அப்பா அறிவாளிதான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,906 
 

அருண் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது மணி 6.30. ஏனோ வீட்டிற்குப் போவதற்கே வெறுப்பாயிருந்தது. அப்பாவை நினைக்கும் போது கொஞ்சம் கோபமாகவும் நிறைய குழப்பமாகவும் இருந்தது.

‘ஏன் அப்பா திடீர்ன்னு இப்படி மாறிட்டார்?… மூணு மாசம் முன்னாடி வரைக்கும் நல்லாத்தானே இருந்தார்… இப்ப என்ன ஆச்சு?… கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா வேலை கெடைக்காம… தண்டச் சோறு தின்னுட்டிருந்தேன்… அப்பெல்லாம் கூட இப்படிக் கோபப்பட மாட்டார் … இவ்வளவு கேவலமாப் பேச மாட்டார் … இப்ப, இந்த மூணு மாசமா…. அதுவும் நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சதுக்கப்புறம்தான் இப்படி மாறிட்டார் … இங்க நின்னா திட்டுறார் … அங்க போனா திட்டுறார் … கொஞ்சம் தாமதமாக வீட்டுக்குப் போனா… கேள்வி மேல கேள்வி கேட்டு சாகடிக்கறார் … ச்சே … ஒரு நிம்மதியே இல்லாமப் போச்சு…”

தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தவன் பஸ் வர ஓடிப் போய் ஏறிக் கொண்டான்.

ஏழரை மணிவாக்கில் வீட்டை அடைந்த அருண் கதவருகே குனிந்து ஷூவைக் கழற்றும் போது உள்ளே அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருக்கும் குரல் கேட்க அதில் தனது பெயரும் இடம் பெற கூர்ந்து கவனிக்கலானான்.

‘எனனங்க… நீங்க செய்யறது உங்களுக்கே நல்லாயிருக்கா? … கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா வேலை கெடைக்காம தட்டுத் தடுமாறி இப்பத்தான் ஒரு வேலைல உட்கார்ந்திருக்கான் … அவனைப் போய் இந்த வெரட்டு வெரட்டறீங்களெ… இது நியாயமா? … அட … தெண்டச்சோறு தின்னிட்டிருந்த காலத்துல இந்த மாதிரி நீங்க நடந்திருந்தாலும் ஒரு நியாயமிருக்கு… அப்பெல்லாம் ஒரு பேச்சும் கூடப் பேசாம இப்ப… இப்படி… நடந்துக்கறீங்களே! … ப்ச்… போங்க என்னால உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை”

‘என்ன லட்சுமி… உனக்குமா என்னைப் புரியலை? … நான் எப்பவும்… எதையும் ஒரு நல்ல எண்ணத்தோடதான் செய்வேன்னு உனக்குத் தெரியாதா? … சொன்னியே…’ ரெண்டு வருஷமா தெண்டச்சோறு தின்னுட்டிருந்தான்”ன்னு … அப்ப … அந்தச் சமயத்துல நான் அவனைத் திட்டியிருந்தா… அவன் வாழ்க்கையே திசை மாறிப் போயிருக்கும்… வேலை கெடைக்காத விரக்தியும்… என்னோட திட்டலுமாய்ச் சேர்ந்து அவனை ஒண்ணு தீவிரவாதியா… சமூக விரோதியா மாத்தியிருக்கும்… அல்லது தற்கொலைக்குத் தூண்டியிருக்கும்… பொதுவா இளசுக அந்த மாதிரி வெலை தேடிட்டிருக்கற காலகட்டத்துலதான் நாம அவங்களை ரொம்ப பக்குவமாக் கையாளணும்…”

‘சரி… அதனால அப்பத் திட்டலை… வாஸ்தவம்… இப்ப எதுக்கு திட்டித் தீர்க்கறீங்க?”

‘அதுக்கும் ஒரு காரணமிருக்கு…’ இள வயசு… கை நிறைய சம்பாத்தியம்” ன்னு இருக்கறவன் கெட்டுப் போறதுக்கு இன்னிக்கு சமூகத்துல ஏகப்பட்ட வழிகள் இருக்கு… இந்த மாதிரிப் பசங்களை வளைச்சுப் போட்டு காதலிக்கற மாதிரி காதலிச்சிட்டு… அவன் செலவுல எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு கடைசில கை கழுவி விட்டுட்டுப் போறதுக்குன்னே சில பொண்ணுங்க… இருக்காங்க… இவனுக்கு… இவனோட வயசுக்கு அதையெல்லாம் அடையாளம் புரிஞ்சுக்க முடியாது… அதனாலதான் அவனை ‘நேரத்தோட வீட்டுக்கு வா… அங்க போகாதே… இங்க போகாதே… அவன் கூடப் பழகாதே… இவள் கூடப் பேசாதே” ன்னு வெரட்டறேன்… என்னோட திட்டுக்கள் அவனைக் கெட்டுப் போகாமப் பாதுகாக்கற கவசங்கள் தெரியுமா? … எப்படியும் இன்னும் ஒரு வருடத்துல அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிடுவோம்… அதுவரைக்கும் அவனை நல்லவனா … ஒழுக்கமானவனா… காப்பாத்திட்டோம்னா… அப்புறம் வர்றவ பாத்துக்குவா…”

அருணுக்கு மனசு லேசாகிப் போனது ‘அப்பா… உங்களோட ஒவ்வொரு அசைவுக்கும் ஓராயிரம் பொருள் வெச்சிருக்கற நீங்க பெரிய அறிவாளிதாம்ப்பா” நினைத்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *