கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 12,366 
 

விரைவாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான் முருகன். இன்னும் பத்து நிமிஷத்தில் பள்ளியில் இருக்கவேண்டும். சாலையில் நெரிசலாக இருந்தது. முருகனோ கிடைத்த இடைவெளிகளில் புகுந்து வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருந்தான்.

திடீரென்று போக்குவரத்து தடைப்பட்டுவிட்டது.முருகன் நெரிசல் தொடங்கிய இடத்திற்கு வந்துவிட்டான். அங்கே இருபது வயது மதிக்கதக்க ஒருவன் விபத்தில் அடிபட்டுக் கிடந்தான். சுற்றி இருந்த கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. டிராஃபிக் போலீசையும் காணவில்லை. ‘என்ன மனிதர்கள் இவர்கள்? யாரும் இவனை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச்செல்லாமல் இருக்கிறார்கள்’ என்று வேதனையோடு நினைத்துக்கொண்டிருந்தான். ‘‘இவன் சைக்கிள் மேல மோதினது யாரு? மோதிட்டு ஓடிப் போய்ட்டானா?’’ பக்கத்தில் நின்ற ஒரு ஆளிடம் முருகன் கேட்டான். ‘‘ஆமா, தம்பி. பைக்குக்காரன் ஒருத்தன் மோதிட்டு வேகமாப் போய்ட்டான். நாங்க தூக்கிட்டு போய் வைத்தியம் செஞ்சாலும் போலீஸ்காரங்க, நம்மள துருவி துருவி கேள்வி கேட்பாங்க. எதுக்கு வீண் வம்பு’’ என்று சொன்னான். முருகனுக்குக் கோபமாக வந்தது.

உடனடியாக அங்கிருந்த ஒரு ஆட்டோவில் அடிபட்ட ஆளை, ஆட்டோக்காரர் உதவியோடு ஏற்றிக் கொண்டான். டிராஃபிக்கை விலக்கிக்கொண்டு, பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்குக் கூட்டிப் போனான். முருகனை தலைமை டாக்டர் விசாரித்து எல்லாம் தெரிந்து கொண்டார். அடிபட்ட அந்தப் பையனுக்கு தீவிர சிகிச்சை நடந்தது. அந்த பையன் யார் என்று தெரியாமல், அவன் கொண்டு வந்திருந்த பையைப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது நுழைந்த டிராஃபிக் போலீஸ், ‘‘இப்போ ஒரு ஆக்ஸிடென்ட் கேஸ் வந்துச்சா? அந்தப் பையனைத் தூக்கிட்டு வந்தது யாரு?’’ வரவேற்பறையில் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘‘நான்தான் சார்’’ நீதானா அது. நாங்க வர்றதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்? மத்தவங்க எல்லாம் வேடிக்கைதானே பார்த்துகிட்டு இருந்தாங்க. உனக்கு என்ன சமூக அக்கறை? நீதான் ஆக்ஸிடென்ட் செஞ்சியா? உன் மேல கேஸைப் போட்ற வேண்டியதுதான். உன் பேரு என்ன?’’ என்றார்.

முருகன் ‘‘சார், நான் பைக்ல வரலை. சைக்கிள்லதான் வந்தேன்’’ என்று பதில் சொன்னான்.

‘‘நீ எதுல வந்தே, எப்படி மோதினே எல்லாம் நாங்க பாத்துக்குறோம். அடிபட்டவன் பேரு என்ன? அவன் வெச்சிருந்த பையா இது? குடு பார்ப்போம்’’ என்று வாங்கிப்பார்த்தார்.

அதற்குள் ஒரு ரேஷன் கார்டு இருந்தது. அதில் எ.முனுசாமி என்று தன் பெயர் இருந்ததைப் பார்த்ததும், மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

‘‘ஐயோ, அடிபட்டது என் பையன்தானா? சின்ன அடியா, பெரிய அடியான்னு தெரியலையே?’’

‘‘சார், மண்டையில பெரிய அடி. ரத்தம் நிறைய போயிருச்சு. சரியான நேரத்துக்குக் கூட்டிட்டு வந்ததாலே, காப்பாத்திடலாமுனு டாக்டர் சொன்னாரு.’’

‘‘ரொம்ப நன்றி தம்பி, என் பையனைக் காப்பாத் தினதுக்கு உன்கிட்ட போய்த் தப்பாப் பேசிட்டேன். என்னை மன்னிசிடுப்பா. இனிமே நான் இது மாதிரி நடக்கமாட்டேன்’’ என்று சொல்லிவிட்டு, பையனைப் பார்க்க மேலே ஆபரேஷன் தியேட்டருக்கு ஓடினார்.

முருகன், டாக்டர் வந்ததும் நன்றி சொல்லிவிட்டு, ஒரு உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சியோடு சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்குக் கிளம்பினான்.

வெளியான தேதி: 16 செப்டம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *