மரணங்கள் முடிவல்ல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 10,007 
 

சில மணி நேரத்திற்கு முன்பு, என்றைக்கும் இல்லாத சந்தோசத்துடன் அந்தப் பெரிய நாற்சார வீட்டில் வளைய வந்த செல்வமலர், இப்போதுதான் அவளின் வீட்டுக்குள் இருந்து நடுவீதிக்கு இழுத்துக் கொண்டு வந்து இருத்தப் பட்டாள். தெரு விளக்குகள் கூட எரியாத அந்த நடு இரவின் கும்மிருட்டுக்கும் அவளது அன்றைய அசாதாரண சந்தோசத்துக்கும் எந்த விதமான பொருத்தமும் இல்லாவிட்டாலும், அவளது அன்றைய சந்தோசத்துக்குக் காத்திரமான காரணம் இருந்தது.

இளம் வயதிலேயே நாட்டைக் காக்க என்று வீட்டை விட்டுப் போன அவள் மகன் ராஜன் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்தான் ´வெள்ளை´ என்ற பெயருடன் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான். கொப்புளிப்பான் அவனில் கொப்புளங்களை அள்ளிப் போட்டதால்தான் நண்பர்கள் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள்.

பத்து மாதங்கள் சுமந்து பெற்ற மகனை, ராஜா போல் அந்த வீட்டில் வளர்ந்தவனை வாடி வதங்கியபடி கண்டதும் செல்வமலர் சந்தோசம், துன்பம் எல்லாம் கலந்த ஒன்று நெஞ்சிலிருந்து பீறிட்டுக் கண்ணீராய்ப் பாய “பெத்த வயிறு எப்பிடித் துடிக்குதடா..?!” என்றபடி கட்டியணைத்துக் கதறினாள். ´களத்தில் நின்றபோதும் அம்மா, உன்னை ஒரு கணமும் நான் மறக்கவில்லை´ என்று மனதுக்குள் கூறிய படி ராஜனும் செல்வமலரைக் கட்டிப் பிடித்தான். கலங்காத அவன் நெஞ்சும் ஒரு தரம் குலுங்கியது. ஒரு வருடப் பிரிவையும், அதனால் ஏற்பட்ட இதயம் நிறைந்த பாச தாகத்தையும் சில நிமிட நேரத் தழுவலில் ஓரளவுக்காவது அவர்கள் தீர்த்துக் கொண்டார்கள்.

கொப்புளங்கள் ராஜனின் மேனியில் அள்ளிப் போட்டிருப்பதால்தான் அவனால் இங்கு வர முடிந்தது என்றாலும், இந்தச் சாட்டிலாவது அவனை அருகிருந்து கவனிக்க முடிந்ததில் செல்வமலருக்குச் சந்தோசமாக இருந்தது. அந்தச் சந்தோசத்தையும் அவளால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் நெருஞ்சி முள்ளாய் பய நினைவொன்று நெஞ்சத்தில் குத்திக் கொண்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன் வியாபார விடயமாகக் கிளிநொச்சி வரை போன கணவன் கனகசுந்தரம் இன்னும் வந்து சேராததுதான் அவளுக்குள் கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இன்று வருவான், நாளை வருவான் என்றெண்ணிக் காத்திருப்பதும், போக்குவரத்து வசதி சரியாக அமையவில்லைப் போலும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வதுமாயே மூன்று மாதங்கள் ஓடி விட்டன.

இப்போ, வராத மகன் வந்து இரண்டு நாட்களாகியும் இந்த மனுசனைக் காணவில்லையே. வந்து மகனைக் கண்டால் எப்படி மகிழ்ந்து போவார், என்ற எண்ணம் ஏக்கமாய் அவளை வதைக்க எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். பக்கத்துக் கோயில் வைரவரையும், புட்டளைப் பிள்ளையாரையும், மந்திகை அம்மனையும், வல்லிபுர ஆழ்வாரையும் மனதுக்குள் மன்றாடினாள்.

“என்ரை மனுசன் நல்ல படி வந்து சேர்ந்திடோணும். நான் பட்டுச் சாத்துவன், பொங்கிப் படைப்பன்…” என்றெல்லாம் மனதுக்குள் கடவுள்களுக்கு வாக்குறுதி கொடுத்தாள். அவள் மன்றாட்டம் வீண் போகவில்லை. சரியாக மகன் வந்த மூன்றாம் நாள் மாலை, அதுதான் இன்று மாலை கனகுவும் வந்து சேர்ந்து விட்டான். செல்வமலரின் மகிழ்வைச் சொல்லவும் வேண்டுமா! அப்படியொரு சந்தோசத் துள்ளல் அவளிடம்.

நீண்ட மாதங்களின் பின் நிறைவான குடும்பமாய் இருந்ததில் அவள் மனம் நிறைந்திருந்தது. கணவன் கொண்டு வந்த மரக்கறிகளை மணக்க மணக்கச் சமைத்துப் பரிமாறினாள். கனகுவுக்குக் கூட அவளது குழந்தைத் தனமான சந்தோசத் துள்ளலில் குதூகலம் பிறந்திருந்தது. அவளது மூத்தமகள் கவிதாவும், கடைக்குட்டி தீபிகாவும், களத்திலிருந்து வந்த மகன் ராஜனும் அந்தக் குதூகலத்துக்கு எந்தக் குந்தகமும் வந்து விடாத படி கூடியிருந்து கதைத்து விட்டு பத்து மணியளவில் படுக்க ஆயத்தமானார்கள்.

அகிம்சையைப் போதித்த காந்தி பிறந்த மண்ணிலிருந்து ´அமைதி காக்க´ என்று வந்த இந்தியப்படை தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிய பின் பருத்தித்துறை மக்களைப் பற்றிக் கொண்ட பீதி கிராமக்கோட்டில் வாழ்கின்ற செல்வமலரையும் தொற்றிக் கொள்ளத் தவறவில்லை.

இந்திய இராணுவத்தின் கற்பழிப்புகளும், காட்டுமிராண்டித் தனங்களும் இன்னும் செல்வமலரின் வீடு வரை வரவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக அவள் கவிதாவையும், தீபிகாவையும் அவர்களின் அறைகளில் படுக்க விடாமல் தனது படுக்கையறையிலேயே படுக்க வைப்பாள். மகன் ராஜனையும் கடந்த இரண்டு நாட்களும் தனது பெரிய படுக்கை அறையின் ஒரு மூலையிலேதான் படுக்க வைத்தாள். இன்றும், கொப்புளிப்பான் ஆக்கிரமிப்பு இன்னும் அவனில் இருந்ததால் அவனைக் கைத்தாங்கலாய் பிடித்துக் கூட்டிக் கொண்டு போய் தனது அறையிலேயே படுக்க வைத்தாள்.

கனகு மாங்காய்ப்பூட்டைக் கொண்டு போய் கேற்றைப் பூட்டுகையில் மெதுவாக வெளியில் வீதியையும் எட்டிப் பார்த்தான். வலது பக்கம் கிராமக்கோட்டுச் சந்தியை நோக்கிய வீதியிலும் சரி, இடது பக்கம் பல்லப்பையை நோக்கிய வீதியிலும் சரி எந்த வித மனித நடமாட்டமும் தெரியவில்லை. ஊரே அடங்கிப் போயிருந்தது. எந்த வீடுகளிலும் வெளிச்சம் தெரியவில்லை. பத்து மணிக்கே ஊரடங்கிப் போகும் படியாக நாட்டுக்கு வந்த நிலையை மனதுக்குள் எண்ணி வருந்தியவாறே கேற்றைப் பூட்டி விட்டு உள்ளே வந்தவன் படுத்கை அறைக்குள் புகுந்து கொண்டான்.

மூன்று பிள்ளைகளும், கணவனும் தன் அருகிலேயே இருக்கிறார்கள் என்ற எண்ணம் செல்வமலரின் மனதை நிறைத்திருக்க படுக்கையிலேயே கணவனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். இரவு பன்னிரண்டு மணியையும் தாண்டிய அந்த அர்த்த ராத்திரியில் கனவு போல் அந்தச் சத்தம் கேட்டது.

“கனகசுந்தரம்… கனகசுந்தரம்… கதவைத் திற.”

முதலில், ஏதோ கனவென்றுதான் செல்வமலர் நினைத்தாள். கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்ட போதுதான் ஆழ்ந்து தூங்கியிருந்தவள் துடித்துப் பதைத்து எழுந்தாள்.

´மூன்று மாதங்களின் பின் இன்றுதானே வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தூங்குகிறேன்´ என்ற நிம்மதியுடன் தூங்கிக் கொண்டிருந்த கனகுவும் திடுக்கிட்டுக் கண் விழித்து, விபரம் புரியாமல் விழித்து, எதுவோ உறைக்க விறைத்துப் போய் விட்டான்.

´அது இந்தியப்படைதான்.´ பிறழ்ந்த அவர்களின் தமிழில் புரிந்து கொண்ட கனகுவும், செல்வமலரும் செய்வதறியாது திகைத்தார்கள். தடுமாறினார்கள்.

“கனகசுந்தரம்..!”

அதட்டலான கூப்பிடுகையில் மீண்டும் அதிர்ந்து பதறினார்கள்.

“டேய், அப்பு எழும்படா. இந்தியன் ஆமி வந்திட்டானடா” செல்வமலர் குரல் எழுப்பிக் கதைக்க முடியாமல் பயத்தில் குரலைத் தனக்குள் அடக்கி, கிசுகிசுப்பாக, தழதழத்த குரலில் ராஜனைக் கட்டிப்பிடித்து எழுப்பினாள்.

“கனகசுந்தரம், கதவைத் திற!”

மீண்டும் அதட்டலாய் ஒலித்த அந்தக் குரல் செல்வமலரினதும், கனகுவினதும் செவிப்பறைகளில் அறைந்தது. இதற்குள் கவிதாவும், தீபிகாவும் உசாராகி விட கொப்புளிப்பானில் சுருண்டு போயிருந்த ராஜனும் உசாராகி விட்டான்.

“அப்பு, நான் போய் முன் கதவைத் திறக்க முன்னம் நீ பின்பக்கத்தாலை ஓடிப் போயிடடா.” செல்வமலரிடமிருந்து அழுகை பீறிட்டது. ராஜன் மனதளவில் உசாராகி விட்டாலும் கொப்புளிப்பானில் வெந்து, துவண்டு போயிருந்த அவனின் உடல் அவன் மனதின் வேகத்துக்கேற்ப இயங்க மறுத்தது.

“தம்பி, வா. நான் உன்னைக் கூட்டிக் கொண்டு போய் பின்னுக்கு விடுறன்.” கவிதா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு நாற்சார வீட்டின் நடு முற்றத்தில் இறங்கினாள். குரோட்டன்கள், மல்லிகைக் கொடிகள், ரோஜாச் செடிகள்… எல்லாம் அவர்கள் இருவரையும் தழுவி, உரசி பின் தவிப்போடு நிற்க, அவை பற்றிய எந்த வித பிரக்ஞையும் இல்லாமல் ராஜனும், கவிதாவும் முன்னேறி குசினி விறாந்தையில் ஏறினார்கள்.

கவிதா குசினிக்குப் பக்கத்திலிருந்த பின் பக்கக் கதவை மெதுவாகத் திறக்க, ராஜன் எதுவும் தெரியாத கும்மிருட்டில் வெளியில் காலை வைத்தான். அவன் கால் நிலத்தில் பட முன்னரே படபடவென்று துப்பாக்கி வேட்டுக்கள் வெடித்தன.

கவிதா வெலவெலத்துப் போனாள். “தம்பி போகாதை, இங்காலை வா” மெல்லிய குரலில் பதைப்புடன் கூப்பிட்டுக் கொண்டு அப்படியே குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்றாள். அவளுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.

இதே நேரம் தயங்கித் தயங்கி முன் கதவைத் திறந்த செல்வமலர் வெடிச் சத்தத்தில் அவள் நெஞ்சே அதிர, குளறியடித்துக் கொண்டு, வாசலில் நின்ற இந்திய இராணுவத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் திரும்பி வீட்டுக்குள் ஓடினாள்.

அவள் இரண்டடிதான் ஓடியிருப்பாள். ஒரு முரட்டுக்கை அவளை முரட்டுத் தனமாக அழுத்திப் பிடித்தது. “இங்கை புலி இருக்குது.” பார்வையால் அவளை விழுங்கிய படியே அந்தக் கைக்குரியவன் கர்ச்சித்தான். “இல்லை, இல்லை” செல்வமலர் நடுங்கிய படி மறுத்தாள். அவன் தன் அழுங்குப் பிடியை சற்றும் தளர்த்தாமல் அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் வீட்டின் முன், நடுவீதியில் இருத்தினான்.

“ஐயோ… என்ரை பிள்ளையளும், மனுசனும் உள்ளை” கதறினாள். அவள் கதறலில் கொஞ்சம் கூடக் கலக்கமடையாத கல்நெஞ்சுக் காரர்களில் ஒருவன் தீபிகாவையும், கனகுவையும் வெளியிலே கூட்டிக் கொண்டு வந்து செல்வமலரின் அருகில் இருத்தி விட்டு அவர்கள் பக்கம் துப்பாக்கியைக் குறி பார்த்து நீட்டிய படி நின்றான்.

கனகுதான் முதலில் கதவைத் திறக்கப் போனவன். செல்வமலர்தான் அவனை அனுப்பப் பயந்து, அவனை அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான் வந்து கதவைத் திறந்தவள். எப்படியாவது புருசனையும், பிள்ளைகளையும் இவர்கள் கண்களில் பட விடாது காப்பாற்றி விடலாம் என்றுதான் முதலில் நம்பினாள். இப்படி நடுச்சாமத்தில் நடுவீதியில் இருத்தப் படுவாள் என்று அவள் துளி கூட நினைக்கவில்லை. இதெல்லாம் நியமாக நடக்கிறதா அல்லது கெட்ட கனவா என்றும் அவளுக்குப் புரியவில்லை. பின் பக்கம் போன கவிதாவும், ராஜனும் என்ன ஆனார்கள் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. ´எப்பிடியாவது என்ரை பிள்ளை தப்பியோடியிருப்பான்.´ பொங்கி வந்த கண்ணீருக்கு நம்பிக்கை நினைவுகளால் அணை போட்டாள்.

அவள் நெஞ்சைத் துளைப்பது போல் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்கள் மௌனமாகி விட்டன. ஆனால் அவளின் சிறு அசைவைக் கூட அவதானித்த படி துப்பாக்கி முனையொன்று அவளை நோக்கி நீண்டிருந்தது. வீட்டு வாசலில், பயப்பிராந்தியைத் தரக் கூடிய முகங்களுடனான இந்திய இராணுவத்தினர் காவலுக்கு நிற்க அவர்களுக்குள் முகமூடி போட்ட எட்டப்பன் ஒருவனும் நின்றான்.

´என்ரை பிள்ளையைக் காட்டிக் குடுக்கவோடா இவங்களைக் கூட்டிக் கொண்டு வந்தனி? நீ ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்பிடிச் செய்யலாமோடா?´ செல்வமலருக்கு அவன் நெஞ்சுச் சட்டையைப் பிடித்திழுத்துக் கேட்க வேண்டும் போல ஒரு வெறி வந்தது.

பிள்ளைகள் இரண்டு பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியாத பயத்தில், வெறி கோபமாய் மாறி அதைக் கொப்புளிக்க முடியாமல் திணறி அழுகையாய் சிதறியது. நடுவீதி என்றும் பாராமல் வீதியில் புரண்டு புலம்பினாள். கண்ணுக்கெட்டிய தூரத்திலிருக்கும் அந்த வைரவர் கோயில் வைரவரையும், புட்டளையிலிருக்கும் புட்டளைப் பிள்ளையாரையும் கூப்பிடக் கூடத் திராணியின்றிப் பிதற்றினாள்.

இதே நேரம் குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்ற கவிதாவின் கண்கள் அந்த இருட்டிலும் ராஜனைத் தேடின.

“தம்பி.., தம்பி.., எங்கையடா நீ..” கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.

சத்தம் இல்லை.

மெதுவாகச் சுவரோடு ஒட்டிய படியே வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று அவளை “அக்கா..!” என்ற படி ராஜன் கட்டிப் பிடித்தான்.

“அக்கா, தண்ணி..” திக்கிய படி அவன் முனகலுடன் கேட்டான். கவிதாவின் நெஞ்சுச் சட்டையின் உள்ளே எதுவோ பிசுபிசுத்தது.

“தம்பி..!” இறுகக் கட்டிப் பிடித்தாள்.

“அக்..கா.., தண்…ணி..”

சில முரட்டுக் கைகள் அவர்களை இழுத்துப் பிரித்தன.

“விடு… என்ரை தம்பி” கவிதா திமிறினாள்.

“தம்பிக்குத் தண்ணி…” அவள் முடிக்க முன்னரே இன்னுமொரு முரட்டுக்கை அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனது.

“அ..க்..கா..!” மெலிதாக ராஜன் முனகும் ஒலியைத் தொடர்ந்து தொப்பென்று எதுவோ விழுந்த சத்தம் கேட்டது.

இழுத்து வரப்பட்ட கவிதாவும் இப்போது நடுவீதியில் இருத்தப் பட்டாள். இருட்டிலும், அவள் நெஞ்சுச் சட்டை சிவப்பாக இருப்பது தெரிந்தது. பிசுபிசுத்தது தம்பியின் குருதி என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்ததும், “தம்..பி..!” குழறிய படி வீட்டை நோக்கி ஓடினாள்.

மீண்டும் முரட்டுக்கை அவளை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து நடுவீதியில் இருத்தியது.

நான்கு மணி நேரத்துக்கு முன்பு சந்தோச வெள்ளத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் குசினி விறாந்தையில், இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ராஜனை இந்திய இராணுவத்தினர் வெற்றிக் களிப்புடன் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தனர்.

ராஜன் கொப்புளிப்பானில் வீட்டுக்கு வந்திருப்பதை மோப்பம் பிடித்து இந்திய இராணுவத்திடம் காட்டிக் கொடுத்த அந்த முகமூடித் தமிழன் அவர்களைப் பின்தொடர.. கனகு அவர்களிடம் போய் “என்ரை பிள்ளை..?” கேட்டான்.

“நாளைக்கு மந்திகை ஆஸ்பத்திரிக்கு வந்து, அவன் ´புலி´ எண்டு சொல்லிக் கையெழுத்துப் போட்டிட்டு எடுத்துக் கொண்டு போ.” சொல்லிக் கொண்டு சந்தோசமாகப் போனார்கள் அவர்கள்.

களத்தில் காவியமாக வேண்டிய ராஜன், எட்டப்பன் வழி வந்த காட்டிக் கொடுப்பவனால், அவன் தவழ்ந்த வீட்டிலேயே உயிரையும், உதிரத்தையும் சிந்திய கொடுமையைத் தாங்க முடியாமல் அந்த வீடே ஆழ்ந்த சோகத்தில், அசாதாரண அமைதியில் மூழ்கிக் கிடக்க, நடைப்பிணங்களாக கனகசுந்தரமும், செல்வமலரும், கவிதாவும், தீபிகாவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

காலம் – 4.12.1987

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *