கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2022
பார்வையிட்டோர்: 3,018 
 

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நடந்து முடிந்தது நனவுதான் என்று மாணிக்கத்தால் அவ்வளவு எளிதில் நம்ப முடியவில்லை, என்றாலும் அவன் கையில் இருந்த பணம் உண்மையை உறுதிபடுத்தத் தவற வில்லை.

வேலு திரும்பிப் போய் வெகு நேரமாகிவிட்டது மாணிக்கம் இன்னும் இயல்பான நிலைக்குத் திரும்பவில்லை அந்த அளவிற்கு வேலு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தான்.

“இப்படியும் நடக்குமா?…” தன்மனத்திற்குள் வினவிய வாறே மாணிக்கம் தன் இருக்கையில் வந்தமர்ந்தான். அந்த வினவலிலேயே எதிர்பாராத ஒன்று நிகழ்ந்து விட்டதில் ஏற்பட்ட நிறைவும் கலந்திருந்தது.

கையை விட்டுப் போன பணம் திரும்பவும் பையை வந்தடைவதென்றால் இந்தக் காலத்தில் நம்பக் கூடிய காரியமா?

அடுத்த வாரம். தருகிறேன் என்று வேலு கடனாகப் பெற்றுச் சென்ற பணம், ஆறு மாதங்கள் அலையாய் அலைந்த போதும் கிடைக்காது போய்-தொலையட்டும் என்று நட்டக் கணக்கில் எழுதிவிட்ட நிலையில், திடீரென்று திரும்பக் கிடைப்பதென்றால் மாணிக்கம் அதிர்ந்து போகாமல் என்ன செய்வான்?

“நல்லவேளை! பணத்தைத் திரும்பக்கொடுக்க வேண்டும் என்பது மறக்காமல் இருந்ததே…”

வீட்டுப்படிகளை ஏறும்போதும் இறங்கும் போதும் எண்ணியெண்ணி அவன் அலுத்துவிட்டான். ‘வீட்டில் இல்லை நாளைக்கு வரச்சொன்னார்… இப்போதுதான் வெளியே போனார்… அடுத்த வாரம் வாருங்களேன், சம்பளமாயிற்றே!…’ இவ்வாறு வேலுவின் மனைவியிடம் கேட்டுக் கேட்டு இறுதியில் அவளைச் சந்திப்பதற்கே வெட்கப்படும் அளவிற்கு மாணிக்கம் அலைந்ததுதான் மிச்சம்.

‘நான்கு எண்’ லாட்டரியில் கொஞ்சம் பணம்கிடைத்ததால் இதுவும் கைக்கு வந்தது. இல்லை என்றால் அம்போதான். “ம்.. வாங்கிய கடனைத் திருப்பித்தர அதிஷ்டம் கை கொடுக்க வேண்டியிருக்கிறது கிடைத்தவரை சரி…” என்று மாணிக்கம் நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

உண்மையில் மாணிக்கத்திற்கும் பணமுடைதான் அவசரமாக அவனுக்குப் பணம் தேவைப்பட்டது.

“இந்தப் பணத்தைக் கொண்டு முதலில் என்ன செய்யலாம்?..” என்று மாணிக்கம் எண்ணிப் பார்த்தான். பணம் கையில் இருந்தால் மனித மனம் செலவைப் பற்றித்தானே எண்ணிப் பார்க்கிறது. சேமிப்பை நினைக்கிறதா? மாணிக்கமும் விதிவிலக்கில்லைதான்.

செலவைப் பற்றி எண்ணியதும் நீருக்குள் அமுக்கப்பட்ட பந்து திமிறிக் கொண்டு மேலெழுந்து வருவதைப் போல், மாணிக்கத்தின் ஒரே மகள் மலர்மணியின் அழகு முகம்தான் முதலில் மனத்திரையில் தோன்றியது.

மலர்மணி ஐந்தாம் வகுப்பில் படிக்கிறாள்.மிக்கவும் “அறிவாற்றல் திரம்பிய பெண் அவளுக்கு இயல்பரகவே நூல்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தது மிக விரைவாகவும் படிப்பாள்.

ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடித்துவிட்டுத் தான் வைப்பாள் அவன் அறிவுப் பசி எப்போதும் அடங் காததாய் இருந்தது.

“ஹார்டி சிறுவர் கதைகள்” என்ற தொகுதியை ஆறாம் வகுப்பிற்குச் செல்வதற்குள் படித்து முடித்து விட வேண்டுமென்று மலர்மணி தீவிரமாக இருந்தாள். பள்ளி நூலகத்திலும் தேசிய நூலகத்திலும் சேர்ந்தாற்போல் அந்நூல்கள் வரிசையாகக் கிடைப்பதில்லை. எனவே சொந்தமாக வாங்கித் தருமாறு மாணிக்கத்திடம் எத்தனையோ முறைகள் சொல்லிவிட்டாள்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட அந்தக் கதைவரிசை நூல்களை வாங்கவும், அவற்றையும் ஏற்கனவே வாங்கியுள்ள கதைப் புத்தகங்களையும் வைப்பதற்கு ஓர் அலமாரியை வாங்கவும் போதிய பணம் இல்லாததால் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தான்.

“சரி, முதல் வேலையாகக் குழந்தைக்குப் படிப்பதற்கு வழி செய்துவிட வேண்டும். மற்றதெல்லாம் பிறகுதான்..” என்று எண்ணியபோதே, அதை உடனடியாகச் செய்ய வேண்டுமென்று தீவிரமான உந்துதல் ஏற்பட்டது.

மாலை ஆறரை மணிக்கெல்லாம் “எம்.பி.ஹெச்” மூடி விடுவார்கள் என்பதால், உடனே விரைந்து புத்தகங்களை வாங்கிவிட வேண்டுமென்று தோன்றிய உடனே, மேலகி காரியிடம் அரைநான் ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்தான்.

பேருந்து நிலையத்தை அடையும் போது கந்தையா எதிர்பட்டார். அவர் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். முன்பு அவனுடன் ஒன்றாக் அலுவலராகப் பணி புரிந்தவர் கையில் ஒர் ஐந்து வயது சிறுவனைப் பிடித்திருந்தார்.

“என்ன மாணிக்கம்,செளகரியந்தானே?…” கந்தையா வினவினார்.

“ஏதோ உங்க புண்ணியத்தில இருக்கிறேன்…” மாணிக்கம் சலிப்புடன் கூறினான்.

“என்ன என் புண்ணியத்தில் என்கிறாய். அவன் புண்ணியம் என்று சொல். ஆண்டவன் அல்லவா எண்ட எல்லாருக்கும் புண்ணியம் செய்கிறான்…”

கந்தையா ஆண்டவனை ஆகாயத்தில் காட்டினார்.

“பையன் யாரு?…”

“யார் இவனா? இவலைத் தெரியாதா உனக்கு? இவன் ராசநரயகத்தின் மகன். என் பேரன். நல்ல பிள்ளை… ”

“எந்த ராசநாயகம்?…”

“அட அவன் எண்ட மனுசியோட உடன் பிறந்த சகேதரன் மகேசுவரியை மனம் முடித்தவன் ராசநாயகம் தெரியாதா? அவன் ஒரு “டோக்டர்”. ஆளு மத்த கட்டை, மெத்த செவளை, தலை கொஞ்சம் வழுக்கல், மீசை நறுக்கல்-கன வடிவு. அவனைத் தெரியாதா? அவண்ட மகன்…”

“எங்க இந்தப் பக்கம்?…”

“அந்த நூல்நிலையத்தில் சின்ன பிள்ளைகளுக்குக் கதை சொல்வார்கள். அதற்குத்தான் இவனை எடுத்துக் கொண்டு போறேன். வா கொஞ்சம் கதைக்கலாம். கோப்பி குடி யேன்..” அவர் தொலைவில் உள்ள ஒரு கடையைக் காட்டி அழைத்தரர்

“இல்லேங்க இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம். நான் வர்றேன்…”

“சரி உன் விருப்பம்..” கந்தையா புறப்பட்டுவிட்டார்.

வழி எல்லாம் மாணிக்கத்திற்குக் கந்தையா பேசியதே நினைவாக இருந்தது. “இவுங்க கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. என் வீட்டிலேயும் ஒருத்தி இருக்கிறாளே! இப்படி எங்காவது அழைச்சிகிட்டுப் போறது உண்டா?…சே!…” என்று மனத்திற்குள் அலுத்துக் கொண் டான் .

மாணிக்கம் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டு மலர்மணி வியந்தாள். வழக்கத்தைவிட விரைவாக மரணிக்கம் வந்தீருந்தான் அல்லவா?

சட்டையைக் கழற்றியபடியே, “மலர்மணி. உடையை மாற்றிவிட்டுத் தயாரா இரு. நாம ரெண்டுபேரும் ஒரு முக்கியமான காரியமாக வெளியே போகிறோம்…”என்று கூறிவிட்டுக் குளியல் அறைக்குள் விரைந்தான்.

என்ன காரியம் என்று தன் தந்தை கூறாவிட்டாலும் வெளியே போகப்போகிற களிப்பில் உடைமாற்ற மலர்மணி சிட்டாய்ப் பறந்தாள்.

பகல் நேர உணவிற்குப் பிறகு துணி துவைப்பதில் ஈடுபட்டிருந்த கற்பகம் தன கணவன் குளிப்பதற்கு வழி விட்டு வெளியே வந்தாள்.

நாற்காலியில் சரிந்து கிடந்த தன் கணவனின் மேல் சட்ைையை எடுத்து ஒழுங்கு படுத்த முனைந்த போது, பணம் கந்தையாகக் கீழே விழுந்தது.

பணத்தை அள்ளி எடுத்து எண்ணிப் பார்த்தபோது அவள் முகம் மலர்ந்தது. “ஏது இவ்வளவு பணம்?…” என்று சிந்தித்தவளாய் அறைக்குள் நுழையும் வேளையில் மாணிக்கமும் குளித்துவிட்டு வந்தான்.

“ஏதுங்க இவ்வளவு பணம்? இது மாத நடுப்பகுதியாயிற்றே! சம்பளமும் கிடைத்திருக்காதே!…” என்று வாயெல்லாம் பல்லாய் வினவினாள்.

மாணிக்கம் பணம் வந்த விதத்தைக் கூறினான். “அந்த ஆளுக்குப் புண்ணியமாகப் போவுது…” என்று ஆறுதல் அடைந்தவளாய் கற்பகம் தன் பெட்டிக்குள் பணத்தை வைத்து பூட்டச் சென்றாள்.

அவள் பின்னால் வந்த மாணிக்கம், கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டே, “அந்தப் பணத்தைப் பெட்டியில் வைக்க வேண்டாம்.. இப்படி வை…” என்று கட்டிலைக் காட்டினான்.

“ஏன்?…” என்று தீச்சுட்டது போல் பதறிப்போய்க் கேட்டாள் கற்பகம். தனக்கே உரிமையான பொருள் பறி போது போல் அவள் துடிதுடிப்பதைக்கண்டு மாணிக்கத்தின் மனம் இரங்கியது.

“முக்கியமான காரியத்துக்காக இந்தப் பணத்தைச் செலவு செய்யப் போறேன்…” என்று கனிவாகக் கூறிய வாறு தன் மனைவியை உரசிப்படி கட்டிலில் அமர்ந்தான்.

‘அப்படி என்ன முக்கியமான காரியம்?..’ அவனை ஏறிட்டபடி கற்பகம் கேட்டாள்.

கற்பகமும் மகிழ்ந்து போவாள் என்ற எதிர்பார்ப்பில் மாணிக்கம் தான் செய்யவிருந்ததைப் பெருமையாகக் கூறினான்.

“ம்….ஹும்… அதெல்லாம் முடியாது. இந்தப் பணம் எனக்கு வேணும்” என்று கூறியபடி பெட்டியில் வைத்துப் பூட்டினாள்.

“இந்தா பாரு, கற்பகம், நம் மகளின் படிப்பு முக்கியமில்லையா? அவள் நன்றாகப் படித்தால் நமக்குத்தானே பெருமை. அவள் எதிர்காலத்திற்கும் நல்லது…”

“நான் மறுக்கலயே, இன்னொரு சமயம் வாங்கிக் கொடுத்தால் போகிறது…”

“ஏற்கனவே பல முறை தள்ளிப் போட்டாகி விட்டது. பிள்ளை ஆர்வம் குறைஞ்சிடாதா?…” என்று மேலும் சொல்ல வந்தவன், ஒரு வேளை தன் மனைவி இதைவிட முக்கியமான தேவையை மனத்தில் எண்ணி இவ்வாறு பேசுகிறாளோ என்று ஐயுற்று அவளிடமே கேட்டான்.

“இப்போது நகை விலை குறைந்திருக்கிறதாம். பவுன் இருநூறு வெள்ளிதான் என்று கௌரி சொன்னாள். ஒரு ஜோடி கை வளையல்கள் வாங்கிக் கொள்ளப்போகிறேன்…” கற்பகம் ஆர்வத்துடன் கூறினாள். சொல்லும் போதே கையில் வளையல்கள் குலுங்குவதைப் போல் கற்பனை செய்து ஆட்டிப் பார்த்துக் கொண்டாள்.

“அதற்கு இது தானா சமயம்? நகைக்கு இப்பொழுது என்ன அவசரம்?…” மாணிக்கம் சற்றுச் சூடாகவே கேட்டான்.

“நல்லா இருக்கு. புத்தகங்களை எப்பொழுது வேண்டு மானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் நகையை அப்படி வாங்க முடியாதே. ஏதோ ஆச்சரியமா விலை குறைந்திருக்கு, இந்த வாய்ப்பை நழுவ விடலாமா?…”

“விலை குறைவு என்பதற்காக வாங்க வேண்டுமா? உன்னிடம் தான் தங்க வளையல்கள் இருக்கே…”

“எத்தனை வளையல்கள் இருக்கு? நாலே நாலு. பொல்லாத வளையல்கள். என் தோழிகள் எல்லாம் கைக்கு ஆறு ஏழு என்று வைத்திருக்கிறார்கள். கை நிறையப் போட்டால் தானே நிறையும்…”

“மற்றவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்ய நம்மால முடியாது. நீ பணத்தை இப்படிக் கொடு…”

“ஆமா, நான் ஏதாவது ஆசைப்பட்டுக் கேட்டால்தான் உங்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். நான் உங்களைக் கல்யாணம் பண்ணி என்ன சுகத்தைக் கண்டேன் …” அழத் தொடங்கினாள் கற்பகம்.

அர்த்தமில்லாமல் பேசுவது மட்டுமல்லாமல், தன்னையும் பழித்துரைத்தது கண்டு மாணிக்கம் வெகுண்டெழுந்தான்.

“உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? பிள்ளையின் கல்வியைவிட ஆடம்பரம் முக்கியமோ?….”

“நகையில போடுற பணம் மழைநீர் பட்ட மண்ணு மாதிரி கரைஞ்சா போயிடும்? அதனால நமக்கு உதவித் தானே?”

“உண்மைதான். ஆனா கல்விக்கு நாம செலவு செய்வது அதைவிடச் சிறந்தது. இன்னும் சொல்லப் போனா, கல்விக்கு நாம போடுகிற “முதலீடு” தான் எல்லாத்திலும் உயர்ந்தது..”

“ஆமா?..”

“கற்பகம். நீ மட்டுமில்லே, தமிழர்களே இப்படித்தான். கையிலே பணம் இருந்தால் ஆடம்பரப் பொருள்கள் வாங் கத்தான் நினைக்கிறாங்க. நம்ப சகோதர இனத்தவர்களைப் பார். மலையாளிகளும், சிலோன் தமிழரும் கல்விக்கு எவ் வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. பிள்ளைகள் படிக்க ணும்கிற ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமா? அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டாமா?…விளக்கானாலும் துண்டுகோல் ஒன்று வேண்டாமா…”

“போதும் வாயை மூடு…” என்பது போல், பெட்டியில் வைத்த பணத்தை எடுத்து அவன் முகத்தில் வீசாத குறை யாகத் தரையில் தூக்கி எறிந்தாள்.

“நான் வேலை செய்யாம வீட்டிலேயே இருக்கிறதால தானே எல்லாத்துக்கும் உங்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கு. அடுத்த மாதத்திலிருந்து நானும் வேலைக்குப் போறேன்”… என்றவள் ஆத்திரத்துடன் வெளியேறினாள்.

மாணிக்கம் வாயடைத்துப் போனான். தன் மனைவிக்கு எப்படிப் புரிய வைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.

“சரி, தொலையட்டும். இந்தப் பணத்தை இவளே பயன்படுத்திக் கொள்ளட்டும். இம்மாதச் சம்பளத்தில் செலவைக் குறைத்துக் குழந்தையின் தேவையை நிறை வேற்றலாம்…” என்று தனக்குள் கூறிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

ஆலோடு முடிக்க ஓடிவந்த காரியத்தை நினைத்தபடி செய்ய இயலாமற் போயிற்றே என்று எண்ணியபோது அவன் உள்ளம் கனத்தது. அவன் கண்கள் பனித்தன.

மலர்மணி கீழே சிதறிக் கிடந்த பணத்தை பொறுக்கித் தன் அம்மாளின் பெட்டிக்குள் வைத்தாள். அவள் கண்களில் இருந்து பொட்டு பொட்டாய் நீர்த் துளிகள் பெட்டியின் மீது விழுந்தன.

“என்னால அவர்களுக்குள் வம்பு வேண்டாம்…” என்று அந்தப் பிஞ்சு மனம் எண்ணியது.

– 1983

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *