வேடப்பர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 4,560 
 

அந்த மகேந்திரா வேனில் நான்கு குடும்பத்தைச் சேர்ந்த பதினாறு பேரும் ஏறி அமர்ந்து கொண்டார்கள். கும்பகோணத்திலிருந்து வேன் புறப்பட்டு அணைக்கரை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், வழியாக விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள வேடப்பர் கோயிலுக்கு வந்து சேர்ந்தது.

எழிலரசி, தம் கணவன் இளங்கோவன் குழந்தை கௌசிகா, தாய், தந்தை, அண்ணன் அண்ணி, மாமனார், மாமியார், நாத்தனார், வீட்டு மாப்பிள்ளை, மற்றும் ஒன்றிரண்டு பங்காளி குடும்பத்தினர்களுடன் இறங்கி கோயிலுக்குள் சென்றாள். ஒரு வயசு குழந்தை கௌசிகாவுக்கு மொட்டை போட்டு காது குத்தும் காரியத்துக்காக வந்திருக்கிறார்கள்.

கோயிலுக்கு, குலசாமி கோயில் என்று வேறு சில ஐந்தாறு குடும்பங்களும் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தனர். மொத்தத்தில் எழுபது எழுபத்தைந்து பேர் இருந்ததினால் கூட்டம் அவ்வளவாக இல்லை.

என்ன இவ்வளவு காலதாமதமாகவா வர்றது.? கர்ணபூஷ்ணம் பண்ண உண்டான நாழிகை போயிகிட்டே இருக்கு, வாங்கோ போய் குழந்தைக்கு சட்டுப்புட்டுன்னு முடி மழித்து, குளத்துல ஸ்நானம் பண்ணி அழைச்சுண்டு வாங்கோ ஆச்சாரி ரெடியாயிட்டிருக்கிறார் என்றார் கோயில் அர்ச்சகர்.

தோ சித்த நேரம் வெயிட் பண்ணுங்க என்று அருகில் இருந்த ஆச்சாரியிடம் செய்தி சொல்லிவிட்டு, மாமா வாங்க போகலாம், என்று கணவரிடமும், வா அண்ணா என்று தமயனிடமும் சொல்லி அழைத்து, குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்தாள் எழிலரசி. கணவன் இளங்கோவனும், அண்ணன் பெருமாள்சாமியும் அவளை பின் தொடர்ந்தனர்.

இளங்கோவனின் பெற்றோர்கள் பூசை சாமான்கள், வரிசை சாமான்கள், மதியத்துக்குண்டான உணவு பாத்திரங்களை அவசர அவசரமாக வேனிலிருந்து இறக்கி கோயில் மண்டபத்திற்கு கொண்டு போய் வைத்தார்கள்.

கோயிலுக்கு வெளிப்புறம் நவீன பிளாஸ்டிக் ஷீட்டால் கூரை போட்டிருந்த ஷெட்டுக்குள் தாய் மாமன் பெருமாள்சாமி தம் மடியில் குழந்தையை இருத்திக் கொண்டு பிடித்துக் கொள்ள, சவரக்கத்தியை தீட்டிய நாவிதர் கத்தியை கீழே வைத்துவிட்டு, குழந்தையின் தலையில் தண்ணீர் வைத்து தேய்த்தான். குழந்தை வீல் என அழவும் கரிசனத்துடன் பார்த்துப்பா காயம் பட்டு ரத்தம் ஏதும் வந்துட போவுது என்று பதறினாள் எழிலரசி.

எரிச்சலுடன், என்னா சார் இன்னும் கத்தியே வைக்கலை, அதுக்குள்ளாற நீ கத்துறே., என்று கேட்டு அவளை முறைத்து பார்த்த நாவிதன், பின் குத்துக்காலிட்டு குழந்தையின் தலையை தன் முழங்காலில் சாய்த்து வைத்து முடி மழித்தான். குழந்தை கத்த கத்த மொட்டை போடும் அவலம், எழிலரசியையும், இளங்கோவனையும் வேதனையில் ஆழ்த்தியது.

அவ்வளவு தான் முடிந்தது என்ற நாவிதன், சுமந்து பெத்தவளே சும்மா நிற்கிற போது நீ ஏஞ் சார் கிடந்துக் கிட்டு கத்துறே என்று எழிலரசியிடம் கேட்ட அவன், மொட்டைப் போட்டமைக்கு உண்டான கூலியை வாங்கிக் கொண்டு அடுத்த குழந்தைக்கு மொட்டை போடலானான்.

இளங்கோ, ரெண்டு பேரும் போய் குளத்துல குளிச்சுட்டு, குழந்தையையும் குளிப்பாட்டிட்டு சீக்கிரமா வாங்க என்று தந்தை சொல்லவும் சரிப்பா என்றாள் எழிலரசி.

பார்த்து பத்திரமாய் குளிச்சுட்டு வாங்க, குளத்துல மொதலை இருக்கு என்று யாரோ சொல்வது எழிலரசிக்கு கேட்டது. இரண்டு பேரும் குழந்தையுடன் குளக்கரைக்கு வந்தார்கள்.

கோயில் குளம் சுமார் மூணு ஏக்கர் பரப்பில் மிகப்பிரமாண்டமாய் இருந்தது. நான்கு புறமும் பாசி குப்பை ஏதும் இல்லாமல் புதிய கருங்கற்களால் படித்துறை பளிச்சென போடப்பட்டிருந்தன. இருபது இருபத்தைந்து படிகளுக்கும் கீழே பத்து பதினைந்து படிகளுக்கு குறையாமல் தண்ணீர் மிகத்தெளிவாக சிறு சிறு அலைகளுடன் ஜில்லென்று தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த குக்கிராமத்தின் அந்த சிறிய கோயிலுக்கு அந்தக் குளம் மிகப்பெரியது.

குழந்தை கௌசிகா படியில் உட்கார்ந்திருந்தாள். எழிலரசி முதலில் இறங்கி தலை முழுகி குளிக்க, அப்போது இளங்கோவன், மாமா நீங்க மொதல்ல குளிச்சுப்புட்டு ஒரு குடம் தண்ணி எடுத்துட்டுப் போய் கோயில் காம்ப்பௌண்ட்டுக்கு வெளியே இருக்கிற புள்ளையாருக்கு ஊத்தி ஒரு பொட்டு வையுங்கள், நான் பாப்பாவை குளிப்பாடிட்டு வார்றேன் என்றான். சரி என்று சொல்லி எழிலரசி குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு கரை ஏறினாள்.

மேல் படிக்கு சென்ற எழிலரசி திரும்பி, இளங்கோவனைப் பார்த்து, பத்திரம் சீக்கிரமா வந்துடு என்றாள். அந்த நேரத்தில் குளத்திலிருந்த முதலை மெல்ல படியேறி குழந்தையின் காலை பிடித்து இழுக்க குழந்தை சிரித்துக் கொண்டு கைகளை நீட்ட, அதை கவனித்த எழிலரசி, அங்கப் பார் எழிலு, பாப்பா முதலையோடு விளையாடிட்டு இருக்காள் என்று சொல்லிவிட்டு சென்றாள்.

கோயில் முதலை, பாப்பாவை ஒண்ணும் பண்ணாது நான் பார்த்துக்கிறேன் என்று இளங்கோவன் சொன்ன நேரத்தில் குழந்தை முதலையின் வாய்க்குள் இறங்கியது.

கோயிலில் இப்போது சிறிது கூட்டம் சேர்ந்திருந்தது. வேடப்பர் சன்னிதி எதிரில் ஜமக்காளம் ஒன்றை விரித்துப் போட்டு எல்லோரையும் உட்காரச் சொன்னாள் எழிலரசி. உறவினர்கள் சிலரும், அல்லாதவர்கள் பலரும் உட்கார்ந்தார்கள். ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்து, எழிலு பாப்பாவை தூக்கிட்டு வா என்று சொல்ல அவள் உங்கக்கிட்டதானே இருந்தாள், நீங்க தானே வைத்திருந்தீர்கள் என்று இளங்கோவன் சொல்லவும், காணாததை தேடுபவனாக சுற்றிலும் பார்த்தாள்.

அதோ அண்ணன்கிட்ட இருக்காள் என்ற இளங்கோவன், அண்ணா பாப்பாவை தூக்கிட்டு இப்படி மனையில் வந்து உட்காரு என்றாள். குரல் கேட்ட பெருமாள்சாமி வைத்திருந்த குழந்தையை அருகில் நின்றவளிடம் கொடுத்துவிட்டு வந்தான். பாப்பா எங்கண்ணே உம் மடியிலதானே இருத்தி வச்சு காது குத்தானும் என்று இளங்கோவன் சொல்ல, அது என்கிட்ட இல்லையே என்றான். முன்பை விட ஜனக்கூட்டம் மேலும் அதிகமாக கூடி நெரிசலை கொடுத்தது.

என்ன மச்சான் நீங்க தூக்கி வச்சிருந்ததை நாங்கள் தாம் பார்த்தோமே என்று எழிலரசி கேட்க, பெருமாள்சாமி, அது நம்ம பாப்பா இல்லை மாப்பிள்ளை, தெரிந்தவர் ஒருத்தரோட குழந்தை என்றான்.

குழந்தை எங்கே எங்கே என்று பலரும் கேள்வி கேட்டு தேடிக்கொண்டிருக்க, யோசித்த இளங்கோவன், ஏம்மா, நான் குளிப்பாட்டிட்டு வந்ததும் உங்கிட்ட தானே கொடுத்து சட்டைப்போட்டு ரெடிப்பண்ணச் சொன்னேன் பாப்பா எங்கேம்மா என்று கேட்க, எங்கிட்ட எங்கேயடி கொடுத்தே, உம் மாமியார் கையிலதானே கொடுத்தே என்றாள் அவள்.

எழிலரசி ஓடிச்சென்று தன் தாயின் கையிலிருந்த குழந்தையை பிடுங்கிக்கொண்டு வந்து, நீங்க உட்காருங்க மச்சான் என்று பெருமாள்சாமியை உட்காரச் செய்து, அவர் மடியில் பாப்பாவை உட்கார வைத்தாள்.

இங்க பாருங்க, குழந்தை ஆடாமல் இருக்க, தலையை உங்க மார்போடு அழுத்தி பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி வலது காதில் ஊசியால் துளை போடும் போது, எழிலரசி கொஞ்சம் இரு, நீ மொட்டை அடிப்பவர் தானே, காது குத்தும் ஆச்சாரி எங்கே போனார் என்று கேட்டாள்.

எல்லாம் நான் ஒருத்தன் தான் செய்றேன், இப்போ காது குத்தவா வேண்டாவா என்று சத்தமாக கேட்க, எழிலரசி வாய்மூடி நிற்க, கோச்சுக்காதீங்க, அவர் அப்படித்தான், நீங்க காது குத்துங்க என்றான் இளங்கோவன்.

அந்த வேளையில், முகமறியாத ஒருவர், எழிலரசியின் கைகளைப் பற்றி, நீங்க இங்க என்ன பண்றீங்க.? பந்தி பரிமாற வேண்டாம்.? வாங்க போவலாம்., என்று சொல்லி கையைப் பிடித்து இழுக்க, நீங்க போங்க இதோ வர்றேன், என்றாள் எழிலரசி.

யாரு மாப்பிள்ளை அவரு, உங்களை எதுக்கு பந்தி பரிமாற கூப்பிடுறாரு என்று மாமனார் கேட்க, என்ன சம்பந்தி புரியாமல் பேசுறீங்க, ஐய்யாயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடு ஆயிருக்கு, இவன் போய் கவனிக்கலைன்னால் எப்படி.? நீ போய் அந்த வேலையை கவனி, போ என்றார்.

கூட்டம் அலைமோதுவதை கண்ட எழிலரசி மிரண்டு போனாள். பந்தி பரிமாற அழைத்துப் போனவர், வலுக்கட்டாயமாக சாப்பிட உட்கார வைத்து, எழிலரசியின் பக்கத்திலேயே அவரும் உட்கார்ந்து சாப்பிடலானார்.

அடுத்த சிறிது நேரத்தில் கும்பகோணத்துக்கு புறப்பட்டார்கள். எழிலரசி காரின் கதவை திறந்து உட்காருங்கள் மாமா என்று மாமனாரைச் சொல்லவும், இல்லை மாப்பிள்ளை நீங்க நாலு பேரும் இதுல ஏறிக்குங்க, நாங்க நாலு பேரும் அந்த காருல வர்றோம், மத்தவங்க எல்லோரும் பாத்திரம் பண்டங்களை ஏத்திக்கிட்டு பெரிய வண்டி தவேராவுல வருவாங்க என்று சொல்லவும் சரியென்று ஆமோதித்து எழிலரசி காரில் ஏற,

அப்பா, வேண்டாம்ப்பா என்னை விட்டுப் போகாதீங்க, எனக்கு பயமா இருக்கு என்று காலைப் பிடித்துக் கொண்டு கதறினாள் கௌசிகா.

மகள் அலறல் கேட்டு கண் விழித்தான் இளங்கோவன். அதே நேரத்தில் திடுக்கிட்டு எழுந்த எழிலரசி, இவ ஒருத்தி தூக்கத்தில கனவு காண வேண்டியது, பிறவு பயந்து போய் கத்த வேண்டியது, தெனமும் இதே ஒரு வேலையா போச்சு, என்று புலம்பியவள், தூங்குடி பேசாமல், உன் அப்பா என்னை விட்டு போனாலும் போவாரே தவிற உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டார், பயப்படாதே இங்கத்தான் படுத்து தூங்குறார், என்று சொல்லி தன் ஐந்து வயது பெண்ணை தன் அருகில் இழுத்து படுக்க வைத்து சமாதானப்படுத்தினாள்.

கண் விழித்த இளகோவன், தன் மொபைலில் மணி பார்த்தான். அது 3.10 என்று காட்டியது. வேடப்பர் கோயில் கனவு வீண் கனவு என்பதை உணர்ந்தான். ச்சே..என்ன இப்படியெல்லாம் கனவு வருது, அதுவும் கணவன் மனைவியாகவும், மனைவி கணவனாகவும் எப்படி ஆள் மாறி நடந்துக்க முடியும்,? கனவில் கூட நான் நானாக இல்லையே.! இது எப்படி சாத்தியமாகும் என்று சிந்திக்கலானான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *