சுந்தரி காண்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 8, 2024
பார்வையிட்டோர்: 281 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள்)

காரிய சித்திக்காக சுந்தர காண்டம் படிக்கும் மக்கள் மத்தியில் ஒரு சாரார் சற்று திசை மாற, வளைந்த கொம்போடு வாழ்க்கையைப் படிக்கப் போகிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்றுத்தருவதற்கென்றே கூரை வேயாத பள்ளிக்கூடங்கள் பல உள்ளன. விடலைப் பருவங்களில், விடலையென்றால், ஏதோ தாம்பத்திய வாழ்வில் தவற நேரிடும் என்ற குழப்பமான செக்ஸ் பாதிப்பால் அரைகுறையாய் டிகிரி வாங்கும் பல்கலைப் பட்டதாரிகள் பலரை என் வாழ்வில் நான் சந்தித்ததுண்டு. அப்போதெல்லாம் அம்மாதிரி ஆட்கள் ஒரு மாதிரி கனவு நிலையிலேயே இருப்பார்கள்! இவர்கள் நிதர்சனத்தை சந்திக்கும்போது என்ன அதிர்ச்சிக்கு ஆளாவார்கள் என்று நான் எண்ணியதுண்டு. ஆரம்ப நாட்களில் மாம்பலம் கண்ணம்மாப் பேட்டை ஒண்டுக் குடித்தன வீடுகளில் நிறைய சுவாரஸ்யம். அங்கு நான் கண்ட பல சுந்தரிகளின் வாழ்க்கை சித்திரத் தொகுப்பே இது. இவர்களில் யாரும் கெட்டவர்கள் இல்லை. ஆனால் அடுத்தவர்களின் வாய்ச்சொல்லில் இவர்கள் ‘ஒரு மாதிரி ‘என ஆக்கப்பட்டவர்கள். அவர்களின் உண்மை கதை அவர்களைப் பற்றிய வதந்திகளை விட வெகு சுவாரஸ்யம்!

இது செக்ஸ் கதையல்ல. நிச வாழ்வு செக்ஸ் கதைகளை விட சூடும் சுவையும் நிறைந்தது என்பதை உணர்த்தும் வாழ்க்கைச் சித்திரம்.

1. சிவகாம சுந்தரி

கீழே எட்டும் மேலே எட்டுமாக குடித்தனங்கள் நிறைந்த குடியிருப்பு அது. ரெட்டியார் வீடு என்று பரவலாக அதைச் சொல்வார்கள். முன் வீடு பால்கார். பின் வீடு செட்டியார். காலை வேளைகளில் முன்பக்கம் சந்தடி ஏதும் இருக்காது. ஆனால் பின்பக்கம் ஏகத்துக்கு சப்தம் சதிராடும். நான்கு வீடுகளுக்கு ஒரு அடிபம்பு என்று போட்டிருந்தார் ரெட்டியார். அங்கு எல்லாமே சிங்கிள் பெட்ரூம் போர்ஷன்கள். அதனாலெல்லாம் சனத்தொகை ஒன்றும் குறைந்து விடவில்லை. ஸ்பேனர் செட் மாதிரி வயசுக்கும் சைசுக்குமாக ஏகப்பட்ட நட்டுகள் போல்டுகள் அங்கு உண்டு. பின் பக்கம் கிணற்றை ஒட்டி இருக்கும் போர்ஷனில் மேல் தளம் காலி. மொட்டை மாடி என்று இருக்கும் ஒரே பகுதி அந்தக் குடியிரூப்புக்கு அதுதான். தேர்வு சமயங்களில் மூலைக்கொன்றாக பல குழுக்கள் அங்கே படித்துக் கொண்டிருக்கும். தாவணிகளும், மேடிட்ட மேல் சட்டைகளும் தனித் தனிக்குழுக்களாக.. பையன்கள் பெரும்பாலும் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் வாசல் கேட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் குட்டிச் சுவர் மீது அமர்ந்து படிக்க வேண்டியதுதான்.

ரெட்டியார் கொஞ்சம் வயசாளி. ரெண்டாம் தாரமாக ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று வருடமாகியும் அவருக்கு குழந்தை இல்லை. கட்டிட காண்டிராக்டு எடுத்து வேலை செய்பவர். நல்ல கைராசிக்காரர். அதனால் வருமானம் அதிகம். ரெட்டியார் பொண்டாட்டி மதர்த்துக் காணப்படுவாள். அகன்ற தோள்களும் பெரிய விழிகளும் சிவப்புத்தோலுமாக ஆறடி உயரம் இருப்பாள். நெஞ்சை நிமிர்த்தி அவள் நடந்து வரும்போது வந்த காமமும் காணாமல் போகும். கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருப்பது அவளது திராவிடக் குரலில் அரண்டு ஓடும். ரெட்டி மனைவியின் பெயரினை இதுவரை யாரும் அறிந்ததில்லை. ரெட்டியார் சம்சாரம் என்றே அவள் அழைக்கப்படுவாள். ஒரு குழந்தை இருந்தாலாவது மீனா அம்மா, ராதா அம்மா என்று கூப்பிடலாம். அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.

ரெட்டியார் மிகவும் நாணயஸ்தர். அதிகம் ஆசைப்படுபவர் அல்லர். வாடகை அதிகம் கேட்க மாட்டார். உயர்த்துவதும் எப்போதாவது தான். ரெட்டியார் சம்சாரம்தான் குடக்கூலி வசூலிப்பது எல்லாம். அந்தக் காலத்தில் செக்கெல்லாம் கிடையாது. கேஷ்தான். அதை எண்ணி ஐந்தாம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். ரெட்டியார் சம்சாரம் அதைக் கையால் எல்லாம் வாங்க மாட்டாள். பூசை அறையில் பெரிய

பித்தளைத் தட்டு இருக்கும். அதில் வைத்து விடவேண்டும். பெரிய குங்குமப் பொட்டுடன் பின்னால் கையைக் கட்டியபடி அவள் பார்த்துக் கொண்டிருப்பாள்.

சின்னச் சின்ன சச்சரவுகள் அவ்வப்போது தலை தூக்கும். அப்போது முன்கட்டு அலறும். கட்சி சேர்ந்து பதினாறு குடித்தனமும் போர் புரியும். பால்கனி டிக்கெட் வாங்கியவர்கள் போல மேல்

போர்ஷன்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அவ்வப்போது வார்த்தைகளை வீசி எறிவார்கள். அது எசகு பிசகான இடத்தில் பட்டு பற்றி எரியும்.

இத்தனை களேபரத்திலும் ரெட்டியாரோ அவரது சம்சாரமோ ஏன் எதற்கு என்று கேட்க மாட்டார்கள். பேசிக் களைத்து ஓய்ந்து போகும் இரண்டு அணிகளும். அதன் பிறகு யாராவது ரெட்டியார் சம்சாரத்தை பார்க்க நேர்ந்தால் முந்திக்கொண்டு விசய தானம் செய்ய முற்படுவர். ரெட்டிச்சி சொல்வாள்: “”அது ஒங்க பிரச்சினை. இதுல நான் எந்துக்கு..

ஒரு கால கட்டத்தில் ஆந்திரா குண்டூர் மாவட்டத்திலிருந்து கறுப்பாக களையாக ஒரு இளைஞன் ரெட்டியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வந்த போது பார்த்ததுதான். அதற்குப் பிறகு அவனை யாரும் வெளியில் பார்க்கவே இல்லை. வாடகை கொடுக்க போகும்போது கண்ணில் படுகிறானா என்று விளக்கெண்ணை போட்டு தேடியும் தட்டுப்படாமல் ஏமாந்து திரும்பிய குடித்தனக்காரர்கள் கிசு கிசு பாணியில் பேச ஆரம்பித்தார்கள்.

ரெட்டியாரால் எதுவும் முடியல. ஆனா ரெட்டிச்சி இன்னும் இளமையாத்தானே இருக்கா. அவளுக்கு தேவைன்னா பதினாறு குடித்தனத்து ஆம்பளைங்களுக்கு பந்தி போட்டுறப்போறாளேன்னு ஊரிலேர்ந்து குண்டூர் காளையை ஓட்டிக்கிட்டு வந்திருக்காரு. எதுக்கு வந்தானோ அதச் சுத்தமாச் செய்யறான்னு. அவன் எதுக்கு வெளிய வரணும்னு பேசிக்கிட்டாங்க.

நல்ல சித்திரை வெயிலில் சூரியன் உச்சத்திற்கு வரும் முன்னரே வத்தல் போடும் முனைப்பில் இருந்த இரு மாமிகள் மொட்டை மாடியில் குளித்து முடித்த தலை ஈரம் காய உலர்த்தியபடியே வத்தல் பிழிந்த ஒரு அதிகாலை வேளையில் அவனைக் கண்டார்கள். ரெட்டியார் வீட்டின் மொட்டை மாடி கொஞ்சம் உசரம். குடித்தனக்காரர்களின் மொட்டை மாடி கொஞ்சம் தாழ.. பிழிந்த வத்தல் காய காய தலை ஈரம் காய கூந்தலைப் பிரித்து _ அது ஒன்றும் அறுபதடி கூந்தல் இல்லை.. ஜிட்டு மசுரு ஆறு அங்குலத்திற்கு இருந்தால் அதிகம்_பிரித்துக் காயப்போட்டு தலையை சூரியன் திசைப் பக்கம் சாய்த்து நாற்பத்தி ஐந்து டிகிர் கோணத்தில் நிமிர்ந்தபோது அவன் அவர்கள் கண்களில் பட்டான்.

செம்பட்டை நிறத்தில் மெலிசான வேட்டியைக் கீழ்பாய்ச்சிக் கட்டியிருந்தான். கனமான கர்லாக் கட்டையை சுழற்றியபடியே வேர்க்க விறுவிறுக்க இருந்தான். நல்ல கடப்பா கல்லைப் போல் மினுமினுத்தது அவன் தேகம். வர்ணாஸ்ரம தர்மங்களை விலக்கி வைத்துவிட்டு லஜ்ஜையில்லாமல் அவனை விழி மூடாமல் பார்த்தார்கள் இரு மாமிகளும். பயிற்சி முடிந்து விட்டாற்போலிருந்தது. சட்டென்று கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து உடலைத் துவட்டிக் கொண்டான். அவனது இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியைப் பற்றிய கற்பனையிலேயே மாமிகள் வியர்த்துப் போனார்கள். வத்தலோடு வத்தலாக மாமிகள் காய்ந்தது அந்த சித்திரை முழுவதும் தொடர்ந்தது. சில வேளைகளில் குண்டூரான் ஆறு முட்டைகளை உடைத்து அப்படியே விழுங்குவான். அவன் முட்டை எடுத்து வரும் கூடை மெல்லிய கம்பிகளில் முடையப்பட்டது. அந்தக் காலத்தில் பிளாஸ்டிக் முட்டை கூடைகள் கிடையாது. எல்லாம் இரும்புக் கம்பிக் கூடைகள் தாம். முட்டை வியாபாரி வழக்கமாக வாங்கும் வீடுகளுக்கு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ வருவார். சைக்கிளில் மூங்கில் கூடையில் வைக்கோல் பரப்பி முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வீட்டு இரும்புக் கூடைகளை வாங்கி பழைய வைக்கோலை அகற்றி புதிய வைக்கோல் வைத்து முட்டைகளைத் தேவைக்கு ஏற்ப அடுக்குவார். பழைய வைக்கோல் துண்டுகள் வட்ட வடிவில் கூடையின் அளவிற்கேற்ப ஆங்காங்கே விழுந்து கிடக்கும். பால் வற்றிப் போன மாடுகளும் அவைகளின் நோஞ்சான் கன்றுகளும் அவைகளை சாப்பிட்டு பசியாறும்.

பின்கட்டு குழாயடிச் சண்டைகளும், முன்கட்டு ரேழிச் சர்ச்சைகளும் இல்லாத ஒரு திருநாளில் ரெட்டியார் வீட்டிலிருந்து சப்தம் அதிகமாகக் கேட்டது. ரெட்டியார் குரலும் அதற்கும் மேலாக ரெட்டிச்சி குரலும் கேட்டது. கொஞ்ச நேரத்தில் ரெட்டியார் குரல் அடங்கிப் போனது. அடுத்த அரைமணி நேரத்தில் மஞ்சள் மண்டை டாக்ஸி வந்து ரெட்டியார் ராஜி நர்ஸிங் ஹோமிற்கு கொண்டு போகப்பட்டார். ஒரு வாரம் கழித்து அவர் குணமாகி விட்டதாகவும் மாலை திரும்பி வரப் போவதாகவும் தகவல் கசிந்தது.

அன்று மதியம் ஒரு பெரிய பையுடன் குண்டூரான் அந்த வீட்டை விட்டு வெளியேறினான். அவன் தெரு முனை திரும்பும் வரை ரெட்டியார் சம்சாரம் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரெட்டியார் திரும்பி வந்த கொஞ்ச நாட்களிலேயே அவரைப் பார்க்கப் போன குடித்தனக் காரர்கள் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டார்கள்.

“என்னாச்சும்மா” என்று ரெட்டிச்சியைக் கேட்டபோது “நாக்கு கட்டுப்படுத்தணும். லேக போத்தே ஆஸ்பத்திரிதான்“ என்றாள்.

ரெட்டிச்சி சுத்த சைவம் என்பதும், இதுகாறும் அவள் அசைவம் சமைத்தாலும் சாப்பிட்டதில்லை என்பதும், சில மாதங்களாக அவள் அசைவம் சமைக்க மறுத்ததால் குண்டூர்காரனை சமையலுக்கு ரெட்டியார் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. அதிக காரமும் எண்ணையும் அசைவமும் சேர்ந்து இதய நோய்க்கு அவரை ஆளாக்கி இருந்தது.

குடித்தனக்காரர்களின் கற்பனை உடைந்த அதே நேரத்தில் ரெட்டியார் சம்சாரத்தைப் பற்றிய தப்பான பிம்பமும் உடைபட்டது.

2. திரிலோக சுந்தரி

வீணை வாசிக்கும் யானைக் கை அம்மாள் ஒருத்தி ஒண்டுக் குடித்தன வீட்டில் இருந்தாள். கொஞ்சம் முரட்டுத்தனமான முகம். அம்மை வார்த்தது போல் மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படும். அவளுக்கு இரண்டு பெண்கள். அவர்கள் இருவரும் ஒல்லியாக குச்சிபோல் இருந்தது ஆச்சர்யம். யானைக் கை அம்மாள் கொஞ்சம் தாட்டியானவள். முதல் மாடியில் குடியிருந்த அவர்கள் குடும்பம் எதற்கும் அதிகமாக இறங்கி வராது. சாயங்கால வேளைகளில் வீணை கற்றுக்கொள்ள பெண்டுகள் அங்கு குழுமும். வீணை சப்தம் மெலிதாகக் கேட்கும். கடைக்குப் போவதற்கும் வேறு எதற்காக இருந்தாலும் அந்த இரண்டு பெண் பிள்ளைகள் தான் இறங்கி ஓடும். அந்த வீட்டில் ஆம்பிளை வாசனை அடித்ததே இல்லை. அம்மாளின் புருசன் யார் என்று யாருக்கும் தெரியாது. தேடிவரும் சொந்தங்களும் மிக சொற்பம். அதிலும் ஆண்கள் மிக மிகக் குறைவு.

இரு பெண்பிள்ளைகள் என்று சொன்னேனல்லவா! அதில் மூத்தவள் பத்மா என்கிற பத்மப்ரியா. ஒடிசலாக ஆறடிக்கு கொஞ்சம் குறையாக இருப்பாள். யார் வீட்டில் எந்தப் பரணையில் எதை எடுக்க வேண்டுமென்றாலும் அவளைத்தான் கூப்பிடுவார்கள். ஏணியில்லாமல் எடுக்கக் கூடியவள் அவள் ஒருவள்தான். ஒனக்கு மாப்பிளை கெடைக்கறது கஷ்டம்டி. இந்தூர் மாப்பிள்ளையெல்லாம் அஞ்சரை அடிதான். அயல்நாட்டு மாப்பிள்ளைதான் ஒன் ஒசரத்துக்கு தோது. என்று அவளைக் கோட்டா பண்ணுவார்கள் அடுத்த போர்ஷன் மாமிகள்.

மாட்டுக்கறி துண்றவன். அவன் நெம்பலை யார் தாங்கறது. நமக்கு உள்ளூர் அரையடி ஸ்கேலே போதும். அளவோட வாழலாம் என்று மனசுக்குள் நினைத்துக் கொள்வாள் பத்மா. சுடிதார், மேக்ஸி எல்லாம் வராத காலம் அது. திருமணம் வரையிலும் பாவாடை தாவணிதான். அதுவும் கீழ் நடுத்தர வர்க்கத்துக்கு இரண்டொன்று தான் இருக்கும் உடைகள். இரு பெண்கள் இருக்கும் வீடுகளில் மாற்றிக் கொள்ள கொஞ்சம் கூடுதல் சாய்ஸ் கிடைக்கலாம்.

பத்மா கொஞ்சம் கலை ரசனை மிக்கவள். இருக்கும் உடைகளில் கிடைக்கும் வசதிகளை வைத்துக் கொண்டு நேர்த்தியாக உடை அணிவது ஒரு கலை. அதில் கொஞ்சம் கற்பனையையும் கலந்து விட்டால், புதுப் பரிமாணங்களில் தோற்றம் மாறும் என்பது அவள் அனுபவப்பூர்வமாக அறிந்த ஒன்று. மஞ்சள் கலர் பாவாடையும், கையில் பச்சை நூலால் எம்ப்ராய்டரி செய்த வெளிர் மஞ்சள் ஜாக்கெட்டும், சிகப்புத் தாவணியும் அவள் வாரத்தில் மூன்று நாட்கள் அணிய வேண்டிய கட்டாயம். மீதி நாட்களில் பச்சைப் பாவாடையும் வெள்ளை தாவணியும். ஆனாலும் அவளது நிறத்திற்கு மஞ்சளும் சிகப்பும்தான் எடுப்பாக இருக்கும். அதிலும் தாவணியை முன்பக்கம் இழுத்து இடுப்போடு சொருகியிருப்பாள். பின்பக்கம் இடுப்பில் மையப் பிரதேசத்தில் தொடங்கி V வடிவில் சிகப்பு தாவணியின் ஒரு முனை இறங்கியிருக்கும். அதுவும் புட்டத்தின் பாதிப் பகுதியோடு நின்று விடும். அழகிப் போட்டிகளில் இடது காலை வலது பக்கமும், வலது காலை இடது பக்கமும் மாற்றி மாற்றி நடப்பார்களே அதுபோல் நடப்பாள் அவள். தொலைக்காட்சியோ வேறு சினிமாக்களோ கற்று தராத சூழலில் அவளுக்கு அது இயல்பாக வந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இப்படியான பூனை நடையின் காரணமாக அவளது பின்பகுதி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைந்து ஆடும். அதன் ஆட்டத்திற்கு கட்டியம் கூறுவது போல் சிகப்பு தாவணியின் வீ விரிந்தாடும்.

வீணை_யானை அம்மாளின் குடும்ப நிதி நிலைமை அப்படியொன்றும் ஓஹோ ரகம் இல்லை. மாதக்கடைசியில் கடன் கேட்கும் நிலைதான். ஆனாலும் எந்தக் கடன்காரனும் அவள் வீட்டு முன் வந்து நின்றதில்லை. ஒரு முறை சீட்டு போட்டு வட்டிக்கு விடும் சாரதாதான் சத்தம் போட்டாள். அதற்கப்புறம் அவளிடம் சீட்டும் போடுவதில்லை, கடனும் வாங்குவதில்லை என்றாகிப் போனது. அன்று பத்மா எடுத்த முடிவே அதற்குக் காரணம். இனி பெண்களிடம் கடன் வாங்குவதில்லை என்ற முடிவே அது. மாதக் கடைசியில் பத்மா மளிகைக் கடையில் பொருள் வாங்குவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. காலை டிபனுக்கு பாம்பே ரவையும், மதிய உணவுக்கு அரிசியும், கூடவே கொஞ்சம் வெங்காயம், பச்சை மிளகாய் என்று ஒரு லிஸ்ட் தயாராகும். கையிருப்போ அரை ரூபாய் என்ற அளவில் இருக்கும். லேசாக பவுடர் பூசிக் கொள்வாள் பத்மா. சிறிய ஓலைப் பர்சில் எட்டணா நாணயத்தை போட்டுக் கொள்வாள். அதுவும் முழு நாணயமாக இருக்காது. பத்து பைசா, அஞ்சு பைசா என்று ஏகத்துக்கு கனக்கும். ரப்பர் செருப்பை மாட்டிக்கொண்டு, ஓலைப் பர்ஸை ஜாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டு கிளம்புவாள். அவளது குறி இன்று தெரு முனை நாட்டார் கடை.

நாட்டார்கடையில் ஏகத்துக்கு கூட்டம் இருக்கும். பத்மா பொறுமையாக காத்திருப்பாள். கடன் சொல்பவர்களையெல்லாம் கடிந்து கொண்டே சாமான் கட்டிக்கொண்டிருப்பார் நாட்டார். எல்லாம் பத்து பைசா நாலணா வியாபாரம். அதிலேயே கடையோடு சேர்ந்த வீட்டைக் கட்டியிருந்தார் நாட்டார். கூட்டம் கொஞ்சம் மட்டுப்பட்டு இவள் பக்கம் திரும்பும்போது பத்மா ஏதோ யோசித்தவளாய் படியிறங்க முற்படுவாள். ஓரக்கண் நாட்டாரை நோட்டம் விடும். தொங்கிக் கொண்டிருக்கும் தராசு மறைவில் லேசாக கை மாராப்பை விலக்கிக் கொள்ளும். நாட்டார் கண்கள் விரியும். வாய் அவசரம் காட்டும்.

“தே நில்லு.. வந்திட்டு எங்கிட்டு எதுவும் வாங்காம போற .. வேணுங்கறத வாங்கிட்டு போ. அதுக்குத்தானே தொறந்துக்கிட்டு ஒக்காந்துருக்கம் கடைய“ மேல் துண்டால் கடைவாய் எச்சிலை துடைத்த படியே அசட்டுச் சிரிப்பு சிரிப்பார் நாட்டார்.

“பரவால்ல நாட்டார். நாலஞ்சு ஐட்டம் வாங்கணும். பணம் இருக்குதான்னு தெரியல“ என்றபடியே ஜாக்கெட்டுக்குள் கையை விட்டு பர்ஸை எடுப்பாள் பத்மா. இன்னும் கொஞ்சம் தாவணி விலகும். “ கடன் சொன்னா கொறைஞ்சி போயிடுவியளாக்கும். இல்ல கடன் கொடுத்தாத்தேன் என் சொத்து பத்தெல்லாம் கரைஞ்சி போயிடுமாக்கும், வேணுங்கறத வாங்கிட்டு போ அம்மணி “ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக கெஞ்சுவார் நாட்டார்.

நாட்டாருக்கு நாஸ்தா வரும் ஒயர் கூடை கொள்ளாமல் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவாள் பத்மா. அவளது ஓலை பர்ஸில் அரை ரூபாய் அப்படியே இருக்கும்.

பத்மா எந்நேரமும் எதையாவது படித்துக் கொண்டிருப்பாள். ஆண்களைப் பற்றிய அவளது உளவியல் ரீதியான அறிவிற்கு அவளே பல புத்தகங்கள் போடலாம். பள்ளி இறுதி வகுப்போடே தன் கல்விப் பயணத்தை நிறுத்தி விட்டவள் அவள். ஆனாலும் அவளது அறிவுத் தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒருநாள் வெள்ளை சராய் சட்டை அணிந்து கொண்டு அவள் வெளியே போகும்போதுதான் எல்லோர்க்கும் தெரிந்தது அவள் கராத்தேயில் ப்ளாக் பெல்ட் வாங்கியவள் என்று. அதற்கப்புறம் அவளை நெருங்கலாம் என்ற நப்பாசை கொண்ட ஆண்கள் கூட கொஞ்சம் விலகியே இருக்க ஆரம்பித்தார்கள்.

திருமண வயதைத் தாண்டி பல ஆண்டுகள் கழித்து ஆறடி உயர மிலிட்டரிக்காரன் ஒருவனோடு அவளுக்கு திருமணம் ஆயிற்று. ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து வட இந்தியாவெல்லாம் சுற்றி விட்டு அவள் அம்மா வீட்டிற்கு வந்த போது கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள்.

ஒண்டுக் குடித்தன பொம்பளைகள் கேட்டார்கள்: “என்னடி பத்மா ஏதாவது விசேசமா?”

பதமா சொன்னாள்: “ஒண்ணென்ன நூறு இருக்கு நான் தங்கியிருந்த இடத்துல.. என் நெலத்துல தான் இன்னும் வேரு ஊனல..”

“தப்பா நெனச்சுக்காதடி கொஞ்சம் பூசினாப்பல இருக்கயே அதான்..”

“அதுக்கென்ன கொறச்சல்.. வெண்ணையும் ரொட்டியும் தெனக்கிம் உள்ளார போனா பூசாத என்னா செய்யும்? நெருப்பு பட்டாத்தேனே உருகும்?”

அவள் தலை மறைந்தவுடன் ஆண்கள் போட்ட குழுத் தீர்மானம் இப்படிச் சொன்னது: சின்ன வயசுல எத்தினி பேரு திடத்தைக் கரைச்சிருப்பா..அதான் ஆண்டவன் அவ வயத்துல தங்க விடாம கரைச்சிருக்கிறான்.

3. வித்யா ரூபிணி சரஸ்வதி

வீணை அம்மாளின் இன்னொரு பெண் வித்யா. பத்மாவின் நடவடிக்கைகள் பிடிக்காததாலோ என்னமோ, அந்த அம்மாள் அவளை கொஞ்சம் கட்டுப்பெட்டியாக வளர்த்தாள். பள்ளிக்கூட நாட்கள் முதலே அவள் படிப்பு படிப்பு என்றே இருந்தாள். அதிக படிப்பினால் பள்ளி இறுதியாண்டிலேயே அவள் புட்டி அதாவது கண்ணாடி போட ஆரம்பித்து விட்டாள். சாட்டை போல முடி இருக்கும் அவளுக்கு. அதுவும் அடர்த்தியாக. ஆனால் அதை அவிழ்த்து விட்டு யாரும் பார்த்ததில்லை. எப்போதும் சுருட்டி கொண்டையாக முடிந்து வைத்திருப்பாள் அவளது அம்மா. என்றைக்காவது அவிழ்த்து விட்டால்கூட பழக்க தோஷத்தில் அவை கீழ் நோக்கி நீளாது என்று அங்கிருந்தவர்களது கருத்து. கல்லூரி போகும் காலத்திலேயே அவளை கலெக்டர் படிப்புக்கும் தயார் நிலையில் வைத்திருந்தாள் அவளது அம்மா. பட்டம் வாங்கிய கையோடு கலெக்டர் பரிட்சை எழுதி தேர்வாகும் திறமை அவளுக்கு இருந்தது.

அவள் உடையணியும் விதமும் பத்மாவுக்கு நேர்மாறாக இருக்கும். கூந்தலைப் பற்றிதான் ஏற்கனவே சொல்லியாகிவிட்டதே. உடை எப்போதும் மங்கலான நிறங்களிலேயே இருக்கும். பல நாட்களில் நாகப்பழக் கலரும் யானைக் கலரும்தான். பாதம் தெரியாத அளவிற்கு பாவாடை நிலத்தில் புரளும். குனிந்த தலை நிமிராது. போர்த்திய தாவணியோ சேலைத் தலைப்போ எங்கும் விலகாதிருக்க சேப்டி பின் ஒன்றுக்கு இரண்டாக குத்தப்பட்டிருக்கும். காடாத் துணி வாங்கி அவளுக்கு பாடி தைத்திருப்பாள் அவளது அம்மா. அதுவும் சமீபத்தில் தைத்தவை அல்ல. அதனால் அதை மூச்சு பிடித்துதான் போடவேண்டும். உள்ளடங்கிய மார்புக்கூடு அப்புறம் விரியவே விரியாது. அதனாலேயே ஒரு வித கூன் முதுகு போட்டு அவள் நடப்பாள்.

அன்றும் அப்படித்தான் அவள் கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தாள்.

சைதாப்பேட்டையிலிருந்து மாம்பலத்திற்கு பஸ் கிடைக்காததால் அவள் நடந்தே வரவேண்டியிருந்தது. மூணாவது தெரு நாயக்கர் மாந்தோப்பில் காய் பறித்துக் கொண்டிருந்தார்கள். நாயக்கர் மகன் கோபாலு மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏற்கனவே பத்மா மீது ஒரு கண் இருந்தது. ஆனாலும் அவன் வித்யாவை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அவள் நடந்து வருவதைக் கண்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான் அவன்.

தொரட்டி கொம்பால் மாங்காய்களை வளைத்து இழுத்துக்கொண்டிருந்த போது கை நழுவி தொரட்டிக்கோல் செங்குத்தாக கீழே இறங்கியது. தொரட்டிக் கோலின் ஒரு முனையில் வளைந்த கத்தி ஒன்று இருக்கும். அது நேராக இறங்கி நடந்து வந்து கொண்டிருந்த வித்யாவின் பின் பக்க ரவிக்கையின் உள்புகுந்து இழுத்தது. லேசாக ரவிக்கை கிழிய ஆரம்பித்தது. கோபாலு ரத்தக்காயம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வேகமாக இழுக்க முழுதாக ரவிக்கை கிழிபட்டது. கத்தி காடா பாடியையும் கிழித்து போட்டது.

அடக்கி வைக்கப்பட்டிருந்த தனங்கள் திமிறிக் கொண்டு புறப்பட்டன. சேலைத் தலைப்பைத் தாண்டி அவை முன்னேற ஆரம்பித்தன. கோபாலு சுதாரித்துக் கொண்டான். சட்டென்று தலைப்பை இழுத்து விட்டு “சொருகு “ என்றான். வித்யா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாள். சில வினாடிகள் காத்திருந்த கோபாலு அவள் பதிலுக்கு காத்திராமல் அவனே அவளது இடுப்பில் அழுத்தமாக சேலைத் தலைப்பை செருகிவிட்டான். அவனது முரட்டு கை பட்ட இடம் அவளுக்கு ஏதேதோ உணர்ச்சிகளை தூண்டி விட்டது.

“ சீக்கிரம் வீட்டுக்கு போ. ஏழு மணிக்கு ராமர் கோயிலுக்கு வந்திரு “ முடியாது என்பது போல் தலையசைத்தாள் வித்யா. தொரட்டிக்கோலைக் காட்டியபடியே எச்சரித்தான் கோபாலு. “எனக்கு தெரிஞ்சது எல்லாருக்கும் தெரியணுமா “ என்று சன்னக் குரலில் கேட்டான். சரி என்பதுபோல் தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் வித்யா. பாண்டிபஜாரில் புத்தகம் வாங்கிவருவதாக அவள் ஆறரை மணிக்கே கிளம்பியதும். ராமர் கோயில் பின்புறம் கோபாலுவை சந்தித்ததும் இந்தக் கதைக்கு அவ்வளவு முக்கியமில்லாத விசயங்கள். வித்யாவின் சிந்தனைகள் ஒரு காட்டற்றைப் போல திசை மாறி ஓடிக் கொண்டிருந்தன. என்ன ஆகப்போகிறதோ என்கிற பயமும், அப்படி ஏதாவது ஆனால் அது எப்படியிருக்கும் என்கிற நப்பாசையும் கலந்த ஒரு சிந்தனை ஓட்டம் அது. துவர்ப்பு நெல்லிக்காயை தின்று விட்டு பானைத் தண்ணீர் குடிப்பதைப் போல என்று நினைத்துக் கொண்டாள். யார் நெல்லிக்காய்? யார் பானைத்தண்ணீர்.

முரட்டு கோபாலுவின் கட்டுமஸ்தான தேகமும் புஜங்களும் இழுத்துக் கட்டிய அவனது லுங்கியத் தாண்டித் தெரிந்த அரை நிக்கருடன் கூடிய தொடைகளும் அவளை அநாவசியத்திற்கு நடுக்கத்தைக் கொடுத்தன.

ராமர் கோயில் பழைய மாம்பலத்தில் இருந்தது. பெரியகோயில். சுற்றிலும் ஏகத்துக்கு வெற்றிடங்கள். கோயிலே கவனிப்பாரற்று சிதிலமாகத்தான் இருந்தது. ஒரே ஒரு அரச மரம் நடுவில் இருக்கும். பெருமாள் கோயிலில் அரச மரம் இருக்கலாமோ என்கிற சிந்தனையும் ஓடியது.

கோயிலுக்கு எதிர் வீடு கம்பி வைத்த வராண்டா கொண்ட ஓட்டு வீடு. அவளது ஏதோ ஒரு வழி தாத்தா வீடு என்று அம்மா ஒரு தடவை சொல்லி யிருக்கிறாள். அங்கு யாராவது இருப்பார்களா? அவர்களுக்குத் தன்னை இன்னார் பெண் என்று தெரிந்திருக்குமா?

தாவணியை எடுத்து தலையோடு போர்த்திக்கொண்டாள் வித்யா. வாயைத் துடைப்பது போல் முகத்தை முக்கால் வாசி மூடிக் கொண்டாள். கம்பி வீட்டை நோக்கி முகம் திருப்பாமலே கோயிலுக்குள் நுழைந்தாள்.

“ஏய் இந்தா.. இந்த லெட்டரை பத்மாகிட்ட குடுத்துடு.. எதுனா பதில் இருந்தா மாந்தோப்பில என்னியக் கண்டா கொடுத்துரணும். நல்லா படி இன்னா? “ என்றவாறே கையில் ஒரு நோட்டு புத்தகக் காகிதத்தைத் திணித்தான். விறு விறுவென்று நடந்து வெளியேறினான்.

முக்கியமான விசயம். வாழ்க்கையில் பல ரசங்களை கோபாலு அவளுக்கு கற்றுக் கொடுத்தான். ஆனாலும் அவளது படிப்பின் மேல் அவன் அளவு கடந்த மரியாதை வைத்திருந்தான். அதனால் அவன் எல்லை மீறவே இல்லை. உரிய வயதில் நாயக்கர் பெண் ஒருவளை திருமணம் செய்துகொண்டு அவன் வேறு ஊருக்கு போய்வ்¢ட்டான்.

பருவ வயதில் ஏற்பட்ட ஏக்கங்களுக்கு வடிகாலாய் கோபாலு இருந்ததால் வித்யாவால் அனாவசிய கற்பனைகளில் மூழ்கி வாழ்க்கையைத் தொலைக்கும் சந்தர்ப்பங்கள் ஏதும் வாய்க்கவில்லை. அவளது அம்மாவின் கனவை நனவாக்குவது போல அவள் கலெக்டர் படிப்பு படித்து தலைமை செயலகத்தில் பெரிய பதவி வகித்தாள்.

கடைசி வரை அவள் திருமணம் செய்து கொள்ளவேயில்லை.

4. ஜதி தாள சுந்தரி

பதினாறு குடித்தனங்களில் பக்க வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வீடு ஒன்று உண்டென்றால் அது கமலா டீச்சர் வீடுதான். கமலா டீச்சர் ஒல்லியாக இருப்பாள். சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். ஒல்லி உடம்பு அதை இன்னும் கூடுதல் உயரமாகக் காட்டியது. கமலா டீச்சர் கல்யாணம் ஆகாத முதிர் கன்னி. கிட்டத்தட்ட நாற்பது வயதைக் கடந்து கொண்டிருப்பவர். சாமுத்திரிகா லட்சணங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லும் எதையும் அவளிடம் பார்க்க முடியாது. கொஞ்சம் களையான முகத்தைக் கூட வெளிர் ப்ரேம் போட்ட பெரிய கண்ணாடி போட்டு மறைத்திருப்பாள். சாதாரணமாகச் சொல்வார்கள்: கண்ணாடி போட்டால் கொஞ்சம் அறிவுக் களை வரும் என்று. ஆனால் கமலாவிடம் அப்படியெல்லாம் ஏதும் களை வந்து விடவில்லை. ஏற்கனவே திருமணம் செய்யாத வெறுப்பு மொத்தமும் முகத்தில் குடியேறி இருந்தது. பெரிய ப்ரேம் மூக்குக் கண்ணாடி அதை இன்னும் பெரிதாக்கிக் காட்டியது. கமலாவிடம் எல்லோருமே ஒப்புக் கொண்ட விசயம் அவள் மிகச் சிறந்த ஒழுக்கங்களை உள்ளவள் என்பதுதான். எந்த வளைவுகளும் மேடுகளும் இல்லாத ஒல்லிக் குச்சி உடம்பைக் கூட அங்குலம் வெளியே தெரியாமல் போர்த்திக் கொண்டுதான் அவள் வெளியே கிளம்புவாள். ராமகிருஷ்ண மடம் நடத்திய சாரதா பள்ளியில் அவள் பாட்டு மற்றும் நாட்டிய ஆசிரியை. முதல் முறையாக அவளைப் பார்ப்பவர்கள் கடவுளின் சிருஷ்டி மேல் நம்பிக்கை கொண்டு விடுவார்கள். சிறுவர்கள் எடுத்துப் போகும் குடை போல் மடித்து கூடைக்குள் வைக்கும் அளவில் இருக்கும் கமலா டீச்சரின் குரலில் ஆண்டவன் அற்புதத்தை அள்ளி வைத்திருந்தான். அவள் ஜதி சொல்லுவதும், நட்டுவாங்கம் செய்வதும், நாட்டியப் பாடல்களை குரலெடுத்துப் பாடுவதும் ஒரு நாள் பூராவும் கேட்டுக் கொண்டிருக்கலாம். கமலா டீச்சர் ஆண்களை வெறுப்பவளாக இருப்பாள் என்று அந்தக் காலனி பூராவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதனாலேயே அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் பேசிக் கொண்டார்கள். அவள் வீட்டிலேயே நடத்தும் பாட்டு மற்றும் நடன வகுப்புகளில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. அவள் அந்தக் குடித்தனத்தில் ஒரு போர்ஷனின் தனியாகத்தான் இருந்தாள். காலை எட்டாவது மணிக்கு அவள் சாப்பிட்டுவிட்டு, ஒரு கையில் குடையும், மறு கையில் கறுப்புத் தோலால் செய்த ஹேண்ட் பேக்கும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் என்றால் மாலை ஆறு மணிக்குத்தான் உள்ளே நுழைவாள்.

அவள் உடைகள் பளிச்சென்று இருக்கும். பெரும்பாலும் ஆரஞ்சு வண்ண உடைகளை ஏறக்குறைய காவி நிறத்தில் தான் அவள் அணிவாள். கிளாஸ்கோ மல்லில் செய்த ரவிக்கைதான் எப்போதும். நாயுடு ஹால் சமாச்சாரமெல்லாம் வந்துவிட்ட காலத்தில் கூட அவள் இன்னமும் ரவிக்கைக்கு ஒரு அங்குலம் குறைந்த இடைவெளியில் உள்பாடி அணிந்து கொள்வாள்.

இஸ்திரி போடுபவர்கள் தெருவுக்கு தெரு இப்போது இருப்பதுபோல் எல்லாம் அப்போது கிடையாது. சலவை செய்பவர்களே கரியால் சூடாகும் இஸ்திரிப் பெட்டிகளை வைத்திருப்பார்கள். ஒரு பேட்டைக்கு ஒன்று அல்லது இரண்டு கடைகள்தான் இருக்கும். அங்கேதான் துணிகளை இஸ்திர்க்கு கொடுக்க வேண்டும். பெரிய வீடுகள் என்றால் டோபி வீட்டுக்கே வருவார். “அம்மா டோபி வந்திருக்கேன் “ என்று குரல் கொடுத்தவுடன் நல்ல தேக்குமரத்தில் செய்யப்பட்ட கூண்டு போன்ற பெட்டியிலிருந்து, துணிகளை எடுத்துப் போடுவர். சலவைக் கணக்கிற்கு என்று தனியாக டைரியோ நோட்டுப் புத்தகமோ வைத்திருக்கும் வீடுகள் அனேகம். AK, MC என்று முதல் எழுத்துக்களைப் போட்டு வண்ணான் மார்க் மையில் எழுதுவர். துணிகள் தொலைந்து போகாமல் இருக்கவும் வேறு வீடுகளுக்கு மாறிப் போகாமல் இருக்கவுமே இந்த ஏற்பாடு. அதுவும் தவிர அனைத்து சலவைத் தொழிலாளர்களும் பொதி மூட்டைகளைக் கழுதைகள் மேல் ஏற்றிக் கொண்டு சைதாப்பேட்டை ஆற்றுக்குப் போய் வெளுத்து காயப்போட்டு மடித்து எடுத்து வருவர். சைதாப்பேட்டை பாலத்தில் மேல் பேருந்தில் மதிய நேரத்தில் சென்றால், ஒரு பிரம்மாண்ட திரைப்படக் காட்சிபோல் கலர் கலரான துணிகள் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும்.

கமலா டீச்சர் சலவைக்குத் துணிகளைப் போட்டு யாரும் பார்த்ததில்லை. ஆனாலும் அவள் உடுத்தும் உடைகள் பளிச்சென்று சுருக்கம் இல்லாமல் இருக்கும். ஒரு குறும்புக்கார சிறுமி அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் தயங்கி தயங்கி ஒரு நாள் கமலா டீச்சர் வீட்டுக்குள் போனாள். டீச்சர்.. அவசரமா வெளியே போகணும். என் பாவாடை எல்லாம் கசங்கி இருக்கு. கொஞ்சம் இஸ்திரி பெட்டி தாரீங்களா!

கமலா டீச்சர் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

“எங்கிட்ட இஸ்திரிப் பெட்டி இருக்குதுன்னு யாரு சொன்னா?”

“இல்ல ஒங்க உடையெல்லாம் நீவி விட்டாமாதிரி நறுக்குன்னு இருக்கு.. அதான்..”

கேட்ட சிறுமிக்கு தன் கையைக் கிள்ளிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. காரணம் கமலா டீச்சர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“இஸ்திரிப் பொட்டியா கேக்கறே.. இதோ இதான் என்னோட இஸ்திரிப் பெட்டி..”

அகலமான ஒரு பித்தளை செம்பை எடுத்துக் காண்பித்தாள் கமலா டீச்சர். அதன் அடிபாகத்தின் வெளிப்புறம் தட்டையாக இருந்தது. மேல் பாகம் ஒரு கூஜாவைப்போல் திருகு மூடி கொண்டதாக இருந்தது. அந்த மூடிக்கு ஒரு கைப்பிடியும் இருந்தது.

“இந்தா இதுதான் என் இஸ்திரி பொட்டி வேணுமா” என்று கேட்டு மீண்டும் சிரித்தாள் கமலா டீச்சர். “இதுவா இதுல எப்படி டீச்சர்?”

“உள்ளாற சுடுதண்ணிய ஊத்தினா சொம்பு சூடாவும் இல்ல. அப்ப இத வச்சு துணிய இஸ்திரி பண்ணிக்க வேண்டியதுதான்”

கமலா டீச்சர் தன் துணிகளை தானே இஸ்திரி பண்ணிக் கொள்வதும் அவளது ஆண் எதிர்ப்பு உணர்வு காரணமாகத்தான் என்று எல்லோரும் நம்பினார்கள்.

கமலா டீச்சரைத் தேடி யாரும் வருவதில்லை. வழக்கமாக சனி ஞாயிறு அன்று மட்டும் பாட்டு நாட்டியம் கற்றுக் கொள்ள மாணவிகள் வருவர். அப்போதுகூட அடுத்தவர்களுக்கு தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக கமலா டீச்சர் தன் வீட்டு கதவுகளை அடைத்து வைத்திருப்பாள்.

மாதம் முதல் தேதி அன்று கமலா டீச்சர் காலையில் ஒரு ஐந்து நிமிடம் முன்னதாகவே கிளம்பிவிடுவாள். ரெட்டியார் சம்சாரத்தைப் பார்த்து வாடகைப் பணத்தைக் கொடுத்து விட்டு அவள் பள்ளி சென்று விடுவாள். ரெட்டியார் சம்சாரம் ஆச்சர்யமாக சொல்வாள்.

“எந்துக்கு கங்காரு.. ரெண்டு தேதி ஆனாத்தான் ஏமி”

பதிலுக்கு ஒரு புன்னகையை சிந்திவிட்டு கமலா எக்ஸ்பிரஸ் கிளம்பிவிடும். அனாவசிய உரையாடல்களுக்கு அவள் வாழ்வில் இடமில்லை.

கமலா டீச்சர் யாரோடும் ஒட்டி உறவாடி யாரும் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவள் தன்னுடன் பணிபுரியும் வேறொரு டீச்சரின் கை பிடித்துக் கொண்டு நடந்து போனதைப் பார்த்த பலர் ஆச்சர்யப் பட்டுப் போனார்கள். சிலர் இன்னும் கொஞ்சம் துப்பு துலக்கி அந்த டீச்சர் பெயர் தர்மாம்பாள் என்றும், அவள் விதவை என்றும், அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும் கண்டுபிடித்தார்கள். கமலா டீச்சருக்கு அவர்களுக்கும் கிட்டத்தட்ட இருபது வயது வித்தியாசம் இருக்கும். தாயில்லாத கமலா டீச்சர் தர்மாம்பாளிடம் ஒரு தாய்ப் பாசத்தை எதிர்பார்த்து பழகி இருக்கலாம் என்று கணக்குப் போட்டார்கள். இவ்வளவு நெருக்கமான தோழிகள் ஏன் தனித்தனியாக வாழவேண்டும்? ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கலாமே என்றும் யோசனை செய்தார்கள். ஆனாலும் அதை கமலா டீச்சரிடம் சொல்ல யாருக்கும் தைரியம் வரவில்லை.

ஒரு நாள் கமலா வீட்டிலிருந்து கேவல் சத்தம் பெரிதாகக் கேட்டது. டீச்சர் பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்தாள். அவளருகில் ஒரு இருபது வயது இளைஞன் உட்கார்ந்திருந்தான்.

“அம்மா அழாதீங்க .. இனிமே ஒங்களை பிடிச்ச சனியன் விலகிட்டுதுன்னு நெனச்சுக்குங்க”

“டேய் பாலு அப்படி சொல்லாதே.. தர்மாம்பா ஒன்னை வளத்தவங்க.. அவங்க இருக்கற வரைக்கும் வாயத் தொறக்காத நீயி இப்ப அவங்க இறந்துட்டாங்கன்ன உடனே வாய்க்கு வந்த படி பேசறதா? “ ஏம்மா பேசக்கூடாது.. தாயையும் பிள்ளையும் பிரித்த கிராதகி அவ. வெறும் சோறும் துணியும் வாங்கிக் கொடுத்தா ஆச்சா..”

“அது அவங்க தப்பு இல்லடா.. நான் செய்து கொடுத்த சத்தியம். அதுக்கு அவங்க என்னா பண்ணுவாங்க”

இங்கொன்றும் அங்கொன்றுமாக குழுமி இருந்த கூட்டத்திற்கு எதுவும் புரியவில்லை. ஆனால் தர்மாம்பாள் டீச்சர் இறந்து போய்விட்டார் என்று மட்டும் அனுமானிக்க முடிந்தது. அவள் வளர்த்த பிள்ளை பாலு என்பதும் புரிந்தது. ஆனால் அவன் கமலா டீச்சரை அம்மா என்று கூப்பிடுகிறான்? தர்மாம்பாள் சாவுக்கு வந்த சாதி சனம் கொஞ்சம் கமலா டீச்சர் வீட்டில் தங்கியது. கொஞ்சம் வாய் ஓட்டையான கிழம் ஒன்று கமலா சரித்திரத்தைப் புட்டு புட்டு வைத்தது.

கமலா பூப்படையும் முன்பே திருமணம் செய்விக்கப் பட்டவள். கொஞ்சம் கட்டுப் பெட்டியான வளர்ப்பு. நெஞ்சில் நிறையப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம். ஆனால் போய் சேர்ந்த இடம் கொஞ்சம் வக்கிரமான இடம்.

தன்னை மறந்து கமலா பாடும்போதெல்லாம் கடிந்து கொள்வார்கள் மாமியார் வீட்டில்.. இதென்ன தாசி வீடா நாள் முச்சூடும் பாட்டும் கூத்துமா இருக்கறதுக்கு?

கமலா பூப்படைந்த நாள் அவள் வாழ்க்கையிலே ஒரு திகிலான நாள். கொல்லைப் புறக் கதவிற்கு அருகில் ஒரு பழைய சாமான்கள் வைக்கும் அறையில், சன்னலில்லாத இருட்டு அறையில் மூன்று நாட்கள் அவளை வைத்து பூட்டிவிட்டார்கள். வெளிச்சம் துளிக்கூட இல்லாத அறை. சாப்பாடு தையல் இலையில் வைத்து தரப்படும். கூடவே மண் குவளையில் தண்ணீர்.

நான்காம் நாள் எண்ணை தேய்த்து குளிப்பாட்டினாள் அந்தக் கிராமத்து மருத்துவச்சி கிழவி. இரவு அவள் வலியைக்கூட உணராமல் அவள் மேல் மூர்க்கமாகப் பாய்ந்தான் அவளை விட பத்து வயது மூத்த அவளது புருசன். அவன் அபார சத்து கொண்டவனாக இருந்தான். அவனது முதல் தாக்குதலே அவளை சூலுற வைத்தது. ஏற்கனவே ஒல்லிக்குச்சி உடம்பு, கூடவே கர்ப்பத்தினால் ஏற்படும் ரத்த சோகை சேர்ந்து அவள் முகமும் உடலும் வெளிறிப் போனது. அதனாலேயே அவளது புருசனுக்கு அவளைப் பிடிக்காமல் போனது.

அவள் மீது சந்தேகக் கணைகளைத் தொடுத்து அவள் பிறந்த வீட்டிற்கே அனுப்பி விட்டார்கள் அவளது மாமியார் வீட்டுக்காரர்கள். அதன் பின் ஓரிரு மாதங்களில் அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டே ஓடிப் போனார்கள்.

கமலா டீச்சருக்கு பிறந்தவன்தான் பாலு. அவன் பிறந்த பின் அவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பினாள். ஆனால் அவள் பிறந்த வீட்டுக்காரர்கள் அவளுக்கு தைரியம் கொடுத்தார்கள். அவள் குழந்தை அவளுக்கு ஒரு தடையாக இருக்கக் கூடாதே என்று தூரத்து சொந்தமான தர்மாம்பாளிடம் பாலுவைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார்கள்.

தர்மாம்பாள் அப்போதே கணவனை இழந்திருந்தாள். பள்ளி ஆசிரியையாக இருந்தாள். அவளுக்கும் ஒரு பிடிப்பு தேவைப்பட்டது. ஒரு நிபந்தனையுடன் அவள் பாலுவை ஏற்றுக் கொண்டாள். அவள் மூச்சு அடங்கும் வரை பாலுவைப் பார்க்க கமலா முயலக் கூடாது. கமலாவிற்கு வேறு வழி தெரியவில்லை. ஒப்புக்கொண்டாள்.

தர்மாம்பாள் இறக்கும் தருவாயில்தான் பாலுவிடம் கமாலாவைப் பற்றிய உண்மையை சொல்லியிருக்கிறாள்.

இப்போது கமலாவும் பாலுவும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். பாலு பெரிய படிப்பு படித்து வேலைக்குப் போகிறான். ஆனாலும் வழக்கம்போல கமலா டீச்சர் எட்டு மணிக்கு வேலைக்குச் செல்ல தவறுவதில்லை. சனி ஞாயிறு கிழமைகளில் பாட்டும் ஜதியும் கேட்பது நிற்கவேயில்லை. பாலு தன் அப்பாவைத் தேடும் முயற்சிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவன் உயிரோடு இருக்கிறானா என்பதே கண்டறியவேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் கமலா டீச்சர் தலை நிறைய மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு, வட்ட சிவப்பு சாந்துப் பொட்டு வைத்துக் கொண்டு காட்சி தருகிறாள். இப்போதெல்லாம் அவள் முகத்தில் சிரிப்பு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கிறது. அவளும் கொஞ்சம் பூசினாற்போல்தான் ஆகியிருக்கிறாள்.

5. அபிராமி அற்புத சுந்தரி

ரெட்டியாரின் ஒண்டுக்குடித்தன வீடுகளுக்கு முன்வீடு யாதவர்கள் வீடு. பசு மாடுகளும் எருமை மாடுகளும் வைத்து அமோகமாகப் பால் வியாபாரம் நடந்த காலம் அது. அப்போது அரசு பால் பண்ணையிலிருந்து கண்ணாடி பாட்டில்களில் பால் வரும். நீல/சிகப்பு கோடு போட்ட தகடு மூடி வைத்து பால் நிரப்பப் பட்டிருக்கும். தகர மூடிகளை எடைக்கு வாங்கிக் கொள்ள பழைய தகர வியாபாரி காத்திருப்பார். ஆனாலும் கறந்த மாட்டுப்பாலின் மவுசு போகாத காலம் அது.

யாதவர்கள் வீட்டில் நான்கே அடி உயரம் இருந்த நந்தன் கடைக்குட்டி. அவனுக்கு முன்னால் இரண்டு ஆண் பிள்ளைகளும், மூன்று பெண் பிள்ளைகளும் பால்காருக்கு உண்டு. பால்கார் வயசாளி போல தோற்றம் தருவார். ஆனாலும் அவர் பனிரெண்டு எருமைகளையும் அதற்கு ஈடான பசுக்களையும் ஒற்றை ஆளாக தீவனம் வைத்து, பால் கறந்து, மேய்ப்பது பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். பால்காரின் மனைவி வெள்ளையம்மா பேருக்கு ஏற்றார்போல் வெள்ளையாக இருந்திருக்க வேண்டும். இப்போது அவள் அவ்வளவு வெள்ளையாக காட்சி தரவில்லை. வயதின் சுருக்கங்கள் அவள் முகத்தை மேலும் இருட்டாக்கி இருந்தன. அவளுக்கு எப்படியும் அறுபது வயதிருக்கும். பெரிய தோடு அணிந்திருப்பாள் காதுகளில். அவள் முழங்கைகளில் ஏதோ பச்சை குத்தியிருக்கும். அவளுக்கு நந்தன் என்றால் கொள்ளை பிரியம்.

பால்கார் வீட்டில் இரண்டு குடித்தனம் இருந்தது. அதில் ஒன்றில் சினிமாதுணை நடிகை இருந்தாள். இன்னொன்றில் அருள் வாக்கு சொல்லும் ஒரு பெண்மணி குடியிருந்தாள். அவளது அருள் வாக்கு அந்தப் பகுதியில் மிகப் பிரபலம். அபிராமி உபாசனை செய்து வந்ததால் அவள் இயற்பெயரை யாரும் அறிந்திருக்கவில்லை. அருள் வாக்கு அபிராமி என்றே அவள் அழைக்கப் பட்டாள்.

நந்தன் பிறந்த முன்று ஆண்டுகள் வரை அவன் ஏதும் பேசவில்லை. அவன் நான்காவது வயதை அடைந்த போதுதான் அபிராமி அந்த வீட்டிற்கு குடிவந்தாள். அவளது பக்தர்கள் கூட்டத்தைக் கண்ட பால்காரி தன் மகனின் பேசாத் தன்மையை அவளுக்கு தெரிவித்தாள்.

அபிராமி அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள்.

“ஏய் சொல்றன் கேட்டுக்க.. போன சென்மத்துல உன் மவன் ஒரு பொட்டப் பொண்ணை நாசம் பண்ணிட்டு, அவளை சாவடிச்சு பாழுங்கிணத்துல தூக்கிப் போட்டுட்டான். அதன் வெனைதான் அவனை இப்படி ஆட்டுது. ஊமைப் பொண்ணையோ இல்ல பேச்சு சரியா வராத ஒரு பெண்ணையோ அவனுக்கு கட்டி வைக்கிறேன்னு வாக்கு குடு. ஆறு மாசத்துல தானா சரியாயி பேச ஆரம்பிச்சுடுவான்” நான்கு வயசு நந்தனுக்கு பேச்சு வரவேண்டுமென்ற ஆசையில் பால்காரி வேகமாக தலையசைத்தாள். ஐந்தாவது வயதில் நந்தன் பேச ஆரம்பித்தான். ஆனாலும் அவனது பேச்சு ஒரு வித மழலையாகத்தான் இருந்தது. அதற்கும் காரணம் சொன்னாள் அபிராமி.

“ஒரு பொண்ணை நாசம் பண்ணானில்ல உம் பையன். அப்ப அவளோட அவ வயத்துல கொழந்தையும் இருந்தது இல்ல.. அதான் உன் பையன் தெளிவில்லாம பேசறான்”

பால்காரி அதையும் நம்பினாள். நாசம் பண்ணவுடனே எப்படிடி கொழந்தை வரும்னு அப்பவே கேட்டிருந்தாள்னா விசயம் வேரு பிடிச்சிருக்காது.

நந்தன் பதினாறு வயது நெருங்கும்போதுதான் அபிராமி அம்மாளுக்கு ஒரு குடும்பம் இருப்பது தெரிய வந்தது. நெல்லைச்சீமையிலிருந்து அவர்கள் ஒருநாள் விடியலில் வந்திறங்கினார்கள். அபிராமி அம்மாளின் புருசன் குடுகுடுப்பைக்காரனைப் போல் கலர் கலராக உடை அணிந்து கொண்டிருந்தான். அவன் கையைப் பிடித்தபடி பதினான்கு வயதில் துடிப்பாகவும் களையாகவும் ஒரு இளம் பெண் இருந்தாள். தாமிரபரணி தண்ணீரின் ஊட்டம் அவள் உடம்பில் செழுமை கூட்டியிருந்தது. திரட்சியான மார்பகங்களுடன் அவள் “திண்” என்று இருந்தாள். இன்னும் தாவணி போட ஆரம்பிக்கவில்லை என்பதால் அவளது பாவாடை சட்டை அவளது அழகை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது.

அவள் அணிந்திருந்த உடை கொஞ்சம் வினோதமாக இருந்தது. ஆண்களைப் போல் காலர் வைத்த சட்டை அணிந்திருந்தாள். ஆனாலும் ஆண்களைப் போல் முழுதாக கீழ் வரையிலும் பித்தான்கள் அதில் இல்லை. மேலே இரண்டோ மூன்றோ பித்தான்கள்தான். அவள் கழுத்து வரையிலும் பித்தான்களை அணிந்திருந்தாள்.

அவளது வயிறு லேசாக புடைத்துக் காணப்பட்டது. அதனாலேயே அவளது பாவாடை அவளது திரண்ட கால்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு தவித்தது. அவளது ஆரோக்கியத்தை பறை சாற்றும் விதமாக அவளது புட்டம் அகன்று காணப்பட்டது. பதினான்கு வயதில் அவள் ஒரு சிற்றானைக் குட்டி போலக் காட்சியளித்தாள்.

“அன்னலட்சுமி “என்று அவளை வாஞ்சையோடு அழைத்தாள் அபிராமி அம்மாள். அன்னம் என்பது அவளது சுருக்கப்பட்ட செல்லப் பெயர். அவளது உருவத்திற்கு அவளுக்கு ஆனை லட்சுமி என்றே பெயர் வைத்திருக்கலாம் என்று அங்குள்ளோர் பேசிக் கொண்டனர். அவள் அரைப்படி சோற்றை உள்ளே தள்ளுவதைப் பார்த்தவர்கள் பெயர் பொருத்தம் பற்றி சிலாகித்தனர். நந்தன் வெளியூரில் இருக்கும் அத்தை வீட்டிற்கு சென்ற நேரத்தில்தான் அன்னலட்சுமி சென்னையில் தரை தட்டினாள். அவள் காலை உணவாக பத்து இட்லிகளை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் ஒரு காலைப் பொழுதில் நந்தன் வீடு திரும்பினான். நந்தனைப் பார்த்த அன்னம் அன்னத்தையே மறந்தாள். வாயில் முழுங்காத முழு இட்லியுடன் “அவ்வா அது ஆரு‘ என்று வினவினாள்.

அவளது இட்லி அடைத்த குரலைக் கேட்ட நந்தன் வெண்தேவதைகள் புடைசூழ கனவு டூயட்டிற்கு தயாரானான். அருள் வாக்கின்படி பேச்சு சரியா வராத பெண்ணையே தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டளை அவன் மூளையில் மாறாத பதிவாக இருந்ததால் இவளே தனது மனைவி என்று முடிவு செய்து கொண்டான்.

ஊரில் அத்தைப் பெண் கோகிலவாணி அவனைக் கவர செய்த பிரயத்தனங்களையும், அதில் அவனுக்கு ஏற்பட்ட ருசியும் அவனை ஒரு புது மனிதனாகவே ஆக்கிவிட்டிருந்தது.

கோகிலவாணி கொஞ்சம் கறுப்பு. நந்தன் அம்மா போல் வெளுப்பு. அதனாலேயே கோகிக்கு அவனைப் பிடித்து போய்விட்டது. அதோடு கூட அத்தையும் “இவதாண்டா நீ கட்டிக்கப் போறவ “ என்று அடிக்கடி சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்தாள்.

“அதெல்லாம் ஆவாது. அருள்வாக்கு என்னா சொல்லிருக்கு தெரியுமா.. ஊமை இல்லன்னா பேச்சு சரியா வராத பொண்ணுதான் நான் கட்டற பொண்ணாம்”

அத்தைக்காரி சென்னையில் சொந்த இடம், மாடு என இருக்கும் மருமவனை வளைத்துப் போட மகளின் நாக்கை வெட்டி ஊமையாக்கக் கூட தயாராக இருந்தாள்.

கோகிலா பதினைந்து வயதுக்காரி. சமைந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தது. கிராமத்து வயல் வேலை, நெல் குத்துதல், மாவு அரைத்தல் என அவளது உடம்பு கோயில் தூண் போல் இருந்தது. அவளைச் சிற்பமாகச் செதுக்க நல்ல உளி தேடி அலைந்தாள். கிராமக் கட்டுப்பாடு காரணமாக அவள் யாரோடும் நெருங்கி பழக முடியாத அந்த நேரத்தில்தான் அத்தைக்காரிக்கு பிறந்த வீட்டு பரிசாக சேங்கன்னு ஒன்றை ஓட்டிக்கொண்டு நந்தன் வந்தான். சேங்கன்னு புது இடத்தில் பழகற வரையிலும் பத்து பதினைந்து நாள் அவன் தங்குவதாக ஏற்பாடு.

நான்கடி உயரம் இருந்த நந்தன் உயரக்குறையை ஈடு கட்ட கரணையான புஜங்களும் தொடைகளும் கொண்டு ஒரு மல்லன் போல் இருந்தான். வேட்டியை கீழ்ப்பாய்ச்சி கட்டிக் கொண்டு அவன் மாட்டுக் கொட்டடியில் வேலை செய்வதை விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கோகிலா. சாணி அள்ளுகிறேன் பேர்வழி என்று கொட்டடிக்கு கூடையுடன் வந்த கோகி கால் வழுக்கி பால் கறந்து கொண்டிருந்த நந்தன் மேல் விழுந்தாள். நிலை தடுமாறிய நந்தன் குவளையோடு மல்லாக்க விழுந்தான். உருண்டோடும் குவளையை பிடிக்க எழுந்த நந்தனும், விழுந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல், எழுந்திருக்க அனிச்சையாக ஒரு பிடிமானத்தை தேடி நந்தனின் வேட்டியைப் பிடித்த கோகியும் மறுபடியும் கீழே விழுந்தார்கள். செருகிய வேட்டி அவிழ்ந்ததும், கோகியின் குட்டைப் பாவாடை மேலேறியதும் இந்தக் கதையின் விவரிக்க வேண்டாத காட்சிகள்.

அதன்பிறகு கோகிலாவும் நந்தனும் அடிக்கடி கொட்டடியில் சந்தித்துக் கொண்டார்கள். ஒரு மருத்துவ ஆராய்ச்சி மாணவரைப் போல் உடற்கூறு ரகசியத்தை இருவரும் அறிந்து கொண்டார்கள்.

அருள் வாக்கு தெய்வக்குத்தம் என்று நந்தன் தன் அச்சத்தைச் சொல்ல, அடுத்த நாளிலிருந்து கோகி குழறி குழறி பேச ஆரம்பித்தாள்.

“புள்ள ஏதோ பாத்து பயந்துருச்சி” என்று ஆத்தாகாரி வேப்பிலை அடிக்க, நந்தன் சென்னை போகும் நாளும் வந்தது.

அப்பனிடம் பேசி கோகிலாவைக் கூட்டி வரவேண்டும் என்ற முடிவிலிருந்த நந்தன் அன்னலட்சுமியின் குரலால் ஆடிப்போனான்.

அன்னமா கோகியா என்ற மனக் குழப்பத்தில் இருந்த அவனுக்கு ஆறுதலாக வந்தது செய்தியொன்று.. கோகிக்கு தூரத்து மாமன் உறவில் பையன் பேசி முடித்தாகிவிட்டது. தைமாசம் திருமணம். னி தனக்கு அன்னம் மட்டும்தான் என்று நந்தன் முடிவு செய்த நேரத்தில் அபிராமி அம்மாள் தன் குடுகுடுப்பை புருசனை வீட்டை விட்டு விரட்டி அடித்தாள். துக்காராம் தெருவில் தோட்டிச்சி ஒருவளுடன் அவன் ரகசிய குடும்பம் நடத்துவது அவளுக்கு தெரிய வந்ததுதான் காரணம்.

பால்காரி தன் மகனின் விருப்பத்தை அபிராமி அம்மாளிடம் தெரிவிக்க, தெய்வக்குத்தம் அது இது என்று கொஞ்சம் பிகு செய்துவிட்டு அவள் குடியிருந்த போர்ஷனை மகள் பெயருக்கு கிரயம் பண்ணிக் கொடுத்தால் பரிகாரம் செய்து கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்தாள்.

ஒரு சுப முகூர்த்தத்தில் மூன்றாவது பாளையத்தம்மன் கோயிலில் தாலி கட்டி கல்யாணம் நடந்தது. முதல் இரவில் நந்தன் ஆசையோடு உள்ளே நுழைந்தபோது முழு அதிரசத்தை வாயில் அடைத்தபடி ‘ வாழ்ங்க “என்றாள் அன்னலட்சுமி.

6. சர்வலங்கார பூஷணி சுந்தரி

மேடலி முதல் தெருவில் பல ஒண்டுக் குடித்தன வீடுகள் உண்டு. அவைகளில் ஒன்றின் பின் கட்டில் மாட்டுத் தொழுவத்தினை ஒத்த ஒரு குடியிருப்பில் குடியிருந்தது ஒரு கன்னடக் குடும்பம். வீட்டு எசமானன் பெயர் வெங்கோபராவ். அவரது மனைவி பெயர் பூரணி. வெங்கோபராவ் கோபம் வந்து யாரும் பார்த்ததில்லை. அவ்வளவு சாந்த சொரூபி. ஆனால் பூரணி நேர் எதிர். எதிலும் பட படவென்று வெடிக்கும் எண்ணையிலிட்ட கடுகு அவள். அவள் ஒரு Mrs. Perfection. அதனாலேயே அவர்கள் வீட்டில் அடிக்கடி சச்சரவு நடக்கும். பல நேரங்களில் ராவ்தான் மாட்டிக் கொள்வார். ராவின் குரல் கொஞ்சம் சன்னமாக இருக்கும். ஏறக்குறைய பெண்மை சாயல் கொண்ட குரல். அதற்கு அவரது அம்மா_ அவரை குழந்தைகள் அஜ்ஜி என்று கூப்பிடுவார்கள்_ ஒரு காரணம் சொல்வார்கள். சின்ன வயதில் தேங்காய் பத்தையைத் திருடி அவசரமாக விழுங்கியபோது அது தொண்டையில் மாட்டிக் கொண்டதாம். அதிலிருந்து குரல் கம்மிப் போய்விட்டதாம்.

ஏற்கனவே சன்னமான குரல், பூரணியின் தாக்குதலால் சின்னா பின்னமாகி சிதிலமடையும். உள் நுழைந்து பார்த்தால் உப்பு பெறாத விசயமாக இருக்கும். எண்ணை புட்டியோ, பவுடர் டப்பாவோ, கழற்றப்பட்ட சட்டையோ அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அது அது அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் பூரணி அதிக அக்கறை கொண்டிருந்தாள்.

பூரணிக்கு இரண்டு குழந்தைகள். இரண்டும் ஆண் பிள்ளைகள். இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். ஆளுமை உள்ள பெண் நடத்தும் தாம்பத்தியத்தில் ஆண் பிள்ளைகளே பிறக்கும் என்பதும், பூரணிக்கு அவ்வாறே நிகழ்ந்திருக்கிறது என்றும் பரவலாக பேசப்பட்டது.

பூரணி எல்லாக் காரியங்களிலும் நேர்த்தியைக் கடைபிடிப்பவள். இத்தனைக்கும் அவள் அதிகம் படித்தவளல்ல. அவளுக்கு வாழ்க்கை பற்றிய பல நுணுக்கமான புரிதல்கள் இருந்தன. அவள் ஒன்றும் பேரழகியல்ல என்பதை அவள் அறிந்தே இருந்தாள். அவளுடைய கணவனும் ஆணழகன் அல்ல என்றாலும், ஒரு கௌரவமான வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் புருச லட்சணம் மிக்கவன்.

அவனை தன் ஆளுமையில் வைத்திருப்பதும், அவன் உடல் மனம் சார்ந்த எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்றுவதும் தன் தலையாயக் கடமைகளில் ஒன்று என்று அவள் உணர்ந்தே இருந்தாள்.

பூரணியின் புருசன் ராவ் வீடு திரும்ப ஆறு மணியாகிவிடும். சென்னப்பட்டணம் என்று அப்போது வழங்கப்பட்டது பாரிமுனையும் அது சார்ந்த பகுதிகளும்தான். மின்சார ரயில் பயணித்து அவன் அலுவலகம் போவதும், ஆலையிலிட்ட கரும்பாய் அவன் பிழிந்து வீடு திரும்புவதும் அன்றாட அவலங்களில் ஒன்று. அவன் வரும்போது பூரணி வாசற்படியில் காத்திருப்பாள். அவள் முகம் பளிச்சென்று இருக்கும். கண்களில் மை தீட்டப்பட்டிருக்கும். காதருகில் இரு முடிக்கற்றைகள் பிறைச் சந்திரனைப் போல் சுழித்து விடப்பட்டிருக்கும். தினமும் துவைத்து, காயவைத்து, மடித்து வைக்கப்பட்டிருக்கும் சாதாரண மதுரைச் சுங்கிடிப் புடவை அதிலும் இரண்டு மூன்று நிறங்கள் தான், கறுப்பு, சிகப்பு, பச்சை என_ அவள் உடம்பில் சிக்கென்று பொருந்தி இருக்கும். இடுப்புக்கு கீழ்வரை உள்ள கூந்தலை பின்னலிட்டு வாழைநார் கொண்டு கட்டியிருப்பாள். லேசான பவுடர் பூச்சும், உதட்டுச் சாயம் இல்லாமலே சிவந்த உதடுகளும் அவள் அழகை மேலும் மெருகூட்டும். கட்டுப்பெட்டியான சாத்திரங்களும், பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும் ஊறிப்போன இனத்தில் பிறந்தவள் பூரணி. அதனால் கணவன் தவிர பிறர் பார்க்கக் கூடாது என தன் அழகைப் பூட்டி வைத்திருப்பாள். ஒன்பது முழச் சேலை அவள் உடம்பைச் சுற்றியிருக்கும். அதை முழுவதுமாக கழுத்துவரை போற்றி மூடியிருப்பாள். அவர்கள் வீட்டில் வேலைக்காரி கிடையாது. மொத்த வேலையையும் அவளே செய்வாள். கல்லுரலில் இடுப்பில் சொருகிய சேலையோடு அவள் மாவாட்டும்போது, அவளது வெண்மை நிறத் தொடைகளின் மேல் கிறங்கி மயங்கியிருப்பார் ராவ். ஒரு பாஸ்ஞ்சர் வண்டியின் தாள கதியோடு அவள் தொடைகள் மாவாட்டுவதற்கு ஏற்ப அசையும்போது கண்கள் சொக்கும். மிதமான உறக்கத்தில் தலை நழுவி தொடைகளுக்கிடையில் விழும். மாமியார் கிழவி தூங்குவதை உறுதி செய்து கொண்டபின் லேசாக கணவன் தலையை திருப்பி தொடைகளால் நசுக்குவாள் பூரணி. அடுத்த ஐந்தாவது நிமிடம் கௌபீனத்தை மாற்ற எழுந்து ஓடுவார் ராவ். பூரணி இதையெல்லாம் யாரிடமிருந்து கற்றாள் என்பது தெரியாது. கணவனுக்கான காமம் அவளுக்கு இயல்பாக வந்தது. ஆனாலும் லஜ்ஜையற்ற காமம் அல்ல அது. நாட்கணக்கில் ஊடல் காரணமாக அவள் ஒதுங்கியே இருந்ததுண்டு. ராவ் வாடி துடித்துப் போகும் வரை அவள் சமாதானமாக மாட்டாள். சரணாகதி அடைந்த பின் கிடைக்கும் பேரின்பம் ராவை அடிக்கடி ஊடல் ஏற்படுத்தத் தூண்டும். அவளது பிள்ளைகள் இருவரும் கல்லூரிக்கு சென்று படிக்கும் பிராயத்தில் ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு போலிஸ் வந்தது. பூரணியை கைது செய்து அழைத்துப்போனது. அவள் செய்த குற்றம் தன் கையாலேயே தன் கணவனைக் கொலை செய்ததுதான்.

ராவின் பிரேத பரிசோதனையில் ஒரு உண்மை வெளிப்பட்டது. அவன் பால்வினை நோயினால் தாக்கப்பட்டிருந்தான்.

தன்னை மீறிய பெண்கள் தொடர்பு தன் கணவனுக்கு இருந்ததும், அவன் பால் வினை நோயால் தாக்கப்பட்டதும் பூரணிக்கு ஆத்திரமூட்டியிருக்க வேண்டும்.

நேர்த்தியும் ஒழுக்கமும் கொள்கைகளாகக் கொண்டு வாழ்ந்த பூரணிக்கு தன் கணவனின் ஒழுக்கக் கேடு தாங்க முடியாத ஆத்திரத்தைத் தந்திருக்கலாம். அது கொலை வெறியாக மாறி அவனைக் கொல்லும் அளவிற்கு போனது என்று செய்தித்தாளில் போட்டார்கள்.

திட்டமிட்ட கொலை அல்ல.. அது ஒரு உணர்வு ரீதியான செயல் என்பதால் பூரணிக்கு பத்து வருடம் கடுங்காவல் தண்டனை விதித்தது கோர்ட்.

ராவின் அரசாங்க ஓய்வூதிய தொகையும், வைப்பு நிதியும் அஜ்ஜியை தன் பேரன்கள் இருவரையும் படிக்க வைக்க உதவிற்று.

பூரணி நல்லொழுக்கம் காரணமாக தண்டனை குறைக்கப்பட்டு ஏழு வருடங்களில் விடுதலையானாள். வீட்டிற்கு வந்த இரவு அவள் இறந்து போனாள்.

7. ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி

மேடலி தெரு வாசிகள் ஒரு வினோதக் கலவையானவர்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கம். கொஞ்சம் மேட்டுக்குடி, கொஞ்சம் வறுமைக்கோட்டுக்கு வெகு கீழே. அதனால் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையில் ஒன்றிரண்டு சேட்டுக் கடைகள் இருந்தன. முன்னாலால் சேட் பன்னாலால் சேட் என்று பெயர் பலகைகள் சொல்லும்.

‘அரைச் சவரத்த வாங்கிக்கினு அம்பது ரூபா நீட்டறான் சேட்டு”

“யாரு முன்னாலா பன்னாலாலா? “

“எல்லாம் அந்த பன்னாடை லால்தான்”

வறுமை எக்காலத்திலும் ஏழைகளின் நகைச்சுவை உணர்வைப் போக்குவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

முன்னாலாலின் மகன் கமல் அப்போதே பதினெட்டு வயது இளைஞனாக இருந்தான். அவனுக்குத் தொழிலில் ஆர்வம் வரவேண்டும் என்று பெரிய சேட் வீட்டிற்குச் சென்று விடுவார். வீடு கடைக்குப் பின்புறமே இருக்கும். சேட்டு மதிய உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டார் என்பதற்கு அடையாளமாக பித்தளை டிபன் பாக்ஸ்கள் கழுவி பள பளவென்று துடைக்கப்பட்டு கடை வாசலில் படியோரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

செந்தாமரை மேடலி முதல் தெருவில் இருந்த மல்லிகாவின் மகள். மல்லிகாவின் புருசன் கை ரிக்ஷா ஓட்டுபவன். இரண்டு ரூபாய்க்கு மாம்பலம் பேருந்து நிலையத்திலிருந்து பனகல் பார்க் தாண்டி இழுக்க வேண்டி இருக்கும். கொஞ்சம் குண்டான பயணிகளை அவன் மூச்சிழுத்து இழுக்கும்போது நெஞ்சுக்கூடு வெளியே துருத்திக் கொள்ளும். இரவு கைக்காசை மல்லிகாவிடம் கொடுத்து விட்டு எல்லாமே ச்¢ல்லறைக் காசாகத்தான் இருக்கும் – அவளிடம் இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு மூன்றாவது தெருவுக்கு சாராயம் குடிக்கப் போவான். மல்லிகாவின் அங்கீகாரத்தோடுதான் அவனது குடிப்பழக்கம் தொடர்ந்தது. அவனால் ஒரு பிரச்சனையுமில்லை. அவனுக்கான சோறு அலுமினியத் தட்டில் வைக்கப்பட்டு, வாழை இலையால் மூடப்பட்டு, அது பறந்து விடாமலிருக்க ஒரு கல்லும் மேலே வைக்கப்பட்டு, குடிசையின் விளக்குப் பிறையில் வைக்க்ப்பட்டிருக்கும். காசு தீர்ந்தவுடன் அவன் கமுக்கமாக வந்து சோற்றைத் தின்று விட்டு, அடிபம்பில் தண்ணீர் அடித்துக் குடித்துவிட்டு படுத்து விடுவான். படுத்த உடன் தூங்கியும் போவான். வாடிக்கைக் காரர்க்ளின் பிரசவ அவசரத்திற்கோ, ஆஸ்பத்திரி அவசரத்திற்கோ அவன் எழுப்பப்பட்டால், உடனே முழிப்பு வந்துவிடும் அவனுக்கு. கமல் கடையிலிருந்த ஒரு அசந்தர்ப்பமான நேரத்தில் செந்தாமரை கால் சவரன் மூக்குத்தியை அடகு வைக்க அங்கு வந்தாள். வெள்ளிக்கிழமை மதிய நேரம். தலைக்குக் குளித்து, மஞ்சள் பூசி, பெரிய பொட்டு இட்டு, மஞ்சள் ரவிக்கையும் சிகப்பு தாவணியும் அணிந்து அவள் பிரச்சன்னமானபோது அம்மன் வந்தது போல் ஆகிவிட்டது கமலுக்கு. அருள் வாக்கு சொல்லும் அளவிற்கு ஆடிப் போய்விட்டான்.

சிறு வயதிலிருந்தே அந்தப் பகுதியில் அவன் வளர்ந்தான் என்றாலும், அப்பகுதி சிறுவர், சிறுமிகளுடன் சேர விட்டதில்லை அவன் தந்தை. குதிரை வண்டியைப் போல பொட்டி வைத்திருக்கும் நீலக்கலர் சைக்கிள் ரிக்ஷாவில் அவன் பள்ளிக்குப் போவான். மாலை அதே வண்டியில் வீடு. வீட்டுக்கு உள்ளேயே விளையாட்டு, பாடம், படிப்பு எல்லாம். வருடம் ஒரு முறை ஜகன்னாத் யாத்திரை போகும்போது வடநாட்டுக் கிராமத்திற்குப் போய் வருவார்கள். வெளியுலகம் என்பது அவனுக்கு அப்போதுதான் தெரியவரும்.

வெண்ணைை யையும் வெண்மை நிறப்பெண்களையும் பார்த்துப் பார்த்துச் சலித்த அவன் கண்களுக்கு கறுப்பும் மாநிறமும் மயக்கத்தையே தந்தன. அவன் பார்த்த ஆண்களும் (கறுப்பாக) கட்டுமஸ்தாக இருந்தார்கள். ஆக ‘வலிமையின் நிறம் கறுப்பு’ எனும் புதுமொழியே அவன் மனதில் கல்வெட்டு எழுத்துக்களாய் பொறிக்கப்பட்டது.

செந்தாமரை எப்பவும் அவன் கண்களில் படுபவள்தான். ஆனால் இன்று போல அவள் எப்போதும் இருந்ததில்லை என்று நினனத்தான் கமல். இயற்கையாக கொஞ்சம் கூச்ச சுபாவம் என்பதால் அவள் கடையை நெருங்க நெருங்க அவனால் அவளைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. மெல்ல கண்களைத் தாழ்த்த்¢க் கொண்டு கணக்குப் புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தான். செந்தாமரைக்கு அவன் கவனத்தை எப்படித் திருப்புவது என்று தெர்¢யவில்லை. எப்படிப்பட்ட ஆம்பளையாக இருந்தாலும் ஒற்றைச் சொல்லில் “ தே தள்ளு “ என்று கூறும் இயல்பினள் அவள். ஆனால் இன்று அவளுக்குக் குரல் கண்டத்தோடு ஒட்டிக் கொண்டதுபோல் வெளியே வர மறுத்தது. லேசாக செருமினாள் தாமரை. மெல்ல தலையைத் தூக்கினான் கமல்.

என்ன வேணும் ? எனக் கேட்க நினைத்தான். குரல் பிரிய மறுத்தது. அவனும் லேசாகச் செருமிக் கொண்டான். பாட்டுக் கச்சேரியில் மிருதங்கமும் கடமும் ஒன்றையடுத்து ஒன்று வாசிப்பது போல் இரு செருமல்களும் தொடர்ந்ததில் இருவருக்கும் சிரிப்பு வந்தது. முதலில் பொத்திகிட்டு வந்தது ச் ¢ரிப்புதான். அப்புறந்தான் எல்லாமே பத்திகிச்சு. மூக்குத்தியை எடை போடாமல் முப்பது ரூபாய் கொடுத்துவ்¢ட்டு, மூக்குத்தியைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான் கமல். “சீட்டு “ என்றாள் தாமரை. “ நீயே எழுதிக்க “ என்பது போல் ரசீது புத்தகத்தைத் தள்ளினான் கமல். ‘கால் சவரன் மூக்குத்தி ‘என்று எழுதி ‘தாமரை ‘ என்று கையெழுத்திட்ட ரசீதைக் கிழித்து அவளிடம் தந்துவிட்டு நகலை எடுத்து பையில் வைத்துக் கொண்டான்.

மறுமாதம் முதல் வாரத்தில் அவள் முப்பது ரூபாய் தந்ததும், அவன் மூக்குத்தியைத் திருப்பித் தந்ததும் பெரிய சேட்டுக்குத் தெரியாமலே நடந்தது. பின்வந்த நாட்களில் மூக்குத்தி இல்லாமலே முப்பது ரூபாய் பணமாக மாறும் வித்தை புரியாமல் விழித்தாள் மல்லிகா.

“மூக்குத்தி இல்லாம ஒன் மொகம் நல்லால்லியாம், கமல் சொல்லிச்சு அதான் அதே பணம் தருது மூக்குத்தியை வைத்து தனக்கு காது குத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மல்லிகா அறியவில்லை. மல்லிகாவின் தம்பி சின்னதுரை எண்ணூர் பக்கம் லாரி ஓட்டுபவன். யதேச்சையாக மாம்பலம் வந்தவன், தாமரையைப் பார்த்து அசந்து போனான். அடுத்த நாள் அரை சவரன் தாலியும் அரக்குப் புடவையும், தட்டு நிறையப் பூவும் லட்டுமாக அவன் பரிசம் போட வந்த போது, தாமரை கலங்கிப் போனாள். கமல் தன் காதலைத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பெர்¢ய சேட்டிடம் சொன்னான்.

“பேட்டா தாமரை லடுக்கி ரோட்டி செய்யுமா? சப்ஜி செய்யுமா? ஜகன்னாத் யாத்ரா போனா பஜன் செய்யுமா? ஷாதி பண்ணிக்கிட்டா தகராறுதான் செய்யும். பாகல் மாதிர் பேசாதே. சுப்ரஹோ!” ஒரே அதட்டலில் அடங்கிப் போனான் கமல். சின்னதுரை பரிசம் போட்ட ஒரே வாரத்தில் தாமரையைக் கல்யாணம் செய்து கொண்டு எண்ணூருக்குப் போனான்.

திருமணமான முன்றாவது மாதத்தில் லாரி விபத்தொன்றில் சின்னதுரை காலமானான். அப்போது தாமரை முழுகாமல் இருந்தாள். மல்லிகா தன் மகளை மறுபடியும் தன் வீட்டிற்கே கூட்டி வந்து விட்டாள்.

தாமரைக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. செக்க செவேலென்ற நிறத்தில் அது இருந்தது. ஆனால் அதற்குச் சின்னதுரை சாடை சிறிதுமில்லை.

பெரிய சேட்டின் மனைவி தாமரையின் குழந்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். அவளுக்குத் தெரிந்த சாடையில் அது இருந்தது. அது கமலின் குழந்தைப் பருவ சாடை!

8. மென்பொருள் சுந்தரி பத்மலோசனி

ஒரு அறுபது வருடங்களுக்கு முன்னர் மாம்பலம் என்றழைக்கப்பட்டதெல்லாம் இப்போது பழைய மாம்பலம் என்று அழைக்கப்படும் மேற்கு மாம்பலம்தான். இன்று ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் செய்யும் உஸ்மான் சாலை அப்போது நாய் நரிகள் ஓடும் புதர் காடாக இருந்ததாக ஏரியா பெருசுகள் சொல்லக் கேள்வி. ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன் ஓரளவு முன்னேற்றம் வந்து விட்டது தி. நகருக்கு. புதிதாக பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின் சந்தடிகள் கூட ஆரம்பித்தன. மேடலி சாலையில் இருந்து பிரியும் கில்ட் சாலையில் இடது பக்கமாக ஒரு முட்டு சந்து பிரியும். அங்கு வறுமைக்கோட்டுக்கு வெகு கீழே உள்ள குடும்பங்கள் சில உண்டு. அங்கு இருந்த குடும்பங்களில் பிராம்மண குடும்பங்களும் உண்டு. அப்படிப்பட்ட குடும்பம் ஒன்றில் பிறந்தவள் தான் பத்மலோசனி. பின்னாளில் லோசனை எடுத்துவிட்டு பத்மினி என்றே அவள் போட்டுக்கொண்டாள்.

பத்மா கொஞ்சம் கவர்ச்சியான முகம் கொண்டவள். கூரிய மூக்கும் குவிந்த உதடுகளும் அவள் முகத்தை இன்னும் எடுப்பாக்கியது. இதெல்லாம் அவள் வாயைத் திறக்கும் வரைதான். அவள் பல் வரிசை அவ்வளவு வரிசையில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக பற்கள் ஏறுமாறாக இருக்கும். அதை அவள் அறிந்தே இருந்தாள். அதனால் வாய் விட்டு சிரிப்பதேயில்லை. எல்லோர்க்கும் புன்னகைதான். அது அந்தக் காலத்தில் ஒரு மோனோலிசா புன்னகையைப் போல் பார்ப்பவரை எல்லாம் மயக்கியது. பத்மாவிடம் எத்தனை தாவணிகள் இருந்தது என்று யாருக்கும் தெரியாது. அவள் எப்போதும் ஒரு வெங்காயக் கலர் சருகு தாவணியே அணிந்திருப்பாள். அதுதான் லேசான காற்றில் கூட படபடத்து அவளது முன்னழகைக் காட்டும். அவள் ஒன்றும் பெருந்தனக்காரியில்லை. ஆனாலும் அவளது சிறிய முலைகள் ஷார்ப்பாக இருக்கும். இருக்கும்படி அவள் வைத்திருப்பாள். வாசனைத்தூள் டப்பியில் வைக்கப்பட்டிருக்கும் கூரான குப்பியை அவள் ஜாக்கெட்டில் வைத்து தைத்திருப்பதாகவும், அவளுக்கு இயற்கையிலேயே கூர் கிடையாது என்றும் ஒரு பட்டி மன்றமே நடந்தது அந்நாளில்.

பத்மா எப்போதும் பனிரெண்டு மணி உச்சி வெயிலில் சிரமம் பாராது வெளியில் சுற்றுவாள். அதனாலெல்லாம் அவள் மேனி கறுத்து விடப் போவதில்லை என்பதை அவள் அறிவாள். ஏனென்றால் அவள் ஏற்கனவே நல்ல கறுப்பு. இன்னும் கறுக்க என்ன இருக்கு?

பத்மா அஞ்சா நெஞ்சினள். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் அவளது ஷ்பெஷாலிட்டி. அவள் பார்வையைத் தாங்க முடியாமல் பல பையன்கள் கண்களைத் தாழ்த்திக் கொண்டதுதான் அநேகமாக நடக்கும். சில கௌரவர்கள் பார்வையைத் தாழ்த்தாமல் வானத்தை நோக்கி திருப்பி விட்டு சூரியன் ஒளி தாங்காமல் குனிவதாகப் பாவ்லா காட்டுவார்கள்.

இந்திப் படம் ஒன்றில் ஷர்மிளா டாகுர் என்ற நடிகை விமானத்தில் போகும் காட்சியில் கழுத்தில் இருக்கும் மெல்லிய தங்கச் செயினைக் கடிப்பது போன்ற காட்சி பெரும் வரவேற்பைப் பெற்ற கால கட்டம் அது. அதற்காகவே பல முறை படம் பார்த்த இளைஞர்கள் அக்காலத்தில் உண்டு. பத்மாவும் மெல்லிய செயின் ஒன்று கழுத்தில் அணிந்திருப்பாள். அது கவரிங் என்பது விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். அதை எடுத்து லேசாக பல்லில் கடித்தபடியே உச்சி வெயிலில் அவள் அசைந்து வருவதைப் பார்ப்பதற்காகவே பலர் சந்து முனையில் தவமிருப்பார்கள். கவரிங் செயினைக் கடிப்பதே கவ்ரிங்குக்குத் தான் என்பதை அவர்கள் அறிந்தவர்களில்லை.

பத்மாவின் குடும்பம் என்னவோ கவுரவமான குடும்பம்தான். ஆனால் அவளது தந்தையார் சிவா விஷ்ணு கோயில் வாசலில் தர்ப்பை விற்று கொண்டு வரும் சொற்ப வருமானம் பத்மாவின் கற்பனைகளுக்கு ஒத்து வரவில்லை. மாவு மிஷின் போகவும், நாலணா எட்டணாவிற்கு மளிகை சாமான்கள் வாங்கவும் பத்மா கடைக்கு வரும்போது பையன் கூடவே வருவார்கள். வாசற்படி தாண்டும்வரை இழுத்து போர்த்திக் கொண்டு வரும் அவள் தெருமுனை வரும் முன் தாவணியை இறுக்கி இடுப்பைச் சுற்றி செருகிக் கொள்வாள். அவளது ஜாக்கெட்டின் உள்புறம் ஒரு கசங்கிய பத்து ரூபாய் நோட்டு இருக்கும். அதை இரண்டு விரலால் எடுக்க அவள் வெகு பிரயத்தனப்படுவாள். அப்போது விலகும் தாவணியைக் குறிவைத்து பல ஜோடிக் கண்கள் காத்திருக்கும். சிரமப்பட்டு எடுக்கும் பத்து ரூபாய் தாளை ஒரு சிகரெட்டைப் போல் சுருட்டி கையில் வைத்துக் கொண்டு அவள் கடைக்குப் போவாள். வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிய பின் நோட்டை நீட்டுவாள். வழக்கம்போல கடைக்காரர் சில்லறை இல்லை என்று மறுக்கும்போது அவள் பரிதாபமாக சுற்றும் முற்றும் பார்த்து விழிப்பாள். பையன்களின் கைகள் தங்கள் பாக்கெட்டுகளில் சில்லறைகளைத் தேடும். முந்திக் கொண்டவன் டப்பென்று சில்லறையை கடைக்காரர் கல்லா மேல் வைத்துவிட்டு பத்மாவைப் பார்த்து பெருமிதமாகச் சிரிப்பாள். பத்மாவும் தன் மோனோலிசா புன்னகையைத் தவழ விட்டு நகர்வாள். வீடு சேர்வதற்குள் பத்து ரூபாய் தாள் பழைய இடத்திற்குப் போயிருக்கும். அம்மா கொடுத்த சில்லறை சுருக்குப் பையில் சேர்ந்து இடுப்பில் செருகப்பட்டிருக்கும். இப்படி கொஞ்ச கொஞ்சமாகச் சேர்த்த பணத்தில்தான் அவள் லிப்ஸ்டிக் வாங்குகிறாள். ஸ்னோ வாங்குகிறாள். பவுடர் வாங்குகிறாள்.

கொஞ்சம் வளர்ந்தவுடன் பத்மா அம்மா துணையுடன் மகாலட்சுமி தெருவில் ஐயங்கார் மெஸ் ஆரம்பித்தாள். இன்றைய திராவிடக் கட்சியின் இரண்டாம் நிலை முன்னிலை தலைவர்களில் ஒருவர் தினமும் அங்கே ஆஜர். பின்னாளில் நடிகர் மோகன் நடித்த வெற்றிப் படம் ஒன்றில் கதாநாயகிக்கு

இணையான தோழி பாத்திரத்தில் அவள் நடிக்க காரணம் அவர்தான். எல்லாம் பழைய மோர்க்குழம்பு விஸ்வாசம்.

பத்மாவின் வாழ்வில் திருப்பம் வேறொரு ரூபத்தில் வந்தது. பிரபல இயக்குனராக இருந்து பல வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்து பின்னாளில் நகைச்சுவை நடிகராக மாறிப்போய்விட்ட ஒருவர் அவளைத் திருமணம் செய்து கொண்டார். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதனால் ஊரறிய அவரது மனைவி என்று அவளால் சொல்லிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவள் ஆசைப்பட்ட வசதிகள் எல்லாம் அவர் அவளுக்குச் செய்து கொடுத்தார். கொடியிடையுடன் இருந்த அவள் காலப்போக்கில் பக்கவாட்டில் பெருத்து போனாள். அதனாலேயே இயக்குனருக்கு அவளிடம் இருந்த மயக்கம் குறைந்து போனது. ஆனாலும் பத்மா உஷார் பேர்வழி. உடம்பு பெருக்கும் முன்பே தன் நிதி ஆதாரங்களைப் பெருக்கிக் கொண்டாள். மூன்று நான்கு குடித்தனங்களைக் கொண்ட ஒரு வீட்டை தன் பெயருக்கு வாங்கிக் கொண்டாள். இன்றும் அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அம்மாவும் அப்பாவும் இறந்து போய் அவளுக்கும் வாரிசு இல்லாமல் தனிமரமாக அவள் இருக்கிறாள். இப்போதெல்லாம் அவள் லிப்ஸ்டிக்கோ, ஸ்நோவோ, பவுடரோ போடுவதில்லை. வசதி பெருகியதாலும் ஏசி அறையிலும் காரிலும் வாசம் செய்வதாலும் அவள் இப்போது மாநிறமாக இருக்கிறாள்.

அவள் வீட்டு வரவேற்பறையில் விலை உயர்ந்த கலைப் பொருட்களுக்கு மத்தியில் நல்ல வெள்ளி ப்ரேம் போட்ட சட்டத்துக்குள்ளே கசங்கிய பத்து ரூபாய் நோட்டு ஒன்று சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

– ஜூலை 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *