சொல்லத்தான் நினைக்கிறார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2022
பார்வையிட்டோர்: 2,051 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானத்து தேவதைகள் வண்ண உடை அணிந்து வாசமுள்ள மலர்களைத் தூவி வைரவனை வரவேற்றனர். வைரவன் விண்ணுலகத்திற்குச் சென்ற சில நிமிடங்களிலேயே அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. வைரவனின் வருகைக்காக பல நாள் காத்திருந்ததைப் போல தேவலோகத்து சிறப்பு மேலதிகாரிகள் வைரவனை வாழ்த்தி புன்னகையுடன் வரவேற்றனர்.

வைரவன் விண்ணுலகில் காலடி வைக்கும் போது அவர் பறப்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் உணர்ந்தார். சில வினாடிகளிலேயே பல மைல்கள் அளவுள்ள விண்ணுலகில் எட்டு திசைகளுக்கும் சென்று பார்ப்பதை உணர்ந்தார்.

அது என்ன இரவு நேரமா? எங்கு பார்த்தாலும் வண்ண விளக்குகளால் வெளிச்சம் கண்களை கூசச் செய்தன. சொர்க்கம் என்றால் சும்மாவா? சொர்க்கத்தைப் பற்றி பூலோகத்தில் ஓரளவு கேள்விப்பட்டிருந்த வைரவன் இப்போது நேரில் கண்டு ஆனந்தக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது, ஓர் அழகிய தேவதை வந்து நட்சத்திர வடிவமுடைய இல்லத்திற்கு வைரவனை அழைத்துச் சென்று பழரசத்தைக் கொடுத்து அருந்தச் சொன்னது. வைரவனுக்கு தாகமே ஏற்படவில்லை. இருந்தாலும் அவர் அந்த கோப்பையின் ஆனந்த ரசத்தை வாயில் வைத்து உறிஞ்சும் போது ஓர் எல்லையில்லா இன்பத்தை உணர்ந்தார்.

பூலோகத்தில் கதைகளில் மட்டுமே படித்திருந்த வைரவன் விண்ணுலகில் கழுத்தில் பூமாலை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் காணப்பட்டார். பழரசத்தை அருந்திய சற்று நேரத்தில் வயதான வைரவன் என்பவர் மிக இளமையுடன் மாறினார். துள்ளிக் குதித்து எழுந்து நன்னடை பயின்று சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தார்.

இன்னிசை காதில் தேனாக பாய்ந்து பூங்காற்று வைரவனை தாலாட்டியது. அது பூலோகத்தின் அன்னையின் தாலாட்டை விட ஆயிரம் மடங்கு உயர்வாக இருந்தது. சற்று நேரத்தில் வைரவனுக்கு தேவலோகத்து ஆடை கொடுக்கப்பட்டது. அந்த ஆடை பார்க்க பூலோகத்தின் மயிலிரகின் வண்ணங்களையும், மென்மையையும் விட பல மடங்கு, அழகையும் மணம் நிறைந்த சுகந்தத்தையும் கொண்டிருந்தது. வைரவனின் நாசியில் ஓர் இன்பம் நிறைந்த வாசனை திரவியத்தின் நறுமணம் சூழ்ந்து கொண்டிருந்தது.

ஒளியும், இசையும் மணமும் தொடர்ந்து கொண்டே இருந்தது. தூங்கா விளக்குகளாக வாடாமலர்களாக இருந்த அந்த தேவலோகத்தில் வைரவன் ரசனையுடன் உலா வந்தார்.

வைரவன் பூலோகத்தில் மிகச்சாதாரண ஏழைக் குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாக பிறந்து பல கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்தவர். இளம் வயதிலேயே வைரவனின் தாய் கனகாம்பாள் வைரவனுக்கு நல்ல பண்புகளை சொல்லி வளர்த்தார். இயல்பாகவே வைரவன் மிக இளகிய இரக்க மனம் கொண்டவராக இருந்தார். தன் தந்தை கூலி வேலை செய்வதைக் கண்டு மனம் வேதனைப்பட்டார். தான் நன்கு படித்து வளர்ந்து தன் பெற்றோர்களை சொகுசாக வாழ வைக்க ஆசைப்பட்டார். நல்ல மனம் படைத்த வைரவனுக்கு இயற்கையாகவே கல்வி எளிதாக இருந்தது.

அந்த பெரிய குடும்பத்தில் ஆக உயர்ந்த கல்வித்தகுதியை பெற்றவர் வைரவன் ஒருவர்தான். நிறத்தால் சற்று கருப்பான வைரவன் மற்ற ஆண்களை விட சற்று உயரம் குறைவானவராக இருந்த போதிலும் வைரவன் மன உறுதியுடன் சட்டத்துறையில் பட்டம் பெற்று வழக்கறிஞராக இருந்த வைரவன் சிங்கப்பூரில் மிகச்சிறந்த வழக்கறிஞராக திகழ்ந்தார். நீதி, நேர்மை அவர் வாழ்க்கையிலும் தொழிலிலும் இருந்தது. உண்மைக்காக போராடி தன் கட்சிக்காரரை ஜெயிக்க வைப்பார். பணத்தை அவர் ஒரு பொருட்டாக கருதாமல் தன் மனசாட்சிக்கு பயந்து வாதங்களை நடத்துவார். குற்றவாளிகளை அவர் எப்போதும் ஜெயிக்க விட்டதே கிடையாது.

வைரவன் திருமணமாகி நான்கு பிள்ளைகளுக்கு தந்தையாகவும் விளங்கினார். வாழ்க்கை என்ற கண்ணாடி பாத்திரத்தை வைரவன் கை நழுவாமல் பார்த்துக் கொண்டார்.

அப்போது ஒரு சமயம் செய்யாத கொலை குற்றத்திற்காக மோகன் என்பவர் ஆஜர் செய்யப்பட்டபோது, வைரவன் தன் திறமையான ஆழமான மதி நுட்பங்களைக் கொண்டு மோகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். கொலை செய்யப்பட்ட பெண்மணி மோகனின் காதலி என்று தெரிய வந்தது. மோகனின் காதலியை வேறொருவர் பொறாமையின் காரணமாக உணவில் விஷம் வைத்து கொன்றதை தக்க ஆதாரங்களுடன் நிருபித்து மோகனை கொலைக் குற்றத்திலிருந்து காப்பாற்றியதுடன் கொலை செய்த உண்மையான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையையும் வாங்கிக் கொடுத்தார் வைரவன்.

அப்போது பத்திரிக்கைகள் வைரவனை பாராட்டி எழுதியதுடன், அரசு தரப்பில் வைரவனுக்கு பதவி உயர்வும் கிடைத்தது. மோகன் சொந்த நிறுவனம் வைத்து பலருக்கு வேலை கொடுத்திருந்தார். பொறாமையின் காரணமாக மோகனின் மேல் வழக்கை ஏற்படுத்த செய்த சூழ்ச்சியே குற்றத்திற்கு காரணமாக அமைந்ததை வைரவன் தன் திறமையால் ஜெயித்துக் கொடுத்தார். தொலைக்காட்சி, வானொலி செய்திகளில் வைரவனின் திறமை பறை சாற்றப்பட்டது. இதனால், பல பொது மக்களிடமும் வைரவன் மதிப்பு பெற்று உயர்ந்து நின்றார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலையுண்டு. வைரவன் விலை மதிக்க முடியாத மனிதராக விளங்கினார். தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கும்போது தன் தாய் தந்தையை காப்பாற்றியதோடு உடன் பிறந்தோருக்கும் உதவிக்கரம் நீட்டினார். தன் குடும்பத்தார்க்கு உதவி செய்ததுடன் பல தொண்டு நிறுவனங்களுக்கும் பணத்தாலும் சேவையாலும் உதவி வந்தார்.

மனிதரில் மாணிக்கமாக விளங்கிய வைரவனுக்கும் ஒரு சோதனை வந்தது. இளம்பெண் ஒருவருக்கு கல்வி உதவி செய்ய நேர்ந்த போது, அதை ஊரார் தவறாக கருதி, வைரவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக பேசியதுடன் வைரவன் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதாக புரளியை கிளப்பி விட்டனர்.

வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கும்போது இதுபோன்ற அவதூறுகளை சில புல்லுறுவிகள் பொறாமையால் ஏற்படுத்துவது சகஜம் என்பதை உணர்ந்த வைரவன் தன் கடமையை நேர்மையுடன் நடத்தி வந்ததுடன் தொண்டூழியத்தையும் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே செய்து வந்தார். உதவி தேவைப்படுவோருக்கு தன் நேசக்கரத்தை நீட்ட வைரவன் தயங்கியதே கிடையாது.

தாய்மொழியான தமிழ்மொழி மீது வைரவன் மிகுந்த பற்று வைத்திருந்தார். பொது மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை பத்திரிக்கை மூலம் வழங்கி வந்தார்.

ஒரு முறை அவர் வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாக நடந்த நிகழ்ச்சி. ஓர் எளிய குடும்பத்தில் கணவனை இழந்த அர்ச்சனா என்ற பெண்மணி தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு திரு. வைரவனிடம் உதவி கேட்டு வந்தாள். அப்போது வைரவன் மிகவும் மனம் கசிந்து தாராள மனதுடன் அந்த பெண்ணுக்கு பண உதவி செய்வதாகவும், அவள் மகனை படிக்க வைக்க உதவி செய்வதாகவும் உறுதியளித்தார். ஆனால், அர்ச்சனா என்ற அந்தப் பெண் பண உதவியை ஏற்க மறுத்ததுடன், தான் உயர்நிலைக்கல்வியை முடித்திருப்பதாக கூறி, தனக்கு ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால், தான் உழைத்து தன் மகனை படிக்க வைக்க விரும்புவதாகவும் கூறியதைக் கேட்ட வைரவன் இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்ணைக் கண்டு வியந்ததுடன், அர்ச்சனாவுக்கு தன் அலுவலகத்திலேயே குமாஸ்தா வேலை கொடுத்ததுடன் அர்ச்சனாவின் மேல் படிப்புக்கும் ஊக்கம் கொடுத்தார்.

பின்பு அந்தப் பெண் அர்ச்சனா என்பவள் பணியில் இருந்து கொண்டே பகுதி நேரப் பட்டப் படிப்பை தொடர்ந்து படித்து அவளும் ஒரு வழக்கறிஞராக ஆனதுடன் பின்பு அர்ச்சனா அவள் மகனை படிக்க வைத்து டாக்டராகி விட்டாள். அர்ச்சனா வைரவனிடம் நன்றியுடனும் மிகுந்த மரியாதையுடனும் நடந்துக் கொண்டாள்.

ஒருவருக்கு பண உதவி செய்வதைவிட திறமையுள்ளவர்களை மதித்து, அவர்களின் உயர்வுக்கு வழி காட்டி விட்டால், அதன் உயர்வும் மதிப்பும் பன்மடங்கு உயரும் என்பதை வைரவன் அப்போது உணர்ந்தார்.

வைரவனின் பொதுச் சேவைக்கு அவரின் மனைவி பூங்கோதை மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். கணவரின் முன்னேற்றத்தில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பூங்கோதை குடும்பத்தை பாசத்துடன் வழி நடத்தினார். வைரவன் தன் பிள்ளைகளுக்கும் சமூக சேவையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி அவர்களையும் பொது நலத்தில் ஈடுபடுத்தினார்.

திரு. வைரவன் எழுத்துத்துறையிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ‘வெற்றி நிச்சயம்’ என்ற தன்னம்பிக்கை நூலை எழுதி வெளியிட்டார். அந்நூல் பல பொது மக்களுக்கு தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற பெரிதும் உதவிற்று.

வைரவன் தொழில் விஷயமாக சில நேரங்களில் வெளிநாடு சென்று வருவது வழக்கம். அப்படி ஒரு சமயம் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது அவருக்கு வயது 52. நான்து நாளில் சிங்கப்பூர் திரும்ப வேண்டிய வைரவன் திரும்பவில்லை. தொலைபேசி தொடர்பும் கிடைக்கவில்லை. வைரவனின் மனைவி பிள்ளைகள் மனம் பதறிவிட்டனர். ‘அப்பாவுக்கு என்னாயிற்று?’ என குடும்பமே ஆட்டம் காண ஆரம்பித்தது.

திடீரென்று ஒரு நாள் டி.வி.யில் அவசரச் செய்தி என்று குறிப்பிட்டு, ஆஸ்திரேலியாவில் சுற்றிப் பார்க்கச் சென்ற பத்து பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று ரகசிய இடத்தில் வைத்திருப்பதாக செய்தியில் தெரிய வந்தது. அதில் வைரவனும் மாட்டிக் கொண்டார். என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் தவித்துக் கொண்டிருந்த நேரம், வைர நெஞ்சம் கொண்ட வைரவன் தன் ‘மாஸ்டர் பிளான்’ மூளையைப் பயன்படுத்தி எல்லோரையும் மீட்க திட்டம் தீட்டினார்.

தீவிரவாதிகளில் ஒருவனிடம் தான் ஒரு கிரிமினல் லாயர், என ஆங்கிலத்தில் கூறி அவர்களுக்கு தேவையானவற்றை தானே ஏற்பாடு செய்து தருவதாகவும் எல்லோரையும் விடுவிக்குமாறும் கூறியதைக் கேட்ட அந்த தீவிரவாதி வைரவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு அட்டகாசமாக சிரிப்பை உதிர்த்தான்.

தன்னம்பிக்கையை ஒரு போதும் இழக்காத வைரவன் தன் தோற்றத்தைக் கண்டு எடை போட்ட தீவிரவாதியிடம், வைரவன் தான் எழுதிய ‘யு கேன் டு’ ‘உன்னால் முடியும்’ என்ற நூலை எடுத்துக் காட்டினார். நூலை வாங்கிப் பார்த்த தீவிரவாதி சற்று நம்பிக்கையுடன் “என்னை சேர்ந்த நான்கு நண்பர்களை அரசு ஜெயிலிலிருந்து விடுவிக்க வேண்டும்”, என்ற நிபந்தனையை வைத்தான்.

உடனே வைரவன் இனி நீயும் தீவிரவாத செயலை விட்டு விட்டு எல்லோரையும் விடுவித்தால் நான் மேலிடத்தில் பேசி உன் ஆட்களை விடச் சொல்கிறேன் என்ற ஒப்பந்த அடிப்படையில் அன்று அந்த பத்து பேரும் உயிர் தப்பினர். அதே போல வைரவன் சொன்ன வாக்கை காப்பாற்றவும் செய்தார். உழைப்பதற்கு அவர் என்றும் தயங்கியதே இல்லை .

மன உறுதி படைத்த வைரவன் தன் உருவத்தால் சற்று உயரம் குறைவானவராக இருந்த போதும் தன் கல்வி அறிவால் பிறருக்கு ஆலோசனைகளை அள்ளி வழங்கியதில் பெரிய வள்ளலாகவே திகழ்ந்தார்.

வயதாகிவிட்ட வைரவன் அப்போது மரண படுக்கையில் கிடந்தார். கடந்த ஒரு வாரமாக சுயநினைவின்றி பிதற்றிக் கொண்டிருந்தார். தன் மனக்கண்ணால்தான் வைரவன் விண்ணுலகிற்குச் சென்று பறந்து கொண்டு வானில் உலா வந்தார். ஏதோ சொல்ல நினைக்கிறார், இயலவில்லை . வாய் குளருகிறது.

மருத்துவர்கள் வந்து வைரவனை பார்த்து விட்டு இனி பிழைப்பது அரிது என கூறிவிட்டனர். சற்று நேரத்தில் வைரவனின் உயிர் இந்த உலகை விட்டு பிரிந்தது. அவரின் பிரிவைத் தாங்காத மனைவி, பிள்ளைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். வைரவன் தன் அன்பால் பிறருக்கு உதவி செய்து மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர். அனைத்து மக்களும் வைரவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள திரளாக வந்து கூடி நின்றனர்.

வைரவன் வீட்டு வாசலில் மக்கள் கூட்டம் அலை கடலென வந்து நின்று வைரவனின் மனதைப் பற்றியும், அவர் செய்த உதவியைப் பற்றியும் பேசி தங்கள் துக்கத்தை ஆற்றிக் கொண்டனர்.

நல்லவர்களின் சாவில் அவர்களுக்கு வரும் கூட்டத்தை பார்த்துதான் தெரிந்து கொள்ள முடியும். வைரவனின் புகழ் பாடப்பட்டது.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைரவனின் உடல் ஏற்றப்பட்டு, வண்டி மெதுவாக முன்னே செல்ல, மக்கள் கூட்டம் திரளாக அவர் பின்னே புகழ் பாடிச் சென்றது.

உயிரோடு வாழும் காலத்தில் வைரவன் தலையில் தங்கக் கிரீடம் அணியவில்லை . ஆனால், அவர் உயிர் பிரிந்த பிறகு அவரை அழைத்துச் செல்ல உண்மையிலேயே தேவலோகத்து தேவதைகள் சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விண்ணுலகிற்குச் சென்ற வைரவன் அங்குள்ள தேவலோக ரகசியங்களை நம்மிடம் சொல்லத்தான் நினைக்கிறார்!

– சிறுகதை தமிழ் முரசு 10.10.2004, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *