மார்க் தரும் நற்செய்தி

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 9,183 
 

(ஜோர்ஜ் லுய் போர்கெஸ் (Gorge Luis Borges) 1899-1986. பயனஸ் ஏர்ஸ் (அர்ஜெண்ட்டைனா)ல் பிறந்தவர். தொடக்கக்கல்வி சுவிஸ் நாட்டில். முதல் உலகபோருக்குப்பிறகு ஸ்பெயின் நாட்டில் குடியேறிய அவரது குடும்பத்தினர் இரண்டு ஆண்டுகள் அங்கே வாழ்ந்தனர். 1921லிருந்து அர்ஜெண்ட்டைனாவுக்குத் திரும்பினார்கள். சொந்த மண்ணுக்கு திரும்பியது முதலே இலக்கியத்தில் நாட்டம். இலக்கிய சஞ்சிகையொன்றை ஆரம்பித்து நடத்தினார். முதல் கவிதைத்தொகுப்பு 1923ம் ஆண்டு வெளிவந்தது. 1938ம் ஆண்டு அவரது தந்தை இறந்ததும் வேறுவழியின்றி நூலகராக எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1955ம் ஆன்டு பெரோனிஸ்டு கட்சி (Peronist Party)யின் அரசு கவிழ்ந்தபோது தேசிய நூலகத்தின் இயக்குனராகப் பொறுபேற்றார். மொழித்துறை பேராசிரியராகவும் பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது. தேசிய மொழி அமைப்பின் அங்கத்தினராகவும் பணிபுரிந்தவர். தேர்ந்த கதைசொல்லி, கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். மிகை எதார்த்தவாதி, நவீன இலக்கியவாதிகளில் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியவர். கடந்த நூற்றாண்டு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தகுத்தவர். இச்சிறுகதை Le rapport de Brodie என்ற பிரெஞ்சு வடிவ தொகுப்பிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.)

1928ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஜூனன் (அர்ஜெண்ட்டைனா) பேருராட்சிக்கடங்கிய கொலராடோ பகுதியில் நடந்த சம்பவமிது. சம்பவத்தின் நாயகன் பல்டசார் எஸ்பினோஸா, மருத்துவம் படிப்பவன். மேடையில் நன்றாகப்பேசுவான், ராமோஸ் மேய்ஜியா கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பரிசுகளை அதற்காக வாங்கியும் இருக்கிறான், பொதுவாக பலரும் எதிர்பார்க்கிற ஒழுக்கம் கணிசமாக கைவசமிருக்கிறது. இவற்றைத் தவிர அவனைக்குறித்து பெரிதாக எதுவும் ஞாபகத்திலில்லையென்பதால் தற்போதைக்கு பயனோஸ் ஏர்ஸ் நகர இளைஞர்களில் ஒருவனென சொல்லிவைக்கிறேன். அவன் எதிராளிகள் பேச்சு நியாயமானவையென நினைப்பவன் ஆக விவாதித்து என்ன ஆகப்போகிறது என்ற கட்சி; பந்தய விளையாட்டுகளில் நிறைய ஆர்வமிருந்தும், சாமர்த்தியம் காணாது, அப்படியே தப்பிதவறி ஜெயித்தாலும் பிறருக்கு எப்படியோ, நம்முடைய கதைநாயகனுக்கு அதிற் சங்கடங்களிருந்தன. அவனது ஞானத்தின் செயல்பாடு குறித்து ரகசியங்கள் ஏதுமில்லை, நெட்டி முறித்துக்கொண்டிருந்தான்: முப்பது மூன்று வயது, மருத்துவ பட்டம் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. ஒரே ஒரு பாடம், பிடிபடமாட்டேன் என்றது, தேர்வு முடிவு சாதகமாக இருந்ததில்லை, இத்தனைக்கும் விருப்பமான பாடமென்று பேர். ஆக சம்பவத்தின் போதும் மருத்துவம் படிக்கும் மாணவன். நம்முடைய ஹீரோவின் தந்தை அக்காலத்திய எல்லா பெரியமனிதர்களையும் போலவே ஒரு முற்போக்கு ஆசாமி, மகனுக்கு ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் சிந்தனைகளையெல்லாம் ஊட்டியிருந்தார். அம்மா வேறு மாதிரி, மோந்த்விடியோவிற்கு பயணப்பட்ட முதல் நாள்கூட மகனிடம் ஒவ்வொருநாளும் ஜெபிப்பதும் சிலுவைபோடுவதும் தவறக்கூடாதெனக் கண்டிக்கும் குணம். கடந்த பல வருடங்களாக தாய் சொல்லை தட்டாத மகனாகத்தான் இருந்திருக்கிறான். தைரியத்திற்கும் குறைவில்லை; ஒரு முறை, போராட்டமொன்றில் கலந்துகொள்ளவேண்டுமென்று சகமாணவ நண்பர்கள் இவனை வற்புறுத்த மூண்ட சண்டையில் நண்பர்களுடன் இரண்டு அல்லது மூன்று குத்துகளை இறுக்கமான முகத்துடன் பரிவர்த்தனை செய்துகொண்டிருக்கிறான், அப்போதுகூட கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டவனில்லை. செயல்பாடுகளிலோ, கருத்துகளிலோ பிறரிடம் முரண்படும் சந்தர்ப்பங்களில், விட்டுக்கொடுக்கும் குணமும் நமது நாயகனுக்கு உண்டு. சிவப்பிந்தியர் பிரச்சினை சொந்த நாட்டில் அவனைப் பெரிதாக பாதித்ததில்லை, மற்ற நாடுகளில் கவலைகொள்ளவைத்தது; பிரான்சு நாட்டின்மீது மரியாதை இருந்தது ஆனால் பிரெஞ்சுமக்கள் கசந்தார்கள்; அமெரிக்கர்களைப் பற்றி பெரிதாக அபிப்ராயங்களில்லை எனினும் பயனோஸ் ஏர்ஸ் நகரை பார்க்கிலும் அங்கே உயரமான கட்டடங்கள் இருக்கின்றன என்பதில் உடன்பாடுண்டு; மலைப்பிரதேசத்து கௌச்சோஸ்(1)க்களைக் காட்டிலும் சமவெளிப் பிரதேசத்து கௌச்சோஸ்க்கள் குதிரைகளைக் கையாளுவதில் வல்லவர்களென நினைத்தான். ஒன்றுவிட்ட சகோதரன் டானியல் கோடைக்குக் கொலராடோ பகுதியைச்சேர்ந்த பண்ணைக்கு அழைத்திருந்தபோது, உடனே சம்மதித்தான் அவசரப்படாதீர்கள்! அதனைவைத்து பண்ணை வாழ்க்கை அவனுக்கு பிடித்தமானது என்கிற முடிவுக்கெல்லாம் வந்துவிடாதீர்கள். சகோதரனின் வேண்டுதலை மறுக்க போதிய நியாயங்கள் கிடைக்கவில்லை என்பதும், இயல்பாகவே அவனிடமுள்ள நல்ல குணமும் அதற்கான காரணங்களே தவிர நீங்கள் நினைத்ததில்லை.

பண்ணை வீடு மிகப் பெரியது, கொஞ்சம், கவனிப்பாரற்றுமிருந்தது. பண்ணையாள் குடியிருப்பான கூத்ரே (gutre) கூப்பிடு தூரத்திலிருந்தது. கூத்ரே வாசிகளென்று மொத்தம் மூன்றுபேர்: தந்தை, மகன் (சரியான கல்லுளிமங்கன்) அடுத்து ஒர் இளம்பெண். அவளுக்கும் அவர்களுக்குமான உறவை சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. மூவருமே நல்ல உயரம், நல்ல சுறுசுறுப்பு, திடமான சரீரம், சிவந்த தலைமயிர் என்பதோடு முகத்தில் செவ்விந்தியர் வழிவந்தவர்கள் என்பதற்கான அடையாளத்தையும் கொண்டிருந்தனர். மூவரும் அதிகம் பேசுவதில்லை. தந்தைபோலவிருந்த ஆசாமியின் மனைவி இறந்து ஆண்டுகள் பல கடந்திருந்தன.

உலகில் நாம் அறியாத விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றன என்பதை பண்ணைக்கு வந்த பின்புதான் எஸ்ப்பினோஸா புரிந்துகொண்டான். அவற்றின் சாத்தியங்கள் குறித்து இதற்குமுன்பு அவன் சந்தேகித்ததுகூட இல்லை. உதாரணமாக வீட்டை நெருங்குகிறபோது குதிரையை நிதானமாக செலுத்தவேண்டும், பாய்ச்சலை அனுமதிக்கக்கூடாது; அவ்வாறே குதிரைமீது அமர்வதற்கு முன்பாக என்ன செய்யப்போகிறோம் என்பதில் தெளிவுவேண்டும் அமர்ந்தபின் யோசித்துக்கொண்டிருக்கக்கூடாது, அதற்கு சாத்தியமில்லையெனில் குதிரையைத் தொடக்கூடாது. வந்த சில தினங்களில் பறவைகளிடும் சத்தத்தை வைத்து அவற்றின் பெயரைச் சொல்லும் அளவிற்கு தேர்ச்சிப் பெற்றிருந்தான்.

எஸ்ப்பினோசா பண்ணைக்கு வந்து சில நாட்கள் ஆகியிருந்தன. அவனது சகோதரன் டானியல் இறைச்சிக்காக காலநடைகளை வளர்த்து வந்தான். அவற்றின் விற்பனைக்காக வியாபரிக¨ளைப் பார்க்கவேண்டியிருந்தது, எனவே தலைநகருக்குப் போயிருந்தான். அவன் திரும்புவதற்கு ஒருவாரம் ஆகுமென்று சொல்லப்பட்டது. சகோதரனின் செல்வம் குவித்த கதைகளையும், ஆண்களுக்கான ஆடை அலங்காரத்துறையில் அவனுக்கிருந்த ஆர்வங்களையும் தினந்தோறும் கேட்டு அலுப்புற்ற எஸ்ப்பினோஸா என்ன இருந்தாலும் தன்னுடையே படிப்பும் பாடப்புத்தகங்களும்போல வருமாவென நினைத்துக்கொண்டான். பகலில் மாத்திரமல்ல இரவிலுங்கூட வெப்பத்தின் கடுமை பண்னையில் தெரிந்தது. ஒருநாள் அதிகாலையில் இடிமுழக்கம் கேட்டு விழித்துக்கொண்டான். காற்றடித்த வேகத்தில் சவுக்கு மரங்கள் குலுங்கின. முதல் மழைத்துளி விழுந்ததோ இல்லையோ எஸ்ப்பினோஸா ‘நன்றி கடவுளே’! என்றான். சட்டென்று குளிர்ந்த காற்று மேலெழும்பி வீசியது. சலாடோ நதி கரை புரண்டது.

மறு நாள்காலை பண்னைவீட்டு தாழ்வாரத்தில் நின்றவண்ணம் நீரில் மூழ்கியிருந்த விளைநிலங்களைக் கண்ட பல்ஸ்ட்டார் எஸ்ப்பினோஸாவுக்கு ஹட்ஸன்(2) எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. கப்பலில் இருந்தபடி பார்க்கிறபோது கடல் நமக்கு மிகவும் பெரிதாகத் தோன்றுமென்றும், குதிரைமீதமர்ந்தோ அல்லது சராசரி மனிதர் உயரத்திற்கு கூடுதலான இடத்தில் நின்று பார்த்தாலோ அவ்வாறு தோற்றம் தராதெனவும் அவர் சொல்லியிருந்தார். பம்ப்பாவை(3) கடலோடு உவமானப்படுத்திபேசுவது மற்ற நேரங்களில் எப்படியோ இந்த நேரத்திற்குச் சரிவராதென நினைத்துக்கொண்டான். மழை குறைந்தபாடில்லை. தொடர்ந்து கொட்டிக்கொண்டிருந்தது. கூத்ரே வாசிகள் நமது நகரத்து ஆசாமி உதவியுடன் (உபத்திரவத்துடன்?) ஓரளவிற்குக் கணிசமான அளவில் கால்நடைகளைக் காப்பாற்றமுடிந்தாலும், ஏராளமான விலங்குகள் வெள்ளத்தில் மிதந்தன. கொலராடோவை வெளியுலகத்தோடு இணைக்கக்கூடிய நான்கு வழிகளும் வெள்ளத்தில் மூழ்கின. மூன்றாம் நாள் பண்ணையாளின் குடியிருப்பிலும் வெள்ளம் புகும் அபாயம். கூத்ரே வாசிகள் மூவரையும் அழைத்து பண்ணைவீட்டில் கூடத்தில் கடைசியாக இருந்த அறையில் தங்கிக்கொள்ளுமாறு பணித்தான். விவசாயக் கருவிகளையும், பிறதளவாடங்களையும் போட்டுவைக்கிற இடத்திற்கு அருகே அவ்வறை இருந்தது. இப்புதிய இடப்பெயர்வு இருதரப்பும் நெருங்கிவர உதவிற்று. பண்னைவீட்டிலிருந்த உணவு கூடத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடமுடிந்தது. உரையாடல் மட்டும் இறுக்கமாக நடந்தது. கூத்ரே வாசிகளுக்கு கிராமத்தைப்பற்றிய எல்லா செய்திகளும் தெரிந்திருந்தன. ஒரு நாள் இரவு, ராணுவப் படைப்பிரிவொன்று தங்கியிருந்தபோது நடந்த சிவப்பு இந்தியர்களின் தாக்குதல் அவர்களுக்கு ஞாபகமிருக்குமாவென எஸ்ப்பினோசா கேட்டதற்கு, ஆமாம் நன்றாக நினைவிலிருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் இவன் முதலாம் சார்லஸ் தலை வெட்டப்பட்டது நினைவிருக்கிறாவெனக் கேட்டிருந்தால் கூட, தெரியுமென்று தலையாட்டி இருப்பார்கள். கிராமப்புறங்களில் நீடித்த ஆயுளுடன் வலம் வரும் எல்லா சம்பவங்களுமே பலவீனமான நினைவுகளைக் கொண்டதாகவோ அல்லது தோராயமான காலங்களைக் கொண்டதாகவோ இருக்குமென்று அவன் தந்தை அடிக்கடி கூறியது நினைவுக்கு வந்தது. கௌச்சோஸ்களுக்குப் பொதுவாக பிறந்த ஆண்டும் தெரியாது பெற்றோர் யாரென்றும் தெரியாது அதைத் தெரிந்து என்ன ஆகப்போகிறதென நினைப்பவர்கள்.

பண்ணைவீட்டில் புத்தகங்கள் சிலவும் இருந்தன: ‘பண்ணை’ சஞ்சிகை இதழின் வரிசைத்தொகுப்பொன்று, கால்நடைமருத்துவம் பற்றிய நூலொன்று, அதிக விலைபெறுமதியுள்ள ‘தபாரே'(4)பிரதி, மாமிசத்திற்காக அர்ஜெண்ட்டைனா நாட்டில் வளர்க்க்கப்படும் கொம்புகுறைந்த மாடுகளைபற்றிய புத்தகமொன்று, ஒன்றிரண்டு ஆபாச நாவல்கள், துப்பறியும் புதினங்கள், அண்மையில் வெளிவந்த Don Segundo Sombra என்பன அவற்றுள் சில. மாலை வேளைகளில் ஏதாவது செய்தாகவேண்டிய கட்டாயத்தில் படிப்பறிவற்ற குடியானவர்களுக்கு அவற்றிலிருந்து இரண்டொரு அத்தியாயங்களைப் எஸ்ப்பினோஸா வாசிப்பது வழக்கம். ஆனால் மாட்டு மந்தைகளை ஓட்டிச்சென்று அழைத்துவரும் பண்ணை ஆளுக்கு அவனுடைய வாழ்க்கையே சாகசங்களை கொண்டிருக்கிறபோது எதற்காக அடுத்தவர் சாகசங்கள் என்பதுபோல அவன் ஆர்வம் காட்டுவதில்லை. அவசிய பொருட்களை சுமந்துசெல்ல ஒரு பொதிவிலங்கு எப்போதும் கூடவே இருப்பதால் மாடுமேய்க்கும் தொழிலில் சிரமங்களில்லையென்றும், இத் தொழிலே இல்லையெனில் கோமெஸ் காயல் (Gomez lagoon), எல் ப்ரகாடோ (El Bragado), நு·பியெஸ் (Nufiez), சக்கபுக்கோ (Chacabuco) ஆகியவற்றைக் கண்டிருக்கமாட்டேன் என்றும் கூறினான். சமையலறையில் கித்தார் ஒன்றிருந்தது மாலையில் சிலசமயம், நான் சொல்லவிருக்கிற சம்பவத்திற்கு முன்பாக, கூலிகள் வட்டமாக அமர்ந்துகொள்வார்கள், ஒருவன் மாத்திரம் கம்பிகளைத் தொட்டுத் சுண்டி வாசிக்க முயன்று இயாலாமற்போனது. எனினும் அப்படிப்பட்ட மாலைவேளைகளை ‘கித்தார் மாலைப்பொழுதுகள்’ என அவர்கள் சொல்லிக்கொணதுண்டு.

எஸ்ப்பினோஸா முகச்சவரம் செய்ய மறந்து தாடி வளர்த்திருந்தான். கண்ணாடியின் முன் நின்று தனது முகத்த்தைப் பார்த்துக்கொள்வான் அந்நேரத்தில் பயனோஸ் ஏர்ஸ் திரும்புவதைப் பற்றியும் அங்கே நண்பர்களிடம் சலோடாவினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை மூச்சுவிடாமல் சொல்ல நேருமெனவும் எண்ணிக்கொண்டான். அதிசயமாக அவன் இதுவரை போகாத அல்லது போவதற்கு வாய்ப்பு அமைய சாத்தியமிராத இடங்களை நினைத்தும் வருந்தினான்: கார்பெரா வீதியில் தபால் பெட்டியுள்ள இடம், ஓன்ஸ் திடலருகில் ஜூஜி வீதியின் நுழைவாயில் முகப்பில் செங்கல்லும் சுண்ணாம்புகொண்டு உருவாக்கபட்டுள்ள இரு சிங்கங்கள், தரையில் ஓடுகள் பதிக்கப்பட்ட மளிகைக் கடை (தற்போது அது எங்கிருக்கிறதென்ற நினைவுகூட இல்லை). அவன் தனித்திருக்கின்ற செய்தி அவனுடைய தந்தைக்கும், சகோதரர்களுக்கும் இந்நேரம் டானியல் மூலமாக போயிருக்கும். சொல்லியலின்படி தனித்திருக்கிறான் என்ற சொல் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் உண்மையாகியிருக்கிறது. வெள்ளச் சம்பவத்திற்குப் பிறகு ஒருநாள் வீட்டை ஆராய்ந்தபோது வேதப்புத்தகத்தின் ஆங்கிலப் பிரதியொன்று கிடைத்தது. புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் கூத்ரீக்கள் – அதுதான் அவர்களுடய ஆரம்பப் பெயர்- அவர்களுடைய வரலாற்றை எழுதியிருந்தனர். அதன்படி இன்வெர்னெஸ் (Inverness) என்ற இடத்திலிருந்து வந்தவர்கள் ஆகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் அவர்கள் கூலிகளாக (peons) வந்தவர்கள் என்பதில் ஐய்யங்களில்லை. அதன்பிறகு உள்ளூர் சிவப்பிந்திந்தியர்களுடன் அவர்கள் இனம் கலந்துவிட்டது. 1870க்குப் பிறகு அவர்களைப் பற்றிய வேறுதகவல்களில்லை. ஆங்கிலத்தை மறந்துபோனார்கள். அவர்களை நமது எஸ்ப்பினோஸா அறியவந்த காலத்தில் ஸ்பானிய மொழிக்கும் கடும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. கடவுள் நம்பிக்கை அவர்களுக்கில்லை, அனால் அவர்கள் குருதியில் கல்வினிஸ்டுகளின் தீவிர மத அபிமானத்திற்குரிய சாயல்களும், பம்ப்பா சிவப்பிந்தியர்களுக்கேயுரிய மூடநம்பிக்கைகளும் நிறைய இருந்தன. எஸ்ப்பினோஸா தான் கண்டெடுத்த வேதப்புத்தகத்தைப்பற்றி பண்ணையாட்களிடம் பேசினான், ஆனால் அவர்கள் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.

புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினான், அவன் விரல்கள் மார்க் தரும் நற்செய்தியில் வந்து நின்றன. மொழி பெயர்க்க பழகிக்கொள்ள்ளும் வகையிலும், அவர்களுக்கு ஏதேனும் புரிகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளும் வகையிலும், இரவு உணவிற்குப்பிறகு அதிலிருந்து சிலப் பக்கங்களை வாசிப்பதென தீர்மானித்தான். மிகவும் கவனத்துடன் கேட்கத் தொடங்கி, சற்று நேரத்திற்குப் பின்னர் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டவர்களாக அவர்கள் வெளிப்படுத்திய அமைதி வியப்பில் ஆழ்த்தியது. புத்தகத்தின் அட்டையில் பதித்திருந்த பொன்னெழுத்துகள் இவனது மரியாதையை அவர்களிடத்தில் உயர்த்தியிருக்கக்கூடும். அவர்கள் குருதியின் குணமாக அதைக் கருதினான். மனிதர்கள் தங்கள் ஆயுட்காலத்தில் இரண்டு கதைகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதுண்டு: தங்களுக்கு விருப்பமானத் தீவைத்தேடி மத்தியதரைக் கடலில் அலையும் வழிதவறிய படகின்கதை முதலாவது, கல்வாரி மலையில் தம்மை சிலுவையில் கடவுள் அறைந்துகொண்ட கதை இரண்டாவது. ராம்ப்போ மெய்ஜியா வீதியில்(கல்லூரியில்) அவனாற்றிய சொற்பொழிவாக நினைத்துக்கொண்டு பண்ணையாட்களுக்கு வாசித்துக் காட்டினான். நீதிவாக்கியங்கள் வருகிறபோது எழுந்து நின்று வாசித்தான். கூலிகள் தீயில் வாட்டிய இறைச்சியையும், சர்தின் மீனையும் அனுப்பி நற்செய்தி வாசிப்பினை நேரத்திற்கு வாசிக்கும்படி பார்த்துக்கொண்டனர்.

கூலிகள் மூவரில் ஒருத்தியான இளம்பெண், நீல ரிப்பன் கட்டி அலங்கரித்து பெட்டை ஆடொன்றை வளர்த்துவந்தாள். ஒருநாள் அது கம்பிவேலியில் சிக்கியதில் காயமுற்று இரத்தம் வழிந்தது. சிலந்திவலையைக் காயத்தில் வைத்து கட்டுபோட இரத்தம் நின்றுவிடுமென்று தெரிவித்து அவர்கள் முனைந்தபோது, இவன் குறுக்கிட்டு சில இனிப்பு மாத்திரைகளைக் கொடுத்து குணப்படுத்தினான். அதற்குப் பிறகு கூத்ரேக்களிடம் இவனுடைய மரியாதை கூடியிருக்கக் கண்டான். வந்தபுதிதில் அவர்களைச் சந்தேகித்து ஊரிலிருந்து கைச்செலவுக்கென கொண்டுவந்திருந்த 240 பெசோக்களை புத்தகங்களுக்கிடையில் ஒளித்து வைப்பதுண்டு. இப்பொழுதோ அவர்களின் முதலாளி ஊரில் இல்லாததால் தற்காலிக ஆண்டையாகவே மாறியிருந்தான், இவனிடும் சிறு சிறு பணிகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன. அறைகள், கூடமென்று கூத்ரேக்கள் இவன் போகுமிடந்தோறும் ஏதோ பாதையைத் தவறவிட்டவர்கள்போல தொடர்ந்துவந்தனர். வேதபுத்தகத்தை வாசிக்கிறபொழுது, உணவு மேசையில் இவன் சாப்பிட்ட இடத்திற் கிடந்த துண்டு துணுக்குகளை அவர்கள் கவனமாக அகற்றுவதைக் கண்டான். ஒரு முறை வழக்கமான சுருக்கமான அவர்களது வார்த்தையாடலை எதிர்பாராமல் கேட்க நேர்ந்தபோது இவன்மீது அவர்கள் வைத்திருந்த மரியாதையைப் புரிந்தது. ஒரு வழியாக மார்க் தரும் நற்செய்தியை வாசித்து முடித்தபோது, எஞ்சியிருந்த மூன்றில் ஒன்றை வாசிக்க விரும்பினான். தந்தையான குடியானவன் ஏற்கனவே வாசித்ததைத் திரும்பவும் வாசித்தால் நன்றாகப் விளங்கிக்கொள்ள முடியுமென்று கூறினான். எப்போதுமே குழந்தைகள் புதுவகைகளையும், புதுமைகளையும் விரும்பமாட்டார்கள், அவர்களுக்கு எதையும் திரும்பச் செய்யவேண்டும், அதுதான் விருப்பமானது, கூத்ரேக்களும் பிள்ளைகளைப்போலத்தான நடந்துகொள்கிறார்கள் என நினைத்தான். ஒருநாள் இரவு ஊழிபெருவெள்ளத்தினைக் கனவிற் கண்டவன் அரண்டு எழுந்தபோது கனவிற்கான நியாயம் புரிந்தது. படகொன்றை தயாரிக்க சுத்தியை உபயோகித்திருக்கிறார்கள் அதுவே இடிபோலக்கேட்டிருக்கிறது. ஒருவழியாகக மழை குறைந்து நிம்மதி பிறந்தது. குளிர் கடுமையாக இருந்தது. கடும் மழையினால் தளவாட அறையின் கூரை சிதைந்திருக்கிறதெனவும், உத்தரங்களைப் பழுதுபார்த்து முடித்ததும் அவற்றையும் கவனிப்பதாகக் கூறினார்கள். அவன் வித்தியாசமானவன் என்றபோதும், அந்நியனல்ல என்பதுபோல நடத்தத் தொடங்கினர், அவனை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடாதகுறை. அவர்களில் ஒருவரும் காப்பியை விரும்புவதில்லை, இருந்தபோதிலும், இவனுக்கு ஒரு சிறிய கோப்பையில் அதிகமாக சர்க்கரைத் சேர்த்து தயாரித்த காப்பி காத்திருந்தது.

ஒரு செவ்வாய்க்கிழைமை இடிமின்னலுடன் மழை கொட்டியது. வியாழக்கிழமை இரவு, அறைக்கதவை எதற்கும் எச்சரிக்கையுடனிருப்பது நல்லதென்று நினைத்து, தாழ்ப்பாள் போட்டபின்பே படுப்பது வழக்கம். அன்றிரவும் அப்படித்தான் செய்திருந்தான். ஆனால் திடீரென்று நடு நிசியில் அறைக்கதவை யாரோ மெல்லத் தட்டுவதுபோல சத்தம். விழித்துக்கொண்டவன் எழுந்து சென்று கதவைத் திறந்தால் அங்கே இளம்பெண் நின்றுகொண்டிருக்கிறாள். இருட்டில் அவளைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை, எனினும் அவள் காலடி ஓசையை வைத்து அவள் வெறும் கால்களுடன் வந்திருக்கிறாள் என்பதுபுரிந்தது, விடுவிடுவென்று இவனைக் கடந்து சென்றவள், இவன் கட்டிலிற் சென்று அமர்ந்தாள். கூடத்தின் கடைகோடியிலிருந்து இவனது அறைவரை நிர்வாணமாகவே வந்திருக்கிறாள். எந்தவித சமிக்கையுமில்லை, வாய்திறந்து ஒரு வார்த்தை ம்.. இல்லை அவன் அருகில் கால் நீட்டி படுத்தவளின் உடம்பு இலேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. முதன்முறையாக ஒரு ஆணைக்குறித்த புரிதல் அவளுக்கு அன்றிரவு ஏற்பட்டது. புறப்பட்டபோது, முத்தமில்லை, தழுவலில்லை; அவள் சென்றதும் பெயரைக் கேட்கமறந்தது நினைவுக்கு வந்தது, அந்தரங்கமாக காக்கப்படவேண்டிய உண்மை என்பதால் அதற்கான காரணத்தை தேடவில்லை. பயனோஸ் ஏர்ஸ்க்கு திரும்பினால், அங்கே ஒருவரிடமும் இச்சம்பவத்தை குறித்து வாய் திறப்பதில்லை என தனக்குத்தானே சத்தியம் செய்துகொண்டாண்.

மறுநாள் எப்போதும்போலத்தான் தொடங்கியது, எனினும் ஒரு மாறுதல். தகப்பன்காரன் இவனைத் தேடிவந்தான். நமது எஸ்ப்பினோசாவிடம் இயேசு மனித இனத்தைக் காப்பதற்கென்று தமது உயிரைத் தந்தவரா என்று கேட்டான். எஸ்ப்பினோஸா ஒரு முற்போக்கு சிந்தனையாளன், இருந்தபோதிலும் அவன் அவர்களிடத்தில் வாசித்ததை நியாயப்படுத்தும் வகையில் பதிலைத் தெரிவிக்க தாம் கடமைப்பட்டிருப்பதை உணர்ந்தான்.

– ஆமாம். நரகத்திலிருந்து அனைவரையும் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக.

கூத்ரே அவனிடம் கேட்டான்.

– நரகமென்பது என்ன?

– நரகம் பூமிக்கடியிலிருக்கிறது. ஆத்மாக்கள் இரவுபகலின்றி அங்கே எரிக்கப்படுகின்றன.

– ஆணி அடிப்பவர்களைக்கூட கடவுள் நரகத்திலிருந்து காப்பாற்றுவாரா?

– ஆமாம், என்றான் எஸ்ப்பினோஸா. இந்த விடயத்தில் வேதசாத்திரத்தின் கருத்து தெளிவில்லாமல் இருக்கிறதென்று அவனுக்குத் தெரியும்.

அவர்களுடைய இளம்பெண்ணுடனான இரவுச் சம்பவத்திற்குக் கணக்குத் தீர்க்க விரும்புகிறானோ என்று நினைத்ததும் அச்சம் துளிர்த்தது. இரவு உணவிற்குப் பிறகு, எஸ்ப்பொனோசாவிடம் மறுபடியும் ஒருமுறை கடைசி அத்தியாயங்களை வாசிக்கச்சொல்லி அவர்கள் கேட்டார்கள். கொஞ்சம் கூடுதாலாக அன்று உறங்கினான். இலேசாக கனவிலிருந்த நேரம் சுத்தியின் இடைவிடாத சத்தமும், மனதிற் அலைபோல உதித்த முன்னுணர்வுகளும் அவனைத் தூங்கவிடாமற் செய்தன. பிற்பகல் முடியும் தறுவாயில் எழுந்து கூடத்திற்கு வந்தான். மனதில் உதித்ததை சொல்ல நினைத்தவன்போல உரத்த குரலில்:

– நீர்மட்டம் குறைகிறது, இன்னும் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடுமென நினைக்கிறேன்…

– ஆமாம், கொஞ்ச நேரந்தான், வயதான கூத்ரேவின் பதில் இவனது கூற்றை எதிரொலிப்பதுபோல இருந்தது.

மூவரும் அவனைத் தொடர்ந்து வந்தார்கள். கற்கள் பதிக்கபட்டப்பட்ட தரையில் முழந்தாளிட்டு வணங்கியவர்கள், தங்களை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர் மூவருமாக அவனைச் சபித்தார்கள், முகத்தில் காறி உமிழ்ந்தார்கள், கூடத்தின் மறுகோடிக்குத் தள்ளிக்கொண்டு போனார்கள். இளம்பெண் அழுதாள். கதவின் மறுபக்கம் என்ன காத்திருக்கிறதென்று எஸ்ப்பினோஸாவுக்குப் புரிந்தது. தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தான். எங்கோ ஒரு பறவை சத்தமிட்டது- தித்திரிப் பறவையாக இருக்கவேண்டும். தளவாடங்கள் போடும் அறை கூரையின்றி இருந்தது, சிலுவை செய்வதற்காக உத்திரங்கள் பிரித்தெடுக்கப்பட்டிருந்தன.

———————————————

1. Gauchos – Cowboys குதிரை மீதர்மந்து ஆனிரை மேய்ப்பவர் – இடையர் .

2. William Henry Hudson (1841 – 1922) படைப்பாளி, இயற்கைவாதி, பறவையியல் அறிஞர்.

3. Pampa (Argentina) – கொலராடொவைச் சேர்ந்த பிரதேசங்களிலொன்று அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதி.

4. Tabare – 1886ம் ஆண்டில் வெளிவந்த காவியம் -உருகுவே நாட்டின் புகழ் பெற்ற கவிஞர் Juan Zorrilla de San Martin என்பவரால் எழுதப்பட்டது. ஸ்பெயின் மொழி இலக்கியவரிசையில் முக்கியமானது.

– செப்டம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *