மனம் மாறியது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 8,289 
 

வேலப்பன் சாவடி மிக அழகிய கிராமம். மா, பலா, தென்னை மரங்கள் செழிப்பாக வளர்ந்து இருந்தது ஊரும் ஊரில் உள்ள மக்களும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். வேலப்பன் சாவடியில் குமரன் என்பவன் காய்கறிக் கடை வைத்திருந்தான். சாதாரணமாக இருந்த குமரன் காய்கறிக் கடையில் குறைந்த விலைக்கு காய்களை வாங்கி மிக கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை இலாபம் அடித்து வந்தான். நாட்கள் செல்லச் செல்ல வியாபாரத்தில் குமரன் மிகக் கெட்டிக்காரனாக பெரும் வியாபாரியாக திகழ்ந்தான் இவனுடைய திறமையையும் செல்வத்தையும் கண்டு பக்கத்து ஊரான வள்ளியூரில் கந்தசாமி என்பவர் தன் மகளை குமரனுக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறினார். கந்தசாமியின் மகள் வள்ளியம்மாள் மிகவும் கஞ்சத்தனம் நிறைந்தவள் எச்சிற் கையால் காக்கையைக் கூட விரட்டாதவள் இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு வேலப்பன் சாவடி அம்மன் கோயிலில் இனிதே நடந்து முடிந்தது.

மறுநாள் குமரனின் உறவினர்களும் திருமணத்திற்கு வர இயலாதவர்களும் விசாரிக்க வந்திருந்தனர். வந்தவர்கள் பரிசுப் பொருள் கொண்டு வந்தனர், கொடுத்தனர். மிக ஆசையோடு பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டாள் வள்ளி. குமரன் இவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய் என்று கூறினார். கஞ்சத்தில் பேர் எடுத்த வள்ளி இவர்களுக்கு சாப்பாடு செய்தால் நமது செல்வம் குறைந்து போய்விடும் எனவே இவர்களுக்கு சாப்பாடு போடக் கூடாது திருப்பி அனுப்பி விட வேண்டும் என்று முடிவு செய்தாள். உடனே வள்ளி தம் கணவரைப் பார்த்து நேற்று திருமணம் நடந்தது. திருமண வேலைகளை பார்த்ததால் என் உடல் நிலை சமையல் செய்யும் நிலையில் இல்லை, நம்மிடம் வேலைக்காரர்கள் யாரும் கிடையாது. எனவே ஓட்டலில் சாப்பாடு வாங்கி வாருங்கள் என்று (வேண்டுமென்றே) கூறினாள். குமரன் மனதிற்கு கஷ்டமாக இருந்தது என்ன செய்வது. சரி சாப்பாடு வாங்கி வருகின்றேன் என்று கூறி புறப்பட்டான், விருந்தினர்கள் அது எல்லாம் வேண்டாம். எங்களுக்கு வேறு இடங்களுக்கு வேறு போக வேண்டும். நாங்கள் அங்கேயே உணவருந்திக் கொள்கின்றோம். எனக் கூறி புறப்பட்டனர். குமரன் மனச்சங்கடத்துடன் விடை கொடுத்தான்.

அவர்கள் வெளியில் சென்றவுடன் வள்ளி வாசல் வரை சென்று அவர்களை தெருவை கடந்து விட்டார்களா என்று பார்த்து விட்டு தன் கணவரை பார்த்து மகிழ்ந்து நாம் இப்படி வருவோர் போவோருக்கு உணவு சமைத்தால் நம் நிலமை என்னாவது, நமது செல்வம் அனைத்தும் கரைந்து விடும். மேலும் மேலும் பணம் சேர்த்து லட்சாதிபதியாக வாழ வேண்டும் அப்போது தான் உலகம் நம்மை மதிக்கும் என்று ஒரு வகுப்பே நடத்த ஆரம்பித்தாள். குமரன் புரிந்தும் புரியாததுமாக இருந்தான். நாட்கள் செல்லச் செல்ல வள்ளி பணத்தைச் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தாள். தன் கணவனுடன் தானும் வியாபாரக் கடைகளுக்குச் சென்று வந்தாள். பணம் அதிகம் சேர்ந்து ஒருவருக்கு ஒரு பொருளும் கொடுப்பதில்லை. இவ்வாறே தன் கணவனையும் மாற்றிவிட்டாள். குமரனும் ஒரு கருமியாக மாறினான்.
வியாபாரம் தொடங்கிய காலத்தில் சிறு தொகை கூட அவனிடம் இல்லை. நண்பர்களிடம் கடன் பெற்றே வியாபாரம் தொடங்கினான் அன்று கடன் கொடுத்த அந்த நண்பர்களுக்கே இன்று ஒரு உதவி கூட செய்வதில்லை. தன் செயலால் செய் நன்றியை மறந்தான். பிற்காலத்தில் தான் உண்ணும் உணவு உடுக்கும் உடை முதலியவற்றில் கூட சிக்கனத்தை கடைப்பிடித்தான்.
ஊர் மக்கள் யாவரும் இந்த இரண்டு கருமிகளுக்கும் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். ஊர்மக்கள் முடிவினை செயல்படுத்த குமரனின் உறவினன் செல்லையா புறப்பட்டான்.
செல்லையா குமரனின் வீட்டிற்கு வந்தான் குமரனின் மனைவி அவனை வரவேற்று அமர வைத்தாள். குமரனின் மனைவி செல்லையாவிடம் நீங்கள் என்ன விஷயத்திற்காக அவரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று என்னிடம் கூறினால் நான் போய் அவரை அழைத்து வருகின்றேன் என்று கூறினாள். மதியம் எங்கே நம் வீட்டில் சாப்பிட்டு விடுவானோ என்ற கஞ்சத்தனம் அவளை அப்படி கேட்க வைத்தது. செல்லையா உடன் பதில் சொல்வதாக இல்லை அப்படியானால் நீங்கள் அவரை கடையில் போய் பாருங்கள் என்று கூறினாள் நான் கோயில் வரை சென்று வர வேண்டும் வீட்டை பூட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்று பொய் சொல்லி அவனை வெளியே அனுப்பி விட்டு வீட்டை பூட்டி விட்டாள். செல்லையா கடைவீதி சென்றதும் குமரன் மனைவி வீட்டிற்கு வந்து விட்டாள்.

செல்லையா கடைவீதி சென்றதும் குமரனைப் பார்த்து நான் வியாபார விஷயமாக உங்களை பார்க்க வந்துள்ளேன் என்று கூறினார். அப்படியா வாருங்கள் உட்காருங்கள் என்று வரவேற்றான், வெயிலில் வந்தவருக்கு தண்ணீர் கூட தர அவன் மனம் வரவில்லை. தண்ணீர் கொடுத்தால் எங்கே தண்ணீர் குறைந்து விடுமோ என்ற கஞ்சத்தனம். நான் பக்கத்து ஊரான செங்கோட்டையில் இருந்து வருகின்றேன். உங்கள் உறவினர்தான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எனக்கு பெரிய வாழைத்தோப்பு இருக்கின்றது அந்த வாழைத் தோப்பில் கிடைக்கும் இலை பழம், காய் முதலியவைகள் விற்பனை செய்ய தங்களிடம் ஒப்படைக்கலாம் என்று வந்தேன் என்று கூறினார். உடனே குமரனுக்கு மனதிற்கள் மகிழ்ச்சி இவனிடம் மிகக் குறைந்த விலையில் வாங்கிவிடலாம் என்று மனதிற்குள் எண்ணினான். நானும் உங்களின் வீட்டிற்கு வருகின்றேன் என்று கூறியதும் குமரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது இவனுக்கு எப்படி சோறு போடுவது. இவனுக்கு வீட்டில் சாப்பாடு போடக்கூடாது என்று மனதிற்குள் எண்ணினான். வாயளவில் சரி வா என்னோடு உனக்கு நல்ல சாப்பாடு போடச் சொல்கின்றேன் என் மனைவி மிகவும் நல்லவள் நன்றாக சமைப்பாள் என்று வேறு கூறினான்.

செல்லையாவுக்கு தெரியும் இவர்களுடைய கருமித்தனம், இருந்தும் சரி என்று குமரனின் வீட்டிற்கு வந்தான் குமரனும் செல்லையாவும் வருவதைப் பார்த்த குமரன் மனைவி வள்ளிக்கு இவனை எப்படி ஏமாற்றுவது என்று யோசிக்கத் தொடங்கினாள். வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்று அமரச் செய்தாள்.

தன் கணவனை கூப்பிட்டு அவரை ஏன் அழைத்து வந்தீர்கள் அவனுக்கு எப்படி நாம் விருந்து கொடுக்க முடியும். கொடுத்தால் நமது செல்வம் குறைந்து விடுமே என்று முணுமுணுத்தாள். இவர்களின் பேச்சைக் கேட்டதும் செல்லையா என்ன பேசுகின்றீர்கள் என்று கேட்டான். ஒன்றுமில்லை என்ன சமையல் என்று கேட்டேன். அதைத்தான் கூறுகின்றேன் என்று கூறினாள். குமரனும் செல்லையாவும் வியாபார விசயமாக பேசிக் கொண்டிருந்தனர்.

குமரனின் மனைவி வள்ளி தன் கணவனை மெல்லிய குரலில் அடுக்களையில் இருந்து கூப்பிட்டாள், என்ன? என்ன? என்று குமரன் உள்ளே சென்றான். வந்திருப்பவன் சரியான கெட்டிக்காரனாக இருப்பான் போல் இருக்கின்றது. நாம் எப்படி முயற்சித்தாலும் போகமாட்டான் போல் இருக்கின்றது, நா இங்கே கீழே கிடந்து புரண்டு புரண்டு அழுகின்றேன் நீங்கள் அந்த நெல் பெட்டி மீது அடியுங்கள். நீங்கள் அடிக்க நான் அழுவது போல நடித்தால் அந்த ஆள் வீட்டைவிட்டு போய் விடுவான். நாம் நடிக்க வேண்டியதுதான் என்று கூறினாள்.

குமரன் செல்லையாவிடம் பேசுவது போல பேசினான். வள்ளி வந்திருக்கும் விருந்தாளிக்கு உடனே சாப்பாடு போடு என்று கூறினான். நேற்றே உங்களிடம் கூறினேன் வீட்டில் மளிகை சாமான்கள் ஒன்று கூட இல்லை வாங்கி வந்து போடுங்கள் என்று கூறினேன். நீங்கள் வாங்கி வராது இப்போது விருந்து ஏற்பாடு செய் என்றால் நான் என்ன செய்வது என்று கூறினாள் முன்னால் வாங்கிய சாமான்கள் எங்கே உன்னை என்ன செய்கின்றேன் பார் என்று பேசி வைத்தபடி கம்போடு அவளை அடிக்க அடுக்களை சென்றான், அடுக்களையில் நெல்பானையின் மீது வேண்டுமென்றே படார் படார் என்று அடித்தான். அவன் மனைவி அழுவது போல நடிக்கத் தொடங்கினா. இவர்களின் நாடகத்தை நன்கு தெரிந்த செல்லையா அவர்கள் வீட்டு அறையில் அடுக்கி வைத்திருந்த சாமான்களின் பின்னே சென்று ஒளிந்து கொண்டான்.

சிறிது நேரம் வரை குமரன் சண்டையிட்டது போல செய்து விட்டு முன் கட்டிற்கு வந்தான் அங்கு செல்லையா இல்லாதது கண்டு ஆச்சரியப் பட்டான். வீட்டின் வாசல் வரை வந்து பார்த்தான். தெருக்கோடி வரை வந்து பார்த்தான். செல்லையாவைக் காணவில்லை மிக மகிழ்ச்சியோடு மனைவியை ஏய் வள்ளி நமது நாடகம் வெற்றி அடைந்தது. செல்லையா வீட்டை விட்டே போய் விட்டான் என்று கூறினான்.

வீட்டின் கதவை தாழிட்டான். வள்ளி பார்த்தாயா என் திறமையை என்று கூறினான்; சரி சரி சாப்பாட்டை எடுத்து வை எனக்கு பசிக்கின்றது அவனை அனுப்புவதே பெரும்பாடாகி விட்டது என்றான். வள்ளி சாப்பாட்டை எடுத்து வைத்தாள், சாப்பாட்டை பரிமாறிக் கொண்டே நான் சொன்னபடி செய்யவில்லை என்றால் இந்நேரம் அவன் போய் இருப்பானா என வள்ளி கூறினாள். இவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த செல்லையா முன் கட்டிலிருந்து அவர்களின் எதிரே வந்து நின்றான். நீங்கள் இருவரும் செய்த செயல்கள் யாவும் எனக்குத் தெரியும் இருப்பினும் கடைசியிலாவது திருந்துவீர்கள் என நினைத்து இருந்தேன். நீங்கள் திருந்துவதாக இல்லை கடைசியில் நாம் இறந்த பிறகு எதுவும் நம் கூட வரப் போவதில்லை என்பதை நன்கு தெரிந்திருந்தும் மனிதர்கள் ஏனோ இப்படி இருக்கின்றார்கள். நாம் செய்யும் நல்ல காரியங்கள் மட்டுமே நம்மோடு வரும் எனவே நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.
நீங்கள் இருவரும் செய்த செய்கையை நானே இந்த ஊர் மக்கள் அனைவரும் கூறும்படி செய்கின்றேன் பாருங்கள் என்று வீட்டை விட்டு வெளியே வர முயன்றான் உடனே வள்ளியும் குமரனும் செல்லையாவின் கால்களில் விழுந்து நாங்கள் அறியாமல் செய்த தவறினை மன்னித்தருளுமாறு வேண்டினர்.

செல்லையா சரி என்று ஒப்புக் கொண்டான். செல்லையாவிற்கு உணவு பரிமாறி உபசரித்தனர்.

அன்று முதல் வள்ளியும் குமரனும் புதிய மனிதர்களாக மாறினார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *