கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 25, 2012
பார்வையிட்டோர்: 8,949 
 

அவசர அவசரமாக அனைவரும் இயங்கிக் கொண்டிருந்தனர். கடிகாரம் மட்டும் ஆறு மணியை வெகு சாவகாசமாக நெருங்கிக்கொண்டிருந்தது. அவர்களின் அவசரத்திற்குக்காரணம் மழை. காலையிலேயே போக்கு காட்டிக்கொண்டிருந்தது. மத்தியானம் தரையிறங்கி, இப்போது மாலையில் விஸ்வரூபமெடுத்திருந்தது. என்னத்த மழ வரப்போகுதுன்னு நெனச்சு குடையை எடுக்காது வந்தது மெத்தனம். சரியாகப் பிடித்துக் கொண்டது.

ம்… இனி சர்ச்கெட் வரை நடந்து போய் கெடைக்கிற “போரிவலி” லோக்கலைப் பிடித்து, பின் அங்கிருந்து நடந்து, இந்த மழையில இதெல்லாம் இமாலய செய்கைகளாக தோன்றிற்று எனக்கு. ஒருவாறாக வேலையை முடித்துவிட்டு கிளம்பினேன். மழை போராடிக் கொண்டிருந்தது. நீர்த்திவலைகளே கண்ணுக்குத் தெரியாமல் சின்டஃஸ் டேங்க்கை கவிழ்த்தது போல் கொட்டிக்கொண்டிருந்தது.

“ஜல்தி சலோ பாய்”… பின்னாலிருந்தவன் நெட்டித்தள்ளாத குறையாய் இடித்துக்கொண்டு முன்னேறினான். ஈறாஸ் தியேட்டர் வாசலிலிருந்து ரோட்டைக் கிராஸ் பண்ணுவதற்குள் தெப்பமாக நனைந்திருந்தேன். கையிலிருந்த டைரி நல்லவேளை பிளாஸ்டிக் கவர் நனையவில்லை. நாளைக்கான வேலைக்குறிப்புகள்.

ஸ்ட்டேஷனுக்குள் நுழைந்து நாலாவது பிளாட்ஃபார்மில் வந்து வண்டிக்காக காத்திருக்கத்தொடங்கினேன். கண்ணில் பட்டது குடை விளம்பரம். வெறுப்பில் வேறுபக்கம் பார்வையைத் திருப்பினேன். 6:25 என கடிகாரம் நேரத்தைக்காட்டிக் கொண்டிருந்தது. மழை இன்னும் சீற்றம் குறையவே இல்லை. ம்… பல நாள் பாவத்தப் பொறுத்துக்கலாம்… ஒரு நாள் புண்ணியத்த பொறுத்துக்க முடியாது.

இண்டிகேட்டரில் “போரிவலி” என வந்ததும், அனைவரும் போருக்குத்தயாரானார்கள் ஸீட் பிடிக்க. நானும்தான்… வந்தது வண்டி. திமுதிமுவென ஏறியது கூட்டம். இடித்து பிடித்து ஏறி 2ஆவது ஸீட்டைப் பிடித்து (அதிர்ஷ்டம் தான் இன்னிக்கு) அமர்ந்து தலையை ஏற்கனவே பேண்ட்டுக்குள் நனைந்திருந்த கர்ச்சீப் கொண்டு துடைத்துவிட்டேன்.

ஓடிக்கொண்டிருந்தது வண்டி. தாதர் வந்ததும் கூட்டம் செம்மியது. நெருக்கமும் புழுக்கமும். ஏன் தான் இந்த மழை பெய்கிறதோ என நினைக்க வைத்தது. சன்னல் கதவை வேறு மூடி வைத்திருந்தனர். சாரல் அடிக்குமென்று.

பார்வையை பக்கத்து ஸீட்களில் ஓட்டினேன். மும்முரமான சீட்டுக் கச்சேரி. பொழுது போகிறது அவர்களுக்கு. தடதடவென ஓடிக்கொண்டிருந்த வண்டி நின்றது சிக்னலில். மழை நின்ற பாட்டைக் காணோம்.

ஒரு சின்ன விஷயம். இத்துனூண்டு. வெறுமனே தலைய மட்டும் நனைய விடாம, மற்ற பாகங்களில் விழுகிற மழைத்தண்ணிய தடுக்க இயலாத அல்பம் சின்னக்குடை. இது மனுஷன எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்குது. ச்சீ.. நாளைக்கு எடுத்துட்டு வந்தே ஆகணும்.

ஒரு வழியாக “அந்தேரி”யைக் கடந்து “போரிவலி” வந்து (சோ)ர்ந்தது வண்டி. இறங்கி அவரவர் குடையைப் பிடித்துக்கொண்டு நடையைக்கட்டினர். எனக்குத் தான் முடியல. அழுகை வந்தது.

வெள்ளம் போல ரோடுகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அப்போதிருந்தே கவனித்துக் கொண்டிருந்தேன். காத்துக் கொண்டிருந்தாள் அவளும் மழை நிற்கட்டும் என்று. ம்… நமக்கு ஒரு துணை என்று அந்த எரிச்சலிலும் ஒரு சந்தோஷம்.

எல்லோரும் போய்விட்டனர் நாளைக்கு காலையில் ஞாபகமாக குடையை எடுத்துக்கொண்டு ஆபீஸ் வருவதற்கு. நானும் அவளும் மட்டும் தான் பாக்கி. சுற்றும் முற்றும் பார்த்தேன். நப்பாசை. யாராவது குடையில் லிஃப்ட் தரமாட்டார்களா என்று… ம்ஹூம்ம்… குடை எனக்கு இப்போது கிடைத்தற்கரிய தேவாமிருதமாகத் தோன்றியது.

ம்… வருது ஒரு கெழம்… எப்படியாவது பிடிச்சு இதோட போயிர வேண்டியதுதான்னு, நெனைச்சிக்கிட்டு இருக்கும்போதே கெழம் அந்தப் பொண்ணுகிட்ட போய் இளிச்சு… அவளையும் குடையில் கூட்டிக்கிட்டு போயே விட்டது.

நான் நாளைக்கு குடைய மறந்தாலும் பரவால்ல… சேலையக் கட்டிக்கிட்டு வரணும்னு நெனச்சிக்கிட்டேன்!

– ஜூலை 2010

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *