கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2016
பார்வையிட்டோர்: 10,040 
 

“”பத்ரோஸ் சார் காலையில இவ்வளவு வேகமா எங்கப் போறீங்க…. கூட்டுக்கார போலீச காணோம்….” என்ற செல்லப்பனின் கேள்விக்கு,

“”அவன் வீட்டுக்குத்தான் போறேன்….” எனக் கூறிக் கொண்டு வேகவேகமாக நடந்தார் பத்ரோஸ். மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து சென்ற மண் சாலையில் இறங்கி சிறிது நேர நடைக்குப் பின் பெரிய கேட் போட்ட அந்த வீட்டை அடைந்து கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தார்.

வீட்டின் முன்பகுதியில் இருந்து கார் செட்டில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாத நிலையில் ஒரு மாருதி கார் நின்று கொண்டிருந்தது. அது முழுவதும் தூசு நிரம்பி ஒட்டடை பிடித்த நிலையில் காணப்பட்டது. அதனையொட்டிக் காணப்பட்ட கிணற்றில் தாராளமாய் நீர் இருந்தும் கிணற்றடி காய்ந்துபோய் காணப்பட்டது. அதிலிருந்து அந்த கிணற்றில் தண்ணீர் இரைத்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் என்ற தோற்றத்தை அளித்துக் கொண்டிருந்தது. கிணற்றடியில் நடப்பட்டிருந்த வாழை மரம் காய்ந்து போய்க் காணப்பட்டது.

தனி மரம்வீட்டின் தாழ்வாரத்தில் இருந்த லவ்பேர்ட்ஸ் கூட்டில் லவ்பேர்ட்ஸ் எதுவும் இல்லை. கூடு வெறுமனே காணப்பட்டது. அதிலிருந்த சிறிய மண் சட்டிகள் உடைந்து கிடந்தன. ஓரத்தில் நின்றிருந்த மாமரத்திலிருந்து விழுந்த சருகு முற்றம் முழுக்க வியாபித்துக் கிடந்தது. மாமரத்தில் காய்த்திருந்த மாம்பழங்கள் பறிக்கப்படாமல் அணில், காகம் முதலியன தின்று தீர்த்த பின் கொட்டைகளாக ஆங்காங்கே விழுந்து கிடந்தன. மொத்தத்தில் அந்த முற்றத்தைப் பார்த்தால் அந்த வீட்டில் யாரும் இல்லை என்ற முடிவுக்குத்தான் வரத் தோன்றும்.

வீட்டின் படிக்கட்டில் கிடந்த நாய் பத்ரோசைக் கண்டதும் நீண்ட நாள் பழகியவரிடம் வருவது போல வாலை ஆட்டிக் கொண்டு வந்து அவரது காலை நக்கியது. குழைந்து குழைந்து குரலெழுப்பியது.

நாயின் குரலைக் கேட்டவுடன் வீட்டுக்குள்ளிருந்து, “”கதவு திறந்துதான் கிடக்கு… உள்ள வா….” என்ற குரலைக் கேட்டு படியேறி கதவைத் திறந்து உள்ளே சென்றார் பத்ரோஸ்.

வீட்டின் உள்ளே இருந்த ஹாலில் இருந்த சோபாவில் சாய்ந்தவாறு இருந்தார் சாந்தப்பன். ஆறடி உயரம், உருக்குலையாத உருக்குப் போன்ற உடல்வாகு கொண்டிருந்த சாந்தப்பனை முற்றிலும் தளர்ந்த நிலையில் காண்ட பத்ரோஸ் பதட்டமடைந்தார்.

“”என்னடா ஆச்சு… நேற்று சாயங்காலம் நல்லாத்தானே இருந்தே… அதுக்குள்ள என்ன ஆச்சு… இப்ப என்னச் செய்யுது?…” எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டேச் சென்றார் பத்ரோஸ்.

தனது கையை உயர்த்திக் காட்டிக் கொண்டு மெதுவாக, “”எனக்குக் கொஞ்சம் சுடுத் தண்ணி வேணும்…” என்றார் சாந்தப்பன்.

வேகமாக சமையலறைக்குச் சென்ற சாந்தப்பன் அங்கிருந்த எலக்ட்ரிக் கெட்டிலை எடுத்து பைப்பிலிருந்து தண்ணீர் பிடித்து கெட்டில் அடிப்பாகத்தோடு பொருத்தி சுவிட்சைப் போட்டார்.

சாந்தப்பன் அருகில் வந்த பத்ரோஸ், “”நான் வண்டிக்கு போன் செய்யுறேன்…” எனச் சொல்லிக் கொண்டு தனது சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்து டயல் செய்தார்.

“”டேய் சுப்பு நம்ம சாந்தப்பனுக்கு சுகமில்ல… உடனே ஆஸ்பத்திரிக்கு போகணும்… நீ வண்டிய எடுத்துக்கிட்டு அவன் வீட்டுக்கு வா…” என்றார்.

எதிர் முனையிலிருந்து கேட்ட கேள்விக்கு “”டேய்… அத ஒதுக்கி நிறுத்தி ஆறு மாசத்துக்கு மேல ஆகுது… அது அவசரத்துக்கு உதவாது… நீ உனக்க வண்டிய எடுத்துட்டு வா… சீக்கிரம் வா….” எனக் கூறி போன் இணைப்பைத் துண்டித்தார்.

கெட்டிலைத் திறந்து பார்த்தார். தண்ணீர் சூடாகியிருந்தது. இரண்டு கப்களை எடுத்து சுடுநீரை ஊற்றி இரண்டு மூன்று முறை ஆற்றினார். பின்னர் ஒரு கப்பில் கொஞ்சம் சுடுநீரை ஊற்றி சாந்தப்பனிடம் கொடுத்துக் குடிக்க வைத்தார்.

இரண்டு மடக்கு குடித்தவுடன் சாந்தப்பன் ஏதோ பேச வாயெடுத்தார். அவரைத் தடுத்த பத்ரோஸ், “”முதல்ல தண்ணியக் குடி…. பிறகு பேசலாம்….” என்றார். தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக சுடு நீரை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்தார். ஒரு கப் சுடு நீரையும் குடித்து முடித்த பின்பு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட சாந்தப்பன் பேசத் தொடங்கினார்.

“”நேற்று சாயங்காலம் நாம கடையில பேசிக்கிட்டு இருந்தப்பவே ஒரு மாதிரி இருந்தது… தொடர்ந்து தலை சுற்றுவது போலத் தோனிச்சு… அதுதான் நேரமே வீட்டுக்கு வந்தேன்… தூங்கினா சரியாப் போகும்னு நினைச்சு தூங்கிட்டேன்… சாப்பிடல… அதனாலயாயிருக்கும்… வேற ஒன்னுமில்லை…” எனக் கூறிக் கொண்டு நண்பனை ஏறிட்டார்.

“”பத்ரோஸ், இப்ப உனக்கு என்னச் செய்யுது?…” என வினவினார்.

அதற்கு சாந்தப்பன், “”எனக்கு வலது கை, கால யாரோ பிடிச்சு இழுக்கிற மாதிரி இருக்கு… சில நேரம் வலது பக்கம் முழுவதும் மரத்துப்போனது போல இருக்கு…” எனக் கூறிக் கொண்டிருந்தபோதே வலது பக்கமாக வாய் சற்று இழுத்தது போலத் தோன்றியது.

வீட்டின் முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

“”பத்ரோஸ் கார் வந்தாச்சு… வா போகலாம்…” எனக் கூறியவுடன் சாந்தப்பன் எழுந்து நிற்க முயற்சித்தார். அப்போது வலது கால் நிலை கொள்ளாமல் ஒரு பக்கமாக விழப் போனவரை பத்ரோஸ் தாங்கிப் பிடித்தார்.

“”டேய் சுப்பு… இங்க வா…” என்ற பத்ரோசின் குரலைக் கேட்டு வீட்டுக்குள் வந்த சுப்பய்யன் ஒரு பக்கம் பிடிக்க இருவருமாக சாந்தப்பனைத் தூக்கி வந்து காரில் ஏற்றினர். அப்போது சாந்தப்பன், “”அந்த சோபாயில எனக்க சட்ட இருக்கு அது எடுத்துக்கிட்டு வா…” என சுப்பய்யாவை ஏவினார். சுப்பய்யா ஓடிச் சென்று சட்டையை எடுத்து வந்து அவரிடம் கொடுத்துவிட்டு காரை இயக்கி ஓட்டத் தொடங்கினார்.

சட்டைப் பையைத் துளாவி அதிலிருந்த பர்சிலிருந்து ஏடிஎம் கார்டையும் செல்போணையும் எடுத்து தனக்கருகில் அமர்ந்திருந்த பத்ரோசிடம் கொடுத்த சாந்தப்பன். இரண்டு, எட்டு, மூணு, ஏழு என ஏடிஎம் பின் எண்ணைக் கூறிவிட்டு ஒருக்களித்து படுத்துக் கொண்டார்.

“”டேய் சுப்பு வேகமா போ… சாந்தி ஆஸ்பத்திரியில டாக்டர் இருப்பாரா..” என்றார் பத்ரோஸ்.

“”அங்க டாக்டர் வர பத்து மணியாவது ஆகும்… இது ஸ்ட்ரோக் போல இல்ல இருக்கு… நேரா சுந்தர் நியுரோ ஆஸ்பத்திரிக்கு போயிடுவோம்… என்ன பத்து நிமிசம் கூட ஆகும். காலத்த பெரிய டிராபிக் எல்லாம் இருக்காது…” எனக் கூறிய சுப்பய்யன் காரின் ஹெட் லைட்டைப் போட்டுவிட்டு ஹாரன் அடித்துக் கொண்டே காரை வேகமாகச் செலுத்தினார். கால் மணி நேரத்துக்குள் கார் மருத்துவமனையை வந்தடைந்தது.

வேகமாக வந்து நின்ற காரைக் கண்டவுடன் இரண்டு பேர் ஸ்டெக்சரைக் கொண்டுவர சாந்தப்பனை அதில் கிடத்தி வேகமாக மருத்துவமனைக்குள் கொண்டுச் சென்றனர்.

பத்ரோசும் சுப்பய்யாவும் மருத்துவமனையின் வரவேற்பு அறையில் நுழைந்தனர். அங்கு போடப்பட்டிருந்த பளபளக்கும் ஸ்டீல் நாற்காலியில் அமர்ந்தனர். சுவரில் பொருத்தப்பட்டிருந்த எல்இடி டிவி மெல்லிய ஓசையோடு இயங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த நர்சு பத்ரோசிடம் வந்து நோயாளியின் பெயர், வயது, விலாசம்…. என விவரங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டாள்.

அப்போதுதான் தன்னிடம் பணம் ஏதுமில்லை என்பதை உணர்ந்த பத்ரோஸ், “”சுப்பு, அடுத்து இப்ப பணம் கட்டச் சொல்லுவாங்க… நீ பக்கத்தில ஏதாவது ஏடிஎம் இருக்குதான்னு பார்த்து இருபதாயிரம் எடுத்துட்டு வா…” எனக் கூறி சாந்தப்பன் கொடுத்த ஏடிஎம் கார்டைக் கொடுத்து பின் நம்பரையும் சொல்லி சுப்பய்யாவை அனுப்பிவிட்டு வரவேற்பறையில் காத்திருந்தார்.

பத்ரோஸ் எதிர்பார்த்தபடியே சற்று நேரத்தில் ஒரு நர்சு வந்து, “”சாந்தப்பன் கூட உள்ளவங்க யாரு?…” எனக் கேட்டவுடன் பத்ரோஸ் இருக்கையிலிருந்து எழுந்தார். அவரிடம் ஒரு வெள்ளை காகிதத் துண்டைக் கொடுத்து, “”கவுண்டரில பணத்த கட்டிக்கிட்டு வாங்க…” எனக் கூறிச் சென்றாள். அந்த காகிதத்தில் சாந்தப்பன் – 10,000- என மட்டும் எழுதியிருந்தது.

“எதுக்கு இந்தப் பணம்… துண்டு பேப்பரில எழுதிக் கொடுத்து கொள்ளையடிக்கிறானுக… இப்பயெல்லாம் இவனுகள விட பெரிய கொள்ளக்காரனுக யாரு இருக்கா… இதக் கேட்க யாரு இருக்கா…’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு சுப்பய்யாவின் வரவுக்காக பத்ரோஸ் காத்திருந்தார்.

ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு திரும்பி வந்த சுப்பய்யாவிடம் நர்சு கொடுத்தத் துண்டுச் சீட்டைக் கொடுத்து பணத்தைக் கவுண்டரில் செலுத்தச் சொன்னார் பத்ரோஸ். அந்த வரவேற்பறையை விட்டு வெளியே வந்து தனது செல்போனை எடுத்து தனது வீட்டுக்கு போன் செய்து சாந்தப்பனுக்கு ஸ்ட்ரோக் வந்து விட்டதாகவும் தான் அவரை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தகவல் சொன்னார். எனவே தான் காலை டிபனுக்கு வரமாட்டேன் என்றும் கூறினார்.

“” ஆமா… அந்த ஆளு பிள்ளைகள அமெரிக்காவுக்கு அனுப்பி சம்பாதிக்கிறார்… நீங்க அங்க போய் ஆஸ்பத்திரி காவல் கிடக்கறீங்க… நல்லாயிருக்கு…” என்ற மனைவியின் பேச்சை தொடர விடாமல் இணைப்பைத் துண்டித்தார்.

அப்போது அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து டாக்டரோடு வெளியே வந்த நர்சு, “”அவரு தான்…” என பத்ரோசை டாக்டரிடம் சுட்டிக்காட்டினார். அதைக் கவனித்த பத்ரோஸ் எழுந்து டாக்டரிடம் சென்றார்.

“”சாந்தப்பன் உங்களுக்கு யாரு?…” என்ற டாக்டரின் கேள்விக்கு “”பிரண்ட்…” என பதிலளித்தார்.

“”பேமிலியில உள்ளவங்க யாருமில்லியா?” என டாக்டர் மீண்டும் வினவினார்.

“” அவங்க வெளியூர்ல இருக்காங்க… நான் தான் பார்த்துக்கிறது…” என பத்ரோஸ் பதிலளித்தார்.

“”டாக்டர், அவருக்கு வந்திருக்கிறது சிவியர் ஸ்ட்ரோக்… மூளைக்கு ரத்தம் போகிற குழாய்கள்ல பல அடைப்பு இருக்கிற மாதிரி தெரியுது… ரிக்கவரி ஆகிற சிம்டம்ஸ் எதுவுமில்ல… போகப் போக இன்னும் மோசமாகும்னுதான் தோணுது… எம்ஆர்ஐக்கு எழுதியிருக்கேன் உடனே எடுக்க ஏற்பாடு செய்யுங்க…” எனக் கூறிச் சென்றார்.

அதுவரை சற்று தைரியமாக இருந்த பத்ரோசின் மனதில் பயத்தின் ரேகைகள் படர்ந்தன. அவரோடு நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சுப்பய்யன், “”அவருக்க மோனுகளுக்கு போன் செய்யுங்க..” எனக் கூறினார்.

பத்ரோஸ் சாந்தப்பனின் செல்போனை எடுத்து மூத்தவன் என்ற பெயரில் இருந்த எண்ணை டயல் செய்தார். இணைப்பு பூர்த்தியாகாமல் துண்டிக்கப்பட்டது.

“”மூத்தவன் போன எடுக்கல… கழிஞ்ச ரெண்டு மாசமா கணவன் மனைவிக்கு இடையில சண்ட… போன் கூட பேசல்லன்னு சொல்லிக்கிட்டு இருந்தார்… இளையவன கூப்பிட்டு பாப்போம்…” எனக் கூறிக் கொண்டு இளையவனின் எண்ணுக்கு அழைத்தார் பத்ரோஸ்.

போனை ஒரு பெண் எடுத்து பேசினாள். தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பத்ரோஸ் தகவலைச் சொன்னார்.

“”ஹி ஈஸ் அன் அசைன்மெண்ட் இன் கனடா… வி வில் கன்வெய் த மெசேஜ் டூ கிம்…” எனக் கூறி இணைப்பைத் துண்டித்தாள் அந்தப் பெண்.

பத்ரோசின் மனது கடந்த காலத்தை நோக்கிச் சென்றது. சாந்தப்பன் தனது பிள்ளைகள் இருவரையும் படிக்க வைக்க பட்ட துன்பங்கள்… மனைவி இறந்த பின்பும் உடைந்து போகாமல், உறவுகள் கை கொடுக்காத நிலையிலும் ஒற்றை ஆளாய் நின்று பிள்ளைகளை கணினித் துறையில் பொறியாளர்களாக உயர்த்தியது. பின்னர் பிள்ளைகள் அமெரிக்கா போக வேண்டும் என்று கேட்டபோது மகிழ்வோடு வாய்ப்புகளைத் தேடிக் கொடுத்தது… என எல்லாம் மனக்கண் முன் தோன்றி மறைந்தது.

மூத்தவன் தனது நிறுவனத்தில் வேலை செய்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தபோது ஜாதி, மதம் பார்க்காமல் சம்மதம் தெரிவித்தார். பெண் வீட்டார் எதிர்த்தபோதும் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார். அதோடு ஒட்டியிருந்த அவரின் கொஞ்ச நஞ்ச உறவுகளும் அறுத்துக் கொண்டன.

இளைய மகனும் அவ்வாறு செய்து விடக்கூடாது என எண்ணி ஊரிலே பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். தற்போது செய்து வரும் புராஜக்ட் ஒரு வருடத்தில் முடிந்தவுடன் நிறுவனத்தின் சென்னை கிளைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்து விடுவதாகக் கூறிவிட்டு மனைவியையும் கூட்டிச் சென்றவன் மூன்று வருடங்களாக திரும்பாதபோது மனம் வெறுத்துப் போனார்.

மூத்தவன் குடும்பத்தில் பிரச்னை. மனைவிக்கும் அவனுக்கும் அடிக்கடி சண்டை வருவதாகக் கூறி வருத்தப்படுவார். அவனது மனைவி பதவி உயர்வு பெற்று அதிக சம்பளம் வாங்குவதால் அடிக்கடி சண்டை வருவதாகக் கூறி மகன் வருத்தப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். அவர்களுக்குக் குழந்தை இல்லாததும் மிகப் பெரிய குறையாக இருந்தது.

இளையவனுக்கு திருமணமான ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்ததாகத் தகவல் வந்தது. குழந்தையின் போட்டோவை மின்னஞ்சலில் பார்த்துப் பரவசமடைந்தவர், “”ஊருக்கு வாடா” என பலமுறை அழைத்துப் பார்த்து விட்டார். ஒரு வருடத்துக்குள் வந்து விடுவதாக மட்டும் பதில் வந்தது. வருடங்கள் இரண்டு ஓடிய பின்னும் வந்த பாடில்லை.

பத்ரோசின் கையிலிருந்த சாந்தப்பனின் செல்போனில் இளையவனிடமிருந்து அழைப்பு வந்தது.

“”அப்பாவிடம் பேச முடியுமா?…” எனக் கேட்டான்.

“”இப்போது முடியாது… யாரையும் உள்ள விடல்ல…” எனப் பதில் கூறினார் பத்ரோஸ். “”தான் கனடாவில் இன்னும் இரண்டு வாரம் இருக்க வேண்டியிருக்கும். பின்னர் திரும்பி வந்ததும் ஊருக்கு வருகிறேன்” எனக் கூறி இணைப்பைத் துண்டித்தான்.

இதனிடையே சாந்தப்பனுக்கு கூட உள்ளவங்க, “”யாரு… அவர போய்ப் பாக்கலாம்….” என நர்சு கூறிச் சென்றாள். பத்ரோசும் சுப்பய்யாவும் சாந்தப்பனைக் கிடத்தியிருந்த அவரச வார்டுக்குள் சென்றனர்.

கட்டிலின் அருகில் நின்றிருந்த இருவரையும் பார்த்தவுடன் சாந்தப்பனின் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்தது. பத்ரோஸ் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து சாந்தப்பனின் கையை தன் கையால் பிடித்துக் கொண்டு, “”டேய் எதுக்குடா அழுற… நோய் எல்லாருக்கும் வர்றது தான்… ஒண்ணும் பிரச்சனையில்லை… ஒரு வாரத்தில சரியாயிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார்… பிள்ளைங்களுக்கு போன் செய்து தகவல் சொன்னேன்… ரெண்டு பேரும் பொறப்புட்டு வர்றதா சொன்னானுங்க…” என்று கூறி ஆறுதல்படுத்த முனைந்தார்.

“”இல்லடா… எனக்கு நம்பிக்கையில்ல… நீ பொய் சொல்லுற…. உன் கண்ணில தெரியுது..” என்று கூறி சற்று அமைதியான சாந்தப்பன், திடீரென “”ரெண்டு பிள்ளக இருந்தும் கொள்ளிபோட ஆளத்தவனா போயிடுவேனோ…” என வாய்விட்டு அழுதார்.

இதுவரை அவர் அழுது பார்த்திராத பத்ரோசிடம் அவரைத் தேற்ற வார்த்தைகள் இல்லை.

– பெப்ரவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *