இதுவும் கடந்து போகும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 4,246 
 

ராகவன் கண்ணை மூடி கொண்டு அமர்திருந்தார். முந்தைய நாள் இரவு திடீரென்று பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டு, சந்தோஷின் அறைக்குள் ஓடினார். அங்கே பாதி கண்களை மூடியபடி, வாயில் பால் போன்ற திரவம் வழிய, தலை தொங்கியவாறு சந்தோஷ் கட்டிலில் கிடந்தான். அவன் உடல் வேகமாக அதிர்ந்து கொண்டிருந்தது. பவித்ரா ஐயோ ஐயோ என்று கதறிக்கொண்டே, அவனை தூக்கி உட்கார வைக்க முயன்று கொண்டு இருந்தாள். பதறியபடியே இருவரும் அவனை காரில் ஏற்றிக் கொண்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு வந்து விட்டனர். நான்கு மணி நேர தீவிர சிகிச்சைக்கு பின், ஐசியு-வில் இருந்து பொது வார்டில் உள்ள அறைக்கு மாற்றி விட்டார்கள்.

ஏன் இப்படி பண்ணான்னு தெரியுமா?..கேட்ட போதெல்லாம் பவித்ரா தலையில் அடித்து கொண்டாளே தவிர, எதனாலென்று சொல்லவில்லை. ராகவன் பவித்ரா தம்பதிகளின் ஒரே மகன் சந்தோஷ். பவித்ராவிற்கு அவன் தான் உலகம். தாயும் மகனும் நல்ல நண்பர்கள் போல இருப்பார்கள். பள்ளியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் முதல், அவன் நண்பர்களின் குறும்புகள் வரை, எல்லாவற்றையும் அவள் மடியில் படுத்து கொண்டே ஒப்புவித்தால் தான் அவனுக்கு தூக்கம் வரும். அவன் எது கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டாள். ஆனால் ஏதாவது சாதித்து விட்டு வாங்கி கொள் என்பாள். பெரும்பாலும் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து விட்டு கேட்டதை வாங்கி கொள்வான். டாக்டர் ஆக வேண்டுமென்பது அவன் கனவு. அதற்காக கடுமையாக உழைத்தான். அவனுடைய நீட் பயிற்சி மையத்தின் பொறுப்பாளர் கூட, “எவ்வளவு கஷ்டமான கேள்விகளா இருந்தாலும், இவன் டாப் மூணு பேர்’ல வந்துடறான்..” என்பார். நீட் தேர்வு எழுதி மூன்று வாரங்கள் ஆகி விட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் ரிசல்ட் வந்து விடும். இப்போது போய் ஏன் இப்படி செய்தான்? யோசித்து கொண்டே அசதியில் உறங்கி விட்டார்.

கொஞ்சம் ஜூஸ் குடிக்கிறியாப்பா..பேச்சு சத்தம் கேட்டு ராகவன் கண் விழித்தார். பவித்ரா ஜூஸ் கப்பை கையில் வைத்து கொண்டு சந்தோஷிடம் கேட்டு கொண்டிருந்தாள். பவித்ராவின் முகம் இப்போது சற்று தெளிவாக இருந்தது.

ராகவன் எழுந்து நேராக போய் டாக்டரை பார்த்து விட்டு வந்தார்.

பவித்ரா.. பணம் எல்லாம் கட்டி விட்டேன். மருந்து எழுதி கொடுத்திருக்கிறார். வாங்கிட்டு வந்துடறேன். கொஞ்ச நேரத்துல வீட்டிற்கு கூட்டிகிட்டு போயிடலாம்..

சரிங்க..

எல்லா சம்பிரதாயங்களையும் முடித்து கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார்கள். சந்தோஷ் மருந்து எடுத்து கொண்டு தூங்கி விட்டான். இரண்டு நாளாக வீட்டில் போட்டது போட்டபடி இருந்ததால் பவித்ரா, ஒவ்வென்றாக சீர் செய்து கொண்டிருந்தாள்.

பவித்ரா..இப்பவாவது சொல்லு..எனக்கு அவன நெனச்சா ரொம்ப பயமா இருக்கு?..

பவித்ரா, ராகவனை முறைத்து பார்த்தாள். ஏன்..போய் எப்பவும் போல ஏதாவது புத்தகத்தை எடுத்துக்கிட்டு உட்கார வேண்டியது தானே..

நான் என்ன கேட்டுகிட்டு இருக்கேன்..நீ என்ன சொல்ற..

ஒரு பையனுக்கு அப்பான்னா..ஸ்கூல் பீஸ் கட்டுவது, நல்ல டிரஸ் வாங்கி தருவது. எங்கயாவது அழைச்சிகிட்டு போறது மட்டும் இல்ல.. அவன் மனசுக்குள்ள என்ன பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சி அவனுக்கு துணையா இருக்கணும்.

எனக்கு புரியல பவித்ரா..

நீங்க எப்பொழுதாவது நாங்க என்ன பேசிக்கறோம், என்ன செய்யிறோம்னு கேட்டு இருக்கீங்களா?.. எப்பவுமே..வேலை வேலைன்னு இருக்கறது, இல்லைன்னா ஏதாவது புத்தகமும் கையுமா தான இருந்தீங்க..

ராகவன் தடுமாறினார். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் எல்லாம் செய்யறீங்கன்னு நான் கண்டுக்கிட்டது இல்லை. அதுவுமில்லாம, அவன் உன் பின்னாடியே தானம்மா சுத்திக்கிட்டு இருப்பான்..

ராகவன் ஒரு புத்தக புழு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்து கொண்டிருப்பார். ஆனால் தன் குடும்பத்தின் தேவைகளில் என்றும் குறை வைத்ததில்லை.

இங்க பாரு பவி..தயவு செய்து என்ன ஆச்சுன்னு சொல்லு..ப்ளீஸ்.. என்றார் ராகவன்.

வாங்க..ஹாலுக்கு போயிடலாம்..

இருவரும் ஹாலுக்கு சென்று சோபாவில் அருகருகே உட்கார்ந்தனர்.

இவன் நீட் எக்ஸாமுக்கு முன்னாடி என்கிட்டே ஒன்னு சொன்னான்.

என்ன சொன்னான்..என்றார் ராகவன்.

இவன் கூட படிக்கிற பொண்ண புடிச்சிருக்காம்..நீட் எக்ஸாமில் பாசாகி நல்ல காலேஜில் சீட் வாங்கினால்..பவித்ராவிற்கு கண்ணில் நீர் திரண்டது.

சரி..அழாதம்மா..சொல்லு.

அந்த பொண்ண இவனுக்கு கட்டி வைக்கணுமாம்..

ராகவனுக்கு நேராக போய் தூங்குபவனை ஓங்கி உதைக்க வேண்டும் போல் இருந்தது. கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கி கொண்டார். சரி, நீ என்ன சொன்ன அதுக்கு..

ரொம்ப அதிர்ச்சியா இருந்தது.. ஆனா இவன் மனசு ஒடஞ்சிட கூடாதேன்னு..சரின்னுட்டேன்..

நீ தான் சரின்னு சொல்லிட்டியே..அப்புறம் ஏன் இப்படி?..

அதான் தெரியலைங்க..

சிறுது நேரம் இருவரும் அமைதியாக இருந்தார்கள். சரிங்க..நான் போய் அவன் ரூமிலேயே தூங்குறேன்..அவனை தனியா விட பயமா இருக்கு.. என்று கூறி விட்டு பவித்ரா போய் விட்டாள்.

ராகவனுக்கு குழப்பமாக இருந்தது. எழுந்து சந்தோஷ் ரூமிற்குள் சென்று பார்த்தார். சந்தோஷும், பவித்ராவும் தூங்கி கொண்டிருந்தனர். பீப்..பீப்..கம்ப்யூட்டரில் இருந்து சத்தம் வந்தது. கம்ப்யூட்டரை ஆப் செய்யாமல் விட்டிருக்கிறான் போலும்?

கம்ப்யூட்டர் திரையை ஆன் செய்தார். பல இணையதளங்கள் மூடப்படாமல் இருந்தன. ஒவ்வொன்றாக பார்த்தார். பல்வேறு வகையான கத்திகளின் விபரங்கள் இருந்தது. விஷம் மிகுந்த பூச்சி மருந்துகளின் விலைபட்டியலை பார்த்திருக்கிறான். கடைசியாக அதிக வீரியமுள்ள அமிலம் எங்கு கிடைக்கும் என்று தேடி இருக்கிறான்.

சந்தோஷா இப்படி..குழந்தையாயிற்றே அவன்..ராகவனால் நம்ப முடியவில்லை.

மேலும் ஆராய்ந்தார், சந்தோஷின் ஸ்கூல் குரூப் போட்டோ இருந்தது. அதில் ஒரு மாணவியின் முகத்தை ஸ்கெட்ச்சால் வட்டம் போட்டிருந்தான். மேலும் தேடியதில், அவன் அந்த பெண்ணிற்கு மெயிலில் ப்ரொபோஸ் செய்திருக்கிறான். அவள் தன் மனதில் அது போன்ற எண்ணமில்லை என்று பதில் அனுப்பியிருக்கிறாள். கடைசியாக ஒரு தற்கொலை கடிதத்தை டைப் செய்து வைத்திருந்தான். இப்போது ராகவனுக்கு உண்மை புரிந்தது. ஒரு பொருளை அடைவது போல் எளிதாக அந்த பெண் இவனுக்கு கிடைத்து விடுவாள் என்று நினைத்திருக்கிறான். அந்த பெண்ணும் சுய விருப்பு வெறுப்பு உள்ள ஒரு உயிர், அவளுக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு உண்டு என்று இவனுக்கு புரியவில்லை. இவன் தாய் போல் எல்லோரும் இவனுக்கு எளிதில் தலையாட்டுவார்கள் என்று நினைத்து விட்டான் போலும், இவனுக்கு அக்கா தங்கை என்று யாராவது இருந்தாலாவது நல்லது கெட்டது தெரிந்திருக்கும். நல்ல வேலை, அந்த பெண்ணிற்கு வேறு எதுவும் தொல்லை கொடுக்காமல் விட்டானே, எல்லாம் பதின்ம வயது கோளாறு என்று நினைத்து கொண்டு, அனைத்தையும் இருந்தது இருந்தபடியே வைத்து விட்டு வெளியில் வந்தார்.

மறு நாள் தான் பார்த்த அனைத்தையும் பவித்ராவிடம் கூறினார். பவித்ரா கோபமாக, அவளுக்கு எவ்வளவு திமிர் பாருங்க?.. என்றாள்.

ராகவனுக்கு சிரிப்பு வந்தது. ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? இந்த விஷயம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரிந்தால், ஒன்று அவளை எங்காவது தொலை தூர கல்லூரியில் சேர்ப்பார்கள், அல்லது இவனை எச்சரிப்பார்கள். அதுவும் இல்லையென்றால் காவல் நிலையத்தில் புகாரளிப்பார்கள். மொத்தத்தில் அந்த பெண் தேவையின்றி பாதிக்கப்படுவாள். இதுவரை அப்படி நடக்கவில்லை எனில், அந்த பெண் இதை பெரிதுபடுத்தவில்லை என்று நினைத்து கொண்டார்.

சரி பவி..எனக்கு இந்த விஷயம் தெரியும்னு அவன்கிட்ட சொல்லிடாத..என்றார்.

சில நாட்கள் சென்றது. பவித்ரா சந்தோஷை எங்கும் தனியாக விடவில்லை. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி சந்தோஷ் நல்ல மார்க்கில் பாஸாகியிருந்தான். ராகவன் ஸ்வீட் பாக்ஸோடு வீட்டிற்குள் நுழைந்தார். சந்தோஷ் பவித்ராவிடம் கோபமாக கத்தி கொண்டிருந்தான்.

ம் .மா.. நான் அவளை கொல்லாம விட மாட்டேன்..எப்படி சிரிச்சி சிரிச்சி ஏமாத்திட்டா தெரியுமா..

அப்படி சொல்லாதடா..எனக்கு நீ படிச்சி டாக்டரா வரணும்டா..பவித்ரா அழுது கொண்டே அவனை சமாதானம் செய்ய முயன்றாள். ராகவனை பார்த்ததும் இருவரும் வெவ்வேறு திசையில் சென்றனர். இரவு தூங்கும் முன், பவித்ரா ராகவனிடம் கூறினாள். “ஏங்க..எனக்கு பயமா இருக்கு. இவன் ஏதாவது மறுபடியும் தப்பான முடிவு எடுத்திடுவானோ?..இல்லை அந்த பொண்ண ஏதாவது பண்ணிடுவானோ? தெரியலைங்க..நீங்க கொஞ்சம் பாருங்க..

ராகவன் சரி என்பது போல் தலையாட்டினார்.

மறு நாள் காலை ராகவன் பவித்ராவையும், சந்தோஷையும் அழைத்தார். மூவரும் அருகருகில் அமர்ந்து கொண்டனர்.

இங்க பாரு சந்தோஷ்..நீ ஏன் இந்த முடிவை எடுத்தேன்னு எனக்கு தெரியாது?.. ஆனா நீ எதுவானாலும் நல்லா யோசிச்சு தான் பண்ணுவேன்னு எனக்கு தெரியும். ஏன்னா..நீ என்னை விட , உங்கம்மாவை விட புத்திசாலி. எனக்கு ஒரே ஒரு ஆசை..அதை செய்வியா..

என்னால காலேஜ் போய் படிக்க முடியாதுப்பா..போனாலும் டாக்டர் ஆக முடியாது..சந்தோஷ் குழந்தை போல் அழ ஆரம்பித்தான்.

சரிப்பா..நீ டாக்டர் ஆக வேண்டாம்..எங்களுக்காக ஒரு ஆறு மாசம் மட்டும் காலேஜ் போயிட்டு வந்துடு..அப்புறம் நாங்க யாரு கேட்டாலும், ஏதாவது காரணம் சொல்லிக்கறோம்.. ப்ளீஸ்ப்பா..ராகவன் கெஞ்சினார்.

வேண்டாங்க..அவன் காலேஜுக்கு போக வேண்டாம்..எனக்கு என் மகன் உயிரோடு இருந்தா போதும்..பவித்ராவும் அழ ஆரம்பித்தாள்.

நீண்ட நேரம் மூவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

சரிப்பா..உங்களுக்காக நான் ஆறு மாசம் காலேஜுக்கு போறேன்..

பவித்ரா..வேண்டாம்டா..என்றாள்.

இல்லம்மா..அப்பாக்காக நான் போறேன்..

ராகவன் “ரொம்ப தேங்க்ஸ்ப்பா..ஆறு மாசத்துக்கு பிறகு, நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சந்தோஷமே..”

அடுத்த சில நாட்களில் கவுன்சிலிங் முடிந்து, சந்தோஷை மதுரையில் ஒரு நல்ல மருத்துவ கல்லூரியில் சேர்த்தார் ராகவன்.

வீட்டின் அமைதி பவித்ராவுக்கு என்னமோ செய்தது. என்னங்க.. ஏதாவது பண்ணிக்க போறான்..

ஒன்னும் ஆகாது..கவலைப்படாதே..

ஏற்கனவே ஒரு மாசம் ஓடி போயிடிச்சு. போன்ல கூட சரியா பேச மாட்டேங்குறான். இன்னும் ஐஞ்சு மாசத்துக்கு பிறகு, திரும்ப ஏதாவது தப்பா முடிவு எடுத்தா என்ன செய்யறது?..நீங்க வேற, அவன் என்ன செஞ்சாலும் சரின்னு சொல்லி இருக்கீங்க..

எனக்கு தெரியும்.. கண்டிப்பா மாறிடுவான்..கவலைப்படாதே..

அதே நேரம்..மருத்துவ கல்லூரி ஹாஸ்டலில், சக மாணவன் சந்தோஷை அழைத்து கொண்டிருந்தான், “டேய் சந்தோஷ்..நீ கிரிக்கெட் விளையாடுவியாமே..கொஞ்சம் கிரௌண்டுக்கு வாடா..நம்ப ஹவுஸ் டீம் மானம் போய்கிட்டு இருக்கு..”

ஒன்றும் சொல்லாமல் வெறித்து பார்த்து கொண்டிருந்தவனை, நான்கு பேர் குண்டு காட்டாக மைதானத்திற்கு தூக்கி போனார்கள். சந்தோஷ் துள்ளினான், கதறினான், ஒன்றும் பலனில்லை.

முடியாது..என்ன விடுங்கடா ..

டேய் மச்சி ப்ளீஸ்டா.. என்றவாறே அவனுக்கு கிளவுஸ், பேட் எல்லாவற்றையும் அணிவித்து மைதானத்திற்குள் தள்ளி விட்டார்கள்.

முடியவே முடியாது என்றவனின் காலில் சக மாணவன் விழுந்தான். “டேய்..லாஸ்ட் விக்கெட்டுடா..ரெண்டு ஓவர் இருக்கு..ஐஞ்சு ரன் தான்டா..ப்ளீஸ்டா..மானம் போய்டும்டா..அங்க பாரு..அந்த ஹவுஸ் பொண்ணுங்க எல்லாம் எப்படி சிரிச்சிகிட்டு இருக்காங்க..

சந்தோஷ் திரும்பி பார்த்தான். கட்டை விரலை தலைகீழாக திருப்பி..டௌன் டௌன்..என்று சிரித்து கொண்டிருந்தார்கள். சந்தோஷிற்கு உடல் திகு திகு என்று எரிவது போல் இருந்தது. “உங்க சிரிப்பை நொறுக்கறேன் பாருங்க..” என்று நினைத்து கொண்டு மைதானத்திற்குள் வெறி பிடித்தவன் போல் நுழைந்தான்.

முதல் பந்தை லேசாக பின்னால் தட்டி விட்டான், ஆனால் ரன் எதுவும் எடுக்கவில்லை.

அடுத்த பந்தை, ஏறி ஒரு லாங் ஷாட்..பௌண்டரி லைனிற்கு முன்னால் பந்து விழுந்து சென்றது.

ஃபோர்..ஃபோர்….கூட்டம் ஆரவாரித்தது..

சந்தோஷ் திரும்பி பார்த்தான்..எதிரணியில் அனைவரின் முகத்திலும் தோல்வி பயம் தெரிந்தது, பெண்கள் உட்பட.

அடுத்த பந்தை வெறி கொண்டவன் போல் அடித்தான். பௌண்டரி லைனிற்கு அப்பால் போய் விழுந்தது.

சிக்ஸ்.. சக மாணவர்கள் உள்ளே ஓடி வந்தார்கள். சந்தோஷை தலைக்கு மேல் தூக்கி கொண்டாடினார்கள். சந்தோஷ் வெறி பிடித்தவன் போல் கத்தினான், “நான் ஜெயிச்சிட்டேன்..ஜெயிச்சிட்டேன்..”

ஆமான்டா மச்சி..ஆமான்டா..

அளவுக்கு அதிகமான சத்தத்திலும், மண்ணில் எழுந்த புழுதியினாலும், சந்தோஷ் கதறி அழுததை யாரும் கவனிக்கவில்லை.

மைதானத்தை விட்டு வெளியே வந்தார்கள். எதிரணியினர் அனைவரும் சிரித்து கொண்டே கை கொடுத்தனர், பெண்கள் உட்பட.

இவன் இல்லைன்னா.. உங்க ஹவுஸ் டீம் இன்னைக்கு அம்போ தான்..

எனக்கு இவனை பாத்தவொடனே தெரிஞ்சிடுச்சி மச்சி..ஒரு ஜாடையில கங்குலி மாதிரியே இல்ல..ஆளாளுக்கு கிண்டல் செய்தார்கள்.

ஏனோ சந்தோஷிற்கு கோபம் வரவில்லை. “அடுத்த மேட்ச் எப்போ..” என்றான்.

ஆறு மாதம் கழித்து ஊருக்கு வந்த சந்தோஷ் யாரிடமும் சிரித்து பேசவில்லை, அதே சமயம் சோகமாகவும் இல்லை. நண்பர்களை சந்தித்து விட்டு மாலை வீட்டிற்கு வந்தவன் பவித்ராவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அம்மா..நைட்டுக்கு சிக்கன் செய்ரீங்களா..?

இன்னைக்கு சனிக்கிழமைடா..

ப்ளீஸ்மா..என்றான் கெஞ்சலாக.

ராகவன் கடைக்கு கிளம்பினார். அப்பா..என்று அழைத்தான் சந்தோஷ்.

என்ன என்பது போல் பார்த்தவரிடம், அப்படியே..செவ்வாய்க்கிழமை நைட்டு மதுரைக்கு பஸ் டிக்கட் புக் பண்ணிடுங்க..புதன்கிழமை காலேஜ் இருக்கு.

ராகவன் சிரித்து கொண்டே சரி என்றார்.

சந்தோஷ் காலேஜ் சென்ற பிறகு, பவித்ரா ராகவனிடம் கேட்டாள்.

நீங்க சொன்ன மாதிரியே மாறிட்டான்..எப்படிங்க..

“கோபத்திற்கும் சோகத்திற்கும் ஆயுள் குறைவாம். தள்ளி போட்டால் காணாமல் போய் விடுமாம்.” என்றார் ராகவன்.

ஓஹோ..உங்களுக்கு எப்படி இது தெரியும்.. கிண்டலாக கேட்டாள் பவித்ரா.

எப்பவோ.. ஒரு புத்தகத்தில் படித்தது, என்றார் ராகவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *