‘ஹூம்…வயசு அம்பத்தி நாலாச்சு….வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணுங்க ரெண்டு கல்யாணத்துக்கு நின்னுட்டிருக்குதுக… இந்தாளு என்னடான்னா இங்க ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கான்… எல்லாம் காலக் கொடுமைப்பா” இது செக்சன் ஆபீசர் சீனிவாசன்.
‘அட… வேற ஆளா கெடைக்கலை… ஒரு ஜி.எம்… போயும் போயும் ஆபீஸைக் கூட்டிப் பெருக்கற ஒரு பொம்பளையோட… ச்சை… குமட்டுதுப்பா” டெஸ்பாட்ச் கிளார்க் வாந்தியெடுப்பது போல் அபிநயிக்க கேட்டுக் கொண்டிருந்த பியூன் ரங்கசாமிக்கு வேதனையாயிருந்தது.
‘ச்சே…எல்லார்கிட்டேயும்… கறாரா… கண்டிப்பா இருக்கற இந்த ஜி.எம். அந்தப் பொம்பளைகிட்ட மட்டும் ஏன் குழைவா… தணிவா… சிரிச்சுச் சிரிச்சுப் பேசறார்?… அதுக்காக ஆபீஸே… அவரைக் கேவலமாப் பேசுதே…” யோசித்தவர் ஒரு முடிவுக்கு வந்தவராய் எழுந்து ஜி.எம். அறைக்குச் சென்று, தன் ஆதங்கத்தைக் கேட்டே விட்டார்.
மெலிதாய்ச் சிரித்த ஜி.எம்.ராகவேந்தர், “ரங்கசாமி…நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்க… இந்த ஆபீஸ்ல இருக்கற யார் ரிசைன் பண்ணிட்டுப் போனாலும் நான் கொஞ்சம் கூடக் கவலைப் பட மாட்டேன்… ஏன்னா அந்தப் போஸ்ட்டுக்கு வேறொரு ஆளை ஈசியாப் புடிச்சுடலாம்… ஒரு விளம்பரம் குடுத்தாப் போதும்… க்யூவில வந்து நிப்பாங்க…ஆனா… அந்தத் துப்புரவு வேலை ரொம்ப கிராக்கியான வேலைப்பா… அதுக்கு மட்டும் ஆளே கெடைக்க மாட்டாங்க… இப்ப இருக்கற இந்தப் பொம்பளையைப் புடிக்கறதுக்குள்ளார நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்… வருவாங்க.. அதிகபட்சம் ஒரு மாசம் வேலை பார்ப்பாங்க… இத விடக் கொஞ்சம் சம்பளம் அதிகமாக் கெடைச்சாப் போதும்.. தாவிடுவாங்க… அவங்களையெல்லாம் தக்க வைக்கனும்ன்னா… அதிகாரம் பண்ணிப் பேசக் கூடாதுப்பா… இதமா…பதமா பேசித்தான் புடிச்சு வைக்கணும்… அதான்…”
ரங்கசாமிக்கு லேசாய்ப் புரிய ஆரம்பித்தது.