சொகுசுக்காரர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2023
பார்வையிட்டோர்: 1,345 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேகமாக வந்துகொண்டிருந்த அந்தப் படகுக் கார், திடுதிப்பென்று தன் குடிசை முன்னால் நிற்பதைப் பார்த்த பொன்னாத்தாவுக்குக் கையும் ஒடவில்லை, காலும் ஒடவில்லை. அதுமட்டும் அல்லாமல், “ஏய். பொன்னாத்தா…! பொன்னாத்தா!” என்று பழக்கப்பட்ட குரல் ஒன்று காருக்குள் இருந்து அழைப்பதும் கேட்டது. வயிற்றுடன் அணைத்தவாறு வைத்திருந்த நான்கு வயசுப் பையனை, ஒரு சாக்கில் கிடத்தப்போனவள், அப்படிச் செய்ய மனம் இல்லாமல் பையனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு காருக்கருகே வந்தாள். முன்பக்கத்து இருக்கையில் பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவம் அமர்ந்திருந்தார்.

ஆசாமி காரின் கதவைத் திறக்காமல் அவளைப் பார்த்தார். ஆனால், அவர் அருகில் இருந்த பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தனும், பின்னால் உட்கார்ந்திருந்த சூட், கோட், டை போட்ட இரண்டு ஆண்களும், அழகிய இளமங்கை ஒருத்தியும் காரிலிருந்து வெளியே வந்தார்கள், பரமசிவம் அசைந்து கொடுத்காததால், பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தன் டிரைவர் பக்கத்துக் கதவு வழியாக வெளியே வந்தார்.

அவர்கள் அப்படி இறங்கியதற்குச் சலுகை காட்டுவது போல், உறுப்பினர் பரமசிவம் காரின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு உட்காரப் போனார். அவரால் திறக்க முடியாமல் போகவே, டிரைவர் வந்து திறந்தார்.

ஆனாலும், காரிலிருந்து இறங்க விரும்பாதவராய், ‘ஏய் பொன்னாத்தா, உனக்கு நல்ல காலம் பிறந்திட்டுது. இவங்கெல்லாம் யாருன்னு தெரியுமா?” என்று கேட்டார்.

பஞ்சாயத்துத் தலைவரைப் பார்த்தாலே பரபரப்படையும் அந்தக் குடிசைப் பகுதி மக்கள், இப்போது தலைவரையும் தலைவர்கள் போல் காட்சியளித்த இரண்டு பெரிய மனிதர்களையும், அந்தப் பெண்ணையும், பளபளப்பான அந்தக் காரையும் பார்த்ததும் எல்லாப் பையன்களும் வந்துவிட்டார்கள்.

“பொன்னாத்தா, ஒன்னைத்தான். குழந்தையை இறக்கிக் கீழே விடு’ என்று பரமசிவம் சொல்லுகையில், வந்த பிரமுகர்களில் இளைஞரான ஒருவர், கோட்டுப் பைக்குள் ஒளித்து வைத்திருந்த ஸ்டெதாஸ்கோப்பை எடுத்துக்கொண்டு, பொன்னாத்தா தோளில் கிடந்த அந்தப் பையனை, பலவந்தமாகக் கீழே இறக்கப் போனார்.

பொன்னாத்தா, அந்த ஸ்டெதாஸ்கோப்பை, எமனின் பாசக் கயிறு மாதிரி நினைத்துப் பயத்துடன் ஒரடி பின்வாங்கினாள். பளபளப்பான அந்தக் காரையும், தன் குடிசையையும் மாறி மாறிப் பார்த்தாள். அவள் குடிசையின் கூரையில் மேற்பகுதியில் உள்ள ஒட்டை வழியாக வரும் சூரியன் கதிர் மின்னுவதுபோல், அந்தக்காரின் மேற்பகுதி மின்னிக்கொண்டிருந்தது. சாலையை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தக் காரைப் பார்க்கப் பார்க்க, அவளுக்குக் கணவனின் நினைவு வாட்டியதோடு, கண்ணிரும் வந்தது. முன்றானையால் கண்ணைத் துடைத்துக்கொண்டபோது, பரமசிவம் அதட்டினார்.

“ஏய், பொன்னாத்தா, ஒனக்கு நல்ல காலம் பொறந்திடுத்துன்னு சொல்றேன். நீ பாட்டுக்கு அழுதால் எப்படி?”

“அழலே மாமா தூசி விழுந்துட்டுது, கண்ணைத் துடைச்சேன்.” “சரி, இவங்கெல்லாம் யார் தெரியுமா? உனக்கு எப்படித் தெரியும்? இவரு சென்னையிலேயே பெரிய மனுஷர். பத்து வீடுங்களும் ரெண்டு கம்பெனியும் இருக்கு. இவரு டாக்டர். ஏழைங்களுக்கு மட்டும் வைத்தியம் செய்யறதைச் சேவையா நினைக்கிற பணக்காரத் தம்பி. இந்த அம்மா வக்கீல்; இவங்க குடும்பமே கோர்ட் குடும்பந்தான்.”

பொன்னாத்தா, அந்த அறிமுகத்தை அங்கீகரிப்பவள் போல், லேசாகச் சிரித்துக்கொண்டே நின்ற அந்த இளமங்கையையும், அவள் லிப்ஸ்டிக்கையும், சும்மாட்டுக் கொண்டையையும், நீண்டு வளர்ந்து பாலிஷ் பூசிய நகங்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக அவள் உடம்பு மின்னிய மினுமினுப்பையும், மிரள மிரளப் பார்த்துக் கொண்டே என்னை வந்து ஏன் இந்த மாமா பாடாய்ப் படுத்துகிறார்? என்று நினைத்துக் கொண்டே நின்றாள். பரமசிவம் விளக்கினார்.

“எதுக்குச் சொல்றேன்னா, இப்பேர்ப்பட்ட பெரிய ஆட்கள்; சுவீகாரம் எடுக்க வந்திருக்காங்க, புரியதா?”

பொன்னாத்தாவுக்குப் புரிந்தது. அவள் பையனைத் தத்து எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள். முதலில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பிள்ளையார் மாதிரி வயிறு தள்ளிக் கொண்டும், நெஞ்செலும்பு துருத்திக் கொண்டும், விலாவெலும்புகள் புடைத்துக்கொண்டும், குச்சிக் கால் கைகளுடனும், மாந்தம் பிடித்து, இந்த நான்கு வயதிலும் நான்கு கால்களோடு நடக்க வேண்டிய நிலையில் உள்ள தன் ஒரே மகன் முனுசாமியை, அவர்கள் வளர்த்தால் அவனும் பெரிய மனிதனாகி இதேபோல ஒருநாள் காரில் தன்னைப் பார்க்க வருவான் என்று நினைத்து மகிழ்ந்தது தாயுள்ளம். ஆனால் அடுத்த கணம், இருக்கிற ஒரே பிள்ளையையும் கொடுத்துவிட்டு வாழ முடியாது என்று நினைத்தவள்போல் திடுக்கிட்டாள்.

“ஒங்க பெரிய மனசை நினைக்கையில சந்தோசமாய் இருக்கு மாமா. ஆனால் என் பிள்ளையைச் சுவீகாரமாய்க் கொடுக்க முடியாது.”

‘ஏய், உனக்கு அறிவிருக்கா? ஒன்னைவிட மோசமா இருக்கிறான் அந்தப் பய. ஒரு நாளைக்குப் பாத்தா மூணு நாளைக்குச் சாப்பிட முடியாது. இவனைப் போய் யாரு சுவீகாரம் எடுக்கப் போறது? சரியான பைத்தியக்காரியாய் இருக்கிறியே!”

“என் பிள்ளை எப்படியும் இருந்துட்டுப் போவுது. உம்ம ஜோலியைப் பார்த்துட்டுப் போங்க.”

பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தன் குறுக்கே புகுந்தார். அரசியலில் அவருக்கு நல்ல அநுபவம்.

“என்ன பரமசிவம், அவரவர் பிள்ளை அவரவருக்கு உசத்தி. வந்த வேலையைப் பாக்கிறத விட்டுப்புட்டு. இது எதுக்கு? நான் சொல்றேம்மா. இவங்கெல்லாம் சென்னையிலே ஒரு சங்கம் வச்சு நடத்துறாங்க. நம்ம கிராமத்தையே தத்து எடுத்து எல்லா வசதியும் செய்து தரப்போறாங்க. அதில் ஒண்ணுதான் பிள்ளையைப் பேணுவோம்’ என்கிற திட்டம். ஒன் பிள்ளைய சோதிச்சுப் பாத்து வேண்டிய மருந்து கொடுப்பாங்க, அவ்வளவு தான்.”

“என் பையனுக்கு அடிக்கடி வெட்டு வருதுங்க ஐயா. வயித்துல மாந்தம் இருந்தா வெட்டு வருமுன்னு சொல்லி நாட்டு வைத்தியரு தங்கவேலு கஸ்தூரி மாத்திரையையும் அயச் செந்தூரத்தையும் கொடுத்துக்கிட்டு வந்தாரு. இப்போ அவரோட கைராசியாலேயும் ஒங்க புண்ணியத்தாலேயும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுகமாயிட்டு வருது. அதனால இப்போ வேண்டாம்.”

அவள் பையனைப் பார்த்து, ‘இதுதான் சரி’ என்று தங்களுக்குள்ளே பேசித் திருப்திப் பட்டுக்கொண்ட மூன்று டேர்களும் முகங்களைச் சுழித்தார்கள். மூவரில் வயதான தொந்திக்காரர், எத்தனை அறியாமை?” என்றார். உருவிய ஸ்டெதாஸ்கோப்பைக் கோட்டுக்குள் எப்படிப் போடுவது என்று வாலிப டாக்டர் யோசித்துக் கொண்டிருந்தார்.

இளமங்கை உடம்பு குலுங்காமல், அதே நேரத்தில் உதட்டை ஒய்யாரமாகக் கடித்துக்கொண்டே பொன்னாத்தாவின் அருகில் வந்தாள். சேலையில் உள்ள தூசி, அந்தப் பட்டணத்து மங்கைமேல் பட்டுவிடும் என்று பயந்து, பொன்னாத்தா விலகி விலகிப் போனாள். இளமங்கை விடுவதாக இல்லை. பொன்னாத்தாவின் கையைப் பிடித்தாள். பிறகு அவளோடு ஒட்டிக்கொண்டு கிடந்த பையனின் முதுகைத் தடவி விட்டதும், பயல் தோளில் சாய்ந்திருந்த தலையைத் தூக்கி, அவளைப் பார்த்தான். அவன் கன்னத்தை லேசாகக் கிள்ளிவிட்டுப் பிறகு அந்தப் பெண் இடுப்பில் செருகியிருந்த வெள்ளைக் கைக்குட்டையை எடுத்து, கைகளைச் சொகுசாகத் துடைத்துக்கொண்டாள். பொன்னாத்தா ஒன்றும் புரியாமல் விழித்தாள். இளமங்கை நளினமாகப் பேசினாள்.

“ஏம்மா, உன்னைப் பாத்தா புத்திசாலியாத் தெரியுது. வைட்டமின் ‘ளலி இல்லாததால் குழந்தைக்கு, பெரிபெரி என்ற நோய் வந்திருக்கு. புரதமும் போதலை. கார்டினால் மாத்திரைதான் கொடுக்கணும். சரிதானே டாக்டர்?”

சரிதான்.” “அதனாலே நான் என்ன சொல்றேன்னு கேளும்மா. நாட்டு மருந்துன்னு ஏதாவது குடுத்தியானால் ஆபத்தாயிடும். குழந்தை பிழைக்கணும்னா டாக்டர் சொல்றதைக் கேக்கணும். என்ன அம்மா சொல்றே?”

இளமங்கை பேசியதை, இதர இரண்டு பிரமுகர்களும் திருப்தியுடன் அங்கீகரித்தனர். பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவம், தலையைப் பிய்த்துக் கொண்டார். பொன்னாத்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை. –

“மாமா, அம்மா என்ன சொல்றாங்க?” உறுப்பினர் பரமசிவம் உள்ளுறக் கோபப்பட்டார். ஆனால் பஞ்சாயத்துத் தலைவர் மட்டும் ஏதோ புரிந்து கொண்டு, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்.

“ஒன் பையனுக்கு இவங்க இலவசமாய் வைத்தியம் பார்க்கிறேன்னு சொல்றாங்க. நீ என்ன சொல்றே?”

“நாட்டு மருந்தை ஏற்கனவே கொடுத்துட்டு வர்றேன். வைத்தியரைக் கேட்டுக்கிட்டு…”

“யாரு வைத்தியரு?” “தங்கவேலுத் தாத்தா.” “அந்த ஆளு வேளா வேளைக்குக் கருவாட்டுல சோறு கேப்பானே? உனக்குக் கொடுத்துக் கட்டுப்படியாகுதா?

“கட்டுப்படியா கலதான். ஆனால் அதை நெனைச்சால் பிள்ளைக்குச் சுகமாகாதே! ரெண்டு ருபாயோட, கருவாடும் பொறிச்சுச் சுடச்சுடச் சோறு போட்டுக் கொடுக்க வேண்டியிருக்கு. என் தலைவிதி:

இந்தச் சமயத்தில் இளமங்கை பொன்னாத்தாவின் அருகில் மேலும் நெருங்கிக் கொண்டு பேசினாள்.

“ஏம்மா, நீ இன்னும் புரிஞ்சுக்கலேன்னு நினைக்கிறேன். சாப்பிட்டுவிட்டுச் சாயந்தரமா வர்றோம். யோசனை பண்ணி வை. அலோபதி மருத்துவம் தேவையான்னு யோசி. சரிதானே, மிஸ்டர் வில்லன்?”

“சரிதான்.”

பொன்னாத்தாவின் பயல் முனுசாமி, அந்தப் பெண்ணையே உற்றுப் பார்த்தான். தலையில் முடியில்லாமலும், இருக்கிற முடியில் எண்ணெய் இல்லாமலும் அலுத்துக் களைத்துப் போன பரட்டைத் தலைகளைப் பார்த்துப் பழக்கப்பட்டுப் போன அவன் கண்களுக்கு, அந்தச் சும்மாட்டுக் கொண்டையும் சிவப்புச் சாயமும் பசுமையாகத் தெரிந்தன.

அந்த அழகி, தன் கைப்பையைத் திறந்து, ஒரு கேக்கையும், நாலைந்து சாக் லெட்டுகளையும் எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, அந்தப் பையனின் கண்களுக்கெதிரே காட்டிக் கொண்டே, பையா இது என்ன? சொல்லு, பார்க்கலாம்” என்றாள்.

பையன் முதல் முறையாகப் பேசினான். “திங்கறது. அம்மா, வாங்கித் தா அம்மா!” “சாக்லெட், கேக் என்று சொல்லாமல், அந்தப் பையன் திங்கறது. என்று சொன்னதில், அவளுக்கு ஏமாற்றமே. அதற்கு அறிகுறியாக, உதடுகளை லேசாகப் பிதுக்கிக் கொண்டே, கேக்கையும் சாக்லெட்டையும் அந்தப் பையனிடம் நீட்டப் போனவள், கையைப் பின்னால் இழுத்துக் கொண்டாள். அதே வேகத்தில், இளைய டாக்டர் பார்த்து, அர்த்த புஷ்டியுடன் சிரித்தான். அதை அவள் புரிந்துகொள்ளவில்லை. பையனும் புரிந்து கொள்ளாமல் குடு, குடு என்று சொல்லிக்கொண்டே, வாயெல்லாம் நீராகக் கையைக் காலை ஆட்டினான்.

அவள் கொடுக்காமல், டாக்டரை எரித்து விடுபவள் போல் பார்த்தாள். அவர் பேசாமல் இருந்ததால், “டாக்டர், உங்க காமிரா எங்கே?’ என்று கேட்டாள்.

டாக்டர், ஏதோ தவறு செய்துவிட்டவர் போல் துடித்துக்கொண்டே, “மன்னிக்கணும்” என்று கூறிக் கொண்டே, காரின் பின்னாலிருந்து காமிராவை எடுத்தார்.

அவள், இப்போது கேக்கையும் சாக்லெட்டையும் பையனிடம் நீட்டினாள். காமிராவில் டக் என்ற சத்தம் கேட்டபோது, பையன் அதை வாங்கிக் கொண்டான்.

டாக்டர், இரண்டு மாத்திரைகளை நீட்டி, “வெட்டு வரும்போது இதைக் கொடு” என்று சொன்னார். பொன்னாத்தா மரியாதைக்காக அதை வாங்கிக் கொண்டாள். இது முடிந்ததும், அந்த மங்கையும் மற்றவர்களும் காரின் பின் இருக்கையில் அமர, பஞ்சாயத்துத் தலைவர், உட்கார்ந்திருந்த உறுப்பினருடன் ஒட்டிக்கொள்ள, அந்தக் கார் பறந்தது. “மாலையில் வருகிறோம். யோசனை பண்ணிச் சொல்லு” என்று மங்கை சொல்லிக்கொண்டே போனாள்.

பொன்னாத்தா, அந்தக் கார் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு கணவனை நினைத்தவள் போல் கேவிக்கேவி அழுதாள். அவளைச் சூழ்ந்திருந்த பெண்கள், “ஏம்மா அழுவுறே?” என்று ஆதரவோடு கேட்டார்கள்.

போன வருஷம் இதே மாதிரி கார்லதான் அவரு சோழாவரம் பக்கம் அடிபட்டுச் செத்தாரு.”

பொன்னாத்தாவுக்கு இருபத்தெட்டு வயசிருக்கும். வறுமை, அவள் வனப்பின் வளத்தைப் பாதித்திருந்தாலும், அதை வறுமையாக்கவில்லை. படர்ந்த முகத்தில் எதையுமே அலட்டிக் கொள்ளாமல் நிதானமாகப் பார்க்கும் கண்கள். அழுத்தமான மூக்கு.

சைக்கிளில் அரிசி மூட்டையை ஏற்றிக்கொண்டு வந்த அவள் கணவனைச் சென்ற ஆண்டு ஒரு பணக்கார மனிதரின் கார் அடித்துக் கொன்றுவிட்டது. இவ்வளவுக்கும் அவன் சாலையின் ஒரத்தில்தான் சைக்கிளை ஒட்டிக்கொண்டு வந்தானாம். ஆந்திராவில் குடித்துவிட்டு வந்த அந்தக் கார்க்காரர்கள், மயக்க நிலையில் வண்டி ஒட்டி, அவள் கணவனை நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்திவிட்டார்கள். வழக்குப் போட்டிருந்தால், ஆயிரக் கணக்கில் நஷ்ட ஈடு கிடைத்திருக்கும். அவள் பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவ மாமாவிடம் கேட்டாள். அவரோ, புருஷன் செத்ததை விடப் பணம் கிடைக்கிலங்கற கவலைதான் பெரிசா இருக்கு போல என்று சொல்லி, தம் பொறுப்பைத் தட்டிக் கழித்தார். அரசின் சார்பில் வழக்குப் போட்டிருக்கலாம். ஆனால் வழக்குப் போட வேண்டியவர்களின் கைகளில் எதுவோ திணிக்கப்பட்டதால், அவர்கள் அந்தக் கையின் கனம் தாங்க முடியாமல், வழக்குக்காக எதையும் எழுதவில்லையாம்.

பொன்னாத்தாவுக்கு இந்தக் கிராமத்தில் எந்தவிதமான பிடிப்பும் இல்லைதான். இருந்தாலும் பிறந்த ஊருக்கு அவள் போக விரும்பவில்லை. கல்யாணம் ஆவதற்கு முன்னால் ஒரு குடும்பச் சண்டையில், நீ கல்யாணமாகி ஒரு வருவடித்துல தாலி அறுக்கலேன்னா நான் ராமக்கா இல்லே ன்னு அவள் அண்ணிக்காரி சொன்னது மாதிரியே நடந்துவிட்டதால், அவள் கண்ணில் விழிக்க இவள் விரும்பவில்லை. ஏதோ ஒருவித வைராக்கியத்தால், இந்த ஊரிலேயே தங்கிக் கூலிவேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள்.

மாலைப் போது மலர்ந்தது.

பொன்னாத்தாவின் பையன் முக்கிக் கொண்டிருந்தான். வயிறு உப்பிப் போயிருந்தது. கண்கள் நிலை குத்தி நின்றன. அவன் மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது. நாட்டு மருந்தைக் கொடுக்கலாமா, புது மனிதர்கள் கொடுத்த மருந்தைக் கொடுக்கலாமா என்று யோசித்தாள் பொன்னாத்தா, பிறகு கண்ணிர் மல்க, அவசர அவசரமாக மகனைக் கோணியில் கிடத்திவிட்டு, மகனின் தொண்டையைத் தடவிவிட்டாள். பொங்கி வந்த கேவலை அடக்கிக் கொண்டாள். அந்தச் சமயத்தில், நாட்டு வைத்தியர் தங்கவேலு, “என்ன பொன்னாத்தா? துண்டுக் கருவாடு வைக்கச் சொன்னேனே, வச்சியா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.

பொன்னாத்தாவுக்குக் கண்மண் தெரியாத கோபம். கிழவன், துண்டுக் கருவாடு கேக்கறதுல குறைச்சல் இல்ல. ஆனால் ஒரு வாரமாய் மருந்து கொடுத்தும், இன்னும் பிள்ளைக்குச் சுகமாகல. என்ன மருந்தோ மாயமோ? இந்த லட்சணத்துல கருவாடு, அதுவும் துண்டுக் கருவாடு வேணுமாம். ஆசையைப் பாரு!

“என்ன பொன்னாத்தா, துண்டுக் கருவாடு கிடைக்கலியா?” “பிள்ள கண்டதுண்டமா வெட்டிக்கிட்டு கிடக்கான். ஒமக்குத் துண்டுக் கருவாடு வேணுமாக்கும் கருவாட்டுக்காக மருந்து கொடுக்கிறீரா? இல்ல, மருந்துக்காகக் கருவாடு கேக்கிறீரா? நீரு செய்யறது நல்லா இல்லே தாத்தா.”

வைத்தியர், அவளை ஒரு மாதிரி பார்த்தார். பிறகு சமாளித்துக்கொண்டு, “பிள்ளய எடு பார்க்கலாம்” என்றார்.

“நான் டாக்டர்கிட்ட குடுக்கப் போறேன்.” “மகராஜியாச் செய். உன் இஷ்டம். நான் வரேன்.” நாட்டு வைத்தியர், அவளைத் திரும்பிப் பார்க்காமலே போனார். ‘இப்படிப் பேசியிருக்கக் கூடாது’ என்று பொன்னாத்தாவும் வருந்தினாள். சே சே இருந்தாலும் இந்தக் கிழவனுக்கு இவ்வளவு ஆசை கூடாது. எவ்வளவு பெரிய மனுஷன்! அந்த அம்மா எவ்வளவு பெரிய மகராசி எவ்வளவு அன்பா மருந்து தரேன்னு சொல்றாக, இந்த ஆளு என்னடான்னா, கருவாட்டுக் குழம்பு கேக்கறான்!

இதற்குள், சென்னைச் சங்கக்காரர்கள் காரில் வந்து இறங்கினார்கள். அவர்களைப் பார்த்ததும், பொன்னாத்தா தலையில் அடித்துக்கொண்டே அழுதாள். டாக்டர் குழந்தையைப் பார்த்தார். ஒரு கார்டினால் மாத்திரையை நுணுக்கிப் பையனின் வாயில் ஊற்றினார். பிறகு, பத்துப் பதினைந்து மாத்திரைகளை எடுத்துப் பொன்னாத்தாவிடம் கொடுத்துவிட்டு, “தினம் மூணு மாத்திரை, வேளைக்கு ஒண்னு கொடு, சரியாயிடும். மீதி மருந்துகளை நாலுநாள் கழிச்சுத் தாரேன். அவனுக்கு முட்டை வாங்கிக் கொடு; ஹார்லிக்ஸ் கொடுக்கனும், ஆப்பிளும் அவசியம்” என்றார்.

இளமங்கை, அவளை ஆதரவோடு பார்த்தாள்.

“கவலைப்படாதே, சரியாயிடும்.”

“திறமை வாய்ந்த வக்கீல் நீங்க, உமா. அந்தப் பொம்பளையை ஒத்துக்க வைச்சுட்டிங்களே’ என்றார் டாக்டர்.

வக்கீலா, இல்லை. இல்லை. தேர்ந்த சமூக சேவகி என்றார் தொந்திக்காரர். டாக்டரிடம் குமாரி உமா அதிகமாய்ப் பேசுவதில், அவருக்கு ஆதங்கம்.

மூன்று பேரும் ஒருவர் கையை ஒருவர் குலுக்கிக்கொண்டார்கள். பஞ்சாயத்துத் தலைவரும் உறுப்பினரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

கார் பறந்தது.

பொன்னாத்தா மகனைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். முட்டைக்கும், ஹார்லிக்ஸுக்கும் எங்கே போவது? என்று புரியாமல் குமைந்தாள். இன்னும் நான்கைந்து நாளில், அவர்கள் காசு கொடுப்பார்கள் என்ற நினைப்பு, அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை. குட்டாம்பட்டியைச் சேர்ந்த பொன்னாத்தாவின் குக்கிராமம் காலையில் இருந்தே களைகட்டியிருந்தது. மாலையில் மாபெரும் விழா. சென்னையிலிருந்து இதற்கென்றே ஒரு பிரபலத் தலைவர் வந்தார். அவரை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் பலமாகச் செய்யப்பட்டன.

களை எடுக்கப் போகப் புறப்பட்ட பொன்னாத்தாவை, பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவம் வழிமறித்தார்.

“பொன்னாத்தா, எங்கேயும் போயிடாதே. ஒன் மவனுக்குப் பேரும் புகழும் வரப் போவுது. யார் கண்டா. அவனை, அந்தக் கிளப்காரங்களே படிக்க வைக்கலாம்? இன்னைக்கு வயக்காட்டுக்குப் போகவேண்டாம்.”

அலங்காரப் பந்தலில், ஒலிபெருக்கி முழங்கியது. அழகான நாற்காலிகள் பின்னால் இருக்க, முன்னால் சோபாலெட் ஒன்று, கம்பீரத்துடன் காட்சி அளித்தது. குறைந்தது இருபத்தைந்து கார்கள் அங்கே வந்திருந்தன. உதட்டுச் சாய மங்கைகள், டெர்லின் பேர்வழிகள் என்று ஒரே கூட்டம். பொன்னாத்தாவும் மகனுடன் அங்கே தயாராக இருந்தாள்.

திடீரென்று வாணங்கள் வெடித்தன. மேளங்கள் ஒலித்தன. சென்னையிலிருந்து அந்தப் பிரபலத் தலைவர் வந்தார். மாலை அணிந்துகொண்டு பெருமதிப்பிற்குரிய அவர் மேடையில் அமர்ந்த.ர். சென்னைச் சங்கத்தின் பொதுச் செயலாளரான இளமங்கை உமா, ஆங்கிலத்தில் வரவேற்புரை நிகழ்த்தினாள். ஏகப்பட்ட கூட்டம்; கூட்டத்தில் கிராமவாசிகள் இருந்தார்களோ இல்லையோ, நாகரிக இளைஞர்களும் யுவதிகளும் இருந்தார்கள்.

சங்கத்தின் தலைவர் மிஸ்டர் வில்லன், தலைமையுரை நிகழ்த் துகையில், தம் கிளப் எத்தனை கிராமங்களை எப்படியெல்லாம் சீர்திருத்தம் செய்திருக்கிறது என்ற அறிக்கை ஒன்றை ஆங்கிலத்தில் படித்தார். பிறகு, அந்தக் குக்கிராமத்தைச் சுவீகாரம் எடுத்திருக்கும் நோக்கத்தை எடுத்துரைத்தார். அறியாமையிலும், மூட நம்பிக்கையிலும் ஆழ்ந்திருக்கும் கிராமவாசிகளை விமரிசனம் செய்துவிட்டு, தலைவர் அவர்களைக் கிராமவாசிகளுக்கு மருத்துவ அட்டைகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

தலைவர் எழுந்தார். பத்து நிமிஷம்வரை மாலை, அணிவகுப்பு மரியாதைகள் நடந்தன. அந்தக் கிளப்பின் சேவை நாட்டுக்குத் தேவை என்று தலைவர் சொன்னதும், பட்டணத்து இளைஞர்களும் யுவதிகளும் கை தட்டினார்கள். தலைவருக்கும் உற்சாகம் தாள வில்லை. ஒரேயடியாகப் புகழ்ந்தார். நேரமாவதைப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார். –

மருத்துவ அட்டைகள் வழங்கப்படுவதற்கு முன்னால், “அட்டையில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரும், நோயின் விவரமும் இருப்பதுடன், சங்கத்தின் டாக்டர்களே குணப்படுத்துவார்கள் என்பதையும் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தலைவர் சொன்னார். முதல் அட்டையை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது, பொன்னாத்தாவையும், அவள் இடுப்பில் இருந்த பையனையும் பஞ்சாயத்துப் பரமசிவம் மேடைக்குக் கொண்டு வந்தார். தலைவர் அவளிடம் அட்டையைக் கொடுக்கப் போன போது, உமா மைக் முன்னால் வந்து, “சாகக் கிடந்த இந்தப் பையனை நம் சங்கந்தான் காப்பாற்றியது’ என்றதும், தலைவர் கைதட்ட, அதைப் பார்த்து அனைவரும் கைதட்டினார்கள். மிஸ் உமா, அந்தப் பையனுக்கு ஒரு டின் நிறையச் சாக்லெட்டுகளை வழங்கும்போது காமிரா சிரித்தது. பையனும் சிரித்தான். எல்லோரும் சிரித்தார்கள்.

விழா, இப்படியாக நடந்துகொண்டிருந்தபோது, பொன்னாத்தா யோசித்தாள். பிள்ளைக்கு மருந்து தீர்ந்துவிட்டது. மருந்து வேண்டுமே!

மிஸ் உமாவிடம், அவசர அவசரமாகப் போய் மருந்து கேட்டாள். அவளோ, ‘டாக்டரைக் கேளு. நானா டாக்டர்?’ என்றாள் எரிச்சலோடு. வருகை தந்திருக்கும் தலைவருடன், மற்றவர்களை முந்திக்கொண்டு, எந்தப் பக்கம் நின்றால் போட்டோவில் எடுப்பாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், இவள் மருந்து கேட்டதில் உமாவுக்கு மகாகோபம்!

ஒன்றும் புரியாத பொன்னாத்தா, டாக்டரிடம் போனாள். அவரோ ‘நன்றியுரை எழுதிக்கொண்டிருந்தார். சரளமாக வார்த்தைகள் வராமல் திண்டாடும் நேரத்தில் இவளா?

“அப்புறம் வா” என்று அதட்டலோடு சொன்னார். டாக்டர், மிஸ் உமா, மிஸ்டர் வில்ஸன் உள்படச் சீமான்களும் சீமாட்டிகளும் தலைவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார்கள். பின்னர் மிஸ் உமாவும், தலைவரும் சேர்ந்து ஒரு போஸ்; பலப்பல போஸ்களில் பல போட்டோக்கள். இவை முடிந்ததும், தலைவர் கைகூப்பியபடி தம் காரில் ஏறினார். அவரைத் தொடர்ந்து, ஜோடி ஜோடியாகவும், தனித் தனியாகவும், பலர் தம் தம் கார்களில் ஏறினார்கள். தலைவருக்குச் சென்னையில் சங்கத்தின் சார்பில் விருந்தாம்.

கார்கள் பறந்தன. பொன்னாத்தா, அந்தக் கார்கள் தன்மேல் மோதாமல் இருப்பதற்காக ஒதுங்கிக்கொண்டாள். எல்லாரும் போய்விட்டார்கள். பொன்னாத்தா பொறி கலங்கி நின்றாள். மருந்துக்கு எங்கே போவது? ஒன்றும் புரியாமல் அவள் குழம்பி நிற்கையில், பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவம் வந்தார். சங்கத்துக்காரர்கள் மத்தியில் சிறுமைப்பட்டதுபோல் எண்ணித் தவித்தவர் இப்போது, பொன்னாத்தாவைப் பார்த்ததும், தம் மதிப்பு உயர்ந்து விட்டதுபோல் நெஞ்சை நிமிர்த்தினார்.

“மாமா, மருந்து தராமல் போயிட்டாங்களே?” “பொறுத்தார் பூமியாள்வார். ஏன் பறக்கறே? நாளைக்கு வருவாங்க.”

நாளை வந்தது. நாளைக்கு மறுநாளும் வந்தது. அவர்கள் வரவில்லை.

இதற்கிடையில் பொன்னாத்தாவின் மகன், சாக்லேட் டின்னைக் காலி செய்தான். ஆனால், வயிற்றில் இருந்து தின்றது காலியாகாமல், கையைக் காலை இழுத்துக் கொண்டு கிடந்தான். ஜூரம் 102 டிகிரி தாண்டியிருக்கும். கண்கள், உள்நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. கை கால்கள் வெட்டிக் கொண்டிருந்தன. வயிறு, கல்மாதிரி கனத்திருந்தது. பொன்னாத்தாவால் நான் பெத்த மவனே என்று கதறத்தான் முடிந்ததே தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

அக்கம்பக்கத்துக்காரர்கள் கூடிவிட்டார்கள். “ஐயோ, வீடு தேடிவந்த வைத்தியரை விரட்டி நானே என் பிள்ளைக்கு எமனாயிட்டேனே!! என்று பொன்னாத்தா புலம்பிக் கொண்டிருந்தாள்.

அரைமணி நேரம் ஆகியிருக்கும்.

பொன்னாத்தாவின் மகனுடைய கைகால்கள், மேலும் அதிகமாக இழுத்தன. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. அழுதுகொண்டிருந்த பொன்னாத்தாவின் கண்களில் சிறிது பிரகாசம்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு நாட்டு வைத்தியர் தங்கவேலுவே அங்கு வந்துவிட்டார். பையனின் கையைப் பிடித்து நாடி பார்த்த அவர், “ஐயோ பகவானே! மரணநாடி பேச ஆரம்பிச்சிட்டுதே! இனிமேல் ஒண்ணும் பண்ண முடியாது. காலையிலே என்ன சாப்பிட்டான்?” என்றார்.

“சாக்லேட் தின்னான். வேண்டாண்டான்னா கேட்கலே. அந்தத் தளுக்குக்காரி கொடுத்த அவ்வளவு சாக்லேட்டையும் துண்னான்.” “ஒனக்கு அறிவிருக்கா பொன்னாத்தா? இனிப்புப் பண்டங்கள் கொடுக்கக் கூடாதுன்னு நான் ஒனக்குப் படிச்சிப் படிச்சி சொன்னேனே. மறந்துட்டியா? வயித்துல மாந்தம் வந்துட்டுது. அதனாலதான் வெட்டு வந்துட்டுது. நான் கொடுத்த கஸ்தூரி மாத்திரையை வச்சிருக்கியா?”

“தாத்தா, நான் பாவி. மாத்திரைகளைத் துர எறிஞ்சுட்டேன். இப்போ நான்பெத்த மகனையும் எமங்கிட்டே எறிஞ்சுட்டேன். தாத்தா, தாத்தா, போனதடவை அவன் கேக்கைத் தின்னுட்டுத்தான் வெட்டு வந்தது. நான் உம்மை அநியாயமாய்த் திட்டிட்டேன்.”

பொன்னாத்தாவின் மகனுக்கு வெட்டு நின்றுவிட்டது. வாழ்க்கையிலிருந்தே அவன் வெட்டிக்கொண்டான்.

பொன்னாத்தா சங்கத்து ஆசாமிகளைத் திட்டியபடி ஒப்பாரி வைத்தாள்.

அவள் திட்டுக்கள் எட்டாத சென்னை நகரில், அந்தச் சங்கத்தின் நிர்வாகக் கமிட்டியின் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. சங்கத்தின் அறையில் பொன்னாத்தா மகனுக்கு, மிஸ் உமா சாக்லேட் கொடுக்கும் போட்டோ சுவரில் மாட்டப்பட்டிருந்தது. பிரபல தலைவர், பொன்னாத்தாவுக்கு மருத்துவ அட்டை அளிப்பதாகக் காட்டும் புகைப் படத்தைப் பிரசுரித்த பிரபல பத்திரிகைகள் அந்த மேஜையில் கிடந்தன. அவற்றைக் கத்தரித்துப் பிரேம் போடப் போகிறார்களாம்! சங்கத்தின் நிர்வாகக் கமிட்டி, அடுத்த மாதத்துக்கு எந்தக் கிராமத்தைச் சுவீகாரம் எடுக்கலாம், அதற்கு எந்தத் தலைவரை அழைக்கலாம் என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறது.

– ஒரு சத்தியத்தின் அழுகை – முதல் பதிப்பு : 1981, மணிவாசகர்பதிப்பகம், சென்னை-600108

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *