கூட்டம் என்றால் அப்படியொரு கூட்டம், அவளை தர தரவென இழுத்தபடி சென்று கொண்டிருந்தது. ஒரு நிமிடம் நிற்கலாம் என்பது கூட முடியாமல் பின்னால் வந்த கூட்டம் முன்னோக்கியே அவளை தள்ளிக்கொண்டு சென்றது.
கடவுளே அவளுக்கு இப்பொழுது பக்தியை விட தன் மகனை இந்த கூட்டத்தில் எங்கு தொலைந்தான் என்பதுதான் கவலை, கண்ணீர் வழிய தன் மகனின் பேரை சொல்லி சொல்லி கத்தியபடி இழுத்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறாள்,
நிற்கமுடியாமல் கூட்டம் தள்ளிக்கொண்டு போக, வேட்டு சத்தத்தில் மகனை காணாத இவளின் கத்தலுக்கும் பலன்தான் இல்லை.
அவளின் அழுகையையும், கத்தலையும் அருகில் இருப்போர் கவனித்து அழுகாதம்மா, தேடலாம், அவர்களும் சுற்றி வர ஆட்களை விலக்கித்தான் பார்க்கிறார்கள். ஆனால் பலன்தான் இல்லை.
கூட்டத்திற்கு பயந்து ‘நான் வரலை’ இன்னும் இரண்டு மணி நேரம் கழிச்சு போனா கூட்டம் குறைஞ்சிடும். நிதானமா போகலாம் கணவன் சொன்னதற்கு இவள் ஏங்க இவ்வளவு தூரம் வந்துட்டு தேர் போறப்ப போய் பாக்கலையின்னா எப்படி?
சொன்னா கேளு, நாம வெளியூர்ல இருந்து வந்திருக்கோம், இங்க பாரு நிறைய பேரு நம்மளை மாதிரி இந்த சத்திரத்துக்குள்ளயே உக்காந்திருக்காங்க. அவங்க எல்லாருமே திருவிழாவுக்கு வந்தவங்கதானே, கொஞ்சம் பொறுத்து போகலாமுன்னு காத்துகிட்டிருக்காங்க.
அவளுக்கு கணவன் மேல் வெறுப்பாய் வந்தது, இந்நேரம் மாமியாரை கூப்பிட்டு வராமல் இருந்திருந்தால் கூடவே கிளம்பியிருப்பான். இப்பொழுது அம்மாவால் இந்த கூட்டத்தில் தரிசனம் முடியாது, போன வருடம் கைக்குழந்தை மகனுடன் இதே கூட்டத்துக்குள் புகுந்து வந்தவன்தானே ! நேற்று கிளம்பும் போதே மாமியாரையும் கைத்தாங்கலாய் கூட்டி வரும்போதே நினைத்தாள்.
இரவு சத்திரத்துக்கு வந்து படுத்து குளித்து தயாராகி காலையில் கிளம்பலாம் எனும்போது இப்படி சொல்கிறான். இவர்கள் இருந்த சத்திரம், கோயிலுக்கு செல்லும் பிரதான பாதையில் இருந்து கொஞ்சம் உள் வாங்கிய சந்தில் இருந்தது. நடக்கும் தூரம் போனாலும் போதும், பிரதான வழியாக தேர் போவதை பார்க்கமுடியும்.
சரி நீங்க இங்கனயே இருங்க, நான் பையனை கூட்டிட்டு இந்த முக்குல நின்னு பாத்துட்டு நிக்கறேன், அப்புறமா போலாம், பையனை கூட்டிக்கொண்டு தெரு முனைக்கு வந்து நிற்கவும் வாண வேடிக்கை காட்டியபடி தேர் அந்த சந்து முனையை தாண்டவும் சரியாக இருந்தது.
சட்டென மகனின் கையை பிடித்த பிடியை விட்டு கன்னத்தில் போட்டு விட்டு மீண்டும் கையை கீழே கொண்டு போனவள் அதிர்ச்சியாகி விட்டாள். பையனை காணவில்லை. அந்த கூட்டம் அப்படியே தள்ளிக்கொண்டு போய் விட்டதோ?
எப்படியோ கூட்டத்தில் பக்கவாட்டிலேயே நகர்ந்து நகர்ந்து அடுத்து இருந்த சந்தின் முனைக்கு வந்தவள் ஒதுங்கி, கூட்டத்தை கவனித்தபடி நின்று கொண்டிருந்த போலீஸ்காரரிடம் ஓடினாள்.
இவளின் பதட்டமும் அழுகையும் அவர் பார்த்தவுடன் என்னம்மா? கேட்கவும் இவள் மகனை முன்னால் இருந்த சந்தின் முனையில் தவற விட்டு விட்டதையும் கூட்டம் அவனை தள்ளிக்கொண்டு போனதையும் சொன்னாள்.
பதட்டப்படாதம்மா, பொறு கண்டு பிடிச்சுடலாம், தன் கையில் இருந்த வயர்லெஸ்சில் எல்லா சந்து முனைகளின் நின்றிருந்த காவலர்களுக்கு ஒரு குழந்தை கூட்டத்துக்குள் சிக்கியிருக்கிறதா? கவனிக்க சொன்னார். மேல்புறமாய் அமைக்கப் பட்டிருந்த காமிராவின் மூலம் பார்த்து கொண்டிருந்த காவலருக்கும் தகவல் தெரிவித்தார்.
பத்து நிமிடம் வயர்லெஸ்சில் காது கொடுத்து கேட்டுக்கொண்டிருந்தவர் சட்டென முகம் மலர்ந்து அம்மா இதுக்கு முன்னாடி சந்துலயே ஒரு குழந்தை நிக்குதாம்மா, வா உன் குழந்தையான்னு பாத்துடலாம்.
கூட்டம் கரைந்திருக்க இருந்தவர்களிடையே எதிர் நீச்சல் போட்டபடி அவர்கள் அந்த சந்தின் முனையை அடைய அங்கு நின்றிருந்த போலீஸ்காரரிடம் குழந்தை நின்றது.
மாணிக்கம், மாணிக்கம், அழுது கொண்டே ஓடிப்போய் தூக்கி முத்த மழை பொழிந்தவள் ஐயா ரொம்ப நன்றிங்க..இரு போலீஸ்காரர்களையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.
எங்கம்மா தங்கியிருக்கே? அவர்கள் கேட்கவும் சந்தின் கடைசியில் இருந்த சத்திரத்து பேரை சொன்னாள்.
போயிருவியாம்மா? போயிருவனுங்க, சொல்லியபடி மகனை கையை பிடித்து சத்திரத்துக்கே விரைந்தாள்.
அதுவரை மெளனமாய் வந்த பையன் ஏம்மா அப்பா சொன்னாரு கேட்டியா? இப்ப பாரு நீ தொலைஞ்சு போயிட்டே, நான் போய் போலீஸ்காரர் கிட்டே சொல்லி உன்னை கண்டு பிடிக்க சொன்னேன்.
அதிர்ந்தாள். என்னடா சொல்றே? நான் உன்னைய காணோமுன்னு அந்த கூட்டத்துக்குள்ள போயி..
நீ என் கைய விட்டு சாமி கும்பிடறப்போ, நான் உன் பின்னாடி போய் ஓரமா நின்னுட்டேன். திடீருன்னு நீ உன் கைய பார்த்து அந்த கூட்டத்துக்குள்ள போயிட்டே, நான் உன் பேரை சொல்லி கத்தி பார்த்தேன்..
கடவுளே…நான்தான் அவசரப்பட்டு விட்டேனோ..!