மனைவியுடன் ஒரு நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2023
பார்வையிட்டோர்: 2,964 
 
 

(வெப் சீரிஸ்- க்காக கொடுக்கப்பட்ட கதையின் கதைச்சுருக்கம்)

வங்கி ஊழியராக இருக்கும் இளைஞன் மாணிக்கம். தொலைக்காட்சியில் பணிபுரியும் அவனது நண்பன் ரங்கா மூலம் அறிமுகமான பட்டிமன்ற பேச்சாளர் ரம்யா இமயவரம்பனை சந்திக்கிறான். கண்டதும் காதல்.

இமயவரம்பன், பிரபலமான அரசியல் புள்ளி. அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் ரம்யா, அவளது தம்பி பாபு. இரண்டாவது மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.

இமயவரம்பன் உடனேயே எப்போதும் இருக்கும் இளைஞன் ராஜராஜன், மாமா இமயவரம்பன், அவரது மகளைக் கட்டி வைப்பார் என்று கனவு கண்டு கொண்டிருந்தான். ரம்யா, மாணிக்கத்தை காதலிப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தாலும் இமயவரம்பனிடம் சொல்லவில்லை. யாரிடமும் இது பற்றி பேசவில்லை.

மாணிக்கத்திற்கு பெற்றோர் இல்லாததால், மாணிக்கம் வேண்டிக்கொள்ள, அவனது சிற்றப்பா நாராயணன், இமயவரம்பன் வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார். உடன் மாணிக்கம்.

ரம்யா, இருவரையும் தனது தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ஏற்கனவே இமயவரம்பனுக்கு ரம்யா காதல் விவகாரம் தெரிந்து இருந்ததால், அப்போதைக்கு சம்மதம் தெரிவித்து அவர்களை அனுப்பி வைக்கிறார்.

மாணிக்கத்திற்கு, இமயவரம்பன், வேண்டா வெறுப்பாக பேசியதும் சிற்றப்பாவிடம் மரியாதை உடன் முகம் கொடுத்து பேசாததும் மிகுந்த வருத்தம் அளித்தது. ரம்யாவை மறந்து விட போவதாக சிற்றப்பாவிடம் சொல்கிறான்.

ஆனால், ரம்யா, இருவரையும் சந்தித்து பேசி, தந்தையார் அரசியல் டென்ஷனால் சரியாக நடந்து கொள்ளவில்லை என்று சமாதானம் சொல்லி வற்புறுத்தி திருமணத்திற்கு சம்மதம் பெறுகிறாள்.

ரம்யாவின் தம்பி இளைஞன் பாபு, அரசியல், பிசினஸ், காதல், கேட்கட்ஸ் என்று எதிலும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான்.

ஒரே நேரத்தில், இமயவரம்பனின் இரண்டு மனைவிகளும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் வீட்டு பணி ஆட்களும் அவரகளைப் பார்த்துக் கொள்ள அமர்த்தப்பட்டவர்களும் சரியாக கவனிக்காததால் அம்மாவையும் சித்தியையும் கவனிக்கும் பொறுப்பையும் பணிவிடைகளையும் பாபு முன்வந்து ஏற்கிறான். மருத்துவர்களின் அறிவுரைப்படி, மருந்து மாத்திரைகளையும் பத்திய உணவையும் இரண்டு அம்மாக்களுக்கும் பொறுப்பாக குறித்த நேரத்தில் அளித்து வருகிறான். மற்ற நேரங்களில் அவனுக்குப் பிடித்த புத்தகங்களைப் படித்து வருகிறான்.

ரம்யாவின் தம்பி, அம்மா, சித்தி இல்லாமல், ரம்யாவின் அப்பா மற்றும் பிற முக்கிய உறவுகள், மாணிக்கத்தின் சிற்றப்பா, சித்தி முன்னிலையில், எளிய முறையில், இமயவரம்பனின் கட்சிக்காரரின் திருமண மண்டபத்தில் ரம்யா – மாணிக்கம் திருமணம் நடைபெற்றது.

திருமண நாள் அன்று, இரவு வரவேற்புக்குப் பின், ரம்யா, மிகவும் களைத்துப் போய் உறங்கி விடுகிறாள். முதல் இரவு கனவுகள் உறக்கத்தால் நிறைவேறாமல் போனது.

ரம்யாவும் இமயவரம்பனும் கேட்டுக் கொண்டதால், மாணிக்கம், தன்னுடைய அபார்ட்மென்ட்டை பூட்டி வைத்து, மாமனார் வீட்டுக்கு வருகிறான். இமயவரம்பனின் வீட்டோடு மாப்பிள்ளை என்ற கனவு நிறைவேறியது.

திருமணம் ஆன பிறகு, ரம்யாவுக்கு பட்டிமன்ற வாய்ப்புகளும் சொற்பொழிவு வாய்ப்புகளும் முன்பு இருந்ததை விட அதிகமாகிறது. அவள் அதில் மும்முரமாகி விடுகிறாள். அதற்காக, சுற்றுப் பயணங்களில் இருக்கிறாள். இலக்கிய காதல் கவிதைகளை ரொமான்ஸ் கவிதைகளை மேடைகளில் மேற்கோள் காட்டிப் பேசும் ரம்யாவுக்கு கணவனைக் காதலிக்க நேரமில்லை என்பதால் கணவன் மனைவி இடையேயான தாம்பத்ய மகிழ்ச்சி தள்ளிப் போகிறது.

இமயவரம்பனுக்கு அரசியல் வாழ்வில் சில இறக்கங்கள் ஏற்பட, அவர் தினந்தோறும் இரவு நேரங்களில், மனைவிகள் இருக்கும் அறைகளுக்கு வந்து அவர்களைத் திட்டுவதுடன் சில சமயங்களில், படுத்த படுக்கையாக இருக்கும்

அவர்களை அடிக்கவும் முற்பட, பாபு தடுத்து வந்தான். வாடிக்கையாக இப்படி நடப்பதால், பாபு, இரண்டு அம்மாக்களையும் அழைத்துக் கொண்டு, அவனுடைய தாத்தா பாட்டி (அம்மாவின் அப்பா அம்மா) இருக்கும் கிராமத்திற்குப் போய் விடுகிறான். வசதி படைத்த, நிறைந்த மனம் கொண்ட தாத்தா பாட்டி, இவர்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இப்பொழுது பெரும்பாலான நாட்களில், வீட்டில் இருக்கும் உறவுகள் – மாணிக்கமும் அவரது மாமனாரும் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் இமயவரம்பனின் பணியாளர்கள் /அடியாட்கள்.

மாமனாரும் மாப்பிள்ளையும் அதிகம் பேசிக் கொள்வதில்லை.

உணவை கேட்டுப் பெறுவதில் கூச்சப்படும் மாணிக்கம், வீட்டில் சாப்பிடாமல் வெளியே சாப்பிடுகிறான். வங்கி வேலை நேரம் முடிந்ததும் வீட்டிற்கு வந்தால் தனது அறையில் முடங்கிக் கிடக்கிறான்.

தொடர் விடுமுறை தருணத்தில், பயணங்களை முடித்து , ரம்யா வருகிறாள். அன்று வீட்டில் இமயவரம்பனும் அவரது ஆதரவாளர்கள் யாரும் இல்லாத காலை நேரத்தில், ரம்யா, கணவனிடம் இந்த மூன்று நாட்களும் உங்களுடன் இருக்கப் போகிறேன். உங்களுக்குப் பிடித்த உணவுகளை நானே சமைத்து தருகிறேன் என்று சொல்கிறாள். சமையலறை இருக்கும் இடம் தெரியுமா என்று மாணிக்கம் கேட்க வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்தனர். அரை நாள் அதில் ஓடி விட, சோறு தண்ணீர் இல்லாமல் இருவரும் இருக்கின்றனர்.சோதனை முடிந்து அதிகாரிகள் கொடுத்த காகிதங்களில் மாமனார் சார்பாக என்று மாணிக்கம் கையொப்பம் இட்டு தருகிறான். அவர்கள் செல்கின்றனர்.

ரம்யா, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யச் சொல்கிறாள். பசி வயிற்றைக் கிள்ளவே அவளே உப்புமா செய்து கொண்டு வருகிறாள். இருவரும் சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து ஆசையாகப் பேசலாம் என்று சோபாவில் அமர்ந்த போது மதியம் மூன்றரை மணி.

மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது. இப்பொழுது, காவல் துறையினர். மோப்ப நாயுடன் வருகிறார்கள். மாளிகையின் பின்புறத்தில், பணியாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் உபயோகத்திற்கான குளியலறைகளில் ஒரு குளியலறையில் தங்கம் என்ற இளம் பணிப்பெண் இறந்து கிடக்கிறாள். விஷயம் தெரிந்ததும் தங்கத்தின் உறவினர்கள் மாளிகை வாசலில் கூடி விடுகிறார்கள். வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டன. மனைவியை மாணிக்கம் அரவணைத்து காப்பாற்றுகிறான்.

நண்பர்கள் மூலம் நடத்திய பிசினஸில் நஷ்டம், கொலை பழி விழுந்ததால் வழக்கு, கைது, சிறை வாசம், ஜாமீன், பொது வாழ்வில் கெட்ட பெயர் என்று பல சோதனைகளை சந்தித்த இமயவரம்பன் உடன் இருந்தவர்கள் ஓடி விட, மாப்பிள்ளை அவருக்கு தோளோடு தோள் கொடுத்து உறுதுணையாக இருக்கிறான்.

பிசினஸ்க்கு வாங்கிய கடனை அடைப்பதில் மாளிகை உள்ளிட்ட சொத்துகள் மூழ்கி விட, இமயவரம்பன், கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு செல்ல மனம் இல்லாமல் மாணிக்கத்தின் வீட்டில் குடியேறுகிறார். பேசாமல் இருந்த மாமனாரும் மாப்பிள்ளையும் கொஞ்சம் கொஞ்சம் ஆகப் பேசத் தொடங்கினர்.

அப்பாவுக்கு ஏற்பட்ட சோதனைகளால், ரம்யா, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறாள்.

என்னை மன்னித்து விடுங்கள் என்று கணவனின் கால்களைப் பற்றிக் கொள்கிறாள். அவன் அவளைத் தூக்கி நிறுத்தி ஆரத் தழுவிக் கொள்கிறான். இமயவரம்பன் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.

குறிப்பு: இந்தக் கதை மற்றும் அதன் பாத்திரங்கள் முழுக்க முழுக்க கற்பனையே. சமகாலத்தில் வாழும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *