(2022 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘வெளிநாட்டுக்கு படிக்கப் போன தெய்வேத்திரன்,இன்று வீடு திரும்புகின்றான்.’ தலை கால் தெரியாத புளுகம் அம்மா மாணிக்கத்திற்கு. அப்பா சிவகுருவிற்குப் பெருமை பொங்க, மகிழ்ச்சி உதடுகள் வழியே புன் முறுவலாகின்றது. இருக்காதா பின்னே!
‘போர்ச் காரோடையல்லவா வருகின்றான்…’
அப்படியே ஒரு வருடம் உருண்டோடிப் போனதே தெரியவில்லை மாணிக்கத்திற்கு – கற்பனையில் மூழ்கினாள்.
அவர்களின் குடிசைக்கு வரவாற்றில் ஒரு சிறப்புண்டு. பனை ஓலைக் கூரை, சீமெந்துக் கற்களினால் ஆன சுவர். சாணித்தரை. அதற்கும் மேலும் அந்த வீட்டை அழகுபடுத்த சிவகுருவிற்கு சம்பாத்தியம் போதவில்லை. ஆனால், அந்த வீட்டிலே பிறந்து வளர்ந்தவர்கள் பெரும் கல்விப் புலமையுடன் திகழ்ந்தார்கள். மூத்தவன் தெய்வேந்திரன், கீழே நான்கு அழகான தங்கைகள்.
தெய்வேந்திரன் உயிரியல் விஞ்ஞானம் பயின்று, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் வேலை செய்யத் தொடங்கியபோது, அவனுக்கு இருபத்தியொரு வயதுதான் இருக்கும். பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு உயர்படிப்புப் படிப்பதற்கு திறமையிருந்தும், அப்பா நிரந்தர நோயாளியாகிவிட்டதால், படிப்பைப் பாதியில் நிறுத்திக் கொண்டான். தங்கைகளைக் கவனமாகப் படிப்பித்தான். சம்பளப்பணத்தை அப்படியே பெற்றோருக்குச் சுளையாகக் கொடுத்துவிடுவான். தெய்வேந்திரனுக்கு நாற்பது வயதாகியும் தங்கைகளுக்குத் திருமணம் நடக்கவில்லை. ஒருவரின் உழைப்பில் சீதனம் என்ற பெருவிருட்சம் பயமுறுத்தியது.
தெய்வேந்திரனுக்கு வேலை செய்யுமிடத்தில் புலமைப்பரிசில் கிடைத்து. மேற்படிப்புக்காக அமெரிக்கா போவதற்காக தெரிவு செய்யப்பட்டான்.
“அம்மா…நான் அமெரிக்கா போனாலும், இஞ்சை வேலை செய்யிற இடத்திலையிருந்து என்ரை சம்பளப்பணம் அப்படியே சுளையாக வீட்டுக்கு வந்துவிடும். அமெரிக்காவிலையும் பகுதி நேரமாக வேலைக்குப் போகலாம்.”
அம்மாவுக்கு மகன் வெளிநாடு போறதில் விருப்பம் இருந்தாலும், ஏதோ ஒன்று அவரின் மனக்கிடங்கைக் குடைந்தது.
“அம்மா…ஒரு வருஷம்தானே! சீக்கிரம் வந்துவிடுவேன்,”
வந்துவிடுவான்தான். ஆனால் ஆரேனும் வெள்ளைக்காரியுடன் வந்துவிட்டால்? சிவகுருவுடன் மந்திராலோசனை நடத்தினாள் மாணிக்கம். தெய்வேந்திரனால்தான் அந்தக் குடும்பத்திற்கு மீட்சி உண்டு. அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் முடித்து அனுப்பி வைப்போம் என முடிவெடுத்தார்கள்.
“அம்மா…. தங்கைகனின் திருமணத்திற்குப் பின்னர்தான் நான் திருமணம் செய்வேன்.” தெய்வேந்திரன் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை.
“எங்களுக்காகவே உழைச்சு ஓடாப் போனான் மகன். அமெரிக்கா போய் படிக்கிற கையோடை, நாட்டையும் சுத்திப் பாத்துக்கொண்டு வரட்டுமன்” என்றார் சிவகுரு.
புலமைப்பரிசில் நிதியானது, அமெரிக்காவில் தங்கியிருந்து படிப்பதற்கான செலவுகளை மாத்திரமே கொண்டிருந்தது. பிரயாணத்திற்கும் இதர செலவுகளுக்கும் அவர்கள் எங்கே போவார்கள்?
“சரி… கலியாண எழுத்தை முதலில் வைப்போம். அமெரிக்கா போய் வந்தபின்னர் திருமணம்” மாணிக்கம் மாற்றுத்திட்டம் ஒன்றை முன் வைத்தான்.
“அம்மா என்ரை படிப்புக் குழம்பிவிடும்.” மறுத்தான் தெய்வேந்திரன், நீண்ட விவாதங்களின் பின்னர் தெய்வேந்திரன் உடன்பாட்டுக்கு வந்தான்.
அயல் ஊரிலே பெண் கிடைத்தாள். எழுத்து முடிவடைந்தது. தெய்வேந்திரன் அமெரிக்கா பயணமானான். சீதனப் பணத்தின் ஒருபகுதி அவனின் பயணத்திற்குப் போக, மிகுதியை தன் மூத்தவளின் திருமணத்திற்காகப் பத்திரப்படுத்திக் கொண்டாள் மாணிக்கம். அதன்பிறகு மாணிக்கத்தின் கனவினில் தினமும் வண்ண வண்ணப் பூக்கள் பூத்தன. புது வீடு கட்ட வேண்டும்; பிள்ளைகளைக் கரை சேர்க்க வேண்டும்.
மருமகன் பூசி மினுக்கி, ‘ஹாண்ட் பாகி’ ஒன்றைச் சுழட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து போவாள். அவளுக்கு குடிசை வீட்டிற்கு வந்து போக வெட்கம். அக்கம் பக்கத்திலிருந்த சிறுவர்கள், புகையிரதம் போல பெட்டிகள் இணைத்துக் கூவிக்கொண்டு இவர்கள் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றார்கள். மாணிக்கத்தின் கற்பனையை புகையிரதச்சத்தம் கலைத்தது. “மாமா வந்திட்டார்… மாமா வந்திட்டார்…”
தெய்வேந்திரன் கோற் சூட் கூவிங்கிளாஸ் சகிதம், கையிலே ஒரு சூட்கேசுடன் மண்குடிசை முன்னாலே நின்று, ‘டொக் டொக்’ என்று தன் புதுச் சப்பாத்தினால் ஓசை எழுப்பினான், நான்கு சகோதரிகளும் பாய்ந்து விழுந்து, அவனைச் சூழ்ந்து கொண்டு செல்லம் கொஞ்சினார்கள். அப்பாவும் அம்மாவும் தங்கள் முறைக்காகப் பின்னாலே காத்திருந்தார்கள்.
குடிசைக்கு முன்னால் அவர்கள் எல்லாரையும் கூட்டிச் சென்று, தூரத்தே தெரியும் தனது ‘போர்ச்’ காரை அவர்களுக்குப் புள்ளியாகக் காட்டினான் தெய்வேந்திரன்.
“எங்காலையடா மகனே உனக்குக் காசு, கார் வாங்க?”
“படிக்கும்போது பகுதிநேரமாக வேலைக்குப் போனனான் அம்மா!”
“என்ன கலரடா மோனை”
“மரூண் கலர் அம்மா… அம்பத்து மூன்று இலட்சம் பெறும். விக்கப் போறன்,”
எல்லாரையும் காரில் ஏற்றி ஊரை ஒரு சுற்றுச் சுற்றுவான் என நினைத்த மாணிக்கத்துக்குச் சிறிது ஏக்கம்.
“ஏன்ரா மகனே காரை வீட்டுக்குக் கிட்டவாக் கொண்டு வரேலாதா!?”
“*பாதை சரியில்லை அம்மா…”
அந்த வாரம் தெய்வேந்திரன் காருடன் நகரில் உள்ள ஹோட்டலில் தங்கினான்.
ஐம்பத்து மூன்று இலட்சத்துக்கும் என்ன என்ன செய்யலாம்? கணக்குப் போட்டாள் மாணிக்கம். ‘முதலிலை மூத்தவளுக்கெண்டாலும் ஒரு கலியாணத்தைப் பேசி ஒப்பேற்றிப் போடவேணும்…’
மறுவாரம் தெய்வேந்திரனும் மனைவியும் கை கோர்த்தபடி ஒன்றாக வந்தார்கள். அம்மாவின் கையிற்குள் ஒரு என் வலப்பைப் பொத்திக் குடுத்தான் தெய்வேந்திரன். மாணிக்கம் என்வலப்பைக் கொண்டுபோய் சுவாமிப் படத்துக்கு முன்னால் வைத்தான். பின்னர் தெய்வேந்திரன் வீட்டிலே தங்க, மனைவி அவள் வீட்டுக்குப் போய்விட்டான்.
சுவாமி படத்துக்கு முன்னால் நின்று மனம் உருகித் தேவாரங்கள் பாடினான் மாணிக்கம். பிரசாதத்தை எல்லாருக்கும் குடுத்துவிட்டு, என்வலப்பை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். பிரித்தபோது, உள்ளே ஆயிரம் ரூபா மாத்திரம் இருந்தது. கண்டு பதறிப்போனாள்.. மிச்சம் எங்கே? திகைத்தான் அவள்.
“போர்ச் கார் எண்டான்… இப்ப புதுப்பெண்டாட்டியோடை எல்லாமே போச்சு. இறால் போட்டு சுறாவைப் பிடிச்சிட்டானே! அதென்னவோ தெரியேல்லை…. சிலபேருக்கு பெம்பிளயளைக் கண்ணில காட்டினவுடனேயே மாறிப் போறாங்கள்.”
தலையணை மந்திரம் மூளையைக் கெடுக்கும் என்பதை உணர்ந்தபோது, மாணிக்கம் தலை சுற்றிக் கீழே விழுந்தாள்.
– விடியல் இலக்கிய இதழ், மே 2022