திருமதி சீதாலட்சுமி ரணசிங்க…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 18, 2021
பார்வையிட்டோர்: 4,239 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாலை நேரம் – அந்த வேன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வேகமாகச் சென்றது.

உள்ளே – சீதாலட்சுமி – அரைத்தூக்கத்திலிருந்தாள். அவளுக்குத் துணையாக மாலினி அமர்ந்திருந்தாள். அழகான மாலினி சீதா லட்சுமியைத் தனது தோளில் சாய்த்து இருந்தாள். வேகமாகச் சென்று கொண்டிருந்த வேன் சட்டென நின்றது.

அது இராணுவப் பரிசோதனைப் பிரதேசமாக இருந்தது. நிறுத்தப்பட்ட வேனை நோக்கி நாலைந்து இராணுவச் சிப்பாய்கள் ஓடி வந்தார்கள், வேன் சாரதியிடம் இருவர் விசாரணை செய்ய, மற்ற இருவர் பின்னாலிருந்தவர்களிடம் வந்தார்கள். அவர்கள் சிங்களத்தில் கதைத்தார்கள்.

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எதற்காக விமான நிலையம் போகிறீர்கள்?”

மாலினியே சிங்களத்தில் பேசினாள்.

“நாங்கள் தலவாக்கலையிலிருந்து வருகிறோம். இவர் என்னுடைய மாமி. இவருடைய மகன் லண்டனிலிருந்து இன்று வருகிறார். அவரைக் கூட்டிவரப் போகிறோம்….”

“உமது பெயரென்ன…?”

“மாலினி பியதாச…”

“உமது மாமியின் பெயர்….?”

“சீதாலட்சுமி…”

இராணுவ சிப்பாய் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்…

“நீர் சிங்களப் பெண்தானே…”

“ஆமாம்…”

“அந்தப் பெண்மணி தமிழா…?”

“ஆமாம்…”

“பொய் சொல்ல வேண்டாம்… தமிழ்ப் பெண்ணான அவர் எப்படி உமக்குச் சொந்தமாக முடியும்…?”

“பேசும் மொழி வேறாக இருந்தாலும் நாங்களெல்லாம் மனிதர்கள் தானே…!”

“வீண் விதண்டாவாதம் பேச வேண்டாம்…எங்களுக்கு உம்மீது சந்தேகமாக உள்ளது…”

“இந்த வீணான சந்தேகங்கள் தான் எங்களிடையே சண்டையை, சர்ச்சையை, வீணான மனித அழிவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. இவர் உண்மையில் என் மாமிதான். இவர் கணவர் பெயர் ரணசிங்க… இவரின் கணவர் போன வருடம் ‘சுனாமி’ யினால் காலியில் இறந்துவிட்டார்…. உங்களுக்கு இன்னமும் சந்தேகமாக இருந்தால் நான் வேனை விட்டு இறங்கி விடுகிறேன். என்னை விசாரித்துக் கொள்ளுங்கள். அவர்களைப் போக விடுங்கள், ஐந்து வருடங்களுக்குப் பின் தன் மகனைப் பார்க்கச் செல்லும் இந்தத் தாயின் வேதனையைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்…”

இராணுவ சிப்பாய் சற்று நேரம் சிந்தனை வயப்பட்டவனாக நின்றிருந்தான். தன் சக இராணுவ சிப்பாயின் முகத்தைப் பார்த்தான். அவன் ஏதோ சைகை செய்தான்.

“நீங்கள் போகலாம் உங்களை நான் நம்புகிறேன், சிங்களப் பெண்மணியான நீர் ஒரு தமிழ் பெண்ணுக்காகப் பரிந்து பேசுவது எனக்கு ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி விட்டது. நாங்களும் மனிதர்கள்தான், நாங்கள் வேண்டுமென்றே இப்படியான மோசமான செயல்களில் ஈடுபடவில்லை. இது எங்களின் கடமை. எல்லோரையுமே சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய நாங்கள் உங்களுடன் சந்தோஷமாக உரையாட முடியாது. சிரமத்துக்கு மன்னிக்கவும். நீங்கள் போகலாம்…”

வேன் மறுபடியும் புறப்பட்டது. சீதாலட்சுமி ஏற்கனவே தூக்கம் கலைந்திருந்தாள். அவள் பரிவுடன் மாலினியைப் பார்த்தாள். “ஏன் மாலினி… வீணா அவங்ககிட்ட சண்டைபிடிக்கிற… பாவம் அவங்களோட வேலையை அவங்க செய்யிறாங்க…”

“இல்ல மாமி… சும்மா வாயை மூடிக்கிட்டிருந்தா இவங்க தலைக்கு மேல தான் போவாங்க. ஒரு சிங்களப் பெண் தமிழ்ப் பெண்ணோட ஒண்ணாப் போகக் கூடாதா… இதுல என்ன தவறு இருக்கு? அதிலும்… நீங்க எப்பேர்ப்பட்டவங்க? உங்களைப் போய் தவறாப் பேசினா நாம் எப்படிச் சும்மா இருக்க முடியும்? குட்டக் குட்டக் குனியிறவர் முட்டாள் இல்லையா….?”

“ம்… மாலினி… நீயும் நல்லாப் பேசக் கத்துக்கிட்டே இல்லையா…?”

“எல்லாம் உங்களோட சேர்ந்துதான். சுனாமியில் அம்மா, அப்பான்னு குடும்பத்தையே இழந்தேன். எனக்கு மாலையிட இருந்த சோமபாலவும் சுனாமியில் அகப்பட்டாரு… அனாதையா நின்ன என்னை நீங்க தானே உங்களோட கூட்டி வந்தீங்க. அன்பு, பாசத்தை அதிகமா அனுபவிச்சிராத எனக்கு எல்லாத்தையும் கொடுத்து, மகாராணிபோல வைச்சிருக்கீங்களே… உங்களுக்கு ஒண்ணுனா என்னால தாங்கிக் கொள்ள முடியுமா மாமி…?”

சீதாலட்சுமி – அவளை மெதுவாக அணைத்துக் கொண்டாள். வேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. சீதாலட்சுமியின் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின…

***

“அம்மா அவசரமா ஆயிரம் ரூபா தேவப்படுது இருக்குமா…?”

“என்னடா வேலுசாமி… நாளைக்குத் தானே தோட்டத்தில் சம்பளம் போடுவாங்க. அதோட அவ்வளவு பெரிய தொகை எதுக்குடா…?”

“முக்கியமான வேலைக்குத் தான்…” –

“என்ன அப்படி முக்கியமான வேலை என்கிட்டேயும் கொஞ்சம் சொல்லேண்டா…”

“என்னோட நண்பன் ரணசிங்க… பொலிஸில மாட்டிக்கிட்டான். எவனோ சாராயம் விற்க, இவனை மாட்டி விட்டாங்க. கோட்டுக்குப் போகனும்… தண்டம் கட்ட ணும்.”

“என்ன வேலுசாமி… முதலிலேயே இதைச் சொல்லக்கூடாதா… வா என் காதுக் கம்மலை கழட்டித் தாறேன். முதலில், அந்தத் தம்பியை வெளியில் எடுக்கப் பாரு…”

“ஐயோ வேணாம்மா…தங்கச்சி சீதாலட்சுமியைப் பொண்ணு பார்க்க வரப் போறாங்க. அந்தக் கம்மலை வைச்சுத்தான் செலவு பார்க்கணும்னு சொன்னீங்க…”

“அதைவிட இந்தத் தம்பிதாம்பா முக்கியம். நீங்க ரெண்டு பேரும் சின்ன வயசில இருந்தே ஒண்ணா வளந்தனீங்க, என் கையால எத்தனை தடவை சோறு சாப்பிட்டிருப்பீங்க. தாயில்லாத அந்தப் பிள்ளை என்னைத் தானே சுற்றிச் சுற்றி வருது. நீங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பியாப் பழகிறீங்க. உனக்கு ஒண்ணுன்னா அது பார்த்துக்கிட்டிருக்குமா…”

அதற்கு மேல் வேலுசாமி எதுவும் பேசவில்லை. தன் தாய் பார்வதியிடமிருந்து கம்மலை வாங்கிக் கொண்டு ரவுனுக்கு ஓடினான்…

வேலுசாமி ரணசிங்கவின் நட்பு மிக ஆழமானது. தோட்டப் பாடசாலையில் ஐந்தாவது வரை வேலுசாமியுடன் தமிழ் மொழியில் படித்த ரணசிங்க பின்பு டவுனிலுள்ள சிங்களப் பாடசாலைக்குச் சென்றான். ரணசிங்கவின் தந்தை அந்தத் தோட்ட லொறியில் சாரதியாக இருந்தார். ரணசிங்கவுக்குப் பத்து வயதாக இருக்கும்போது தாய் இறந்து விட்டாள். ரணசிங்க அனேகமாக வேலுசாமியுடனேயே தான் இருப்பான். உலகம் முழுவதிலும் மக்கள் பல மொழிகளில் பேசுகிறார்கள், ஆனால் ஒரே மொழியில் தான் புன்னகைக்கிறார்கள். தமிழ் – சிங்களம் என்று வேறுபாடுகள் தோன்றி இனங்களுக்குள் முறுகல் நிலை ஏற்படும் போதெல்லாம் ரணசிங்க மனவேதனைப்படுவான். வேலுசாமிக்கு ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு ஏறவில்லை. எனவே ரவுனில் ஒரு கடையில் வேலை செய்தான். ரணசிங்கவுக்குத் தபால் நிலையத்தில் தபால்கள் பட்டுவாடா செய்யும் தொழில் கிடைத்தது.

இருவரும் வேலை முடிந்து இரவில் ஒன்றாகத்தான் தோட்டத்துக்கு நடந்து வருவார்கள். ரணசிங்க வேலுசாமியின் வீட்டில் உணவருந்தாமல் செல்லவே மாட்டான். தன் மகனை விட மேலாகப் பார்வதி அவனைப் பார்த்துக் கொண்டாள். ரணசிங்க முதல் மாதச் சம்பளம் கிடைத்தவுடன் பார்வதிக்கு ஒரு சேலையும் சீதாலட்சுமிக்கு ஒரு சேலையும் வாங்கிக் கொடுத்த போது பார்வதி கண் கலங்கினாள்.

“அம்மா நான் உங்க மகன் மாதிரித் தானே…! தங்கச்சி சீதாலட்சுமிக்குப் பயணம் போறதுக்கு நல்ல சேலை கூட இல்லை தானே… அதுதான்.”

ரணசிங்கவுக்கு சொந்த ஊர் காலி. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் போது காலிக்குத் தன் தந்தையிடம் போய் வருவான். ஆனால் இரண்டு நாளில் தந்தையை விட்டு விட்டு ஓடி வந்து விடுவான்.

வேலுசாமி – நீதிமன்றத்துக்குச் சென்றான். ஆனால் விசாரணையின் பின் ரணசிங்க குற்றமற்றவன் என தீர்ப்பளிக்கப் பட்டது.

“ரணசிங்க… நான் பயந்து போயிட்டேன். எதுக்கும் தயாராகத் தான் வந்தேன்…”

ரணசிங்க – வேலுசாமியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.

“வேலு…. உனக்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேன்…”

“என்ன ரணசிங்க சொல்லுயே…?”

“உனக்கு நம்ம தோட்டத்தில இருக்கிற ஒத்தக் கடையைத் தெரியும்தானே!”

“ஆமா… பொன்சேகாவோட கடை… அதுக்கு இப்ப. என்ன …?”

“பொன்சேகாதான் என்னை இப்படிப் பொய் சொல்லி மாட்டி விட்டாரு?”

“என்னது பொன்சேகாவா… அவர் ஏன் உன்னை மாட்டிவிடனும்…”

“அவர் மகள் சகுந்தலாவை நான் நேசிக்கிறேன். அவளும் அப்படித்தான்…”

“அட… பரவாயில்லையே… நீ கூட காதல் கீதலெல்லாம் பண்ணுறியா… சரி… இந்த விஷயம் பொன்சேகாவுக்குத் தெரிஞ்சி உன்னை மாட்டவச்சிட்டாரு சரிதானா?”

“அவரு அதுக்காக என்னை மாட்டி வைக்கல்ல…”

“பின்னே வேற எதுக்காம்…?”

“நான் உங்களோடயெல்லாம் பழகக் கூடாதாம். நான் தனிச் சிங்களவனாக இருக்கணுமாம். தமிழர்களோட நெருக்கமான தொடர்புகள் வைச்சிருக்கக் கூடாதாம்…”

“ஐயையோ… ரணசிங்க… எங்களால உனக்குத்தான் வீண் பிரச்சினை …?”

“இல்ல வேலு… எனக்கு எந்த இனம் என்பதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை… நான் நல்ல மனுசனா இருக்க ஆசைப்படுறேன். இனவாதம் எனக்கு வேணாம். இன ஐக்கியம், இன ஒற்றுமைதான் வேணும். பொன்சேகாவுக்கு நல்லாச் சொல்லிட்டேன். உன் பொண்ணும் வேணாம் நீயும் வேணாம். எனக்குப் பாசம் தான் வேணும். நல்ல நட்புத்தான் வேணும்னு அடிச்சிச் சொல்லிட்டேன். அந்தச் கோபத்துலத்தான் இப்படி மாட்டி விட்டுட்டான். என்னோட சொந்தக்காரங்ககிட்டே யெல்லாம் என்னைப் பற்றிச் சொல்லிவிட்டான்…”

வேலுசாமி – கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்தான்.

“வேணாம் ரணசிங்க…. எங்களுக்காக உன் இனத்தைப் பகைச்சிக்காதே. உன் காதலை விட்டுடாதே…. காதல் கடற்பாசி மாதிரி. நீ அதைத் தள்ளினாலும் அது கூடவே வருவதைத் தடுக்க முடியாது…”

“நீ சொல்றது உண்மையா இருக்கலாம். ஆனா எனக்கு உங்களோட உறவு தான் வேணும். மனுசனாப் பிறந்த எல்லார் உடம்பிலயும் ஓடுறது சிவப்புநிற இரத்தம் தானுங்கறதை முதல்ல எல்லாரும் தெரிஞ்சிக்கணும்… அதை உணராதவரையில… இந்தப் பிரச்சினை தீரவே தீராது…”

மேலும் இரண்டு மாதங்கள் சென்றன. வடக்கு – கிழக்கில் யுத்தம் மோசமாக நடந்து கொண்டிருந்தது. அதிகளவில் யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவ சிப்பாய்களின் உடல்கள் இங்கே வரத் தொடங்கின. எங்கும் பதற்றம் ஏற்பட்டது. சில இடங்களில் வன்செயல்கள் இடம் பெற்றதுடன் அது பல இடங்களுக்கும் வேகமாகப் பரவியது.

ரணசிங்க விடுமுறைக்காகக் காலி சென்றிருந்தான். மலையகத்தில் ஆங்காங்கே வன்செயல்கள் இடம்பெற்றன. ரணசிங்க உடனடியாகப் புறப்பட முயற்சி செய்தான். ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் அவனால் புறப்பட முடியவில்லை. அவன் தவியாகத் தவித்தான். அவனால் எந்தச் சரியான தகவல்களையும் பெற முடியவில்லை.

மூன்று நாட்களுக்குப் பின் ஓரளவு நிலைமை சீரானது. ரணசிங்க – உடனடியாகப் புறப்பட்டான். அவன் காலையில் எதுவும் சாப்பிடவில்லை. நெஞ்சு படபடத்துக் கொண்டே இருந்தது. அவர்களுக்கு எதுவுமே நடந்திருக்கக் கூடாதே என்று அடிக்கடி வாய் முணுமுணுத்தது. அவன் பஸ்ஸை விட்டு இறங்கினான்.

வீதி வெறிச்சோடிக் கிடந்தது. ஆங்காங்கே கடைகள் சில உடைக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் கிடந்தன. பாதையில் காணப்பட்ட ஒரு சிலரும் முகங்களில் இன்னமும் கலவரம் நீங்காத நிலையில் வேகமாக ஓடி மறைந்தார்கள். அவன் தோட்டப்பாதையில் நடந்தான். எங்கும் யாரையும் காணவில்லை . எங்கும் மயான அமைதி நிலவியது. ஒரு சில லயன் காம்பறாக்கள் உடைக்கப்பட்டிருந்தன.

“ஐயோ மனிதர்கள் ஏன் இப்படி வெறி பிடித்தலைகிறார்கள். எதற்காக மனிதர்களை மனிதர்கள் கொல்கிறார்கள்.”

ரணசிங்க தன்னுடைய லயத்தை அடைந்த போது உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தான். வேலுச்சாமி இருந்த லயன்கள் முற்றாக எரிந்து மண்ணோடு மண்ணாகிக் கிடந்தன. அங்கே எவரும் இருக்கவில்லை . அவன் கலங்கிய கண்களோடு சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்… அவர்களுக்கு என்ன நடந்தது… அவன் அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்தான். அப்போது ஒரு சிறுவன் அகப்பட்டான்.

“தம்பி இந்த லயத்து ஆட்கள் எல்லாம் எங்கே…?”

“எல்லோரும் ஸ்கூல்ல இருக்காங்க. நெறையப் பேர் வந்தாங்க, லயத்தையெல்லாம் நெருப்பு வைச்சாங்க… எங்களை அடிச்சாங்க… எதுக்காக இப்புடிச் செஞ்சாங்க…?”

ரணசிங்கவால் அவனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவன் பாடசாலையை நோக்கி ஓடினான். அங்கே போனபோது அகதிகளாக இருந்த அவர்கள் இவனை உள்ளே விடவில்லை.

கோபத்துடன் அவன் மேல் பாய்ந்தார்கள்.

“நீயும் சிங்கள ஆள்தானே… உன்னோட ஆள்கள்தான் எங்களை அடிச்சு எங்களோட உடைமைகளையெல்லாம் நெருப்பு வச்சாங்க நாங்க இந்த நாட்டை வளமாக்கத்தானே வந்தோம். கூலியான எங்களை ஓட ஓட அடிச்சுத் தொறத்திட்டீங்களே! எங்க ஆள்கள் சில பேரைக் காணலை. இன்னும் கொஞ்சப் பேரு ஆஸ்பத்திரியில் உயிருக்காகப் போராடிக்கிட்டிருக்காங்க. தோட்டத்தை மட்டுமே நம்பி நாங்க உண்டு எங்க வேலையுண்டுன்னு இருந்தா இங்க வந்து எங்களை அடிச்சு அட்டகாசம் பண்ணுறீங்க, சாது மிரண்டா காடு கொள்ளாதுன்னுறதை மறந்திடாதீங்க…”

ரணசிங்க எதுவுமே பேசமுடியாமல் தலை குனிந்திருந்தான்.

அப்போது – தலை விரிகோலமாக உள்ளேயிருந்து சீதாலட்சுமி வந்தாள்.

“ஐயோ … ரணசிங்கவா… வாங்க….. எங்க நிலைமையைப் பாருங்க. இதுக்கெல்லாம் பொன்சேகாதான் காரணம். சகுந்தலாவை நீங்க வேணாம்னுட்டிங்களாம். அதுக்கு நாங்கதான் காரணம்னு இப்படிப் பிரச்சினை வர்ற சமயத்துல தன்னோட வஞ்சத்தைத் தீர்த்துக்கிட்டாரு. அவனோட மகன் காமினி பத்துப் பதினைஞ்சு பேரோடை வந்து அண்ணனை அடிச்சு இழுத்துட்டுப் போனாங்க. அண்ணனுக்கு என்னாச்சுன்னு இதுவரைக்கும் தெரியலை. இதெல்லாம் கூடப் பரவாயில்லை. எனக்கு நடந்த கொடுமைதான் ரொம்ப மோசமானது…” அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“சீதா… அழாமல் சொல்லுங்க… என்ன நடந்திச்சி…”

“அவ எப்புடிச் சொல்லுவா? மனுஷன் மாதிரியா நடந்துக்கிட்டானுங்க, அவன் காமினி அண்ணனைக் காட்டுறதாக ஏமாற்றி இவளைக் கூட்டிட்டுப் போய் ஒருநாள் முழுதும் வச்சி… இவளைக் கெடுத்துச் சின்னாபின்னப்படுத்தி விட்டான். விஷயம் வெளியே தெரியாமலிருக்க இவளைக் கொல்லப் பார்த்தான். விஷயம் கேள்விப்பட்டு நாங்க எல்லாரும் போய் அவனை அடிச்சிப் போட்டுட்டு இவளைக் கூட்டிட்டு வந்துட்டோம். இவளோட மானம் போயிடுச்சு.. அதை உன்னால திருப்பித் தர முடியுமா. இனி இவளை யார் கல்யாணம் முடிப்பாங்க… எங்களோட ஆளுங்க செஞ்ச கொடுமைகளுக்கெல்லாம் அவங்க சார்பில் நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்னு சொல்லிட்டு நீ போய்ச் சேர்ந்துடுவே. ஆனா அடிபட்ட நாங்க காலம் முழுக்க இப்புடியே இருந்திட வேண்டியதுதான்.”

ரணசிங்க சற்று நேரம் மௌனமாக இருந்தான். பின் தீர்க்கமாக அவர்களைப் பார்த்தான்.

“நான் எதைச் சொன்னாலும் நீங்க நம்பப் போறதில்லை. உங்களோட வேதனைகள் எனக்கு நல்லாப் புரியுது. ஒருசிலர் இவ்வளவு மோசமா நடத்துக்குறதுனால நீங்க என்னையும் தப்பா நினைக்கக் கூடாது. நான் இனத்தைப் பார்க்கிறவன் இல்லை. நல்ல மனதை, குணத்தைப் பார்க்கிறவன். நான் சிங்கள இனத்தைச் சேர்ந்தவன்தான். சீர்கெட்டவன் இல்லை. இந்த நிலையில நான் எதைச் சொன்னாலும் நிச்சயமாகக் கேட்க மாட்டீங்க. ஏன்னா நீங்க பாதிக்கப்பட்டவங்க. உங்க மேலே எந்தக் குற்றமும் இல்லை. நான் இப்போ போறேன். ஆனா நிச்சயமா இதுக்கு என்னாலான பரிகாரம் செய்தே தீருவேன்…”

மேலும் இரண்டு வாரங்கள் சென்றன. வேலுசாமியின் அழுகிய உடல் ஆற்றங்கரைப் பக்கம் ஒதுங்கியது. அவன் வயிற்றில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் காமினியுடன் சிலர் கைது செய்யப்பட்டாலும் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். காமினி பின்னர் ஒருநாள் வேகமாக வந்த வேன் ஒன்றினால் மோதப்பட்டு ஒரு காலை இழந்தது தனிக்கதை. மேம்படி

ஆரம்பத்தில் சீதாலட்சுமியை அனுதாபத்துடன் ‘பார்த்த அந்தத் தோட்டமக்கள் அவள் வயிற்றில் கருவொன்று உருவாவதை அறிந்ததும் ஏளனமாகப் பார்த்தார்கள். அவளது சொந்தக்காரர்களே அவளைக் கண்டு விலகி ஓடினார்கள். அநாதையாக நின்ற சீதாலட்சுமிக்கு ரணசிங்க கைகொடுத்தான். அவளைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்குப் பாதுகாவலனாக இருந்தான். அவன் விரல் நுனி கூட அவள் தேகத்தில் பட்டதில்லை. மிகக் கவனமாக இருந்தான். சீதாலட்சுமி அவனைத் தெய்வமாக நினைத்தாள். நிலவுக்குக் களங்கமென்று ஒதுங்கியே இருந்தாள்.

ரணசிங்க – அவளைத் தன் ஊரான காலிக்கு ஒரு விடுமுறையின்போது கூட்டிச் சென்றான். சீதாலட்சுமி பயந்தவாறுதான் சென்றாள். ஆனால் – ரணசிங்கவின் தந்தை, அத்தை ஆகியோர் அவளை அன்புடன் வரவேற்றார்கள். அவள் மேல் பாசமழை பொழிந்தார்கள். தன்னுடைய உறவினர்களை விட இவர்கள் எவ்வளவோ மேல் என அவள் நினைத்தாள்.

காலம் ஓடியது. சீதாலட்சுமி அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். சீதாலட்சுமியின் விருப்பப்படி ரணசிங்க தன் நண்பனின் பெயரில் பாதியான ‘வேலன்’ என்று குழந்தைக்குப் பெயரிட்டான். காலியில் வேலன் மேல் எல்லோருக்கும் பாசம் அதிகம். ரணசிங்கவின் அத்தை மெனிக்கே வேலன் மேல் உயிரையே வைத்திருந்தாள். வேலன் பிறந்த பின்தான் அவர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று வீசத் தொடங்கியது. ரணசிங்கவின் தந்தை வீரசேன வாங்கிய மஹாஜன சம்பத அதிர்ஷ்டலாபச் சீட்டில் பத்துலட்சம் விழுந்தது. அதில் அவர்கள் அழகான சிறிய வீடொன்றைக் கட்டினார்கள்.

நாட்கள் ஓடின. ரணசிங்க சீதாலட்சுமியுடன் மறுபடியும் தோட்டத்துக்கே வந்து சேர்ந்தான். வேலனைப் பிரிந்திருக்க மனமில்லாத மெனிக்கேயும் அவர்களுடன் வந்து விட்டாள். வேலன் நன்றாகப் படித்து பல்கலைக்கழகம் சென்றான். அவன் அப்பா செல்லம். ரணசிங்கவும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தான். நன்றாகப் படித்த அவனுக்கு புலமைப்பரிசிலில் லண்டன் போக வேண்டிய நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. வேலை செய்து கொண்டே படிக்கலாம். ரணசிங்கவுக்கு அவனை வெளிநாட்டுக்கு அனுப்ப விருப்பமில்லைதான். ஆனாலும் படிப்பு முக்கியமல்லவா…

பிரிவதற்கு மனமில்லாமல் கலங்கிய கண்களுடன் வேலன் விமானம் ஏறினான். அவனின் பிரிவு சீதாலட்சுமியையும் ரணசிங்காவையும் ஏங்க வைத்து விட்டது. அந்த -ஏக்கமே அவர்களிடம் சிறிது சிறிதாக நெருக்கத்தையும் இறுக்கத்தையும் ஏற்படுத்தியது. இவ்வளவு நாளும் தள்ளியிருந்த அவர்கள் நெருங்கி வந்தார்கள். இருபது வருடங்களாக எட்டியிருந்தவர்களுக்கு அந்தத் தனிமை புதிய உறவை ஏற்படுத்தியது.

நாட்கள் யாருக்காகவும் நிற்கவில்லை. ஒரு வருடம் ஓடியது. அது மார்கழி மாதம். அடுத்த நாள் நத்தார் பண்டிகை. ரணசிங்க அவசரமாகக் காலி போக வேண்டி இருந்தது. சீதாலட்சுமியுடன் தான் போக நினைத்தான். ஆனால் – சீதாலட்சுமிக்கு உடல் நிலை சற்று நன்றாக இல்லாதிருந்தமையினால் அவளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருந்து எடுத்துக் கொடுத்து விட்டு அவன் மட்டும் காலிக்குப் புறப்பட்டான். அன்றிரவு சீதாலட்சுமிக்குத் தூக்கமே வரவில்லை. ஏதேதோ கெட்ட கனவுகளெல்லாம் வந்தன. மறுநாள் – விடிந்தவுடன்தான் – அந்தப் பரபரப்பான செய்தி தெரிய வந்தது. ‘சுனாமி’ என்ற பயங்கரக் கடல் கொந்தளிப்பால் பல கடல் சார்ந்த ஊர்கள் மூழ்கிவிட்டன. பல்லாயிரம் பேர் இறந்து விட்டார்கள். அவள் – மனம் பிரார்த்தனை செய்தது. “கடவுளே… கணவனுக்கோ அவள் உறவினர்களுக்கோ எதுவுமே நடந்துவிடக் கூடாது…”

***

வேன் – சட்டென நின்றது. சீதாலட்சுமி சிந்தனை கலைந்து எழுந்தாள். தந்தையின் மறைவுக்குக்கூட வேலனால் வர முடியவில்லை. வந்தும் பிரயோசனமில்லை. ஏனென்றால் ரணசிங்கவின் உடல் கடைசிவரை கிடைக்கவேயில்லை. சீதாலட்சுமியும் மாலினியும் விமான நிலையத்திற்குள் நுழைந்தார்கள்.

சுமார் – ஒரு மணி நேரத்தின் பின் கோட் சூட்டுடன் வேலன் வந்தான். தன் தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான்.

“அம்மா… அப்பாவை இனிப் பார்க்கவே ஏலாது இல்லையா?”

“இல்லப்பா அவரு தெய்வமாயிட்டாருப்பா…”

“அம்மா… நான் அப்பாவை விட்டுப் போயிருக்கக் கூடாது. கடைசி வரைக்கும் அவருடனேயே இருந்திருக்கனும். என்னோட அப்பா சிங்கள இனத்தைச் சேர்ந்தவரா இருக்கலாம். ஆனா அவரை என்னோட அப்பான்னு சொல்லிக்கிறதுல பெருமைப்படுறன். விமான நிலையத்தில் என்னோட பாஸ்போர்ட்டைப் பார்த்துட்டு அப்பா சிங்களமான்னு கேட்டாங்க. நான் சந்தோஷத்துடன் ஆமான்னு சொன்னேன். அவங்க என் முதுகைத் தட்டிக் கொடுத்தது மட்டுமில்ல மற்றவங்ககிட்டயும் சொல்லி சந்தோஷப்பட்டாங்க. நமக்குள்ள இந்தப் பிரிவெல்லாம் எதுக்கு, தமிழ்ப் பெண்ணான என் தாயோட மானத்தைக் காப்பாத்துறதுக்காக தன்னையே மெழுகுவர்த்தியாக்கி ஒரு நல்ல மனுஷனா வாழ்ந்து காட்டின என் அப்பாவுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்…?”

சீதாலட்சுமி பெருமிதத்துடன் தன் மகனைப் பார்த்தாள்.

“நீ கைமாறெல்லாம் செய்யத் தேவையில்லை. ஆனா உன் அப்பா மாதிரியே நம்ம இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தக்கூடிய நல்ல சந்தர்ப்பம் உனக்குக் கிடைச்சிருக்கு…”

“என்னம்மா சொல்லுறீங்க…”

“இதோ… இவதான் மாலினி. நான் கூட அடிக்கடி டெலிபோன்ல உன்கிட்ட சொல்லுவேனே… அந்த மாலினிதான் இந்தப் பொண்ணு, தமிழனான நீ அநாதையா நிற்கிற இந்தச் சிங்களப் பெண்ணுக்கு ஏன் வாழ்வு குடுக்கக் கூடாது…”

“நான் தாய் சொல்லைத் தட்டாத மகன். ஆனாலும் அந்தப் பொண்ணு இதுக்குச் சம்மதிக்கணுமே…”

மாலினி முகம் சிவக்கச் சிங்களத்தில் சொன்னாள்.

“இதுக்கு நான் குடுத்து வைச்சிருக்கணும். சுனாமியில் எல்லாத்தையும் இழந்து அநாதையா நின்னப்ப ஓடோடி வந்து என்னை அணைச்சி ஆறுதல் சொன்னப்ப நான் தமிழ், சிங்களம் பார்க்கலை. அந்த நேரத்துல எனக்கு அன்பும் அரவணைப்பும் தான் தேவையாயிருந்திச்சி, ஐந்தறிவு படைச்ச பறவைகள் மிருகங்களெல்லாம் வேறுபாடு பார்க்கிறதில்லை. ஆனா ஆறடி மண்ணுக்காக ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டு சாகிறோம். நாங்களாவது ஒண்ணு சேர்ந்து நம் நாட்டுல ஒரு புதிய அத்தியாயத்தை, புதிய சிந்தனையை ஏற்படுத்துவோம்…”

“அப்படின்னா மாலினி இனி… திருமதி மாலினி வேலன்… சரிதானா…”

சீதாலட்சுமி கேலியுடன் இருவரையும் பார்க்க அவர்கள் கலகலவெனச் சிரித்தார்கள். அந்த இடத்தில் சமத்துவமும் சமாதானமும் கைகோத்துக் கொண்டன. இந்த ஆரம்பம் நிச்சயமாக நாளை ஒரு புது யுகத்தை ஏற்படுத்தும்…

– ஓர் உன்னதத் தமிழனின் கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2006, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *