கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2023
பார்வையிட்டோர்: 3,077 
 
 

பாரு மாமி, மார்கெட்டுக்குப் போன கணவன் இன்னும் வரவில்லையே என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். தெருக்கோடியில் அவர் வருவதைக் கண்டதும் தான் நிம்மதி ஆயிற்று அவள் மனது. “அப்பாடா, என்ன வெய்யில்! என்ன வெய்யில்!! தாங்கலை” என்று சாம்பு மாமா வீட்டினுள் நுழைந்தார். ”ஏன் இவ்வளவு லேட்டு? நானே ஃபோன் பண்றதாயிருந்தேன். நீங்க வழில இருப்பேள், காய்கறிப் பை வேற கைல வச்சுண்டு கஷ்டப்படுவேளேன்னு பண்ணல. சித்த நாழி பாப்பம்னு விட்டுட்டேன்,” என்றாள் மாமி ”ஆமாம், நீ எல்லாம் சொல்லுவே, கறிக்கு 5 காய், கூட்டுக்கு வேண்டிய காய் எல்லாம் வாங்கினேன் ஆனா விளாம்பழம், பெரண்டை எங்கேயுமே கெடக்கல. அலஞ்சு, அலஞ்சு காலே வலிக்க ஆரம்பிச்சுடுத்து. கடைசில ஒரு கடையில கெடச்சுது. அப்பறமா வாழை இலைக்கு வேற தேடி அலையும்படி ஆயிடுத்து. எவ்வளவு தேடியும் கெடைக்கலை. சரி, உனக்கு விளக்கம் சொல்லி தொண்டையும் காய்ஞ்சு போச்சு, ஒரு டம்ளர் தண்ணி கொண்டு வரயா?” என்றார் மாமா. ”இதுக்கே இவ்வளவு அலுத்துக்கறேளே, ச்ராத்தம் அன்னிக்கு எனக்கு எவ்வளவு வேல இருக்கு, அதை யோசிச்சேளா? மடிசார் புடவை, அதிலும் ஈரத்தைக் கட்டிண்டு சமைக்கணும், ஏகப்பட்ட வகை சமையல், அதிரசம், திரட்டுப்பால், வடைன்னு அது வேற. இதெல்லாம் பண்ணுகிற பாடோட குனிஞ்சு குனிஞ்சு பரிமாறரது அடுத்த கஷ்டம். சாப்பாடானப்புறம் பாத்திரத்தை எல்லாம் தேய்க்கப் போடணும். மிஞ்சிப் போனதை மாட்டுக்கு தான் போடணும். யாருக்கும் குடுக்க முடியாது. நமக்கோ ராத்ரி பலகாரம் தான். பாத்து பாத்து சமைக்கணும். பொம்மனாட்டி கஷ்டம் புருஷாளுக்குப் புரியறதே இல்லை” என்று மாமி அலுத்துக் கொள்ள, மாமாவும் விடறதாயில்ல. ”சரி, சரி ஏதோ கேட்டயேன்னு சொன்னேன், அதுக்காக உனக்கு வேலையில்லைன்னோ இல்ல குத்தமோ சொல்லலை, மொதல்ல தண்ணி கொண்டு வா” என்றார்.

மாமா குளிக்க போகலாம் என்று எழுந்தார். மாமி, ”கொஞ்சம் இருங்கோ, நீங்க அப்புறமா குளிக்கலாம். பரணைலேந்து பித்தளைப் பாத்திரமெல்லாம் எடுக்கணும். ச்ராத்தத்துக்கு வேணும் அதெல்லாம் தேய்க்கணும். எதுக்கு ஈயம் இல்லயோ அதுக்கு ஈயம் பூசணும்”.

திடீரென்று நினைவு வந்தவளாக மாமி, ”ஆமாம், கறுப்பு எள் இருக்கோ?”ன்னு கேட்டாள் ”என்னைக் கேளு, வீட்ல என்ன இருக்கு, இல்லேன்னு உனக்குத் தெரிய வேண்டாமா?” என்றார் மாமா. மாமி விடுவாளா? ”அமாவாசை தர்ப்பணம் பண்ற ஒங்களுக்கே தெரியல. எனக்கு மட்டும் எப்படி தெரியும்?”னு கேட்ட உடனே, மாமா டப்பாவைத் திறந்து பார்த்து, ”ஆமாண்டி, துளிக் கூட இல்ல, வாங்கணும், இப்ப கேட்டதை நான் மார்க்கெட்டுக்கு கெளம்பறச்சே சொல்ல மாட்டியோ? மறுபடியும் யார் போறது? நானே வெய்யில்ல அடிக்கடி வெளியே போக வேண்டாம்னு ஏடிஎம்லே பணம் எடுக்கப் போற போதே காய்கறியும் வாங்கிண்டு வந்தா ஒரே நடையாப் போயிடுமேன்னு பார்த்தா நம்ம ஜாதக விசேஷம் அலையணும்னு இருக்கு. வயசானாலே இந்த பாழும் மறதியால கஷ்டம் தான்”னு சொல்ல, ”பரவாயில்ல, இன்னும் 2 நாள் இருக்கே, ச்ராத்தத்துக்கு. நாளைக்கு மார்க்கெட்டுல வாழை இலையும் பக்கத்து நாடார் கடைல கறுப்பு எள்ளும் வாங்கிண்டு வந்தாப் போச்சு,” என்றாள் மாமி. அடுத்த கவலை மாமாவுக்கு – ஹோமத்திற்கு தேவையான பொருட்கள் பற்றியது. ”வெரட்டி, சிராய் எல்லாம் இருக்கா?” என்று கேட்க, மாமி, ”போன வருஷம் வாங்கினதே யதேஷ்டமா இருக்கு,” என்றாள்.

ச்ராத்தத்துக்கு முதல் நாள். ”இன்னிக்கு வெங்காயம், பூண்டு இல்லாத சமையல் தெரியுமோன்னோ. ராத்திரி இட்லி தேங்காய் சட்னி. சொல்லிட்டேன். வழக்கம் போல வெங்காய சட்னி கேக்காதேங்கோ.” மாமி சொல்ல, மாமா, ”தெரியும். வருஷா வருஷம் பண்றது தானே” என்றார். இரவு பலகாரம் ஆனதும் பாத்திரத்தை எல்லாம் தேய்த்து விட்டு காஸ் அடுப்பு, சமையலறை உபகரணங்கள், சமையல்கட்டு எல்லாம் சுத்தமா கழுவிப் பின்பு மறு நாள் ச்ராத்தத்துக்குத் தேவையான காய்களை நறுக்கி வைத்து விட்டு தூங்கப் போனாள் மாமி.

வேலைக்காரி அஞ்சலையை பிற்பகலுக்கு மேல் வந்தால் போதும் என்று சொன்னதால், காலையில் எழுந்தவுடன் மாமி காஃபி குடித்த பிறகு அறைகளையெல்லாம் பெருக்கித் துடைத்து விட்டுக் குளித்து சமையலை ஆரம்பித்தாள். சமையல் வகைகள் நிறைய இருக்கும் போது கடிகாரம் கூட படுவேகமாக ஓடுவதாகத் தோன்றும். மணி 9 ஆயிற்று. சாஸ்திரிகளுக்கு வெற்றிலை, பாக்கு, எள்ளுருண்டை சகிதம் எண்ணை, சீக்காய் கொடுத்து வர மாமாவைப் பணித்தாள்.

மாமா அவற்றை எடுத்துக் கொண்டு வாத்யார் வீட்டுல கொடுக்கப் போனார். வாத்தியார் சொன்னார், ”இப்பல்லாம் ப்ராம்மணாளே கெடைக்க மாட்டேங்கறா, ஏதோ ரொம்ப தெரிஞ்சவா வீட்டுக்கு என் கீழே வேல செய்யறவாளைத் தான் அனுப்பறேன்.” மாமா, ”அப்படியா சரி, எத்தனை மணிக்கு வரப் போறேள்னு சொன்னா வசதியா இருக்கும்”னு கேட்க, ”10.30 மணிக்கு வந்தாப் போறுமா?” என்றவரிடம், ”அப்படியே செய்யுங்கோ” என்று சொல்லி நகர்ந்தார் மாமா.

”பாரு, வாத்தியார் 10.30 மணிக்கு வரேன்னு சொல்லி இருக்கார்.” ”வரட்டும், ஹோமம் முடிஞ்சு இலை போட 1 மணி ஆகும், அதுக்குள்ளே எல்லாம் முடிச்சுடுவேன், ”என்றாள் மாமி. மாமிக்கு அடுப்பு சூடு, வெய்யில் சூடுன்னு சேர்ந்து எப்படா சமையலறையை விட்டு வருவோம் என்றிருந்தது. இதில் பாத்ரூம் போக முடியாத அவஸ்தை. போனால் மறுபடி குளிக்கணும். என்ன அடக்கிப் பாத்தும் முடியாமல் இரண்டாம் தடவை குளித்து விட்டு வந்தாள் மாமி. கூடவே, ”என்ன சாஸ்த்திரமோ, என்ன ஸம்ப்ரதாயமோ”ன்னு அலுத்துக் கொண்டாள்.

ஹோமம் ஆரம்பித்து வீடு முழுக்கப் புகை. கண் எரிச்சல் வேறே, வடை தட்ட விடாமல் படுத்தியது. சமயம் பார்த்து கரெண்டும் போய் விட்டது. நல்ல வேளை, நம்ம நாட்டு லட்சணம் தெரிஞ்சு, அரைக்க வேண்டியதை எல்லாம் அரைத்து விட்ட தன் சமர்த்தை மெச்சிக் கொண்டாள் மாமி. காக்காவுக்கு வாயஸ பிண்டம் வைக்க அன்னம் கொண்டு வரச் சொன்னார் வாத்தியார். பிறகு அதை பெரிய உருண்டையாக உருட்டி மதில் திட்டில் வைத்து விட்டு ’கா, கா’ என்று கத்தி விட்டு வந்த மாமா, ”இலை போடலாமா?” என்று கேட்க மாமியும் வந்து இலை போட்டு பரிமாற ப்ராம்மணாள் சாப்பிட்டு முடித்தனர். இதன் நடுவில் காக்கா சாதம் எடுத்ததா என்று அடிக்கடி மாமி போய்ப் பார்த்து விட்டு வந்தாள்.

பிறகு அவர்கள் சாப்பிட்ட இலையை மாட்டிற்குப் போட வேண்டும். இலையில் அவர்கள் சாப்பிடாமல் எறிந்த பொருட்களைப் பார்த்து விலைவாசி இருக்கும் நிலைமையில் தான் இவ்வளவு கஷ்டப்பட்டு செய்ததை வீணடித்திருக்கிறார்களே என்று நொந்து கொண்டே வாசலில் நின்றிருந்த மாட்டிற்கு இலையைக் கொண்டு போட்டு விட்டு அது சாப்பிட்டு முடிக்கும் வரை மாமாவை காவல் இருக்கச் சொன்னாள்.

அங்கு ஒரு சிறு பெண், ”ஐயா, பசிக்குது, எனக்கும் கொஞ்சம் எதாவது தாங்க” என்றது. கண்களில் குழி விழுந்து சாப்பிட்டுப் பல நாள் ஆகியதை உணர்த்தியது. இன்று ச்ராத்த நாள். வெளிப்பேர் யாருக்கும் எதுவும் தரமுடியாது என்பதால், ’ஒண்ணும் இல்லம்மா, போம்மா’ என்று வாய் கூறினாலும் மனது அந்தப் பெண் மேல் இரக்கப்பட்டது.

காக்கா, மிகப் பெரிதான சாத உருண்டையைக் கீழே தள்ளி விட்டது. அந்தப் பெண் பசிக் கொடுமையால் அதை எடுத்துச் சாப்பிடத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் மாமி அந்தப் பெண்ணை விரட்டியவாறே, ”போச்சு, தெவசம் பண்ணின பலனே போச்சு” என்று கத்தினாள். ஆனால் மாமாவுக்கு அந்தப் பெண்ணின் பசி முகத்தைப் பார்த்துத் திட்டத் தோன்ற வில்லை. அந்தச் சின்னப் பெண் மேல் இரக்கப் பட்டு, காக்காவே வேண்டுமென்று உருட்டித் தள்ளியதாக நினைத்தார்.

வேலையெல்லாம் முடிந்து சிறிது படுக்கலாமென்று தலை சாய்த்தாள் மாமி. அஞ்சலை வந்து கதவைத் தட்டினாள். அவளுக்குக் கதவைத் திறந்து விட்டுப் படுத்த மாமி, ”இங்கே செத்த வரேளா? எனக்கென்னவோ மாரடைக்கிற மாதிரி இருக்கு” என்று திடீரென்று ஈன ஸ்வரத்தில் கூறுவது கேட்டு மாமா ஓடி வந்தார். மாமி பேச்சு மூச்சில்லாமல் இருப்பது பார்த்து, மாமி கன்னத்தைத் தட்டி, ”பாரு, என்னடி ஆச்சு ஒனக்கு திடீர்னு? கண்ணைத் திறந்து பாருடி” என்று மாமா சத்தமாகச் சொல்வது கேட்டு அஞ்சலை ஓடி வந்தாள், ஃபோன் பண்ணினால் டாக்டரும் லைனில் இல்லை. என்ன செய்வதென்றே புரியவில்லை அவருக்கு. அஞ்சலை, ”பயப்படாதீங்க ஐயா, ஒண்ணும் இல்லே, காலைலேந்து பட்னியா ஈரத்தோட இம்புட்டு வேல செஞ்சிருக்காங்க, அதான்,” என்றாள்.

அஞ்சலை மாமியின் கொண்டையைப் பிரித்து விட்டு, புடைவை, ரவிக்கையைத் தளர்த்தி மார்பை நீவி விட்டாள். மாமாவை, ஃபேனைப் பெரிதாக்கச் சொன்னாள். பிறகு தன் மடியில் மாமியைப் படுக்க வைத்துச் சூடான பாலை வாயில் ஊற்றினாள். தலையில் ஈரம் காய காற்று படும்படி.வைத்தாள். மாமி மெல்லக் கண் விழித்துப் பார்த்தாள். சூழ்நிலையைப் பார்த்து யூகித்து நன்றி தெரிவிக்கும் வகையில் கையை கூப்பினாள், அஞ்சலை, ”எதுக்கும்மா, நன்றியெல்லாம்? மனுஷங்க பொறக்கிறதே உதவி செய்யத்தான். அப்புறம் மிருகத்துக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? இன்னிக்கு கூட பாருங்க நம்ம தெருக்கோடியில் யார் வூட்டிலயோ விசேசம். அவங்க சாப்பிட்ட எலய வெளியே போட்டிருக்காங்க. அதை மாடும் சாப்பிடுது, ஒரு சின்னப் பொண்ணும் சாப்பிடுது. தனக்குப் போட்டின்னு நெனச்சுதோ என்னவோ, திடீர்னு அந்தப் பொண்ணை மாடு முட்டிடிச்சி. அதுவும் பயந்து போய் பெருசா அழ ஆரம்பிச்சிடுச்சி. போய் அந்தப் பிள்ள கிட்டே வெவரம் கேட்டு என் வூட்டுக்கு கூட்டிப் போய் நான் குடிக்கிற கஞ்சியை அதுக்கும் குடுத்தேன். மனசு நெறைவா இருந்திச்சு. இதுக்கெல்லாம் பலன் நான் பாக்கலாமா, தப்பு இல்லையா?. முடிஞ்ச உதவி செய்யணும். அவ்ளோதான். சரி, நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்கம்மா, நான் போய் வேலையைக் கவனிக்கிறேன். அய்யா ரொம்ப பயந்திட்டாரு,” என்றவளைப் பார்த்து மாமியும் தன் பழமை வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள். தான் விரட்டிய அந்த சிறு பெண் முகம் வந்து ஏதோ சொல்வது போல் இருந்தது. எவ்வளவு பசி இருந்தால் ஒரு சுவையும் இல்லாத அந்த வெறும் சாத உருண்டையை சாப்பிட்டிருப்பாள் என நினைத்து பசிக் கொடுமையை உணர்ந்தாள். அஞ்சலை சொல்லியதில் உள்ள நியாயம் புரிந்தது. கண் மூடித்தனமா எதையும் செய்யறதை விட, தீர யோசனை செய்து செய்யணும் என்றெண்ணி, இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மாமாவைப் பார்த்து, “இன்னில்லேருந்து நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்” என்று சொல்ல, ”எனக்கு அது நீ சொல்லாமலே தெரியும். எனக்கும் அதில் உடன்பாடு தான்” என்றார் மாமா.“ ”ஆமா, கண்ணுக்குத் தெரியாத பித்ருக்கள் பசி போக்க பண்ற தெவசத்துக்கு ஆற செலவை, ஒரு அனாதை இல்லத்தில இருக்கிற கண்ணுக்குத் தெரியற பசியால வாடும் பிள்ளைகளுக்கு சாப்பாடு போடச் செலவழித்தால் பல வயிறு நிறையுமே, அது தான் செத்தவாளுக்கு நாம் பண்ற கடமை. செத்தவாள கவனிக்கறேன்னு உசுரோட இருக்கறவாள சாக விடலாமோ? செத்தவாள அவா உசுரோட இருந்தவரை பாத்துண்டோமே, அது தான் சிரத்தை இல்ல இல்ல ச்ராத்தம்” என்று பாரு மாமி பெரிய லெக்சரே பண்ணி விட்டாள். இனி மேல் வருஷா வருஷம் ச்ராத்த தினத்தில் அனாதை இல்லத்துக்குப் போய் அங்குள்ள குழந்தைகளுக்கு சாப்பாடு போடத் தீர்மானித்தார்கள் மாமியும் மாமாவும். படிப்பது மனது விசாலமடைய, தீர்க்கமாகச் சிந்திக்க மட்டுமல்ல, பழமையில் ஊறிய பழக்கங்களை மாற்றுவதற்கும் தான் எனப் புரிந்து கொண்டார்கள் மாமாவும் மாமியும். மனசு நெறஞ்சது போல இருந்தது இரண்டு பேருக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *