கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 8,107 
 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

4. பொம்மையைக் காணோம் | 5. இருளில் | 6. நாடகம் நடந்தது

ஜக்கு எப்போதுமே இப்படித்தான். எதையாவது அவசரப் பட்டுக்கொண்டு சொல்வது, பிறகு அதை செய்வதற்குத் திண்டாடுவது. ஆனால் இன்று அவன் மாமி அவனைத் திண்டாடும்படி விடவில்லை. “எல்லாம் திங்கள்கிழமை ஊருக்குப் போகலாம்” என்று சொல்லிவிட்டாள்.

அவனுடைய மாமாவும், “டேய், இன்னும் இரண்டு நாளில் ‘கிளப்’ பையன்கள் ஒரு டிராமா போடப் போகிறார்களாம். அதைப் பார்த்துவிட்டுப் போகலாம்” என்றார்.

ஜக்குவுக்குத் தன் ஊரிலும் இதேபோல் ஒரு ‘கிளப்’ ஆரம் பித்து டிராமாவெல்லாம் நடத்த வேண்டும் என்று எண்ணம். ஆகவே இந்த டிராமாவை அவசியம் பார்க்க எண்ணி, “என்ன டிராமாவாம், மாமா?” என்று கேட்டான்.

“இதோ பார் நோட்டீசை! யாரோ பையன்கள் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் போல் இருக்கிறது!” என்று அவனிடம் ஒரு பிட் நோட்டீஸைக் காண்பித்தார்.

“பள்ளிக்கூடத்துக்கு மட்டம் : ஒரு ஹாஸ்ய நாடகம். நடிகர்கள் : நந்து, உல்ப், கபாலி (சோனி); மற்றும் பலர். ஞாயிறு மாலை 5 மணிக்கு ஆரம்பம். கட்டணம்: பைசா 25, 20, 15, 10.”

இதைப் பார்த்ததும் ஜக்குவுக்கு ஆச்சரியமாய் இருந்தது; கோபமாக வந்தது. இதற்காகத்தான் உல்பும் சோனியும் வந்து விட்டுப் போயிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான். ‘பார்த்தாயா, இந்த நந்துப் பயல் நம்மோடு கூடவே இருந்து கொண்டு, நாடகத்தில் நடிக்கப் போவதாகச் சொல்லவே இல்லையே!’ என்று வெறுப்பாகவும் இருந்தது.

இந்தச் சமயத்தில் ஜக்குவுக்கு ஒரு விஷயம் பளிச்சென்று ஞாபகத்துக்கு வந்தது. ‘நந்து மட்டும் ரொம்ப நல்லவன் என்று எப்படிச் சொல்வது? எப்போது டெலிபோன் மணி அடித்தாலும் அப்போதெல்லாம் நந்து அவனுடன் இருப்பதில்லை. கடிதம் எழுதி வைத்திருப்பதும் நந்து இல்லாத சமயங்களில்தான். ஒருகால் இந்த நந்துவுக்கு அதில் பங்கு ஏதாவது இருக்குமோ? ஏன் இருக்கக்கூடாது? ஸ்விம்மிங் பூலில் இருந்தபோது டெலிபோன் வந்ததே-அப்போது வேறு யாரோ கூப்பிட்டார்களே?’

ஜக்குவுக்குச் சந்தேகம் வலுத்துக்கொண்டே வந்தது. பல தடவை டெலிபோன் வந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நினைவு படுத்திப் பார்த்தான். சந்தேகமே இல்லை! அந்தச் சமயங்களில் நந்து இருப்பதில்லை:

நந்து இவ்வளவு தூரம் செய்யக்கூடியவனா என்று ஜக்கு யோசித்துப் பார்த்தான். ஹும்; இந்தக் காலத்தில் யாரைத்தான் நம்ப முடிகிறது? ‘பார்த்தால் பசு : பாய்ந்தால் புலி’ என்பார்களே, அதுமாதிரி நந்து நாடக விஷயத்தைச் சொல்லாமல் மறைத்துத் தானே இருந்திருக்கிறான்! இதைச் செய்தவன் என்னவெல்லாம் செய்திருப்பானோ? பொம்மையைக்கூட அவனைத் தவிர வேறு யார் எடுத்து மறைத்து வைத்திருக்கப் போகிறார்கள்?

‘இருக்கட்டும். ஐயா கிட்டயா இவர் வேலையைக் காட்டுறார்? பாக்கறேன் ஒரு கை!’ என்று ஜக்கு தனக்குள் சொல்லிக் கொண்டான்.

வழக்கம்போல நந்து வந்ததும் அவனிடம் நாடகத்தைப்பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் கையில் நோட்டீஸ் இருந் தது. நந்து அதைப் பார்த்துவிட்டு, “என்னடா ஜக்கு, அக்கிரம மாய் இருக்கு? என் பெயரையும் போட்டிருக்கானுகளே!” என்றான்.

ஜக்கு கிண்டலாக, “நாடகத்தில் நடிக்கிறவனை நோட்டீஸில் போடாமல இருப்பானா?” என்றான்.

“எனக்குத் தெரியாமலா? என்னைக் கேட்க வேண்டாமா?” “எதுக்காக உன்னைக் கேக்கணும்?” “நான் போய் நடிக்கணுமோ வாண்டாமோ?” “என்னைக் கேட்டால்?”

“நடிக்கறதுன்னா என்ன என்கிறதே தெரியாதே எனக்கு. என்னை அவமானப்படுத்தறதுக்கு ‘உல்ப்’ இப்படிச் செய்திருக்கான்!”

ஜக்கு தலையைத் திருப்பிக்கொண்டு, “உனக்குத்தான் பிரமாதமா நடிக்கத் தெரியுமே! அவன் உன்னை அவமானப்படுத் தறானோ, நீ அவனை அவமானப்படுத்தறயோ? இல்லை இரண்டு பேருமாச் சேர்ந்து என்னை அவமானப்படுத்தறீங்களோ? போங்கள்!” என்றான.

நந்து எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ஜக்குவுக்கு அவனிடம் நம்பிக்கையே ஏற்படவில்லை. தனியாக இருந்தால் தான் ஜக்குவின் கோபம் தணியுமென்று நந்து தன் வீட்டுக்குச் சென்றான்.

இந்த இரண்டு நாட்களுக்குள் டெலிபோனில் பேசுவது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்; பொம்மையை எப்படி எடுத்துக கொண்டு போனார்கள் என்பதைக் கண்டு பிடிக்கவேண்டும்; இவ்வளவும் எதற்காகச் செய்கிறார்கள் என்றும் கண்டு பிடிக்க வேண்டும். ஜக்கு யோசனை செய்தான். வெகு நேரம் தன் புத்திக்கு எட்டின வரைக்கும் செய்ய வேண்டியவைகள் பற்றிப் பிளான் போட்டான். பிறகு அப்படியே அயர்ந்து தூங்கிப் போனான்.

எழுந்திருந்தபோது அவன் தலைமாட்டில் ஒரு கடிதம் கிடந்தது: “மிஸ்டர் ஜக்கு அவர்களே! நந்து உண்மையானவன். உன்மாதிரி ஆபத்துச் சமயங்களில் திடீர் திடீரென்று பெரிய பெரிய புளுகாகப் புளுகித் தப்பித்துக்கொளகிறவனல்ல. அப்படிப் பொய் சொல்லி நீ இதுவரையில ஜயித்துவிட்டாய். இந்தக் கதை எப்போதும் பலிக்காது. அதனால் நந்து ஒருவனிடமாவது உண்மையுடன் இரு.”

ஜக்குவுக்கு இதைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது: “பயலே, இந்தப் புருடா வேலையெல்லாம் யாருகிட்டே? நம்ம கிட்டயா நடக்கும்?….. என்னை யாரென்று எண்ணினாய், பயலே?” இது நந்துவின் வேலை தான் என்று அவனுக்கு நிச்சயமாகப் பட்டது. போதும் போதாததற்கு அவன் நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்ய இன்னொரு விஷயமும் நடந்தது.

பொம்மையை வாங்கும்போது ஜக்குவுடன் நந்து மட்டுந்தான். இருந்தான். அதன் விலை நந்துவுக்கு மட்டுமே தெரியும். ஆனால் ராத்திரி, சாப்பிடும்போது அவன மாமா அவனைப் பார்த்து, “எனன விலைக்கு அந்தப் பொம்மையை வாங்கினாயடா?” என்று கேட்டார்.

“ஐந்து ரூபாய்!” என்று சட்டென்று பொய்தான் சொன்னான் ஜக்கு. அவன் வேண்டுமென்று சொல்லவில்லை. வாய் தவறி வந்துவிட்டது.

மாமா சிரித்துக்கொண்டே மாமியிடம், “பார்த்தாயா, உன் மருமான் சாமர்த்தியத்தை! பத்து ரூபாய் எழுபத்தைந்து பைசா வுக்கு வாங்க வேண்டிய பொம்மையை ஐந்து ரூபாய்க்கு வாங்கி யிருக்கிறான் ! இல்லை யாடா, ஜக்கு?” என்றார்.

ஜக்குவுக்கு முகம் சின்னதாகப் போய்விட்டது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கின பொம்மை தொலைந்து போய்விட்டது என்றால் மாமா கோபித்துக்கொள்வாரே என்று தான் விலையைக குறைத்துச் சொன்னான். ஆனால் இந்த நந்துப் பயல் மாமாவிடம் உண்மை விலையைச் சொல்லிவிட்டான் போல் இருக்கிறது! எவ்வளவு அவமானம்?

“அது கிடக்கட்டும்; பாக்கி உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கு?”

இதற்குள் ஜக்குவின் மாமி வலை பீரோவிலிருந்து ‘பாத்ரூமில் கிடந்ததாக ஜக்குவின் மணிபர்ஸை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“மணிபர்ஸை இப்படித்தான் அஜாக்கிரதையாக வைத்துக் கொள்வதா? அதில் பணம் சரியாக இருக்கிறதா, பார்!” என்றார்.

ஜக்கு மணிபர்ஸைத் திறந்து பார்த்தான். அதில் சரியாக இருபத்திரண்டு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.

“பின்னே பொம்மைக்கு எப்படிப் பணம் கொடுத்தாய்?” என்று கேட்டார் மாமா.

ஜக்குவுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. “ஐயையே, பணம் கொடுக்க மறந்துட்டு வந்துட்டேன் போல் இருக்கு, மாமா” என்றான்.

ஆனால் மாமாவா அவன் சொல்வதை நம்புவார்? கடகட வென்று சிரித்தார். இந்தப் பட்டணத்திலே எல்லாருமே இப்படித் தான டெலிபோன் சிரிப்பு மாதிரி கடகடவென்று சிரிப்பார்களோ என்று ஜக்குவுக்குத் தோன்றிற்று.

“ஏண்டா, அந்தப் பொண்ணு பணம் அனுப்பியிருந்தாள் என்று சொல்றது தானே?” என்றார் மாமா விடாமல.

ஜக்குவுக்கு அவமானமாய் இருந்தது. “இல்லே மாமா, வந்து…. வந்து…அந்தப் பொண்ணு…இல்லே, மாமா’ என்று உளறினான். அவனுக்கு நந்துவின்மேலதான் ஆத்திரம் வந்தது.

மறுநாள் இரவு பத்து மணி இருக்கும். ஒரே இருட்டு. தூரத்தில் எங்கேயோ ஒரு நாய் குரைத்தது. மற்றபடி எங்கும் நிச்சப்தம். ஜக்கு தூக்கம் கொள்ளாமல் இப்படியும் அப்படியு மாகப் புரண்டுகொண் டிருந்தான். ‘ஏண்டாப்பா பட்டணத் துக்கு வந்தோம்?’ என்றிருந்தது ஜக்குவுக்கு. திடீரென்று முதல் நாள் மத்தியான்னம் போட்ட பிளானுக்கு ஒரு முடிவு உதயமாயிற்று, அவன் மூளையில். அன்று முழுவதும் அவன் நந்துவின் வீட்டுக்குப் போகவுமில்லை; அவனுடன் பேசவுமில்லை. நாளை நாடகத்தில் நந்து நடித்தால் ஜக்குவிடம் அவன் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். ஆனால் நந்து நடிக்கப்போகிறானா இல்லையா? அவனுக்கு என்ன ஆக்ட்? அந்த வேஷத்துக்குள்ள பாடங்களை நந்து படித்துவிட்டானா? இதை யெல்லாம் உடனே கண்டு பிடித்து விடவேண்டும் என்று ஜக்கு வுக்குப் பட்டது. அதையும் தவிர அவன் மனசில் தனக்கும் ஒரு பார்ட் கிடைத்தால் நன்றாயிருக்குமே என்ற ஆசையும் உண்டா யிற்று. ‘இவனுக் கெஞ்சினாலும் நான் ஆக்ட் பண்ணப் போற தில்லை. இருந்தாலும் ‘ என்று தனக்குள் வீறாப்பாகச் சொல்லிக் கொண்டான்.

நந்துவின் வீட்டில் அவன் அறை மேல்மாடியில் இருந்தது. அந்த அறையில் எங்கே என்ன இருக்கும் என்பது ஜக்குவுக்குத் தெரியும். நந்து வீட்டுக்குப் போய் அவன் விழித்துக்கொண் டிருந்தாலும் விழித்துக்கொள்ளாமல் இருந்தாலும் எப்படியும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வருவது என்று முடிவு செய்தான். உடனே எழுந்திருந்து விளக்கைப் போட்டான். நீல நிஜாரையும் காக்கிச் சட்டையையும் அணிந்துகொண்டான். மெதுவாகச் சத்தம் போடாமல் அடிமேல் அடிவைத்துக் கதவைத் திறந்தான். விளக்கை மீண்டும் பழையபடி அணைத்துவிட்டு வெளியில் புறப்பட்டான். வாசல் கதவுத் தாழ்ப்பாளைத் திறக்கும் போது பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. சட்டென்று சுவரோர மாய்ப் பதுங்கிக்கொண்டான். இருட்டில் யாரோ நடப்பது போன்ற காலடியோசை மட்டும் கேட்டதே தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. அப்படியே மூச்சுக்கூட விடாமல் பத்து நிமிஷம் போல் நின்று கவனித்தான். சத்தமில்லை. சிறிது நேரம் கழித்து மாமாவின் அறையில் தும்மல் சத்தம் கேட்டது. ‘சரி, எல்லாரும் தூங்குகிறார்கள்’ என்று ஜக்கு கதவைத் திறந்து சாத்திக் கொண்டு வெளிப்பட்டான்.

சிலுசிலு என்று காற்று வீசிக்கொண் டிருந்தது. நக்ஷத் திரங்கள் மின்னின. தெரு விளக்குகள் மங்கலாக எரிந்தன. ஆள் நடமாட்டமே இல்லை. ஜக்கு ஓரமாய் நடந்து சென்றான். நந்து வீட்டுக் காம்பவுண்டுக்குள் நுழையும்போது மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். திக்கென்றது!

அங்கே விளக்குக் கம்பத்தடியில் யாரேர் ஒருவன் நின்று கொண்டிருந்தான். ஜக்கு தோட்டத்துச் செடி நிழலில் பதுங்கிக் கொண்டான்.

திடீரென்று மாடியில் நந்துவின் அறையில் விளக்கு எரிந்தது. நந்து விழித்துக்கொண்டுதான் இருக்கிறான் போல் இருக்கிறது! ‘சரி, நேராகவே போகலாமே’ என்று ஜக்கு தோட்டப் பக்கப் படியருகில் வந்தான். அதற்குள் விளக்கு அணைந்துவிட்டது. ஜக்கு தயங்கி நின்று வீட்டிலுள்ள மற்றவர்கள் தூக்கம் கெட்டு விடாதபடி மெதுவாக, “நந்து! டேய் நந்து!” என்று குரல் கொடுத்தான்.

பதில் இல்லை.

ஆனால் செடிக்குப் பின்னாலிருந்து யாரோ கனைத்துக் கொண்டே, “யாரது?” என்று கேட்டார்கள். ஜக்குவுக்குச் சர்வ நாடியும் ஒடுங்கிவிட்டது. எதிரே, இருட்டில் வந்தவனுடைய கையில் ஒரு பெரிய தடி இருந்தது. அப்படியே திக்பிரமை யடைந்து நின்றான் ஜக்கு.

– தொடரும்…

– ஜக்கு, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1952, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *