கோடி இன்பம் வைத்தாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 20,814 
 

லண்டன்..

பனிப்புகார் படர்ந்த மாலை வேளை. சூரியனை மழைத்துளிகள் விழுங்கிக்கொண்டிருந்தன.

குறிப்பிட்ட நேரத்தின் ஒரு நிமிடம் கூடப் பிசகாமல் தாதியின் வரவு. கதவு மணி ஒலித்தது.

‘மாலினி’ தாதியை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.

தாதியில் இடைவிடாது பெருகும் மெல்லிய சிரிப்பு அவள் முகத்தினை வருடிக்கொண்டிருந்தது.

‘எப்படி இருக்கிறீர்கள் மாலினி?’

தாதி மாலினியை நோக்கி எழுப்பிய உற்சாகமான கேள்வி மனதில் ஒரு தெம்பை ஏற்படுத்தியதுபோல் இருந்தது. சற்றுக் குள்ளம்தான். பரந்த சீன முகம். குடுகுடுத்துப் பேசிக்கொண்டேயிருப்பாள் அந்தத் தாதி.

மாலினியும் மொட்டு விரிவது போல் சிரித்துக்கொண்டாள். மலர்கள் அவிழ்ந்து விரிவது போல் மாலினியின் முகம் சிலிர்த்துக்கொண்டது. நலமாக இருக்கிறேன் என்று கூறியவாறே குளிர்சாதனப் பெட்டியில் பத்திரமாக இருக்கும் ஊசிமருந்தை எடுத்துக்கொண்டிருந்தாள் மாலினி.

பௌவியமாக தாதியிடம் மருந்தைக் கொடுத்துவிட்டு தன் உடையைத் தளர்த்துகிறாள் மாலினி.

உடலை இலகுவாக்கிக்கொள்ளுங்கள் மாலினி. உங்கள் சிந்தனையையும் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளுங்கள். முதலில் நம்பிக்ககையான மனம் வேண்டும். தாதி கதைத்துக்கொண்டே மாலினி அணந்திருந்த நாரிக்குப் பின்புறமான ஆடையை இலகுவாக்கினாள்.

நாரியின் பின்புறத்தில் சதைப்பிடிப்பான இடத்தில் ஊசியின் முனையை எறிந்தாள் தாதி.

‘ஆ… என்று சுள்ளிட்ட ஒரு வலி…’ பின்னர் மாலினி சரியாகிவிட்டாள்.

நாரியில் தொங்கிய ஊசியில் மருந்துக் குழாயைப் பொருத்தினாள் தாதி. பொருந்திய மருந்தை தன் பெருவிரலால் அழுத்தி உடம்பினுள் உட்செலுத்திக் கொண்டிருந்தாள் தாதி.

‘கவலைப்படாதே இம்முறை எல்லாம் வெற்றியாக புதிய உயிரின் வரவு காத்திருக்கும். எல்லாமே வெற்றியாக இடம்பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்’

உங்கள் வாழ்த்துக்கு ‘நன்றி’ என்று கூறினாள் மாலினி. ‘இந்த வாழ்த்துக்கள் எத்தனை வருடங்களாகக் கேட்டு அலுத்துவிட்டேன்’ என்று மனதுள் அலுத்துக்கொண்டாள். அலுப்புக்குள்ளும் ஒரு சிரிப்பு.

இரத்தப் பரிசோதனையைப் பார்த்து எனக்கு ‘போன்’ செய்யுங்கள் மாலினி. என்று கூறிய தாதி தன்னுடைய ஊசிகள் மருந்துகள் அடங்கிய பெட்டிகளை அவசரமாகத் தூக்கிக்கொண்டு குடு குடுத்த நடையில் ‘குட் லக்’ என்றுவிட்டுச் சென்றுவிட்டாள்…

மாலினி தான் இப்படியான ஒரு முடிவுக்கு ஏன் வந்தேன் என்று தன்னையே கேள்விக் கணைகளால் தொடுத்துக்கொண்டிருந்தாள்.

தாய் – தாய்மை… ஒரு பெண்ணால்தான் முடியும். அந்த பொறுமையான அனுபவத்தை ஒரு பெண்ணால்தான் அனுபவிக்க முடியும். பெண்ணுக்கு பெருமை சேர்க்கின்ற அந்த படைப்பாற்றல்… அந்த சக்தி… அவளால்தான் முடியும்.

அதைத் தவற விட்டுவிட்டு… தன் கைகளால் தன் கண்களைப் பொத்திக்கொண்டாள். அவளின் உள்ளங்கைகளின் இளஞ்சிவப்பு, விரல்களில் உணர்வலைகளை தோற்றுவித்துக் கொண்டிருந்தது…

வைத்தியத் துறையிலும் உலகம் எங்கோ பறந்துகொண்டிருக்கிறது. பரிசோதனைக் குழாய் மூலம் கருக்கட்டும் முறை, குளோனிங் மரபணு முறை என்று இனங்களைப் பெருக்குவது பற்றிய பரிசோதனைகள் தொடர்ந்த வண்ணமும், நடைமுறைப்படுத்திக் கொண்டேயும் இருக்கின்றன.

அவளோடு பழகும் வெள்ளைக்கார நண்பிகள் அவற்றை நடைமுறைப்படுத்தி வெற்றி அடைந்ததையும் பார்த்திருக்கிறாள்.

ஆனால் இயற்கைக்கு மாறான செயற்கையான செயல்கள் மாலினிக்குச் சலிப்பைக் கொடுத்தது.

மாலினியின் வெள்ளைக்கார நண்பிக்கு உலகத்தில் புதிது புதிதாக என்னென்ன செய்கிறார்கள் என்பதைப் பிரலாபித்துக் கதைப்பதில் அலாதியான ஆசை.

குளோனிங் மரபணு பரிசோதனைகள் அது இது என்று இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த முறையின்போது நன்மைகளைவிட தொண்ணூறு வீதம் தீமைகள்தான் அதிகம் என்று மாலினியும் நண்பியுமாக ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். வீட்டிற்குள்தான் எமது ஆய்வுகள் என்று நண்பிகள் இருவரும் வாய் பிளந்து சிரித்துக்கொள்வதுமுண்டு.

‘உலகத்தில் முதலாவது பரிசோதனைக்குழாய்க் குழந்தை இங்கிலாந்து கேம்ரிட்ஜ் நகரில் பான்ஹால் என்னும் இடத்தில் 1978ஆம் ஆண்டு பிறந்தது’ என்று ஏதோ தங்கட லண்டன்காரர்தான் எல்லாவற்றையும் முதலில் கண்டுபிடித்தது மாதிரியும், அமெரிக்காவுக்குத் தாங்கள்தான் வழிகாட்டின மாதிரியும்தான் வெள்ளைக்கார நண்பி சொல்லுவாள்…

அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் முப்பதினாயிரம் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் பெற்றெடுக்கப்படுகின்றன. எல்லாம் இந்தப் பரிசோதனைக்குழாயில் கருக்கட்ட வைத்துப் பின்னர் கருப்பையில் நட்டுத்தான், என்று கூறிக்கொண்டிருந்தாள் வெள்ளைக்கார நண்பி

மாலினி அதற்கு மேலாக… இந்தியா என்ன குறைவா, இந்த விடயத்தில் இந்தியாவும் முன்னுக்குத்தான் நிற்கிறது என்பாள்.

அந்த வெள்ளைக்கார நண்பி மாலினிக்கு அடிக்கடி உற்சாகம் ஊட்டிக்கொண்டிருப்பாள். அவளின் உற்சாகமே மாலினிக்கு இப்படியான ஒரு தீராத ஆசையை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

கருப்பை முட்டைகள் ஆரோக்கியமான முட்டையா எனப் பரிசோதிப்பதற்கு எடுத்த முயற்சியே மிகவும் கஷ்டமாக இருந்தது மாலினிக்கு. அதே வேளை கணவனது விந்துகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தனது கணவரை நூறு கும்பிடு போட்டுத்தான் இந்த முயற்சிக்கு இணங்க வைத்தாள் மாலினி. பிள்ளைகள இல்லாவிட்டாவிட்டால் ஆரோக்கியமாக வாழ்ந்திட்டுச் சாகிறது என்பார் கணவர்.

இருவரது ஆரோக்கியமான உடல நிலைக்குப் பின்னரே வைத்தியத்தை மேற்கொள்ளலாம் எனக் கூறிவிட்டார்கள் வைத்தியர்கள்.

மாலினி வெளிநாட்டுக்கு வந்தவுடனேயே திருமணமாகி உடனேயே கருத்தரிநதிருந்தாள். ஆனால் தனது இளமை வயதில் குழந்தை கிடைத்துவிட்டால், பராமரிப்பதற்கு தன்து பெற்றோரின் உதவியோ, தனது பொரளாதாரத்தை விருத்தி செய்யவோ முடியாது என்று எண்ணி கருவைக் கலைத்துவிட்டாள்.

இப்போது… இப்போது அவள் ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசை கொள்ளும் போது கிடைக்க மறுக்கிறது.

மாலினி தனது மாதவிடாய்க் காலங்களை அச்சொட்டாக எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பாள். ஏனென்றால் அவற்றைக் கணிப்பிட்டுத்தான் இந்த வைத்தியத்தை ஆரம்பிப்பார்கள்.

மாலை வேளைகளில் ஓமோன்களை தூண்டக்கூடிய மருந்துகளை மாலினி தாதியை அழைத்துக் போட்டுக்கொள்வாள். அதிகாலையில் அருகிலுள்ள ‘ஆய்வுகூடத்தில்’ இரத்தப் பரிசோதனை செய்துகொள்வாள். பரிசோதனையின்போது ஓமோன்களின் முன்னேற்றத்தை, அதன் தயார் நிலையை அவர்களே வைத்தியசாலைக்கு அறிவித்துக்கொள்வார்கள். தொடர்ந்து கருக்கட்டலுக்கான ஓமோன்களின் அளவு விருத்தி செய்கிறதா, அல்லது குறைகிறதா? என்பதைப் பரிசோதிக்கும் வைத்தியசாலை நிபுணர்களே தீர்மானித்துக்கொள்ளுவார்கள்.

இப்படியாக மாலினி மூன்று வருடங்களுக்கு மேலாக இப்படிச் செய்து செய்து தோல்வியைத்தான் கண்டாள். அவள் உடலே பிய்ந்து போனதுமாதிரித்தான். மாறி மாறி பாயும் நினைவுகளால் பதறிப்போவதுண்டு மாலினி…

ஒரு தாய் என்ற ஸ்தானத்தை அடைவதற்கு எத்தனை உடல் வேதனைகள், மனத்துன்பங்கள் மனித வாழ்வில். ஆற்றல், ஒத்திசைவு, பரவசம், சோகம் என்ற உணர்ச்சிகளைக் காட்டுவதற்கு உகந்த ஒன்றுதான் இந்த உடம்பு. இதை வெளிப்படுத்தும் இன்னொரு உடம்பை உருவாக்குவதற்கு ஒரு பெண் படும் வேதனை.

கருக்கட்டிய அடுத்த நாளே அதன் வலுவை இழந்து மனமுடைந்திருக்கிறாள் மாலினி. தொடர்ந்த அவள் முயற்சியில் நான்கு மாதங்கள் வரை குழந்தை வளர்ச்சி அடைந்து பின்னர் அவை வலுவிழந்து, அதைப்பிரிந்து துடித்திருக்கிறாள் மாலினி.

தாதியாகப் பணிபுரியும் மாலினியின் ஒரு நண்பி. மிகுந்த அன்பானவள். உதவிகள் செய்வதற்கு இலக்கணமானவள். மாலினியை வைத்தியசாலையில் சந்தித்த போது ஏற்பட்ட நட்பு. இலங்கையின் தென்பாகத்தைச் சேர்ந்தவள் என்று பின்புதான் தெரியவந்தது.

இந்தச் செயற்கை முறை வைத்தியத்தை அவளும் செய்து கொண்டாள் என்றபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது மாலினிக்கு. கடைசியில் கருப்பையையே அகற்றவேண்டிய நிலைதான் ஏற்பட்டதாம். பெண் என்ற பெயருக்கே அர்த்தம் கற்பிக்க முடியாதவள் என்ற கலங்குவாள அந்த நண்பி;. மருந்துகளால் மனித அழகே குலைந்து விடுகின்றன ஆனால் அவளின் மனஅழகே அவளில் வியாபித்து நின்றது.

ஆனால், மாலினி தனது குறிக்கோளின் நம்பிக்கையை இழக்கவில்லை. வாழ்வின் நெளிவுகள், சுளிவுகள், வளைவுகள் எல்லாம் ஒரு புள்ளியில் ஓவியமாகி பூத்துக்கொண்டிருந்தன.

அன்றைய தினம் தனது இரத்தப் பரிசோதனையை முடித்து வந்தவளுக்கு… இலங்கையிலிருக்கும் அவளின் அம்மாவைக் களவாடிசப் போன இடிந்த செய்தி காத்திருந்ததைக் கண்டு துவண்டுபோனாள் மாலினி.

மின்சாரம்; உடலைத் தாக்கிவிட்டது போன்ற பிரமை அவளை மண்டியிட்டது. அம்மாவின் அடிவயிற்றில் முகம்பதித்த நினைவுகள், அம்மாவின் மார்பின் கதகதப்பு, அவளின் குரல்களின் ஏற்ற இறக்கங்கள் அத்தனையும் அவளின் உடலில் மிதந்து மிதந்து தாலாட்டியது.

புலம் பெயர்ந்து வந்து பல கொடுமைகளை அனுபவிப்பதாக உணர்ந்தாள். இன்னும் சரியான ‘விசா எதுவுமே கிடைக்கவில்லை. விண்ணப்பங்கள் கொடுத்த நிலைமையில் எப்படி எனது நிலையை அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறுவது? என்ன கொடுமை இது…! மனதிற்குள் உரக்கக் கத்தினாள். ‘என் அம்மாவை நான் பார்க்க முடியாதா? ஆ… அவள் என் தெய்வம்…’

‘என் தாயை ஈடு செய்ய, இந்தப் போலி உலகத்தில் எனக்கு யாருமே இருக்க முடியாது!’ இது தீர்க்கமான உண்மை. மாலினியின் உடல் நடுக்கமெடுத்தது.

‘என் அம்மாவின் வெள்ளை மனம்… என்அம்மாவின் அழகு… என்அம்மாவின் அன்பு…. என்னில் ஓடும் அவள் இரத்தம்… மாலினி முகஞ்சிவந்து குழம்பிக் கலங்கினாள். அம்மாவின் பசுமையான நினைவுகள் வந்த போதும், அவள் இந்த உலகத்தை விட்டு மறைந்துவிட்டாள் என்ற போது கருமை கொட்டுவதாக உணர்ந்தாள். வீட்டின் ஒலிகள், காற்றின் அசைவுகள், கண்களின் மெய்மை எல்லாமே அலைந்த அம்மாவின் நினைவுகள் உணர்வுகளாகி உலுக்கி அசைத்துக்கொண்டிருந்தது மாலினியை.

மாலை நேரம். மின் விளக்குகள் விறைத்து கவிழ்ந்து கொண்டிருப்பது போலிருந்தன மாலினிக்கு. மாலினியின் இதயம் உலர்ந்து சருகாகி நொருங்கிக் கொண்டிருந்தது.

ஒரு குழந்தையைப் பெறவேண்டும் என்ற ஆசையும், ஆதங்கமும் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது.

தொலைபேசி ஏதோ அலறிக்கொண்டிருப்பது போலிருந்தது. வைத்தியசாலையில் இருந்து வந்த தாதியின் அழைப்பு அது.

‘ஹலோ மாலினியா?’

‘ஓம் மாலினிதான் பேசுகிறேன்’

‘மகிழ்ச்சியான செய்தி மாலினி இம்முறை. உங்களது ரத்தப் பரிசோதனைகள் எல்லாமே வெற்றியாக அமைந்துள்ளது. நாளை திரும்பவும் வைத்தியரைச் சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காலையிலேயே கட்டாயம் வைத்தியரைச் சந்திக்க வேண்டும்’ என்று கூறிய தாதி, அவசரமாக தொலைபேசியை நிறுத்திக்கொண்டாள். தாதி இப்படி எத்தனையோ சிகிச்சையாளர்களுக்கு செய்திகளை அனுப்புகிறாள் என்பது அவசரமான பேச்சில் தெரிகிறது.

மாலினிக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னைச் சுற்றியுள்ள வரவேற்பறை, வாசல் எல்லா இடங்களையும் தன் விழிகளால் சுழற்றினாள். எல்லாப் பொருட்களுமே குழந்தைகள் சிரிப்பதுபோல மாலினியை வருடிக்கொண்டிருந்தன. தன் அடி வயிற்றைத் தடவிப் பார்க்கிறாள். ஏதோ ஊர்வதுபோல் உணர்கிறாள் மாலினி. உடம்பு முழுவதுமே வெப்பம் அதிகமாகி, இருதயம் வேகமாக அடிக்கிறது போலிருக்கிறது.

டாக்டரின் பரிசோதனை நேரம் நெருங்கியது. மாலினியை அன்பாக அழைத்து புன்னகைத்தார் டாக்டர். உளவியலை அற்புதமாகப் பயின்றிருக்கிறார்கள் இந்த வைத்தியர்கள். என்ன கனிவான உரையாடல்…

தளர்த்தப்பட்ட உடையில் மாலினியின் அடிவயிற்றில் ஜெல் தடவி ஸ்கான் இயந்திரத்தை மெதுவாக அழுத்தியவாறே பேசிக்கொண்டிருந்தார் டாக்டர்.

மாலினியின் எதிராக வைக்கப்பட்டிருந்த சிறிய திரையில் அவள் வயிற்றினுள் உள்ள உயிர்ப்பூவின் அசைவுகள் விரிந்துகொண்டிருந்தன. மனம் என்னும் தனித்தளத்தில் இறுக்கமும் பதற்றமும் உழன்று கொண்டிருந்தன.

வெளிநாடுகளில் இங்கு கருத்தரித்த சில வாரங்களிலேயே பிறக்கப்போகும் செக்ஸை அவர்கள் விரும்பும்போது கூறிவிடுவார்கள்.

‘உங்களக்குப் பெண் குழந்தை காத்திருக்கிறது’

மாலினியால் டாக்டர் கூறியதை நம்பவே முடியவில்லை. எதிர்க்கப்பார்க்காத நேரத்தில் என்னுள் ஒரு சிசு சாதியப்படுகிறதா?… அவள் சிந்தனை மனதுக்குள் பொங்கிப் பொருமிக் கொண்டிருந்தது. நான் விரைவில் ஒரு தாயாகப் போகிறேன்… ஆனால் என்னைப் பெற்ற என் தாய்… கண்கள் சிவந்து குழம்பிக்கொண்டிருந்தன….

பாதாள கங்கையில் இருந்து பீறிடும் ஊற்றின் ஜில்லிப்பு. அவளின் ஊனின் உயிரில் கலந்திருக்கும் அம்மாவின் இதமான விகாசம். அவளின் தாய்மையின் சுழிப்பு.

சாத்தியமில்லை என்று நினைப்பதற்கு அவள் யார்? அது சாத்தியமாகிவிட்டது.

ஓக்டோபர் மாதம் இரண்டாம் திகதி மாலினியின் நெஞ்சில் வந்து வருடிக் கொஞ்சிக் கொண்டிருந்தது அந்த அழகிய மலர். தொப்பிள் கொடியை நீக்கிவிட்ட நிலையில் அந்தப் பெண் மொட்டு வீரிட்டுக் கொண்டிருந்தது.

இந்த இனிய சங்கீதத்தில் திளைத்துக்கொண்டிருந்தாள் மாலினி. தன் குழந்தை மீது சொரிந்த முத்தங்களால் செந்நிறமாகிக்கொண்டிருந்தது அவள் முகம்.

10.04.2006.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *