பொறுப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2023
பார்வையிட்டோர்: 1,420 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சப் ரிஜிஸ்தர் ஆபிஸில் அன்றைய தனது வேலை முடிந்ததும், தனது வீட்டுச் சிந்தனை கவ்விக் கொள்ள, சாலை ஓரத்தில் நடந்து வந்தார் கிளர்க் சலீம்.

“நம் ஒருவரால் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பது எவ்வளவு சிரமமாக உள்ளது. “ மனம் சொல்லியது. வயதான அவரால் ஓடி ஆடி உழைக்கவும் முடியவில்லை. ஓய்வு எடுக்க வேண்டிய வயசு. அதற்குத்தான் சில வருடங்கள் உள்ளனவே.

பெரிய மகன் ஜலீலோ வேலை எதுவும் இல்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். சிறிய மகன் ரபீக் என்ன செய்வான்? காலேஜில் அல்லவா படித்துக் கொண்டிருக்கின்றான். மகள் பாத்திமா மணவறைக்குக் காத்திருந்தாள்.

சிந்தனைச் சுழல் நிற்க வீட்டை அடைந்தார் சலீம்.

“கதீஜா இங்கே வாயேன்” மனைவியை அழைத்தார். “இதோ வந்திட்டேங்க” கதீஜாவின் குரல். உடனே கதீஜா கணவனை வரவேற்றாள். சற்று நேரத்தில் காப்பியோடு வந்த பாத்திமா “வாங்க வாப்பா” என்று தந்தையை உபசரித்தாள்.

”ரபீக் இன்னும் காலேஜிலிருந்து வரலியாம்மா” “இல்லே வாப்பா” கூறியது பாத்திமா. “ஏன் கதீஜா நம்ம ஜலீல் எங்கே போயிருக்கான்”. “எனக்கென்ன தெரியும்? எங்காவது ஊர் சுற்ற போயிருப்பான்” சடைத்துக் கொண்டாள் கதீஜா.

“ஜல்லீலுன்னா மட்டும் உனக்கேன் இப்படிக் போபம் வருது”? “பின்னே என்னவாம் கல்யாணம் ஆன அப்புறமும் அவன் இப்படி பொறுப்பில்லாம சுத்திக்கிட்டிருந்தா எப்படி?” எனக் கொட்டினாள் கதீஜா.

“அவனும் என்ன ஏற்பாடு பண்ணாமலா இருக்கான் விசா வர்றவரைக்கும் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்” என விளக்கம் கூறியதும் சற்று ஆறுதலடைந்த கதீஜா சமையலறைக்குச் சென்றாள். அங்கு நின்றிருந்த மகளிடம் “ஏம்மா மருமக ஜுனைதா எங்கே போயிருக்குது.” “பக்கத்து வீட்டுக்குப் போயிருக்காங்க வாப்பா” கூறிவிட்டு தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள்.

சலீமின் சிந்தனை தலைதூக்கியது, “யா அல்லாஹ், நீ ஒருவன் தான் எங்கக் கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வைக்கணும்” சாய்வு நாற்காலியில் சாய்ந்தார் சலீம்.

“இவ்வுலகத்திலே வாழ்றதுதான் எவ்வளவு கஷ்டமாயிருக்கு. உறவுக்காரங்களெல்லாம் நம்மிடம் பணம் இல்லேங்கிறதுனாலே தானே நம்மள மதிக்கலே. சொந்தக்காரங்களை விட நண்பர்களைத் தான் அதிகம் மதிக்கணும்னு சொல்லுவாங்க அந்த நண்பர்களும் நமக்கு உதவாட்டா நம் நிலைமை இன்னுமல்லவா மோசமாகியிருக்கும். வயசுக்கு வந்த மகளுக்கு ஒரு நல்ல வரன் வேறு பார்க்க வேண்டும். நான் என்ன செய்யப் போகின்றேன்” வயதாக ஆக தனிமையும் சிந்தனையும் அதிகமாகும் என்பது போல சற்று தத்துவத்தில் தள்ளாடியது சலீமின் மனம் அந்தச் சிந்தனையிலேயே சற்று கண் அயர்ந்தார் சலீம்.

“வாப்பா” வாசலிலிருந்து ரபீக்கின் குரல். கண் விழித்த சலீம் “ஏம்பா இன்னைக்கு இவ்வளவு லேட்” “அதில்ல வாப்பா இன்னைக்கு காலேஜிலே கிரிக்கெட் விளையாண்டேன். அதனாலே லேட்டாயிடுச்சி வாப்பா”. “சரி நீ போய் காப்பி குடிச்சிட்டு, ஓய்வு எடுத்துக்கிட்டு பிறகு படி. நான் கொஞ்சம் கடைத்தெரு வரைக்கும் போய்ட்டு வரேன்” என்று மகனிடம் கூறிய சலீம் “நான் வெளியே போய்ட்டு வரேன் கதீஜா” என்று மனைவியிடமும் கூறினார்.

வயதேறினால் சிலருக்கு அறிவு அதிகமாகும், சிலருக்கு அறிவு மழுங்கும் இரண்டாவது ரகமல்ல சலீம். தன் குடும்பத்தை தன்னால் இயன்ற அளவு சீராக நல்ல முறையில் தான் பொறுப்புடன் நடத்தி வந்தார் இருப்பினும் ஆண்டவன் ஆட்டுக்கு ‘வால்’ ல அளந்துதான் வைப்பான்கிற மாதிரி ஆண்டவன் அளந்த வாழ்க்கையை அனுபவிச்சுத் தானே ஆகணும்.

வீட்டின் சமையலறைக்கு வந்த ரபீக் “உம்மா எனக்கு காப்பிக் கொடும்மா” என்றான். “வாடா மகனே” என்று செல்லமாக அழைத்த கதீஜா காப்பியையும் ஊற்றிக் கொடுத்தாள்.

“அல்லாஹு அக்பர்” மக்ரிபிற்கான தொழுகை நேரத்தை இங்கிதமாக தெரிவித்தது பள்ளிவாசலின் மைக்.

“உம்மா நான் தொழப் போய்ட்டு வர்றேம்மா. “ “சரிப்பா” விடை கொடுத்தாள் கதீஜா. அதனாலேயே ரபீக்கை கதீஜாவிற்கு பிடித்திருந்தது. இக்காலத்தில் இஸ்லாத்தில் இருந்துகொண்டு முஸ்லீம் என பெருமையாகவும் சொல்லிக் கொண்டு, உள்ளுக்குள் இஸ்லாத்தின் கடமையை மட்டும் செய்யாமல் இருக்கும் பல முஸ்லீம்கள், வாசலைக் கூட்டிவிட்டு வீட்டுக்குள் குப்பையைச் சேர்த்து வைத்திருப்பவர்கள் போன்றவர்கள் அல்லவா?

ஆனால் ரபீக்கோ காலேஜிலும் படித்துக் கொண்டு, தொழுகையிலும் நாட்டங்கொண்டு சிறந்த பண்பாளனாக இருக்கின்றானல்லவா? இவன் அண்ணன் ஜலீலை விட்டு வேறுபட்டு இருக்கின்றானல்லவா? இப்படிப்பட்ட மகனை வேறு எந்தத் தாய்க்குத் தான் பிடிக்காது. இதில் கதீஜா மட்டும் விதிவிலக்கா?

தாய் என்பவள் தன் எல்லா மக்களிடத்தும் ஒரே மாதிரியாக அன்பு செலுத்துபவள் தான். இருப்பினும், ஒவ்வொருவரின் ஒரு சில செயல்களையும், பண்புகளைப் பொறுத்தும் சற்றுக் கூடுதல் குறைவாக அன்பு மாறத்தான் செய்யும்.

“பாங்கு சொல்லியாச்சு. இருட்டிவிட்டது ” என தனக்குள் எண்ணிய ஜுனைதா “போய்ட்டு வரேன்” என பக்கத்து வீட்டில் விடை பெற்றுக் கொண்டு, தன் வீட்டை அடைந்தாள். ஒரு பெண்ணுக்கு புகுந்த வீடு தானே சொர்க்கம். பாவம் அவள் என்ன செய்வாள். கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகியும் கொஞ்சுவதற்கு குழந்தை இல்லை. இருந்திருந்தால் பொழுதுபோக பக்கத்து வீட்டுக்குச் செல்வாளா?

அடுக்களையில் கதீஜா, மற்றும் பாத்திமா சமையல் வேலையில் ஈடுபட்டிருந்ததால் அறைக்குச் சென்று, கூடை பின்னுவதில் ஈடுபட்டாள். அதன் மூலம் அவர்களுக்கு சிறு வருமானம் கிடைக்கத்தான் செய்தது. “செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமை தான் நமது செல்வம் “ என அவர்கள் வறுமையில் இதை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

நண்பர்களுடன் பொழுது போக்கிவிட்டு வீடு திரும்பிய ஜலீல், “ஜுனைதா இங்கே வாயேன்” குரல் கொடுத்து வீட்டினுள் நுழைந்தான். “என்னங்க” என்று தன் வேலையை விட்டு கணவனை வரவேற்று விஷயத்தைக் கேட்டாள்.

“என் நண்பன் பாரக் சீக்கிரமே துபாய் போக விசா அனுப்பி வைப்பதாக எழுதியிருக்கான். நம்ம புதுப்பள்ளித் தெரு மஜீது நானா இன்னைக்கு துபாயிலிருந்து வந்திருக்காரல்லவா? அவர்ட்டே பாரக் இந்தக் கடிதத்தைக் கொடுத்து விட்டிருக்கான்” ஒரே மூச்சில் மனைவியிடம் மட்டுமல்லாது தாய், தங்கையிடமும் சொல்லி முடித்தான்.

இதைக் கேட்ட தாய், தங்கை சந்தோஷமடைந்தாலும், “பிறக்கப்போகிற குழந்தைக்கு முன்னமே பேர் வைக்கக் கூடாது. குழந்தை முதலில் பிறக்கட்டும் பேர் வெக்கிறதைப் பற்றி பிறகு யோசிக்கலாம் “ என குத்தலாகப் பேசினாள் கதீஜா. இவள் எதை மனத்தில் வைத்துக் கொண்டு சொல்கின்றாள் என குழம்பிய ஜலீல், சற்று ஆத்திரமடையவும் செய்தான் . இக்காலத்தில் வேலையென்று எதுவுமில்லாமல் கணவன்மார்கள் இருந்தால் மனைவி அவர்களிடத்து மதிப்பைக் குறைத்துக் கொண்டு விடுகின்றார்கள். ஜலீலும் அந்த வகையையேச் சேர்ந்தான்.

‘இவள் ஏன் இப்படிச் சொன்னாள். நாமும் ரொம்பதான் பொறுப்பில்லாமல் ‘விசா வருது ‘ ‘விசா வருது ‘ என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றோம் போலிருக்கின்றது விசா வர்ற வரைக்கும் ஏதாவதொரு கடையிலாவது வேலை பார்க்கலாம் என்றால், நம் நண்பர்கள் நம்மைப் பற்றி ஏளனமாக அல்லவா நினைப்பார்கள் இருந்தாலும் நம் வீட்டில் எல்லோரும் நம்மை ஒரு மாதிரியாக அல்லவா நினைக்கின்றார்கள், பார்க்கின்றார்கள், ஜலீலின் மனம் கண்டபடி சிதறியது.

தொழுகையை முடித்துக் கொண்டு, வீட்டை அடைந்த ரபீக், “வாப்பா இன்னும் வரலியாம்மா” என விசாரித்து “இன்னும் வரலேப்பா” என பதில் கிடைத்ததும் தன் படிப்பில் ஆழ்ந்தான்.

வீட்டில் சற்று அமைதி நிலவியது. பாத்திமா ‘முஸ்லிம் முரசில்’ மும்முரமாய் இருந்தாள் கதீஜாவும் ஜலீலும் சிந்தனையிலும், ஜுனைதா கூடையிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

கடைத்தெருவில் தனது வேலை முடிந்ததும் இருமிக் கொண்டே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தன் வீட்டை மெதுவாக அடைந்தார். இதை முதலில் கண்ட கதீஜா எழுந்து சென்று, “என்னங்க ஆச்சு உங்களுக்கு “? என்றாள் பதட்டத்துடன், “ஒன்னுமில்லே கதீஜா அந்த நெஞ்சுவலி மீண்டும் வந்திருச்சி. அதோடு இருமலும் வேறே சேர்ந்திடுச்சி “ என்று தடுமாறியபடியே பதில் சொன்னார்.

மற்றவர்களும் எழுந்து வந்து, என்னவென்று விசாரித்து, அவ்வளவாக பயப்படக்கூடிய அளவில் ஒன்றுமில்லை எனத் தெரிந்ததும், மீண்டும் தங்களை தங்கள் வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

கதீஜா மட்டும் சலீமை சாய்நாற்காலியில் அமர வைத்து, மாத்திரையும், தண்ணீர் கொடுத்துவிட்டு, அவர் அருகிலேயே அமர்ந்தானள்.

“கதீஜா நம்ம மகளுக்கு ஒரு நல்ல வரனா பார்த்து பேசிட்டுத் தான் வர்றேன். நம்ம ரஹீம் நானாவை கடைத் தெருவில பார்த்தேன். அவருதான் சொன்னாரு, மாப்பிள்ளை நல்லா படிச்சிருக்காராம். ஏதோ கம்பெனியிலே 1600 ரூபாய் சம்பளத்துல வேலை பார்க்கிறாராம் . அரபு நடுசெல்வதற்கும் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காராம். “ சற்று சிரமப்பட்டாலும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சலீம்.

“நம்ம மகளுக்கு ஏங்க இப்ப கல்யாணமெல்லாம்! “தயக்கத்துடன் கேட்டாள் கதீஜா. “வயசுக்கு வந்த பொண்ணெ எத்தனைக் காலத்துக்குத் தான் வீட்டிலே வச்சிருக்கிறது. இந்தக் காலத்துல மாப்பிள்ளை கிடைக்கிறதே முயற்கொம்பாக இருக்கு” கொட்டினார் சலீம்.

அதில்லேங்க நம்ம இருக்கிற சூழ்நிலையிலேயே இப்ப ஏன் கல்யாணம்னு தான் கேட்டேன். நம்ம மகன் துபாய்க்கு போனப்புறம் கல்யாணம் முடிச்சுக்கலாமேன்னு தான் நினைச்சேன்” தயங்கினாள் கதீஜா.

“இதோ பாரு கதீஜா. மகன் எப்ப போறது நம்ம எப்ப கல்யாணத்தை முடிக்கிறது. கடனோ உடனோ வாங்கி காரியத்தை முடிச்சிட வேண்டியது தான். அப்ப தான் நம்ம கவலையும் தீர்ந்த மாதிரி இருக்கும்.” பொறுப்புடன் பேசினார் சலீம்.

ஆமோதித்தவள் போல் கதீஜா தலையாட்டிவிட்டு, மணியைப் பார்த்தாள் எட்டாகி விட்டிருந்தது. ரபீக்கும் இஷா தொழுகையை முடித்துவிட்டு வீட்டை அடைந்தான். சலீமின் உடல்நிலை சரியில்லாததால் அவரால் தொடர்ந்து தொழ இயலவில்லை. அதற்காக இறைவனை மறந்துவிடவும் இல்லை. அவ்வப் பொழுது தொழுது கொண்டு தான் வந்தார். இதிலிருந்து விதிவிலக்குப் பெற்றவன் ஜலீல்தான்.

அன்றைய இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் உறங்கிவிட்டனர்.

மறுநாள் காலை.

அன்று வந்த தினசரியைப் புரட்டி விட்டு, தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ஆபிஸிற்குப் புறப்பட்டார் சலீம். “போய்ட்டு வர்றேன் கதீஜா” குரல் கொடுத்தார் சலீம். “நீங்க இன்னிக்கு லீவு எடுத்துக்கங்களேன். உடல் சரியில்லாத நிலையிலே…” தயங்கினாள் கதீஜா.

“காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என் உடம்புக்கு ஒண்ணுமில்ல. என்னைவிட உடல்நிலை குறைவானவங்களெல்லாம் என் ஆபிஸில் வேலை பார்க்கிறாங்க எல்லாத்துக்கும் ஆண்டவன் துணையிருக்கான்” என்று சொல்லியபடியே, வாசலில் இறங்கி ஆபிஸை நோக்கி நடந்தார்.

“போய்ட்டு வர்றேம்மா “ ரபீக்கின் குரல் தாய் மகனையும் காலேஜுக்கு வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டினுள் வந்தாள்.

“இவங்க ஏன் தான் ஆபிஸ் போகணும் ஜலீல் இப்படி பொறுப்பில்லாம சுத்திட்டிருக்கிறதுனாலேதானே போக வேண்டிய அவசியமாகி விட் டது. யா அல்லா நீ தான் எங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டணும்” மனம் பொருமியது கதீஜாவிற்கு!

சிந்தனையிலேயே, கதீஜா மகளுடன் சேர்ந்து சமையலில் ஈடுபட்டாள். ஒத்தாசையாக மருமகள் ஜுனைதாவும் வேலைகள் செய்தாள் வழக்கம் போல ரபீக் டப்பா சாப்பாடு எடுத்துச் சென்றுவிட்டான். ஜலீலை கேட்கவா வேணும்… அவன் வழக்கம் போலவே ஊர் சுற்றச் சென்று விட்டான். வீட்டில் தாய், மகள், மருமகள் மூவர் மட்டுமே இருந்தனர். நேரம் சென்றுகொண்டே இருந்தது

“ட்ரிங் ட்ரிங் “ வாசலில் ஏதோ மணி சத்தம் “இதோ வர்றேன்.” கதீஜா விரைந்து சென்றாள் கணவருக்காக சமைத்திருந்த ஸ்பெஷல் அயிட்டங்களுடன் கூடிய டிபன் கேரியரோடு.

“சீக்கிரம் கொடுங்கம்மா நேரமாயிட்டுது.” தினமும் சலீமிற்கு சாப்பாடு கொண்டு செல்பவன் கூறினான் இதற்காக அவன் மாதம் ரூ.30 வாங்கிக் கொள்வான். சைக்கிளில் தான் செல்வான்.

இன்று கணவருக்காக நெய்ச் சோறும் குருமாவும் கொடுத்தனுப்பினாள்

மதியச் சாப்பாட்டை முடித்துக் கொள்வதற்காக வீட்டிற்கு வந்தான் ஜலீல் தகப்பனார் உடல்நிலை சரியில்லாமலேயே ஆபிஸ் சென்றது அவன் நினைவில் நிழலாடமலில்லை.

“உம்மா” அலறிக் கொண்டே வந்தான் “என்ன தம்பி” கூவினாள் கதீஜா.

“ஏம்மா உடம்பு சரியில்லாத நிலைமையிலே வாப்பாவெ ஆபிஸுக்கு அனுப்பினே?” அக்கறையாகக் கேட்டான்.

“நான் என்ன செய்யட்டும்? உங்க வாப்பா நான் சொன்னதைக் கேட்டாதானே! அது மட்டுமல்லாம நீ வேற இப்படி பொறுப்பில்லாம இருக்கிறதுனால நானும் ஒன்னும் சொல்ல முடியறதில்லே. இல்லாட்டா வேலையையாவது ராஜினாமா பண்ணச் சொல்லிடலாம்.” மனதில் உள்ளதைக் கொட்டினாள் கதீஜா.

“என்னம்மா பண்றது. எதற்கும் ஒரு நேரம் வரவேனா” சமாளித்தான் ஜலீல்.

“அல்லா நாட்டப்படி தானே எல்லாம் நடக்கும் நீ வந்து சாப்பிடு” சற்று பெருமூச்சோடு கூறினாள்.

கணவன் ஜலீலுக்கு மனைவி ஜுனைதா அறையில் சாப்பாடு எடுத்து வைத்தாள்.

“என்னங்க” தயக்கத்துடன் ஜுனைதா. “என்ன! நினைச்சதை முழுங்காம சொல்லு” ஜலீல். “இல்லே உங்க வாப்பா இந்த நிலையிலே இருக்கிறப்போ, நீங்க ஏதாவது தொழில் செய்தா என்ன“. தயங்கியபடி ஜுனைதா.

“உனக்கொன்னும் தெரியாது ஜுனைதா என் நிலைமையும் உனக்கு புரியாது. எல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும்” ஜுனைதாவின் வாயை மூடினான் ஜலீல்.

அனைவரும் மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, ஓய்வு எடுத்துக் கொண்டனர். மாலை நேரம் 4.30 மணி அளவில் ஜலீல் விழித்து சிற்றுண்டி முடித்துக் கொண்டு, வெளியே புறப்பட்டான். ஆனால் கதீஜாவோ, கணவனையும், மகனையும் எதிர்நோக்கி இருந்தாள்.

எதிர்நோக்கி இருந்தவளுக்கு சலீமை யாரோ தாங்கலாகப் பிடித்துக் கொண்டு வந்தது சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“என்னங்க என்ன ஆச்சு“ பதட்டத்துடன் கதீஜா.

“ஒன்னுமில்ல நேத்து மாதிரி கொஞ்சம் நெஞ்சுவலி வந்துட்டுது.” மூச்சு வாங்கியது சலீமுக்கு. சலீமை அழைத்து வந்தவர், வீட்டில் விட்டதும் விடைபெற்றுச் சென்றார். சலீமைக் கட்டிலில் படுக்க வைத்தாள் கதீஜா. நெஞ்சில் தைலமும் தேய்த்துவிட்டாள்.

“கதீஜா… நம்ம மகளுக்கு மாப்பிள்ளையை பேசி முடிச்சிட்டேன். நேத்து சொன்னேன்ல அந்த மாப்பின்னைதான். நாளைக்கு, பாத்திமாவெ பெண் பார்க்க வர்றதா சொன்னாங்க. பேசி முடிச்சிட்டு வர்றப்போ தான் எனக்கு நெஞ்சு வலி வந்திட்டுது “ வார்த்தைகள் வெளிவர மறுத்தன சலீமிற்ககு.

“நீங்க இப்ப அதிகம் பேசாதீங்க நான் போய் யாரையாவது டாக்டரைக் கூட்டிட்டு வரச் சொல்றேன். நீங்க ஓய்வு எடுத்துக்கங்க “- பய்த்துடன்; தடுமாற்றத்துடன் கூறினான் கதீஜா.

மகளும், மரும்களும், சலீமின் அருகில் கவலையுடன் அமர்ந்திருந்தனர் அவருக்கு பணிவிடை செய்தவாறு.

“கதீஜா டாக்டரெல்லாம் கூப்பிட வேணாம். இப்ப மகன் வந்திடுவான். பிறகு பாத்துக்கலாம்.“ தொனியில்லாத சலீமின் குரல்.

ரபீக் காலேஜிலிருந்து வீட்டை அடைந்தான் தகப்பனாரின் நிலையைக் கண்டு,

“வாப்பா உங்களுக்கு என்ன ஆச்சு?” பதறிய அவன் அழுதே விட்டான். உடன் டாக்டரை அழைத்து வர வெளியே சென்றான்.

மீண்டும் நெஞ்சு வலி வர துடித்தார் சலீம். அனைவரும் மிகவும் பதறினார்கள் (இன்னாலில்லாஹி)

“என்னங்க என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே “ அழுகையுடன் கதீஜா.

“வாப்பா எங்களையெல்லாம் மறந்துட்டீங்களே!” வேதனை அழுகையுடன் பாத்திமா.

“நாங்களெல்லாம் குடுத்து வைச்சது அவ்வளவு தானா மாமா!” துக்கத்துடன் அழுகையுடன் ஜுனைதா.

டாக்டருடன் வந்த ரபீக், அதற்கு முன்னேயே தந்தை இறைவனுடன் சென்றுவிட்டதைக் கண்டு கதறி அழுதான்.

வெளியே சென்றிருந்த ஜலீல், அன்று மாலை துபாயிலிருந்து வந்த கமால் பாட்சாவிடம் தனக்காக வந்திருந்த விசாவை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான். தந்தை இறந்துவிட்டதைக் கண்டு கதறி கதறி அழுது,

“வாப்பா என்னை விட்டு போய்ட்டீங்களே! எனக்கு விசா வந்த செய்தியைக் கூட கேட்க உங்களுக்கு நேரமில்லையா?” எனத் தேம்பினான்.

தனது பொறுப்பு முடிந்துவிட்டது என பொறுப்பாக சலீம் இறைவனிடம் சென்றுவிட்ட பிறகு, இனி – ஜலீலின் குடும்பப் பொறுப்பைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?

– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *