ஒரு எலெக்ஷன் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 21, 2022
பார்வையிட்டோர்: 4,950 
 
 

(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோட்டூர் ஜில்லாவுக்குத் தலைநகரமாகிய கோட்டூரில் முன்பு காட்டாஞ்சேரி என்று சொல்லி வந்து இப் போது சில வருஷமாய் ஜேம்ஸ்பேட்டை என்று புதுப் பெயர் கொண்ட ஆதித்திராவிடத் தெருவில், ஸபளையர் சீரங்கன் என்பவன் அங்கே குடியிருந்த முப்பது ஹரி ஜனக் குடும்பங்களுக்குள் கொஞ்சம் நல்ல ஸ்திதியி லிருந்தான். அனேகமாய் ஜேம்ஸ் பேட்டையில் குடி யிருந்தோர் அனைவருமே சோனைமலையில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தார்கள். சீரங்கன் கூலி வேலை செய்யவில்லை ; மலையில் காப்பி, தேயிலைத் தோட்டங்கள் வைத்திருந்த வெள்ளைக்காரர்கள் வீட் டுக்கு வேண்டிய சாமான்களைக் கோட்டூரிலும் சந்தை களிலும் விலைக்கு வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்து அதில் கிடைத்த சிறு லாபத்தைக் கொண்டு யோக்கிய மாய் வாழ்ந்து வந்தான். மலையில் எல்லாத் துரைமார் களும் துரைசானிகளும் அவனிடம் மிக்க பிரியமாயும், நம்பிக்கை வைத்தும் இருந்தார்கள்.

ஒரு எலெக்ஷன் கதை 221 கோட்டூர் ஜில்லா கலெக்டருக்குங்கூட, ஸப்ளையர் சீரங்கனுடைய யோக்கியதையையும் நல்ல குணங்களை யும் பற்றி, சமாசாரம் எட்டியிருந்தது. முனிசிபாலிடி யில் ஒரு ஹரிஜன அங்கத்தினர் நியமிக்க வேண்டி வந்தபோது. கோட்டூர் போலீஸ் ஸுபரிண்டெண்டும். ஜில்லா டாக்டரும், லண்டன் மிஷன் பாதிரியாரும் எல்லாரும் சேர்ந்து. வெள்ளைக்காரக் கிளப் பட்லர் சுவாமிப்பிரியன் என்பவரை நியமிக்க வேண்டுமென்று ஜில்லா கலெக்டரை வற்புறுத்தினார்கள். இந்த யோசனையைக் கலெக்டர் மனைவி தடுத்துவிட்டாள். ஸப்ளையர் சீரங்கனுக்குத்தான் அந்த ஸ்தானம் கொடுக்க வேண்டுமென்று மலையிலுள்ள வெள்ளைக் காரத் துரைசானிகள் சிபார்சு செய்திருக்கிறார்கள். அதுதான் சரி என்று கலெக்டர் மனைவி பலமாகத் தன் புருஷனிடம் சொன்னதே நிறைவேறிற்று. ”உங்க ளுக்குத் தெரியாது . கிளப்பு பட்லரை நியமித்தால் ஊரில் தேசியப் போக்கிரிகள் பெருங் கிளர்ச்சி செய் வார்கள். காலத்தின் நிலைமையை யனுசரித்துப் போக வேண்டும் என்று கலெக்டர் மற்ற உத்தியோகஸ்தர் களுக்குச் சமாதானம் சொல்லி, சீரங்கனையே சிபார்சு செய்து நியமனம் செய்துவைத்தார்.

அதுமுதல் சீரங்கன் நிலைமை கெட ஆரம்பித்தது. பெரிய மனிதன் ஆகிவிட்டான். கலெக்டரும் உத்தி யோகஸ்தர்களும் அவனுடன் கைகுலுக்கிப் பேசிவிட் டார்களல்லவா? தன் வியாபாரத்தைச் சரியாய்க் கவ னிக்கவில்லை. சாமான்களைத் தானே சென்று வாங்கு வதற்குப் பதில் தன் சிற்றப்பன் மகன் வரதனை அனுப்பு வான். மலைக்கும் ஒவ்வொரு நாள் தான் போவான் :

ஒவ்வொரு நாள் வரதனையே அனுப்புவான். வரும் லாபத்தில் அவனுக்கு ஒரு பங்கு கொடுத்தான். கவ னம் குறைந்தது : லாபமும் குறைந்தது. குடும்பச் செலவுக்குப் போதிய வருமான மில்லாமல், துரைசானி மார்கள் கொடுக்கும் முன் பணத்தில் சில பாகத்தை வீட்டுச் செலவுகளுக்கு உபயோகித்துவிடுவான். பிந்திக் கஷ்டப்படுவான். கடைகளில் கடனாகச் சாமான் வாங்க ஆரம்பித்தான். பலநாள் வியாபாரம் யோக்கியமாகச் செய்து வந்திருந்தபடியாலும், முனிசிபல் அங்கத்தினர் பதவி கிடைத்திருந்த புது கௌரவத்தினாலும், கடைக் காரர்கள் கடனாகச் சாமான் கொடுத்தார்கள். துரை சானிகளிடம் கணக்கு ஒப்புவிப்பதில் சில பொய்களும் சொல்ல வேண்டியதாயிற்று.

முறை கெட்டுவிட்டால், சின்ன வியாபாரமானா லும் சரி, பெரிய வியாபாரமானாலும் சரி. வரவர வெகு வேகமாய்ச் சிக்கல்கள் அதிகரித்துக் கடைசியில் மனிதனைக் குழியில் தள்ளிவிடுவது தெரிந்த விஷயம். ஊரில் சீரங்கனுக்கு முன்னிருந்த மதிப்புக் குறைந்து விட்டது. முதலில், மற்ற நகர பரிபாலன் அங்கத்தி னர்களை விடச் சீரங்கனே யோக்கியன் என்று பாதி வேடிக்கையாகவும், பாதி உண்மையாகவும் ஊரில் சொல்லி வந்த பேச்சு இப்போது மாறிவிட்டது.

***

முனிசிபல் சேர்மன் கோபால் செட்டியார் திடீர் என்று இறந்துவிட்டபடியால், மறு சேர்மன் தேர்தல் நடைபெற ஏற்பாடுகள் நடந்தன. அந்த ஸ்தானத் திற்குப் பிரபல நூல் வியாபாரி தன்பால் செட்டியார் ஓர் அபேட்சகராக நின்றார். போட்டியாக வக்கீல் இராமசுவாமி முதலியார் நின்றார். ஊரில் வக்கீல் களுக்குள்ளும் கடைத்தெருவிலும் ஒரு மாதமாக இதே பேச்சு.

வாக்கு (வோட்டு) வேட்டை ஆரம்பித்துவிட்டது. தேர்தலுக்கு நான்கு நாளிருக்கப் பணப் பேச்சும் ஆரம்பித்தது . “அங்கத்தினர் ஒன்றுக்கு ரூபா ஆயிரம். இரண்டாயிரம் எடுத்து வைத்திருக்கிறார் செட்டியார்” என்றார்கள். இதில் பாதி உண்மை, பாதி புளுகு. ஆயினும் இராமசுவாமி முதலியார் தாம் அந்தத் துறையில் இறங்குவதாக உத்தேசமேயில்லை என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அவருடைய நண்பர்களுக்கு உற்சாகம் குறைந்து போய்விட்டது. அவர்கள் எவ்வளவோ சொல்லியும் . “பணம் செல வழித்தாவது இந்தப் பதவி சம்பாதிக்க வேண்டும் என்று எனக்கு இஷ்டமில்லை” என்று முதலியார் பிடிவாதம் செய்தார்.

திங்கட்கிழமை காலை எட்டு மணிக்குத் தேர்தல். ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணிக்கு இராமசாமி முதலியார் வீட்டில் நண்பர்கள் கூடினார்கள்.

“இப்படிச் செய்தால் தங்களுக்கு என்ன. ஒன்று மில்லை. எங்களுக்குத்தான் அவமானம்’ என்றார் பொடிக்கடை ரங்கப் பிள்ளை.

‘இனி ஊரில் நாம் இருக்கமுடியாது. எங்கே யாவது போய்த்தான் விடவேண்டும்’ என்றார் மளிகைக்கடை சீதாராமய்யர்.

‘எங்களை யெல்லாம் இப்படி அவமானத்தில் இழுத்து விடுவது உங்களுக்கு நியாயமா?..’ என்றார்

வீரராகவ செட்டியார். இவர் . அபேட்சகர் தனபால செட்டியாரின் மைத்துனர். முந்தி அவருடன் வியாபாரத்தில் கூட்டாக இருந்து பிரிந்து போனவர். அது முதல் இருவருக்கும் ரொம்ப விரோதம்.

முதலியார் ஒன்றும் பேசாமல் இருந்தார். மறுபடி சீதாராமய்யர் . “இப்படிப் பணம் கொடுத்து ஊரைக் கெடுத்து முனிசிபாலிடியை நாசம் செய்துவிடுவதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா?” என்றார்.

“அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? காலம் கெட்டுப் போச்சு. முந்தியிருந்த சேர்மன்கள் எல்லாம் எவ்வளவோ கௌரவமா யிருந்தார்கள்; யோக்கியர் களுக்கு இனி இடமில்லை” என்றார் முதலியார்.

“விஷத்திற்கு விஷம்தான் மருந்து. முதலியார்வாள்! நீங்கள் இந்தக் காரியத்தில் இம்மாதிரி இருக்க லாகாது. கொஞ்சம் சிரத்தை காட்ட வேண்டும்” என்றார் ஆயுர்வேத பண்டிதர் இராகவாசாரியார்.

இரண்டு நிமிஷம் கழிந்து கடிகாரத்தில் மணி ஒன்பது அடித்தது. “நல்ல சகுனமாயிற்று. இனி ஏன் தாமதம்?” என்று சீதாராமய்யர் எழுந்தார். எழுந்து முதலியார் கையைப் பிடித்து உட்கார்ந்திருந்தவரை எழுப்பி, ஒரு கையை அவர் தோள் மேல் போட்டு வெகு அபிமானமாக ஆபீஸ் அறைக்குள் தனியாக அழைத் துப் போனார்.

ஒரு நாழிகை கழிந்தது. பிறகு சீதாராமய்யர் சிரித்த முகமாக வந்து. கூடியிருந்தவர்களைப் பார்த்து. ”சரி. காரியம் முடிந்தது. இனி செய்யவேண்டிய வேலைகளைச் செய்யலாம். ஒரு இராத்திரிதான் இருக் கிறது என்றார். எல்லாருக்கும் ஒரே சந்தோஷம் : ஆரவாரித்தார்கள்.

***

அன்றிரவு மோட்டார்கார்கள் பறந்ததற்குக் கணக்கில்லை. இரவு இரண்டு மணிக்கு முதலியார் வீட்டுக்குச் செய்தி வந்தது. முப்பத்தைந்து அங்கத்தி னர்கள் வோட்டு செய்ய வேண்டியதில், பதினேழு அங்கத்தினர்கள் முதலியார் பக்ஷம் என்று முடிவாகச் சொல்லிவிட்டார்கள். அதில் பத்துப் பேர்கள் செட்டி யாரிடம் வாங்கியிருந்த பணமும் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். ஏழு ஆசாமிகள், ‘யாரிடமும் பணம் வாங்கமாட்டோம் ; முதலியாருக்குத்தான் வோட்டுச் செய்வோம். நீங்கள் ஏன் சந்தேகப்படுகிறீர்கள்? என்றார்கள். இன்னும் ஒரு வோட்டு வந்தால் போதும். பாக்கிப் பதினெட்டுப் பேரில் ஒருவர் நாகப்பட்டினத் திற்குக் கோர்ட்டு அலுவலாய்ப் போயிருக்கிறார். அவர் நாளைக்குள் வரமாட்டார். பதினாறு பேர் தனபால செட்டியார் கட்சி . அவர்களை அசைக்கமுடியாது. சீரங் கன் ஒருவன் தான் சந்தேகமாய் நிற்கிற வோட்டு. அவனை எங்கே தேடினாலும் அகப்படவில்லை. வீட்டில் விசாரித்தால், மலைக்குப் போய்விட்டான் என்கிறார்கள்.

“அவன் தம்பி வாத்தியார் முனிசாமியைக் கேட்டீர்களா?” என்றார் பொடிக்கடை ரங்கப் பிள்ளை.

“கேட்டோம். அவன் இப்படியும் சொல்லுகிறான் அப்படியும் சொல்லுகிறான். ஒரு சமயம், மலைக்குத்தான் போயிருக்கலாம் என்கிறான். ஒரு சமயம், வீட்டி லேயே ஒளிந்து கொண்டிருக்கலாம்; ஏழைகளுக்கு இங் தக் கஷ்டம் என்னத்திற்கு? எங்கேயும் தாக்ஷணியம் எப்படிப் போனாலும் விரோதம் என்கிறான்.”

“இவ்வளவு செய்தும் வீணாய்ப் போகும் போலிருக்கிறதே” என்றார் சீதாராமய்யர்.

“ஆமாம், இம்மாதிரி மூக்கால் அழுதாலா காரியம் ஆகும்?” என்று பொடிக்கடை ரங்கப் பிள்ளை மிக்க கோபத்துடன் சொல்லி எழுந்தார்.

“நீர்தான் பார்த்துச் செய்யுமே!” என்றார் சீதாராமய்யர்.

“எங்களை யெல்லாம் யார் நம்புவார்கள்? நாங் கள் ஏழையாச்சே” என்றார் ரங்கப் பிள்ளை.

“முதலியார்வாள்! ரங்கப் பிள்ளை தான் எல்லாம் செய்யட்டும். நான் இத்துடன் இந்த விஷயத்தை விட்டேன்” என்றார் சீதாராமய்யர்.

“நன்றாயிருக்கிறது! நல்லவேளை பார்த்தீர்கள் சண்டைக்கு” என்று வீரராகவ செட்டியார், எழுந் திருந்த சீதாராமய்யரை. மறுபடி உட்கார வைத்தார். உட்கார வைத்து. முதலியாரிடம் வந்து, ‘இதில் இறங்கியிருக்கக் கூடாது. இறங்கினபின், எல்லாம் சரி யாய்ச் செய்து முடிக்க வேண்டும். கைக்கு எட்டினதை வாய்க்கு எட்டாமல் விட்டு விடுவதா? தயை செய்து ரங்கப்பிள்ளையிடம் இந்தச் சீரங்கன் விஷயத்தை ஒப்பு வித்து விடுங்கள். பகவான் இருக்கிறார். நம்ம கட்சி ஜயிக்கும்” என்றார்.

முதலியாருக்கும் உற்சாகம் பிறந்துவிட்டது. வீட் டுக்குள் நுழைந்தார். பெட்டி திறந்து மூடிய சத்தம் கேட்டது. ஒரு பையுடன் வெளியே வந்து ரங்கப் பிள் ளையை அழைத்துக்கொண்டு வேறு ஓர் அறைக்குள் சென்றார்.

பொடிக்கடை ரங்கப் பிள்ளை ஜேம்ஸ்பேட்டைக் குச் சென்றார். சீரங்கன் தம்பி முனிசாமியைக் கண்டு நூறு ரூபாய் ஒரு காகிதத்தில் ஐந்து பொட்டலமாகக் கட்டி அவனிடம் பேசாமல் கொடுத்தார். முனிசாமி இவ்வளவு தொகை வெள்ளி ரூபாயாக ஒரே தடவை அதற்கு முன் கனவிலும் தொட்டது கிடையாது. பிர மித்து, கண்களில் ஒரு பித்தப் பிரகாசத்துடன் ரங்கப் பிள்ளையைப் பார்த்துக்கொண்டு சும்மா நின்றான்.

ரங்கப் பிள்ளை , “யார் யாரோ உன்னை வந்து கண்டிருப்பார்கள். இக்காலத்தில் ஏழையை யார் நம்புகிறார்கள் ? யார் உதவுகிறார்கள் ? உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் யாருக்குத் தெரியும்? தம்பி , இந்தப் பணம் உன்னுடையது. காரியம் ஜயித்தாலும் சரி. தோற்றாலும் சரி. சீரங்கன் எங்கே? உண்மை என்ன?” என்றார்.

வாத்தியார் முனிசாமி. “உங்களிடம் நான் பொய் பேசக்கூடாது. சீரங்கனைத் தனபாலு செட்டியார் வீட்டில் குதிரைக் கொட்டகையில் பூட்டி வைத்துக் காவ லிருக்கிறார்கள். அவன் செட்டியாருக்கு நூற்றைம்பது ரூபாய் வரையில் முந்தியே கடன் பட்டிருக்கிறான். தெரியாதா? நாளை நேராக முனிசிபல் ஆபீசுக்குப் போகும் போது அவனைக் கூடவே கூட்டிப் போவார்கள்” என்றான்.

‘முனிசாமி! இதில் என்ன செலவானாலும் சரி. நான் சொல்லுகிறபடி செய்” என்றார் ரங்கப் பிள்ளை.

பிறகு கொஞ்ச நேரம் குசுகுசுவென்று பேசினார் கள். “சரி , தாங்கள் இங்கே இருங்கள்” என்று சீரங் கன் வீட்டுக்குள் முனிசாமி நுழைந்தான்.

உள்ளே சீரங்கன் தாயார் கிழவியிடம் அவன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, மறுபடி வெளியே வந்து ரங்கப் பிள்ளையை மாரியம்மன் கோயில் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு, அவர் கொண்டு வந்திருந்த குதிரை வண்டியில் தான் ஏறி, தனபாலு செட்டியார் வீட்டுக்குப் போனான்.

செட்டியாரும் அவர் வீட்டு வாசல் திண்ணையில் தம் நண்பர்களுடன் உட்கார்ந்திருந்தார். ஒரு . ஹரி கேன் விளக்கும். காகிதம் பென்சலுமாக இருந்தார் கள். முனிசாமி வண்டியிலிருந்து இறங்கி, செட்டியார் காலில் விழுந்தான். “சாமி! எஜமான் மன்னிக்க வேண்டும். சீரங்கன் தாயார் சாகிற தறுவாயிலிருக் கிறாள். நாங்கள் போவதற்குள் தீர்ந்துவிடுமோ. என் னமோ சீரங்கனை எப்படியாவது அனுப்பவேண்டும்” என்றான்.

“கிழவிக்குத் திடீர் என்று என்ன வந்துவிட்டது? திருட்டுத்தனம்! முதலியார் ஏதாவது சொல்லியனுப் பித்தாரா, என்ன?” என்றார் செட்டியார்.

“ஐயோ ! கடவுள் மேலே பார்த்துக்கொண்டிருக் கிறார். பொய் சொல்லிப் பிழைக்க முடியுமா? உண்மை யாய்க் கிழவிக்குப் பேதி. அவள் பிழைக்கமாட்டாள். நேற்று முதல் இருபது தடவை ஆய்விட்டது. பேச்சு மூச்சில்லை. எப்படியாவது அண்ணனை அனுப்புங்கள். இல்லாமல் போனால் ஜீவன் துடிச்சுப் போகும்” என்று கண்ணீர் விட்டு விம்மி விம்மி அழுதான்.

“சரி. ஸ்ரீநிவாசய்யரே. நீங்களும் போங்கள். சீரங்கனைக் கூட்டிப்போய், என்ன சமாசாரம் பார்த்து வாருங்கள்” என்றார் செட்டியார் தம் குமாஸ்தா வுக்கு .

“இது ஏதோ மோசம். செட்டியார் எல்லாரை யும் ஒரே மாதிரி நம்புவது சுபாவம்” என்றார் அங்கே ஒருவர்.

குமாஸ்தா சீநிவாசய்யர் வீட்டுக்குள் போய், குதி ரைக் கொட்டகையிலிருந்து சீரங்கனை அழைத்துக் கொண்டு புழைக்கடை வழியாய் வந்து வண்டி நின்ற இடத்தை அடைந்தார். முனிசாமியும் போய் அவர்கள்ளுடன் நின்றான்.

“என்ன யோசிக்கிறீர்கள். ஐயரே? ஏறும் வண்டியில்” என்றார் தனபால செட்டியார்.

தீண்டாமை கீண்டாமை – எல்லாம் பறந்து போய்விட்டது. தேர்தலில் அதெல்லாம் பார்த்தால் ஆகுமா? வண்டியில் எல்லாரும் ஏறினார்கள்.

ஜேம்ஸ்பேட்டையில் சீரங்கன் வீட்டு வாசலில் வண்டி நின்றதும். வீட்டுக்குள் ‘ஐயோ! ஐயோ..’ என்று கூப்பாடு கிளம்பிற்று.

“கதை பொய்யல்ல, உண்மையே என்று ஸ்ரீநி வாசய்யர் தமக்குள் சொல்லிக்கொண்டு. “சீரங்கா. உள்ளே போய் விசாரித்து வந்து சொல்” என்றார்.

சீரங்கனும் முனிசாமியும் உள்ளே போனார்கள். கொஞ்ச நேரம் கழித்து முனிசாமி வெளியே ஐயர் பக்கத்தில் வந்து . “உயிர் போய்விட்டது” என்று மெது வாகச் சொல்லி, உடனே மறுபடியும் வீட்டுக்குள் போனான்.

“ஐயையோ! போய்விட்டாயே! ஐயையோ குடி கெட்டுதே . என்று வீட்டுக்குள்ளேயே இருந்து பலத்த கூப்பாடு போட்டார்கள்.

“என்ன இந்த வீட்டில் சமாசாரம்?..” என்று ஸ்ரீநிவாசய்யர் தம் பக்கத்தில் வந்து நின்ற ஒரு பையனைக் கேட்டார்.

“என்ன சமாசாரம், வாந்தி பேதிதான். கிழவி செத்துவிட்டாள்” என்றான் பையன்.

ஸ்ரீநிவாச ஐயருக்குப் பயம் பற்றிக்கொண்டது. தீண்டாதார் தெரு. கூட, வாந்தி பேதி, கேட்க வேண்டுமா?. ‘சரி. இனி இங்கே இருப்பது சரியில்லை’ என்று தீர்மானித்தார். முனிசாமியும் வெளியே வந்தான்.

“சுவாமி கிழவி செத்தாப்போல்தானிருக்கிறாள். மூச்சே இல்லை. சீரங்கனுக்கு நான் ஜவாப்தாரி, நீங்கள் போங்கள்.” என்றான். ஐயர் அவசரமாய் வீடு திரும்பினார்.

உள்ளே , படுக்கையில் கிடந்த கிழவி மகனைக் கிட்டே வர சமிக்ஞை காட்டினாள். சீரங்கன் தன் காதைத் தாயார் வாயிடம் வைத்தான். ” அப்பா. சீரங்கா! ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்றார்களே. யாராவது வேண்டாம் என்பார்களா? பைத்தியக்கார னாய்ப் போகாதே. கிழவி பேச்சுக் கேள்” என்றாள்.

சீரங்கன். ‘இதென்ன மோசம்! இதற்குத்தானா கூப்பிட்டீர்கள்?” என்றான்.

“ஐயையோ!” என்றான் முனிசாமி. கூட வேறு சிலரும் கூப்பாடு போட்டுப் பேரிரைச்சல் போட்டார்கள்.

“மகனே!” என்றாள் மறுபடி கிழவி. “எனக்குப் பேதியுமில்லை. ஒன்றுமில்லை. ஆனால் என்னமோ போலி ருக்கிறது. இந்த ஆயிரம் ரூபாய் பொடிக் கடைக்காரர் கொண்டு வந்திருக்கிறதை வாங்கிக்கொண்டு. இந்தப் பாழும் உத்தியோகத்தை ஒழித்துவிட்டுக் கடன்களைத் தீர்த்துக்கொண்டு மானமாய் வாழு. நான் எத்தனை நாள் இருப்பேன்?” என்று மெதுவாக, தடுமாறித் தடுமாறிச் சொன்னாள்.

சீரங்கனுக்குக் கோபம், வியப்பு, பயம், எல்லாம் சேர்ந்தாற்போல் பொங்கி, பிரமையுண்டாகி ஒன்றும் பேசாமல் நின்றான்.

“ஐயோ ! குய்யோ என்று முனிசாமி தூண்டு தலின் மேல் வீட்டிலுள்ளவர்கள் எல்லாரும் கத்தினார்கள்.

பிறகு, சீரங்கன் ரங்கப் பிள்ளையண்டை வந்து நின்றான். “ஏறு வண்டி, சீரங்கா! முதலியார் வீட்டில் எல்லாம் பேசுவோம்” என்றார் ரங்கப் பிள்ளை.

வண்டி ஏறினதும், “சீரங்கா! அடித்தது உனக்கு அதிர்ஷ்டம். எல்லாரும் பணம் சம்பாதிக்கிறார்கள். நீ மட்டும் என்ன பாவம் செய்தாய்? ஏன் இப்படி உதாசீனமாயிருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும், சொல்? நானாச்சு, அதற்கு ஜவாபு” என்றிவ்வாறெல்லாம் முதலியார் வீடு சேரும் வரை ரங்கப் பிள்ளை சொல்லிக்கொண்டே வந்தார்.

ரங்கப் பிள்ளை முதலியாருடன் தனியாகச் சில நிமிஷம் பேசினார். பிறகு ஒரு வெள்ளைத் துணி முடிப்புடன் வெளியே வந்து, திண்ணைமேல் உட்கார்ந்த சீரங்கன் முன் அதை வைத்து. “சீரங்கா ! இதோ. உன் ஆயுளெல்லாம் நீ கஷ்டப்பட்டால் இது கிடைக்கிறது. உன் கடன்கள் எல்லாம் தீர்த்துக்கொண்டு வியாபாரம் செய். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. முதலியார் உனக்கு வேண்டியதெல்லாம் செய்வார் ” என்றார் ரங்க பிள்ளை.

சீரங்கன் மௌனமாயிருந்தான்.

வீரராகவ செட்டியார் பையை எடுத்துச் சீரங்கன் மடியில் வைத்து. “எழுந்திரு. சத்தியம் செய். எல்லாம் முடிந்துவிட்டது. இனி ஏன் தாமதம்?” என்றார்.

சீரங்கன் பணப்பையை எடுத்துக் கீழே வைத்து. ஒரு நிமிஷம் யோசிப்பது போல் சும்மா இருந்தான். எல்லாரும் மௌனமாய் அவன் ஏதோ சொல்லுவான் என்று காத்திருந்தார்கள்.

திடீர் என்று சீரங்கன் எழுந்திருந்து, ஒரே குதியாய்த் திண்ணையிலிருந்து தெருவில் குதித்து ஓடிவிட்டான். சிலர் துரத்திப் போனார்கள். ஆனால் சீரங்கன் அவர்கள் கண்ணுக்குக் கூட அகப்படவில்லை. திரும்பி வந்து. “ஓடியே போய்விட்டான்” என்றார்கள்.

முதலியார். பணப்பையை எடுத்து உள்ளே வைத்துவிட்டு, “பார்த்தாயா! ஏமாற்றிவிட்டான். திருடன்” என்றார்.

“என்ன இருந்தாலும் சாதிப் புத்தியைக் காட்டி விட்டா”ன் என்றார்கள் எல்லோரும்.

அடுத்த நாள் முனிசிபல் ஆபீசில் தேர்தல் கூட்டம். மீட்டிங்கில் சீரங்கனைக் காணவில்லை.

“தாயார் செத்துவிட்டாள்” என்றார் சிலர்.

“இல்லை, இல்லை. எல்லாம் மோசம்” என்றார் வேறு சிலர்.

நாகப்பட்டினம் போனவர் திரும்பிவந்து தயாராக இருந்தார்.

“தனபால் செட்டியாருக்கு இருபத்தாறு வோட்டு வரும்” என்றார் ஒருவர்.

“இல்லை, இல்லை. முதலியாருக்குப் பதினேழு . செட்டியாருக்குப் பதினேழுவரும். சீட்டுத்தான் போட வேண்டுமாக்கும்” என்றார் மற்றொருவர்.

“எல்லாம் பணம்” என்றார் ஒருவர்.

“பணம் வாங்கியும் மோசம் செய்வார்கள். திரு டர்கள் ” என்றார் இன்னொருவர்.

முடிவில் தனபாலு செட்டியாருக்கு இருபத் திரண்டு வோட்டும், முதலியாருக்குப் பத்து வோட்டும். வெறுங் காகிதம் ஒன்றும் விழுந்தன. இந்த முடிவு சொன்னவுடன் “தனபாலு செட்டியாருக்கு ஜே” என்று வெளியில் கூட்டத்தில் சத்தம் போட்டார்கள்.

“லஞ்சம் லஞ்சம்” என்று எதிர்க்கட்சியார் கூப்பாடு போட்டார்கள்.

“சீரங்கன் ஒருவன் தான் யோக்கியன்” என்றார் முதலியார்.

– ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *