கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 3,428 
 
 

ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணியிருக்கும்.

பணக்காரர்கள், அரசியல் வாதிகள், பெரிய அதிகாரிகள் ஒதுங்கும் ஒரு கடற்கரை க்ளப். சீட்டாட்டம் , உயர் தர சாராயம், டின்னெர், அரட்டை எல்லாம் அங்கு அரங்கேறிக்கொண்டிருக்கும் நேரம் . எங்கும் கோலாகலம், சந்தோஷம், சிரிப்பு, பணத்திமிர், குடிபோதை.

ஒரு ஓரத்தில், கிட்டத்தட்ட பத்து பேர் அமர்ந்து உயர் தர விஸ்கியை உள்ளே தள்ளியவாறு கதை அடித்துக் கொண்டிருந்தனர். முதலாளிகள், பண முதலைகள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபதிகள்.

பேச்சு பண பலம் பற்றி திரும்பியது.

பிரபு சொன்னான் “ஒரு நாடு சுபிக்ஷமாக இருக்கணும்னா, அந்த நாட்டிலே, பணக்காரர்கள் நிறைய இருக்க வேண்டும். அவர்கள் செலவு பண்ணினால்தனே ஏழைகளுக்கு சாப்பாடு கிடைக்கும் . என்ன நான் சொல்றது”. பிரபு ஒரு பெரிய தொழிலதிபர்.

அதற்கு தாளம் போட்டான் , ராகவன் , ரியல் எஸ்டேட் அதிபதி. “ ஆமாமா ! பணம் இருந்தால் தான் நம்மை மதிக்கிறாங்க ! இல்லாட்டி போட்டு மிதிக்கறாங்க” சிரித்தான்

“இதை நான் ஒப்புக்க மாட்டேன்” குரல் எழுந்தது பக்கத்திலிருந்து. குரல் கொடுத்தது ஹரிச்சந்திரன், எனும் ஹரி. அவனுக்கு கிட்டத்தட்ட பிரபுவின் வயது தான் இருக்கும். ஹரி ஒரு காலத்தில், கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த பிசினெஸ் புள்ளி. அப்போது ஹரியும் பிரபுவும் நண்பர்கள் . இப்போது ஹரி நொடித்துப் போனவன். ஆனாலும், கிளப்பின் பழைய உறுப்பினன் என்பதால், எப்போதாவது வருவான்.

ஹரியின் குரலை யாரும் சட்டை செய்யவில்லை. ஏழையின் குரல் அம்பலம் ஏறுமா? ஆனால், கிளப்பின் சிலரது பார்வை, ஹரியின் பக்கம் திரும்பியது .

ஹரி, தன் கையில் சாராயக் குப்பியை எடுத்துக் கொண்டே மீண்டும் சொன்னான் . “ பணம் படைத்தவர்கள் ஒன்றும் பெரிய படித்த அறிவாளிகளோ, , உழைப்பாளர்களோ, புத்திசாலிகளோ அல்ல . உண்மையில், அவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள், திருடர்கள். ஏழைகள் ஏழைகளாக இருக்க காரணம், அவர்களை பணக்காரர்கள் கண்கட்டி மோசடி செய்கிறார்கள். அதற்கு அரசு வேறு உடந்தை “

பிரபு கோபமாக சொன்னான் “உளறாதீங்க ஹரி! நீங்க வியாபாரத்தில் திறமை இல்லாமல் தோற்றால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு! என் பணக்காரங்களை திருடன்னு சொல்றீங்க?”

ஹரி “நீங்க அடாவடி பண்ணி ஏழைகள் வயித்திலே அடிக்கிறீங்க?”

பிரபு “அப்படி என்ன நாங்க பண்ணிட்டோம்? நாங்க மட்டும் இல்லைன்னா, தொழிர்சாலைகள் இல்லன்னா, ஏழைகள் சாப்பட்டுக்கு திண்டாடனும் தெரியுமா?”

ஹரி காட்டமாக “இந்த பணக்காரங்க பண்ற அயோக்ய தனத்துக்கு மேலுலகத்திலே, சொர்கத்திலே இடமே கிடையாது”

பிரபு பதிலுக்கு “உங்க முட்டாள்தனத்துக்கும், சோம்பேறி தனத்துக்கும், கோழைத்தனத்துக்கும், கடவுள் உங்களுக்கு இந்த உலகத்திலேயே நரகம் கொடுத்திட்டானே ! அதுக்கு என்ன பண்றது ?

கூடியிருந்தவர் சிரித்தனர். ‘சபாஷ், சரியான போட்டி !’

ஹரிக்கு குடி போதையில் கோபம் பொத்துக் கொண்டு வந்தது . “யாரை பார்த்து முட்டாள் என்கிறாய்? என் நேர்மைக்கு முன் நீ ஒரு தூசு”.

பிரபு “போதும் நிறுத்து! உன் வியாபர லக்ஷணம் பத்தி எனக்கு தெரியும் . நல்லா பண்ணியிருந்தா ஏன் இப்படி நடுத்தெருவிலே நிக்க போறே?”.

ஹரியின் கோபம் எல்லை மீறியது ! “என்னையா சொன்னே ?” என்று தள்ளாடி போய் பிரபுவை நெருங்கினான். பிரபு லாகவமாக ஒரு அடி பின்னே போய் , ஹரியை கீழே தள்ளினான். பின்னர் அருகில் சென்று , ஹரியின் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்தான்.

க்ளப்பே நிசப்தமானது . ஹரி, தள்ளாடி கொண்டே எழுந்து “விட்டேனா பார் உன்னை! உன்னை ஒழித்துக் கட்டுகிறேன் . இல்லை, என் பேர் ஹரி இல்லை” என்று சபதமிட்டான்.

பிரபு “உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்”.

ஹரி தன் கையிலிருந்த சாராய குப்பியை பிரபுவை பார்த்து விட்டெறிந்தான். பிரபு தலையை குனிந்து கொள்ள, குப்பி ராகவன் மண்டையை நோக்கி வின் கல்லாக இறங்கியது லேசான காயம்.

அப்போது க்ளப்பின் மேனஜேர் அங்கே ஓடி வந்தார் “என்ன நடக்குது இங்கே?”

பிரபு உடனே சொன்னான் “எங்கள் பேரில் கண்ணாடி குப்பியை எறிந்தான். ஹரி. ராகவனுக்கு மண்டையில் அடி. இப்போதே ஹரியின் பேரில் மான நஷ்ட வழக்கு, கிரிமினல் வழக்கு போட போகிறேன். இன்சூரன்ஸ் கேட்க போகிறேன் “

கேட்டுகொண்டிருந்த மேனஜேர் இடையில் புகுந்தார். ஹரியையும், பிரபுவையும் தனியே அழைத்து சென்றார். “பிரபு சார், கோர்ட், வழக்கு இது எதுவும் வேண்டாம். க்ளப் பேர் கெட்டுப் போயிடும். எங்க பேர்லே தான் கவனக் குறைவு அப்படின்னு கோர்ட் சொல்லிடும். அதனாலே, இதை இப்படியே முடிச்சிக்கலாம் . நான், க்ளப் சார்பிலே ஐம்பது லட்சம் கொடுக்க ஏற்பாடு பண்றேன். இதை இப்படியே விட்டுடுங்க ப்ளீஸ். ஹரி சார், இனிமே கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க “

பிரபு அரை மனதாக ஒப்புக் கொண்டான். “சரி, மேனஜேர் சார், நீங்க சொல்றதாலே இப்படியே விட்டுடறேன். நீங்க பணத்துக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க”.

“அப்பாடா! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே நகர்ந்தார் மேனஜேர்.

***

அடுத்த நாள். பிரபு ஹரியை ஒரு ஓட்டலில் சந்தித்தான். “இந்தாடா ! நீ கேட்ட ஐம்பது லட்சம். அன்பளிப்பா வெச்சுக்க “

ஹரி ரூபாயை வாங்கி கொண்டான் . “ரொம்ப தாங்க்ஸ் பிரபு! அருமையான ஐடியா!”

பிரபு சொன்னான் “சமயத்திலே, இந்த மாதிரி ஐடியா, பணக்காரர்களுக்கு மட்டும் தான் வரும் ”

ஹரி “அதுவும் சரிதான்”. சிரித்தான் .

courtesy : ஜெப்ரி ஆர்செர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *