சாம்பலும், புழுதியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 7,029 
 

அந்தக்காவல்துறையின் வாகனம் வேகமெடுத்து புழுதியைக் கிளப்பிச் சென்றது. தன் பக்கமிருந்த கோப்பை திரும்பத்திரும்ப புரட்டிக் கொண்டிருந்தார் அந்த அதிகாரி.

அந்தக் கோப்பில் ஒரு இளம் பெண்ணின் நாலைந்து படங்களும் சாதகக் குறிப்புகளும் இருந்தன.

“ இங்க வரணும்ன்னு சொல்லிட்டே இருந்தீங்க.. “

“ வாய்ப்பே அமையலே பாரு. இன்னிக்கு இதுக்குன்னு வரவேண்டியதாப் போச்சு “

அப்புகைப்படங்கள் காவல்துறை அதிகாரியின் மகளின் படங்கள். அவளுக்கு வயது ஏறிக்கொண்டிருந்தது.சரியான வரன் அமையவில்லை. தேடிக்கொண்டிருந்தவருக்கு சாதகத்தை மீறி பரிகாரம், தோசம் கழிப்பு என்றெல்லாம் யோசிப்பு வந்து அதையும் செய்து பார்த்திருந்தார். அப்பகுதிக்கு சமீபமாய் மாற்றலாகிவந்திருந்தார். மகளின் சாதகத்தோடு அங்கு வரவேண்டும் என்று இருமாதங்களாய் நினைத்திருந்தார்
புழுதிபட்டு சாலையோரத்து மரங்கள் நிறத்தை மாற்றிக்கொண்டிருந்தன. வானத்து நீலம் அதன் நிறத்தை மாற்றாமல் காட்டிக்கொண்டிருந்தது.

***

சாம்பல் பூத்து அந்த அறையின் நிறமே மாறிப் போயிருந்தது . எரிந்து மிச்சமிருக்கும் சாம்பல் பக்திமானின் நெற்றியில் பூசப்பட்ட அடர்த்தியான திருநீறுபோல் படர்ந்திருந்தது. புத்தகங்களும் பத்திரிகைகளும் எரிந்து சாம்பலை இன்னும் அடர்த்தியாக்கியிருந்தது. வலது பக்க முலையில் கரிக்குச்சிகளாய் தென்பட்டவை சாம்பல் மூட்டத்தை மீறிக்கொண்டு துருத்திக்கொண்டிருந்தன. மர நாற்காலிகள் ஏகதேசம் எரிந்து நிலைகுலைந்த கரிக்கட்டைகளைப் போல் சிதைந்திருந்தன. பிளாஸ்டிக் நாற்காலி ஒன்று கூழ் போல் சிதைந்து தரையில் அப்பியிருந்தது.

காவல் துறை அதிகாரி கையிலிருந்த குச்சியால் உருகிப்போயிருந்த பிளாஸ்டிக் நாற்காலியைத் தொட்டார். வாயிலிருந்து துப்பப்பட்ட ‘ பபிளிகாம்’ போல குச்சியின் முனையில் கொஞ்சம் பிசிறு ஒட்டிக்கொண்டிருந்தது. குச்சியைத் தூக்க குழந்தையின் வாயிலிருந்து ஒழுகும் ஜொள்ளு நீர்போல பிளாஸ்டிக் துணுக்கு சற்றே நீண்டது.

“என்னடா பெட்ரோல் ஊத்தி எரிச்சுப்புட்டாங்களா..? என்ன இவ்வளவு தூரம் செரியா எரிஞ்சிருக்காதே..”
“இருக்கலாம் சார். எல்லாம் திட்டமிட்டு பண்ணுனதுதானே. எரிக்கறதுக்குன்னு தீர்மானிச்சு நெனச்சப்புறம் பெட்ரோலோடயே வந்திருப்பாங்க. .”

“ஆமா இந்த காலத்துல கெரோசின் என்க கிடைக்குது…” பெட்ரோல் கிடைக்கறது சர்வ சாதாரனமாயிடுச்சு… வாங்கி ஊத்தி பத்த வெச்சிடறாங்க. நின்னு நிதானமா எரிஞ்சு எல்லா சாம்பலாயிருது.”

“ஆமா எல்லோருமே ஜோதிக்குள்ளே ஐக்கியமாயிட்டாருங்க. அதுவும் மகா ஜோதியா, குன்றத்து நெருப்பாங்கறதுதான் வித்தியாசம்.”

பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்த கைக்குட்டையை இரண்டாய் மடித்து முகத்தின் கீழ்ப் பகுதியில் மூக்கைச் சுற்றிக் கட்டிக் கொண்டார். கையிலிருந்த குச்சியால் கிளற சாம்பலும் காகிதத்துண்டுகளும் சற்றே பரவின.

“எல்லாருமே சாதி ஜோதியிலே ஐக்கியமாயிடறாங்க. அதுதான் பெரிய பிரச்சினை. சாதி அடையாளம் தெரியாம இருக்கற வரைக்கும் மனுசனா இருக்காங்க. அப்புறமெல்லா மிருகந்தா. தாகத்தை தீர்க்கறதுக்கு ரத்தம் தேவைப்படுது.”

” காதலிக்கற ரண்டு பேரும் பொழங்கற ஜாதிதானே..?”

“ஆமா பொழங்கற ஜாதிதான் .இருந்தாலும் வேண்டாத ஜாதிகள்”.

” பையன் கவர்ன்மென்ட் சர்வேன்ட்டாமே ..?”

“ஆமா சார். சென்டரல் கவர்ண்மென்ட் சர்வென்ட். ஜாதி திமிரை மீறிட்டு கவர்மென்ட் ஸ்டாப்புன்னு கொஞ்சம் ஆடியிருக்கான். பத்த வச்சுட்டாங்க”.

” நல்ல வெளை பக்கத்துல எங்கேயும் பரவலெ. வீட்லேயும் யாரும் இல்லை.”

“என்னமோ வேண்டுதல்னு சொல்லீட்டு திருச்செந்தூருக்கு போயிருக்காங்க. ஆளில்லேன்னு தெரிஞ்சுதான் பத்தவெச்சிருக்காங்க”.

“பத்த வைக்கறதுக்கு ஏதோ ஒரு காரணம் தேவையாயிருந்திருக்கு. இந்த லவ் மேட்டரை புடிச்சிட்டாங்க.”

அந்த காவல் துறை ஆய்வாளர் வாசலுக்கு வந்தபோது காலில் தட்டிய அந்த படத்தை திருப்பிப் போட்டு பார்த்தார். படத்தின் பக்கமுனைகள் சிதைக்கப்பட்டு திருவள்ளுவரின் உருவம் சிதைந்திருந்தது. பக்கவாத வியாதியால் வாய்கோணிக்கொண்டுள்ளது போல திருவள்ளுவரின் தாடி சிதைந்து இடதுபக்கம் நகர்ந்திருந்தது. அவரது நெற்றியில் சமீபத்திய சரஸ்வதி பூஜையில் போட்ட திருநீற்றுக்கீற்றுகள் மிச்சமிருந்தன. திருவள்ளுவர் வழக்கமாய் நிற்கும் கோலத்தில் இல்லாமல் அந்தப் படத்தில் உட்கார்ந்திருந்தார். எதிரில் இருப்பதை தீர்க்கமாய் பார்ப்பதைப் போல முழங்கால்கள் சற்றே உயர்ந்தபடி அமர்ந்திருந்தார். அவரின் பார்வையில் ஏதோ கலக்கம் வந்துவிட்டதுபோல் இருந்தது.

“என்ன இந்த வூட்டுக்காரர் இந்த ஜாதிக்காரரை?”

“இல்ல சார் வேற ஜாதிதான் ஆனா திருவள்ளுவர் எல்லோருக்கும் பொதுவான ஆள்தானே அதனாலே எல்லோரும் அவர் படம் வெச்சிருக்க வாய்ப்பிருக்கு. அவர எங்களோட ஜாதின்னு அடையாளம் கண்டு சொந்தம் கொண்டாட அதுக்குன்னு ஒரு ஜாதி இங்க இருக்கு”

காவல் துறை வாகனம் பட்டத்தரசியம்மன், நல்லபத்தான் கோவில்களை தாண்டி புழுதியைக் கிளப்பியபடி நகர்ந்துகொண்டிருந்தது. அழகுநாச்சியம்மன் கோவிலில் கோபுர பொம்மைகளின் வர்ணம் வெயிலில் மின்னியது. முக்கோணத்தை நிலைநிறுத்தி பொம்மைகளை மாட்டி விட்டதைப் போல் கோபுரம் நின்றிருந்தது. வாகனத்தின் பரபரப்பு வேகத்தோடு பலர் அதைத் தவிர்ப்பதற்காக மாயாமாய் மறைந்து கொண்டிருந்தார்கள். பள்ளிவாசல் தெருவில் வாகனம் நுழைந்த போது கருப்பு பர்தாவுக்குள் இருந்த நாலைந்துப் பெண்கள் முதுகை காட்டியபடி சுவர் பக்கம் திரும்பினர்.

” என்னகேஸ்பைல்பண்ணவேண்டியிருக்குமா…இல்லசமாதானமாபோயிருவாங்களா?”

” பேசிப்பார்க்கலாம்சார்பொழங்கறசாதிங்கறதனாலஇதுஒன்னும்பெரியபிரச்சனைஆயிடாது. பொதுமடத்துலஉக்காந்துஅவங்களையேபேசித்தீர்க்கச்சொல்லவேண்டியதுதா”

” அவர் வேற சென்ட்ரல் கவர்மென்ட் ஸ்டாப்புங்கறெ அவரோட தொழிற்சங்கம் அரசியல் இதெல்லாம் வச்சுகிட்டு அவன் ஏதாவது கெளப்பப் போறான்”

காவல்துறை வாகனம் மறுபடியும் சிதைந்து கிடந்த பொருட்களை ஒட்டியபடி வாசலில் வந்து நின்றது. அழுத்தமான அதன் டயர்கள் எழுப்பிய புழுதி சிதைந்து கிடந்த பொருட்களின் மேல் படர்ந்தது. கொழல்மல்லி செடியொன்று சட்டென ஆடி அசைந்து நின்றது. அதனருகில் இருந்த ‘மணிப்பிளான்ட்’ செடியொன்று வானத்தை எட்டுவதற்கு கிளம்புவதுபோல் படர்ந்திருந்தது. சிமெண்ட் தொட்டி கவிழ்ந்து அதிலிருந்த தண்ணீர் வெளியேறி நிலத்தை சற்றே ஈரப்படுத்தியிருந்தது. தூரத்தில் காக்கைகளின் சத்தம் ஏதோ அபாயக் குரல்கள் போல பீறிட்டுக் கொண்டிருந்தது. முருக நதிக்கு செல்லும் பாதையின் வலது பக்கம் சீமெக்கருவேல முற்களால் அடர்த்தியாக்கப்பட்டிருந்தது. தடித்த வேப்பமரத்தின் கிளைகள் அசைந்து கொஞ்சம் காற்றை விசிறிக்கொண்டிருந்தது. ஒருவித உருமலுடன் அலைந்து கொண்டிருந்த பன்றியொன்று காவல் துரையின் வாகனத்தின் வலது பக்கத்தில் ஒரு விதக் கிறிச்சிடலுடன் ஓடியது.

” இங்கே வேற யாராவது ஆளுங்களே விசாரிக்க வேண்டியிருக்குமா ”

” தேவையிருந்தா பாத்துக்கலாம் சார்… புகார்னு வந்தா பாக்கலாம் இல்லேன்னா வுட்டர்லாம். ஆனாலும் கண்காணிப்புக்குள்ளே இருக்கறது நல்லதுதான்..”

” இந்த ஊர்ல ஜோசியம் பார்க்கறவங்க இன்னும் எவ்வளவு குடும்பம் இருப்பாங்க ”

” பத்து குடும்பம் இருக்கலாம் சார். நூத்துக்கணக்கான குடும்பம் இருந்த ஊர்தான். எல்லோரும் பொழைப்பைத் தேடி வெவேறு ஊருக்குப் போயிட்டாங்க. அதுல காசு பண்றவங்களும் இருக்காங்க.”

பனி மெல்லியத் திரையாய் ஆகாயத்தைத் தொட்டிருந்தது. சிவப்பு அரளிச் செடிகள் மெல்ல அசைந்து ஈரத்தை கொண்டிருந்தது. சிமெண்ட் தொட்டியில் இருந்த கருந்துளசி இன்னும் அடர்த்தியான பச்சையாய் இருந்த்தது.

வேல் அரை ஜான் உயரத்திற்கு ஒன்றாய் நிறுத்தி வைத்தது மாதிரி அந்த வீட்டின் கேட் திடமாய் நின்றிருந்தது. அதன் அருகில் உட்கார நான்கைந்து பிளாஸ்டிக் நாற்காலிகள் தாறுமாறாய் கிடந்தன. ஒரு சிமெண்ட் பென்ச் ஒன்று நீளவாக்கில் கேட்பாரற்று கிடந்தது. கேட்டின் மேல்ப் பகுதி கூரையிலிருந்து பச்சை கற்றாளை ஒன்று கொசுவை விரட்டுகிறேன் பார் என்கிற ரீதியில் தொங்கிக் கொண்டிருந்தது. இரண்டு சக்கர வாகனங்கள் முயன்று ஒரு கூரையின்கீழ் இறந்து கிடந்தது போல் நின்றிருந்தன. அவற்றின் பக்கத்தில் படுத்திருந்த நாயொன்று தலையைத் தூக்கி பார்த்த பின் மீண்டும் தூங்க ஆரம்பித்தது. பனித்திரையினூடே பலர் நடமாடிக்கொண்டிருந்தார்கள். வீட்டு முகப்பில் சலவைக் கல்லில் பொருத்தியிருந்த இரண்டு விநாயகர்கள் வெவ்வேறு திசையினைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“சுந்தரவேல் கணித வித்வான் மனை ” என்ற எழுத்துக்கள் சலவைக் கல்லில் .மிளிர்ந்தன. கணேசகுமாரன் (எ) கணபதி -கணித ஜோதிடர் என்ற பெயருக்கு கீழ் ஜாதங்கள் பார்க்கப்படும் என்ற பிளக்ஸ் போர்டு தொங்கியிருந்தது.

” சோமு என்னடாப் பண்றே ? வெளியே நாலு பேரு தெரியறாங்க பாலில்லாட்டியும் போச்சேது கறுப்பு டீ போட்டுக் குடு”.

” வீட்டு பாடம் எழுதீட்டு இருக்கேம்பா …”

” என்னடாப் பெரிய படிப்பு …. எலிமென்டரி ஸ்கூல் .படிப்புக்கு…?”

” இருக்கட்டும்பா வீட்டுப் பாடம் குடுத்திருக்காங்க… நீங்க வேற கவர்ன்மென்ட் ஸ்கூல்லே சேத்திட்டு கஷ்ட்டப்படுத்தறீங்க”

” கவர்ன்மென்ட் ஸ்கூலும் நல்ல ஸ்கூல்தாண்டா… நாங்களெல்லாம் அதிலேதான் படிச்சு அறிவாளியானோம் .என்ன கொறச்சல். இங்கிலிஷ் மீடியத்துக்கு பத்து மைல் போகணுமே.”

சோமசுந்தரம் கைகளிலிருந்து நோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வகையான தூக்கக்கலக்கத்தில் அவன் கையிலிருந்த புத்தகம் நழுவதை போல் இருந்தது. இடது கையிலிருந்து வலது கைக்குப் புத்தகத்தை மாற்றிக்கொண்டான்.

” நீயே அம்மாகிட்டே சொல்லீருப்பா… பால் காப்பி வேணுமா சுக்கு காப்பி வேணுமா துளசி காப்பி வேணுமா என்ன வேணும்னு நீயே அம்மாகிட்டே சொல்லிடு.”

கணபதி முன் வாசலுக்கு வந்த போது அவரை நோக்கி வந்த இருவர் லேசான குளிரை தாக்கு பிடிக்கும் விதமாக கைகளை கட்டியிருந்தனர். அவர்களின் உடம்பு குளிரால் சிறுத்திருந்தது.குளிரில் விரைத்திருந்த உடம்புகள் போலிருந்தன.

” ராத்திரி அப்புறம் எப்படி தூங்கனீங்க”

” இங்கதா பெஞ்சுமேல படுத்துட்டோ ”

” குளிரா இருந்துருக்குமில்லே”

” ஆமா கொஞ்சம் இருந்துதுச்சு . சாமாளிச்சுட்டோம் …”

“திருப்பூர் பக்கம் இருந்து நாலு ஜாதகம் வந்தாங்க. பாத்து லேட்டாயிடுச்சு எல்லாரும் வேவாரிங்க. காசு பண்றவங்க. காசு பன்றதற்கு ஆயிரத்தெட்டு வழியை தேடறவங்க… அவங்கள முடிச்சிட்டு உங்களெ கூப்புடலாம்னு இருந்தென்… அதுக்குள்ளே ஒரு பஞ்சாயத்து வேற வந்துடுச்சு. ”

” அப்படியென்னங்க ராத்திரியிலெ பஞ்சாயத்து ”

“எங்காளுககுள்ளேதான் பிரச்சனை ஜாதகம் பாக்கறோம்.. காசு வருது ஒழுங்கா இருந்துக்கவேண்டியதுதானே இதுல வேற தோஷம்னு வந்துட்டா பரிகாரம்னு சில பேரு இப்ப ஆரம்பிச்சுட்டாங்க ”

” தோஷம்னு இருந்தா பரிகாரம்னு தேவைதானே”

” பண்ணலாம் ஆனா அதெல்லாம் பண்றது வேற ஜாதிக்காரன் தா பண்ணனும் . ஜாதகம் பார்த்துட்டு நாங்களே பண்ணகூடாதுன்னு சொல்லிவிட்டு தலமுறை தலமுறையா ஐதீகம் இருக்கு. அத மீறிட்டு காசு வாங்க ஆரம்பிச்சுட்டாங்க ”

” அப்படி பண்ணக்கூடாதுங்களா… எங்க ஊர்ல எல்லாம் பன்றாங்களே”

” பண்றதெல்லாம் நல்லதுல்லே.. பாவம் வந்து சேரும் பிரம்மனுக்கு உரிய எடத்துலெ உக்கார்ந்துட்டு இதுதான் உன் தலையிலே எழுதியிருக்குன்னு எங்களுக்குவேலை . அதை சொல்லுறது … அந்த மாதிரி சுலபமான வேலை… இத வுட்டுட்டு பரிகாரம்னு எச்சக்கலையா கெளம்பறது நல்லால்லே. ”

” கொஞ்சம் வருமான ஆசை வந்ததாலே பண்ணியிருப்பாங்க”

“வருமானத்துக்குன்னு ஆசைப்படறது தொழிலையே கேவலமாக்கீரும். அதெல்லாம் .ஆகாதுங்க ”

நாற்காலியில் உட்கார்ந்து கொண்ட அவர்கள் கணபதியை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்கள். கணபதி போர்த்தியிருந்த சால்வையை விலக்கியபோது அவர் உடம்பின் மீதிருந்த கனத்த ஸ்வெட்டர் தெரிந்தது. மிதமான குளிரை சுலபமாக எதிர்கொள்வதைப் போல உட்கார்ந்திருந்தார்.

” ஆமா நீங்க எந்த ஊர் காரங்க …”

” வடக்கால கோபிக்கு அந்தப்பக்கம் நம்பியூர்ங்க. ரண்டு ஜாதகம் பாக்கணும். கல்யாண விசேஷம். எங்க ஊர்லேயே இப்போ தடுக்கி விழுந்தா ஜோஸ்யக்காரங்க இருக்காங்க. ஆனா இங்க வந்து போறதுதான் நம்பிக்கையும் திருப்தியும் இருக்கு. அதுதான் லேட்டாயிடுச்சுன்னு இங்கியே இருந்துட்டோம். அவ்வளவு தூரம் திரும்பி போக முடியாதுன்னு உங்க வாயிலே சொல்றது ஏதாயிருந்தாலும் மந்திரமா இருக்கும்னு நம்பிக்கை”

” சரிங்க அரை மணி நேரத்துலெ ரெடியாயிடறேன். ஒரு குளியல் போட்டுட்டு கணபதிக்கு பத்து தோப்புக்கரணம் வேலையெ ஆரம்பிச்சுடலாம்.”

” அப்பா நாங்களும் டீக்கடைப் பக்கம் போயிட்டு வந்துடறோம்”

” சரிங்க. டேய் சோமு ரத்னவேல் வந்திருக்கா பாரு… என்னடா ரத்னவேலு “.

ரத்னவேலு உடம்பை குறுக்கிக்கொண்டு நின்றிருந்தான். அவனின் கிழிந்த சட்டை காலர் பகுதி விகாரமாய் பற்களைக் காட்டிச் சிரிக்கும் மனநோயாளி போல இருந்தது.அவன் கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டான்.

” கணக்குப் புத்தகம் வாங்கணும்னு வந்தேங்க ”

” சரி வாங்கீட்டு போ … நீங்க படிக்கற இந்த ஏலுமென்டரி ஸ்கூல் படிப்புக்கு காலிலேயே கெளம்பிட்டீங்களா. சரி படிங்க படிங்க …இந்த குளிருக்கு ஒரு துண்டையாவது தலையிலே கட்டீட்டு வர்னுமில்லெ ”

சற்று தூரத்தில் தெரிந்த உருவங்கள் பனியோடு மங்கலாகியிருந்தன. சோற்றுக்கஞ்சியை இறைத்து விட்ட மாதிரி இருந்தது பனியின் சீறல்.
நம்பியூர்காரருக்கு கணபதியின் மேல் பெரும் நம்பிக்கை இருந்தது.சாவக்காட்டுப்பாளையத்தில் அவரின் சித்தப்பா மகனுக்கு சாதகம் சொல்லும் விசயங்கள் எதுவும் நடக்காமல் தாறுமாறாகவே எல்லாம் சென்று கொண்டிருந்தபோது அவரிச் சந்தித்தார். “ அது ஒண்ணும் இல்லே. ஜாதகம் எழுதும் போது லக்கனம் கொஞ்சம் மாத்தியிருந்தாலும் இப்படியாகும். அவன் பொறந்ததிலிருந்து நடந்த்தையெல்லா சொல்லிருங்க “ என்று கேட்டு முக்கிய விசயங்களைப் பட்டியலிட்டுக்கொண்டார். பிறகு சாதகத்தை எடுத்து வைத்துக் கொண்டு கட்டங்களை ஆராய்ந்து லக்கனம் ஒன்று சற்றே மாற்றி பதிவாகியிருப்பதை கணித்து மறு சாதகம் எழுதினார். அதன்படி இதுவரை நடந்ததையெல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டு அப்படி எழுதினார். அதன் பின் அவர் கணித்தவையும் முறையாக இருந்தன என்பதே அவரை திரும்பத்திரும்ப பழையனூருக்கு கணபதியிடம் வரச் செய்திருக்கிறது.

***

அப்படித்தான் அந்தக் காவல்துறை அதிகாரியும் பழையனூருக்கு வர வேண்டியிருந்தது.

அவரை இறக்கி விட்டு காவல்துறை வாகனம் புழுதியைக்கிளப்பியபடிச் சென்றது. பனியை மீறி புழுதி கிளம்பியது.பனி அந்தப்புழுதியை அடக்க முடியாமல் போய்விட்டதை ஆச்சர்யத்துடன் பார்ப்பது போல் பார்த்தார். . காவல்துறை வாகனம் பார்த்து கணபதி எப்போதும் பயப்பட்டதில்லை. காவல்துறை அலுவலகங்களில் கதவு, சன்னல் மாட்ட நல்ல நாள்., வாஸ்து பற்றிய தகவல்களுக்காக எப்போதும் வந்து செல்வர்..

மகளின் சாதகக் கோப்பை கையில் எடுத்த காவல்துறை அதிகாரி அதை ஒரு தரம் பார்த்துவிட்டு உட்கார்ந்திருந்த வாகன இருக்கையின் மேல் போட்டார். இந்த முறை தீயில் எரிந்து போன அந்த வீட்டின் சாதகம் , விபரங்களை கணபதியிடம் ஆரம்பிக்கலாமா என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

சாதகத்தில் இருக்கும் பல கட்டங்கள் ஞாபகம் வந்தன.எந்தக்கட்டதிலிருந்து , எந்த லக்கனத்திலிருந்து ஆரம்பிப்பது இந்த விசாரணையை ஆரம்பிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தார்,

வீட்டு முகப்பைத் தாண்டிச் சென்றவருக்கு மங்கலான வள்ளுவர் படம் புறக்கணிக்கப்பட்டதாய் வலது பக்கச் சுவரின் மூலையில் இருந்தது கண்ணிபட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *