கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 21, 2023
பார்வையிட்டோர்: 2,398 
 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவில்………….

அவள் அந்தத் தெருமுனையில் நின்றுகொண்டிருந்தாள். அரையில் ஒரு வேஷ்டி, உடம்பில் முதுகுப்புறம் கிழிந்த மல் ரவிக்கை ஒன்று, அதன் மேல், கிழிந்துபோன வாழையிலைத் தார்போல, ஒரு மேலாப்பு; ஏதோ கிடந்தோ மென்ற பேருக்காக ஒட்டிக் கிடந்தது, ஒட்டியுலர்த்து முதுகெலும்போடு ஐக்கியமாகும் வயிற்றின் குழிவால், அவளுடைய வற்றிய மார்புகூடக் கொஞ்சம் விம்மியது போலத்தான் தோற்றமளித்தது. மற்றப்படி காதில், கழுத்தில் ஒன்றுமில்லை. உடையும், பார்வையும் அவள் ஒரு சரியான ‘மலையாளத்து அச்சி’ என்பதைத் தெரியப் படுத்தின.

மலையாளத்தில் இன்று வயிற்றிற்கு மட்டும் பஞ்ச மில்லை; வாலிபர்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. பசியின் கொடுமையைச் சமாளிக்க முடியாமல் பட்டாளத்தில் சாடினர், வாலிபர்கள். மலையாளத்துப் பெண்களின் பாடு திண்டாட்டமாய்விட்டது. பசிக்கும், பருவத்திற்கும் இடையே வருந்தினர், பலர்.

அவளும் அந்தப் ‘பலரில்’ ஒருத்தி, பாண்டி நாடு புகுந்தால், பருவத்தை அடகு வைத்தாலது பசியைத் தணித்துக் கொள்ளலாம் என்று எண்ணி வந்தவள்.

அவள் நின்றுகொண்டிருந்தாள். முனையில் நின்ற வாறே, நாற் திசையிலும் பார்வையைச் செலுத்தினாள்.

‘அந்தத் தெரு’………….?

தன்னை, ‘கலாப மயில் என்று எண்ணிக்கொண்டு, மினுக்கிக் குலுக்கித் திரியும், இந்த வான்கோழி உலகின் நைட்டு நாகரீகத்தின் அழியாத சின்னம், அந்தத் தெரு; ஆபாசச் சாக்கடை, அது. அந்தச் சாக்கடையுள் பல் புழுக்கள் தெவிந்துத் தருளுகின்றன. வண்ணாத்திப் பூச்சிகளைப்போலச் சீவீ முடித்துச் சிங்காரித்துக்கொண்டு, ‘சக்கரை மிட்டாய் ஸாரி’களை, உடம்பில் வளைய வளையச் சுற்றிக்கொண்டு, மனித உருக்கொண்ட் மிருகங்களின் ரத்தத்தை உறிய எதிர்பார்த்து நிற்கும், இந்தக் கிருமிகள், இந்தப் புழுக்களைப் பூங்கொடி என்று எண்ணி, அதை முகர்ந்து பார்த்துத் துன்புறுவார், பலர். அது ஒரு விபசார விடுதி; தேவடியாள் குடித்தெரு!’

இன்னும், அவள் அந்தச் ‘சாக்கடை’யின் கரையோரம். நின்றுகொண்டிருந்தாள்.

எத்தனையோ மைனர்கள், மீசை நரைத்த பெரியார்கள், சுகிசரீரிகள், குஷ்டரோகிகள், ஏழைகள், குமாஸ்தாக்கள், பிரபுக்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுவர்கள் இன்னும் எத்தனையோ பேர்கள் எல்லாம் ஆத்தச் சாக்கடையுள் முங்கிக் குளிக்க நுழைந்தனர். ஆனால், ஒருவராவது அவள் நிற்பதைக் கவனிக்கவில்லை; கண்ணிலே பட்டாலும் விறைப்பாகச் சென்றனர், சிலர். காரணம்: அவள் ஒரு வண்ணாத்திப் பூச்சியல்ல, சிங்காரிக்க, அவளால் முடியாது; தெரியவும் தெரியாது.

அவள் காலுங்கூட அலுத்துப் போய்விட்டது. மனமும் அலுக்க ஆரம்பித்தது.

கடைசியில்-

யாரோ ஒருவன் வந்தான். ‘சாக்கடை”யுள் நுழையுமுன் தெரு முனையில் நின்ற அவளைக் கண்டுவிட்டான். கண்களும், முந்திய அநுபவமும் அது ஒரு ‘அடிபடாத சரக்கு’ என்று துலாம்பரமாக அளந்து காட்டிற்று. அவளும், அவனைப் பார்த்துவிட்டாள். வாடியிருந்த கொக்கிற்கு ஒரு உறுமீன் கிடைத்தது போலத்தான் இருந்தது, அவளுக்கு.

அவன் அவளிடம் நெருங்கி, அவளைக் கூட்டிக்கொண்டு போனான். மனிதக் கண்களின் கூரம்புகள் பாய முடியாத இருளில் இழுத்துச் சென்றான்.

அந்த இருள் நிறைந்த சாலையில், மனித நடமாட்டமற்ற ஒதுக்கத்தில் பேரம் நடந்தது :

“எவ்வளவு வேணும்?”

“ஒரு ரூபா கொடுங்களேன்”

அவன் யோசித்தான். ‘மீன்’ தப்பிவிடுமோ என்று அவள் பயந்தான்;

“சரி, சாமி நீங்க என்ன தான் தருவீக?”

“ஆறணா இன்னா………” ரொம்பவும் . இழுத்துப் போட்டான்.

“என்ன சாமி? கால்வயித்துக் கஞ்சித்தண்ணிக்காவது வேண்டாமா?”

அவள் கண்களில் நீர் சுரந்தது. அந்த மிருகத் திற்கு அவள் வார்த்தைகளில் தொனித்த சோகத்தைக் கூட, உணரச் சக்தியில்லை. . கேவலம், ஜாண் வயிற்றுக் காகத் தன் சடலத்தை இரவல் கொடுக்கிறாள் என்பது கூட, அவனுக்குத் தெரியவில்லை. இச்சை வெறி அவன் இதயத்தைக் கல்லாக்கியிருந்தது.

“முடிவா எட்டணா தாறேன். சம்மதமா?” என்றான் விறைப்பாக.

அவள் மௌனம் சாதித்தாள், பதில் என்ன தேவை? அவளது தோள்பக்கம் கைபோட்டு இழுத்தான் அவன்…

ஒரு மனித மிருகத்தின் இச்சை அன்று பூர்த்தி யாயிற்று.

இருட்டோடு இருட்டாய் முடிச்சை அவிழ்த்து, ஒரு முழுக்காசை எடுத்துக் கொடுத்தான் அவன், பர பரப்போடு அவள் அதைக் கையில் வாங்கி, ஸ்பரிசத்தால் நல்ல அணாவென நிச்சயித்துக்கொண்டாள்.

அவன் போய்ட்டான்.

அவள் ஆடையைச் சீர்படுத்திக்கொண்டாள். மல் ரவிக்கையை இறுக்கிக் கட்டிக் கொண்டு, அந்தக் கிழிந்த வாழையிலை மேலாப்பை விரித்துப் போட்டுக்கொண்டாள். கலைந்த கூந்தலை நாசூக்காக வாரி முடித்துக் கொண்டு கடைத் தெருப்பக்கம் போகலானாள்.

போகிற வழியில் –

ஒரு மின்சார விளக்கின் ஒளியில் தன் கையிலிருந்த முழு அணாவைப் பார்த்தாள்.

ஆனால்……? அது ஒரு அரை ரூபாய் நாணயமல்ல.

புதுக் காலணா!

– க்ஷணப்பித்தம் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 50, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *