கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 7,483 
 

(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரங்கநாதத்திற்கு அன்று சம்பளம் போடவில்லை. நாளும் ஏறக்குறைய மாசக் கடைசியாகிவிட்டது. விட்டில் எண்ணூற்று ஐம்பது செலவு. வீட்டு வாடகைக்காரன் என்னவெல்லாம் பேச முடியுமோ அதெல்லாம் சொல்லிவிட்டுப் போய்விட்டான் விட்டுச் சாமான்களைத் தூக்கி எறிய அவற்றின் மீது கைதான் வைக்கவில்லை. இன்று இரவு வேளைக்கு வீட்டில் அரிசி இல்லை. சாப்பாடு லங்கணம் என்றாலும் பாதகமில்லை . இந்தச் சிறிய கவலைகள் உயிரையே வாட்டிவிடுகின்றன.

ஆபீஸிற்கு வந்துவிடுவது என்றால் அது விட்டுத் தொந்தரவுகளை எல்லாம் ஒரு பெண்ணின் தலையில் போட்டுவிட்டு, அங்கு வந்து ஒளிந்து கொள்ளும் கோழைத்தனம் என்று பட்டது.

வீட்டிற்குப் போவதற்குக் கூட மனமில்லை. கையில் பணக்கஷ்டம் ஏற்பட்டுவிட்டால் சந்நியாச உலகம் மோட்ச சாம்ராஜ்யமாகத் தோன்றும். ரங்கநாதத்திற்கு, மோட்ச சாம்ராஜ்யம் அல்லாவிட்டாலும் குடும்ப வாழ்க்கையை விட எவ்வளவோ மேலானதாகப்பட்டது.

அன்று அவன் விட்டிற்குள் வந்தபோது அவனுடைய மனைவி, தன் கணவர் சம்பளம் வாங்கி வந்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் அவனை எதிர்பார்த்தாள். அவள் கண்களைச் சந்திக்கக்கூட அவனுக்குத் தைரியமில்லை.

கோட்டு ஸ்டாண்டில் சட்டையைக் கழற்றி மாட்டிக் கொண்டே, “இன்று சம்பளம் போடவில்லை. ஒருவரிடம் எட்டு அணா கடன் வாங்கி வந்திருக்கிறேன்” என்றான்.

“எட்டணாவா?” என்றாள்.

ரங்கநாதத்திற்குக் காரணம் இல்லாத சிரிப்பு வந்துவிட்டது. விழுந்து விழுந்து சிரித்தான். எட்டு அணாவை வைத்துக்கொண்டு பொக்கிஷ மந்திரியாக முடியுமா?

அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அவளும் விழுந்து விழுந்து சிரித்தாள்.

“மிஸ்டர் ரங்கநாத்” என்று வெளியிலிருந்து ஒரு குரல்,

“ஓகோ! ராகவன் வந்திருக்கிறாப்போல் இருக்கிறது. வாங்கோ ஸார்?” அவளைப் பார்த்து. “விட்டில் பால் இருக்கிறதா?”

“ஆமாம், காலம்பற வாங்கினது இருக்கிறது.”

“அப்போ காப்பியாவது போடு” என்றார்.

ராகவனும் வீட்டிற்குள் வர, அவரை வரவேற்று நாற்காலியில் உட்கார வைத்துப் பேசிக்கொண்டு இருந்தார்.

“வெற்றிலை போடுங்கள் ஸார்” என்று ரங்கநாதம் வெற்றிலைச் செல்லத்தை அவர் பக்கம் வைத்துவிட்டுத் தாமும் போட ஆரம்பித்தார்.

“ஏன் ஸார், இவ்வளவு நேரம் ஆபீஸிலிருந்து வர?” என்றார் ராகவன்

“கொஞ்சம் வேலை இருந்தது; நீங்கள் அப்போதே வந்தீர்களோ?”

“இல்லை, நான் அந்த மூலையில் திரும்பும்பொழுது நீங்கள் வீட்டிற்குப் போவதைப் பார்த்தேன். என்ன ஸார்? நேற்றுச் சினிமாவிற்குப் போனீர்களா? ரொம்ப நல்லா இருந்ததாமே?”

“என்ன கதை?”

“ஸ்டீவன்ஸன் நாவலை, பிலிம் பண்ணியிருக்கிறான். ஆக்ட் நன்றாக இருந்தது”.

“அப்படியா? நானும் போகவேண்டும். நாளைக்கும் இருக்குமோ?”

“அது எனக்குத் தெரியாது.”

இப்படி இவர்கள் சினிமாவைப் பற்றியும் அதில் நடிக்கிறவர்களைப் பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள் காப்பியும் தயாராகியது. ரங்கநாதத்தின் மனைவி கதவண்டையில் வந்து நின்றாள்.

“என்ன ஸார், காப்பி கொஞ்சம் சாப்பிடுங்களேன்” என்றார் ரங்கநாதம்.

“இல்லை ஸார். இப்பொழுதுதான் சாப்பிட்டேன்; நீங்கள் சாப்பிடுங்கள்” என்றார் ராகவன்

“கொஞ்சம் சாப்பிட்டால் என்ன வந்துவிடுகிறது? ராதா, காப்பியை இங்கேதான் கொண்டுவாடி” என்றார் ரங்கநாதம்.

காப்பியும் பரிமாறப்பட்டது. இருவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தார்கள். மறுபடியும் வெற்றிலைச் செல்லத்தை எடுத்து வெற்றிலை போடச் சொன்னார் ரங்கநாதம்.

ராகவன் வெற்றிலை போட்டுக் கொண்டே, “எனக்கு நேரமாகிறது. உங்களிடம் எட்டணா இருந்தால் கொடுங்கள். அவசரம்; நாளைக் காலையில் தருகிறேன்” என்றார்.

“என்ன அவ்வளவு அவசரம்?”

“இல்லை; வீட்டிற்குப் போகவேண்டும்” என்றார்.

ரங்கநாதத்திற்கு கொடுக்க மனமில்லைதான். கேட்காத மனிதன் கேட்கும்போது? எட்டணாவை வாங்கிக் கொண்டு ராகவன் வெளியேறினார்.

ரங்கநாதத்தின் மனைவி உள்ளே வந்து, “சிறிதே அரிசியும் மண்ணெண்ணெயும் வாங்குங்கள்” என்றாள்.

“தோசை இருக்கிறதோ இல்லையோ? இன்றைக்கு அது போதும்” என்றார்.

“மண்ணெண்ணெய்”

“ராகவன் எட்டு அணா கேட்டார்; கொடுத்திருக்கிறேன். நாளை காலையில் வாங்கிக் கொள்ளலாம்” என்றார் ரங்கநாதம்.

– மணிக்கொடி, 13-01-1935

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *