வானமெல்லாம் ஆசைக் காற்றாடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 3,359 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம்-16

பாரதி, ஈசுவரன் காப்பியை ரசித்து, ருசித்து, உறிஞ்சிப் பருகும் காட்சியைக் கண்டாள்.

“நன்னா இருக்கா அத்திம்பேர்?”

”ஏ க்ளாஸ்! ஒனக்கு அடுக்களை வேலையைத் தெரியாதுன்னு சொன்னாயே?”

“தெரியாமயே எத்தனை நாள் இருக்கிறது அத்திம்பேர்? பிள்ளையார் சுழி போடற மாதிரி காப்பியிலே ஆரம்பிச்சிருக்கேன்” 

“மெள்ளப் பேசு. தங்கம்மா முழிச்சுண்டாச்சு.”

“அத்தைக்கு என்னைப் பிடிக்கலே”. 

“இன்னமே பிடிக்கும்.” 

“எப்படிச் சொல்றீங்க?” 

“நீதானே மின்னு மின்னா ஃபர்ஸ்ட் எய்டு கொடுக்கிற மாதிரி புடைவையைக் கிழிச்சுக் கட்டைப்போட்டே?”

“அதை நான் செய்யலே அத்திம்பேர். எல்லார்ட்டேயும் இருக்கற மனிதாபிமானம் செஞ்சுது” 

“நெஞ்சு ஈரம் இருந்தாத்தானே பொண்ணே மனிதாபிமானம் பொறக்கும்? பாட்டாப்பா குளிச்சு வந்தாச்சு. அவருக்கும் காப்பி கலந்து குடு. இத்தற ஸ்டராங்கா இருக்கப்படாது. பஞ்சாரையும் கொஞ்சம் கொஞ்சம் தூக்கலா இருக்கணும். அத்தை நாளைக்குத்தானே குளிக்கறா?”

“ஆமாம்.'” 

“அவ ஒக்கார்ந்து வீட்டுக்குள்ள வர்றத்துக்குள்ளே ஒரு புராணமே நடந்துடுத்து பாத்தாயா? இதுதான் தெய்வச் செயல்ங்கறது. நாம எதிர்பாராததையெல்லாம் வைக்கறவன் அவன் ஒருத்தன்தான். கிளாஸை அலம்பி வைச்சுடட்டுமா?” 

“நான் அலம்பி வைச்சுக்கறேன்” என்ற பாரதி, “ஏன் இந்தாத்திலே எல்லாரும் காப்பியை வெள்ளி தம்ளர்லே குடிக்கறா?” 

“பரம்பரையா வந்த பழக்கம். அதுவுமில்லாம வெள்ளியிலே சூடு வேகத்தில் தணியாது” 

“அதோ, தாத்தா வந்தாச்சு.”

“இந்தைக்கு நாம ரெண்டு பேருமா சமையல் செய்வோம். நான்தான் ஒன்னோட மின்னாலத்த குரு”

பாரதி லேசாகச் சிரித்தாள்.

“பொண்ணே!” 

“என்ன அத்திம்பேர்?” 

“என செலக்ஷன் தப்பாப் போயிடுத்தோன்னு பயந்துண்டிருந்தேன். தப்பாப் போகலை.”

“ஒரு விஷயம்”. 

“என்ன பொண்ணே?” 

“நேத்தைக்கே உங்க பிள்ளை பாலெஸ் ஹவுஸ்லே புடைவை வாங்கித் தந்தாச்சு. ஆனா சிரமமா இருக்கு. ஹவுஸ் கோட்ல ரொம்ப செளகரியமா இருக்கும். நம்ப பக்கத்து உடுப்பு இல்லைன்னாலும் ஆபாசமில்லாதது”. 

“நேக்கு ஆட்சேபனை இல்லை. எதுக்கும் நாராயணன் கிட்டேயும் சொல்லு” 

ஈசுவரன் வெளியேற, பாரதி தாத்தாவுக்குக் காப்பி கலந்து கொடுத்துவிட்டுத் தானும் குடித்தாள். 

காலை ஏழு மணிக்குப் பிறகு உற்றார் உறவினர்கள் தனியாகவும் இரண்டு மூன்று பேர்களாகச் சேர்ந்தும் வந்தார்கள். 

பாம்பு நீளமான பாம்பா? 

மூர்க்கனா? 

கருநாகமா? 

கோதுமை வீரியனா? 

கடித்தபோது எப்படி வலித்தது? கடுப்பு ரொம்பவா?

தங்கம்மாவுக்கு என்ன தோன்றியது? 

உயிர் போயிடுமோ என்கிற பயம் உண்டாயிற்றா?

யார் முதலில் உதவி செய்ய முன்வந்தார்கள்?

சங்குண்ணி எப்படி ஆரம்பித்தான்? 

எத்தனை கோழிகள்? 

எப்ப ஆரம்பித்து எப்ப முடிந்தது? 

தங்கம்மா சோர்ந்து போயிருந்தாள். கத்தியால் கிறின இடம் வலித்தது. ஏதோ ஒரு பச்சை இலையை அரைத்துக் கடிவாய் மேல் போட்டிருந்தான். அதை ஒரு துணியாலும் கட்டியிருந்தான். கீறின இடம் சீக்கிரத்தில் குணமாக டாக்டரிடம் ஆயின்ட்மென்ட் வாங்கிக் கொள்ள வேண்டும். 

எட்டு மணிக்குள் ஊர் முழுதும் வந்து விசாரித்து விட்டுப் போய்விட்டது, தங்கம்மாவுக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. 

ஆனால் ஒரே ஒரு குறை அவளுடைய மனத்தைப் பாதித்தது. பாரதி காப்பியை வைத்துவிட்டு மெளனமாகப் போனாளே தவிர இவளுக்கு ‘இப்போது எப்படி இருக்கிறது? உடம்பு க்ஷணமாக இருக்கிறதா? கத்தி பட்ட இடம் வலிக்கிறதா?’ என்றெல்லாம் கேட்கவில்லை. புடைவைத் தலைப்பைக் கிழித்து பாரதி போட்டுவிட்ட கட்டும் மாபெரும் சாதனையாகப் படவில்லை. யார் அருகே இருந்திருந்தாலும் இதையேதான் செய்திருப்பார்கள். அவளுக்குப் பதிலாக பாரதியைப் பாம்பு தீண்டியிருந்தாலும் தங்கம்மா அவளுக்கு முதலுதவியாக இதைத் தான் செய்திருப்பாள்! 

திடீரென்று அவளுக்குக் கோபம் வததது.

“பாரதி!” 

அத்தை இன்று தொழுவத்துக்குச் செல்லாமல் பின் தாழ்வாரத்தின் எல்லையில் தள்ளி உட்கார்ந்திருப்பதை அறிவாள். 

“என்ன அத்தே” 

“அடுக்களையில் என்ன செய்திட்டிருக்கே?” 

“உப்புமா பண்ணிட்டிருக்கேன்” 

“யார் உப்புமா பண்ணச் சொன்னா?”

“அத்திம்பேர்”. 

“அவர் சொன்னா உடனே செய்துடறதா… ஃப்ரிஜ்ல தோசை மாவு ரெண்டு நாளா இருக்கே?” 

‘”மாவு நாலு தோசைக்குக்கூட வராது”.

“ரவையை நெய்யில வறுத்தியா?”

”வறுத்தேன்”. 

“இஞ்சி போட்டியா?”

“போட்டேன்.”

“யார் போடச் சொன்னா? என் புள்ளை-கோந்தைக்குப் பிடிக்காது” 

திடீரென்று நாராயணனுடைய குரல் வந்தது.

“தோஷமில்லை அம்மா. இஞ்சி உப்புமாவில்ஒரு நாள் இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே”. 

“நான் போட்டா என்னைத் திட்டுவே! நேற்றைக்கு வந்தவ போட்டா தோஷமில்லையாக்கும்?” என்றாள் தங்மம்மா. 

சமையலறையிலிருந்து ஈஸ்வரன் வெளிப்பட்டர்.

“எந்துக்குத் தங்கம் இப்படி நெவளிக்கறாய்?”

“ஓ, நீங்க அடுக்களையிலதான் இருக்கேளா…?”

“ஏன் இருக்கப்படாதா?”

“நான் இத்தற நேரம் பேசிண்டிருந்தேன். நீங்க பூனையாட்டம் அங்கே இருக்கேள்!”

“நான் பூச்சையும் இல்லை. எலியும் இல்லை. சுடச்சுட உப்மா திங்கணும்னு தோணித்து. இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கிக் கொடுத்தேன். எத்தறை உப்பு போடணும்னு காட்டிக்கொடுத்தேன்.”

“டியூஷனா?” 

“என்ன தப்பு? அது சரி. ஒன்னைப் பார்த்தா நேத்திக்கு உன்னைப் பாம்பு கடிச்சுதுன்னு ஆரும் சொல்லமாட்டா.” 

“சரி இன்னமே நான் வாயைத் தொறக்கவே, போதுமா?” 

“போதும் தங்கம்” சொல்லிவிட்டு ஈசுவரன் சமையலறைக்குத் திரும்ப, அமைதி பிறநதது. 

தரை மேல் தரையில் உட்கார்ந்து இன்றைய தினசரியைப் படித்துக் கொண்டிருந்த நாராயணன் முந்தின நாள் அவன் மந்திரியை ஒத்தப் பாலத்தில் சந்தித்தது பற்றிய செய்தி வந்திருப்பதைக் கண்டான். செய்தியைப் படித்தபோது கோபம் வரவில்லை. சிரிப்பு தான் வந்தது. மந்திரி சொல்லி அனுப்பித்தான் அவன் இரவு பத்து மணிக்கு மேல் ஒத்தப் பாலத்துக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறான். பதினொன்றே முக்கால் மணிக்கு மேனனைச் சந்தித்திருக்கிறான். இருவரும் மூன்று மணி வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது நடந்த கதை. ஆனால் பத்திரிகை நிருபர் என்ன எழுதி அனுப்பியிருக்கிறார்? 

“இடைத் தேர்தலில் நிற்க, பாலக்காட்டு மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவரும், கேரள விவசாயிகள் சம்மேளனத்தின் காரியதரிசியுமான நாராயணன் மந்திரியின் ஆதரவைக் கேட்டு நீண்ட நேரமாகக் காத்திருந்தார்.” 

“யார் யாருக்காகக் காத்திருந்தார்கள்?

“கோந்தே?”

“என்ன பாட்டாப்பா?”

“நீ இன்னும் டிபன் திங்கலை, அல்லவா?”

“போறேன்.” 

“ஒன் ஆம்படையாள் நன்னா உண்டாக்கியிருக்காள்” 

நாராயணன் சமையலறைக்கு வந்தான், அப்பா சேனைக்கிழங்கு நறுக்கிக் கொண்டிருந்தார். பாரதி, குக்கரை அடுப்பில் ஏற்றிக் கொண்டிருந்தாள். 

“என்னடா கோந்தே?”

“என்னப்பா இது. நீங்க கிச்சன்ல.” 

“பாரதிக்குச் சொல்லிக் கொடுக்கறேண்டா! அவள் எப்ப கத்திரிக்காய் சாம்பாரும், சேனைக்கிழங்கு கறியும் சேய தெரிஞ்சுக்கறது?” 

“நல்ல நாள் பார்த்தேன். பாரதி உப்புமா பண்ணியிருக்கி்மோ… எனக்கும் ஒரு சட்டுவம் தா”

“எப்பத் தூங்கப் போனாய்?” 

“தூங்கலை..” 

“பின்னே?”

“குஞ்சப்பாவோட பேசிண்டிருந்தேன்.” 

“பாம்பைப் பத்திப் பேசியிருப்பாய். பாம்பு, பல்லி, மொதலை எல்லாம் ஒரே ஜாதி, ரெப்டைல்ஸ், இப்படி எல்லாம் சொல்லி சாட்சிக்கு டார்வினையும் இழுத்திருப்பன். அது இருக்கட்டும், டார்வின் தியரியிலே மின்னு மின்னால எந்த ஜாதி உயிர் உண்டாச்சு, சொல்லு.”

“இது நம்பாத்து மலையாளச்சி தாட்சாயணிக்குக் கூடத் தெரியும்”. 

“இப்ப நீ சொல்லேன்”. 

”ஃபிஷஸ்! மீன் ஜாதி”

“மகாவிஷ்ணுவோட மொதல் அவதாரமும் அது தான். மத்ஸ்யாவதாரம். இப்ப நோக்கு என்ன தெரியறது” என்ன, நாராயணன் சிரித்தவனாய், “இந்த உப்புமாவிலே அண்டிப் பருப்பும் போட்டிருக்கான்னு தெரியறது” என்றான். 

“முந்திரிப் பருப்பு நான்தான் போடணும்னு போட்டேன். பிடிக்காதா?” என்றான் பாரதி. 

“நான் பார்த்ததைச் சொன்னேன் அம்படத்தான்” என்ற நாராயணன், “அப்பா! பாரதிக்குச் சொல்லிக் கொடுக்கறேன்னு சொல்லி சமையலைக் குட்டிச்சுவராக்கிடாதீங்கோ” என்றான். 

“உப்மா திந்நாச்சோ இல்லியோ நீ வெளியே போய் ஒன் காரியத்தைப் பாரு” என்றார் ஈசுவரன். 

தாத்தா முதலில் சாப்பிட்டு முடிக்க, பின்னாலேயே பாட்டி வந்தாள். பாட்டி இலையிலிருந்து எழுந்திருக்கையில், 

“பொண்ணே!” என்று அழைத்துக் கொண்டு ஈசுவரன் வந்தார். அவரைத் தொடர்ந்து நாராயணன்.

“கோத்தே இந்தைக்கு ஒரு நா டேபிள் சாப்பாடு சாப்பிடுடா,” 

“ஏம்ப்பா?”

“ஒக்காறேன் – சொல்றேன்”. 

நாராயணன் உட்கார, பாரதி ஆச்சரியப்பட்டாள். அவன் சமையலறையில் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதைத்தான் அவள் பார்த்திருக்கிறாள். அப்படி அமர்ந்து உணவு கொள்ளுவதைத்தான் விரும்புவான் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறாள்.

இன்று ஏன், இப்படி? 

இரு வெள்ளித் தட்டுகளுடன் பாரதி மேஜை அருகே வர-

“எல்லாத்தையும் டேபிள் மேல் வைச்சுட்டு இன்னொரு தட்டும் கொண்டு வா, பொண்ணே!”

“யாராவது சாப்பிட வர்றாங்களா, அத்திம்பேர்?”

“வேற ஆரும் இல்லை!”

“பின்னே?”

“நானா?”

“நீயேதான். போய் நான் சொன்ன பிரகாரம் சேய்”

பாரதி நாராயணனைப் பார்த்தாள். 

“அப்பா சொல்லியாச்சே! அவர் சொன்னபடி செய்” என்றான் நாராயணன். 

“அத்தைக்குத் தெரிஞ்சா…” 

“தங்கத்தை நான் பாத்துக்கறேன்”. 

அவள் உள்ளே சென்று இன்னொரு தட்டுடன் வந்தாள். 

“சில எடங்கள்ளே பாத்திருக்கேன். டேபிள் மேல் எல்லாம் இருக்கும். ஒருத்தனுக்கு இன்னொருத்தன்- பரிமார்றதுங்கற கதையெல்லாம் இல்லை, டில்லியில் உங்காத்திலே எப்படி?”

“இப்ப நீங்க சொன்ன மாதிரித்தான் அத்திம்பேர் “

“அப்ப அந்த ஸிஸ்டம் இங்கேயும் தொடங்கட்டுமே? தோஷமில்லை”. 

பாரதி உட்கார்ந்தாள். 

“நேக்கு. இந்த ஈக்வாலிட்டி,பொண்களுக்கு சம உரிமை. இதுகள் பத்தியெல்லாம் பேசத் தெரியாது. ஆனா ஆண் வயறும் பொண் வயறும் ஒண்ணுதான். ரெண்டுக்கும் பசிக்கும்னு தெரியும். என்ன ஒரு வித்தியாசம்! பொண்ணு வயத்திலே கர்ப்பப்பை இருக்கு. ஆண் வயத்திலே இல்லை. உம் சாப்பிடத் தொடங்கு, பொண்ணே…” 

“என்னால ஒரே ஒரு விஷயத்தை மட்டும் புரிஞ்சுக்க முடியலே அத்திம்பேர்” என்றாள் பாரதி. 

“என்ன அது?”

“இந்த வீட்ல ஒவ்வொருத்தர் ஒவ்வொரு சமயத்திலே ஒவ்வொரு மாதிரியா இருக்கா. எப்பப் பயப்பட்டு ஒதுங்கி நிக்கணும், எப்ப மனசுவிட்டுத் தைரியமாப் பேசலாம்னு எனக்குத் தெரியலே”. 

ஈசுவரன் சிரித்தார். 

“சமய சந்தர்ப்பங்கள் ஒரே மாதிரியா இருந்தா மனுஷாளும் ஒரே மாதிரி இருப்பா. நோக்கு அது தெரியலே. எந்தச் சமயத்தில் எதைப் பத்திப் பேசலாம்னு தெரியலை. அதான் வெஷயம்”. 

“சாப்பிடுங்கே, அப்பா” என்ற நாராயணன், 

“பாரதி அந்தப் பப்படா டப்பாவைத் தள்ளு” என்றான்.

“கோந்தே”

“என்னப்பா?”

“உன் ஆம்படையாள் பிஎச்.டி படிக்கப் போறதும் போகாததும் உன் கையில் இருக்கு.” 

“ஓங்க முடிவைத்தான் நீங்க பாரதிட்டே சொல்லி ஆச்சே?”

“என் அபிப்பிராயத்தைத்தான் நான் சொன்னேன், முடிவை அல்ல” 

“என் முடிவு என்னன்னு பாரதிக்குத் தெரியும்.”

“சரி இப்ப இதைப் பத்தி நீயும், நானும் தர்க்கிக் கண்டாம். நீயாச்சு, பாரதியாச்சு.” 

சாப்பாட்டுக் கடை மூடியாகிவிட்டது. 

பாரதி கடிகாரத்தைப் பார்த்தாள். ஒன்று அடித்து ஐந்து நிமிடங்கள். மூன்று அல்லது மூன்றரை மணிக்கு மீண்டும் காப்பி போட வரவேண்டும். டிபன் தயார் செய்ய வேண்டும். என்ன செய்வது? யோசித்தாள். 

அவளுடைய கண்கள் முந்தின இரவு முழுதும் தூங்காததால் வலித்தன. இதழ்கள் மூடி மூடித்திறந்தன. 

மாடிக்குப்போய்ப் படுத்தால் என்ன? ஈசுவரன் தம் அறையில் நிச்சிந்தையாக உறங்குகிறார். தாத்தா தரை மேல் தரையில் உடலைக் குறுக்கிச் சுருக்கிக் குறட்டைவிட பாட்டி ஊஞ்சலில் கண் அயர்ந்து போயிருந்தாள். 

நாராயணன் ஏற்கனவே காரை எடுத்துக்கொண்டு போய்விட்டது அவளுக்குத் தெரியும். என்ன மனுஷன் இவன்? முந்தாதான் இரவு பத்து மணிக்கு மந்திரியைப் பாக்க ஒத்தப்பாலம் சென்றிருக்கிறான். நேற்று இரவு முழுதும் தூங்கவில்லை! அவனுடைய உடலுக்குச் சோர்வே கிடையாதா? எதை அடக்கிக் கொள்ள முடிந்தாலும் தூக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாதே? நாராயணனால் எப்படி முடிகிறது? 

மாடியை அடைந்தாள். 

மின் விசிறியைச் சுழல விட்டாள். அலாரம் கடிகாரத்தை அருகே வைத்துக் கொண்டாள். அவள் மூன்றரைக்குக் கண் விழிக்க அது அலற வேண்டும். 

அலாரம் தன் கடமையை முடித்தது. 

ஆனால் பாரதியால் எழுந்திருக்க முடியவில்லை.

அவள் கண் விழித்தபோது இருட்டி விட்டதை உணர்ந்தாள். அத்தை என்ன பாட்டெல்லாம் பாடப் போகிறாளோ? அவளை முன்பு எதிர்த்துப் பேசியது போலப் பேசவும் மனத்தில் தெம்பு இல்லை. 

அவசர அவசரமாகக் கீழே வந்தாள். அப்போது மணி ஏழு. 

ஊஞ்சலில் பாட்டி உட்கார்ந்திருக்க, சிவராமனுடைய மனைவி கமலம் முற்றத்துத் தூணின் மீது சாய்ந்தவளாய் அமர்ந்திருந்தான். 

“நந்நாத் தூங்கினாயா பாரதி? பாவம் ராத்திரி முழுக்க நீ தூங்கலேன்னு அண்ணா சொன்னார்” 

“ஸாரி, சித்தி என்னை அறியாம்…” 

“சேச்சே என்ன நீ? போய் ஒன் அத்தையைப் பாரு. அப்பத் தூங்கத் தொடங்கினவள் இன்னும் கண் தொறக்கலே. கோந்தை, சகஸ்ரத்தோட ஆதல் தூங்கிண்டிருக்கான், அண்ணா இப்பத்தான் டிபன், காப்பி குடிச்சுட்டு மெடிககல் ஷாப் வரை போய்ட்டு வரேன்னு போனார். போறதுக்கு மின்னால ஒன்னை ஆரும் எழுப்பப்படாதுன்னார். முஞ்சியை அலம்பிண்டி வா! பல் தேய்க்கணும்னு தோணினா தேய்ச்சுட்டு ஹாட்பாக்ல சப்பாத்தியும் உருளைக் கிழங்கு மசாலும் இருக்கு வா. திங்கலாம்!” 

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியவே சித்தி…”

“போடி பைத்தியக்காரி! நம்ம தேகம் மனுவு தேகம் தானே? அது அசத்தாதா?” 

விரைவாக பாரதி குளியல் அறையை நோக்கி நடந்தாள். அவளுக்கு டிபன் காப்பி கொடுக்கவில்லை. என்றுதான் கமலம் சித்தி இத்தனை நேரமாக உட்கார்ந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தாள். 

அவள் டில்லியை நினைத்துப் பார்த்தாள். இயந்திர வாழ்க்கை, வீட்டில் அம்மா, அப்பா, அண்ணா என்று எல்லோரும் இருந்தாலும் ஒரு குடும்ப மரமாக நிற்க வில்லை. சொல்லப் போனால் அடிமரமே இல்லாமல் வெறும் கிளைகளே இஷ்டப்படி இஷ்டப்பட்ட திசையில் போயின. அம்மாவின் பாசமோ, அப்பாவின் கனிவோ அவ்வப்போது தெரிந்தாலும், இப்போது நினைத்துப் பார்க்கும்போது அந்த உணர்ச்சிகள் ரத்த பாசத்தால் முளைத்தே ஆகவேண்டிய உணர்ச்சிகள் தாமே? 

ஆனால் இங்கே? 

கணவன் தன் விதத்தில் அன்பைச் செலுத்துகிறான்.

சகஸ்ரம் ஓர் அத்தியந்த நண்பனிடம் பேசுவது போல அவளிடம் பேசுகிறான். 

மாமனார் தம் பாராட்டைத் தம் வழியில் காட்டுகிறார். பாட்டி அவளைப் பார்க்கும்போதெல்லாம் “சாப்பிட்டாயா, காப்பி குடிச்சாயா, நன்னாத் தூங்கினாயா” என்று கேட்கிறாள். 

ராஜி சித்தி அவளிடம் கலகலப்பாகப் பேசுகிறாள் என்றால், இதுவரை நேரடித் தொடர்பே இல்லாத கமலம் சித்தியும் வாஞ்சையுடன் பேசுகிறாளே.. 

ஏன்? 

இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? 

அவர்கள் முன்பின் பார்த்திராத ஒரு பெண் அவள்! 

அவள் மீது பாசம் காட்டுகிறார்கள். அன்பைச் சொரிகிறார்கள். 

பரிவை உணர்த்துகிறார்கள்! ஏன்? 

ஏன்? 

ஏன்? 

கேள்விக்கு விடை தேடும் முயற்சியைக் கைவிட்டு வீட்டு, கமலம் சித்தியை நோக்கி நடந்தாள். 

அத்தியாயம்-17

நாராயணனால் வாக்களித்தபடி பாரதியை அழைத்துக் கொண்டு எஸ்டேட்டில் இரண்டு மூன்று நாள்கள் தங்க இயலாமல் போயிற்று. தவிர்க்க முடியாத சில வேலைகளும், ஓரிரு சந்திப்புகளும் அவனைப் பாலக்காட்டிலேயே கட்டிப்போட்டு வைத்தன. ஆனால் அவனால் வீட்டிலும் நினைத்தபடி இருக்கவோ தங்கி ஓய்வெடுக்கவோ முடியவில்லை. 

பாரதிக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அவள் காட்டிக் கொள்ளவில்லை. அவள் அவனுக்காகக் காத்திருந்தாள். 

ஐந்தாறு நாள்களாக வீட்டில் அவளுக்குப் பல வேலைகள் இருந்து வந்தன. அத்தை முன் போல் தொட்டதற்கெல்லாம் முகத்தில் அடிப்பதுபோலப் பேசவில்லை என்றாலும் தங்கம்மாவின் போக்கு புதுவிதமாகப் பாரதிக்குப் பட்டது. 

“எந்தக் காய்களை நறுக்கணும்?” என்று அவள் கேட்டால், 

“உன் இஷ்டம்போல எதை வேணும்னாலும் நறுக்கு” என்றாள். 

”நான் சகஸ்ரம் சித்தப்பா வீட்டுக்குப் போறேன்”

“இதை எங்கிட்ட சொல்லுவானேன்?”

“தேவகி போன் பண்ணினா, கார்ல வந்து அழைச்சுட்டுப் போறாளாம்”. 

“நான் தடுத்து நிறுத்தலையே?” 

“அத்திம்பேருக்கு அடை மிருதுவா இருக்கணுமா இல்லை முறுகலா?” 

“நீ எப்படித் தட்டிப் போட்டாலும் அவர் திம்பார்”

ஒருநாள் பாரதி “அத்தே நீங்க மாறிப் போயிட்ட மாதிரிப் படறது” என்றாள். 

இதன் பிறகு பாரதி தங்கம்மாவிடம் தானாக வலிய வந்து பேசவில்லை. எப்பவாவது ஏதானும் கேள்விகள் கேட்டால் ஓரிரு வார்த்தைகளில் பதில்களைக் கூறினாள்.

மொத்தத்தில் மற்றவர் அறியாமல் அவர்களிடையே ஒரு மௌன யுத்தம் துவங்கியது. 

மற்ற எல்லோரும் எப்போதும் போல இயல்பாக நடந்து கொண்டார்கள். ‘பொண்ணே. பொண்ணே’ என்று சுபாவமாக அவளை அழைப்பதை ஈசுவரன் நிறுத்தவில்லை. பாட்டி பழைய கதைகளைத் தொடர்ந்தாள். அவள் சின்னப் பெண்ணாக இருந்தபோது ஒரு வீட்டில் குட்டிச்சாத்தான் செய்த திரிசமன்சுளை விவரித்தாள். ஒரு தடவை மூன்று வயது ஈசுவரனை அழைத்துக் கொண்டு திருப்பதிக்கு பஸ்ஸில் சென்றதையும், திரும்பி வரும் பொழுது புத்தூர் அருகே விபத்து நேர்ந்ததையும் கதை போல விவரித்தாள். கோந்தை அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லுவதற்கு முன் அவளை நமஸ்கரித்ததையும் அப்போது அவள் பொங்கப் பொங்க அழுததையும் கண்ணீர் மல்கக் கூறினாள். 

மெல்ல மெல்ல அதிகாலையில் தூங்கி எழுந்திருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தங்கம்மா வாய் வார்த்தையால் பாராட்டா விட்டாலும், முகபாவனையால் திருப்தியை வெளிப்படுத்தினாள். பல் தேய்த்ததும் அவள் காப்பியைத் தேடி வரலில்லை. குளித்துவிட்டுப் புடைவை மாற்றிய பிறகே சமையலறைக்கு வந்தாள். அவளே தன்னுடைய காப்பியையும் கலந்து கொண்டாள். 

அவளுடைய நடவடிக்கைகளைக் கண்டு வந்த ஈசுவரன் அவளைத் தம் அறைக்கு வரவழைத்தார். 

“பொண்ணே, வா! ஒக்காரு”. 

“பரவாயில்லே அத்திம்பேர்” 

“ஒக்கார்னா ஒக்காரணும். நான் பெறலைன்னாலும் என் புள்ளையோட பொண்டாட்டி எம் பொண் மாதிரி தான்”

பாரதி உட்கார்ந்தாள். 

“ஒங்கிட்ட ஒரு மாத்தம் தெரியறது”. 

“இல்லையே அத்திம்பேர், நான் எப்பவும் போலத் தான் இருக்கேன்”. 

”ஒம்பது மணி வரைக்கும் தூங்கறியா?”

“இல்லை”. 

“குளிச்சுட்டு நீயே ஒன் காப்பியைக் கலந்துக்கறாய்”

“அது…அது..” 

பாரதி பதில் சொல்லவில்லை. 

“மின்ன மாதீரி தங்கமும் ஒன்னை இஷ்டப்படிக் கரிச்சுக் கொட்றதில்லை”. 

”அத்தை கரிச்சுக் கொட்டினாக்கூடத் தாங்கிக்கலாம் போலிருக்கு அத்திம்பேர்! ஆனா வாயைத் திறக்காமே இருக்கா….நான் என்ன தப்பு செய்ஞ்சேன்னு எனக்கேத் தெரியலை.”

“வந்த புதுசுல நோக்கு ஒண்ணும் தொயாமஇருந்தது, அத்தை, அத்திம்பேர் தானேன்னு கொஞ்சம் அசிரத்தையா இருந்தே…அப்ப, ‘நான் அத்தை அல்ல. ஒன் மாமியார்’னு சொல்ல தங்கத்துக்குச் சான்ஸ் கிடைத்தது… இதெல்லாம் இருக்கட்டும். இப்ப எப்படி எல்லார்ட்டேயும்சௌ ஜன்யமா இருக்க உன்னாலக் கழியறது?” 

“எங்கிட்ட எல்லாரும் அன்பா நடந்து கொள்றா அத்திம்பேர். நீங்க, அவர், சகஸ்ரம் சித்தப்பா, கமலம், ராஜி, சித்திகள், பாட்டி, தாத்தா எல்லோரும் என்னை ஒரு பெண்ணா மதிச்சு கனிவா நடத்தறா. இவங்களெல்லாம் இப்படி இருக்கறப்ப நான் என்னோடஅதிருப்தியாலே அலட்சியமா இருக்கலாமா அத்திம்பேர்? அது அநாகரிகமில்லையா? அன்கல்ச்சர்ட் இல்லையா? எனக்குச் சின்ன வயசிலிருந்தே ஒண்ணு, ரெண்டு கெட்ட சுபாவங்கள் உண்டு.”

“நானும் தெரிஞ்சுக்கறேனே?” 

“என்னை மதிச்சா நானும் மதிப்பேன். தூக்கி எறியப் பார்த்தா நானும் தூக்கி எறிவேன்.” 

“இது கெட்ட குணம்னு ஆரு சொன்னா? நமக்குன்ணு ஒரு இன்டிவிஜிவாலிட்டி-தனித் தன்மைன்னு சொல்லலாம் இல்லியா. அதை விட்டுக் கொடுக்கறது கோழைத்தனம். உம் அப்புறம் வேற என்ன கெட்ட குணம்?” 

“பிடிவாதம். நான் பிடிச்ச முயலுக்கு முணுகால்னு அடிச்சுச் சொல்ற அளவுக்குப் பிடிவாதம், ஜன்ம குணம். இதுக்காக அம்மா என்னை கொஞ்சமாவா அடிச்சிருக்கா கிள்ளியிருக்கா! காலேஜ்லகூட என் பிடிவாதம் காரணமா ஒரு தடவை சஸ்பென்ட் பண்ணியிருக்கா” 

“நல்ல காரியங்களுக்காகப் பிடிவாதம் பிடிக்கறது குத்தமில்லை பொண்ணே…ஆமாம். இப்படி பிடிவாதம் உள்ள நீ எப்படி கல்யாண விஷயத்திலே கோட்டை விட்டே?” 

“மொதல் காரணம் அப்பா, ரெண்டாம் காரணம் உங்க புள்ளை…மூணாவது நான்”. 

“நாலாவது தங்கம்!” என்றான் ஈசுவரன்.

“ஆமாம். ஆனா அப்பாவோட மனசு கதறினப்ப என்னாலே பிடிவாதமா இருக்க முடியலே.” 

“பிஎச்.டி. விஷயத்திலே ஒன் பிடிவாதம் இப்ப எந்த அளவிலே இருக்கு?”

“பரமபத சோபான படம் மாதிரி அத்திம்பேர்.”

“மனசிலாகலை”

“டில்லி, எம்.ஃபில் இதெல்லாம் நினைவுக்கு வர்றப்ப ஏணி வழியா உச்சாணிக் கொம்புக்கே போயிடறேன். அவரையும் இந்தக் குடும்பத்தையும் நினைக்கறப்பவும் கைலாசத்தைப் பத்தி நினைக்கறப்பவும் தேவகி பேசிய பேச்சு காதிலே ஒலிக்கறப்பவும் திபுதிபுன்னு பாம்பு வழியா இறங்கிடறேன்”. 

ஈசுவரன் வாய்விட்டுச் சிரித்தார். 

“மின்னால தேவகி என்ன சொன்னாங்கறதைச் சொல்லு”. 

“நான் பிஎச்.டி. பண்றது என்னோட லட்சியம்னு சொன்னேன். அது லட்சியம் இல்லே, வெறும் ஆசை தான்னு தேவகி சொன்னா. இது என்னைத் திங்க் பண்ண வைச்சது.” 

“ஏன் அப்படிச் சொன்னா அவ? பிஎச்.டிங்கறது ஒரு புட்பால் கோல் போஸ்ட், நீ அறிவு, படிப்புங்கற பந்துகளை வைச்சுண்டு…. அந்த கோலுக்கு ஓடணும்னு துடிக்கறே…”.

“கோல் போடறது லட்சியம் இல்லையாம்”

“காரணம்?”

“ஆசைக்காக, திருப்திக்காக எதையாவது ஒண்ணை அடைஞ்சா அது சுயநலம் காரணமாகத்தான் இருக்குமாம். பிஎச்.டியை முடிச்சுட்டு டீச்சிங் லைனுக்குப்போய் என்னால நூத்துக் கணக்கான பேருக்கு உபயோகமா இருக்கணும்னு நான் நினைச்சிருந்தா ஒரு லட்சியம், ஒரு பர்ப்பஸ் இருக்குமாம். இதை நான் ஒரு லட்சியவாதி மூலமாத்தான் கத்துக்க முடியும்னு அவள் என்னை கைலாசம் வீட்டுக்கு அழைச்சுட்டுப் போனா!” 

“பேஷ் பேஷ்…சுவாரசியமா இருக்கே இதை ஏன் எங்கிட்ட நீ மின்னாலேயே சொல்லலை?” 

“அன்னிக்கு ராத்திரிதான் அத்தையை பாம்பு கடிச்சது அதுக்கு அப்றம் சொல்ல சந்தர்ப்பம் கெடைக்கலே.” 

“கைலாசத்தை நேக்கு நந்நாத் தெரியும். அவன் ஒரு ஜீனியஸ்….பாரஸ்ட்ரியில மன்னன். இந்தைக்கும் ஆப்பிரிக்கா அமெரிக்காவில் இருந்தெல்லாம். லெக்சர் அழைப்பு வர்றது. காங்கோ காட்லே மூணுமாசம் இருந்திருக்கான். இப்ப என்ன சேயறான் தெரியுமா?”

“தெரியும்.” 

“ஆனா இந்த லட்சியம் அவனுக்குப் படிக்கறப்பவோ வேலையில் இருக்கறப்பவோ தீர்ச்சையா இருந்திருக்காது, இருந்திருந்தா அந்நைக்கே இந்நைக்குச் சேயறதைத் தொடங்கி இருப்பன், காட்ல இருக்கறப்ப காட்டுவாசிகளோட நிலைமையைப் பார்க்கறப்ப மனசில ஏதோ ஒண்ணு தட்டியிருக்கணும். இல்லாட்டா ஆராவது அவாளுக்கு நடுவிலதான் வாழ்வேன்னு வாழ்வாளா? அவன் ஒய்ஃப் மீனாட்சி பெரிய ஐடியலிஸ்ட்” 

“இவங்களை நினைச்சுப் பார்க்கறப்ப மனசு தளர்ந்து, போறது…”

“பாம்பு வழியா எறங்கியுடறாய் அல்லவா?”

“ஆமாம்” 

“ஆருக்கு எப்ப என்ன லட்சியம் மனசிலஞானோதயம் மாதிரி பொறக்கும்னு ஆராலும் சொல்ல முடியாது பொண்ணே… ஓனக்கு ஒண்ணு தெரியுமா?” 

“என்ன அத்திம்பேர்?” 

“நம்ப களத்தில ஏழெட்டு ஏக்கர் நிலத்தில கோந்தை மரச்சினி போட்டிருக்கான்,” 

“டாபியோக்கா”. 

“கரெக்ட் வர்ஷா வர்ஷம் பத்து இருபதாயிரத்துக்கு மேல் கெடக்கறது. அத்துறை ரூபாயையும் என்ன சேயறான் தெரியுமா?” 

“தெரியாது. அத்திம்பேர்” 

“களத்துக்கு அஞ்சு கிலோ மீட்டர் தூரத்தில வயசான அநாதைகள் சௌகரியமா இருக்க ஒருத்தன நிலம் கொடுத்தான். இன்னொருத்தன் கட்டடம் கட்டிக் கொடுத்தான். பல பேர் டொனேஷன் கொடுக்கறா. கோந்தை, அவாளோட வைத்தியச் செலவுக்குன்னு இந்த மரச்சீனி வித்து பணத்தை பணத்தை நாலஞ்சு கொல்லமாகக் கொடுத்து வர்ரான். ஆராவது செத்துப் போயிட்டா, இவலுக்குத்தான் மின்னால் சொல்லி அனுப்புவா. அநாதை ஆச்சே? கொள்ளி போட ஆர் இருக்கா? இவன் சவத்தையும் தலைமாட்ல தூக்கி வைச்சுண்டு நடப்பன். மசானத்திலே கொள்ளியும் போடுவன்!” 

“எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது, அத்திம்பேர்” 

“எனக்கே போன வர்ஷம்தான் தெரியும். அதுவும் எப்படி? ஆடிட்டர் வந்து சொல்லி, ‘ஓங்க புள்ளை மரச்சீனி வரவைக் காட்டிட்டு சொந்தச் செலவுக்கு எடுத்துண்டதா கணக்குக் காட்டறான் சார்னு” சொன்னான். நான் ஓடனே விசாரிக்கலை. அவன் இல்லாதப்ப களத்துக்குப் போனேன். அங்கே ஆசிரமத்தை நடத்தறவா இரண்டு பேர் கோந்தையைக் காண வந்திருந்தா. அப்ப அவா சொன்னா.” 

பாரதி திகைத்துப் போய் ஈசுவரனைப் பார்த்தாள். 

“இப்ப என்ன சொல்றாய், பொண்ணே? இது ஆசையா, லட்சியமா? அவன் இப்படிச் சேயறது அவனுக்கும், எனக்கும்தான் தெரியும். நாங்க வர்ஷா வர்ஷம் எங்க லாபத்தைப் பங்கு போட்டுக்கறப்ப மரச்சீனிப் பணத்தை நாங்க எடுத்துண்டாச்சுன்னு எழுதிப்போம்.” 

“பிஎச்.டி. என்னோட ஆசை தான் என்கிறதை ஒத்துக்கறேன் அத்திம்பேர், ஆனா இந்த ஆசை நிறை வேறணும்ங்கற பேராசையும் எங்கிட்ட இருக்கே” 

“இதை அடக்க ட்ரை பண்ணு! ஒன் வாழ்க்கை அமோகமாக இருக்கும் பெண்ணே!” 

“அடக்க முடியாமப் போச்சுன்னா!”

“கோந்தை கிட்ட டிஸ்கஸ் பண்றேன். நீயும் பேசு. ஒரு மாசத்துக்குள்ள ஒன்னோட முடிவைச் சொல்லு”.

“உங்களுக்குப் பிடிக்காத முடிவா இருந்தா?”

“இந்தக் குடும்பத்துக்கு சகிச்சுக்கூற சாமர்த்தியம் உண்டு”. 

“நான் வரேன் அத்திம்பேர்.” 

“ஒன் ஆசைதான், ஒன் லைஃப்ல முக்கியம்னு நீ தீர்மானிச்சா நாங்களே ஸீட் வாங்கித் தர்றோம்!”

வியப்புடன் பாரதி அவரைப் பார்க்க, அவர் அவளுடைய கண்களைச் சந்திக்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார்.

பாரதி மாடிக்குச் சென்றாள்.

தான் ஒரு சுயநலக்காரி என்ற எண்ணம் அவளையும் மீறி எழுந்து அறைந்தது. அதே சமயம் நாராயணன் உதவி மூலம் உதவி பெறும் அநாதைகளையும், அந்த ஆசிரமத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் பிறந்தது. 

ஈசுவரன், பாரதி வெளியேறியதும் அறையை விட்டு வெளியேறி ரேழிக்கு வந்தார். 

தங்கம்மா நின்று கொண்டிருந்தாள். 

“என்ன தங்கம் இங்க நிக்கறாய்? உள்ளே வா”.

மீண்டும் அவர் நாற்காலியில் உட்கார, எதிரே தங்கம்மா நின்றாள். 

“உம் சொல்லு” 

“ரெண்டு பேரும் என்ன பேசிண்டிருந்தேன்?”

“விசேஷமா ஒண்ணுமில்லை தங்கம்”. 

“கட்டின பொண்டாட்டிக்கிட்டக் கூடச் சொல்லப் படாத விஷயமாக்கும்”. 

“ஒனக்குத் தெரியாம இந்தாத்திலே ஏதாவது நடந்திருக்கா? தீர்ச்சையா கொஞ்ச நாள்லே உனக்கு நானே சொல்றேன்.” 

“ஓ. அப்படியா?”

“அப்படித்தான்” 

“நான் அவகிட்ட கேக்க ரொம்ப நேரமாகாது”. 

“அப்ப எந்துக்கு இப்ப என் மென்னியைப் பிடிக்கிறாய்?” 

“அத்தைக்கு பாம்பு கடிச்சுதே. அந்நைக்கே நான் போயிருக்கணும்” 

“இதப்பாரு தங்கம்…பாம்பு கடிச்சது ஒரு கண்டம். அதைத் தாண்டறதும் தாண்டாததும் நம்ப கையிலே- இல்லை”. 

“நேத்தைக்கு வந்தவளைக் காட்டிலும் நான் இளப்பமாப்போயிட்டேன். இல்லையா?” 

“இல்லை”. 

“அப்ப என்னென்னு சொல்லுங்கோ” 

”சரி சொல்லி யூடறேன். ஆனா நீ அவகிட்ட மூச்சு விடப்படாது”. 

“கண்டிஷன் போட்டா, நீங்க சொல்லண்டாம்”. 

”அவ ரெண்டு ரெண்டரைக் கொல்லம், நம்மாத் இருக்க மாட்டா.” 

“எங்க போறா?” 

“முக்காலே மூணு வீசமும் மதிராசியாத்தான் இருக்கும்”. 

“எந்துக்கு?”

“படிக்க” 

“மின்ன சொன்னாளே, பிஎச்.டி. அதுவா?”

“அதேதான்”. 

“நீங்க சம்மதிச்சேளா?” 

“இல்லை”. 

“கோந்தை?”

“இல்லை!” 

“அப்ப ஆர் சம்மதத்தோட அவ இந்த ஆத்தைவிட்டுப் போறா? சம்மதம் இல்லாதைக்கு இத்தறை கொழுப்பா?”

“கொழுப்பும் இல்லை. கொலஸ்ராலும் இல்லை. அவ மேல படிக்க ஆசைப்படறா. அந்த ஆசையை அடக்க நான் ட்ரை பண்றேன். நல்லதனமாச் சொன்னா வழிக்கு வருவள். நாம அதட்டி மிரட்டிப் பேசினா, ‘போடா, போ’ன்னு போவள். எப்படிப் பேசணும்னு நீ விசாரிக்கறாய், தங்கம்?”

தங்கம்மா உடனே பதில் சொல்லவில்லை. 

ஓரிரு நிமிட மௌனத்துச்குப் பிறகு, “அப்ப நம்ப பிள்ளை பொண்டாட்டி இல்லாதைக்கு ரெண்டு ரெண்டரை வர்ஷம் தள்ளணுமா?” என்றாள் 

“எத்தனையே இடங்கள்லே கல்யாணத்துக்கு அப்றம் பொண்டாட்டிமார் ஆம்படையான்களோட ஒரு வர்ஷம் வாழாம இருக்கா. நம்ப சாத்தப்புரம் விசுவநாதன் புள்ளை மணி என்ன சேதான்? தாலியைக் கட்டிப்புட்டு ஸ்டேட்ஸ் போனான். வர்ஷம் ரெண்டாறது. அவளுக்கு இன்னம் விஸா கெடைச்சுட்டில்லா, இதுக்கு என்ன சொல்றாய்?”

“நீங்க சொல்ற மணிக்கு ஆறுமாசக் குழந்தை இருக்கு. இது தெரியுமா ஒங்களுக்கு? இந்த ரெண்டு வர்ஷத்தில அவன் மூணு பிராவசியம் வந்தாச்சு.” 

”இப்ப குழந்தை பெத்துக்கறதா பெரிய காரியம்…? எந்துக்கு நீயும் நானும் தர்க்கம் பண்ணனும், தங்கம்? கோந்தை என்ன சொல்றான்னு பார்ப்போமே?”

”கோந்தை என்ன வேணம்னாலும் சொல்லிண்டு போகட்டும். அவ இந்த வீட்டுப் படியை விட்டு ஏறங்கி மெட்ராசுக்கு வண்டி ஏறினா அம்புட்டுதான். அப்றம் இந்தாத்துப் படியில கால் வைக்கமாட்டா” 

“அவ ஒன் அண்ணா பொண்” 

“அது தாலி ஏற்றதுக்கு மின்னால! இப்ப என் மாட்டுப் பெண். குடும்பம் நடந்த வந்த பெண்.” 

“அப்படியே அவ படி இறங்கிப் போனா என்ன சேவாய்? அவளைப் படி ஏத்த மாட்டாய்? இப்படிச் சேதா, அப்ப நம்ப கோந்தை கதி என்னவாகும்?”

“ஒரு டைவொர்ஸ் நடக்கும். இன்னொரு கல்யாணத்துக்கு மேளம் கொட்டும்.” 

“நீ இப்படியெல்லாம் பேசுவாய்னு தெரிஞ்சுதான். எல்லாத்தையும் அப்றமாச் சொல்றேன்னேன்…. நான், சகஸ்ரம், தேவகின்னு எல்லாரும் நல்லதனமாப் பேசி அவ ஆசைங்கற விஷத்தைக் கொஞ்சம் கொஞ்சமா எறக்கப் பாக்கறோம். நீ குறுக்கே வந்து காரியத்தைக் கெடுக்காதே!” 

“நல்லதெல்லாம் நான் சேயறப்ப, எல்லார் வாயிலேயும் கொழக்கட்டை அடைச்சுண்டிருக்கும். நான் குறுக்கே வரேனாம், கெடுக்கறேனாம்.’ 

தங்கம் வெளியேறினாள். 

அவளை ஈசுவரனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் அவர் மீதோ, மருமகள் மீதோ கோப்பட்டுப் பேச வில்லை. அவளுடைய பிள்ளையை நேற்று வந்த ஒருத்தி பறித்துக்கொண்டு போய் விட்டாளோ என்ற பயத்திலும் பீதியிலும் கத்துகிறாள். இப்போது பாரதி வெளியேறிப் போய்ப் படிப்பதையும் எதிர்க்கிறாள். டிவோர்ஸ் என்று பிதற்றுகிறாள். 

பிள்ளைக்கு ஒரு மனைவி வேண்டும். தான் மாமியாராக இருக்கவேண்டும். ஆனால் பிள்ளை தனக்கு மட்டுமே சொந்தம். ஒவ்வொரு தாயாரின் மனத்திலும் பிள்ளையின் மணவாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இப்படிப்பட்ட விந்தையான எண்ணங்கள் ஏன் தோன்றுகின்றன? 

ஈசுவரன பழைய நாள்களை நினைவு கூர்ந்தார். ஊருக்கெல்லாம் நல்லவளாக இருந்த அவளுடைய தாயார் மருமகள் தங்கத்தை மட்டும் எதிரியாகக் கருதினாள். 

அவருக்குத் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. 

அத்தியாயம்-18

நங்கவரத்தில் – 

சந்திரமௌலி சாப்பிட்டு அன்றைய ‘இந்து’ நாளிதழை மீண்டும் விவரமாகப் படிக்க சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தார். அந்தச் சமயம் பார்த்து, தபால்காரர் ஒரு கடிதத்தைத் திண்ணையில் போட்டுவிட்டுச் சைக்கிளிலில் சென்றார். ஏற்கனவே தபால்காரர் ‘போஸ்ட்’ என்று குரல் கொடுத்திருந்ததால் மௌலி மெல்ல எழுந்தார். 

“நான் போய் எடுத்து வரேன். பாரதிதான் போட்டிருப்பா” என்றாள் சுசீலா. 

சுசீலா ஏமாற்றத்துடன் கடிதத்துடன் திரும்பி வத்தாள், 

”உங்களுக்குத்தான். ஈச்சா எழுதியிருக்கிறார்.” 

“கையெழுத்திலேந்து கண்டு பிடிச்சியா?” கூறிக் கொண்டே அவளிடமிருந்து கடிதத்தை வாங்கினார் மௌலி. 

“இன்லண்ட். பின்னாடிதான் பி.என். ஈசுவரன், பள்ளிப்புரம், பாலக்காடு சிக்ஸ்னு கொட்டை கொட்டையா எழுதி இருக்கே?”” 

அவளுடைய வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், மெளலி கடிதத்தை உடைத்துப் படித்தார். அவருக்குத் திடுக்கிட்டது. 

“என்ன எழுதி இருக்கார் உங்க தங்கை புருஷன்?”

“தங்கை புருஷன் எழுதலே, சுசீலா”. 

“பின்னே?” 

“சம்பந்தி,” 

“என்னலாம்?” 

“நான் இன்னிக்கு பாலக்காடு புறப்படறேன். ரெண்டு நாள்லே திரும்பறேன்”. 

“என்ன விஷயம் அதைச் சொல்லுங்க”. 

“திருப்பி வந்தப்புறம் சொல்றேன்”. 

“பாரதியைப் பத்தியா?” 

”ஆமாம்.”

“என்ன நடந்திருக்கு?” 

‘”அதான் வந்து சொல்றேன்னேனே?”

“அவ உங்களுக்கு மட்டும் பெண் இல்லே, எனக்கும் தான். அந்த லெட்டரை இப்படிக் கொடுங்கோ” 

“நீ மனசு கஷ்டப்படுவே சுசீலா”

“பாரதியாலே நான் என்னிக்கு மனசு கஷ்டப்படாம இருந்திருக்கேன்? அதைத் தாங்கோ.” 

“சரி உன் இஷ்டம்”

சுசீலா கடிதத்தைப் படித்தாள். ஆங்கிலத்தில் இருந்தது.  

ஒரு தடவைக்கு இரண்டு தடவைகளாகப் படித்த பிறகு- 

“நம்ப பெண்ணுக்கு புத்தி ஏன் இப்படிப் போறது?”

“எல்லாம் உன்னால்தான்.”

“அது சரி… இப்ப இதுக்கு நான்தான் காரணம் கிறேளா?” 

“முழுக்காரணம்னு இல்லைன்னாலும் நீயும் அவளுடைய இந்தப் போக்குக்குக் காரணமா இருந்திருக்கே!” 

“எப்படி? சொல்லுங்கோ, கேட்கலாம்”. 

“தனக்கு பாரதியைப் பண்ணிக்கொள்ள இஷ்டமில்லை. தன்னால் அவளுக்குச் சுகமான வாழ்க்கை கிடைக்காதுன்னெல்லாம் அன்னிக்கு இங்க வந்தப்ப நாராயணன் சொன்னான். அதுக்கு ஈச்சா அவ சம்மதிச்சா நீ சரின்னு சொல்லுவியான்னு அவன்கிட்டக் கேட்டார். நாம என்ன செய்ஞ்சோம்? பாரதியை இழுத்துண்டு வந்து அவகிட்டத் தனியாப் பேசினோம். அப்ப நீ என்ன சொன்னே? சரின்னு சொல்லு பாரதி, நிச்சயமா உன் ஆசையும் நிறைவேறும் ‘ஒரு கோடீசுவரன் வீட்டு சௌகரியங்களும் கிடைக்கும். நாராயணனும் ராஜா மாதிரி இருக்கான்’. இப்படிப் பேசினே நீ நினைவு இருக்கா?” 

“நன்னா நினைவு இருக்கு. ஆனா அன்னிக்கு நான் ஏன் அப்படிப் பேசினேன்? அது தெரியுமில்லையா? பிஎச்.டிக்கு அவ ஒத்தக்கால்லே நின்னுட்டிருந்தா, அதை ஓடிச்சாத்தானே கல்யாணம் நிச்சயமாகும்? நம்ப பாரம் இறங்கும்?” 

“அதுக்காகப் படிச்ச பெண்கிட்ட ஆசை வார்த்தைகளை அள்ளிக் கொட்றதா? நான் என்னோட இல்லாமையையும் இயலாமையையும் சொல்லி அவ காலைப் பிடிச்சேன். நீ பொய்யா, தொடுவானத்தை அவளுக்குச் காட்டினே. அவளும் அதை மெய்னு நினைச்சு சம்மதிச்சா” 

“அப்படிப் பார்த்தா உங்க எச்சா ஏன் தேன் ஒழுகப பேசணும்? ‘மூணு மணி நேரத்திலே. நேரத்திலே கோழிக்கோடு போலாம். எர்ணாகுவம் போகலாம். அங்கெல்லாம் யூனிவர்சிட்டி. இருக்கு’ன்னு அவர் ஏன் தூண்டில் போடணுமாம்?” 

”அவன் அப்படிச் சொன்னதுக்கு இப்ப அனுபவிக்கறான, காட்டினதுக்கு, நீ அனுபவிக்கப் போறே”. 

“பாரதி ஒண்ணும் பாலக்காட்டை விட்டுப் போகலையே.” 

“போனா எல்லார்க்கும் தலைக்குனிவுதானே சுசீலா?”

“நானும் உங்ககூட வர்றேன்,” 

“எதுக்கு? காரியத்தைக் குட்டிச்சுவராக்கவா?” 

“ஏன் அப்படி நினைக்கறீங்க? பொறந்த முப்பதாம் நாள்லேயே பாரதிக்குப் பிடிவாதமும் பொறந்தாச்சு, சின்ன வயசிலே கொஞ்சமா அழிச்சாட்டியம் பிடிச்சிருக்கா? புரண்டு புரண்டு அழுவள்” 

“நீ மொத்து மொத்துன்னு மொத்துவே, ‘பிடிவாதம் செய்ஞ்சா அம்மா என்ன செய்வா? அடிப்பா. அவ்வளவு தானே’ன்னு அவளுக்குத் தோணித்து. பலன் பிடிவாதம் வளர்ந்தது”. 

“சரி அப்ப என்ன நடக்கும்னு உங்களுக்குத் தோண்றது?” 

“நீதான் லெட்டரைப் படிச்சியே? ஈச்சாவுக்கு இஷ்டமில்லை. மாப்பிள்ளைக்கு இஷ்டமில்லை. எல்லாத்துக்கும் மேலா என் தங்கை தங்கம்மாவுக்கும் இஷ்டமே இல்லை”. 

“இந்த மூன்று பேர் பேச்சையும் மீறிண்டு பாரதி பிஎச்.டிக்கு ஓடறான்னு வைச்சுப்போம். அப்புறம் என்ன. நடக்கும்?” 

“அப்புறம்னா எப்புறம், சுசீலா?”

“படிச்சு முடிச்சப்பதம்.” 

“என் தங்கையைப் பத்தி உனக்குத் தெரியாது. தன் புள்ளைக்கு வேறொருத்தியைக் கல்யாணமே பண்ணி வைச்சுடுவா”. 

“சட்டப்படி அது செல்லாதே?” 

“கல்யாணமான ஒரு மாசத்துக்குள்ளே பெண் வீட்டை விட்டு யார்ட்டேயும் சொல்லிக்காமப் போயிட்டா. கான்ஜுகல் ரைட்ஸ் அதான் கல்யாணம் ஆனப்புறம் ரெண்டு பேருக்கும் உள்ள உரிமைகளைப் புறக்கணிச்சுட்டாள்னு கேஸ் போடுவா, கேஸ் வர்றப்ப வாதம் மட்டும் பேசாது. பணமும் பேசும். ஈச்சா பணக்காரன், தங்கம்மா ரோஷக்காரி.” 

“அடக் கடவுளே!” 

“இன்னும் மிஞ்சிப் போகலை, அதான் ஈச்சா என்னை வரச் சொல்லியிருக்கான்.” 

“சரி போய்ட்டு வாங்கோ. எனக்குத் திட்டவும், அடிக்கவும்தான் தெரியும். உங்களை மாதிரி உணர்ச்சி நெகிழ்ச்சியோட, அழுகைக் குரல்லே பேசத் தெரியாது”

“அழ வேண்டிய இடத்தில் அழுதுதான் காரியத்தைச் சாதிச்சுக்கணும். அப்ப நாமும் குழந்தைகள் மாதிரி ஆயிடறோம்.” 

“வேதாந்தம் போறும். கிடைக்கற முதல் பஸ்ஸைப் பிடியுங்கோ” 

“ரெயில்லே போறேன். திருச்சியிலிருந்து ஒரு எக்ஸ்பிரஸ் இருக்கு, கொச்சிக்குப் போறது. ஏழரை மணிக்குப் புறப்படும்.” 

“அது பாலக்காட்டுக்கு அர்த்த ராத்திரியிலே போகாதா?”

“ஆமாம். போகும். ரெண்டு மணிக்குப் போகும். பிளாட்பாரத்தில் நிறைய சிமென்ட் பெஞ்சு இருக்கும். ஒண்ணுலே காலை நீட்டிக்கறேன், விடிஞ்சப்புறம் பள்ளிப் புரம் போறேன்”. 

“இப்படிக் கஷ்டப்பட்டுப் போகணுமா?”

“பொண்ணைப் பெத்தவன் எவன் சுகப்பட்டிருக்கான், ஆளை விடு”. 

ரெயில் பிரயாணத்தில் மௌலிக்கு உடல் களைத்துப் போகவில்லை. மனம்தான் வலித்து வலித்துக் களைத்துப் போயிருந்தது. 

பாரதி முரண்டு பிடிக்கிறாள் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. 

ஈச்சா நல்ல மனிதர். நிறைந்த குடும்பத்தில் பிறந்து பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்றுகிறவர். வெளித் தோற்றத்தில் நல்லவனாகத் தெரிகிறார். எளிமையான உடை, குரலை உயர்த்தாமல் பேசும் குணம், தங்கம்மா: ஒருத்திதான் வாயாடக் கூடியவள். இவர்களிடமெல்லாம் பாரதி இத்தனை நாள்களாக எப்படி நடந்து கொண்டிருக்கிறாள்? யாராவது அவளிடம் ஒரு வார்த்தை கடுமையாகப் பேசி விட்டால் புலி போலப் பாய்வாள். ஏழு வயதிலிருந்து பதினாறு வயதுவரை அவள் எத்தனை சக மாணவிகளிடமும் அக்கம் பக்கத்துப் பெண்களிடமும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறாள்! வடக்கத்திக்காரப் பெண்ணுக்கு இணையாகச் சளைக்காமல் ஹிந்தியில் பேசச்கூடாததெல்லாம் பேசுவாளே? கல்லூரி வாழ்க்கையிலும் எத்தனையோ பிரச்சனைகள். எல்லா பரிட்சைகளிலும் முதல் வகுப்பில் தேர்வு பெற்றாலும், ஆசிரியர்களிடம் நல்ல பெயர் இல்லை. 

மெளலி மனம் குழம்பிப் போனார். என்னதான் பாரதி அவரிடம் மட்டும் அதீத பாசத்துடன் பழகினாலும் அவருடைய புத்திமதிகளுக்குச் செவி சாய்த்தாலும், அப்போது முளைத்துவிட்ட பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை வரவில்லை. பெற்ற தகப்பன் சொல்லியாவது மகள் மனம் மாறுவாளோ என்ற நப்பாசையில்தான் ஈச்சா அவருக்குக் சுடிதம் எழுதியிருக்க வேண்டும். 

ரெயில் பாலக்காட்டை அடைந்தது? ஈச்சாவையோ நாராயணனையோ எதிர் பார்க்காத மௌலி, ப்ளாட்பாரத்தின் ஒரு கோடியில் வெறிச்சோடிக் கிடந்த சிமென்ட் பெஞ்சியை அடைந்தார். உட்கார்ந்தார். சற்றைக்கெல்லாம் கால்களை நீட்டிக் கொண்டால் சௌகரியமாக இருக்கும் என்று நினைத்தார். முடிவில், கைப்பெட்டியைத் தலையணையாக மாற்றிப் படுத்துக்கொண்டார். 

அரைப் பிரக்ஞை, அரைத் தூக்கத்தில் தவிக்க, நாலா புறங்களிலிருந்தும் அவருடைய பெண் பயந்து வந்து தாக்குவதான பிரமை உண்டாயிற்று. 

ஒரு பக்கத்திலிருந்து பத்து வயது பாரதி. 

வலப் புறத்தில் கல்லூரியில் படிக்கும் பாரதி.

கால்களை யாரோ தாக்குவது போலப் பட்டது.பார்த்தார். கல்யாணமாகிவிட்ட பாரதி கோபக் கனல் கண்களில் வீச நின்று கொண்டிருந்தாள். 

அவர் பள்ளிப்புரத்தை அடைந்தபோது காலை ஐந்தரை. 

பெண் பாரதிதான் முதலில் அவரைப் பார்த்தாள்.

“வாங்க அப்பா! ஒரு பெரிய ப்ளெசன்ட் சர்ப்ரைஸா இருக்கு! உட்காருங்க. அத்தைட்ட சொல்றேன். அத்திம்பேர் பூப்பறிச்சுட்டிருக்கார். இப்ப வந்துடுவார்.மொதல்ல காப்பி கொண்டு வரேன்”. 

பாரதி உள்ளே ஓடினாள். 

ஆச்சர்யத்தில் மௌலி ஸ்தம்பித்துப் போனார். ஈச்சானின் கடிதம் அவர் மனத்தில் ஒரு பாரதியை உருவாக்கி இருந்தது. ஆனால் இப்போது அவர் பார்க்கிற பெண் வேறு பாரதியாக இருக்கிறாளே? எட்டு மணி வரை தூங்கிப் பழகியிருந்த அவள் ஐந்தரை மணிக்கு முன்னதாகவே குளித்து நெற்றி நிறைய குங்குமமும், ஈரத்தலையைக் காட்டிக் கொடுக்கும் துண்டுமாக நிற்கிறாளே? 

இப்போது பார்க்கிற பாரதியா ஒரு பிரச்னையை உருவாக்கியிருக்கிறாள்? இவள் பொருட்டா ஈச்சா அவரை நங்கவரத்திலிருந்து கொக்கி போட்டு இழுத்திருக்கிறார்? 

காப்பியுடன் வந்த பாரதி “ஏம்ப்பா அம்மாவையும் கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமே? அம்மா எப்படி இருக்காப்பா..? காப்பியைக் குடியுங்கோ. அவளுக்கு நான் இல்லாதது வீடே வெறுச்சன்னு ஆயிருக்குமே? அவளோட மல்யுத்தம் நடத்த இன்னொரு பெண்ணும் இல்லே. காப்பியைக் குடிங்கப்பா. கையிலேயே வைச்சுட்டிருந்தா எப்படி?” 

“நீ நன்னாயிருக்கியாம்மா?”

“ஒரு குறைச்சலும் இல்லாமல் திவ்யமா இருக்கேம்ப்பா” 

“மாப்பிள்ளை எங்கே?” 

“நேத்து கோழிக்கோடு போனார், ஏதோ ஸெமினாராம். அதோ அத்தை வர்றா, உங்களுக்குத் தெரியாதே. அத்தையை பத்து நாள் முன்னாலே பாம்பு கடிச்சுது, நல்ல பாம்பு” 

“ஐயய்யோ, எனக்குத் தெரியவே தெரியாதே! அப்புறம்?” 

“பாம்புக்கடி இந்த ஊர்ல தலைவலி மாதிரிப்பா. மாத்திரைப் போட்டுண்டதும் வலி போறதே. அதுமாதிரி..” 

“அண்ணா நீ எப்ப வந்தே?” தங்கம்மா அருகே வந்தாள். 

“இப்பதான்” 

“இப்ப ரெயில் இருக்கா என்ன?” 

“ரெயில் ரெண்டு மணிக்கு வந்தது. அசமயத்திலே இங்கே வருவானேன்னு ஸ்டேஷன்லேயே இருந்துட்டேன்.” 

“ஏதானும் விசேஷமா?”

மின்னாகப் புரிந்தது மௌலிக்கு, ஈச்சாவின் கடிதம் பற்றித் தங்கம்மாவுக்கு ஏதும் தெரியாது என்று.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே தங்கம்மா.” 

“இவர்ட்ட பணம் கிணம் ஏதானும் கடன் வாங்க வந்திருக்கியா?”

“சேச்சே, பொண்ணைக் குடுத்த இடத்திலே கடன் வாங்கக் கை நீட்டுவேனா?” 

“யார் சுண்டா? இந்தக் காலத்திலே என்ன வேணும்னாலும் நடக்கும்.” 

“பாரதியைப் பார்க்கணும் போல இருந்தது. அதான் வந்தேன்”. 

“இது மாதிரி மன்னிக்குத் தோணலையோ? அவ வயத்திலே பொறந்தவதானே இவ?” 

மெளலி பதில் சொல்லவில்லை. சின்ன வயசில் தங்கம்மா இப்படித்தான். நெஞ்சைக் குத்துகிற மாதிரி பேசுவாள். அது அடங்கி விட்டது என்று கல்யாணத்துக்கு முன்னாலும் கல்யாணத்தின் போதும் அவர் நினைத்தது எவ்வளவு பெரிய தப்பு? யாராக இருந்தால் என்ன. சுயரூபத்தைக் காட்டாமல் இருக்க மாட்டார்கள். 

“நீ திரும்பிப் போறப்ப வேணும்னா இவளையும் கூட்டிண்டு போ. நீயும் மன்னியும் இவளை நன்னா வளர்த்தி இந்த வீட்லே தள்ளியிருக்கீங்க. இன்னம் கொஞ்ச நாள் உன் வீட்ல சீராட்டுங்கோ. திருச்சியிலிருந்து மெட்ராஸ் போறது இன்னும் சுலபம்.” 

சொல்லிலிட்டு அவள் நகர, மௌலி பரிதாபமாகப் பாரதியைப் பார்த்தார். 

தங்கம்மா கண்ணைவிட்டு அகன்றதும், “அத்தை ஒரு மென்ட்டல் கேஸ் அப்பா. நீங்க பார்த்த தங்கை, நான் பார்த்த அத்தை டாக்டர் ஜெகில். இப்ப மிஸ்டர் ஹைடா மாறி இருக்கா, ஸைக்யாட்ரிக் ஸ்பெஷலிஸ்ட்கிட்ட கூட்டிண்டு போக வேண்டிய கேஸ்.” 

“இப்படியெல்லாம் பேசாதே பாரதி”. 

“மத்தவா எல்லாரும் எங்கிட்ட நன்னா அன்பாப் பழகறப்ப அத்தைக்கு மட்டும் என்ன வந்ததாம்?” 

“ஈச்சா வர்றார்”. 

ஒரு கூடையில் பற்பலவிதமான பூக்களை வழிய விடாமல் ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு முன்னேறி வந்த ஈச்சா முன் தாழ்வாரத்தை அடைந்ததும் மௌலியைப் பார்த்தார், கூடையை ஊஞ்சலின் மேல் வைத்து வீட்டு. 

“எப்ப வந்தாய் மெளலி…? பொண்ணே! ஒன் அப்பாவுக்கு காப்பி கொடுத்தியா?”

“வந்து அரை மணி நேரமாறது. வந்ததுமே பாரதி காப்பி தந்தா.” 

“தங்கம்…தங்கம்” 

”அத்தை வந்து அண்ணாவைப் பார்த்துப் பேசிட்டு உள்ளே போயாச்சு, அத்திம்பேர்”. 

“சரி வாடா மெளலி! சகஸ்ரத்தாத்துக்குப் போவோம். பொண்ணே! ஒன் அப்பாவுக்கு என்ன பிடிக்கும்னு ஒனக்குத் தான் தெரியும். அதுபோல சமைச்சுச் வைக்கிறியா?”

“சரி அத்திம்பேர்.” 

“அஞ்சாறு நாளா ஒன் பொண்தான் சமையல் உள்ளில. சொல்லிக் கொடுத்தா டக்குன்னு பிடிச்சுக்கறா. வா, போலாம்.”

இருவரும் சகஸ்ரத்தின் வீட்டை அடைத்தார்கள். சகஸ்ரம் ஊஞ்சலில் உட்கார்ந்து கம்போதியை இழுத்துக் கொண்டிருந்தான். இருவரையும் பார்த்துவிட்டு, “அண்ணா வாங்கோ சந்திரமௌலி” என்று கூறி, “ராஜி… ராஜி…” என்று கத்தினார். 

“இப்ப ஒண்ணும் வேண்டாம்பா சகஸ்ரம் ராஜியைக் கூப்பிடாதே!” என்றார் ஈசுவரன். பிறகு தொடர்ந்து, “ஒன் ஆலோசனைப்படி மௌலிக்கு எழுதிப் போட்டேன், அவனும், உடனே பொறப்பட்டு வந்துட்டான்” என்றார். 

“பாரதியைப் பார்த்தா ஒரு பிரச்னையும் இல்லாதது மாதிரி இருக்கு ஈச்சா.” 

“ஒன் பொண் புத்திசாலி, கெட்டிக்காரி. இதமாப் பேசினா இதமா நடந்துக்கற பொண். எல்லாம் சம்மதிக்கிறேன். இந்த ஆத்ல எல்லார்ட்டேயும் – அவ அத்தையை ஒழிச்சு – அனுசரணையோட பழகறா. சம்மதிக்கிறேன். ஆனா பிஎச்.டி விஷயத்திலே மாத்றம் பிடிவாதமா இருக்கா. எங்களாலே அவளை அடக்கி இங்கேயே ஆணி அடிச்ச மாதிரி ஒக்கார வைக்கக் கழியும். ஆனா அப்படி சேதா நாங்களும் அவளுக்கு விரோதிகளாயிடுவோம். எங்களுக்கும் ஒரு நல்ல பொண்ணு பறி போன மாதிரி ஆயிடும்”. 

“நான் என்ன செய்யனும், ஈச்சா?” 

“என்ன சேயப்படாதுன்னு கேளு சொல்றேன். மேற்படிப்புக்கு அவ போறதால உண்டாகப் போற விபரீதங்களை அவ தீர நெனைச்சுப் பார்க்கலை.” 

“அதையெல்லாம் எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்தணுமா?” 

”அதான் இல்லை,” 

“பின்னே?” 

“ஒரு சூத்திரம் இருக்கு.” 

“யூமீன்…தந்திரம்?” 

“கரெக்ட்” 

“என்ன அது?” 

“சகஸ்ரம் இது ஒன்னோட ஐடியா. நீயே சொல்லு”

“அதுக்கு மின்னாவே ஓர் அரைக்கிளாஸ் காப்பி!”

சொல்லிவிட்டு சகஸ்ரம் உள்ளே செல்ல, மௌலி- உள்ளூர பயந்து போய் உட்கார்ந்திருந்தார்.

– தொடரும்…

– வானமெல்லாம் ஆசைக் காற்றாடி (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1995, கங்கை புத்தகநிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *