கர்மயோகி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 7,959 
 
 

முனைவர் ராகவன் ஒரு நிர்வாக இயல் கல்லூரியில் பேராசியராகப் பணி புரிகிறார். ஆசிரியப் பணியை விருப்பத்துடன் எடுத்துக் கொண்டவர். ஆகவே உற்சாகத்துடன் பாடங்கள் நடத்துவார்.

ஒவ்வொரு பாடம் துவங்கும் போதும் அதன் பின்னணிக்கு ஒரு கதையோ அல்லது வரலாற்றுத் துணுக்கோ, ஆச்சரியப் படவைக்கும் புள்ளி விவரங்களைச் சொல்லியோ அல்லது யோசிக்க வைக்கும் கேள்வியைக் கேட்டோ தான் பாடத்தை ஆரம்பிப்பார். பாடங்களில் வரும் விஷயங்களை விளக்கும்போது ஆன்மிகத்திலிருந்தும், அரசியலிலிருந்தும் மேற்கோள்கள் காட்டி விளக்குவார்.. எம்பிஏ படிப்புக்கு ஆங்கிலத்தில் வகுப்பெடுத்தாலும், அனைத்து மாணவர்களுக்கும் நன்றாகப் புரிய வேண்டும் என்பதற்காக த் தமிழிலும் விளக்கம் சொல்வார். தமிழ் தெரியாத மாணவர்களுக்குத் தெலுங்கிலும், இந்தியிலும் பேசி பாடத்தின் மையக் கருத்தை புரிய வைப்பார்.

திருக்குறளையும், பாரதியார் பாடல்களையும் சரளமாக மேற்கோள் காட்டுவார். பழைய திரைப்படப் பாடல்களைப் பொருத்தமான இடங்களில் எடுத்தாண்டு புதிரான விஷயங்களுக்குப் புதிய அர்த்தங்கள் புகட்டுவார். பட்டுக்கோட்டையாரும், கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும் வகுப்பறையில் அவ்வப்போது அலசப் படுவார்கள். அவர்கள் அப்பாடல்களை எழுதும்போது என்ன பொருளை நினைத்து எழுதினார்களோ, ஆனால் ராகவன் சார், நிர்வாக இயல் பாடங்களில் அந்தப் பாடல்களின் கருத்துக்களை சரியாகக் கொண்டு வந்து பொருத்துவார்.அவர் வகுப்பில் மாணவ மாணவியர் லயித்துப்போய் ஆர்வத்துடன் கவனிப்பார்கள்.

அதிக வயதானாலும் அதை மதிப்பிட முடியாதபடி ஸ்மார்ட்டாக உடை அணிவார். அவரிடம் படித்த பழைய மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது அவரைப் பார்த்து, ‘வயசானாலும், உங்க ஸ்டைலும், குரலும் அப்படியே இருக்கு சார்’ என்று நீலாம்பரி டயலாக் அடிப்பார்கள். சத்தமாக சிரித்துக்கொண்டே ‘குட் மார்னிங்’ சொல்லியபடி அவர் வகுப்புக்குள் நுழையும்போதே உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொள்ளும்.

இவ்வளவு சுவாரஸ்யமான பேராசிரியர், கோபம் வந்துவிட்டால் விஸ்வாமித்திரர் தான். மிகவும் கண்டிப்பானவர். வகுப்பிற்கு யாராவது தாமதமாக வந்தாலோ, பாடம் நடத்தும்போது செல்போன் சிணுங்கினாலோ, அவர் கவனத்தைச் சிதறும்படி இடையூறு செய்தாலோ, எல்லார் முன்பும் கோப நர்த்தனம் ஆடிவிடுவார். தவறு செய்த மாணவனோ, மாணவியோ எழுந்து நின்று அவரிடம் வசை கேட்டு கண்ணீர் விடும் சம்பவமும் நடக்கும். செய்து வரச் சொன்ன அஸைன்மெண்ட் முடிக்காமல் வந்தால், வகுப்புக்கு வெளியே தான் நிற்க வேண்டும். தவறாக அஸைன்மெண்ட் எழுதி இருந்தால், நோட்டுப் புத்தகம் பறக்கும். எல்லார் முன்னிலும் இப்படி அவர் திட்டுவதால் சில மாணவர்கள் அவரை வெறுக்கவும் செய்தனர். ஆனால் அவர் கோபப் பட்ட மறு நிமிடமே அதை மறந்து சாதாரணமாகப் பேசுவார். அவர் காதுபடவே அவர் பின்னால் ‘விஸ்வாமித்திரர், ஹிட்லர், டான், டாஸ்க் மாஸ்டர் என்றெல்லாம் சொல்வார்கள். அதைப் பற்றியெல்லாம் அவர் பொருட்படுத்துவதில்லை.

பாடத்தில் சந்தேகமோ, வேறு விஷயங்களில் அறிவுரையோ கேட்டு அவரைத் தேடி வரும் மாணவர்களுக்கு அவர் உதவி செய்வார். மற்றபடி வேறு எந்த விஷயங்களிலும் அவர் தலையிட மாட்டார் . அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் எதாவது புத்தகங்களைப் படித்துக்கொண்டு, அல்லது கம்ப்யுடரில் வேலை செய்து கொண்டு இருப்பார். கல்லூரியின் எந்த பாலிடிக்ஸிலும் அவர் பெயர் அடிபட்டதில்லை. மற்ற ஆசிரியர்கள் அவரிடமிருந்து ஒதுங்கியே இருப்பார்கள். அவர் தலைக்கனம் மிக்கவர் என்ற பேச்சும் ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.

அந்தக் கல்லூரியில் இருந்த வேறு சில ஆசிரியர்கள் மாணவர்களுடன் மிகவும் நட்பாகப் பழகுவார்கள். கேன்டீனில் அந்த ஆசிரியர்களைச் சுற்றி மாணவர்கள் கூட்டமாக உட்கார்ந்து கதை பேசுவார்கள். எந்த விதமான பிரச்னை இருந்தாலும் மாணவர்கள், அந்த ஆசிரியர்களை அணுகி உதவி பெறுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலும் நடக்கும். தவறு செய்து மாட்டிக் கொண்ட மாணவர்களைத் தப்பிக்க உதவிய தருணங்களும் உண்டு. அந்த ஆசிரியர்களில் ஒரு இளம் ஆசிரியர், விளம்பர மாடல் போல் உயரமாக சிவப்பாக ஸ்மார்ட்டாக இருப்பார். அவரைப் பார்த்து அசடு வழியும் மாணவிகள் அநேகர். அதேபோல் ஒரு உதவிப் பேராசிரியைப் பார்த்து தூரஇருந்து ஜொள்ளு விடும் மாணவர் கூட்டமும் உண்டு.

அந்த ஆண்டு கல்லூரியின் மேனேஜ்மென்ட் முதன்முறையாக சிறந்த ஆசிரியரைத் தேர்ந்தெடுக்கப் போட்டி ஒன்றை அறிவித்தனர். மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பீடு செய்யும் போட்டி. அதில் தேர்ந்தெடுக்கத் தகுதிகளாகக் குறிப்பிடப்பட்டவை: வகுப்புக்குத் தயார் செய்தல், நேரம் தவறாமை, பாடம் நடத்தும் முறை, பணியின் மேல் கவனம், பொறுப்புணர்வு, மாணவர்களுடன் பழகுதல், அவர்களுக்கு அறிவுறுத்தல், பிறருடன் ஒத்துழைத்தல் போன்றவை.

இத் தகுதிகளும், எல்லா ஆசிரியர்களின் பெயர்களும் அடங்கிய ஒரு காகிதத்தில் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பெயர் எழுதாமல், எல்லா ஆசிரியர்களையும் மதிப்பீடு செய்து மார்க் போட்டுத் தந்தனர். அவற்றை மேனேஜ்மென்ட் கமிட்டி, ஆசிரியர்வாரியாகப் பிரித்துக் கூட்டி, சரிபார்த்து மாணவர்களின் மதிப்பெண்படி சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்தனர். அதை அறிவித்து, தேர்வான ஆசிரியருக்கு மரியாதை செய்ய ஒரு விழா ஏற்பாடு செய்யப் பட்டது.

கல்லூரியின் சேர்மன் விழாவைத் துவக்கி வைத்துப் பேசுகையில், “சிறந்த ஆசிரியர் என்று நீங்கள் தேர்ந்தெடுத்து இருப்பவரை இப்போது அறிவிக்கப் போகிறேன். அது யாரென்று நினைக்கிறீர்கள்?’ என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். ‘ப்ரோபஸர் ராகவன் என்றும், வாசுகி மேடம் என்றும், ரவிக்குமார் சார் என்றும் பல குரல்கள் ஒலித்தன. சேர்மன் அவர்களை அமைதி படுத்தி விட்டு, ‘கல்லூரியின் துவக்க காலத்திலிருந்தே இந்தக் கல்லூரியின் வளர்ச்சியிலும், மாணவர்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்ட ஒருவரையே நிறைய மாணவர்கள் சிறந்த ஆசிரியராகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் மிகவும் கண்டிப்பானவர் என்று பெயரெடுத்திருந்தாலும், தன் காரியத்தில் ஸ்ரத்தையோடு பணியாற்றும் ஒரு கர்மயோகி. ப்ரோபஸர் ராகவன் தான் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்று சிறந்த ஆசிரியராக, உங்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரை மேடைக்கு வருமாறு அழைக்கிறேன்’ என்று சேர்மன் அறிவித்ததும், மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர் .

மாணவர்களின் வாழ்த்தொலிகளுக்கிடையில் மேடை ஏறிய பேராசிரியர் ராகவன், சேர்மன் அனுமதியுடன் சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன் என்று மைக்கருகில் வந்தார். ‘என்னை சிறந்த ஆசிரியராகத் தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. ஆனால் இங்கு குறிப்பிடப்பட்ட தகுதிகள் அனைத்தும் உள்ள சிறந்த ஆசிரியராக நான் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவர் நம் கல்லூரியில் பணியிலிருந்தும் இந்தப் பட்டியலில் அவர் பெயர் இல்லை. உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். அவர் அமைதியாக நம் அனைவருக்கும் தன் சீரிய, எளிய பணிமூலம் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் கூட உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் அவர் ஆசிரியர் இல்லை அவர் நம் கல்லூரியில் துப்புரவுப்பணி செய்யும் பலரில் ஒருவர். அவர் பெயர் எலிசபெத் குணசேகரன்.

இரண்டு ஆண்டுகளாக நாம் இருக்கும் இந்த கட்டிடத்தில் நம் வகுப்புகளையும், உபயோகிக்கும் கூடங்களையும் சுத்தமாக வைத்திருக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்தவர். இந்தப் போட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்திலும் முழு மதிப்பெண் பெறுகிறார். என் குறைகள் எனக்குத் தெரியும். ஆனால் அவர் பணியில் நான் இதுவரை குறை கண்டதில்லை. அவர் நேரந்தவறி வந்து நான் பார்த்ததில்லை. நாம் அனைவரும் கல்லூரிக்கு வருமுன் வந்து, நாம் போனபின் தான் செல்வார். தினமும் நான்கு முறை நாம் மிதித்து அழுக்காக்கும் அனைத்து இடங்களையும் பெருக்கித் துடைத்து சுத்தமாக வைக்கிறார். குடித்தண்ணீருக்குத் தட்டுப்பாடு வந்ததில்லை, மாணவர்கள் தவறி வைத்து மறந்து போகும் பொருட்களை கவனமாக எடுத்துக் கல்லூரி ஆபீசில் ஒப்படைத்து விடுவார், இது போன்ற விழாக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சகப் பணியாளர்களோடு சேர்ந்து சளைக்காமல் செய்து முடிப்பார். அனைவருடனும் இன்முகத்தோடு பேசுவார். மாணவிகள் சிலசமயங்களில் உபாதைப் படும்போது, கூட இருந்து தேவையானதை வாங்கிக் கொடுத்து, ஓய்வெடுக்கச் செய்து, ஆறுதல் சொல்லி அனுப்புவார். வேலை நேரங்களில் அவர் மற்றவர்களைப் போல் செல்போன் பேசி நான் பார்த்ததில்லை. ஓய்வு நேரங்களில் கூட கண்ணாடி அணிந்து கொண்டு பைபிள் படிப்பதோ அல்லது ஊட்டியில் இருக்கும் தன் பேரனுக்கு ஸ்வெட்டர் பின்னுவதையோ தான் பார்த்திருக்கிறேனே ஒழிய அவர் மற்ற பணியாளர்களுடன் அமர்ந்து வெறுங்கதை பேசிப் பார்த்ததில்லை. நம்மை விடக் குறைந்த சம்பளமே வாங்கினாலும், செய்யும் காரியத்தை கௌரவத்துடன் தன்னலமின்றி ஸ்ரத்தையாகச் செய்யும் அவரே கர்மயோகி.

அவர் பாடம் எதுவும் நடத்துவதில்லை என்றாலும், அவரது செயல்களே பாடமாக இருக்கிறது. அவரைப் பார்த்துக் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. என்ன வேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல, அதை எப்படிச் செய்கிறோம் என்பது தான் முக்கியம். என்னைப் பொறுத்தவரை, எலிசபெத் குணசேகரனே சிறந்த ஆசிரியை. அவருக்கே இந்தப் பரிசை அளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்போது கூட இந்த விழாவிற்காக இந்த ஹாலை சுத்தப்படுத்தி, இருக்கைகளைப் போட்டு, மேடையை ஒழுங்குபடுத்திவிட்டு, நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்நேரம், நீங்கள் குப்பைகளைப் போட்டிருக்கும் ஏதாவது ஒரு வகுப்பறையை சுத்தம் செய்து கொண்டிருப்பார் அவர்’’ என்று உணர்ச்சிகரமான குரலில் பேசி முடித்தார். அது வெறும் அவையடக்கப் பேச்சாகத் தோன்றவில்லை. அவர் உணர்வில் இருந்த உண்மை அந்த அரங்கத்தை மௌனத்தில் கட்டிப்போட்டது. மெல்ல ஆரம்பித்த கைத்தட்டல் வேகமெடுத்து உச்சத்தைத் தொட்டது. சேர்மன் சில மாணவிகளைக் கூப்பிட்டு அந்தப் பணியாளரை அழைத்து வரச்சொன்னார்.

மாணவிகள் ஓடிச்சென்று, வகுப்பறை ஜன்னல்களைத் துடைத்துக் கொண்டிருந்த, 52 வயதான அந்தத் துப்புரவுப் பணியாளரைக் கைப்பிடித்து மேடைக்கு அழைத்து வந்தனர். கூனிக்குறுகி, கைகூப்பியபாடி மேடையில் ஏறியவரை ஆதரவாகப் பிடித்து சேர்மனிடம் அழைத்துப் போனார் பேராசிரியர் ராகவன். ‘ப்ரொபஸர், இப்பவும் நீங்க தான் சிறந்த ஆசிரியர் என்பதை ப்ரூவ் பண்ணி இருக்கீங்க. எங்கள் கண்களில் படாததை எங்கள் கருத்துக்குக் கொண்டுவந்து புதிய பாடம் சொல்லித் தந்தீர்கள். ஆகவே சிறந்த ஆசிரியருக்கான பரிசை நான் உங்களுக்கு வழங்குகிறேன். சிறந்த பணியாளார் என்ற விருதை உங்கள் கைகளால் இவருக்கு நீங்கள் வழங்குங்கள்” என்று சொல்லி சேர்மன் தனக்கு அளித்த பூங்கொத்தையும், இரண்டு ஆயிரம் ருபாய் நோட்டுக்களைத் திணித்து ஒரு கவரையும் பேராசியரிடம் கொடுத்து அந்தப் பணியாளருக்கு வழங்கச் செய்தார்.

‘இதெல்லாம் எதுக்கு, நான் என் வேலையைத் தானே செய்யறேன்’ என்று மெல்லிய குரலில் சொல்லியபடியே பூங்கொத்தை அணைத்தபடி, எல்லோரையும் வணங்கி விட்டு மேடையிலிருந்து சங்கோஜத்துடன் இறங்கிச் சென்றார் அந்த கர்மயோகி எலிசபெத் குணசேகரன். அனைவரின் கண்கள் பனிக்க விழா முடிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *