ஃபெயில் காலம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 6,080 
 

“பெரியப்பா மெட்ராஸ்க்கு நாளக்யாம்மாப் போறாவ?” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட செல்லம்மாவைக் கூர்மையாய்ப் பார்த்தாள் அம்மா.

“என்ன, பெரியப்பா போறாவளான்னு மொள்ளமாக் கேக்க? நீயுந்தானட்டி அவியக் கூடப் போற! ராத்திரி ஏழு மணிக்கி ரயிலாம். வீராவரத்ல போய் ரயிலேறணும். நாலு மணிக்கெல்லாம் பெரியப்பா வந்துருவாவ. அப்ப அளுதுட்டு நிக்யாத. உடுப்பெல்லாம் எடுத்து வச்சிட்டியா?”

செல்லம்மாவுக்கு இப்போதே அழுகை வரப் பார்த்தது. கடந்த ஒரு வாரமாய், நாள் தவறாமல் அம்மா இவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிற சமாச்சாரம் தான். ஆனாலும் அதை முழுமையாய்க் கிரகித்துக் கொள்ள இவளுடைய மனசு முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது. முன்னே பின்னே தெரியாத மெட்ராஸில் போய், முன்னே பின்னே தெரியாத ஒரு வீட்டிலே எடுபிடி வேலை செய்யப் போக வேண்டுமாம்.

திருநவேலிக்கார நாடாக்கமார் மெட்ராஸில் போட்டிருக்கிற பலசரக்குக் கடை ஒன்றில் வேலை பார்க்கிற பெரியப்பாவுக்கு, அந்தக் கடையில் சரக்கு வாங்குகிற ஒரு வசதியான வீட்டில், வீட்டு வேலைக்கு பன்னிரண்டு பதிமூணு வயசுப் புள்ள ஒண்ணு வேணும். வீட்டோட இருக்கணும் என்று தெரிய வந்ததும், அவருக்கு செல்லம்மாவின் ஞாபகம் வர, தாலியறுத்த தம்பி பொஞ்சாதிக்குக் கடுதாசி போட்டு அவர், வீட்டு வேலைக்கு செல்லம்மாவை ஏற்பாடு செய்து விட்டார்.

“உடுப்பு ஒண்ணும் எடுத்து வக்யலம்மா…” என்று மெல்ல முணுமுணுத்தாள்.

“வக்யாட்டிப் பரவாயில்ல, வெள்ளன எந்திரிச்சி எடுத்து வச்சிக்கலாம். இப்பப் படுத்து ஒறங்கு” என்று அம்மா தம்பிக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

படுத்துக் கொண்ட பிறகு, “ஒனக்குப் பாய எடுத்துக் குடுக்காமப் படுத்துட்டேம் பார்” என்று எழும்பக் கையூன்றிய அம்மாவிடம், “நானே எடுத்துக்கிருதேம்மா” என்றாள் செல்லம்மா.

“ஒனக்கு எட்டாதேட்டி?”

“இஸ்டூல் போட்டு ஏறி எடுத்துக்கிருதேம்மா.”

ஸ்டூல் போட்டு ஏறி, பரணிலிருந்து பாயை உருவினபோது, பாயை முந்திக் கொண்டு ஒரு அட்டை வந்து விழுந்தது. ஒரு மரக்கைப்பிடியில் பொருத்தப்பட்ட அட்டை. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம் என்கிற வாசகம் ரெண்டு பக்கமும் எழுதப்பட்ட அட்டை.

இந்த அட்டையை உயர்த்திப் பிடித்துக் கொண்டுதான் போன வருஷம் செல்லம்மா பள்ளிக்கூடப் பிள்ளைகளோடு ஊர்வலம் போனாள். மேரி ஆடன் ஸ்கூலிலிருந்து கிளம்பி, வடக்கு பஜார், தெக்கு பஜார் வழியாய், வ.உ.சி. மைதானத்தை ஊர்வலம் போய்ச் சேர்ந்த பின்னால் அங்கே பெரிய பொதுக்கூட்டம். மந்திரிமாரலெல்லாம் பேசினார்கள்.

பாயை விரித்துப் போட்டு விட்டுச் செல்லம்மா, அந்த அட்டையைக் குனிந்து எடுத்தாள். ரெண்டாய்க் கிழித்தாள். அட்டையைத் தாங்கியிருந்த கம்பையும் ரெண்டாய் முறித்து அடுப்புக்குப் பக்கத்தில் போட்டாள். அம்மாவுக்கு அடுப்பெரிக்கப் பிரயோஜனப்படும்.

போர்வையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு பாயில் படுத்த செல்லம்மாவுக்கு உறக்கம் வரவில்லை. அழுகை தான் வந்தது. நாளைக்குப் பிரிந்து போகப் போகிற அம்மாவையும் தம்பியையும் ஏக்கத்தோடு பார்த்தாள்.

அப்பா உயிரோடிருந்திருந்தால் இவள் இப்படி வீட்டு வேலைக்குப் போக நேர்ந்திருக்காது. மகளின் மேலே ரொம்பப் பிரியமாயிருந்த அப்பா. அப்பாவுக்குப் பகல் ஷிஃப்ட் இருக்கிற நாட்களில் இவளை சைக்கிளில் உட்கார்த்திக் கொண்டு பள்ளிக் கூடத்தில் இறக்கி விட்டுவிட்டுத் தான் தச்சநல்லூருக்கு சைக்கிளை மிதிப்பார்.

ராத்திரி அப்பா வீட்டுக்கு வருவதற்கு ஒம்போது ஒம்போதரை ஆகிவிடும். தச்சநல்லூர் மில்லில் அப்பாவுக்கு வேலை ரொம்ப. சில ராத்திரிகளில் ரொம்பக் களைப்பாய் வருவார். அப்படிக் களைத்து வருகிற ராத்திரிகளில் “ஒடம்பு அடிச்சிப் போட்டாப்ல இருக்கு கடக்கிப் போய் மருந்து சாப்ட்டுட்டு வந்துருதேம் புள்ள ” என்று அம்மாவிடம் சொல்லிட்டு, அம்மாவின் வித்யாசமான பார்வையைப் பொருட்படுத்தாமல் வெளியே போய்விடுவார். பிறகு ராத்திரி எத்தனை மணிக்குத் திரும்பி வருகிறாரோ தெரியாது. அதற்கு முந்தி செல்லம்மா தூங்கிவிட்டிருப்பாள்.

அப்படியும், காலையில் அவளை அப்பாதான் எழுப்பி விடுவார். ஒரேயொரு நாள் தான் அப்பா அவளை எழுப்பவில்லை. பிறகு தான் தெரிந்தது, ராத்திரி அப்பா வீடு திரும்பவே இல்லை என்று.

“மருந்து’ சாப்பிடப்போன இடத்தில் தகறாரு வந்து, கைகலப்பாகி, நாலஞ்சு பேர் அப்பாவை அடித்துப் போட்டு விட்டுப் போய் விட்டார்கள் என்று. அதன் பிறகு இவளை எழுப்பிவிடுவதற்கும் சைக்கிளில் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிக் கொண்டு போவதற்கும் அப்பா இல்லாமற் போனார்.

“இந்தப் பளக்கம் வேணாம் வேணாம்னு தலையால அடிச்சிக்கிட்டேன். அவிய கேக்கல. சரி, நாப்பூரா வேல செஞ்சு ஒஞ்சி போய் வாற மனுசன், தாகந்தீர கொஞ்சம் குடிச்சிட்டுப் போவட்டுமேன்னு நானும் பெறவு வுட்டுட்டேன். இப்படியாவும்னு தெரியாதே ஆத்தா! மவராசன் எங்க மூணு பேத்தயும் இப்படி அனாதியா வுட்டுட்டுப் போய்ச் சேந்துட்டாவளேம்மா” என்று வீட்டுக்கு வருகிற உறவுக்காரர் களிடம் சொல்லி அம்மா புலம்புகிறபோது செல்லம்மாவுக்கும் அப்பாவை நினைத்து அழுகை வரும். அப்பா செத்துப் போன பின்னால் தான் அம்மாவே வீட்டு வேலைக்குப் போக அவசியமேற்பட்டது.

பொழுது விடிந்ததிலிருந்து, விளக்கு வைக்கும் வேளை வரை நாலு வீடுகளில் மாறி மாறி உழைத்து அம்மா சீக்காளியாய்ப் போனாள். அவளால் முடியவில்லை. நாலு வீடு இப்போது ஒரேயொரு வீடாய்ப் போனது. அந்த ஒரு வீட்டில் கூட, பாவம் பார்த்துத்தான் அவளை இன்னும் வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.

மெட்ராஸ் பார்க்க வேண்டுமென்கிற ஆசை செல்லம்மாவுக்குக் கனகாலமாய் உண்டு. பெரியப்பா பாளையங்கோட்டைக்கு வருகிறபோது, “பெரியப்பா, நீங்க மெட்ராஸ்க்குப் போறப்ப நானும் வாறேன் பெரியப்பா” என்று சொல்லியிருக்கிறாள். ஆனால் பெரியப்பாவோடு மெட்ராஸ்க்கு இந்த மாதிரி போக நேரும் என்று நினைத்திருக்கவில்லை.

காலையில், கனத்த நெஞ்சோடும், கண்ணீரோடும் உடுப்புகளை எடுத்துப் பைக்குள்ளே திணித்தாள். பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பின தம்பியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். சாயங்காலம் இவள் கிளம்புகிற நேரம் அவன் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வந்திருக்க மாட்டான்.

பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வந்து அவன், அம்மா வேலை செய்கிற துலுக்க வீட்டில் வெராண்டாவில் உட்கார்ந்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருக்க வேண்டியது, அம்மா ஸ்டேஷனிலிருந்து திரும்பி வந்து அவனைக் கூட்டிக் கொள்ள வேண்டியது என்று ஏற்பாடு.

சொன்ன மாதிரியே நாலு மணிக்குப் பெரியப்பா ஆஜராகி விட்டார். தாயும் மகளும் பெரியப்பாவோடு திருநவேலி ஜங்ஷன் போவதற்கு மூணாம் நம்பர் டவுன் பஸ்ஸில் ஏறினார்கள். பெண்கள் ஸீட்டில் அம்மாவோடு உட்கார்ந்த செல்லம்மாவுக்கு, அம்மாவை யாரோ மாதிரி இருந்தது.

மகளுடைய அந்நியமாதல் அம்மாவுக்கு உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவள் பக்கவாட்டில் கையைச் செலுத்தி மகளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அம்மாவை ஏறிட்டுப் பார்த்த செல்லம்மா, தன்னுடையதைப் போலவே அம்மாவின் கண்களும் பனித்திருப்பதைப் பார்த்து, பாசத்தோடு அம்மாவோடு ஒட்டிக் கொண்டாள்.

“அம்மா” என்று மெல்லக் குரல் கொடுத்தாள்.

“என்ன செல்லம்மா?” என்று அவள் முகத்தை நிமிர்த்தினாள் அம்மா.

“அம்மா, நா மெட்ராஸ்க்குப் போகலம்மா. நா பள்ளிக் கோடத்துக்குப் போய்ப் படிக்கேம்மா.”

“நீதான் பெயிலாய்ட்டியேட்டி செல்லம்மா.”

“இனிமே பெயிலாக மாட்டேம்மா.”

“தம்பி நல்லாப் படிக்காம்லா. அவனப் பெரிய படிப்புப் படிக்க வக்யணும்ன்ட்டி . அம்மாக்கு ஒடம்புக்கு முடியல. மருந்து சாப்புடுதேன், ஒரு வருசத்ல சீக்கெல்லாம் போயிரும். நீ ஒரேயொரு வருசம் மெட்ராஸ்ல போய் இரி. அம்மாக்கு ஒடம்பு சரியானவொடன நீ திரும்பி வந்துரலாம்.”

“என்ன இங்ஙனயே பாளையங்கோட்டயில ஒரு வூட்ல சேத்து வுடேம்மா.”

“இங்ஙன என்னட்டி சம்பளம் குடுப்பாவ, மிஞ்சிப் போனா ஒனக்கு முன்னூறு ரூவா குடுப்பாவ. மெட்ராஸ்ல ரெண்டாயிரம் ரூவாயில்லட்டி! அந்த வூட்ல ஒரு ஒண்ற வயசுக் கொளந்த இருக்காம். நீ அதப்பாத்துக்கணுமாம். பெறவு, வூடு பெருக்கச் சொல்லுவாவ. பாத்தரம் களுவச் சொல்லுவாவ. நம்ம வூட்ல செய்யலியா நீ, அதத்தான மெட்ராஸ்ல போய்ச் செய்யப் போற! ஒண்ணும் வருத்தப்பட்டுக்கிராத செல்லம்மா.”

வருத்தத்தையன்றி வேறு உணர்ச்சிகள் செல்லம்மாவிடம் இல்லை. மகளை அணைத்தபடியே அம்மா அறிவுரைகள் வழங்கினாள்.

“ஒனக்குன்னு ஒரு தட்டு, தம்ளர் எல்லாம் தருவாவ, அதுலயே நீ சாப்டுக்க, தண்ணி குடிச்சிக்க. அவிய ஏனங்கள் நீ பொளங் காதட்டி. அது அவியளுக்குப் புடிக்காது. நாக்காலில்லல்லாம் ஒக்காராத. கீள தரையிலதான் ஒக்காரணும். என்ன?”

“ஆட்டும்மா, டி.வி.யெல்லாம் பாக்க வுடுவாகளாம்மா?”

“அவியப் பாக்கும் போது நீயும் கீள ஒக்காந்து பாரு. அதுக்கென்ன, நீ கண்ண மூடிக்கட்டின்னா சொல்லப் போறவ? ஆனா, டி.விப் பொட்டியயெல்லாம் நீ தொடப்படாதுட்டி. பெரியவுக போட்டாவன்னா நல்ல புள்ளயாக் கீள ஒக்காந்துப் பாக்கணும், என்ன?”

“லீவுல்லாம் கெடயாதாம்மா?” என்று செல்லம்மா பாவமாய்க் கேட்டதற்கு,

“பள்ளிக்கோடமாட்டி அது, லீவு வுடதுக்கு! கேக்கதப் பாறேன்!” என்று அம்மா சிரிக்கப் பார்த்தாள். ஆனால் உதடுகள் சிரிக்க மறுத்தன.

ஜங்ஷனில் மூணு பேரும் இறங்கிக் கொண்டு ஸ்டேஷனுக்குள் பிரவேசித்தார்கள். தாயைப் பிரியும் வேளை நெருங்கி விட்டது என்பது செல்லம்மாவின் சோகத்தை அதிகப்படுத்தியது.

அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டு, “தம்பியும் நீயும் என்னப் பார்க்க மெட்ராஸ்க்கு வருவீகளாம்மா?” என்று தாயின் முகத்தைத் தவிப்போடு பார்த்தாள்.

“மெட்ராஸ்க்குப் பேய்ட்டு வாறதுக்கு ஆளுக்கு ஐநூறு ரூவாய்க்கிட்ட ஆயிருமேட்டி” என்று சமாளித்தாள் அம்மா.

“பெரியப்பா அப்பப்ப வந்து ஒன்னியப் பாத்துக்குவாக. என்னமும் வேணும்னா நீ பெரியப்பாட்ட கேட்டு வேங்கிக்க, என்ன? ஒரேயொரு வருசந்தானட்டி செல்லம்மா, சொடக்குப் போடதுக்குள்ள வருசம் விர்ர்ன்னு ஓடிரும்.”

“பொறவு, நா பாளையங்கோட்டக்கித் திரும்பி வந்துரு வேனாம்மா?”

“ஆமா செல்லம்.”

“நா திரும்பி வந்த பெறவு என்ன இஸ்கூல்ல போடுவியாம்மா?” “கட்டாயம் போடுவேன். நீ மெட்ராஸ்ல போயி, நல்ல்ல்ல புள்ளன்னு பேர் வேங்கிட்டு வரணும்ட்டி செல்லம்.”

“ஆட்டும்மா” என்று தாயிடம் விடை பெற்றுக் கொண்டாள் செல்லம்மா. பிறகு, சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாய் அம்மாவைப் பார்க்கத் திரும்பினாள்.

“அம்மா, யூனிஃபாம் ரெண்டும் கிளிஞ்சி போச்சும்மா, புதுசா தக்யணும்.”

“நீதான் சம்மாரிக்கப் போறியே செல்லம்மா, புதுசு புதுசா தச்சிருவோம்” என்று அவளுடைய தலையை வருடி அம்மா வழியனுப்பி வைத்தாள்.

ரயிலின் வால்ப் பகுதியிலிருந்த பெண்கள் பெட்டியில் அவளை ஏற்றி விட்டுப் பெரியப்பா, ரெண்டு பெட்டிகளுக்கு முந்தியிருந்த அன்ரிஸர்வ்டு கோச்சில் ஏறிக் கொண்டார்.

ரயில் கிளம்புவதற்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டதும், ப்ளாட்ஃபாமிலிருந்த அம்மா, பெண்கள் பெட்டியின் ஜன்னலை நெருங்கி, உள்ளேயிருந்த மகளைப் பார்த்து “வழியில எங்ஙனயும் எறங்கப்படாதுட்டி” என்று எச்சரித்தாள்.

“விடியக்காலம் மெட்ராஸ்ல வண்டி நின்னப் பெறவு பெரியப்பா வந்து கூப்புடுவாவ, அப்பத்தேன் எறங்கணும் என்ன?”

சரியென்று தலையசைத்தாள் செல்லம்மா. ரயில் நகரத் தொடங்கியதும் வேகமாய் ஜன்னலை நெருங்கி வந்தாள் செல்லம்மா.

ஜன்னல் கம்பியைப் பற்றிக் கொண்டு, கொஞ்சங் கொஞ்சமாய் விலகிப் போய்க் கொண்டிருந்த அம்மாவின் உருவத்தைக் கண்ணீரின் ஊடே பார்த்துக் கூவினாள்.

“அம்மா அம்மா, இனிமே நா பெயிலாகவே மாட்டேம்மா.”

(ஸண்டே இண்டியன், 28 ஜனவரி – 3 ஃபிப்ரவரி ) (இலையுதிர் காலம்)

Print Friendly, PDF & Email

1 thought on “ஃபெயில் காலம்

  1. ஃபெயில் காலம் -செல்லம்மா வீட்டுக்குத் திரும்பிடவேண்டுமென ஆசைப்பட்டேன். அம்மா மகளின் உரையாடல் என் நெஞ்சை உல்ளிருந்து வெளியே அழுத்தியது. அழ வைத்தது. வசனங்களில் துளியும் செயற்கை இல்லை. திரு தி.ஜானகிராமன் அவர்களின் சிலிர்ப்பு படிக்கையில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. கண்கள் கலங்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *