இலந்தைப் பழத்துப் புழு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,677 
 
 

(1971 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவசர ஊரடங்குச் சட்டம் அமூலில் இருக்கும் ஒருநாள். மாலை மூன்று மணி பிந்தி விட்டது. அவசரமாக நீர்கொழும்புக்குப் போயாக வேண்டும். வேலை முடிந்து வெகு வேகமாக பஸ் நிலையத்தை வந்தடைந்தேன். ஒருவேளை பஸ் கிடைக்காமல் போய்விட்டால் போக முடியாதே என்று மனப்பயமும் பரபரப்பும். பஸ் நிலையத்தில் நீர்கொழும்பு கியூ வரிசையை வந்தடைந்து பார்த்த போது கூட்டம் ஓரளவு இருந்தது. நானும் வரிசையில் நின்று கொண்டேன்.

வரிசையில் நின்று கொண்டே ஒருமுறை மேலோட்டமாக என்முன்னே நின்றிருந்த பிரயாணிகளின் எண்ணிக்கையை அலசியபோது எனக்கும் ஸீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

ஸீட் கிடைக்காவிட்டால் நின்று கொண்டு பிரயாணம் செய்ய வேண்டும். நின்று கொண்டு பிரயாணம் செய்வது எனக்கொன்றும் புதிதான விசயமல்ல! ஏனென்றால் தினமும் காலையில் நீர்கொழும்பில் இருந்து கொழும்பிற்குத் தொங்கிக் கொண்டு வருவதென்பது முறையாக மாறுதல் இன்றி நடைபெறும் விசயம்.

காலை நேரத்தில் நீர்கொழும்பு பஸ் நிலையத்தில் கொழும்புக் கியூவரிசையைக் காண்பது ஒரு மகத்தான காட்சியாகும்.

எப்போதாவது ஒருநாள் அற்புதமாய், அதியற்புதமாய் ஸீட் கிடைக்கும் போது அதில் இருக்கும் ஆனந்தம் வேறெதில் இருக்கிறது!

நேரம் செல்லச் செல்ல கியூ வளர்ந்து கொண்டிருந்தது. நான் முன்னால் இருக்கும் பிரயாணிகளைப் பார்த்துக் கொண்டும், வரவேண்டிய பஸ்ஸை எதிர்பார்த்துக் கொண்டும் ஒற்றைக் காலில் தவம் செய்து கொண்டிருந்தேன். வரப்போவது கடைசி பஸ் எப்படியாவது போக வேண்டும்.

இதைத் தவிர கியூவரிசையில் வராமல் கண்டக்டர் டிக்கற் கொடுக்கக் கூடிய இடத்தில் ஒரு சிறு பிரயாணிகள் கூட்டம் காத்துக் கொண்டிருந்தது.

நான் இருந்த இடத்தில் இருந்து பார்க்கையில் தூரத்தில் பாதையில் அவசரமாக விரையும் மனித உருவங்கள் வெகு சுவாரஸ்யமாக புலப்பட்டன.

எனக்கென்னவோ இந்த மனிதர்களைப் பார்ப்பதில் அலாதியானதொரு திருப்தி-மனிதர்களுடைய முகங்கள் தான் எத்தனை எத்தனை விதமாக அமைந்திருக்கின்றன! எல்லா முகங்களிலும் பொது அம்சமான மூக்கு, வாய், காது எல்லாம் இருக்கின்றன. இருந்தாலும் இருக்கின்றன. இருந்தாலும் எல்லா முகங்களும் ஒன்றுபோல் இல்லையே!

இந்த விசயங்களை எண்ணும் போதே எனக்கு இந்தப் பிரபஞ்ச ரகசியமே, ஒரு புரிந்துகொள்ள முடியாத சிக்கல் போலத் தோன்றியது.

நான் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? எழுத்தாளர்கள் எல்லோரும் சில சமயங்களில் கிறுக்குத் தனமாகத்தான், யோசிப்பார்களாம். நான் எழுத்தாளன். அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. நானும் இப்போது கிறுக்குத் தனமாகவா யோசிக்கிறேன்? ஒவ்வொரு வித முகங்களிலும், ஒவ்வொரு ஜீவத்துவம் மிக்க சிறுகதைகள் – நாவல்கள் புதைந்து கிடைப்பதாக எனக்குத் தோன்றும்.

இப்படி அர்த்தமில்லாமல், அல்லாது அர்த்தத்துடன் யோசித்துக் கொண்டிருந்த போது முன்னால் இதுவரை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் “ஸ்…… ஆ ஊ என்று வியர்வையை அதன் புழுக்க உணர்வை வெளிக் காட்டிக் கொண்டு என் பக்கமாகத் திரும்பினார்.

என் எண்ணங்கள் தடைப் பட்டன. என் கண்கள் அவரை நோக்கின. என் கண்கள் அந்த மனிதரின் முகத்தை விட்டு அகல மறுத்தன. காரணம், அப்படிப் பட்ட அழகான, மிகக் கௌரவமான தோற்றமுடைய ஒருவரை, மிக அரிதாக இப்போதுதான் பார்க்கின்றேன்! என்ன களையான முகம்!

கருண்ட முடியுடைய கிராப் ஒரு சினிமாப் படக் கதாநாயகனுடையதைப் போன்ற எடுப்புடன் காட்சியளித்தது. சிவந்த வட்ட வடிவான முகம். நல்ல தீட்சண்யம் வாய்ந்த, பெண்மையின் சாயல் மிளிரும் கண்கள், வெட்டப் பட்டு, மை தடவாமலேயே கறுத்திருந்த மெல்லிய மீசை, அளவான உடலமைப்பு. மெல்லிய டெட்ரோன் சேர்ட், டெட்ரோன் நீண்ட கால்சட்டை, பொயிண்டட் ஷு.

மழுமழுவென்றிருந்த ஷேவ் செய்யப் பட்ட அந்த முகத்தில், அலுப்பும், களைப்பும் வியர்வையும் தென்பட்டன. இருப்பினும், அந்த விசயங்களை மீறி மேக்கப் போடப் பட்டிருப்பதைப் போன்ற ஒரு ஜொலிப்பு!

இப்படி அழகு வாய்ந்த அந்த மனிதர் என்னை நோக்கிப் புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் தான் எத்தனை கவர்ச்சி! அந்தப் புன்னகையை யாராவது இளம் பெண்கள் பார்த்தால், எல்லாக் கட்டுப்பாடுகளையும், சப்பிரதாயங்களையும் மீறி அவருக்குத் தம்மை அர்ப்பணித்து விடத் துடிப்பார்கள் என்றே தோன்றியது.

வியர்வையிலும் அந்த முகம் தான் என்ன சௌந்தர்யமாகத் தென்படுகிறது! நானும் தான் அலைந்து திரிந்துவிட்டு வீட்டில் போய் என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறேன். அப்போது என் முகம் கறுத்து, கருவாடு மாதிரிக் காட்சியளிக்கும்.

ஆனால் சிலருக்கு எவ்வளவு வெயிலில் அலைந்தாலும், திரிந்தாலும், பளபளப்பு மாறுவதில்லை. ‘ஸ்டெயின்லஸ் ஸ்டீல்’ மாதிரி!

அவருடைய கையில் ஒரு ஆங்கிலப் புத்தகம் இருந்தது. நான் அதை வாங்கிப் பக்கங்களைப் புரட்டினேன். அது இன்று நிகழும் யுத்த வெறியின் மூலம் அனாதையாக ஈவு இரக்கமில்லாமல் கொல்லப் படும் பல நாட்டு மக்களுக்காகப் பரிந்து எழுதப் பட்ட ஒரு கட்டுரைத் தொகுதி. இடையிடையே படுகொலை செய்யப் பட்ட மக்களின் படங்கள். புத்தகத்தின் முன் பக்கத்தைப் புரட்டினேன். அது ஒரு ஜெர்மன் வெளியீடு. ஆமாம்! போரில் பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தானே போரின் கொடுமை விளங்கும். புத்தகத்தின் முகப்பில் அந்த மனிதர் ‘சுந்தரேசன்’ என்று தம் பெயரை எழுதியிருந்தார். அல்லது, அந்தப் புத்தகத்தை வாங்கியவர் தம் பெயரை எழுதியிருக்கலாம்.

நான் சம்பிரதாய பூர்வமாக என் பெயரைக் கூறிக் கொண்டு அவருடைய பெயரைக் கேட்டேன். அவர் ‘சுந்தரேசன்’ என்றார். பொருத்தமான பெயர் தான்! அந்த மனிதருடன் பேசுவதே ஒரு தனிப்பட்ட இன்பமாக இருந்தது எனக்கு.

நானும் ஒரு ஆண். அவரும் ஒரு ஆண். எனக்கு இப்படியொரு கவர்ச்சி பெண்ணில் ஏற்படலாம். வியப்பில்லை. ஆனால் இவரிடம் ஏற்படுவது?

ஒருவேளை எழுத்தாளன் கிறுக்குத் தனமாகக் கூட ரசிப்பானோ!

‘இந்தப் போர்களினால் சாதாரண மக்கள், எவ்வளவு கொடுமையாகப் பாதிக்கப் படுகிறார்கள் பாருங்கள்!, என்று புத்தகத்தைக் காட்டித் தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தார்.’

‘ஆம்! போர்களின் மூலம் அநியாயமாக மக்கள் இறப்பது இந்த உலகத்திற்கு ஒரு மகத்தான நஷ்டம் தான்!’

அவரும் ‘ஆம்’ என்று எனது பேச்சை ஆமோதித்து விட்டு, தனக்குள்ளேயே சிந்தனையில் ஆழ்ந்தார். துயரத்தின் சாயல் அவர் கண்களில் தெரிந்தது.

அந்த அழகிய மனிதரின் இதயங்கள் கூட எவ்வளவு கனிவுடன் விசயங்களை நோக்குகிறது இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு பெரிய ராஜ பார்ட்காரனைப் போல் வந்து நின்ற பஸ்ஸில் இருந்து இறங்கிய கண்டக்டர், கியூவைப் பார்த்து ஒருமுறை கனைத்து விட்டு, ‘அதட மாறு சல்லி அரங் எண்ட’ என்று தம் உரிமையைப் பிரகடனப் படுத்தினார். ‘கியூ’ நகர்ந்தது. என் பின்னால் ஒரு பிள்ளையின் அழு குரல் கியூவில் மூட்டை முடிச்சுகள் தூக்கி வைக்கப் படும் சப்த ஸ்வரங்கள் – ‘கச கச’வென்ற ஓசை நயம் இத்யாதி..

எதேச்சையாக பின்னால் திரும்பிப் பார்த்தேன். பின்னால், அதாவது எனக்குப் பக்கத்தில் ஒரு இளைஞன் கையில் சுமார் இரண்டு வயதுக் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தான். அவனருகில் ஒரு இளம் பெண். கையில் எட்டு மாதம் மதிக்கத்தக்க கைக் குழந்தை.

இளைஞன் சற்று அப்பாவி போல் தோற்றமளித்தான். கசங்கி அழுக்கேறிப் போன உடைகள். கலைந்த ஒழுங்கற்ற தலை. வரிசை சீக்கிரம் முன்னேறாது, என்ற கவலை அவன் கண்களில் தெரிந்தது.

அவன் தூக்கிக் கொண்டிருந்த குழந்தை சீத்தை சட்டையொன்று போட்டுக் கொண்ருந்தது.

அந்தச் சிறிய குழந்தையின் கீழ்ப் பாகங்களை மறைக்கும் படி ஆடை ஒன்றும் இல்லை. அந்தக் குழந்தை துரு, துருவென்று விழித்துச் சுற்றுப் புறங்களை நோக்கிக் கொண்டிருந்தது. ஆயினும், அதன் வயிறு பெருத்துப் போய் கயரோகத் தடுப்பு நிதி நிவாரணக் கொடிகளைப் பாதையில் விற்பார்கள் அல்லவா. அதில் இருக்கும் படத்தில் உள்ள குழந்தையைப் போல் காட்சியளித்தது.

‘அந்த அவள் வெகு எளிமையாக இருந்தாள். கழுத்திலோ, கையிலோ எந்தவிதமான நகையும் இல்லை. காதில் மட்டும் நிறம் மாறிப் போன ரோல்டு கோல்டு’ சும்மல் இருப்பது தெரியாமல் காட்சியளித்தது.

இரண்டு குழந்தைகள் பெற்றவள் ஆயினும், பத்துக் குழந்தைகள் பெற்றவள் போல் தளர்ந்து போயிருந்தாள்.

அவள் கையில் இருந்த சிசு உறங்கிக் கொண்டிருந்தது. இருப்பினும், உறக்கத்தில் கூட பாலைபோல் வாயைச் சப்பிக் கொண்டிருந்தது.

அவன் கையில் ஒரு பழைய பிரம்புக் கூடை. அதிலும் அழுக்குத் துணிகள். சில பார்சல்கள்.

‘கியூ’ முன்னேறியது அவன் பின்னாலிருந்து அவசரப்படுவதில் என் முதுகில் அடிக்கடி முட்டிக் கொண்டான்.

ஒரு மாதிரியாகப் பஸ்ஸுக்குள் ஏறி ஒரு ஸீட்டில் அமர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் அந்த இளவயதுத் தாயும், பிள்ளையும் – பக்கத்தில் அவள் புருஷனும், அந்த வயிறு பெருத்த விளம்பரக் குழந்தையும் – அதற்குப் பக்கத்தில் அந்த சௌந்தர்யமிக்க சுந்தரேசன்.

எல்லாப் பிரயாணிகளும் ஏறிக் கொண்டார்கள். நல்ல நெருக்கம். பின்னால் சில மினிகவுன் தொடையழகுக் கன்னியர்கள்.

பஸ் புறப்பட்டது. ஒவ்வொரு குலுக்கிலும், யார் யாரோ சபிக்கும் குரல்களும், மினி மங்கையரின் நகைப் பொலியும் பஸ்ஸின் சப்தத்தையும் மீறி வெளிப் பட்டன.

இதுவரையில் என் பக்கத்தில் இருந்த அப்பெண்ணின் மடியிலிருந்து உறங்கிக் கொண்டிருந்த அக்குழந்தை விழித்துக் கொண்டது.

விழித்ததும், எந்த வயதுக்கும் எட்டாத ஸ்தாயியில் ராக ஆலாபனம் செய்ய ஆரம்பித்தது. இதற்கிடையில் அந்த வயிறு பெருத்த குழந்தையும் தகப்பனைச் சுரண்டித் தன் பசியை அழுகை மூலம் தெரிவித்தது.

முன்னால் ஒரு நாகரிகமான நைலக்ஸ் சாரி தழையத் தழைய தனது அழகுப் பிரதேசங்கள் வெளியே தெரிய இருந்த மங்கை, அப்பெண்ணையும் அவனையும் ஒரு வெறுப்புடன் நோக்கினாள்.

தாம்பத்தியம் என்ற விசயத்தின் இறுதி சுவாரஸ்யமிக்க காட்சிகள் இவைகள் தான்! இப்படிப் பட்ட துயரங்களை மறைக்கும் கனவு எண்ணம் தான் ‘திருமணம்’ என்ற சமுதாய சம்பிரதாயமோ என்ற அவள் மனம் தாம்பத்தியத்தையே வெறுத்திருக்க வேண்டும்.

நாகரிகம் தன் முகத்தைச் சுளித்து வேறு பக்கம் திரும்பியது.

அவன் தன் கையில் இருந்த குழந்தையை அதட்டிப் பார்த்தான். அது கேட்கவில்லை. அடம்பிடித்தது. அவன் கூடைப் பையைத் திறந்து ஒரு போத்தலில் வெறும் தேநீரை ஊற்றி ரப்பர் போட்டு அதன் வாயில் வைத்தான். அந்தப் போத்தல் சரியாகக் கழுவப் படாததால் அதன் மீது அழுக்கு விதம் விதமான கோலத்தில் படர்ந்திருந்தது.

அது அதைக் குடிக்க ஆரம்பித்தது. அது குடிக்கும் சந்தோஷத்தில் தன் குச்சிக் கால்களை உதைக்கத் தொடங்கியது.

அந்த உதைகள் அழகு மன்னன் ‘சுந்தரேசன்’ அவர்களின் மீதும் பட்டது.

அவர் என்னமோ அவனிடம் கூறினார். அவர் கூறியதில் ஏதோ கடுமை இருந்தது. என் கண்களுக்குப் புலப்பட்டது. அது ஒருவேளை வெறும் பிரமையாகவும் இருக்கலாம்.

ஆனால் என் கண்கள் கண்டது பிரமை இல்லை என்று நிச்சயிக்கும் விதமாக அந்த சுந்தரேசன் ‘டீசன்ட், மெனர்ஸ் இல்லாத ஜென்மங்கள்’ என்று முணு முணுத்தார். அது என் காதில் தெளிவாக விழுந்தது.

அவன் குழந்தையின் கால்கள் அவர்மீது படாமல் குழந்தையை மடியில் இழுத்து அணைத்தக் கொண்டான்.

குழந்தைக்கு மெனர்ஸ் – அல்லது டீசன்ட் தெரியுமா என்ன?

அந்த அழகிய முகத்தில் அருவருப்பும் அசூசையும் நிரம்பி வழிந்தன.

சட்டென்று எழுந்து நின்ற சுந்தரேசன் ஏதோ வாய்க்குள் முனகியபடி தொங்கிக் கொண்டு பிரயாணம் செய்ய ஆரம்பித்தார்.

அவன் பரிதாபமாக மன்னிப்புக் கேட்கும் பாவனையில் அவரைப் பார்த்தான்.

எனக்கும் அந்தக் கணமே அந்த மனிதரைப் பற்றிய உயர்ந்த எண்ணங்கள் கலைய ஆரம்பித்தன.

இதற்கிடையில் அவளின் குழந்தை தன் அழுகையை பிரபலப் படுத்தி, எவ்வளவு தூரம் ஒலியை அதிகப் படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அதிகப் படுத்தியது.

அவளுக்கு ஒன்றும் செய்ய வழியில்லை. சற்றுக் கூச்சத்துடன் குழந்தையை அணைத்து சட்டையில் இருந்த ஊசியைக் கழற்றி வற்றிப் போன வெளிறிய வெண்மையின் ஊடாக நீல நரம்புகள் ஓடிய பகுதியை வெளியெடுத்தாள்.

குழந்தை கண்களை மூடிக் கொண்டு சுவைக்க ஆரம்பித்தது. அதில் பால் வருமா என்பது சந்தேகம். ஆனால் குழந்தை இன்னும் உறிஞ்சிக் கொண்டிருந்தது.

இந்தக் கட்டத்தில் நின்ற படி பிரயாணம் செய்து கொண்டிருந்த சுந்தரேசன், பால்குடித்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தை தன் கையை அங்கும் இங்கும் அசைக்கும் போது முந்தானை விலக, அவளுடைய கவர்ச்சியாக இருக்க வேண்டிய ஆனால், கவர்ச்சியற்ற அங்கங்களை வெறித்து நோக்கினார்.

வற்றிப் போனாலும் வதங்கிப் போனாலும் அவள் இளவயசுக் காரி. அவர், நான் இதுவரை கருணை மிக்கவராக ரசனை மிக்கவராக கௌரவம் மிக்கவராக எண்ணி வந்த அந்த மனிதர் ரசிக்கிறார்!

கண் முன்னே இருக்கும் எளிய ஆத்மாக்களை மதிக்க முடியாத பிரகிருதி எங்கோ ஒரு நாட்டில் இறக்கும் மக்களுக்காக வருந்துகின்றோம். அவர் உண்மையிலேயே வருந்துகின்றாரா? அது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

பஸ் ஒரு மாதிரியாக நீர் கொழும்பை வந்தடைந்தது. பிரயாணிகள் முண்டியடித்துக் கொண்டு இறங்கினர்.

அவனும், அவளும் இறங்கி அவசரமாக விரைந்தனர். அவன் கூடையையும் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு அவள் தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு….

சுந்தரேசன் பஸ்ஸை விட்டிறங்கித் தன் உடைகளை ஒரு முறை சரிசெய்து கொண்டார். ஸ்… ஆ…. என்று வியர்வையின் புழுக்கத்தைத் தனக்கு அல்லது மற்றவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டு என்னை நோக்கி மந்தகாசமான புன்முறுலோடு கையை அசைத்துவிட்டு, கம்பீரமாக நடக்கிறார்.

நான் – இந்த மனிதர்களை அவர்களுடைய இயல்புகளைப் பற்றி நினைத்துக் கொண்டு நடையைக் கட்டுகின்றேன்.

– இதழ் 43 – டிசம்பர் 1971, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *