பெயரில்லாத நாடகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2022
பார்வையிட்டோர்: 4,593 
 

“நான் உங்கள மட்டும்தான் கூப்பிடறேன். வேறயாருட்டயும் சொல்லிட்டிருக்க வேண்டாம்”.

இன்னும் வியப்பு தணியாத விழிகளுடன் அவன் மற்றுமொரு முறையாகத் தலையசைத்தான். நிர்மலாவின் கூரிய பார்வையில் அவன் ஆணிவைத்து அறைந்ததுபோல் உறைந்திருந்தான். இவனின் எண்ண ஓட்டங்களை உணர்ந்தறியும் முயற்சியாக சற்று மௌனம் நிலவவிட்டாள்.

“நீங்க ஒன்பது மணிக்கெல்லாம் வந்துட்டீங்கன்னா ரொம்ப நல்லது. அதுக்கு முன்னாலேயே வந்துட்டாக்கூட நல்லதுதான்”.

ரஷ“த் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தான். இந்தப் பத்து நிமிட நேரத்துக்குள் அவள் மூன்றாவது முறையாகவும் இதைச் சொன்னாள். ஆயினும் அவனுக்கு அது சலிப்பைத் தரவில்லை. ஆனால் ஒரு பெரிய நாடகத்தைக் கொஞ்சமும் ஒத்திகையின்றி உடனே கச்சிதமாக நடித்துக் கொடுக்க வேண்டும் என்கிறதாக இருந்தது அவளின் பேச்சுத் தோரணை. இந்த மாதிரியான மூடுமந்திர வேலைகளுக்கு இவன் கொஞ்சமும் சரிப்பட்டு வராதவன். அதை அவள் உணர்ந்து கொள்ளவில்லையா? சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வதும்கூட அதை உணர்ந்து கொண்டதால்தான் இருக்குமோ? யார் கண்டது?

நிர்மலாவின் தங்கை காந்திமதி வயசுக்கு வந்திருந்தாள். அவளுக்கான நீராட்டு வைபவம் அடுத்த வாரம் ஞாயிறன்று இருந்தது. அதுவும் அவளின் சொந்த ஊரில். நிர்மலா அவளின் சித்தப்பா ஆதரவில் இங்கு வந்து கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்துக் கொண்டிருந்தாளே தவிர, குடும்பம் சொந்த ஊரில்தான் இருந்தது. தென்காசியை ஒட்டியிருந்த எழிலார்ந்த சிற்றூர் அது. கம்ப்யூட்டர் பயிற்சியின் போதுதான் அவர்கள் ஒட்டுறவாகப் பழகிக் கொண்டது. கமலா, செல்லம்மாள், சுபா, ராகவன், மகாலிங்கம் ஆகியோருடன் ரஷ“தும் நிர்மலாவும் ஒருங்கிணைந்து ஒரு முழுவட்டமானார்கள். ஆனால் ரஷ“தைத் தவிர, மற்றவர்களையெல்லாம் அழைக்க முடியாதபடி நிர்மலாவுக்கு அப்படியென்ன நெருக்கடி இருக்கும் என் ரஷ“துக்குத் தெரியவில்லை. இப்போதைக்கு ரஷ“த் செய்யவேண்டியதெல்லாம் மனதை மூடிக்கொள்ளவேண்டும். அப்புறம் வாயும் தானாகவே மூடிக்கொள்ளலாம். இன்னும் பத்து நாள்கள் உள்ளன. அதற்குள் மற்ற நண்பர்களையும் அழைப்பது பற்றியோ அல்லது அழைக்காமல் விடுவதன் காரணம் பற்றியோ ஏதாவதொன்று தட்டுப்பட்டுவிடும். அதுவரை கவலை கொள்ளாதிருக்கப் பழகிக்கொள்ளணும்.

நிர்மலா ஊருக்குப் புறப்பட்ட நாள் அது. அவள் மீண்டும் அதையே சொன்னாள். “நான் மட்டும் எப்படி தனியா?” என்று கேட்டுவிட்டான். “நீங்க மட்டும்தான். எதப்பற்றியும் யோசிக்காம வாங்க. அதுக்காக மத்தவங்களையெல்லாம் ஒதுக்கிட்டேன்னு அனாவசியமா கவலைப்படாதீங்க”.

அவன் கவலைப்பட்டான் – சூட்சமக் கயிறு அவிழவில்லையே! அனால் அவனிடம் ஆர்வப் படபடப்பு தொற்றிக் கொண்டது. இன்னும் இரண்டு நாள்கள்தான் நண்பர்கள் எல்லோரும் கூடுயிருக்கும் ஞாயிறன்று, தலைமறைவாகி வெகுதூரம் போய்த்திரும்புவது ரொம்பத் “த்ரில்லிங்காக” இருக்கும். ஆனால் மாட்டிக்கொண்டால் மகா சீண்றம்! ஒரு பொய்யைக் கடைசிவரை காப்பாற்றிக் கொண்டு போவது பளிங்குத்தரையில் எண்ணெய்க் கிண்ணத்தைத் தூக்கிச் செல்வது மாதிரி! வாயை இறுகமூடி. முகத்தையும் கடுமையாக வைத்துக்கொண்டால், எந்தக் கொம்பனாலும் உண்மையைக் கறந்துவிட முடியாதுதான். ஆனால் அது நடக்குமா?

நிர்மலா, எதிர்பார்த்திருக்க மாட்டாள்: சொல்லிவைத்த மாதிரி “டாண்” என்று சரியாக ஒன்பது மணிக்குத் தன் வீட்டுக்கு வந்து சேருவான் என்று. “ஒரு பேரலைபோல் அவளுக்குள்ளும் திகில் எழுந்து உயர்ந்து பின் சமமாய்ப் பரவியது. பயணத்தின் வழியெங்கும் குளிர்ந்தகாற்று வேகமாக விசிறியடித்ததில் அவன் முகத்தில் பனிப்பூச்சு அப்பியிருந்தது. மேலும் அவனுடைய சுருள்கேசம் இன்னும் இன்னும் அதிகமாய்ச் சுருண்டு அவன் நெற்றியில் இறங்கி சிறுசிறு அசைவுகளால் ஒரு எடுப்பான நளினத்தை உண்டாக்கியபடி இருந்தது. அவன் வருகையும் நிர்மலாவின் வரவேற்பும் ஓர் ஆவலை அங்கு கிளர்த்தியது. ஒருவிதமான பதற்றம் நிரம்பிய பார்வைகள்! மௌனம் அடர்த்தியாகக் கவிந்து அனைவரையும் நெட்டித் தள்ளியது. ரஷ“த் எதிர் பார்த்ததற்கும் மேலாகவே அந்த வீடு அவனை எதிர் கொண்டதால், அவனுக்கும் படபடப்பாக இருந்தது. இவன் வரப்போவதை – நிர்மலாவும் யாரிடமும் சொல்லவில்லை. அவனை உள்ளே வரச்சொல்லி அம்மாவிடம் அறிமுகம் செய்தாள். அம்மா முதலில் சிரிக்கச் துவங்கி. பின் அந்த துவக்கப்புள்ளியிலேயே முடித்துக் கொண்டாள். முகத்தில் ஒரு மருட்சி அலையடித்தது. அவளின் அப்பா மருதநாயகம் பிள்ளையும் அப்போதே அவர்களை நெருங்கி வந்திருந்தார். அப்பாவிடம் அவள் இன்னும் உரிமையோடு அறிமுகம் செய்தாள். சூழலை நெருடலாக உணர்ந்த அவன், அச்சத்தை அப்புறப்படுத்திவிட்டு கைகளைக் குவித்து சற்றே குணிந்து “வணக்கம் ஐயா” என்றான். அது அவரை உலுக்கியெடுத்தது. “வாங்க தம்பி” என்று தோளைத் தட்டினார். அவர் புன்னகையை வெளிப்படுத்தும்வரை, இறுக்கமாய் இருந்த நிர்மலாவின் அம்மா இப்போது தடையில்லாமல் கொஞ்சம் சிரித்தாள்.

காந்திமதியைப் பார்த்தபோத அவள் இன்னொரு நிர்மலாவாகவே இருந்தாள். அவனை ஏற்கனவே பார்த்து அறிமுகமாகி இருந்தவளைப்போலச் சொன்னாள். “நீங்க வருவீங்கன்னு அக்கா எங்கிட்ட சொன்னா. நீங்க எனக்கு வாழ்த்துக் கவிதையோட வருவீங்கன்னு எதிர்பார்த்து இருக்கோம்.” அவன் அவர்கள் குடும்பத்தில் ஒன்றிவிட்டதாக ஆனான். அவள் சொன்னதை அவன் சிலிர்ப்பாக உணர்ந்தான். உண்மையில் அவனும் கவிதையோடுதான் வந்திருக்கிறான்.

தகவல் எட்டியதும் நிர்மலாவின் பாட்டி அவனருகில் வந்தாள். அவரின் பார்வை தணியாத கேள்விகளோடு அவனைச் சுற்றி வந்தது. அவன் அங்குமிங்கும் நகர முடியாமல் அங்கேயே நின்றான். பாட்டி வாயைத் திறக்கும்முன் நிர்மலா வாய்திறந்தாள். “பாட்டி இவங்க என்கூட கம்ப்யூட்டர் படிக்கிறாங்க. நல்லா கவிதை எழுதுவாங்க. ” பாட்டிக்கு இதெல்லாம் அனாவசியமாகப்பட்டது. பாட்டியை அவிடமாய் நகர்த்திச்செல்ல நிர்மலா முயற்சி செய்தாள். பாட்டியிடமிருந்து முதல் கேள்வி வந்தது.

“பையன் எந்த ஊரு?”

“திருநெல்வேலி”

பாட்டி தலையை ஆட்டியபடி கேட்டார். “உன்பேரு என்ன சுப்பிரமணியனா?”

நிர்மலா பொய் பேசுகிற ஆளில்லை. “ஆமாம்” என்றாள் நிர்மலா.

பாட்டி சமாதானமாக இன்னும் என்னென்னவெல்லாமோ? தேவைப்பட்டன. அவள் சுவாசத்தில் ஏதோ தடை விழுந்தது. நெஞ்சு விம்மி, பார்வை சுழன்றாடியது. களைத்துப்போன மனநிலையுடன் ஏதோ முணுமுணுத்தபடி நகர்ந்து, திரும்பிநின்று, மீண்டும் ஒருபார்வை பார்த்தாள். ரஷ“துக்கு சுவாரசியமற்ற நிலை தோன்றிக் கொண்டிருந்தது. மனதைச் சமனப்படுத்த அவன் காந்திமதியின் அழகை ரசிக்கத் துவங்கினான்.

நிர்மலாவின் வயதையொத்த இளம் பெண்கள் சிலர் அங்கு இருந்தார்கள். அவன் தங்களைப் பார்க்கும்போது அவனோடு பேசவேண்டும் என்று அவர்கள் விரும்பியிருந்தார்கள். பாட்டியை அனுப்பிவிட்டு நிர்மலா அவர்களிடமும் அறிமுகம் செய்தாள். “பேரு ரஷ“து. என்கூட படிக்கிறாங்க நல்லா கவிதை எழுதுவாங்க”.

“உன் பாட்டிகிட்டே ஏன் சுப்பிரமணியன்னு பொய் சொன்னே?”

“நானா சொல்லலியே. அவங்களா கேட்டாங்க. ஆமான்னுட்டேன். எல்லோரும் சேர்ந்து சிரித்தார்கள். அவனும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். வீடு சற்றே விசாலமாக இருந்ததால் அவனுடன் பேசவிரும்பிய பெண்கள் சற்று ஒதுங்கி நின்று விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவன் நிறையக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டவன் போன்ற நினைப்போடயே பேசவும் சிரிக்கவுமாக இருந்தார்கள். நிர்மலா வேலைகளைப் பார்ப்பதும், இடையிலே விட்டுவிட்டு அவன் பக்கம் வந்து அவர்களோடு சேர்ந்து பேசுவதுமாக இருந்தாள். அவர்களைக் கடந்தபோகிற ஒவ்வொருவரும் விசித்திரமான புன்னகையை உதிர்த்துவிட்டுப் போகிறவர்களாக இருந்தார்கள். சிலர் அங்கே வெறுமனே நின்று அவர்கள் கூடிப்பேசுவதைப் பார்ப்பதும், எதுவும் புரியாமல் கையை விரித்தபடிச் செல்வதுமாக இருந்தார்கள். நிர்மலாவை அதிக நேரம் அந்தப் பக்கமாய் நிற்கவிடாமல் பாட்டி அடிக்கடி கூப்பிட்டுக் கையோடு அழைத்துச் செல்கிறவராய் இருந்தார். நிர்மலா மீண்டுவர இரண்டு நிமிடங்கள் கூட ஆவதில்லை.

அவர்களோடு அவன் பேசிப் பேசி இலகுவாய் ஆகியிருந்தான். அவனுக்கு இப்போது எல்லாமும் பிடித்துப்போய்விட்டது. ஆனாலும் அவன் பார்வை அடிக்கடி வாசலுக்குச் சென்று மீண்டது. ரஷ“த் வெங்கடேசனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வந்தால் இவளுக்கும் சற்று ஆசுவாசமாக இருக்கும். அவன் எப்போது வருவான் என்பதை நிர்மலாவிடமே கேட்டுவிட நினைத்தாலும் கேட்க முடியாத சூழலே இருந்தது. மேலும் இந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கிற ரம்மியமான பொழுதுக்கு அவன் ஒரு தடைக்கல்லாகவும் ஆகிடுவானோ என்கிற அச்சமும் ஊடாடியது. கிராமத்தை மேலும் கொஞ்சம் சுற்றிப் பார்த்தால் நன்றாகயிருக்கும் என்று எண்ணி வெளியே வந்தான். எந்தப் பக்கமாய்ப் போவது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில், அவனை எங்கும் வெளியே போக வேண்டாம் என்று நிர்மலா கேட்டுக் கொண்டாள். யாருமில்லை பக்கத்தில். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி “வெங்கடேசன் எப்ப வருவான்?” எனக் கேட்டான். அந்த வார்த்தைகளை அவள் கேட்டாளா என்று அறிந்து கொள்ள முடியாத வகையில் யாரோ ஒருவர் அவளை அழைத்துச் சென்றார்.

பாட்டி திடும்மென்று அவன் முன்னே ஆஜர் ஆனார். “தம்பி உன் பேரு என்னப்பா?” அவன் வாய்திறக்கவே அஞ்சியபோது நிர்மலா நடுவில் வந்து நின்றாள். “பாட்டி வள்ளி அத்தை உன்னைக் கூப்புடுறாங்க” என்றாள். அவ கிடக்கா ஒருத்தி. அவ கூப்புட்டா நான் உடனே போயிறணுமோ? இந்தப் பையன்பேரு என்ன சொன்ன?”

“என்ன பேராயிருந்தா என்ன? பேரா முக்கியம், ஆளுதான் முக்கியம்.”

“என்னவோ ரசீதுங்குறாங்க பேப்பர்ங்குறாங்க. நீயும் உங்க அம்மையும் சேர்ந்து என்கிட்டே பொய்யா பேசுறீங்க? ஊரு கூட திருநெல்வேலி இல்லியாம்!”

“ஆமா! எல்லா ஊரும் நம்ம ஊருதான் பாட்டி. நீ பாட்டுக்குப் போ. எனக்கு இவங்க வேண்டப்பட்டவங்க. அவ்வளவுதான். மத்தது உனக்குத் தேவையில்லை.” என்று பாட்டியைச் சிவந்த முகத்தோடு தள்ளிக்கொண்டு போனாள்.

ரஷ“துக்கு மனம் சுருண்டுவிட்டது. இவள் ஏன் அவனை மட்டும் இங்கே வரவழைத்தாள் என்பதே அவனுக்கு இன்னும் புரிந்த பாடில்லை. இப்போது நடக்கிற நாடகத்துக்கு என்ன பெயர் என்று கூடத் தெரியவில்லை. நேரம் ஆகஆகக் கூட்டம் சேர்ந்தாலும் அது நகரத்து இரைச்சலுக்கு உரிய கூட்டமாக இல்லை. எல்லாமே ஒரு கட்டுக்கோப்பாக இருந்தது. வைபவம் நடக்கும்போதுகூட வெங்கடேசன் தலை தட்டுப்படவில்லை. அவன் வராமல் இந்த வைபவம் நடப்பதை ரஷ“தால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவன் இங்கு வர ஒரு வேளை சாத்தியப்படாமல் போய் விட்டதோ? பரீட்சை. இண்டர்வியூ என்று ஒரேயடியாக அலைந்து கொண்டிருப்பவன். இன்றும் எங்காவது போயிருப்பானோ?

தன்பங்குக்கு ரஷது கவிதையும், அதனோடு 101/- ரூபாயையும் வைத்து ஓர் உறையில் போட்டுக் கொடுத்தான். “கவிஞர் கவிதையைப் பரிசாகக் கொடுக்கிறார்” என்று ஒரு தோழி நேர்முகவர்ணனை செய்தாள். உடனே சிரிப்பு எழுந்தது. “கவிதையைச் சும்மா கொடுத்தா எப்படி? அவரே வாசிக்கட்டும்” என்றாள் இன்னொரு தோழி. ஆமோதிப்புக் குரல்கள் பலமாய் எழுந்தன. நிர்மலாவின் சித்தி கவிதையை எடுத்துக் கையில் கொடுத்தார். அவன் வாசித்தான். எல்லோரும் அவனின் நாதமோங்கிய குரலில் கட்டுண்டனர். சின்னக் கவிதையாக எழுதாமல் பதினைந்து வரிகள் வரை எழுதியிருந்ததால் கூட்டத்தின் தேவையை அந்த வரிகள் நிறைவு செய்தன போல இருந்தது. காந்திமதி ரொம்பவும் வெட்கி மருகினாள். கவிதையை வாசிக்கும்போது எல்லோரையும் ஏறிட்டுப் பார்க்க அவனால் முடியவில்லை. ஆனால் ஓர் அதிரடியாய் எல்லோரையும் மடக்கிவிட எண்ணினான். வாசித்து முடிந்ததும் பெரியவர், சின்னவர், ஆண்கள்-பெண்கள் வித்தியாசமின்றி கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். ரஷ“துக்கு மெய் சிலிர்த்தது. கவிதையின் மதிப்பு என்னவென்பதை அவனே அப்போதுதான் உணர்ந்து கொள்கிறவனாய் ஆனான். நிர்மலாவின் அப்பா-அம்மா உள்ளிட்டு அனைவரும் அவன் கையைப் பற்றியும் தோளைத்தட்டியும் பாராட்டினார்கள். ஜிவ்வென்று வானத்தில் மிதந்தான். அந்த மிதப்பில் அவன் தெரிந்து கொண்டான்-பாட்டி அந்த இடத்திலும் இல்லை என்பதை! அவன் ஊர் புறப்பட்டபோது நிர்மலா சொன்னாள். “எங்கே நீங்க வராமப் போயிடுவீங்களான்னு பயம்மா இருந்தது. நல்லவேளையா வந்தீங்க. இப்போ எல்லாரையும் சந்தோசப் படுத்திட்டுப் போறீங்க.” அவனை வழியனுப்பவே எல்லோரும் கூடிநின்றார்கள். நிர்மலாவின் தம்பி தன் சைக்கிளோடு அவனுக்காகக் காத்திருந்தான். அவன் “கேரியரில்” ஏறி உட்காரவும் எல்லோரின் கைகளும் கிளைகளாகி அசைந்தன. மீண்டும் பலமுறை இங்கே வரமுடியும் என்கிற நம்பிக்கையை அளித்தது.

இன்று இவனைக் காணாமல் தவிக்கிற நண்பர்கள் மனதில் என்னென்னவெல்லாம் தூற்றிக் கொள்கிறார்களோ என்று எண்ணியவனாக வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தான். வீட்டு வாசலின் முன்னே அம்மா நிற்பது தெரிந்தது. ஆனால் கூட நிற்பது வெங்கடேசனோ என்ற ஐயம் எழவும் அவன் மனசு படபடத்தது. தான் ஏன் சென்றோம். தன்னை மட்டும் நிர்மலா அழைத்தது ஏன் என்கிற விடையற்ற கேள்விகளையே அவன் எண்ணிக் குழம்பியவனாய் இருந்தான். ஒருவேளை நிர்மலா வெங்கடேசனையும் அழைத்திருந்தால் தான் எதைப் பேசுவது எப்படி பேசுவது என்கிற பயமும் சூழ்ந்தது. தான் ஏதாவதொன்றைச் சொல்லப்போய் வெங்கடேசன் அதை வேறுவிதமான சூழலில் புரிந்துகொண்டால் என்னென்ன விளைவுகள் உண்டாகுமோ என்கிற பீதி உச்சந்தலையில் ஏறியது.

நன்றி: புதிய காற்று

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *