பௌணர்மி புன்னகை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 4,921 
 
 

பிரகாரத்தில் வீசிய காற்று இதமாக இருந்தது. சித்திரை மாதத்து வெயில் உக்ரமாக பார்வைக்கு தென்பட்டாலும், வெப்பத்தில் கடுமை இல்லை. வடபழனி சிவன் கோயில் பிரகாரம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இன்னும் மண்டபத் தூணில் முகுது சாய்த்து அமர்ந்தால் வசதியாகவும் இதமாகவும் இருக்கும். சுற்றிலும் பார்த்தேன். எல்லா தூண்களிலும் முதுகு சாய்த்திருந்தார்கள். கையில் மொபைலோடு பேஸ்புக்கிலோ வாட்ஸ்அப்பிலோ இணைந்திருந்தார்கள். சமூக வலைத்தளப் பிரியர்களுக்கு கோயில் வசதியான இடம். கும்பிடு போட்டுவிட்டு பிரகாரத்தில் அமர்ந்தால் மணிக்கணக்காக பிக்கல் பிடுங்கல் இல்லாமல் பொழுது போகும்.சித்ரா பெளர்ணமி. கூட்டம் அதிகமாக இருந்தது. ‘ஹரஹரசிவனே அருணாச்சலனே அண்ணாமலையே போற்றி…’ ஒலிபெருக்கியில் எஸ்.பி.பி இழைந்து கொண்டிருந்தார். மடப்பள்ளிக்கு வெளியே அடுப்புமூட்டி பெரிய பெரிய அண்டாக்களில் பிரசாதம் தயாராகிக் கொண்டிருந்தது. சாம்பார் வாசம் நாசியில் அடித்தது.

இந்தப் பக்கம் சிலர் பலகைக்கட்டையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

“சார்…”

என்னருகே குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

கோயில் ஊழியர் ஒருவர் நின்றிருந்தார்.

“சார்.. அவங்க இந்த இடத்துல வடக்குப் பார்த்து நின்னு பேசணுமாம்… ஜோசியக்காரர் சொல்லி அனுப்பி இருக்காராம். நீங்க கொஞ்சம் நகர்ந்துக்க முடியுமா..?”

தயக்கமாகக் கேட்டார்.நான் அவர் பார்வை போன திசையில் பார்த்தேன். அந்தப் பெண் நின்றிருந்தாள். புடவை கட்டியிருந்தாள். பொட்டு வைத்து, பூச்சூடி லட்சணமாக, சிரித்த முகமாக இருந்தாள். அவளருகே இருந்தவர்கள் அவளது பெற்றோராக இருக்க வேண்டும்.இன்னொரு குடும்பம் தயக்க நடையோடு அவர்களை நெருங்கியது. பையன் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்திருந்தான், கூலிங் கிளாஸைக் கழற்றி சட்டைப் பையில் வைத்தான். கூடவே நடுத்தர வயதில் ஒரு பெண்மணி. அவளையொட்டி ஒருவர். அநேகமாக அந்தப் பையனின் பெற்றோராக இருக்க வேண்டும்.

சட்டென எனக்குப் புரிந்தது. பெண் மாப்பிள்ளை பார்க்கும் படலம். பேச்சு வார்த்தை முடிந்து இரண்டு குடும்பமும் நிச்சயதார்த்தம் நோக்கி நகரும் நோக்கில் பெண்- மாப்பிள்ளையின் முதல் சந்திப்பு.அந்தப் பெண்ணை கவனித்தேன். பையனைப் பார்த்து மெலிதாகச் சிரித்துவிட்டு தனது பெற்றோரைப் பார்த்தாள். பையனும் அப்படியே. இரண்டு பெற்றோரிடமும் திருப்தி தெரிந்தது.எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சிவன் கோயிலில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் வழக்கம். ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப்பின் இன்றைக்கு பார்க்கிறேன்..பெண் – மாப்பிள்ளை முதல் சந்திப்பு என்பது த்ரில் கலந்தது. அந்த வெட்கமும் இருவரும் ஒருவரையொருவர் பார்க்காதபோது பார்த்துக்கொள்ளும் அந்த திருட்டுத்தனமும், பிடித்துப்போய் சிரித்தபடி அடுத்த சந்திப்பு குறித்த எதிர்பார்ப்போடு பிரியும் அந்தத் தருணமும் இனிமையாக இருக்கும்.

நான் நகர்ந்தேன். புன்னகை முகத்தோடு நின்றிருந்த அவர்கள் தெரிந்தார்கள். மனது நான் பெண் பார்த்த சம்பவம் நோக்கிப் போனது.

“ஏம்ப்பா… தனியா பொண்ண பார்க்கணும்னு சொல்றீயே… அவங்க சம்மதிப்பாங்களான்னு தெரியலையே… பொண்ணோட அப்பா ரொம்ப கறாரா பேசறாரு. லெட்டர் போட்டிருக்கேன். என்ன பதில் வருதுன்னு பார்ப்போம்…”

அப்பா ஃபோனில் பேசினார்.

“நான் ரிப்போர்ட்டர் வேலை பார்க்கறேன்ப்பா. என் வேலை பத்தி பேசணும். அவங்க வீட்டுல எல்லாரும் கவர்மென்ட் ஜாப். அந்த வசதி என் வேலையில கிடைக்காது. ராத்திரி பகல் பார்க்காம ஓடணும். வாரத்துக்கு ஒரு சினிமாவும் ஹோட்டல் சாப்பாடும் முடியாது. வாய்க்கறப்பதான் அனுவிக்கணும். எதையும் பிளான் பண்ணி செய்யமுடியாது. அதையெல்லாம் பத்தி பேசணும்ப்பா..’

“சரி உன் இஷ்டம். என்ன பதில் சொல்றாங்கன்னு பார்ப்போம்…”

அப்பா இப்படிச் சொன்ன இரண்டாவது நாள் அலுவலகத்துக்கு போன் வந்தது.

“ரொம்ப தயக்கமாத்தான் பதில் எழுதி இருக்காங்க. நிச்சயதார்த்தத்துக்கு முந்தி ரெண்டு பேரும் பார்த்துக்கக்கூடாதாம். அவங்களுக்கு அந்தப் பழக்கம் கிடையாதாம். இந்த மாசக் கடைசியில நிச்சயதார்த்தம் வச்சுகிட்டா வசதியா இருக்குமாம். அன்னைக்கே பொண்ணோட பேசிக்கலாம்னு சொல்றாங்கப்பா. அதோட சித்திரை மாசம்தான் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணணுமாம். இடையில ஆறு மாசம் இருக்கே… என்ன பண்ணலாம்..?”

“அப்பா.. நான் வேணா அந்தப் பெண்ணோட அப்பாகிட்ட பேசவா..? என்னோட வேலை புரிஞ்சு அந்த பொண்ணு அதுக்கெல்லாம் சம்மதிச்சாதாம்ப்பா நிச்சயமே பண்ண முடியும்..? நீங்க இதை தெளிவா சொல்லுங்க. லெட்டர்ல வேணாம். யாரையாச்சும் நேர்ல தஞ்சாவூருக்கு அனுப்புங்க…” என்றேன்.

ஒருவழியாக புஷ்பாவின் பெற்றோர்கள் நீண்ட தயக்கத்துக்குப்பின் ஒப்புக்கொண்டபிறகு அந்தத் தனிமை சந்திப்பு தஞ்சை பெரியகோயிலில் இதேபோன்று ஒரு பெளர்ணமி சுப தினத்தில் மாலை ஏழு மணிக்கு என்று முடிவு செய்து எனக்குத் தகவல் வந்தது.நண்பனுடன் சென்னையிலிருந்து நேராக தஞ்சாவூர் சென்று மாலை வரை காத்திருந்து ஏழு மணிக்கு கோயிலுக்குள் நுழைந்தேன். பெளர்ணமி என்பதால் நல்ல கூட்டம். மாலை நேர மஞ்சள் வெயிலில் பெரியகோயில் ஜொலித்துக் கொண்டிருந்தது. நந்தி அபிஷேகத்தைப் பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம் காத்திருந்தது.பிரகாரத்தில் நுழைந்தபோது எனக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. புஷ்பாவைச் சுற்றி சுமார் பத்து பேர். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, கணவர், அவர்களுடைய பிள்ளைகள்…துணைக்கு வந்த நண்பன் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

முழுக்கை சட்டை அணிந்த புஷ்பா அக்கா கணவர் என்னருகே வந்தார்.

“வழக்கமா இதமாதிரி பழக்கமெல்லாம் எங்கள்ல கிடையாது கல்யாணத்துக்கு முந்தி ஒருத்தரையொருத்தர் தனியா பார்த்துக்கவே மாட்டோம். ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்கன்னு சொன்னாங்க… அதனாலதான் சம்மதிச்சோம். மாமா, அத்தைக்கு இதுல உடன்பாடே கிடையாது. ஊர்க்காரங்க பார்த்தா ஒருமாதிரி நெனப்பாங்க. ரெண்டு நிமிஷத்துல முடிச்சுக்குங்க..”

என்னுடைய இந்தத் தனிமை சந்திப்பு திட்டத்தில் இரண்டு வித நோக்கங்கள் இருந்தன. ஒன்று, எனது வேலை குறித்து பேச வேண்டும். இன்னொன்று, தனிமையில் நெருக்கமாக புஷ்பாவைப் பார்க்கவேண்டும். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. வந்தாயிற்று. வீண் வாக்குவாதங்கள் வேறு மாதிரி யாகச் செல்லும்… ஆகவே. மையமாகத் தலையாட்டிவிட்டு புஷ்பாவை நோக்கி நடந்தேன்.

அவளையொட்டி அவள் அக்கா நின்றுகொள்ள… பத்தடி தொலைவில் முழுக்கை சட்டை அத்தான் நின்று கொள்ள… அக்கா பையன் புஷ்பாவின் காலைக் கட்டி நிற்க… இப்படி பக்காவான ஒரு பாதுகாப்பு அரணில் புஷ்பாவை நான் பார்க்க, அவளுக்கு சிரிப்பு வந்திருக்க வேண்டும்.வலது கையால் ஒரு பக்கம் முகத்தை மூடிக்கொண்டு அந்தப்பக்கமாகத் திரும்பி அவள் சிரிக்க… அந்தப் புன்னகை பார்வையில் தெறித்த எதிர்பார்ப்பு… உதட்டில் தெரிந்த வெட்கம்… என்னை ஏற்றுக்கொண்டதாகக் காட்டிய அந்த உடல்மொழி… இவன் தன்னை வாழ்நாள் முழுக்க பத்திரமாகப் பார்த்துக்கொள்வான் என்று பிரதிபலித்த நம்பிக்கை… அது எனக்கு போதுமானதாக இருந்தது. வேறெதுவும் பேசத் தோன்றவில்லை.”சும்மா.. உன்னை நேர்ல பார்க்கணும் போல இருந்துச்சு… அதான்…””ம்…””என்னைப் பிடிச்சிருக்குல்ல..? “அவசரமாக, வேகமாகத் தலையசைத்தாள்.அவ்வளவுதான். எல்லோரையும் பார்த்துத் தலையாட்டிவிட்டு புறப்பட்டேன். இரண்டாவது நாள் அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது.

‘தம்பி… நிதானமாக செயல்படவும். அவர்களுக்கு உடன்பாடில்லாத எதையும் செய்ய வேண்டாம். சென்னை பழக்க வழக்கங்கள் இன்னும் நம்மூருக்கு வரவில்லை. நீ அந்தப் பெண்ணை கோயிலில் பார்த்துப் பேசியதில் அம்மாவுக்கு உடன்பாடில்லை. குடும்ப பழக்க வழக்கங்களுக்கு, நடைமுறைகளுக்கு மாறாக எதையும் செய்ய வேண்டாம்…’ அந்தச் சூழ்நிலையில் அப்பாவின் கடிதத்தில் இருந்த எதிர்பார்ப்பை மனது புரிந்துகொண்டாலும் அதை மீறிய ஒரு ஆர்வம் கொப்பளித்துக்கொண்டேஇருந்தது. புஷ்பாவின் இயல்பான புன்னகை முகத்தை நேரில் பார்த்த ஜோரில் அடுத்தடுத்து இரண்டு கடிதங்களைத் தட்டிவிட்டேன். பத்து தினங்கள் கழித்து தபாலில் பதில் கடிதம் வந்து வாசகர்கள் கடிதத்தோடு கலந்து ரிப்போர்ட்டர் நண்பனிடம் சிக்கி,இரண்டு பீர் வாங்கிக் கொடுத்து அந்தக் கடிதத்தைக் கைப்பற்றினேன்.‘அன்புள்ள உங்களுக்கு……எப்படி அழைப்பது என்று தெரியவில்லை.

நீங்களே ஃபில்லப் செய்து கொள்ளுங்கள். கடிதம் கிடைச்சது. அப்பா பிரித்து படிச்சிட்டு என்கிட்ட கொடுத்தார். ஃபர்ஸ்ட் லெட்டர்ல நீங்க ஏதோ எழுதப்போய் அப்பா இனிமே இதெல்லாம் வேண்டாம்… கல்யாணத்துக்கப்புறம் லெட்டர் போட்டுக்குங்க என்று சொன்னார். அதோடு அடிக்கடி எழுத வேண்டாம். உங்க லெட்டரை படித்தால் அம்மா ஒருமாதிரி பார்க்கிறாங்க. ஒரு வாரத்துக்கு ஒண்ணு போடுங்க. எனது இந்த லெட்டரையும் அப்பா படிச்சிட்டுத்தான் போஸ்ட் பண்றார்…’ கடிதத் தொடர்புக்கும் இப்படியாக கட்டுப்பாடுகள் வந்து விழ… எப்படியாவது புஷ்பாவுடன் ஃபோனில் பேச வேண்டும் என்று முடிவு செய்தேன். சிறிது அவகாசத்திற்குப் பிறகு எழுதிய கடிதத்தில், இரண்டு தெரு தள்ளி இருக்கும் அவளது தோழி வீட்டில் டெலிபோன் இருக்கிறதென்று தெரிந்து கொண்டேன்.

இதற்கிடையே புஷ்பாவின் பிறந்த நாள் வர… வாழ்த்து கூறும் வகையில் சாயங்காலம் ஏழு மணிக்கு போன் பண்றேன்.. பேசலாமா.. என்றேன் கடிதத்தில்.கூப்பிடுங்க. அப்பா அம்மா விட்டா பேசறேன். இல்லேன்னா இல்ல… என்று பதில் வந்தது.ஒருவழியாக அந்த நாளும் வந்தது. சரியாக ஏழு மணிக்கு அலுவலகத்தில் இருந்தபடி ஒரு நீண்ட உரையாடலுக்குத் திட்டமிட்டு குறிப்புகளோடு காத்திருக்க… போனை எடுத்தது புஷ்பாவின் அம்மா.

“நல்லாருக்கீங்களா..? இதோ புஷ்பாகிட்ட பேசுங்க…”

டென்ஷன் ஆனது.

ரிசீவர் கை மாறியதை உணர்ந்து “ஹேப்பி பர்த் டே புஷ்பா…”

“ம்…தேங்க்ஸ்…”

அவ்வளவுதான்.

“போதும்மா போனை குடு…”

“சரிங்க… வச்சிடறேன்…”லைன் கட் ஆனது. உலக மகா எரிச்சல் வந்தது. அதற்குப் பிறகு கனவிலேயே நாட்கள் நகர்ந்தன. அந்த பெரிய கோயில் பெளர்ணமி சிரிப்பு மட்டும் கண்களில் மீதமிருக்க, அந்த புன்னகை நினைவுகளுடன், நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு மாதங்கள் காத்திருந்து கொளுத்துகிற வெயிலில் திருமணம் முடிந்த இரவு மெலிதான நடுக்கத்தோடு புஷ்பாவின் ஜில் விரலைப் பற்றியபோது, காத்திருந்ததற்கான அர்த்தம் புரிந்தது.

“பார்க்கிறதுல பேசிக்கிறதுல அப்படி என்ன கட்டுப்பாடு உங்க வீட்டுல?”

“அதுவா… அதுவா…”

யோசித்தாள். யோசனை அல்ல, தயங்குகிறாள் என்று புரிந்தது.

“சும்மா சொல்லு…”

“இல்ல… எதுவானாலும் காலைல பேசுன்னு அம்மா சொன்னாங்க…”

“இப்ப சொன்னாதான் மத்தது எல்லாம்…”அநியாயத்துக்கு வெட்கப்பட்டவள், “என் கன்னத்துல பாருங்களேன்…” என்றாள். கறுப்பு நிறத்தில் தழும்பு இருந்தது.

“சின்ன வயசுல நாய் கடிச்சிட்டு.. அது தழும்பாயிட்டு. நீங்க அத பார்த்திட்டா என்ன வேணாம்னு சொல்லிடுவீங்களோன்னுதான் பக்கத்துலயே விடல…””ஓஹோ இப்படி ஒரு காரணம்இருக்கா… சரி, லெட்டர் கூட வேணாம்ன்னு சொன்னியே அது..?”பட்டென முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டாள். “எனக்கு… எனக்கு… தப்பு இல்லாம எழுதத் தெரியாது…””அப்ப லெட்டர்லாம் எழுதினது..?””அக்காதான் எழுதிக் கொடுத்திச்சி…””ஓஹோ… போன்ல பேசாததுக்குக் கூட ஏதாவது காரணம் இருக்கா?”

“இதெல்லாம் ஏன் கேக்கறீங்க..? இப்ப சொல்லக்கூடாதுன்னு அம்மாவும் அக்காவும் சொல்லிச் சொல்லி அனுப்பு னாங்க…”

அழுதுவிடுவாள் போலிருந்தது..

“இனிமே அவங்க சொல்றது எதுவும் கேக்காத. நான் சொல்றத மட்டும் கேளு. ஏன் பேசல..?”

“எனக்கு டென்ஷனாயிட்டா பேச்சு திக்கும். அது தெரிஞ்சி போய் நீங்க வேணாம்னு சொல்லிட்டா..?” என்றபடி என்னை தீர்க்கமாகப் பார்த்தாள். எனக்கு கோபம் வரவில்லை. சிரிப்பு வந்தது. இது குறை இல்லை. ஆனாலும் மிகமிக நாசூக்காக அவர்கள் புஷ்பாவை என்னை நோக்கி அனுப்பியதும்… இதையெல்லாம் நான் உணராமல் போனதும் எனக்கு சிரிப்பை வரவழைத்தது.

திருமணம் முடித்த அடுத்த நாள் பெரிய கோயிலுக்குப் போனபோது புஷ்பா கேட்டாள்.

“ஏங்க நான் இதையெல்லாம் மறைச்சதுனால உங்களுக்கு கோவம் வரலியா..?”

“அதுவா… அம்மா அப்பாவுக்கு உன்னை பிடிச்சிப் போன அந்த நிமிஷமே எனக்கு நீதான்னு முடிவாயிட்டுது… அப்புறம், நான் ஒரு ரிப்போர்ட்டர். எல்லாத்தையும் அலசி ஆராயறவன். உன்னை கிட்ட பார்க்க விடாம தடுத்ததுக்கெல்லாம் உள்நோக்கம் இருக்குங்கறதை என்னால கண்டுபிடிக்க முடியல. அங்க நான் சறுக்கிட்டேன். ஆனாலும். உங்க குடும்பத்தோட புத்திசாலித்தனத்த ரசிச்சேன்… முழுக்கை சட்டை மாமாதான் எல்லாத்துக்கும் மாஸ்டர் பிளான் போட்டுத்தந்தாரா?”

“இல்லங்க. அத்தானுக்கும் அப்பாவுக்கும் அவ்வளவு விவரம் பத்தாது. எல்லாம் அம்மா பிளான். அவங்களுக்கு உங்கள, உங்க ஃபேமிலிய ரொம்ப பிடிச்சிடுச்சி. கல்யாணத்துக்கு எந்த தடையும் வந்துடக்கூடாதுன்னுதான் அதமாதிரி பண்ணினாங்க…”

“சரி அத விடு. இன்னும் ஏதாவது மறைச்சி இருக்கீங்களா..?”

“பெருசா ஏதும் இல்லங்க. பி.ஏ. இன்னும் முடிக்கல… நாலு அரியர்ஸ் வச்சிருக்கேன்..!”

என்னை அதிர வைத்தாள். காலம் பழமையைத் தின்று ஏப்பம் விட்டுவிட்டது. எல்லா நிகழ்வுகளிலும் நவீனம் என்கிற புலிப்பாய்ச்சல் இருக்கிறது. அது உறவுகளை, நெருக்கத்தை, அருகாமையை நசுக்கிக்கொண்டே வருகிறது.

சிறிய சிறிய தப்பிதங்கள் ரசனையானவை. மனதுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு அவ்வப்போது திறந்து பார்த்து ரசிக்கக்கூடியவை. அப்படியானவைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் இன்றைய காலகட்டத்தில் யாருக்கும் இல்லை. காத்திருத்தல் என்கிற வார்த்தை காணாமல் போய்விட்டது. அதில் உள்ள சுகம் மறந்துபோய் விட்டது. புஷ்பா எனக்கெழுதிய கடிதங்களும் நான் அவளுக்கு எழுதிய கடிதங்களும் இன்றும் பத்திரமாய் இருக்கின்றன. எப்போதாவது போரடிக்கும் தருணங்களில் சிறிய உரசல்கள் ஏற்படும்போது அவற்றை எடுத்து படிக்கும்போது, திரும்ப ஒரு காதல் மனசுக்குள் மலரும்.

“நண்பா… நாளைக்கு எம் பொண்ண பார்க்கறதுக்கு மாப்பிள்ளை வீட்டுலயிருந்து வர்றாங்க. விஜயா மால் டைனிங் ஹால்ல நாலு டேபிள் புக் பண்ணி இருக்கேன். நீயும் வந்து மாப்பிள்ளை எப்படி இருக்கான்னு சொல்லு…”விஜயா மாலில் கிட்டத்தட்ட இருபது பேர் அந்த நிகழ்வில் இருந்தோம். மாப்பிள்ளையோடு, நண்பர்கள் கூட்டம் வந்தது. முதல் சந்திப்பை முன்னிறுத்தி கேக் வெட்டினார்கள். ஆரவாரித்தார்கள். எல்லாரும் செல்ஃபி எடுத்து அதே சூட்டோடு ஃபேஸ்புக்கில் போட்டார்கள். இருதரப்பும் பேசிச் சிரித்து மகிழ்ந்து பனிரெண்டாயிரம் ரூபாய் பில் கொடுத்து…நான்காவது நாள், “என்னப்பா… கல்யாணம் எப்ப..?”

“இல்ல நண்பா. ரெண்டு பேருக்கும் டேஸ்ட் டிஃபர் ஆகுதாம். அவன் யூஸ் பண்ற பர்ஃப்யூம் என் பொண்ணுக்கு பிடிக்கல. மாத்துங்கன்னு சொல்லி இருக்கா. முடியாதுன்னுட்டானாம். பர்ஃப்யூம் விஷயத்துலயே விட்டுக் கொடுக்காதவன் சரிப்பட்டு வரமாட்டான்னு சொல்லிட்டா. இன்னும் ரெண்டு மூணு சாய்ஸ் பார்க்கலாம்னு டாட்டர் நெனக்கிறா… நாளைக்கு ஈரோட்டுலேந்து ஒரு பையன் வரான்.. அதே இடத்துலதான்… நீ வர்றீயா..?” “இல்லப்பா எனக்கு வேலை இருக்கு…” என்றேன் அவசரமாய். இது சமீபத்தில் நடந்த சம்பவம். பேச்சுவார்த்தை சமுகமாக முடிந்தது போலத் தெரிந்தது.

அனைவரின் முகத்திலும் திருப்தி. இப்போது அந்தப் பெண்ணும் பையனும் தூணுக்குப் பின் போனார்கள். பெண்ணின் அப்பா இரண்டு வெள்ளை கவர்களை பேக்கிலிருந்து எடுத்து மாப்பிள்ளையின் அப்பாவிடம் கொடுத்தார். அவர் கண்ணாடி அணிந்து படித்தார். தலையாட்டினார். நிச்சயதார்த்த டிராஃப்ட் போலிருக்கிறது. பெண்ணும் மாப்பிள்ளையும் பரஸ்பரம் பிடித்துப்போய், நிறைந்த பெளர்ணமியாக இருப்பதால் நிச்சயம் செய்து கொள்கிறார்களோ…அந்தப் பெண்ணும் பையனும் திரும்பி வர… அனைவரும் கூட்டமாக மூலஸ்தானம் நோக்கி நகர்ந்தார்கள். என் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்தது போல எனக்கொரு சந்தோஷ உணர்வு.

புஷ்பாவிடம் இன்று பார்த்த இந்த நிகழ்வைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவளை பெண் பார்க்க வந்தது… தனிமை சந்திப்புக்காக கோயில் வந்தது… அவள் சொன்ன பொய்கள்.. எல்லாவற்றையும் நினைவு கூர்ந்து கலாட்டா செய்யவேண்டும் என்று நினைத்தபடி நகர்ந்தேன். வெளியே பெரும் கூட்டம் அன்னதானம் வாங்குவதற்கு காத்திருந்தது.

“சார்… பிரசாதம் வாங்கிட்டுப் போங்க…”

ஒருவர் உரிமையோடு அழைக்க க்யூவில் நின்று பிரசாதம் வாங்கினேன். வாழை இலையில் வைத்து சாம்பார் சாதம்… பிரிஞ்ச் சாதம்… தயிர் சாதம்… ஊறுகாய்… சிப்ஸ் என பிரமாண்டமாக இருந்தது.

சாம்பார் சாதம் அப்படி ஒரு டேஸ்ட்.

“பிரசாதம் ரொம்ப டேஸ்ட்டுங்க. அருமையா இருக்கு…”

பரிச்சயமான கோயில் ஊழியரிடம் சொன்னேன்.

“இன்னைக்கு கோவில் தரப்புலேந்து கொடுக்கல… அந்த ஐயா டொனேஷன்…” என்றபடி, வெளியேறிக் கொண்டிருந்த பையனின் அப்பாவை நோக்கிக் கை காட்டினார்.

“நல்ல மருமக கிடைச்சிட்டாங்கற சந்தோஷம் போல இருக்கு. எல்லாருக்கும் செம ட்ரீட் கொடுத்துட்டாரே…”

அவர் என்னைப் பார்த்தார். சற்று நிதானித்துக் கேட்டார்.

“சார்.. அவங்கல்லாம் எதுக்கு வந்திருந்தாங்கன்னு நெனக்கிறீங்க..?”

“பொண்ணு மாப்பிள பார்த்து சம்பந்தம் முடிச்சி கைகடுதாசி எழுதிட்டு போறாங்க…”

சிரித்தார். “சார், தப்பா புரிஞ்சிகிட்டிங்க. இது வேற விவகாரம். அந்தப் பொண்ணும் பையனும் நாலு வருஷமா பழகுறாங்க. ஃபேஸ்புக்ல ஃப்ரெண்டாகி பேசிப் பார்த்து பழகி இருக்காங்க. அந்தப் பையன் பெங்களூர்ல வேலை பார்க்கிறான். இங்க அடிக்கடி வர்றது, பெண்ணோட வெளிய சுத்தறதுன்னு ரெண்டு பேரும் ஜாலியா இருந்திருக்காங்க. ரெண்டு பேர் வீட்டுக்கும் இப்பதான் இவங்க லவ் மேட்டர் தெரியும். ரெண்டு வீட்டுலயுமே காதலுக்கு செம எதிர்ப்பு. அத இவங்க எதிர்பார்க்கல. பொண்ணோட அப்பா வழக்கமா கோயிலுக்கு வர்ற வருதான். காதல ஒப்புக்கவே மாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு.

பையன் வீட்டுலேயும் அப்படித்தான். நாலு வருஷ பழக்கத்துல ரெண்டு பேருக்குமே அலுப்பு வந்திட்டுது போல… பிரிஞ்சிடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க. பேரண்ட்ஸ்கிட்ட வேற இடத்துல அலையன்ஸ் பார்க்கச் சொல்லிட்டாங்க. இப்ப ரெண்டு பேருக்குமே நல்ல இடம் செட் ஆகியிருக்கு. பொண்ணு தரப்பு ரொம்பவே உஷார். இதுவரைக்கும் அவங்க எடுத்துகிட்ட போட்டோ,ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் இன்ஸ்டா கிராம்ல போட்ட போட்டோ எல்லாத்தையும் அழிக்கணும்… எந்த சூழ்நிலையிலேயும் கல்யாணம் முடியற வரைக்கும் ஒருத்தரப்பத்தி ஒருத்தர் எங்கேயும் போட்டுக் கொடுத்துக்க மாட்டோம்…

அதோட ஒருத்தர் வாழ்க்கையில இன்னொருத்தர் குறுக்கிட மாட்டோம்னு கோயில்ல வச்சு சத்தியம் பண்ணித் தரணும்னு பேசி அதமாதிரியே பண்ணிக் கிட்டாங்க! அதோட எல்லாத்தையும் பக்காவா எழுதி அதுல ரெண்டுபேர் பேரண்ட்ஸும் சாட்சிகளோட கையெழுத்து போட்டு ஆளுக்கொரு காப்பி எடுத்திட்டு போறாங்க. சுருக்கமா இது நீங்க நினைக்கிற மாதிரி பெட்ரோத்தல் இல்ல. பிரேக் அப்..!”நான் திகைத்து நின்றேன். ஊழியர் நகர்ந்துவிட, அவர் சொல்லிவிட்டுப் போனதின் தாக்கம் மனசு முழுக்க எதிரொலித்தது. அந்தச் சூழ்நிலையைக் கிரகித்துக்கொள்ள எனக்கு அவகாசம் தேவைப்பட்டது.

கையிலிருந்த பிரசாதத்தைப் பார்த்தேன். அலைபேசி ஒலித்தது. வீட்டி லிருந்து புஷ்பா. எடுத்தேன். “ஏங்க.. சாப்பிட வரலையா..?”

“சிவன் கோயில் பிரசாதம் கொடுத்தாங்கம்மா. இப்பதான் சாப்பிட ஆரம்பிச்சேன்…”

“பரவால்ல, அத அப்படியே வீட்டுக்கு கொண்டு வந்திடுங்க… சேர்ந்து சாப்பிடலாம். பொரியல் வறுவல் கூட்டு எல்லாம் பணணிருக்கேன். பாயாசம் வச்சிருக்கேன்…”

“என்ன விசேஷம்..?”

“ம்… அதுவா… நீங்க என்னை பொண்ணு பார்க்க வந்து இன்னையோட முப்பது வருஷம் முடியுது!கல்யாண நாளை விட இந்த நாள்தான் எனக்கு ரொம்ப பிடிச்ச நாள். வருஷா வருஷம் நான் மட்டும் மனசுக்குள்ள செலிபிரேட் பண்ணிக்கிட்டு கோயிலுக்குப் போயிட்டு வருவேன். முப்பது வருஷமாச்சா… உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும்னு தோணுச்சி… அதுக்காகத்தான் பாயாசம் வச்சிருக்கேன்!”

கடந்த சில நிமிட நிகழ்வுகளை எல்லாம் மனதிலிருந்து அழித்துவிட்டு, புஷ்பாவின் பௌர்ணமி புன்னகையை மனதிற்குள் மலர வைத்தபடி வீடு நோக்கிப் புறப்பட்டேன்.

– Oct 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *