கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,288 
 

(1977 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்பெல்லாம் தீபாவளி என்றால் எங்கள் வீடு அமர்க்களப் படும். விழுந்து விழுந்து வேலை செய்து அம்மாவுக்கும் காலும் கையும் உளைந்து விடும். இந்த வருஷம் அம்மாவுக்கு நல்ல ஓய்வுதான். மருமகள் தலையில் வேலைகளைக் கட்டிவிட்டு நிம்மதியாக உலாவித்திரிகிறாள்.

‘மூத்ததுகள் எல்லாம் கலியாணத்தைக் கட்டிப் பேரனும். பேத்தியுமாகத் தந்து, நான் கொஞ்ச வைச்சிட்டுதுகள். நீ என்னடன்டா…. கலியாணமே வேணாம் வேணாம் என்டு தூரத் தூர ஓடுறாய். ஏண்டா நானும் உன் கலியாணத்தைக் கண் குளிரப் பார்த்திட்டு, உன் பிள்ளைகளையும் கொஞ்சிக் கொள்ளக்கூடாதா….? அதுகளையும் பாத்திட்டன் என்டா அதே போதும். அந்தச் சந்தோஷத் தோடயே காசி, ராமேஸ்வரம் எண்டு போயிடுவன். என்ட ராசா…. பெரியண்ணா பார்த்து வைச்சிருக்கிற பொண்ணைக் கட்டேன்டா.’

‘மூக்கும் முழியுமா நல்லாத்தானே இருக்கா. உனக்கு நல்லாப் பொருந்துது. அம்மன் கோயில் குருக்கள் குறிப்பும் பார்த்துச் சொல்லி விட்டார்.’ அம்மாவின் தினசரி தொண தொணப்பு முற்றே இல்லாமல் தொடர்ந்தது.

நான் வேலைக்குப் போகும் வேளை, சாப்பாட்டுப் பார்சலைத் தந்துவிடும் பொழுது, ‘எத்தனை நாளைக்குத்தான் உனக்குச் சோறு கட்டித் தந்து கொண்டிருக்கப் போறேனோ பெரியண்ணா பார்த்த இடம்…..’ மாலை வீடு திரும்பியதும் அடுத்த ‘லெச்சர்’ ஆரம்பமாகும். அம்மாவின் நச்சரிப்பு பொறுக்க முடியாமல் ‘சரி’ என்று தலையாட்டிப் பெரியண்ணா பார்த்திருந்த இடத்திலே சம்பந்தம் வைத்து அவள் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டு விட்டேன்.

அம்மன் கோயிலில் தான் திருமணம். அது கூட அவள் வேண்டுகோளாம்! முன்பே நேர்த்தி வைத்திருந்தாளாம். ‘நேர்த்தி’ என்றவுடன், எனக்கு வந்து வாய்க்கப் போவது ‘சுத்த கர்நாடக’ மாகத்தான் இருக்கும் என்று உணர்ந்து கொண்டேன்.

நேற்றுக் காலையிலேயே ‘கண்டிஷன’ போட்டு விட்டாள். மூன்ற நான்கு நாட்களுக்கு மூச்சுக் காட்டக் கூடாதென்று.

‘ஐப்பசி அமாவாசை…. நான் உபவாசம் இருப்பன். மீன், இறைச்சி எண்டு எதுவும் கொண்டரக் கூடாது’ இது அவள் ஆணை.

எனக்கு இது தலைத் தீபாவளி! அம்மாதான் போன கிழமை சொன்னாள். பெரியண்ணா என்னையும் இவளையும் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார் விருந்துக்கு. அவள் வீட்டிலிருந்தும் அழைப்பு வந்தது. இரண்டு அழைப்புகளும் அவளால் நிராகரிக்கப் பட்டன! ஐப்பசியாம்…. அமாவாசையாம்…. உபவாசமாம்…. சுத்த பயித்தியக்காரத் தனம்.

‘சத்தி…..கட்டாயம் விரதம் இருக்கத்தான் வேணுமா….? அம்மா சொன்னாங்க….. இது எங்கட தலைத் தீபாவளி எண்டு. பெரியண்ணாவும் கூப்பிட்டிருக்கிறார். உன்ட வீட்டில இருந்தும் ‘கோல்’ வந்திருக்கு. நீ என்ன டான்டா….. எங்கயும் போக வேணாம் வீட்டிலயே இருப்போம் எண்டு சொல்ற….’

‘நான் சொல்றன் எண்டு கோவிக்காதீங்க. இந்த விரதம் எனக்கு எண்டா நினைச்சீங்க, அது உங்களுக்கும் சேர்த்துத்தான். பிளீஸ்…. டோன்ட்…. டிஸ்டார்ப் மை ஃபாஸ்டிங். இந்த விஷயத்தில் நான் பிடிவாதமாகத்தான் இருப்பன்.’

‘இதில எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை’

‘உங்களுக்கு நம்பிக்கை இல்லை எண்டதுக்காக நானும் நம்பிக்கை இல்லாதவளா இருக்கனுமா? இந்த விவகாரத்தில் நான்…. நான்தான்.. நீங்க….. நீங்கதான்.’

அக்னி சாட்சி. அருந்ததி சாட்சி எண்டு குருக்கள் மந்திரம் ஓதி எங்களை இணைச்சு விட்டார். ‘ஈருடல் ஓருயிர்’ எண்டு வந்தவனெல்லாம் வாழ்த்திட்டுப் போயிட்டானுகள்…. இவள் சொல்றாள் நான் நான்தான் நீ நீதான் என்று.

‘சத்தி…. நீ என் விருப்பத்துக்கு மாறாகப் பேசுறாய். முந்தியெல்லாம் எங்கட வீட்டில தீபாவளி எண்டா ஆடும். கோழியும் அறுபடும். சொந்தக்காரங்களும், பிரண்ட்ஸும் வீடு நிரம்பி வழியும். இந்த வருஷம் அதெல்லாம் நடக்காது போல இருக்கே. ரியலி போரிங் நோ’

‘உங்கட பேச்சுத்தான் போரிங்கா இருக்கு. எத்தனை தடவை இப்படி பேசிட்டீங்க. ரெண்டு, மூணு நாளைக்கு எனக்காகப் பொறுக்கக் கூடாதா? நீங்கதான் முந்தி ஒருக்காச் சொல்லி இருக்கிறீர்களே, மற்றவங்கட நம்பிக்கையையும், சுதந்திரத்தையும் மதிக்கிற பண்புள்ளவன் தான் நான் எண்டு’.

முதலிரவின் பிற்பகுதி மயக்கத்தில் நான் பிதற்றியதை இவள் ஞாபகப் படுத்துகிறாளோ! போதையில் கிடந்த எனது ஆண்மை எவ்வளவு அசட்டுத் தனமாய்த்தான் பிதற்றியிருக்கிறது என்பதை இப்போது உணருகிறேன். புது அனுபவத்தின் உற்சாகமோ, இல்லை சோர்வோ என்னை அப்படிப் பேச வைத்திருக்கலாம்.

‘மாமி இந்த வருஷம் கௌரி நோன்பு, தீபாவளி சமயத்திலேயே வந்திட்டுது. போன வருஷம் எங்கட வீட்டில் விரதம் இருந்தன். இந்த வருஷம் இங்க இருப்பன் எண்டு கனவிலயும் நினைக்கயில்ல’ சமையலறையிலிருந்து அவள் அம்மாவுடன் பேசுவது எனக்குக் கேட்கிறது.

‘இவள், என்ன கனவைக் கண்டால் தான் எனக்கென்ன. கண்டறியாத விரதமும், நோன்பும். அம்மா தான் மொச்சிக்கொள்ள வேணும். சாமியாராய் போகவேண்டியவள் எனக்கு பெண்டாட்டியா வந்து சேர்ந்திட்டாள்’ எனக்குள் எண்ணம் படருகிறது. கையைக் காலை நீட்டி கண்டிக்கலாம் என்றால் அவளைப் பாதுகாக்கவென்று அவளுடன் பிறந்த மாறாத புன்னகை கவசமாக இருக்கிறது. என் பலவீனமாயும், அவள் பலமாகவும் இருப்பது அவள் சிந்தும் புன்னகை தான்!

மாலையில் கோயிலுக்குப் போக என்னை அழைத்தாள்.

‘உன்னுடைய வாத்தியங்களுக்குத் தாளம் போட உன் மாமிதான் சரி. என்னை விடு. நான் படம் பார்க்கப் போறன். படம் பார்ப்பதென்டால் வா என்னோட, குட் ஷோ. இன்றைக்கு லாஸ்ட் டே. வாரியா….?’

‘ஐயய்ய’ இது அவள்.

‘என்ன ஐயய்ய’

‘ஏனப்பா… கோவிக்கிறீங்க. நீங்க வருவீக எண்டுதான் நம்பிக்கிட்டிருந்தன்.’

‘நீதான் நம்புவியே விதம் விதமா. தெரியாமத்தான் கேக்கிறன், இன்டைக்கு உனக்கு என்ன நடந்தது?” அவள் தோள்களைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிக் கேட்டன். இப்படி நான் கேட்டவுடன் அவள் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அவள் சிரிப்பு எனக்கு எரிச்சலூட்டியது. என் வயிற்றெரிச்சல் என் முகத்தில் படிவதை உணர்ந்த அவள் தன் சிரிப்பை அடக்கிச் சொன்னாள், ‘விடிய விடிய இராமாயணம் விடிஞ்சா இராமன் சீதைக்கு என்ன முறை எண்டு ஒரு அசடு கேட்டானாம்’

‘அப்ப நான் அசடா….?’ அவள் சொல்லாமல் சொல்கிறாளே! அவள் தொடர்ந்தாள்….. ‘இன்டைக்கு கௌரி நோன்பு அதாவது இந்த நோன்பு பெண்களுக்கு. சின்ன வயசில இருந்தே இந்த நோன்பு இருக்கிறன். இவ்வளவு காலமும் நான் விரதம் இருந்ததுக்கு இப்ப பலன் பெற்றன். இந்த வருஷம் அந்தப் பலனை முழுமையா அனுபவிக்கிறன்.’

‘என்ன பலன்….. நீ என்ன சொல்ற?’

‘அது நீங்க தான்….’ என்று சொல்லிவிட்டு என்னைத் திரும்பியே பார்க்காமல் கோயிலுக்குப் போனாள் அவள். வியப்புடன் அவள் சொல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

அவள் எனக்காக காத்திருப்பாள் என்று நான் நினைக்க வில்லை. கணவன் வரும் வரை காத்திருந்து சாப்பிடும் வழக்கத்தைப் பழக்கமாக்கிக் கொள்ளும் மனைவிகளைக் காண்பது அரிதாகி வரும் இக் காலகட்டத்தில் என் மனைவியைப் பற்றி எனக்கு பெருமையாய் இருக்கிறது. படம் முடிந்து திரும்ப இரவு ஒன்பதரை மணியும் கடந்து விட்டது. வழியில் சில ‘அரட்டை’களின் தரிசனங்கள் பல நிமிடங்களை விழுங்கி விட்டது.

சாப்பாடு எனக்கு மட்டும் தான். வெறும் பால் மட்டும் தான் அவள் ஆகாரம். தீபாவளிக்கென்று தயாரிக்கப் பட்ட பலகார பட்சணங்கள் விதம் விதமாயிருந்தது. அதில் எதையாவது வாயில் வைத்து ருசி பார்த்திருப்பாளா? விரதம் என்ற பெயரில் வெறும் பாலை மட்டும் குடித்துவிட்டு இருக்கிறாளே. காலை பகல் இரண்டு இரண்டு வேளையும் பட்டினி. இரவு பால் மட்டும். ஏற்கெனவே ஆள் ஒல்லி. இந்த லட்சணத்தில் விரதங்களுக்கும் குறைவே இல்லை!

நான் கட்டிலில் ஏறிப் படுத்து விட்டேன். சமையலறை முன் ஹோல் எல்லாம் கதவடைத்துவிட்டு வந்த அவள், நைட் பல்ப் சுவிட்சைத் தட்டிவிட்டுக் கீழே நிலத்தில் பாய் விரித்துப் படுத்து விட்டாள். அவள் செயல் எனக்கு வியப்பாயிருந்தது. சிறிது நேரத்தில் கொட்டாவி அவள் பக்கமிருந்து வந்தது. கையை ஊன்றி எழுந்து அவளைப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் அவள் சங்கமித்திருப்பதைக் காண்கிறேன். காலையில் வீடு முழுவதும் கழுவினாள். பகல் – அடுப்படி நிறைய அவளுக்காக வைத்திருந்தது. மாலை கோயிலுக்கு விஜயம். பாவம் அசதியில் புரண்டிட்டாள். தூங்கட்டும்.நான் திரும்பிப் படுக்கின்றேன். பகலில் நன்றாகத் தூங்கி எழுந்த எனக்கு இரவில் தூக்கம் வர பின்வாங்குகிறது. சத்தியின் நினைவு வருகின்றது. என்னை அசடாக நினைத்திருக்கிறாள். இவள் தான் பெரிய அசடு. படு பிற்போக்குவாதி எனக்கு மனைவியா வந்திருப்பதை நினைத்தால் சிரிப்பதா? அழுவதா? திரும்பி அவளைப் பார்க்கிறேன்.

கொழுந்துப் பச்சை நிறக் கோரைப் பாயில் சலனமே இன்றிக் கிடக்கும் அவளை உற்றுப் பார்க்கின்றேன். ஒரு குழந்தையின் கள்ளமற்ற செழுமையான முகம். நீண்டு கிடக்கும் இடக்கரத்தில் ரவிக்கை விளிம்பின் கீழே தெரியும் அது…ஓ…புது நூல், பழையதைக் கொடுத்துவிட்டு புதியதைக் கட்டியிருக்கிறாள். பல வர்ணங்கள் கொண்ட இருபத்தியொரு முடிச்சு இருக்குமாம். என்றோ ஒரு நாள் இவள் தான் சொன்னாள். நான் இன்று பார்த்த படத்தின் நாயகியும் ஆகா…அருமையான படப்பிடிப்பு. நடிப்பு இல்லை…இல்லை…நடிப்பு இல்லை…ரியல்…உண்மை…பச்சைக் கம்பளம் போல் இருந்த அப் பசும்புல் தரையில் அவள் இருந்த கோலம்…நாயகன் குதிரையிலிருந்து இறங்கி அவள் அருகே வருகிறான். அவன் முகம்…அவன் முகம்…சூழல்…வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன் தான். எவ்வளவு தத்ரூபமாப் படம் எடுக்கிறான். ம்…அங்க புல் தரை. இங்கயோ…பச்சைக் கோரைப் பாய்.

பொறுமை என்பது என்னைப் பொறுத்தளவில் நீடித்த விவகாரம் அல்ல. அவள் அருகில் இறங்கி வந்த நான் சரிந்து சாய்கிறேன். அவள் விடும் மூச்சு என் நெஞ்சை ஊடுருவிப் பாய்கிறதே. அவள் கூந்தலைக் கோதி விடுகிறேன். பார்த்த படமே என் சிந்தனையில் நிறைந்து உடலுள் பரவி வாய் உலர்ந்து விட்டது. அவள் திடுக்கிட்டு எழுந்தாள். கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கும் அவள்…பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது.

‘நீங்க சுத்த மோசம்…’ சிணுங்கத் தொடங்கிய அவள், பாயையும் தலையணையையும் சுருட்டி எடுத்துக் கொண்டு அம்மா படுத்திருக்கும் அறையை நோக்கிப் போய்விட்டாள். மீண்டும் திரும்பி வந்து சொன்னாள்! ‘இண்டைக்கு விரதம் எண்டு தெரியாதா? எல்லாத்துக்கும் இன்னும் ஒரு நாள் பொறுக்க வேண்டும்’ ‘படார்’ என கதவை இழுத்து மூடிவிட்டு அவள் போய்விட்டாள்.

தூரத்தே ‘பவர் செட்’ ரயிலின் கூவல் சன்னமாகக் கேட்கிறது. ஆம்…எங்கள் ஊருக்கு கொழும்பில் இருந்து வரும் கடைசி ரயில் அது. அது நாளைக் காலை கொழும்பை நோக்கித் திரும்பிப் போகும். ஆம்…தண்டவாளத்தின் மீது தான் அது போகும். தண்டவாளங்கள் இரண்டும் இணைவதில்லை. அது இரண்டும் இணையாமல் இருப்பதால் தானே ரயில் சீராகப் போகிறது. நான் எழுந்து கட்டிலில் ஏறிப் படுக்கின்றேன்.

– இதழ் 109 – மே 1977, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *