கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 4,020 
 

‘ஏன் அழைக்கிறார்..?! ‘ – யோசனையுடன் அந்த கட்டிடத்தின் முன் சைக்கிளை நிறுத்திய பதினான்கு வயது சிறுவன் ராமு விடுதியை அன்னாந்து பார்த்தான்.

பத்துமாடிக் கட்டிடம்!

ஆள் முன் பின் பழக்கமில்லாதவர். நேற்று மூன்றாவது மாடி பால்கனியிலிருந்து எதிர் திசையிலுள்ள டீக்கடையைப் பார்த்து அவர்…..

“சோமு! சோமு!!” என்று கத்தினார்.

வியாபார மும்முரம் டீ மாஸ்டர் கவனிக்கவில்லை.

சைக்கிளில் தினசரிகளுடன் வந்து கொண்டிருந்த இவன் காதில் அவர் கூப்பாடு விழுந்தது.

அவர் அழைக்கும் கடை வாசல் முன் சைக்கிளை நிறுத்தி………

“அதோ எதிர்த்த கட்டிடத்தைப் பாருங்கண்ணே. எவரோ ஒருத்தர் உங்களை அழைக்கிறார்!” என்று காட்டி சேதி சொல்லி விட்டு இவன் வழக்கம் போல் வீடுகளுக்குத் தினசரிகள் விநியோகம் செய்ய சென்றான்.

இன்று காலையில்…. அவர் இவனைப் பார்க்க விரும்புவதாக டீக்கடையில் சேதி.

ஏன்…..???….

‘தனக்கும் தினசரி போட சொல்லவா..? இல்லை நேற்று அதிக நேரம் அழைத்தும் எவரும் கவனிக்காமல் தான் மட்டும் கவனித்துச் சொன்னதற்கு நன்றி கூறவா..? ‘- ராமு சிந்தனையுடன் சைக்கிளை பூட்டிவிட்டு விடுதிக்குள் நுழைந்து மாடிப்படிகள் ஏறினான்.

‘மூன்றாவது அடுக்கு அறை எண் 32 ‘- என்று டீக்கடைக்காரர் மறக்காமல் விலாசம் சொன்னது ஞாபகம் இருந்தது. ஐந்து நிமிடத்தில் வாயிலில் நின்றான்.

அறை சாத்தி இருந்தது.

அழைப்பு மணி அழுத்தினான்.

“வர்றேன்..!” குரலைத் தொடர்ந்து கதவு திறந்தது.

அவருக்கு ஆச்சரியம். கண்கள் விரிந்தது.

“அடடே..! வா… வா….”கதவை அகலத் திறந்து இவனை வரவேற்றார்.

ஐம்பதைத் தொடும் தோற்றம். அவருக்குக் காதோரம் நரைத்திருந்தது. கட்டுமஸ்த்தான உடல். பனியனுக்குள் பரந்த மார்பு.

அறையில் அவர் மட்டுமே தங்கி இருப்பதற்கான அறிகுறிகள். தரை முழுக்க தாட்கள் பறந்து இறைந்து கிடந்தது. தரை குப்பைக் கூலங்களாக பெருக்காமல் இருந்தது. கட்டிலில், கொடியில் துணிகள் தாறுமாறாகக் கிடந்தது. மூலை மேசை. மீது தலை கவிழ்ந்திருக்கும் மின் விளக்கு, தாட்கள், பேனா. எதிர் சுவர் அலமாரியில் அடுக்கடுக்காய்ப் புத்தகங்கள்.

அறையில் நுழைந்தவனை…

“உட்கார்!” என்று சொல்லி நாற்காலியை இழுத்துப் போட்டு, காட்டி…. அவர் கட்டிலில் அமர்ந்தார்.

“இருக்கட்டும் சார் . பரவாயில்லே..”இவன் மரியாதை நிமித்தம் அவர் முன் அமர மனமில்லாமல் நின்றான்.

“பரவாயில்லே. உட்கார்.!” அவர் வற்புறுத்தி சொல்ல…. அமர்ந்தான்.

“என் பேர் ராஜன். உன் பேர்..?” பார்த்தார்.

“ராமு சார்!”

“என்ன பண்றே..?”

“தினசரி போடுறேன் சார்.”

“படிக்கல ..? ‘

“படிக்கிறேன்”

“எத்தனாம் வகுப்பு.?”

“எட்டு!”

“இந்த வயசுல படிக்கவும் செய்யறே. உழைக்கவும் செய்யறே இல்லையா..?”

“ஆமாம் சார்”

“முடியுதா…?”

“காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து பத்திரிகை போடும் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குப் போய் சரியா ஒன்பது மணிக்கெல்லாம் பள்ளிக்கூடம் போயிடுவேன் சார்.”

“எந்த பள்ளிக்கூடம்..?”

“வ.உ..சி அரசு உயர்நிலைப் பள்ளி சார்.”

“நல்லா படிப்பியா..?”

“படிப்பேன். வகுப்பில் இரண்டாவது ஆள்!”

“ஓஓ…..”அவர் புருவங்களை உயர்த்தினார்.

“ஏன் இந்த வேலை செய்யுறே……?”

இவனுக்கு, ‘வறுமை ‘- சொல்ல விருப்பமில்லை! – அமைதியாக இருந்தான்.

“வீட்டுல கஷ்டம். வேலை பார்க்கிறே..! இல்லையா..?”

“ஆமாம் சார்.!”

“வீட்டுல அம்மா அப்பா இருக்காங்களா..?”

“இருக்காங்க..”

“அவுங்க சம்பாதிக்கலையா..?”

“அம்மா நோயாளி. அப்பா கூலி தொழிலாளி. கொறைச்ச வருமானம்.”

“உங்க மூணு பேருக்கு அது போதாதா…?”

“அம்மா நோய் செலவுக்கு கட்டுப்படியாகல .”

“அப்படியா…?!”

“அது மட்டுமில்லே.எனக்கு முன்னாடி அஞ்சு அக்காக்கள்.!”

“அப்படியா…?” வியப்பாய்ப் பார்த்தார்.

.”ம்ம்…”

“அப்போ உன் சம்பாதித்து கட்டாயம் இல்லையா..?!”

“ஆமாம் சார்!”

ஒரு நிமிடம் மெளனமாக இருந்த ராஜன்….

“உன் வயசுல நானும் கஷ்டப்பட்டிருக்கேன்.!” குரலைத் தாழ்த்தி மெல்ல சொன்னார்.

துணுக்குற்றுப் பார்த்தான்.

“நம்பமுடியலை இல்லே..?!….”

“ஆமாம் சார்!”

“ஆனா உண்மை. உன் வயசுல என் அம்மா அப்பா செத்துப் போயிட்டாங்க. ஆதரிக்க யாருமில்லாம இந்த பட்டினம் வந்தேன். நாலுநாள் வயித்து சோத்துக்குக் கஷ்டப்பட்டேன். நாலு கடை ஏறி இறங்கி சிரமப்பட்டு ஒரு ஓட்டல்ல மேசை துடைப்பு , எச்சில் இலை எடுக்கும் வேலைக்குச் சேர்ந்தேன். பசி, படுக்கிற இடம் சரியாயிடுச்சு. அப்புறம் என் புத்தியில் பட்ட அளவுக்கு ஒரு கதை எழுதினேன். அது பத்திரிகையில் பிரசுரமாகிச்சு. தொடர்ந்து எழுதினேன். இப்போ நான் பிரபல எழுத்தாளன்.’’ நிறுத்தினார்.

மெளனமாக இருந்தான்

‘’ பேர் ஆழ்வார்க்கடியான். புனைப்பெயர்.!” நிறுத்தினார்.

இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் இவன் பத்திரிகை தொழிலில் இருப்பதால் அவருடைய பிரபலம் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஒரு பெரிய எழுத்தாளர் முன் இருக்கிறோம், பேசுகிறோம் என்று நினைக்கும்போதே பிரமிப்பாய் இருந்தது. அந்த தாக்கத்தில் உடல் நடுங்கியது.

“பயப்படாதே! நானும் மனுசன்தான்!” அவர் சாதாரணமாக சொன்னார்.

ராமு நடுக்கத்தை மறைத்து அப்படியே இருந்தான்..

ராஜன் தொடர்ந்தார்.

“எனக்கு எழுத்தே வாழ்க்கையாச்சு. கலியாணம் முடிக்கல.” என்றவர் கொஞ்சம் நிறுத்தி……

“ராமு! உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!” சொன்னார்.

“ந… நன்றி சார்!”

“ராமு! எனக்கு இப்போ ஒரு கவலை. வாழ வேண்டிய வயசுல எழுத்து வயசைத் தின்னுடுச்சு. அதனால திருமணம் பத்தி யோசிக்கல, நினைக்கல. அதனால் அது பகல் கனவாய்ப் போச்சு. இனி அதை பத்தி பேசி பிரயோசனமில்லே. இப்போ உன்னைப் பார்த்ததுல எனக்கு ஒரு யோசனை.”என்றார்.

“என்ன சார் …?” பார்த்தான்.

“இப்போ என்கிட்டே சொத்து சுகமில்லேன்னாலும் பணம் காசு அதிகமா இருக்கு. எனக்குப் பிறகு இது யாருக்குப் போய் சேரனும்னு கவலையா இருக்கு. அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைக்கலாம். விருப்பமில்லே. வயசான காலத்துல எனக்குக் கண்டிப்பா ஒரு துணை தேவை. உன்னை ஏன் நான் தத்து எடுத்துக்கக் .கூடாது.?” என்று கேட்டு ராஜன் அவனை அடிக்கண்ணால் பார்த்தார்.

ராமுவின் அறிவிற்கு அது ஓரளவு புரிந்தது.

“என் யோசனையில் தப்பில்லேன்னு நினைக்கிறேன். நீயோ கஷ்டப்படும். ஏழை. அஞ்சு பெண் குழந்தைகளுடன் பிறந்தவன். குடும்பத்துல உன் ஒருத்தனைக் குறைச்சு உன் அம்மா அப்பாவுக்குக் கஷ்டத்தைத் தவிர்க்கலாம்ன்னு படுது. உனக்கு நல்ல படிப்பு, வசதியைத் தேடித் தரலாம் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீ என் தத்துப்பிள்ளையாய் ஆனால் அது சாத்தியம்.” மூச்சு விட்டார்.

அருமையான வாய்ப்பு. தானே தேடிவரும் நல்ல வாழ்க்கை.!

.ஆனால்.. ஆனால்…. ஆண் குழந்தை வேண்டும் என்றுதானே அடுக்கடுக்காய் ஐந்து பெண் குழந்தைகளை மூச்சு விடாமல் பெற்று தன்னை அம்மா அப்பா பெற்றார்கள். இதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா..? என்னை இழக்க அவர்களுக்கு எப்படி மனசு வரும். வறுமை, சூழல்… தாங்கள் வலிந்து பெற்றது நன்றாக இருக்கட்டும் என்று மனசு வந்து அவர்கள் சம்மதித்தாலும் அவர்களின் ஆண் பிள்ளை ஆசை என்பது நிராசை, நீறு பூத்த நெருப்பு ஆகும். பெற்றவர்கள் ஆசையை நிராசையாக்கிவிட்டு தான் மட்டும் விலகுவது எப்படி சரி வரும்..? வருவது தான் சரியா..?!… தான் ஒருவன் விலகுவதால் அவர்கள் சுமை .. எப்படி குறையும் ?? தான் குறைந்து அவர்களைப் பெண் பிள்ளைகள் பாரத்தை சுமக்க விடுவது எப்படி சரியாகும்..? தான் வேண்டித்தானே அத்தனை பெண் பிள்ளைகளைப் பெற்றார்கள்..? தான் போய் தப்பி விட்டால்..? அவர்களுக்குச் சுமை குறைய வாய்ப்பே இல்லை. தான் இருந்தாலாவது….அவர்கள் சுமையில் இப்போதுபோல் பங்கெடுத்து குறைக்கலாம், உதவலாம். – என்று நினைக்கும்போதே….

“யோசனை வேணாம் ராமு. உன் அம்மா, அப்பா என்ன சொல்லுவாங்களோ என்கிற யோசனை வேணாம். உனக்கு விருப்பம்ன்னா சொல்லு உன் அம்மா, அப்பாவை நான் சந்திச்சு, சமாதானப்படுத்தி உன்னை சட்டப்படி தத்தெடுத்துக்கிறேன்.”என்றார் ராஜன்.

இவன் பதில் சொல்லாமல் இருந்தான்.

“குடும்ப பாசம், அம்மா, அப்பா, சகோதரிகள் அன்பு, பாசங்களை விட்டு விலக கொஞ்சம் கஷ்டமா இருக்கும். மனம் இருந்தால் மார்க்கமுண்டு சமாளிச்சுக்கலாம். ஒரேயடியா வெட்டி வராம போய் வர இருந்து குடும்பத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் விலகிக்கலாம்.”

அவர் சரியாகவே சொன்னார். இவன்தான் பேசாமல் இருந்தான்.

“ராமு! நீ சொன்னால் உன் குடும்பத்துக்கே நான் உதவி செய்ய தயார். நீ என் தத்துப்பிள்ளையானபிறகு உங்களை விட்டால் எனக்கு வேற யார் உறவு..? தயவு செய்து மறுக்காதே. வயசான காலத்தில் எனக்கு ஒண்ட நிழல் தேவை. அது நீயாய் இருந்தால் நல்லா இருக்கும் என்கிறது. என் எண்ணம். எனக்கு திருமண ஆசை சுத்தமாய் விலகி தனிமை பயம் வந்தாச்சு ராமு. .அனாதையாய் இருக்கிற நான் நாதியத்து செத்துடுவேனேன்னு பயமாய் இருக்கு.!” சொல்லி ராஜன் சட்டென்று கலங்கி விம்மினார்.

தனிமை வாட்டல். சுகத்திற்கு ஏங்காமல் அன்பிற்காக ஏங்கும் உயிர்! – ராமுவிற்கு அவரைப் பார்க்கப் பரிதாமாக இருந்தது. அவர் மேல் பச்சாதாபம் பிறந்தது.

‘என்னைத் தத்தெடுப்பதற்குப் பதில் இவர் பெண் பிள்ளைகளில் ஒன்றை தத்தெடுத்து இவர் ஆசையையும் பூர்த்தி செய்து அம்மா அப்பா சிரமத்தைக் குறைத்தாலென்ன..?! நினைத்தவனுக்குள் பளிச்சென்று மின்னல்.

“சார்! உங்க நிலைமை எனக்குப் புரியுது. அதை நிவர்த்தி செய்ய ஒரு மாற்று யோசனையும் என் நெஞ்சில் தோணுது… சொல்லலாமா..? கேட்டான்.

“சொல்லு..?” பார்த்தார்.

“நான் உங்களுக்குத் தத்தாய் வந்து உங்க தாக்கம், தாகத்தைத் தீர்க்கிறதை விட. நீங்களே எங்க வீட்டுக்குத் தத்தாய் வந்தால் நம்ம எல்லோருடைய குறை நிறைகளும் சரியாகும்ன்னு .என் சிற்றறிவுக்குப் படுது சரியா…?”

“என்னப்பா சொல்றே..?” ராஜன் துணுக்குற்றுப் பார்த்தார்.

“ஆமாம் சார்! நீங்க என் வீட்டுக்குத் தத்தாய், தலைப்பிள்ளையாய் வந்தால் உங்களுக்கு…… நான் உள்பட அம்மா. அப்பா, தம்பி, தங்கச்சிங்க கிடைப்பாங்க. அவுங்க அன்பு தெரியும், பாசம் கிடைக்கும். குடும்பம்ன்னா என்ன தெரியும். என் ஒருத்தனைத் தத்தெடுத்து ஒரு மரநிழல்ல ஒதுங்க தவிச்ச உங்களுக்கு ஒரு தோப்பே கிடைக்கிறது எவ்வளவு சந்தோசம். ஒரு மலையில் பிறந்த கல் மிதிக்கிற படியாகவும், வணங்கிற சிலையும் ஆகும் பேதம் ஆகாமல் நீங்க நாம எல்லாரும் வணங்கும் கோயிலாகமில்லையா..?” சொல்லி நிறுத்தினான்.

‘தனக்குத் தோன்றாத எண்ணம், செயல் இவனுக்கு…எப்படி இப்படி தோன்றியது…? ஒருவேளை….. தான்பிறந்து இருந்து வளரும் சூழ்நிலையா..? இல்லை புத்திசாலித்தனமா..? எப்படி இப்படி ?!!…’ இந்த நினைப்பே அவருக்கு மலைப்பாகி மனம் பரவசமாக….

“இதுதான் சரி ராமு!” என்று அவனை தாவி அணைத்து இறுக்கினார் ராஜன்.. என்கிற பிரபல எழுத்தாளர் ஆழ்வார்க்கடியான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *