இங்கு மூன்று சித்தாந்தங்களை ஸ்தாபிக்க உத்தேசித்திருக்கிறேன். அவை யாவன:- (1) ஆசை ஒரு காலும் விண் போகாது; (2) சோதிடம் கட்டாயம் பலிக்கும். (3) கலியுகத்தில் – மற்ற யுகங்களைப் பற்றி எனக்குத் தெரியாது – நல்லவன் நன்மை அடைவதும் கெட்டவன் தீமையடைவதும் நிச்சயமில்லை. இந்த மூன்று சித்தாந்தங்களுக்கும் நிச்சயமில்லை .
இந்த மூன்று சித்தாந்தங்களுக்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமென்ன வென்று கேட்டீர்களானால் – நல்லது நான் ஒரு கேள்வி கேட்கிறேன்; முத்தலை நகரின் மத்திய சிறைச்சாலையில் 9-வது பிளாக்கில் 12-வது அறையில் இருந்த நம்பர் 888-ஐப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டதுண்டா?
இல்லையென்றால் நான் சொல்லுகிறேன். கேளுங்கள். “உமக்கெப்படித் தெரியும்?” என்று கேட்பீர்களோ? சரி அந்த விவரத்தை முதலில் கூறுகிறேன் மேற்படி சிறைச்சாலையில் அதே பிளாக்கில் 11-வது அறையில் நான் சில காலம் வாசம் செய்ய நேரிட்டது.
ஐயையோ! இப்போது இதற்குக் காரணம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கதையை இங்கேயே விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள். என்னைச் சிறைக்கனுப்பியது யாதெனில், ஒரு கேள்விக்கு உண்மையாகப் பதில் சொன்னதுதான். நம்ப மாட்டீர்களா? ஐயன்மீர்! இது கலியுகம் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவுறுத்துகிறேன்.
கேள்வி கேட்டவர், ஒரு வெள்ளைக்கார துரை. அவர் உன்னத ஆசனத்தில் அமர்ந்திருந்தார், நானோ, கைதியின் கூண்டில் நின்று கொண்டிருந்தேன். என்னைவிட வயதில் அவர் இரண்டொரு வருஷமே பெரியவராயிருப்பார். இந்நிலையில் எனக்கு ரோசமாயிராதா? ஆம் பாரத நாட்டின் கௌரவத்தைக் காக்கும் பொறுப்பு முழுவதும் அப்போது என் தலைமீது சுமந்திருந்ததாக எனக்கெண்ணம்.
“ஷெடிஷன் (அரசாங்கத்துவேஷம்) என்பதற்கு உமக்குப் பொருள் தெரியுமா?” என்று துரை கேட்டார். “ஓ நன்றாகத் தெரியும், துரையே! சென்ற ஒரு வருஷகாலமாக அந்த வேலையில்தான் ஈடுபட்டிருந்தேன்” என்றேன். நுணலும் தன் வாயால் கெடும் அதுதான்! “தெரியாது” என்று சொல்லியிருந்தால், ஒருக்கால், துரை ‘பாவம் ஒன்றுந்தெரியாத சிறுவன்’ என்றெண்ணி என்னை விட்டிருக்கலாம்.
உண்மை கூறியதின் பயன், “ஒரு வருஷம் கடுங்காவல்”, என் மீது குற்றமில்லை ஐயா! எல்லாம் காலத்தின் கூற்று. 1922-ம் வருஷ ஆரம்பம், பர்தோலி முடிவுக்கு முன்னால், மேலும், என் ஜாதகத்தில் காராகிரகப் பிரவேசம் என்று நன்றாய்ப் போட்டிருப்பதாக வெளியே வந்த பிறகு ஜோதிடர்கள் சொன்னார்கள்.
நல்லது; முத்தலைநகரின் மத்திய சிறைச் சாலையில் 9-வது பிளாக்கில் 11-வது அறைக்கு நான் வந்தது எப்படி என்பது இப்போது விளங்கி விட்டதல்லவா? இனி முதலில் விட்ட இடத்தில் தொடங்கி, அடுத்த 12-வது அறையிலிருந்த நம்பர் 888-ஐப் பற்றிக் கூறுகிறேன், 888-க்குப் பூர்வாசிரமத்தில் கேசவலு நாயுடு என்று பெயர்.
அவரைப் பற்றி அச்சிறைச்சாலை வார்டர்களும் மற்றக் கைதிகளும் என்னவெல்லாமோ சொன்னார்கள். அவர் பெரிய வேஷதாரியென்றும், ஏராளமான பணத்தை எங்கேயோ புதைத்து வைத்து விட்டு இங்கே ஏழை போல் நடிக்கிறாரென்றும் கூறினார்கள்.
விடுதலையாகப் போகும் கைதிகளில் பலர் அவரிடம் வந்து பணம் புதைத்து வைத்திருக்கும் இடத்தை தெரிவிக்கும்படி கெஞ்சிக் கூத்தாடுவதுண்டு. அவர் “இல்லை” என்றால் யாரும் நம்புவது கிடையாது. இவையெல்லாம் என்னுடைய ஆவலை நிரம்பக் கிளப்பிவிட்டன,
எனவே, ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, தாழ்வாரத்தில் நாங்கள் இருவரும் உட்கார்ந்திருந்தபோது, அவருடைய வரலாற்றை விசாரித்தேன். என் வரையில், அவர் ஒன்றும் தெரியாத அப்பாவி என்று எண்ணியிருந்தேன். பொய் சொல்லக் கூடியவரல்லர் என்பது அவர் முகத்தைப் பார்த்தாலே தெரியும். அவர் தமது வரலாற்றைக் கூறிய பான்மையும் அப்படியேயிருந்தது
எனவே அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் நம்பினேன். ஆனால், அவர் கூறிய வண்ணமே இங்கே கதை சொல்லுந்திறமை எனக்கில்லை; நான் ஏகசந்தக்கிராகியல்லன். மேலும் சில விஷயங்களை எழுதுதலும் நன்றாயிராது. முக்கியமாக, சிங்கப்பூர் நாயுடுவுக்கு அவர் கொடுத்த சாபங்கள் பத்திரிகையில் எழுதுவதற்குத் தகுதியானவையல்ல. எனவே என்னுடைய சொந்த நடையில் கேசவலு நாயுடு வரலாற்றைச் சுருக்கித் தருகிறேன்.
மேல்குடி கிராமத்தில் நாயுடுமார் விதிதான் முக்கியமானது. ஊரில் பெரிய பணக்காரர்களும் மிராசுதாரர்களும் நாயுடுமார்களே. சிலர் பரம்பரைச் செல்வர்கள். சிலர் முயற்சியினால் பணக்காரரானவர்கள். ஒருவர் மளிகைக் கடை வைத்துப் பைசாவுக்குப் பைசா லாபம் சேர்த்து விற்றுப் பணக்காரர் ஆனார்.
மற்றொருவர், லேவாதேவி செய்து 1.50 வட்டிக்குக் குறையாமல் வாங்கிப் பெரிய முதலாளி ஆனார். இன்னொருவர், மலாய் நாட்டுக்குச் சென்று பெரும் பொருள் ஈட்டி வந்தார். இப்படிக் கண்ணெதிரில் எல்லாரும் பணக்காரர் ஆவதைப் பார்த்துக் கொண்டேயிருந்த கேசவலு நாயுடு மட்டும், அன்றிருந்த நிலைக்கு அழிவின்றி இருந்தார்.
பாவம்! அவர் மீது தவறில்லை . பணம் சேர்ப்பதற்கு அவர் கைக்கொண்ட முறை அத்தகையது அதுதான் விவசாயம், விவசாயத்தொழில் நடத்திப் பணக்காரன் ஆனவன் எங்கேயாவது உண்டா? கொஞ்ச காலம் குத்தகை எடுத்துச் சாகுபடி செய்து பார்த்தார். சொந்த நிலத்தின் வருமானமும் அதில் அடித்துக் கொண்டு போவதாயிருந்தது. பின்னர் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு தாமுண்டு தமது நிலமுண்டு என்று இருந்து வந்தார்.
அவருக்குப் பணக்காரராக ஆசையில்லாமலில்லை. அடுத்த வீட்டுக்காரர் எல்லாரும் பணக்காரர் ஆகி வருகையில், தாம் மட்டும் ஆசைப்படாமலிருக்க அவர் என்ன, சந்நியாசியா?
நேற்றுக் கஞ்சிக்கு இல்லாதிருந்தவர்கள் இன்று மூன்று கட்டு விடு கட்டிவிட்டார்கள் என்னும் விஷயத்தை அவர் மனைவி, அடிக்கடி நினைவூட்டி வந்தாள். “பேசாமலிரு. அதிர்ஷ்டம் வரும்போது, தானே வரும்” என்று சமாதானம் சொல்லி வருவார். இப்படிச் சொல்லிச் சொல்லி ஏதேனும் ஒரு வழியில் தமக்கு அதிர்ஷ்டம் வந்தே தீரவேண்டுமென்று அவருக்கு நிச்சயமாகிவிட்டது. அதிர்ஷ்டம் வரக்கூடிய வழிகள் பற்றி அவர் ஓயாது சிந்திப்பார்,
கடைசியாக அவருடைய யோசனை “புதையல்” என்பதில் வந்து முற்றுப்புள்ளிப் போட்டு நின்றது. அதற்குமேல் ஓடக் கண்டிப்பாக மறுத்துவிட்டது. அதிர்ஷ்டம் தம்மிடம் வந்துசேர வேறு வழி எதுவும் இருப்பதாகப் புலப்படவில்லை .
நதிப்படுகையிலும், நாணற்காட்டிலும், விதியில் வழி நடக்கையிலும், வயல் வரப்பிலும், கொல்லை அவரைக் குழியிலும், வீட்டுக் கூடத்தில் உத்திரத்துக்கு நேர் கீழேயும், தோண்டியிலும், குடத்திலும், தவலையிலும், பெட்டியிலும் அவர் புதையல் கண்டெடுத்துக் கலகலவென்று சிரித்துத் தூக்கத்திலிருந்து விழித்த இரவுகள் அனேகம்…
இங்ஙனமிருக்கையில், சிங்கப்பூர் நாயுடு என்ற ஒருவர் மேல்குடிக்கு வந்து சேர்ந்தார். நாயுடுமார் தெருவின் ஒரு கோடியிலிருந்த பெரிய தனி வீடு ஒன்றை வாடகைக்கு வாங்கிக் கொண்டு அவர் வாசம் செய்யத் தொடங்கினார்.
அவருடன் வீட்டில் சமையற்காரனைத் தவிர வேறு யாருமில்லை , மனிதர்களுடன் கலகலப்பாகப் பேசிப் பழகும் சுபாவமுடையவரல்லர். எனவே அவர் ஏன் அங்கு வந்து தனியாக இருக்கிறார் என்பது குறித்துப் பலர் பல காரணங்கள் சொன்னார்களாயினும், ஒருவருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை.
சிங்கப்பூர் நாயுடு சோதிட சாஸ்திரத்தில் மிக வல்லவர் என்று கேள்விப்பட்ட பின்னர், கேசவலு நாயுடுவின் மனம் எப்படியேனும் அவருடன் நட்புக் கொள்ள வேண்டுமென்று தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் கடைத் தெருவில் சிங்கப்பூர் நாயுடு, “இந்த ஊரில் கறிகாய்கள் ஒன்றும் அகப்படுவதில்லையே” என்று சொல்லிக் கொண்டிருந்தார். கேசவலு நாயுடு விட்டுக் கொல்லைக் கறிகாய்கள் அந்த ஊரில் பிரசித்தி பெற்றவை. எனவே அருகிலிருந்த அவர், மறுநாள் காலையில் கறிகாய்கள் கொண்டு வருவதாக வாக்களித்தார்.
இதன் மூலம் அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அறிமுகம் நட்பாக முதிர்ந்தது. ஒரு நாள் சோதிடத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் கேசவலு நாயுடு, “ஒருவனுக்குப் புதையல் கிடைக்குமா கிடைக்காதா என்று சோதிடத்தில் பார்க்க முடியுமா” என்று கேட்டார். “கண்டிப்பாக முடியும்” என்று பதிலளித்தார் சிங்கப்பூர் நாயுடு
இதற்குச் சில தினங்களுக்குப்பிறகு ஒருநாள் சிங்கப்பூர் நாயுடு கேசவலு நாயுடு விட்டுக்கு வந்திருந்தபோது பின்னவர் தமது ஜாதகத்தைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். சிங்கப்பூர் நாயுடு வெகு நேரம் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுக் கூறலுற்றார்:- “இந்த ஜாதகனுக்கு வாய்த்த மனையாள் நல்ல உத்தமி, பெண் குழந்தைகள் நாலு; ஆண் பிள்ளைகள் இரண்டு. தொழில் விவசாயம். அவ்வளவு லாபகரமில்லை . ஆனால், சுக ஜீவனம். குழந்தைகளில் ஒன்று இறந்து போயிருக்க வேண்டும். இவையெல்லாம் உண்மைதானா?”
“உண்மை, உண்மை. அவ்வளவும் உண்மை .”
“நல்லது அப்படியானால் தைரியமாகச் சொல்லுகிறேன். இந்த ஜாதகத்தில் ஒரு விசேஷம் இருக்கிறது.”
கேசவலு நாயுடுவின் ஹிருதயம் ‘பட்பட்’ என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. “அது என்னவோ?” என்றார்.
“இல்லை, அதைச் சொல்லாமலிருப்பதே நல்லது. சொன்னால் நீர் நம்பப் போவதில்லை. சொல்லிப் பயனென்ன?”
“அப்படிச் சொல்லக்கூடாது. தயவு செய்து தெரிவிக்க வேண்டும்! சோதிடத்தில் எப்போதுமே எனக்கு நம்பிக்கையுண்டு. அதுவும் இப்போது முழு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.”
“நல்லது; நீர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சொல்லிவிடுகிறேன். இந்த ஜாதகனுக்குப் புதையல் ஒன்று அகப்பட்டே தீரவேண்டும். வேண்டாமென்று சொன்னாலும் விடாது.”
கேசவலு நாயுடுவின் நெஞ்சம் ஒரு நிமிஷ நேரம் ஸ்தம்பித்து நின்றுவிட்டது. “இன்னும் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள், ஐயா! எங்கே எப்போது அகப்படும்? அவ்வளவு தூரம் சொல்ல முடியுமா?” என்று அவர் கேட்டார். இந்தச் சோதிடம் மட்டும் பலித்தால் கொல்லையில் இளங்கத்திரிப் பிஞ்சாக ஒரு கூடை பறித்துச் சிங்கப்பூர் நாயுடுவுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு சிறு நினைவு, அலை வீசிக் கொந்தளித்துக் கொண்டிருந்த அவர் உள்ளத்தில் இடையே தோன்றிற்று.
“கொஞ்சம் சொல்லலாம். புதையல் கிடைக்க வேண்டிய காலம் 42-வது வயது அதாவது இந்த வருஷந்தான். அனேகமாகச் சொந்த வீட்டிலேயே கிடைக்கலாம். ஜலசம்பந்தமாகக் காணப்படுகிறது. அதன் பொருள் எனக்கு நன்றாக விளங்கவில்லை .”
(மேற்சொன்ன சம்பாஷணையெல்லாம் தெலுங்கு மொழியில் நடந்தவை. எனக்கு கேசவலு நாயுடு கூறிய போது பாதி தெலுங்கும் பாதி தமிழுமாகக் கலந்து சொன்னார். நேயர்களின் நன்மைக்காக நான் முற்றும் தமிழ்ப்படுத்தி எழுதியிருக்கிறேன்.)
அன்றிரவு கேசவலு நாயுடு வழக்கம்போல் எட்டரை மணிக்குப் படுத்துக் கொண்டார். படுத்தவுடன் தூங்கிப் போகும் வழக்கமுடைய அவருக்கு இன்று தூக்கமே வரவில்லை . சிங்கப்பூர் நாயுடு சோதிடம், ஜாதகம், புதையல், 42-ஆம் வயது, விட்டுக்கொல்லை, மண்வெட்டு, குழிதோண்டுதல் ஆகிய இவை அவர் உள்ளத்தில் மாறி மாறி இடம் பெற்று வந்தன.
கடைசியில், சுமார் பதினொரு மணிக்கு அவர் உறுதியோடு எழுந்தார். அவர் மனைவி குழந்தைகள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மண் வெட்டியைத் தேடி எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் சென்றார். கொல்லையில் கிளி கொஞ்சிற்று. பெரும் பகுதியில், கத்திரி, கொத்தவரை, வெண்டை , அவரை, புடல் முதலியவை செழித்து வளர்ந்திருந்தன,
பயிர் எதுவும் செய்யப்படாமல் ஒரு மூலை மட்டும் கிடந்தது. கேசவலு நாயுடு அந்த இடத்துக்குச் சென்று, மண் வெட்டிப் பிரயோகம் செய்யலானார். “முயற்சியின் பயனாகக் கிடைப்பதானால் பிரயாசைப்படவேண்டும்.
புதையல் அதிர்ஷ்டவசத்தினால் கிடைப்பதல்லவா? எனவே, தொட்ட இடத்தில் கட்டாயம் அகப்பட்டே தீர வேண்டும்” என்று எண்ணிக் கொண்டே, தரிசாகக் கிடந்த பகுதி முழுவதையும் ஒரு முறை கொத்தினார். பின்னர் சோதிடர் “ஜல சம்பந்தம்” இருப்பதாகக் கூறியது நினைவுக்கு வந்தது.
எனவே, அம்மூலையை இரண்டு பகுதியாகப் பிரித்துக் கொண்டு ஒரு பகுதியை ஆழமாகத் தோண்ட ஆரம்பித்தார். இடுப்பு ஆழம் தோண்டிவிட்டார். புதையலுக்கு அறிகுறி எதையும் காணோம். இதற்குள் பொழுது விடியும் தருணம் ஆகிவிட்டது அப்படியே குழியை விட்டுப் போனால், காலையில் அடுத்த வீட்டுக்காரன் ஏதேனும் நினைத்துக் கொள்வானென்ற பயம் உண்டாயிற்று. வெட்டிய மண்ணைத் திருப்பிக் குழியில் தள்ளி மூடினார். சுமார் ஐந்து மணிக்கு உள்ளே போய்ப்படுத்துக் கொண்டார்,
என்றுமில்லாத வண்ணம் காலை எட்டு மணிவரை கேசவலு நாயுடு தூங்குவதைக் கண்டு அவர் மனையாள் பேராச்சரியத்துடன் அவரைத் தட்டி எழுப்பினாள். அவர் எழுந்து கொல்லைப்புறம் போனாரோ, இல்லையோ அடுத்த விட்டுக் கொல்லையில், தயாராய்க் காத்துக் கொண்டிருந்த பெருமாள் நாயுடு, “என்ன நாயுடுகாரு? அந்த மூலையை எப்போது கொத்தினீர்? நேற்று சாயங்காலம் வரை கொத்தியிருக்கக் காணோமே?” என்று கேட்டார்.
கேசவலு நாயுடுவுக்கு அவர் மீது அநியாயக் கோபம் வந்தது. முகத்தை வேறு புறமாய்த் திருப்பிக் கொண்டு “இரவில் தூக்கம் வரவில்லை . நல்ல நிலவாயிருந்தபடியால் சிறிது நேரம் வேலை செய்தேன்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் உள்ளே வந்தார்.
அமாவாசை அடுத்த நாள் என்பது அப்போது நினைவு வந்தது! ‘என்ன அநியாயம் அவனவன் தன் காரியத்தை பார்த்துக் கொண்டு போனாலென்ன?’ என்று அவர் முணுமுணுத்துக் கொண்டார்.
அன்றிரவு எட்டரை மணிக்கு வழக்கம்போல் கேசவலு நாயுடு பாயில் படுத்தார். முதல் நாள் இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்திருந்தபடியால், நிரம்பக் களைப்பாயிருந்தது. நாளைக்குத்தான் பார்த்துக் கொள்ளலாமே என்று எண்ணினார். அப்போது இன்னொரு நினைவு குறுக்கே வந்தது.
‘சிங்கப்பூர் நாயுடு நல்லவர்தான், இருந்தாலும், இந்தக் காலத்தில் யாரை நம்புவது? அவருக்கு நன்றாய்த் தெரியும்… நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது…. ஆனால், ஜாதகத்தின்படி புதையல் நமக்குத்தானே. இப்படி எண்ணமிட்டுக் கொண்டே அவர் கண்ணை மூடி நிம்மதியிலாழ்ந்தார்.
சிங்கப்பூர் நாயுடு தோளில் மண் வெட்டியுடன் கொல்லையில் நிற்பதாகக் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தார். உடனே சென்று, கொல்லைக் கதவைத் திறந்தார். என்ன அதிசயம்! கிணற்றங்கரையின் அருகிலிருந்து யாரோ ஒரு மனிதன் ஓடினான். கேசவலுநாயுடு பிரமித்து நின்ற ஒரு கணத்துக்குள் அவன் மறைந்து விட்டான்
அமாவாசை இருளாதலின் ஆசாமி நன்றாகப் புலனாகவில்லை ? தெரிந்த அளவுக்கு, சிங்கப்பூர் நாயுடுவாகவே தொன்றிற்று. மனத்திற்குள் அவரைச் சபித்துக்கொண்டு உள்ளே வந்து மண் வெட்டியை எடுத்துக் கொண்டு போனார். கேசவலு நாயுடு தரிசாகக் கிடந்த மூலையில், தோண்டாமல் விட்ட பகுதியை இப்போது தோண்டத் தொடங்கினார்.
அர்த்த ராத்திரியாயிற்று. எங்கோ தூரத்தில் நரி ஊளையிட்டது முறை வைப்பதுபோல் வாயிலில் நாய் குரைத்தது. அடுத்தாற்போல், பக்கத்து விட்டுப் பெருமாள் நாயுடுவின் இருமல் சத்தம் கேட்டது. அடுத்டு ‘கடகடா கடகடா’ என்று சத்தம் கேட்டது. சரி, அந்தப் பாவி கொல்லைக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து கொண்டிருக்கிறான்.
அடுத்த நிமிஷத்தில் கதவைத் திறந்து கொண்டு வருவான். குழி தோண்டுவதைப் பார்த்தானோ, புதையல் அகப்பட்டாலும் உபயோகமில்லை. கேசவலு நாயுடுவுக்கு அந்தக் கணத்தில் அடிவயிற்றில் புளியைக் கரைத்தாற் போலிருந்தது. சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று.
ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கிணற்றண்டை சென்று அதனுள்ளே இறங்கத் தொடங்கினார், பாதிக்கிணறு இறங்கினதும், “யாரங்கே” என்று சத்தம் கேட்டது. பீதி அதிகமாயிற்று. இன்னும் விரைவாக இறங்கித் தண்ணீரில் மெதுவாக அமிழ்ந்தார். கிணற்றில் மார்பளவு தண்ணீர் இருந்தது.
சுமார் பதினைந்து நிமிஷத்துக்குப் பின்னர், பெருமாள் நாயுடு திரும்பக் கதவைத் தாழ்ப்பாள் போடும் சத்தம் கேட்டது. கிணற்றின் மத்தியில் நின்ற கேசவலு நாயுடு கரை ஏறுவதற்காகச் சுவர் ஓரமாய் அடிஎடுத்து வைத்தார், காலில் ஏதோ தட்டுப்பட்டது. பித்தளைத் தவளையின் விளிம்புபோல் காணப்பட்டது. அந்தக் கணத்தில் அவருடைய மூளை கறகறவென்று சுழன்றது. ஆ! ஜல சம்பந்தம்! இப்போதல்லவா விளங்குகிறது!
நாயுடுகாரு அதிக வேகமாக மேலேறினார். பரபரப்பினால் கால்கள் நடுங்கின. தட்டுத்தடுமாறி ஏறினார். ஜலம் இழுக்கும் தாம்புக் கயிற்றின் ஒரு முனையை ஒரு கட்டையில் கட்டி விட்டு இன்னொரு முனையுடன் மறுபடியும் கிணற்றிலிறங்கித் தவலை விளிம்பில் கட்டினார்.
சில நிமிஷங்களுக்கெல்லாம் தவலை வெளியே வந்தது. அவ்வளவு கனமாக இல்லை. ஆயினும் நாயுடுகாரும் பரபரப்புடன் அதை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று கொல்லைக் கதவைப் போய்ப் சாத்திவிட்டு வந்தார். மனைவி மக்கள் நன்கு தூங்குகிறார்களா என்று பார்த்து விட்டு தவலையின் வாய் மூடியைப் பெயர்த்தெறிந்தார். உள்ளே கையை விட்டார். காகிதங்கள்! வயிறு, பகீர் என்றது. ஒரு பிடி வெளியே எடுத்தார். ஓ! ஒரு நிமிஷம் அவருக்கு மூச்சு நின்று போயிற்று அவ்வளவும் நோட்டுகள்! ரூபாய் ஐந்து பத்து ரூபாய் நோட்டுகள்!
மொத்தம் எண்ணாயிரத்து எழுநூற்று அறுபத்தைந்து ரூபாய்க்கு நோட்டுகள் இருந்தன. தவலையில் திரும்பப் போட்டுப் பெரிய மரப் பெட்டியில் வைத்துப் பூட்டினார். பின்னர் படுத்துக் கொண்டார். தூங்கவில்லையென்று சொல்ல வேண்டுமா?
அவருடைய எண்ணங்கள் பின்வருமாறு ஓடிக் கொண்டிருந்தன:- “கொடுக்கிற தெய்வம் கூரையைப் பொத்துக் கொண்டு கொடுக்கும். வேளை வரும்போது அதிர்ஷ்டம் தானே வரும்:- அடுத்த வீட்டுக்காரன் வந்தல்லவா கிணற்றில் இறங்கும்படி செய்தான்? – காலம் வரவேண்டுமென்று இத்தனை நாளாகக் கிணற்றில் காத்துக் கொண்டிருந்தது. நாலு நாளைக்கு முன் கும்பி எடுத்தபடியால், விளிம்பு மண்ணுக்கு மேலே வந்திருக்க வேண்டும்,
நல்ல வேளை, ஆட்களுக்கு தெரியாமற் போயிற்று. சிங்கப்பூர் நாயுடு கிணற்றங்கரையில் நின்றதன் காரணம் விளங்குகின்றது. நாளையே நேரில் கொண்டு போய்ப் பணங் கொடுத்துவிட்டு வரவேண்டும்?”
கேசவலு நாயுடுவின் மூத்த புதல்வன் வேணு சமீபத்தில் இருந்த பட்டணத்தில் ஐந்தாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தான். நாயுடுகாருக்குப் புதையல் அகப்பட்ட நான்காம் நாள் வேணு நாலைந்து போலீஸ் ஜவான்கள் புடைசூழ, மேல்குடிக்கு வந்ததைக் கண்டு அவ்வூர் ஜனங்கள் அதிக ஆச்சரியப்பட்டார்கள்.
கேசவலு நாயுடு கள்ளநோட்டு தயாரித்து வெளியிட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். வீட்டைப் பரிசோதித்ததில் எண்ணாயிரத்து எழுநூறு ரூபாய்க்குக் கள்ள நோட்டுகள் கிடைத்தன. கிணற்றில் கள்ள நோட்டுத் தயாரிக்கும் சில இயந்திரங்கள் அகப்பட்டன. சிங்கப்பூர் நாயுடுவும் அவருடைய பரிசாரகனும் இதற்கு முதல் நாளே ஊரைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் பிறகு அகப்படவேயில்லை.
கேசவலு நாயுடுவுக்கு கண்கள் திறந்தன. ‘பொன் வெள்ளிப் புதையல் அகப்பட்டதாகக் கேள்விப்பட்டதுண்டு. எங்கேயாவது நோட்டுப் புதையல் கிடைக்குமா? ஆசையினால் குருடாகிப்போனோம்’ என இப்போது உணர்ந்தார். தப்புவதற்கு வழியில்லையென்று அவருக்குத் திட்டமாகத் தெரிந்தது.
‘இனி மதி மோசம் போகக்கூடாது நாம் சிறைக்குப் போவதென்னவோ நிச்சயம், மனைவி மக்களாவது உள்ளதை வைத்துக்கொண்டு இருக்கட்டும்’ எனத் தீர்மானித்தார். எனவே வக்கீல் வைத்து வாதாடவில்லை. தமக்குத் தெரிந்த அளவு உண்மையைக் கூறிவிட்டு, ‘சாட்சியில்லை, வக்கீல் இல்லை’ என்று சொல்லிவிட்டார்.
மேல்குடி ஸ்ரீமான் கேசவலு நாயுடு, முத்தலை நகரின் மத்திய சிறைக்கூடத்தில் 9-வது பிளாக்கில் 12-வது அறையில் நம்பர் 888 ஆகா எழுந்தருளிய வரலாறு இதுதான். ஆனால், நான் தலைப்பில் கூறிய மூன்று சிந்தாந்தங்களும் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கருதுகிறீர்களா?