காலை ஒன்பது மணி.
அந்தத் தனியார் அலுவலகம் அப்போதுதான் மெல்ல இயங்க ஆரம்பித்திருந்தது.
அரக்கப் பரக்க உள்ளே நுழைந்த பிரேமா, மாலதியிடம் சென்று, “ஏய் மாலா…உன்னோட சங்கருக்கு ஜி.எச். முன்னால ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சு. லாரிக்கு அடியில சங்கர்னு தெரிஞ்சதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டிருச்சு.. அவரை ஜி.எச்-லதான் அட்மிட் பண்ணியிருப்பாங்க” என்றாள்.
மாலதி பரபரப்பானாள்.
உடம்பு வியர்த்து மனம் கலக்கமுற மானேஜர் அறைக்குச் சென்று விடுப்பு எடுத்தாள். வெளியே ஓடி வந்து கிடைத்த ஆட்டோவில் நுழைந்து அவசரமாக ஜி.எச்.போகச் சொன்னாள்.
சங்கருக்கும் அவளுக்கும் எட்டு மாதப் பழக்கம். அடுத்த மாதம் அவர்கள் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருந்தார்கள். ஆட்டோ சிக்னலுக்காக நின்றது. மாலதி பொறுமையிழந்தாள்.
‘சங்கர், நீங்க இல்லாத வாழ்க்கையை என்னால கற்பனை செய்யக்கூட முடியாது. நல்லவங்களைத்தான் கடவுள் அதிகம் சோதிக்கிறார்..” – புலம்பினாள்.
‘ஏழுமலையானே, எங்களை நல்லபடியா வாழவிடு… திருமணம் முடிஞ்ச கையோட உனக்கு நான் அங்கப் பிரதட்சணம் செய்யறேன் !’ – கண்கள் கலங்க வேண்டினாள்.
சிக்னல் கிடைத்து பத்து நிமிடப் பயணத்தில் ஆட்டோ ஜி.எச்.வாசலில் நின்றதும் இருபது ரூபாய் நோட்டை டிரைவர் கையில் திணித்துவிட்டு உள்ளே ஓடினாள்.
காஷூவாலிட்டியில் விசாரித்து மாடிப் படிகளில் தாவியேறி சங்கர் அட்மிட் ஆகியிருந்த அறையை அடைந்தாள். முகமெல்லாம் ஏராளமான கட்டுகளுடன் சங்கர் மயக்க நிலையில் இருந்தான்.
நர்ஸ் ஒருத்தி இவளிடம், “பின் மண்டையில் பெரிசா அடிபட்டிருக்கு… மத்தபடி ஆபத்து ஒண்ணுமில்லை.” என்றாள்.
சற்று ஆசுவாசமடைந்த மாலதி தன் கைப்பையைத் திறந்து நான்காக மடிக்கப் பட்டிருந்த அன்றைய தினசரியை எடுத்து, அவனுக்கு விசிறிக் கொண்டிருக்கும்போது புயலென உள்ளே நுழைந்தாள் ஒரு பெண்.
சங்கரைப் பார்த்து, “என்னங்க என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிடாதீங்க” என்று தன் தாலியைப் பிடித்தபடி பெரிதாக அழ ஆரம்பித்தாள்.
அடுத்த கணம் அருகேயிருந்த மாலதியிடம், “நீங்க என் புருஷனோட வேலை செய்யறீங்களா?” என்றதும் மாலதி அதிர்ந்து போய்க் கண்களில் நீர் முட்ட பதிலேதும் பேச முடியாமல் எச்சில்கூட்டி விழுங்கினாள்.
– ஆனந்த விகடன் (6-6-1993)