வாழ்க்கையில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 1,082 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காதல், காதல் என்று அளக்கிறார்களே அதில் எனக்குச் சிறிதும் நம்பிக்கை கிடையாது. உண்மையில் காதல் கதைகளிலும், சினிமாத் திரையிலும், நாடக மேடையிலும் அடிபடுகிறதே தவிர, வாழ்க்கையில் மருந்துக்குக் கூட கிடையாது என்பது தான் எனது அபிப்பிராயம். காதல் பித்துப் பிடித்தலையும் லைலியும் மஜ்னூனும், காதலுக்குப் பலியான அனார்க்கலியும், காதலுக்காகவே உயிரைத் தியாகம் செய்த கார்னேயும் இலக்கியத்தின் அழியாத சிருஷ்டிகள் தான். ஆனால், இன்றைய வாழ்க்கையிலே அவர்களின் சாயைகளையாவது காண முடியுமோ? ஒரு கதாசிரியர் சொன்னாரே ‘தேக இச்சை பூர்த்தியாகாத மனதின் போதையே காதல். காதலாவது! வெறும் காமம் தான் உலாவுகிறது’ என்று. அதை எழுத்துக்கு எழுத்து ஆமோதிப்பவன் நான். என்றாலும், எனக்கு ஆழ்வாரப்ப பிள்ளையின் வாழ்க்கைப் புராணம் புதிதாகத்தான் இருக்கிறது.

நான் சுவையான காதல் கதை சொல்லப் போகிறேன் என்று எதிர்பார்க்கும் நீங்கள் ஆழ்வாரப்ப பிள்ளையின் வயது எழுபதுக்குப் பக்கத்திலிருக்கும் என்று சொன்னதும் ஏமாறப் போகிறீர்கள். அவரது அருமை மனைவி நாச்சியாரம்மாளுக்கும் அறுபத்து ஐந்து வயதிற்குக் குறைவில்லை என்றதும் அலுத்துக் கொள்வீர்கள். தர்க்க சாஸ்திரியாகவோ ‘தத்துவ ஞானியாகவோ இருந்தால்’ காதல் ஜீவநதி. ‘காதலுக்குக் கண்ணில்லை, காதல் தெய்வீகமானது. காதல் வயதையோ, ஜாதியையோ பார்ப்பதில்லை’ என்று அளக்க முன் வரலாம். ஆனால், ஆழ்வாரப்ப பிள்ளையின் வாழ்க்கை ஏட்டில் காதல் சரடு புரளவில்லை.

முதலிலேயே நான் சொல்லி விடுகிறேன். ஸ்ரீமதி ஆழ்வாரப்ப பிள்ளை ‘கண்டதும் காதல் கொண்டாள்’ என்ற பண்பாட்டிலே விளைந்த வாழ்க்கைத் துணைவி அல்ல. அல்லது ‘அஞ்சும் மூணும் எட்டு; அத்தை மகளை கட்டு’ என்று பால்யம் முதலே பரிகசித்து விளையாடி மாலையிட்ட அத்தை மகளும் அல்ல. ஏதோ ஒரு ஊரில் இருந்த ஆழ்வாரப்பருக்கும் எங்கோ ஒரு மூலையின் பட்டிக்காட்டிலிருந்த நாச்சியாரம்மைக்கும், சுபயோக சுபதினத்தில் சர்வமும் கூடிய முகூர்த்த வேளையில் பெரியோர்கள் நீச்சயித்தபடி நிகழ்ந்த திருமணம் தான்.

போகிறது. கல்யாணம் நிகழ்ந்ததும் தெய்வீகமான காதல் பிறந்து விட்டது என்று சொல்லலாம் என்றாலோ, அவர்களது ஆரம்ப இல் வாழ்க்கை கற்கண்டு இன்பம் பயப்பதாகவோ, மைனாக் குஞ்சுகளின் பஞ்சு மெத்தைக் கூண்டின் சுகவாழ்வு போலவோ இருந்ததில்லை. சாதாரணமாக இருந்து பின் கீரியும், பாம்பும் என்பார்களே அந்த நிலைக்கு வளர்ந்து, முடிவில்…அவர்கள் விஷயத்தில் அது தான் சுவையான கதை!

இப்பொழுது அவ் விருவரையும் கவனிப்பவர்கள் ‘கிழடானவர்கள் இப்படி இருக்கிறார்களே! அந்தக் காலத்தில் எவ்விதம் இருந்திருக்க மாட்டார்கள்!’ என எண்ணலாம். ஆனால் அவர்களை அறிந்த அடுத்த வீட்டுக்காரர்கள் ‘ஆச்சர்யம்டி யம்மா! முன்னாலே இருந்ததற்கும் இப்போ அவர்கள் வாழ்வதற்கும்!’ என்று அர்த்தம் நிறைந்த சிரிப்பு உதிர்க்கும்போது யோசிக்க வேண்டிய தாகும்.

ஏன்! நாச்சியாரம்மாளே அடிக்கடி சொல்வாள் : ‘எனக்கு கல்யாணமான புதிதில், அப்பப்பா! இவுகளை நினைச்சாலே பயமாயிருக்கும். ஒரு சமயம் வாய் தவறி சின்னத் திருநெல்வேலி (திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள ஆழ்வார் திரு நகரி பேச்சு வழக்கில் ஆழ்வார் திருநெல்வேலியாகி விட்டது. ஆழ்வார் என்ற பெயரை உச்சரிக்கக் கூடாது என்ற சம்பிரதாயக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள் அதைச் சின்னத் திருநெல்வேலி என்று சொல்வது வழக்கம்) பெயரை சொல்லி விட்டேன். இவுக பேரு அது என்பது முதலில் எனக்கு ஞாபகமில்லை. அதைக் கேட்டதும் ‘என்னது இன்னொரு தடவை சொல்லு!’ என்று உருட்டி முழிச்சார்களே பார்க்கணும். எனக்கானால் நடுக்கம். பேசாமே உள்ளே போயிட்டேன்! இந்த ரீதியில் சரித்திரப் பெருமை பெற்ற நிகழ்ச்சிகளை அவள் இன்று பூரிப்புடன் சொல்வதுண்டு. அவை நடந்த காலத்தில் அவள் மகிழ்ந்திருக்க முடியாது தான்! |

பழைய் சமூகச் சுவட்டிலேயே வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார்கள் அவர்கள். யாரும் பொறாமை கொள்ளக் கூடியபடி அவர்களது தினசரி வாழ்வு வளரவில்லை. சர்வ சாதாரணமான குடும்பமாக ஊருடன் ஒத்து ‘நாலு பேரை போல நாமும்’ என்ற மனோபாவத்திலேயே வாழ்ந்தனர். இதில் வியப்பு ஒன்று மில்லை தான். நான் புதிர் என்று சொல்ல வந்தது இன்றைய வாழ்க்கையை.

வாழ்வில் அடிபட்டு, காலத்தின் முத்திரைகளையும், அனுபவத்தின் கீறல்களையும் முகத்திலும் உடலிலும் ஏற்றுத் தளர்வு எய்தி விட்டனர் இருவரும். அந் நிலையில் அவர்கள் உள்ளத்தில் பின்னிக் கிடக்கும் அன்பின் தன்மை புனிதமானது ; பிரமிப்புத் தருவது.

பெண் என்றால் என்னவோ என ஏங்கும் வாலிபத்தில், மனைவி என்றால் புதுமை என வாழ்வில் இறங்கும் போது தனி மோகம் இருப்பது இயல்புதான். காலப் போக்கில் மனைவி பழகிய ‘பொருள்’ என்றாகி சில்லறைச் சச்சரவுகள் எழுந்து வாழ்வு தொல்லையாகத் தோன்றி, பின் அவள் தனது வாழ்வில் ஒன்றி விட்ட அங்கம் என்ற அசிரத்தை ஏற்படும்போது, இல்லறம் மேடு பள்ளங்களைச் சமாளித்துச் செல்கிறது. அப்பொழு தெல்லாம் அவருக்கு அவள் மீது அளவற்ற அன்பு எழுந்து வெளியாகி யிருந்தால், சரீர இச்சை என்று கூறி விடலாம். ஆனால், அந்தக் கிழத் தம்பதிகளின் போக்கு அப்படி இல்லையே!

திடீரென்று ஆழ்வாரப்ப பிள்ளை படுக்கையில் விழுந்தார். கை கால்களை அசைக்க முடியாதபடி அசாத்திய வலி. அந்தக் கீட்டையைப் பற்றிய நோய் அவரைக் காட்டிலே கொண்டு வைத்து விட்டுத்தான் போகுமோ என்னவொ’ என்று பலரும் நினைத்தார்கள். ‘அந்த ஒரு மாதமும் நாச்சியாரம்மாளின் வாழ்க்கை .. ! அவளைக் கவனித்தவர்கள், அவள் ஊணு மின்றி உறக்கமும் இன்றி இயந்திரம் போல் சுழன்று, அவருக்கு சிச்ரூஷை செய்ததைப் பார்த்தவர்கள். ‘இந்த வயசிலே இவளுக்கு இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது!’ என வியந்தார்கள். அது போல் உழைப்பது பெண்ணின் கடமை என ‘ உடம்பிலே பிடியாமல் ‘ சொல்கிறவர்கள் பின்னர் நடந்தததை அறிந்தால் என்ன புலம்புவார்களோ!

அவர் சுகம் எய்தினார். ஆனால், சில மாதங்களிலே அவளை வியாதி பற்றிக் கொண்டது. ஓய்வற்ற உழைப்பு அந்த வயதில் அவளுக்கு ஊக்கமா அளிக்கும். அவளை ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து மருந்து கொடுக்க வேண்டியது அவசியமாயிற்று. அவள் எடுத்துச் செல்லப் பட்டாள். அந்தப் பிரிவு அவரை எப்படிப் பாதித்து விட்டது!

முதல் தினம் மௌனமாகத் தாங்கிக் கொண்டார். பின் ஒவவொரு நாளும் அவள் நினைவால் பித்துப் பிடித்தது போல் அமர்ந்து விடுவார், கோடியில் ஊசலாடும் புடவை. அவள் உபயோகித்த பாத்திரம் முதலியன அவர் உள்ளத்தைத் தொட்டுப் பல நினைவுகளை எழுப்பின. அவரது கண்களில் ஊறும் நீரே இதைச் சொல்லி விடும். அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டு ‘ஊம்…அவளுக்கு இது வர வேண்டாம்! அவள் குணத்துக்கும் உழைப்புக்கும்…’ என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கி விடுவார்; அவ்வேளைகளில் அவரைப் பார்த்தால் பரிதாபமாயிருக்கும். ‘அவள் என்ன இறந்தா போனாள்? விணாக இவர் மனதை அலட்டிக் கொள்கிறாரே’ என்ற இரக்கம் தோன்றும்.

உண்மையில் அவள் செத்துப் போனால் அந்தத் துயரமே அவரை உருக்கிக் கொன்றிருக்கும்! அவ்வளவு தூரம் உள்ளத்தில் பதிந்து விட்டது அன்பு, சர்வ சாதாரணமான ஒரு பொருள், கவனத்தைக் கவராத ஓர் அங்கம், கெட்டு விட்டால் அதன் மதிப்பு, அதன் இன்றியமையாத் தன்மை வெகுவாகப் புலனாகும். தன் மனைவியும் அவ்விதமே என்பதை ஆழ்வாரப்ப பிள்ளை நன்றாக உணர்ந்தார். சில சமயங்களில் ஆஸ்பத்திரிக் கட்டில் அருகில் அமர்ந்து மோன முச்செறிந்தார். அவரது உள்ளத்தின் சூட்டை எந்தக் கருவி அளக்க முடியும்!

அன்றும் அவர் தமது இளம் பருவ இன்பச் சம்பவம் எதையோ எண்ணுவதில் தான் மூழ்கியிருந்திருக்க வேண்டும்! ஆஸ்பத்திரியிலிருந்து அவளை அழைத்து வந்தார்கள். வண்டியிலிருந்து இறக்கி கைத்தாங்கலாக மெதுவாய் வீட்டிற்குள் கூட்டி வந்தனர் இரு பெண்கள். திடீரென்று ஏறெடுத்து பார்த் தார் அவர். அவர் உள்ளத்திலே பால் வார்த்ததுபோல் குளுமை பிறந்தது போலும்! அதன் சாயை முகத்திலே படர ‘நாச்சியாரு…’ என்று கூப்பிட்டார். அக்குரலிலே நெளிந்த குழைவு…அதில் கனிந்த அன்பு! முதல் நாளில் சந்திக்கும் இளங் காதலர்களிடையே கூட அவ்வளவு மலர்ச்சி பிறந்திராது.

அப்பொழுதும், அதன் பிறகும் அவர்களைப் பார்க்கிறவர்கள் மனதிலே இந்தக் கேள்வி எழாமல் போகாது-‘இந்த அன்பின் அடிப்படை என்ன? இதைக் காதல் என்று சொல்லலாமா? காலையில் அரும்பி பகல் எல்லாம் போதாகி மாலையில் மலரும் நோய்’ இல்லைவே இது!’ இதற்கு விடை எனக்குத் தெரியாது. வாழ்க்கையில் ஓர் புதிர் இது!

– கல்யாணி முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, சினிமா நிலையம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *