கலைந்த மோகம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 15,392 
 

“பாசிட்டிவ்!”

மேலோட்டமா அந்த ஞாயிறு மலரை வாசித்துக் கொண்டிருந்த தமிழ் சின்ன திடுக்கிடலோடு நிமிர்ந்தாள்.

கண்களை இடுக்கித் தன் இருக்கையின் எதிரில் நின்றிருந்த ரத்தப் பரிசோதகனை சந்தேகத்தோடு கேட்டாள்.

என்ன? என்ன சொன்னீங்க?”

“பாசிட்டிவ் மேடம்” என்றான் இன்னும் அழுத்தத்தோடு.

“அப்படியா?”

அவன் வழக்கமான தொழில்முறை பாவனையோடு, ஆமாங்க மேடம், ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க ரிப்போர்ட் ரெடியாயிடும்” என்றவாறு அந்த 10 க்கு 10 அடி பரப்பில் இருந்த அந்த சின்னப் பரிசோதனை நிலையத்தின் மூலையில் இருந்த குட்டி டைப்ரைட்டர் முன் போய்விட்டான்.
கைநழுவியிருந்த புத்தகத்தை குனிந்து எடுத்துப் பக்கத்திலிருந்த மேஜைமேல் வைத்துவிட்டு துப்பட்டாவால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

அவன் தந்த உறையிலிட்ட ரிப்போர்ட் தாளின் மேலிருந்த உறையைப் பிரித்து மீண்டும் நிதானமாகப் படித்தாள். தாளின் மேல் பார்வை நிலைத்திருக்க எதிரில் அவன் பணம் வாங்கக் காத்திருப்பது புரிந்த போது வரவழைத்துக் கொண்ட சின்னப் புன்னகையோடு எவ்வளவு என்று கேட்டுக் கொடுத்துவிட்டு திரும்பினாள். வெளிக்கூடத்தில் பெஞ்சில் காத்திருந்த சர்க்கரை வியாதி மனிதர்களை நிமிர்ந்து பார்க்காமல் வெளியே வந்தாள்.

எதிரில் புது வீடு ஒன்று பாதி கட்டிக்கொண்டிருந்த நிலையில் இருந்தது. அதற்கு அருகில் போய் நிழலாய் நின்று சுற்றிப் பார்த்துவிட்டு கைப்பையிலிருந்து செல்போனை எடுத்து ஊருக்குப் போயிருந்த கணேஷ் எண்ணை ஒற்றினாள்.

நீண்ட நேரமாக அடித்தும் எடுக்காதது அவளுக்கு இன்னும் பதற்றத்தை அதிகமாக்கியது.
மீண்டும் அழைத்தபோது அந்தப் பக்கம் கோயில் திருவிழா கூச்சல் உச்சமாகக் கேட்டது. உரத்த குரலில் கணேஷ் பேசுவது இரைச்சலுக்கிடையில் கேட்டது.

“ஹலோ, சொல்லு…”

“எப்போ ஊருக்கு வர்றீங்க?”

“ஏன்? நான் நாளைக்கு மதியம்தானே வர்றதா சோல்லிட்டு வந்தேன். என்னாச்சி?”

“இல்ல… லேபுக்கு வந்தேன்ல, யூரின் ரிசல்ட் பாசிட்டிவ் ஆயிடுச்சி.”

அந்த முனையில் பதிலே இல்லை. கோயில் மேள சத்தம் சலசலப்பாய் கேட்டது.

“கணேஷ், ஹலோ ஹலோ ஏங்க, கேக்குதா?”

“ம்.. கேக்குது.. சரி இப்போ உடனே வரமுடியாது. நாளைக்கு மதியம் சாப்பிட்டு கிளம்பிடுவேன். எதுவாயிருந்தாலும் நேர்ல பேசிக்கலாம். நீ வீட்டுக்குப் போ.. வச்சிடவா?”

போனை அணைத்து கைப்பையில் போட்டு வண்டியின் முன்புறக் கொக்கியில் மாட்டிவிட்டு ஸ்கூட்டியைக் கிளப்பி வழக்கம்போல் வேகமெடுத்தவள் உடன் நிதானப்பட்டு காரணமில்லாமல் மெதுவாக்கினாள். நினைவுகள் எதிலோ உறைந்திருந்தது. அந்த அதிர்விலிருந்து இன்னும் அவள் மனம் மீளவில்லை.

தமிழரசிக்கு நகரத்தின் மையத்திலிருந்த அரசு அலுவலகத்திலும், அவள் கணவனுக்கு 20 கி.மீ. தொலைவில் இருக்கும் தொழிற்சாலையில் நிர்வாகப் பிரிவிலும் பணி. அவன் அப்பாவும் அம்மாவும் வசிக்கும் சொந்த கிராமத்தில் திருவிழாவுக்காக அவன் மட்டும் சென்றிருக்கிறான்.

இருபுறமும் கொத்துக் கொத்தாக இளஞ்சிவப்பு அரளிப் பூக்கள் பூத்திருந்த தன் வீட்டின்முன் வண்டியை நிறுத்திவிட்டு அதிலேயே கொஞ்சநேரம் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் ரயில் போகும் சத்தம் தடதடவெனக் கேட்டது. நகரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள புறநகர்ப் பகுதி அது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்போதுதான் வீடுகள் முளைக்கின்றன. வீட்டுக்குள்ளே அம்மா ஏதோ திட்டும் சத்தம் கேட்டது. பெருமூச்சு விட்டு வண்டியைவிட்டு இறங்கி பெரிய கேட்டை திறந்து உள்ளே ஏற்றி நிறுத்தினாள்.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது அம்மா மகன் நிதேஷைப் பற்றி ஏதோ புகார் சொன்னாள். தலையசைத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தவள் கதவைச் சாத்திவிட்டு படுக்கையில் கவனமாய் ஒருக்களித்துப் படுத்தாள். பக்கவாட்டில் கண்ணீர் கசிந்து கொஞ்சங்கொஞ்சமாய் அதிகமானது. மெல்ல முதுகு குலுங்க, சப்தமிடாமல் அழுதாள். திடீரென்று யாருமே இல்லாமல் அனாதையாகிவிட்டது போல் ஓர் உணர்வு.

அரை மணி நேரமாக அப்படியே படுத்திருந்தவள், எழுந்தபோது மனம் கொஞ்சம் தெளிந்திருந்த மாதிரி இருந்தது. முகத்தைக் கழுவிக்கொண்டு அழுகையின் அடையாளங்களை மறைத்தவாறு கூடத்துக்கு வந்தாள். தோட்டத்துக் கதவும் தெருப்பக்க வாசலும் திறந்திருக்க கூடத்தில் பளீரென்ற வெளிச்சத்துடன் இதமான காற்றும் இருந்தது.

கீழே உட்கார்ந்ததும் வழக்கம்போல் வேகமாய் வந்து மேலே விழவந்த மகனைப் பிடித்து மடியில் அமர்த்திக் கொண்டாள். அவன் இந்த விடுமுறை முடிந்து யு.கே.ஜி போகிறான். பெரியவள் நிதிலா இரண்டாவது போகிறாள். கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த மகள் வந்து அம்மா…” என்று கழுத்தைக் கட்டிக் கொண்டது.

என்னம்மா அழுதீங்களா?” என்று முகத்தை வளைத்துப் பார்த்து காதுக்கருகில் கேட்டது.
இல்லடா பட்டு.. ச்சும்மா… தலைவலி” என்று புன்னகையோடு கையைப் பிடித்து இழுத்து பக்கத்தில் அமர வைத்து சுவரில் சாய்ந்து கொண்டாள்.

அம்மா ஒரு பெரிய முட்கள் சூழ்ந்த அன்னாசிப் பழத்தையும் கத்தியையும் எடுத்துக்கொண்டு வந்து சற்றுத் தள்ளி அமர்ந்து செய்தித்தாளை விரித்து அதன் மேல் நறுக்கி முடித்து ஒரு தட்டில் போட்டு இவர்கள் பக்கமாக நகர்த்திவிட்டு எழுந்து சமையலறைக்குள் போய்விட்டாள்.

குழந்தைகள் ரெண்டு பேரும் கார்ட்டூனில் லயித்துப் போனவர்கள் இடையிடையே பழத்துண்டுகளைத் தின்றுகொண்டிருந்தார்கள். மகன் ஒரு சின்னத் துண்டை எடுத்து தமிழ் வாயில் ஊட்டினான். பற்களால் கவ்வியவள் திடீரென்று அதிர்ந்து மகனை இறக்கிவிட்டு பின்புறம் போய் துப்பிவிட்டு வந்தாள். நாளை மதியம் வரை எப்படி பொழுதுபோகும் என்பதே புரியவில்லை. இரவு வரை மிகச் சோம்பலாய் படுத்திருந்தாள். இரண்டு முறை குளியலறையில் போய் குமட்டி வாந்தி எடுத்தாள்.

மறுநாள் 9 மணிக்கு மேல் எழுந்தும் படுக்கையிலேயே கிடந்தாள் தமிழ். அம்மா வந்து ரெண்டு முறை கூப்பிட்டுப் போய்விட்டாள். அம்மா, அப்புறமா எழுந்துக்கறேன். கொஞ்சம் உடம்புக்கு முடியல” என்று முனகினாள்.

‘இதெல்லாம் உனக்குத் தேவையா?’ என்ற தோரணையில் முகத்தைச் சுருக்கிக்கொண்டு போய்விட்டாள். அம்மாவுக்குப் புரிந்திருக்கிறது. இனி விளக்கிச் சொல்ல வேண்டிய கவலை இல்லை.
மாலை வந்த கணேஷ் உள்ளே துணிகளை மடித்துக்கொண்டிருந்தவளை வந்து பார்க்கவும் இல்லை. அவளைத் தேடவுமில்லை. மாமியாரிடம் காபி கேட்டு வாங்கி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே ரசித்துக் குடித்தான். பின் சாவகாசமாக உள்ளே வந்தவன் படுக்கையின் மேல் அமர்ந்தவாறு கேட்டான்.

அப்றம்… என்ன சொல்லு?”

என்ன சொல்றது… ரிசல்ட் பாசிட்டிவ் ஆயிடுச்சி. உடம்பும் ரொம்ப அசதியா இருக்கு. ரெண்டு முறை வாந்தி எடுத்தேன். நிச்சயமா அதுதான் இப்போ என்ன பண்றதுன்னுதான் தெரியல.”
சரி கிளம்பு, டாக்டரைப் பார்த்துடலாம்” என்றான்.

க்ளினிக்கில் அதிக நேரம் காத்திருக்கவில்லை. 15 நிமிடத்தில் உள்ளே அழைக்கப்பட்டார்கள்.
டாக்டர் அம்மா பெரிய புன்னகையோடு தமிழ் எப்படியிருக்க? உக்காரு. உடம்புக்கு என்ன பண்ணுது?” கேட்டவாறு இடது கையைப் பிடித்து நாடி பார்த்தாள்.

மேம், டேட்ஸ் தள்ளிப் போயிருக்கு‘” என்றவாறு ரிசல்ட் கவரை மேசை மேல் வைத்தாள்.
டாக்டர் சீரியஸான முகத்தோடு பிரித்துப் பார்த்து வைத்துவிட்டு கணேஷ் பக்கம் திரும்பி, என்ன பண்ணப் போறீங்க?” என்று கேட்டாள்.

கணேஷ் கொஞ்சம் தயக்கத்தோடு மெதுவான குரலில், உங்களுக்கே தெரியும். அன்னைக்கு இவளுக்கு ப்ரஷர் அதிகமாகாம இருந்திருந்தா அப்பவே ஆபரேஷன் முடிச்சிருக்கலாம். இப்போ அப்போனு விட்டாச்சு. இது வேணாம் மேடம். மெடிசன் குடுத்துடுங்க. அதுமட்டுமில்லாம ஏற்கெனவே இரண்டு குழந்தைங்க இருக்காங்க” சொல்லி முடித்தபோது எதிர்பார்த்த பதில்தான் என்றாலும் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த மருந்துக் கம்பெனி விளம்பர நாட்காட்டி கொழுக்மொழுக் குழந்தையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த தமிழரசிக்கு உள்ளே மளுக்கென்று ஏதோ முறிந்த மாதிரி இருந்தது.

அவ்வளவு கஷ்டத்திலும் நாலு குழந்தைகளைப் பெற்று வளர்த்த அம்மாவையும், எட்டுப் பேரோடு ஒன்பதாவதாய் பிறந்த அப்பாவையும் நினைத்துக் கொண்டாள்.

“என்ன சொல்ற தமிழ்?”

“ம்… சரிங்க மேம். மெடிசன் எழுதிக் குடுங்க” என்றாள்.

தமிழரசியின் இரண்டாவது பிரசவம் கடைசி நேரத்தில் சிக்கலான கதையை கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு டாக்டர் விடை கொடுத்தார்.

டாக்டர் சொன்னதுபோல இரவு உணவுக்குப் பின் மாத்திரையை எடுத்தாள். கொஞ்சம் பெரிய அளவில் அழுக்கான நிறத்தில் இருந்தது. நீரூற்றி விழுங்கிய போது மாத்திரை உள்ளே பயணிப்பதை உணர்ந்தாள்.

குழந்தைகள் உறங்கியிருக்க, குளியறைக்குள் போய் பாதுகாப்புடன் திரும்பினாள். படுக்கையறை மூலையில் தரையில் சின்னத் தலையணையோடு படுத்தவளுக்கு அரைமணி நேரத்துக்குள் வலி சுரீரென்று அடிவயிற்றில் ஆரம்பித்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் வயிறு முழுக்கப் பரவி வலி தீவிரமானது. ஒருவழியா உயிர்ப்பதியன் பிடுங்கப்பட்டதை உணர்ந்தாள். மிக அடர்த்தியா உயிர்த் துணுக்குகள் வெளியேறத் தொடங்கியது. வலி உயிரைப் பிடுங்கியது. உட்காரவோ படுக்கவோ இயலாத இருப்பு.

திடீரென்று யாருமற்ற அனாதையாகிவிட்டது போல ஓர் உணர்வு. இறந்துபோன அப்பாவை நினைத்துக்கொண்டாள். ‘தமிழ்… தமிழ்… தமிழ்…’ என்று தொடர்ச்சியாக அழைத்து, அலுத்துக்கொண்டு வரும்போது ‘உம்பேரச் சொல்லிப் பார்த்தேம்மா அமிழ்து அமிழ்துனு வருது’ என்று சொல்லிச் சிரித்து அணைத்துக்கொண்ட அப்பா…

தமிழ் மொழி மேல் தீராக் காதலால் கூரை வீட்டில் உடைந்த மர அலமாரி முழுக்க புத்தகங்களாய் அடுக்கி வைத்திருந்த அப்பா… எப்போதாவது அந்திப் பொழுதில் எளிதான பழைய சங்கப் பாடல்களைச் சொல்லித் தேன் சுவைப்பது போல தமிழ் சுவைக்கத் தந்த அப்பா… எந்தத் தவறையும் நேருக்கு நேர் சுட்டிக் காட்டும் வலிமையை ஊட்டிய அப்பா கண்முன் நின்றார்.

இருட்டில் எழுந்து சுவரில் சாய்ந்து அமர்ந்து சின்ன சத்தத்தோடு ப்பா..” என்று அழுதாள்.

கணேஷ் தூக்கம் கலைக்கப்பட்டு ‘ப்ச்…’ என்று அலுப்போடு தலையை மட்டும் துக்கிப் பார்த்தான். படு… காலையில சரியாயிடும்.” சொல்லிவிட்டு திரும்பிப் படுத்தான்.

கல்லூரிக் காலத்தில் சிசுக்கொலைக்கும் கருக்கலைப்புக்கும் எதிரான பேச்சும் எழுத்தும் நினைவுக்குள் உறுத்தின. எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று உறுதிகொண்டிருந்தாளோ அப்படியெல்லாம் இப்போது இல்லை. எதுவெல்லாம் தன் வாழ்வில் நடக்கவேகூடாது என்று இருந்தாளோ அதுவெல்லாம் நடக்கிறது.

முடிவெடுக்கும் இடத்தில் அவனும் செயல்படுத்தும் இடத்தில் இவளும் உழன்று கொண்டிருப்பதன் மனஉளைச்சல் எப்போதாவது சண்டையின்போது சின்னதாய் பொருமலாய் மட்டுமே வெளிப்படுகிறது. எதிர்த்துப் பேசி என்னவாகப் போகிறது? தான் நினைத்தபடி இப்போது, தான் எதுவாகவும் இல்லை என்ற நினைவே சுய இரக்கத்தைக் கூடுதலாக்கிறது.
விடியும் வரை வலியில் புரண்டு புரண்டு படுத்தாள். பலமுறை பாத்ரூம் போய் வந்தாள். அயற்சியில் 3 மணிக்குமேல் தூங்கினாள். 6 மணிக்கு அணிந்திருந்த இரவு ஆடையின் பிசுபிசுப்பில் கண் விழித்தவள் தடுமாறி எழுந்து குளியறைக்குச் சென்றாள்.

கண்களை மெல்லத் திறந்த கணேஷ் சின்ன முகச்சுளிப்புடன் திரும்பிப் படுத்தான்.
நான்கு நாட்கள் வலியும் வேதனையும் பாடாய்ப்படுத்தியது. சனி, ஞாயிறுடன் இரண்டு நாட்கள் சேர்த்து விடுமுறை எடுத்தாகிவிட்டது. குழந்தைகளைப் பார்க்கப் பார்க்க மெல்ல மனத்தின் கனம் குறையத் தொடங்கியது. பத்து நாட்களில் வேகமாக வீட்டு வேலைகளைச் செயவும் வேலைக்கு ஓடவுமாய் பழைய மாதிரி மனதும் உடலும் குணமாகியிருந்தது.

அன்று காலையில் சமையலைக்குள் இருந்து காபியோடு எழுப்பும்போது அதிசயமாகப் புன்னகையோடு கைகொடுத்தான். புருவம் சுருக்கிப் பார்த்ததில் ஏழாவது ஆண்டு மணநாள். வாழ்த்துச் ச்ஒன்னான். நினைவில்லையா?” என்று கேட்டான்.

ம்…” என்று வறட்சியாகப் புன்னகைத்தாள்.

இந்தப் பிரச்னையில் மணநாள் மறந்துவிட்டிருந்தது. பிள்ளைகள் எழுந்ததும் அவன் சொல்லிவிட, இரண்டும் அம்மாவைத் தேடிக்கொண்டு வந்தன வாழ்த்துச் சொல்ல.

மாலை சற்று முன்னதாகவே வீடடைந்து பிள்ளைகளோடு கிளம்பி பீச்சுக்குப் போனார்கள். பிள்ளைகள் அவனோடு சுற்றிக் கொண்டிருக்க, அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியிலேயே சாப்பிட்டுவந்து படுக்கும்போது மணி பத்துக்கு மேலாகி விட்டது.

குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போனபின் கணேஷ் சந்தோஷமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். இவர்கள் கல்யாணத்தில் கணேஷ் அம்மா மயங்கி விழுந்ததை, கல்யாணத்தன்று மதியம் இருவரும் சாப்பிட மறந்து பின் தாமதமாக வெறும் சோறும் அடி ரசமும் அப்பளத்துடன் சாப்பிட்டதை, வரவேற்பில் இவள் மாமன் மகள் நடனம் ஆடியதை, கல்யாணத்துக்கு எதிர்பாராமல் வந்தவர்கள், எதிர்பார்த்து வராதவர்கள் என உள்ளே மெல்லிய படம் ஓடத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். இடையிடையே ம்…ம்…” என்று கேட்டுக்கொண்டும் சின்னதாய் பதில் சொல்லிக்கொண்டும் இருந்தாள்.

ஒரு கட்டத்தில் பேச்சு நின்றுபோனது. அயர்வாக உறங்கத் தலைப்பட்டவளை அணைத்துப் புரட்டிய போது தமிழரசிக்குத் துக்கம் கழன்றது.

அவன் கையைப் பிடித்து விசிறிவிட்டு கட்டிலை விட்டு கீழே இறங்கிப் படுத்தாள். அதே மூலையில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அறை இப்போது சிறு சலனமின்றி அடர்ந்த இருளில் இருந்தது.

ம்மா…” சின்ன முனகல். மெல்லிய குரலில் எங்கோ ஆழத்திலிருந்து கேட்டது. பிள்ளைகள் பக்க மிருந்து சத்தம் வந்ததாகத் தெரியவில்லை.

அடி வயிற்றைக் கைகளால் பொத்திக்கொண்டு சுருண்டு படுத்தாள். சுவரில் ஒளிரும் சிவப்பு ஒளியோடு டிஜிட்டல் கடிகாரம் விடியும்வரை இவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

– அக்டோபர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *