன் இங்கு வரவேண்டும்?இந்த கேள்வி மனதுக்குள் உட்கார்ந்து கொண்டது.

சார் நான் கோயமுத்தூர் டவுன்ல இருந்து வர்றேன், அவர்கிட்டே ஒரு பொருளை காட்டணும்? காட்டுங்க, நான்தான் ராசாரமன், அவர் கையை நீட்டினார். (என்னை உள்ளே வா என்று கூப்பிடவில்லை)

சற்று சந்தேகத்துடனே அவரை பார்த்துக்கொண்டு அவர் கையில் அந்த கடிதத்தை வைத்தவன், என்னை பற்றியும், நான் இந்த கடிதத்தை பழைய பேப்பர் கடையில் கிடைத்ததையும், யார் அந்த ராசாராமன் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் வந்துள்ளேன் என்பதையும் தெரிவித்தேன்,

என்னை ஓரு மாதிரியாக பார்த்தவர் (இவனுக்கென்ன பைத்தியமா. யாரோ எழுதிய கடித்த்தை கொண்டு இப்படி வந்திருக்கிறானே?) என்று கூட நினைத்திருக்கலாம்.

சற்று பெருமூச்சு விட்டு உள்ளே வாங்க சார், (அப்பாடி கூப்பிட்டுட்டார்) ஆனால் குரல் ஏன் இப்படி உடைந்திருக்கிறது.

அதற்குள் வாசலில் நின்றிருந்த பெண் உள்ளே சென்றிருந்தாள். முன்னறையில் உட்கார சொன்னவர், அந்த கடித்த்தையே சற்று நேரம் உற்றுப்பார்க்க தானாக அவர் கண்களில் இருந்து நீர் வழிந்தது.சார்..சார்.பதட்டத்துடன் அவர் கையை பற்றினேன்.

சற்று அமைதியானவர், மெல்ல மூக்கை உறிஞ்சி, சாரி சார் பழைய ஞாபகத்தை கிளறி விட்டுட்டீங்க?

அப்படீன்னா இது நீங்க எழுதுனதுதானா? ஏன் வாங்கறவங்க முகவரி எழுதாம விட்டுட்டீங்க? இல்லை அவங்க அப்பா அம்மா கிட்டே மாட்டிக்குவோமுன்னு பயமா?

அந்த கதையை சொல்றேன் கேளுங்க.

ராசாராமன் வீட்டு வழியாக தினமும் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பேசி பார்க்கவேண்டும் என்று ஆசை.ஆனால் பயம் அந்த பெண் ஏதாவது தவறாக பேசி விட்டால்?

இப்படி பயந்து பயந்தே நான்கைந்து மாதங்கள் ஓடி விட்டது. அந்த பெண் யாரென எப்படி தெரிந்து கொள்வது? துடித்துக்கொண்டிருக்க, அதற்கான சந்தர்ப்பம் அவன் அம்மாவின் வடிவில் தானாக வந்தது. என்ன ருக்மணி? “காலேசெல்லாம்” எப்படி போயிட்டிருக்கு? அம்மாவின் திடீர் கேள்வி அந்த பெண்ணை சற்று திகைக்க வைத்தாலும் சமாளித்துக்கொண்டு, இந்த வருசம் கடைசி வருசம் ஆண்ட்டி. அருகில் ராசாராமன் நிற்பதை பார்த்து சற்று முகத்தை தாழ்த்திக்கொண்டாள். அடுத்து உங்கப்பா, மேல படிக்க வைக்கறாரா?அம்மா பேச்சை வளர்க்க, எனக்கு ஆசைதான் பாக்கலாம், சாரி ஆண்ட்டி, எனக்கு பஸ்ஸுக்கு நேரமாச்சு, சொல்லி விட்டு அந்த பெண் விரைந்தாள். அதுவரை பூனையாய் அம்மாவின் அருகில் நின்றிருந்த ராசாராமன், ஒன்றும் தெரியாதவன் போல் யாரும்மா? இந்த பொண்ணு? கேள்வியை கேட்டான்.

நம்ம ராசன் தோட்டத்து தெக்காலே ஒரு தோட்டம் இருக்குது பாரு, அவங்கப்பன் கோபாலன், அவன் பொண்ணு. இவங்க எல்லாம் எப்படி படிக்கறாங்கன்னு பாரு, நீ ஒரு டிகிரி வாங்க முடியாம வருசத்தை மட்டும் முழுங்கிட்டு வீட்டுல உட்கார்ந்திருக்க? அம்மாவின் இந்த குத்தல் இவனுக்கு ரோசத்தை உண்டு பண்ணவில்லை. காரணம் அந்த பெண் யார்? எங்கிருக்கிறாள்? என்ற விவரம் தெரிந்து விட்டதே.

இப்பொழுதெல்லாம் அந்த தெக்கால தோட்டம் அருகில் அடிக்கடி தென்பட்டான் ராசாராமன். அதுவும் காலை எட்டு மணி அளவிலும், மாலை நாலு மணிக்கு மேலும் கட்டாயம் பார்க்கலாம். ஆனால் அவனது எண்ணம் மட்டும் நிறைவேறுவதாக இல்லை.

கொஞ்ச நாட்களாய் தெக்கால தோட்டம் ருக்மிணி வீட்டில் ஆட்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். ருக்மினிக்கு கல்யாண எற்பாடு ஏதாவது செய்யறாங்க்களோ? ராசாராமனுக்கு ஏதோ நடக்கிறது என்று புரிந்தது, ஆனால் என்னவென்று தெரியவில்லை. மனசெல்லாம் பதட்டமாக இருந்தது.

சரி ஆனது ஆகட்டும் கடிதம் மூலம் தன்னுடைய காதலை தெரியப்படுத்தி விடலாம் என்று முடிவு செய்தவன் கடிதத்தை யார் மூலம் கொடுப்பது என்று யோசித்தான். அவளது கல்லூரி முகவரியை எழுதலாமா? யாராவது படித்து விட்டால் கல்லூரியில் அவளுக்கு கெட்ட பேராக்கி விடுமே? சரி வீட்டு முகவரிக்கு எழுதினால் வேறு வினையே வேண்டாம் பெரிய களேபரமாகி விடும். நேரடியாகவும் கொடுக்க பயம். கடிதம் எழுதி வைத்துக்கொண்டு முகவரி எழுத பயந்தான்.

ஒரு நாள் விடியற்காலையில் ராசாராமனின் கதவு தட்டப்பட்டு பக்கத்து வீட்டு ஆத்தா ஒரு குண்டை போட்டாள். தெக்கால தோட்டத்து பொண்ணு ருக்மினியை ஆத்துல அடிச்சுட்டு போயிடுச்சு. விடியற்காலையிலதான் காண்டு பிடிச்சு எடுத்தாங்கலாம்.

விழித்தும் விழியாமலும் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த ராசாராமனுக்கு பெரிய அதிர்ச்சி ஆகி விட்டது. கடவுளே, பதறி அடித்து ருக்மினி வீட்டுக்கு ஓடினான். அம்மாவும் பக்கத்து வீட்டு ஆத்தாவும் பார்த்துக்கொண்டிருப்பதையும் கவனிக்காமல்.

எல்லாம் முடிந்து போனது. இவனது கடிதததுக்கு வேலையே இல்லாமல் போய் விட்டது. மாலை துணியை துவைப்பதற்கு அம்மாவுடன் நொய்யலாற்றுக்கு சென்றவள் கால் வழுக்கி அப்படியே…

தலை கவிழ்ந்து கண்ணீருடன் சொல்லிக்கொண்டிருந்த ராசாராமனுக்கு என்ன பதில் சொலவது என்று திகைத்து போய் உட்கார்ந்திருந்தேன். சாரி சார் உங்க பழைய கால துக்கத்தை கிளறி விட்டு விட்டேன். என்னை மன்னிச்சுங்குங்க. துக்கத்துடன் சொன்னவன் மேலும் அவரது துக்கத்தை கிளறாமல் அவர் தோளை தட்டி விடை பெறுவதாக தெரிவித்தேன். சார் இருங்க..காப்பியாவது சாப்பிட்டு போங்க, வேணாங்க.. துக்கத்துடன் சொல்ல, பரவாயில்லை சார் மனைவியிடம் காப்பி கொண்டு வர சொன்னார்.

காப்பி குடித்து முடித்தவுடன் சார், தயவு செய்து தப்பா நினைக்கலையின்னா அந்த கடித்ததை என் கிட்டே கொடுத்துட்டு போங்க..என்னுடைய பழைய ஞாபகத்துக்கு இது ஓண்ணாவது இருக்கட்டும். இந்தாங்க சார் துக்கத்துடன் அவரிடம் கொடுத்து விட்டு விடை பெற்றேன்.

வீடு திரும்ப பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுதும் ராசாராமனின் துக்க நினைவுகள் வந்து போய்க்கொண்டிருந்தது. ராசாராமன் வீட்டில் என்ன நடந்து கொண்டிருந்தது என்று தெரியாமல்.

ஏங்க யாருங்க அவரு? அவருகிட்டே ஏதோ கதை எல்லாம் சொல்லிகிட்டு இருந்தீங்க, உங்க பேரை ராசாராமன்னு வேற சொல்லிகிட்டு இருந்தீங்க.

ஆமா பின்னே அவ்வளவு தூரம் வேலையத்த வேலையா ஒரு கடிதாசியை கொண்டு வந்துட்டு கதைய கேளுன்னா, அதான் நான்தான் ராசாரமுன்னு ஒரு கதைய அவுத்து விட்டேன். பாவம் இவ்வளவு தூரம் கடுதாசி கொண்டு வந்தவர் கதையாவது கேட்டுட்டு போகட்டும்.

அந்த லெட்டரை வேற வாங்கி வச்சிட்டீங்க.

ஆமா நாளைக்கு வேற யார்கிட்டேயாவது போய் கதைய கேக்க ஆரம்பிச்சிருவார், அதனால அதைய வாங்கி வச்சுட்டேன். கிழிச்சு போட்டுடணும்.

ஏங்க இந்த கதைய வாசகர்கள் படிச்சுகிட்டு உங்களை ஒரு ஏமாத்துக்காரனா நினைக்கமாட்டாங்களா?

கிடையாது, நான்தான் சொல்லிவிட்டேனே! நான் கொஞ்சம் அப்படி இப்படி டைப்புன்னு!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *